Blog Archive

Wednesday, February 17, 2021

உறவு பலப்படும் நேரம்...அவர்க்கும் எனக்கும்...4


வல்லிசிம்ஹன்

எதேச்சையாக மதுரை வந்தார் விசாலியின் அப்பா.
ரங்காச்சாரி கடையில் அப்போது பிரபலமாக
விற்றுக் கொண்டிருந்த சின்னாளப்பட்டு 
புடவைகளை நூற்றுக்கணக்கில் 
வாங்கிக் கொண்டு ,சதர்ன் ரோட்வேஸ் வண்டியில் 
திண்டுக்கல்லுக்கு அனுப்பிவிட்டு,
அப்படியே பேத்தி மற்றும் மகள்களைக் காண வந்தார்.

பேத்தி ,தாத்தாவைக் கண்டதும் தாவி வந்தாள்.
எங்கே விசாலியைக் காணோம்
என்றவரிடம்  காமாட்சி....விசாலியின் மாமியார்
அவளுக்குத் திடீரென்று வந்த காய்ச்சல், மயக்கம்
எல்லாவற்றையும் விளக்கினார்.
''அதெப்படி சொல்லி விட்டது போல வந்துவிட்டீர்கள்.?
போனவாரம் தானே கமலி கல்லூரியில் சேர்ந்தாள்!!"
என்று ஆச்சரியப்பட்டார் காமாட்சி.

''உங்களிடம் சொல்வதில் என்னம்மா இருக்கு.
விசாலி அப்பாவி. கமலி அவளை மிகவும் துன்புறுத்துவாள்.
ஏதோ தோன்றியது வந்தேன் '' என்றார்.

கொஞ்சம் மௌனமாக இருந்த மாமி,
நேற்று கமலி, உங்க மாப்பிள்ளையுடன்
ஸ்கூட்டரில் செல்வதாகச் சொன்னதும்
விசாலி போய்
படுத்துக் கொண்டுவிட்டாள். ஏன் இப்படி நோஞ்சானாக
மனசை வைத்துக் கொண்டிருக்கிறாள்?
கணேஷ் ஒரு பிள்ளையாக வளர்ந்தவன். 
கமலியை இன்னோரு சகோதரியாகத் தான் பார்ப்பான்"
என்று சொல்லிவிட்டுத் தயங்கினாள்.

மறுக்க முடியாமல் யோசித்த நடேசன்,
''கமலியின் அசட்டுத் தனத்துக்கு எல்லை 
இல்லாமல் போயிற்று.
இன்னோருத்தரைத் துன்புறுத்துவதில் என்ன மகிழ்ச்சி'காண்பாளோ,
தெரியவில்லை. இன்று வெள்ளிக்கிழமை.
நான் அவளை அழைத்துக் கொண்டு போகிறேன்.
நீங்கள் தவறாக எண்ண வேண்டாம்.விசாலி
அவளிடம் நிறைய அவதிப் பட்டிருக்கிறாள்''
என்று மன்னிப்புக் கூறும் விதத்தில் சொன்னார்.

''அடடா. சின்னம் சிறு வயதுப் பெண்கள் இருவரும்.
நாம் நிதானமாக இருப்போம்'' என்றாள்.

வாசலில் வண்டி வந்து நிற்கும் சத்தம் கேட்டு
கவலையுடன் சென்றார் நடேசன்.
எதிர்பாராமல் தந்தையைக் கண்டதும்
விசாலியின் கண்களில் நீர்.
கணவனின் கைகளைப் பற்றிக் 
கொண்டு வீட்டுக்குள் வந்தாள்.

எனக்கு கொஞ்சம் ரத்த அழுத்தம் அதிகமாகி இருந்தது 
அத்தை. ஒரு நாள் ஓய்வெடுத்தால் சரியாகிவிடும். கவலை
வேண்டாம் என்று பொதுவாகச் சொன்னாள்.

