" இலையிலிருந்து எடுக்காதே!! சத்தமாகச் சொன்னாள் விசாலம்.
என்னக்கா>? நான் தங்கை தானே .உன் ரத்த சம்பந்தம்..வெறும் வடை விள்ளலுக்கா இந்த சத்தம்?
என்று சிரிக்கிற தங்கை கமலத்தைப்
பார்த்துக் கடு கடுத்தாள் அக்கா.
எனக்குக் கல்யாணம் ஆயாச்சு. நான் வேற்று அகத்து
மனுஷி. இன்னோருத்தர் பொண்டாட்டி.
எனக்கும் அவருக்கும் தான் இந்த உணவு பந்தம்.
அதுவும் இன்னிக்கு இங்கே
விசேஷம் நடக்கும் போது
இது என்ன ஆகாத்தியம் ;''? என்று கடுகடுத்தாள்.
ஐய்ய , கோச்சுக்காதே.
என்னமோ பெரிய தப்பு நடந்த மாதிரி கத்தாதே!
உங்க அகத்துக்காரரை நன்றாக முடித்து வைத்துக்கோ"
என்று சொன்னபடி ஓடிய தங்கையை
கவலையுடன் பார்த்தவளுக்குப் பசி கூட போய்விட்டது.
விசாலத்துக்கு எப்பொழுதுமே, தன் உணவிலோ,
உடையிலோ யாரும் தொட்டு எடுத்தால்
மிக மிகக் கோபம் வரும்.
அவளை விட நாலு வயது குறைவான தங்கைக்கு
அவளை சீண்டுவதே பழக்கம். அதில் ஒரு மகிழ்ச்சி.
திருமணமாகி முதல் முறையாக இந்த வீட்டு விழா ஒன்றில்
பங்கெடுக்க விசாலத்தின் பெற்றோரும் தங்கையும்
வந்திருந்தனர்.
அப்போது நடந்த விருந்தில் தான் இந்த நாடகம்.
அதற்கு மேல் சாப்பிடப் பிடிக்காமல்
இலைகளை எடுத்துச் சுத்தம் செய்ய ஆரம்பித்தாள்
விசாலம்.
பெற்றோர் புறப்பட்டு சொந்த ஊர் சென்றபிறகு
ஒரே மாதிரி நடையில் வாழ்க்கை சென்றது.
1960 களின் ஆரம்பகாலத்தில் கல்விமுறை
எஸெஸெல் சியிலிருந்து 11 வகுப்புகள்
கொண்ட தேர்வு முறையானது.
அப்போது இந்த விசாலம் எனக்கு சீனியர்.
அவள் தங்கை எனக்கு ஒரு வருடம்
சிறியவள்.
எல்லோரும் ஒரே தெருவில் குடியிருந்ததால்
பள்ளிக்குச் சேர்ந்து வருவோம் போவோம்.
விசாலத்துக்குப் பள்ளிப் படிப்பு முடித்த கையோடு திருமணம்.
மாப்பிள்ளைவீடு மதுரை.
திண்டுக்கல்லில் வீட்டிலேயே திருமணம்
நடந்தது.
ஜவுளிக்கடை நடேசன் ,விசாலத்தின் தந்தை.
நல்ல வசதியுள்ள குடும்பம்.
சற்றே மா நிறமாக இருந்தாலும்
முக அழகும், தீர்க்க நாசியுமாக வடிவழகியாக இருப்பாள்.
அதற்கு நேர்மாறாக தங்கை. நல்ல உயரம். கண்ணில் குறும்பு.
தந்தை கடைக்கே சென்று
நல்ல வர்ணங்களைத் தேர்ந்தெடுத்து டெய்லரிடம் தைத்துக் கொள்வாள்.
அக்கா உடைகளையும் எடுத்துக் கையாண்டதில்
அக்கா தன் அலமாரியைப் பூட்டி வைத்துக் கொண்டாள்.அக்காவின் திருமணத்தின் போது,
கமலத்துக்குத் தான் நிறைய வரவேற்பு.
சகலருடனும் அரட்டை.
வரவேற்பிலிருந்து ஆரம்பித்து,
கட்டு சாதக் கூடை வரை எடுக்கப் பட்ட எல்லாப்
படங்களிலும் அவள் இருந்தாள்.
அன்றே அவளுக்கும் திருமணம் நிச்சயமாகி விடுமோ
என்று தோன்றியது எனக்கு.
