Blog Archive

Thursday, February 25, 2021

அம்மா செய்முறையில் மசாலா உருளைக் கிழங்கு

சனிக்கிழமை மதியம் பள்ளிவிட்டதும்
மூவரும் வந்துவிடுவோம்.
அன்றைய மாலை விளையாட்டுக்குப் போவதற்கு முன்ஸ்பெஷல் டிஃபன் உண்டு. 
ஏதாவது எண்ணெய்ப் பலகாரம் செய்து கொடுப்பார்
அம்மா. 
தேங்குழல்,ஓமப்பொடி, நாடா பக்கோடா
இப்படி கறுக் முறுக் இருக்கும்.

எல்லாமே அப்போது புதிதாக வந்த ஜனதா ஸ்டவ்வில்
தான் செய்வார்.
அதற்கு முன் விறகடுப்பில் செய்திருப்பாரோ
என்னவோ.
கரியடுப்பில் செய்வதனால் நானும் உதவி இருக்கிறேன்.

ஞாயிற்றுக் கிழமைக்கு சின்ன வெங்காய சாம்பாரும் 
வடாம் பொரித்ததும் இருக்கும். சாயந்திரம்
பூரி  உருளைக்கிழங்கு மசாலா இருக்கும்.
திருமங்கலம் உருளைக்கிழங்கு மிக மிக ருசி.
ஏன்  சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமைக்கு 
இவ்வளவு முக்கியத்துவம் என்றால் 
காரணம் அப்பாதான்.
அலுவலகத்துக்குப் போகும் போது
க்ரோஷாவில் பின்னப்பட்ட ஒரு பையில் தெர்மாஸ்
ஃப்ளாஸ்கில் காப்பி மட்டும் எடுத்துச் செல்வார்.
தபால் அலுவலகம்  அதே சாலையில்  தான் இருக்கும்.
மதியம் கிடைக்கும் நேரத்தில்
குறைவான சாப்பாடு சாப்பிட்டு விட்டுப் போனால்

இரவுதான் வருவார்.
ஞாயிறன்றுதான் முழு ஓய்வு, எண்ணெய்க் குளியல்,
தோட்டம் கவனிப்பு, எங்கள் படிப்பு
பற்றி  செக்கிங்க் எல்லாம் நடக்கும்.
அம்மாவுக்கும் சமையலில் உதவி செய்வார்.

அதில் சின்ன வெங்காயம் உரிப்பதும் அடக்கம்:)
அந்த வீட்டு சமயலறையீலேயே  கிணறு இருக்கும்.
அந்த முற்றத்தில் நானும் அம்மாவும் குளிப்போம்.
வெளிப்புறம் இருக்கும் கிணற்றில் அப்பாவும் தம்பிகளும் குளிப்பார்கள்.

சமையலறையில் அம்மி, கல்லுரல் இருக்கும்.
தோசை வார்க்கும் போது அம்மா பக்கத்தில் உட்கார்ந்து கொள்வோம்.

சமையலறை அடுத்த அறை சாப்பிடும் அறை..
அங்கு தான் ஜன்னல்கள் மூடி இருக்கும்.
ஒரு தடவை பின்புறக்கதவில் பேர் சொல்லாதது வந்ததால்.,
இந்த ஏற்பாடு. இதமான அறை.இரண்டு பக்கத்திலிருந்தும் வெளிச்சம் வரும்

கொலுவைப்பதும் அந்த அறையில் தான்.
அதைத் தாண்டி பெரிய கூடம்.

படுப்பது,படிப்பது,விளையாடுவது அங்கே தான்.

ஒரு சாய்வு நாற்காலி, தாத்தா வந்தால் உட்கார,
படிக்கும் மேஜையும் நாற்காலியும்.
சுருட்டி வைக்கப் பட்ட மெத்தைகள்,
பாய்கள், ஜமக்காளம் எல்லாம்  ஒரு மூலையில்.