இருவருக்கும் அதிர்ச்சி.கணேஷைப் பார்த்தார்கள்.
'' ரத்த பரிசோதனைக்கு ,சாம்பிள் எடுத்துக் கொண்டார்கள்
அம்மா. அயர்வும், ஊட்ட சத்து குறைந்திருப்பதும் தான்
காரணம். நம் விசாலிக்கு அதைக் கொடுக்கத்தானே
நாம் இருக்கோம்'' என்று மனைவியைத் தோளோடு 
அணைத்துக் கொண்டான்.

நடேசனுக்குத் தொண்டையில் ஏதோ அடைத்தது.
''நான் ,அவளைக் கொண்டு போய் வைத்துக் 
கொண்டு அனுப்பட்டுமா  '' என்று கேட்டார்.
விசாலியின் கண்களில் பரவிய பயத்தைக் கண்டு
காமாட்சி,புரிந்து கொண்டவராக
உடனே அவளை அழைத்துக் கொண்டு
அறைக்குள் சென்றார்.
''நீ எங்கேயும் போக வேண்டாம் அம்மா. நாங்கள் 
பார்த்துக் கொள்கிறோம் என்று சொல்லி
அவளைப் படுத்துக் கொள்ள வைத்து,
கணேஷிடம் கண் காட்டி உள்ளே
போகச் சொன்னார்.

சம்பந்தி ஒரு நிமிஷம் மாடிக்கு வாருங்கள்.
இவர் உங்களிடம் தோட்டம் பற்றிக் கேட்க வேண்டும் என்று சொன்னார்.
நான் காப்பி எடுத்துக் கொண்டு வருகிறேன்
என்று உள்ளே சென்றாள்.
மருமகளுக்கு சாத்துக்குடி சாறு கொடுத்து தூங்கச் சொல்லி
விட்டு, ''கணேசா இங்கேயே இரு""
என்று மாடிக்கு விரைந்தாள்.

கணேஷின் தந்தை சுப்ரமணியம்
சம்பந்தியை வரவேற்று ஊர் நிலைமையை
விசாரித்தார்.
''எனக்கு  இப்போது பெண்கள் கல்லூரி செல்லும் பாக்கியம் கிடைத்திருக்கிறது""
என்று சிரித்தவரைப்
பார்த்த நடேசன், ''உங்களுக்கெல்லாம் தொந்தரவு கொடுத்து விட்டேன்.''

என்றார் வருத்தத்துடன்.
''கமலி ரொம்ப கலகலப்பாகப் பழகுகிறாள்.
நல்ல பெண் ,உங்களுக்குக் கவலை வேண்டாம்'' என்றார்.

சற்றே யோசித்த நடேசன், ''நான் மாலை பஸ்ஸில்
ஊருக்குப் போகிறேன்.கமலி வரட்டும்.
பிறகு அவளைக் கல்லூரி விடுதியில் சேர்க்க
முயற்சிக்கப் போகிறேன்.
''மாமிக்கு விசாலியையும் கவனிக்கணும், மாப்பிள்ளை அலுவலகம் போக
உணவு தயார் செய்ய வேண்டும். இதன் நடுவில் கமலிக்கும் எல்லாம் செய்வது
அவருக்கு சிரமம். கமலி வீட்டு வேலையில் 
அவ்வளவு ஈடுபாடு காண்பிக்க மாட்டாள்"
என்றார்.
''விசாலிக்குத் தற்காலிகமாகத் தானே நலமில்லை.
இரண்டு நாட்களில் சரியாகி விடும்.அவசரப் பட்டு
கமலியை விடுதியில் விடவேண்டாம்'' என்று அன்புடன்
சொன்னார் சுப்ரமணியம்,

காமாட்சி இருவரையும் சாப்பிட அழைத்துச் சென்றார்.

சிறிது நேர உறக்கத்துக்குப் பின் ,கொஞ்சம் தெளிவாக இருந்த
கமலியிடம் தந்தை அருகில் அமர்ந்து பேசினார்.
""ஏனம்மா, இப்படிக் கலவரப் படுகிறாய்./
உன் தங்கையிடம் நம்பிக்கை இல்லையானால்
கணவரிடம் நம்பிக்கை வேண்டாமா?

