Blog Archive

Saturday, October 31, 2020

இன்னும் ஒரு நினைவு நாள்.

வல்லிசிம்ஹன்
அனைவரும் நலமாக இருக்க  பிரார்த்தனைகள்.
இந்தத்   தொற்று நோய் தொடாத  பகுதியே இல்லை என்று ஆகிவிட்டது.
அதையும் மீறி வர.சில நல்ல காரியங்களும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.

இறைவன் கருணையில். சிக்கனத் திருமணங்களை நடத்திக் காட்டும் பெற்றோர்.


அக்டோபர் 31 1965 ....47 வருடங்கள் 2013 நவம்பர் 13

எப்பொழுதும் அக்டோபர் மாதத்துக்குப்
பதிவிடும் நினைவு நாள்.
இந்த வருடம் ஐப்பசி அமாவாசை சீக்கிரம்
வர,
ஏகாதசியும் கூட சிங்கம் வரும் நாள்  சூம் மீட்
ஆக நிறைவேறியது. சென்ற வருடம் 
நாங்கள் அங்கே இருந்தோம்.
வீட்டுக்கு சென்று ஒரு வருட அழுக்கை நீக்கி, பூஜை அறை
முதல் வாயில் கதவு வரை சுத்தம் செய்து 
பழைய நிலைக்குக் கொண்டு வந்தோம்.

''இத்தனை நாட்கள் எங்கே போனீர்கள்?''
வீடு கேட்டதா, மனம் கேட்டதா இல்லை
படத்தில் இருந்தவர் தான் கேட்டாரா தெரியாமல்

வந்தவர்களை உபசரித்து, சேர்ந்து உண்டு
கலகலப்பாக இருக்க முயற்சித்தேன்.
எல்லோருக்கும் சாப்பாட்டு அறையில் முக்கிய ஆள் இல்லை என்ற
கலவரம் போகும் வண்ணம் ஏதோ பேச்சு,
சிங்கம் செய்த கலாட்டாக்கள்
என்று பேச்சு.

ஓர்ப்படிகளும் நாத்தனாரும் அணைத்து ஆதரவு சொல்லிக் கிளம்பினார்கள்.

அன்று சாப்பிட வந்தவர்களில் இருவர் தொற்றுக்கு
இரையானார்கள்.

சிங்கத்தின் அத்தை மகன் ,இன்னொருவர் பெரியப்பா மகன்.

அதுதான் வாழ்க்கைச் சக்கரம்.

எதையும் கடக்க வேண்டிய காலம். நிகழ்கால
நல்லதுக்கு வேண்டுவோம். இருப்பதை விட்டுப்
பறப்பதை நினைத்து என்ன செய்ய முடியும்.
அடுத்த பரம்பரை நலமுடன் இருக்க வேண்டும்.

Friday, October 30, 2020

பிரிவோம் சந்திப்போம் இசைப் படம்


பிரிவோம் சந்திப்போம் படம் என்னை
மிகவும் கவர்ந்தது. காரணம் அதன் அடிப்படை

உறுத்தாத அன்பான குடும்பப் பின்னணி.பாடல்கள்
அனைத்தும் மிக ரசித்தவை.
நடிப்பும் இயல்பு.
சினேகாவின் உழைப்பு பளிச்சிடும்.

அருமையான இனிமையான குரல்கள்.

Thursday, October 29, 2020

ஜனாதிபதி விருது வாங்கிய துணிச்சல் தமிழ் பெண் Rajeswari IPS பேட்டி

Muruganum Thiruparankundramum முருகனும் திருப்பரங்குன்றமும்

ராஜ ராஜன் பொன்னியின் செல்வன்

வல்லிசிம்ஹன்

தமிழ்த் தினசரி தேதிகளைக் கிழிக்கும் போது 
ஐப்பசி சதயம் கண்ணில் பட்டது.26 ஆம் தேதியே
அந்த விழா நடந்திருக்கலாம்.
பொன்னியின் செல்வன்  கல்கி கொடுத்த செல்வமாகப்
படித்த நாட்கள் நினைவில் வந்தன.

தொடர்ந்து இணையத்தில் வந்து கொண்டிருந்த விவாதங்கள்.
தஞ்சைக்  கோயிலைக் கட்ட வானுலகிலிருந்து வந்த  வேற்றுக் கிரகவாசிகள்
, சித்தர்கள்,
தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள்,
கல்வெட்டுகளைப் படித்துப் புரிந்து கொள்பவர்கள்,
 காலச்சக்ரம் நரசிம்மா எழுதின மாற்று சரித்திரம்
என்று மனது சுற்றி வந்தது,.
நல்லதையே விரும்பும் மனம்

அவரது நாவலைப் படித்துப் பிரமித்துக் குழம்பியது,
கிட்டத்தட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த
தமிழ் மன்னன்,
இத்தனை பெரிய கோயிலைத் திட்டமிட்டு
அத்தனை சிற்பிகளைக் கொண்டுவந்து
அந்தக் கோவிலைக் கட்ட நல்ல நிலத்தைத் தேர்ந்தெடுத்து
கட்டி இருப்பது எவ்வளவு பெரிய சாதனை!