''பத்து பைசா கொடுத்து ஆடச் சொன்னால் லட்ச ரூபாய் கொடுத்து
ஓயச் சொல்லணும்.'' பாட்டி சொல்வது   எனக்கு மிகப் பொருத்தம்.:)

அம்மா செய்முறையில் மசாலா உருளைக்கிழங்கில் காரம் இருக்காது.
தக்காளி போட மாட்டார்.
ப்ளெயின் சிம்பிள் உ.கிழங்கு.
மிக நன்றாக வேகவைத்த உருளைக் கிழங்கை
தோல் எடுத்த பிறகு
நன்றாக மசித்து விடுவார்.

சின்ன வெங்காயம், பச்சை மிளகாயை ஒன்றிரண்டாக
நறுக்கி வைத்துக் கொண்டு  ,
அடுப்பில் இரும்பு வாணலியில்
நல்லெண்ணெய் விட்டுக் கடுகு போட்டு
வெடித்ததும்
வெங்காயம் ,பச்சை மிளகாய் போட்டு வதங்கியதும்
மஞ்சள் பொடி சேர்ப்பார். உப்பும் அதில் சேரும்.

கொஞ்சம் ஜலம் சேர்த்துக் கொதித்ததும்
உ;கிழங்கும் அதில் சங்கமம் ஆகும்.
அதுவும் ஒன்று சேரக் கொதித்ததும்

வீட்டில் இருக்கும் கருவேப்பிலைச் செடியிலிருந்து
உருவின கருவேப்பிலை இலைகளைத் தாராளமாகத் தூவி
அடுப்பில் இருந்து
இறக்க வேண்டியதுதான்.

நடுவில் ஓடின குடும்ப புராணத்தைத் தடுக்க முடியவில்லை:)





வல்லிசிம்ஹன்

22 comments:

Kamala Hariharan said...

வணக்கம் சகோதரி

பதிவு அருமை. உங்களின் மலரும் நினைவுகள் சுவாரஸ்யமாக இருந்தது.ஆஹா... பூரியும், அதற்கு பொருத்தமான உருளைக் கிழங்கும் நாவில் சுவை நீரை உண்டாக்குகிறது. தங்கள் அம்மா செய்யும் கிழங்கு மசாலா முறைலமிகவும் அருமையாக உள்ளது. எங்கள் அம்மாவும் எப்போதும் இப்படித்தான் மஞ்சள் கலரில் அதிக காரமில்லாமல் பண்ணுவார்கள். இது அந்த காலத்தியவர்களின் ஒரே ஸ்டைல் போலும்.. ஆனால்,உடலுக்கு தீங்கில்லாதது. அந்த கால உருளை கிழங்கும் நன்றாக வாசமாக இருக்கும். இப்போது பலவித உரங்கள் இட்டு அந்த பழைய வாசனை வருவதேயில்லை. இப்போது காரப் பொடியும்,மசாலா பொடியும் சேர்த்து விதவிதமான பாணிகளில் வேறு செய்கிறோம்.

உங்கள் சிறுவயது நினைவுகளை சொன்ன விதம் நன்றாக உள்ளது. படங்கள் நன்றாக உள்ளன. அது திருமங்கலம் மீனாட்சி சொக்கநாதர் ஆலயமா? அங்கிருந்த போது அந்தக் கோவிலுக்கு அடிக்கடிச் சென்றுள்ளோம். அங்கிருந்து இங்கு வந்து பன்னிரண்டு வருடங்களுக்கு மேலாகிறதால், அத்தனை நினைவுகளும் சற்றே மறக்க ஆரம்பித்து விட்டன. பகிர்வை மிக அருமையாக தந்தமைக்கு மிக்க நன்றி.

நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.

கோமதி அரசு said...

உருளை கிழங்கு மசாலாவும், பூரி படமும் அழகு.
அம்மாவின் செய்முறை பக்குவத்தை சொன்னது அருமை.
மலரும் நினைவுகள் மிக மிக அருமை.

எனக்கும் அப்பா, அம்மாவுடன் தம்பிகள், தங்கைகள் அக்கா, அண்ணனுடன் இருந்த காலம் மிகவும் பிடிக்கும் .
மிக அருமையான பொற்காலம். மீண்டும் அந்தக்காலம் வராதா என்று ஏங்க வைக்கும் காலம்.

கோமதி அரசு said...

படங்கள் எல்லாம் அழகு.

Angel said...