அவளுக்கு வயது 14 என்றால், அவளைச் சுற்றி வந்த
காளைகளுக்கு(பசங்க) இருபதுக்குள் இருக்கும்.
சிரித்துப் பேசினாலும் படிப்பை முடித்து
மதுரையில் கல்லூரிப் படிப்பைத் தொடர வேண்டும் என்றே
ஆசை அவளுக்கு,...........தலைவலி ஆரம்பித்தது விசாலத்துக்குத் தான்.
தொடரும்.
11 comments:
கதை நன்றாக இருக்கிறது.
கதை சொல்லிய விதம் அழகு.
படங்கள் தேர்வும் அருமை.
தொடர்கிறேன்.
ஓ... புதிய அனுபவக் கதையா அம்மா? தொடர்கிறேன். இரு மாறுபட்ட குணங்களுடன் சகோதரிகள்.. சுவாரஸ்யமாக இருக்கும் என்று நினைக்கிறேன்.
மிக நன்றி அன்பு கோமதிமா.
கொஞ்சம் வேதனை, கொஞ்சம் சுவாரஸ்யம்., கடமை, விஸ்வாசம், நம்பிக்கை
எல்லாம். கலந்து நடந்த கதை. சரியாக எழுதணும். தாம்பத்தியம் எவ்வளவு நம்மை
வழி நடத்துகிறது என்ற கதை.உடனே படித்ததற்கு நன்றிமா.
அன்பு ஶ்ரீராம், நடந்த போது கலவரமாக இருந்தது.
எழுதும் போது கவனமாக இருக்க வேண்டும் அந்த வயதில் என் புரிதல்
போதாது.
பெற்றோர் பேசிக்கொண்டதில் கிரஹித்தது தான் இப்போது எழுதுகிறேன்.நன்றி மா் இந்த நாள் இனிய நாளாகட்டும்.
வணக்கம் சகோதரி
கதை நன்றாக உள்ளது. ஆரம்பமே விறுவிறுப்பாக இருக்கிறது.அக்கா, தங்கை என்றாலும், சுபாவங்கள் மாறுபட்டுத்தானே அமையும். தங்கையை விசாலம் வரும் நாட்களில் எப்படி சமாளிக்க போகிறாளோ?
தொடர்ந்து படிக்க ஆவலுடன் இருக்கிறேன். தொடருங்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
கமலம் அத்திம்பேரைக் கவர்ந்து விட்டாளோ? விசாலத்துக்குத் தான் பிரச்னை எனில் அப்படித்தான் இருக்கணும். அதுவும் உடை, உணவு எதிலும் பங்கு கொடுக்காத விசாலம்/ தானாக உரிமை எடுத்துக்கொள்ளும் தங்கை!
அன்பு கமலாமா,
மனம் போன போக்கெல்லாம்
போகும் குணம் தங்கைக்கு.
தான்,தன் உடமை,நேர்மை இது அக்கா.
யாருடையதும் எனக்கு வேண்டாம். என்னோடதை நீ தொடாதே.
இப்பொழுது நினைக்க பரவாயில்லை.
அந்த வருடங்களில் நன்றாக இல்லை.
மிக நன்றி மா.
அதேதான் அன்பு கீதாமா.
சட்டென்று பிடித்து விட்டீர்கள்!!
எனக்கு அக்கா தங்கை இல்லையேன்னு குறை எப்பவுமே
இருக்கும். விசாலம் சொவதை எல்லாம் கேட்பேன்.
அவளுக்கு இந்த மாதிரி தங்கை என்றதும்
ஆஹா. நமக்கு பகவான் சரியாகத் தான் கொடுத்திருக்கிறார்
என்று நினைத்துக் கொண்டேன்.:)))))))))))))))))))
ஸ்வாரஸ்யமான ஆரம்பம். தொடர்ந்து வாசிக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்.
மிக மிக நன்றி, அன்பு வெங்கட்.தொடர்வதற்கு
நன்றி மா.
இதைப் படிக்க விட்டுவிட்டேன். இரண்டாம் பகுதி படித்த ரசனையில் இதனைப் படித்தேன்.
சிக்கலான கதை. இரண்டு துருவங்கள். தங்கை, அக்காவின் வாழ்வில் புயலைக் கிளப்பப் போகிறாளா இல்லை, இல்லாத பிரச்சனையை, அக்கா கற்பனை செய்துகொண்டு பூதாகாரமாக்கி தன் வாழ்வில் புயலைக் கொண்டுவரப் போகிறாளா?
Post a Comment