உன்னை மீறி என்ன நடக்கும் என்று பயப் படுகிறாய்.
முன் மாதிரியா.? இப்போது ஒரு குழந்தைக்குத் தாய்.
தைரியமாக எந்தப் பிரச்சினையையும் அணுக வேண்டும்.

சலனத்துக்கு இடம் கொடுத்தால் தாம்பத்யம் 
ஆட்டம் கண்டுவிடும்.உன்னை நம்பு, கணேஷையும் நம்பு.
அன்பான மாமியார்,மாமனாரை நம்பு.கடவுள் உனக்குக் குறை வைக்க
மாட்டார்" என்று தைரிய வார்த்தைகளைச் சொன்னார்.

அவருக்கு தன் மகள்களைப் பற்றி நன்றாகவே தெரியும்.!!

பிரச்சினைகளிலிருந்து ஓட முடியாது புரிகிறதா...என்ற தந்தையைப் பார்த்தவளின் முகத்தில் வெட்கம் தெரிந்தது.
''ஆமாம் பா,சின்னக் குழந்தை போல நடந்து கொண்டுவிட்டேன்.
இனி கவனமாக இருக்கிறேன் பா.
நீங்கள் இரண்டு நாட்கள் தங்கிப் போகலாமே''என்று கேட்டுக் கொண்டாள்.
''இல்லை அம்மா. உனக்கு ஓய்வு தேவை.
அப்பா உன்னை விட்டுக் கொடுக்க மாட்டேன்.
அடுத்த வெள்ளிக் கிழமை வருகிறேன்.''
என்றபடி எழுந்து குழந்தையுடன் விளையாடச் சென்றார்.
மாப்பிள்ளை எங்கே என்று தேடினால்
காணவில்லை.
உள்ளே இருந்து வந்த காமாட்சி கணேஷ்
கமலியை அழைத்துவரப் போயிருப்பதைச் சொன்னாள்.

குழந்தையைத் தூக்கியபடி வாசலுக்குச் சென்றவர்
காதில் கமலியின் கலகலா சிரிப்பு எட்டியது.
தன் அத்திம்பேரின் முகத்தையே பார்த்தபடி
வந்தவள் தந்தையைக் கண்டதும் சிறிது
அடக்கமாக வந்தாள்.

''கமலி 5 மணி பஸ்ஸைப் பிடிக்க வேண்டும்.
நீ ஏதாவது சாப்பிட்டுவிட்டுக் கிளம்பு. அம்மம்மா வந்திருக்கிறாளாம்.
உன்னை உன் அம்மா அழைத்து வரச் சொன்னாள்"
என்றார்.

அடுத்த பகுதியில் பூர்த்தி செய்யலாம்.














15 comments:

நெல்லைத்தமிழன் said...

கமலி, ஹாஸ்டல் வேண்டாம், கணேஷ் வீடு சௌகரியமாக இருக்கிறது, அங்கே ங்கிக் கொள்கிறேன் என்று சொல்லி எல்லோரையும் கலவரப்படுத்துவாளோ?

கோமதி அரசு said...

கதையில் மாமியார் பாத்திரம் மிகவும் பிடித்தது. விசாலி
புரிந்து கொண்டால் எல்லாம் சுபமே.

கதை மிக அழகாய் சொல்கிறீர்கள்.


வெங்கட் நாகராஜ் said...

நல்லதொரு பகிர்வு. பெரியவர்கள் சொல்லும் விஷயங்கள் நன்று.

நல்லதாகவே முடியட்டும் எல்லா பிரச்சனைகளும்.

Geetha Sambasivam said...

ஒரு பகுதி படிக்காமல் விட்டிருக்கேன் போல. தேடிப் பிடித்துப் படிக்கணும். விறுவிறு, சுறுசுறு!

திண்டுக்கல் தனபாலன் said...

ஆலோசனை அருமை...

Kamala Hariharan said...

வணக்கம் சகோதரி

கதை நன்றாக இருக்கிறது. விசாலியின் அப்பாவாகட்டும், விசாலியின் புகுந்த வீட்டு பெரியவர்களாகட்டும் எத்தனை இங்கிதமாக நடந்து கொள்கிறார்கள். அந்த மாதிரி மனிதர்கள் அமைய கொடுத்து வைத்திருக்க வேண்டும்.