அப்பா அம்மா இளவயது பள்ளிக்கால நினைவுகள் திரும்பி பார்ப்பதும் சுகம் வல்லிம்மா .எங்க வீட்லயும் அப்பா அம்மாவுக்கு வெங்காயம் பூண்டுதோல் உரித்து தருவார் .எங்கப்பா நார்த்தங்காய் களாக்காய் கிச்சிலி கடாரங்காய் ஊறுகாய் ஸ்பெஷலிஸ்ட் :)

Angel said...

உங்க அம்மா செய்ற மாதிரிதான் எங்கம்மாவும் உருளை மசால் செய்வாங்க .நல்லெண்ணையில்தான் செய்வாங்க .இப்போல்லாம் சிலர் கடலை மாவு இல்லைன்னா பொட்டுக்கடலை மாவு சேர்க்கிறாங்க அந்த சுவை பிடிக்கலை அம்மா கைப்பக்குவம்தான் சூப்பர்ப் 

முற்றும் அறிந்த அதிரா said...

சமையல் குறிப்பைவிடக் குடும்பப் புராணம் தான் சூப்பர் வல்லிம்மா ஹா ஹா ஹா.. அந்த நாள் நினைவுகள் என்றும் இனிமைதானே.

வல்லிசிம்ஹன் said...

அன்பு சகோதரி கமலாமா,
ஆமாம் அது மீனாட்சி சொக்க நாதர் கோயில் தான். நான் அங்கு
என் பத்துவயதில் குட்டி கச்சேரி கூடச் செய்து இருக்கிறேன்.
நீங்கள் சமீப காலத்தில் அங்கே இருந்திருக்கிறீர்கள்.
இதை நினைக்கும் போதே ஆனந்தமாக இருந்தது.
உங்களிடம் திருமங்கலம் பற்றிக் கேட்க எத்தனையோ
இருக்கிறது.இன்னும் அந்தப் பள்ளிகள், திரை அரங்கம் (ஆனந்தா)
இருக்கிறதா.
உசிலம்பட்டி மதுரை ரோடு மாறவில்லையா,அங்கு விலாஸ்
கட்டிடம் இருக்கிறதா என்று நூறு கேள்விகள்
மனதில் வந்து போகின்றன. என் ஆறு வயதிலிருந்து 12 வயது வரை அங்கே
இருந்தோம்.

உங்கள் நினைவுகளையும் நீங்கள் எழுதினால்
அருமையாக இருக்கும். நேரம் இருக்கும் போது பதியுங்கள்.
நம் கீதா சாம்பசிவம் பக்கத்தில் மேல் மங்கலம்
ஊரில் இருந்திருக்கிறார். கண்டமனூர் போகும் வழி என்று சொன்னதாக
நினைவு.
பதிவர் துளசி கோபாலின் அம்மா இந்த ஊரில்
மருத்துவராக இருந்திருக்கிறார்.
மிக அன்பு கமலாமா. நம் அம்மாக்களின் சமையலில்
குறைந்த எண்ணெயும் நிறைய ருசியும் இருந்திருக்கும்.

நானே போய், எண்ணெய்க் கடையில்
நல்லெண்ணேய், தே. எண்ணெய் வாங்கிய நினைவும் இருக்கிறது.
இறைவன் கொடுத்த வரங்கள்
இந்த நினைவுகள்.மிக மிக நன்றி.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கோமதிமா. வாழ்க நலமுடன்.
நல்ல நினைவுகள் இறைவன் கொடுத்த வரம்.

உங்கள் குடும்பம் பற்றி கொஞ்சம் தான்
கேட்டிருக்கிறேன்.
அண்ணா,அக்கா,தம்பி,தங்கைகள்
பாசம் கிடைக்கக் கொடுத்து வைத்திருக்க வேண்டும்.