"கமலியை ஹாஸ்டலில் சேர்க்க வேண்டாம்.. அவள் என்னுடனே இருக்கட்டுமென" , அப்பாவிடம் மனம் திருந்திய விசாலி உருக்கமாக சொல்வதை கேட்டதும், கமலியும் அடக்க ஓடுக்கமான பெண்ணாக மாறி விடுவாளோ? அடுத்த பகுதியையும் விரைவில் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். நீங்கள் அடுத்த பகுதி நிறைவடையும் என்பதால், எங்கள் கற்பனை குதிரைகளும், கண்டபடி ஓடுகின்றன:)) நீங்கள் தொடர காத்திருக்கிறேன். இன்றைய பகிர்வுக்கு மிக்க நன்றி.

நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.

காமாட்சி said...

மிக்க சந்தோஷம் அன்பு

வல்லிசிம்ஹன் said...

அன்பு முரளிமா,
கூடியவரை நடந்ததைக் கோர்வையாகச் சொல்ல விரும்புகிறேன்.
சம்பந்தப் பட்ட எல்லோரும் இப்பவும் இருப்பதால்
கொஞ்சம் மாற்ற வேண்டி இருக்கிறது.
இடம், காலம், பெயர் எல்லாமே மாற்றிவிட்டேன்:)
நல்லதே எதிர்பார்க்கலாம் மா.நன்றி.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கோமதிமா,
விசாலி நடு நிலைமைக்கு வருவது, அவள் தங்கையின்
நடவடிக்கைகளைப் பொறுத்தது.

தம்பிகளுடன் வளர்ந்ததால் அவளை என்னால் புரிந்து கொள்ள
முடியவில்லை.
அவள் வருத்தப் படுவதையும் சகிக்க முடியவில்லை.
எல்லோருக்கும் தொந்தரவில்லாமல் காரியங்கள்
நடந்தேற விசாலியின் மாமியார் உதவினார். நல்ல மனுஷி.
நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு வெங்கட் ,
மனம் இருந்தால் வழி பிறக்கும் அல்லவா.

நன்மைகளையே நாடுவோம்.
நல்லதே நடக்கும்.நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கீதாமா,
ஆஹா .உங்களுக்குப் பிடித்தாலே
எனக்கு மகிழ்ச்சி.!!!
ஆறு மாதங்கள் நீடித்த ஒரு பிரச்சினையை
ஒரு வாரத்துக்குள் கொண்டு வருவது பிரம்மப்
பிரயத்தனமாக இருக்கிறது.
நமக்கு நன்மை தானே வேண்டும்.
நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு தனபாலன்,
தொடர்ந்து படிப்பதற்கு மிக நன்றிமா.மகிழ்ச்சி.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கமலாமா,

நிகழ்ச்சி செவி வழியே கேட்டதால்,
சம்பவங்களைச் சரியாகக் கோர்க்க நினைக்கிறேன்.

எல்லோருக்கும் நல்லது நடக்க வேண்டும் என்றுதான் விருப்பம்.
கமலி மாறினால்,விசாலியும் அவளை ஏற்றுக் கொள்வாள்:))))))))
எப்படியாகிறது என்று பார்க்கலாமா?
மனதில் தொகுத்துக் கொண்டு
கதையை முடிக்கிறேன்.
தங்கள் உற்சாகப் பின்னூட்டத்தினால் மனசுக்கு மிக மகிழ்ச்சி.
மிக நன்றி மா. சற்றே பொறுத்துக் கொள்ள வேண்டும்.!

வல்லிசிம்ஹன் said...

அன்பு காமாட்சிமா,
உங்கள் அளவுக்கு என்னால் எழுத முடியவில்லை.
ஜாம்பவான் களுக்கு நடுவில் நானும்!!
வந்து படித்ததற்கு மிக நன்றிமா.

நமஸ்காரம் மா.

காமாட்சி said...

அப்பளா சட்னிகூட நன்றாக இருக்கு. துவையல்ருசி வரும் என்று நினைக்கிறேன். ஆசிகள்.அன்புடன்