அதை அனுபவித்ததால் தான் இப்போது ஜீவிக்கிறோம்.
உங்கள் அண்ணா குடும்பம்,தம்பிகள்,அக்கா,தங்கைகள் அனைவரும் என்றும் சுகமாக வளமாக
இருக்க வேண்டும்.
பதிவர்கள் எல்லோருடைய குடும்பமும் என் குடும்பம்
போலத்தான் நினைக்கிறேன்.
எத்தனை மகிழ்ச்சி அவ்வாறு நினைப்பதில்.!!!!!!
மிக நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஏஞ்சல்,
நிஜமாகவா. கிச்சிலிக்காய், நார்த்தங்காய்,கடாரங்காய்
பெயர் கேட்டே நாட்களாகிறதே அம்மா!!!!
அதிலே அப்பா ஸ்பெஷலிஸ்டா. ஆஹா.
தெரிந்திருந்தால் உங்கள் வீட்டிற்கு வந்திருப்பேன்:))
ஆமாம் அம்மா, நம் அன்னை கைபக்குவம் தனிதான்.
ஒன்றும் டிஃபன் செய்யாத நாட்களில்,
மதியம் செய்த குழம்பை ஊற்றி
நல்லெண்ணெய் விட்டு அம்மா சாதம் பிசந்து தருவார்.
பந்தலடியில் திண்ணை மேல் உட்கார்ந்தபடி
ருசித்து உண்போம்.
நம் பசியை அறிந்தவர் அம்மா மட்டுமே.
மிக நன்றி ராஜா. உங்களுக்கும்,மகளுக்கும், உங்கள் செல்லங்களுக்கும்
கணவருக்கும் என் அன்பு. நலமாக இருங்கள்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு அரண்மனைக் கிளி அதீஸ்,
நீங்களே யூ டியூபில் பதிய ஆரம்பித்துவிட்டீர்களே.
எல்லாமே அன்னையின் ஆசிதான்.
நீங்கள் சொல்வது உண்மை
தந்தை தாய்,சகோதர் சகோதரிகள் நினைவு என்றும் ரம்யம்.
நலமுடன் இருங்கள் மா.

ஸ்ரீராம். said...

அருமையான மலரும் நினைவுகள்.  வீட்டின் விவரணம் ஜோர்.  ஜன்னல் மூடின சமையலறை.  ஞாயிறில் அம்மாவுக்கு உதவும் அப்பா.  அவருக்காக வார இறுதி ஸ்பெஷல் சமையல்...  எல்லாமே ரசித்தேன். 

ஸ்ரீராம். said...

ஆனால் என்ன செய்தாலும் வீட்டில் பூரி இந்த மாதிரி புஸ்ஸென்று வருவதில்லை.  தப்பித்தவறி சில வந்து விட்டாலும் வாணலியிலிருந்து எடுத்ததும் சுருங்கி விடும்!

Geetha Sambasivam said...

ஆஹா, எல்லா அம்மாக்களுக்குமே இப்படித்தான் பண்ண வரும் போல. என் அம்மாவும் இப்படித் தான் பண்ணுவார். என் கணவருக்கு என் அம்மா செய்யும் இந்த முறை ரொம்பப் பிடிக்கும். எங்க வீட்டிலும் நல்லெண்ணெய் தான். நானும் நல்லெண்ணெய் தான் பயன்படுத்துகிறேன். பருப்பு உசிலி பண்ணினால் மட்டும் கொஞ்சம் போல் தே.எ. கடைசியில் சேர்ப்பேன். அப்போதெல்லாம் கடலை எண்ணெயே தெரியாது. போன வாரம் பூரி, கிழங்கு சில விருந்தாளிகளுக்காகப் பண்ணினப்போவும் இப்படித் தான் பண்ணினேன். பழைய நினைவுகளை மீட்டி விட்டீர்கள். எங்க வீட்டிலும் ஞாயிற்றுக்கிழமை சி.வெ.சாம்பார், குட்டி உருளைக்கிழங்குக்கறி அல்லது உருளைக்கிழங்கு வெங்காயம் போட்ட காரக்கறி. நாங்க மூணு பேரும் அடிச்சுப்போம். அந்தச் சுவையும், ஆவலும் ருசியும், மணமும் இப்போது கிடைக்காத ஒன்று.

Geetha Sambasivam said...

மேல்மங்கலம் அப்பாவுக்குச் சொந்த ஊர். இப்போதும் குலதெய்வத்துக்குச் செய்ய அண்ணா, தம்பி போவார்கள். ஆனால் நாங்க யாரும் இருந்ததில்லை. மேல்மங்கலம் தாண்டிச் சின்னமனூரில் தான் சித்தி வீட்டில் அடிக்கடி போய் இருப்பேன். அந்தப் பக்கத்து ஐந்து மங்கலங்களிலும் சொந்தங்கள் உண்டு.

நெல்லைத்தமிழன் said...

//பத்து பைசா கொடுத்து ஆடச் சொன்னால் லட்ச ரூபாய் கொடுத்து ஓயச் சொல்லணும்//. மிகவும் ரசித்தேன்.

வீட்டுப் புராணம் அருமை. தனித்தனி அறை, படுக்கை என்று பிரிந்து பிரிந்து வாழும் நாட்கள் இன்று. அப்போ மனசு விசாலமாக இருந்தது.

மசாலுக்கு சின்ன வெங்காயமா? ரொம்ப ருசியாக இருக்கும். இங்க எங்க கிடைக்குதுன்னு தேடணும்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஸ்ரீராம் ,
எழுதினதை திருத்திவிட்டேன்.
சாப்பிடும் அறை கூடத்துக்கும் சமையல் அறைக்கும் இடையில் இருக்கும்.
கிச்சன் வெளிச்ச்மும் ,கூடத்தின் வெளிச்சமும். வரும்.

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் ஸ்ரீராம் எல்லோருக்கும் பள்ளிப் பருவம் என்றுமே இனிமை.

பூரி படத்தில் தான் நன்றாக இருக்கும்.
செய்த உடனே சாப்பிட்டால் நன்றாக இருக்கலாம்
அம்மா மைதா மாவு கோதுமை மாவு கலந்து செய்வார்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கீதாமா,
நீங்கள் சித்தி வீட்டுக்குச் சென்றதைத் தவறாக
அங்கே இருந்ததாகச் சொல்லிவிட்டேன். மேல்மங்கலம் நினைவில் இருந்ததால் அதைக் குறிப்பிட்டேன்.

ஆமாம். அம்மா செய்யும் எதுவும் நமக்கு உசத்திதான்.
கலலெண்ணெய் நல்லது என்று இப்போது சொல்கிறார்கள்.
அப்போது ஏதோ சிக்கு வாசனை வருவது போல இருக்கும்.
ஞாயிறும் உருளை ,சின்ன வெங்காயமும் இணை பிரியாததுன்னு நினைக்கிறேன் மா.
இப்பவே மதுரைக்குப் போய்
சுண்டைக்காய், நார்த்தங்காய் எல்லாம் வாங்க வேண்டும் என்று ஆவலாக இருக்கிறது.
நம் எல்லோரையும் மதுரை இணைக்கிறதும்மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு முரளிமா,
உண்மைதான். அப்போது வீட்டு நிறைய மனிதர்கள் இருந்தாலும் இடம்
கிடைக்கும்.
தாத்தா வீட்டிற்குப் போனால் பேரன் பேத்திகள் பத்து பேர் இருப்போம்.
இரண்டு ஜமக்காளம். இரண்டு பேருக்கு ஒரு தலையணை ஒரு போர்வை.
நிறைய ரசித்து ஆனந்தமாக இருந்தோம்.

இப்பொழுது அவரவர் அறைக்குப் போகிறோம்.
இதுவும் பழகி விட்டது.

மிக மிக நன்றி மாசென்னையிலிருந்து சி வெ. வரவழைத்து விடுங்கள்:)

வெங்கட் நாகராஜ் said...

இனிமையான நினைவுகள் வல்லிம்மா.

உருளை மசாலாவும் பூரியும் எங்கள் வீட்டிலும் அவ்வப்போது உண்டு. வீட்டில் பெரியவர்கள் இருந்தால் வெங்காயம் இல்லாமல் செய்வார்கள். எங்களுக்குத் தனியாக வெங்காயம் சேர்த்து! அதன் ருசி இன்றும் நினைவில்.

மனோ சாமிநாதன் said...

எல்லோரிடமும் பழைய நினைவலைகளை திரும்பக்கொண்டு வந்து விட்டீர்கள். எனக்கும் தான்! திரும்பக்கிடைக்காத பொக்கிஷங்கள்!

கரந்தை ஜெயக்குமார் said...

அருமை