சிவகாமியின் சபதம் நாவலில் அரசர் மஹேந்த்ர வர்மன் 
சித்தரிக்கப் படும் அளவுக்கு ,
அரசன் ராஜ ராஜ சோழனையும் பற்றி அவர் இன்னோரு நாவல்
எழுதி இருக்கலாம்:)
எழுத்தாளர் பாலகுமாரன் எழுதி இருப்பதாகத் தெரிகிறது.
அதை நான் படிக்கவில்லை.
 
கண்முன்னே குந்தவை தேவியையும், அருள்மொழி வர்மரையும்
காணும் ஆசையில் நடிகர் திலகம் சிவாஜி அவர்களின் 
படத்தைப் பார்த்தேன்.
இந்தத் திரைக்கதை யார் எழுதினார்களோ தெரியவில்லை.

திரு டி ஆர் மஹாலிங்கம் அவர்களின் கணீர் குரல், 
எஸ்.வரலக்ஷ்மியின் நல்ல தமிழ்ப் பாடல்கள்,
சீர்காழி கோவிந்தராஜன் குரல் எலாமே மிகப்
பொருத்தமாகக் கதையுடன் செல்கின்றன.

கொஞ்சம் ஒட்டாதது அந்த வேங்கி நாட்டு அரசன், 
ராஜராஜனின் புதல்வி காதல்.
ஆனால் இதெல்லாம் இல்லாமல் 
படம் எடுத்திருக்க முடியாது என்று தோன்றுகிறது.




Friday, October 23, 2020

Vazhaiyadi Vazhai Tamil Movie Part 10 | Muthuraman | Pramila | Tamil Movies

இது போன்ற படங்களும் நாம் பார்த்திருக்கிறோம். நன்றி கோபால கிருஷ்ணன் ஐயா.

Tuesday, October 20, 2020

நவராத்திரி நலங்கள்


வல்லிசிம்ஹன்

நவராத்திரி  ஆரம்பித்து  மூன்று நாட்களும் கடந்து விட்டன.
முந்தின வருடம் பண்டிகை இல்லை. 
இந்த வருடமும் குறைக்க  வேண்டாம் என்று மகள் 
அரங்கேற்றிய தெய்வ வடிவங்கள்.
தீம்  கொலு எல்லாம் வைப்பதில்லை. வித விதமாக எல்லோரும் ஏற்பாடு செய்வது வியக்க வைக்கிறது.

உண்மையில் மனம் நிறைய பாராட்டத் தோன்றுகிறது.
சின்ன வயதில் சோப்பு வைத்து விளையாடி 
புளி  ரசம் செய்தது போல  இப்பொழுது கொலு வைக்க 
முடியாது.

ஆனால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப் பட்ட நிலையிலும் 
அனைவரும்   ஆர்வமாகச் செயல் படுவது  நன்மையே.

இதில் நட்புகள் நேருக்கு நேர் காணவில்லை என்றாலும் 

ZOOM, GOOGLE MEET, MICROSOFT MEET   என்று 
கொண்டாடுகிறார்கள்.

சிலர் இல்லங்களில்  யாரோ ஒருவர் நஷ்டப்பட்டதனால் 
அவர்களால் கொண்டாட முடியாத  இந்த நாட்களில் 
செய்யப் பட்ட  சுண்டல், மற்றும் பலகாரங்களை அவர்கள் வீட்டு வாசலில் 
வைத்து விடுகிறோம்.

கண்ணாடி வழியே   கை  காட்டிவிட்டு வந்து விடுகிறோம்.

இந்த  ஊரில் தொற்று அதிகரித்திருப்பதை உணரும் பொழுது 
இதைத் தவிர வேறு வழி தெரியவில்லை.

தேர்தல் அமர்க்களம் காதைத்  துளைக்கிறது.

மனம்  அவதி படாமல்  இருக்க இணையமே துணை 
என்று  ஆகும் நிலை.

கடவுளர் தரிசனம், நட்புகள் பதிவுகள்,
 வாட்சாப்   பகிர்வுகள் 
என்று நல்லதை மட்டும் எடுத்துக் கொள்கிறேன்.
 தொடர்ந்து  மாறி வரும்  கால நிலை, தலை நோவு அதிகரிக்கக் காரணமாகிறது.

கதவைத் திற  காற்று வரும் என்பதெல்லாம் நடக்காது.
குளிர், இல்லாவிடில் கிருமி என்ற பயம் 
அனைவரையும் உள்ளே விரட்டுகிறது.
எல்லாம்  மாறட்டும்.

எதோ ஒரு படத்தில் சரண்யா சொல்வது ''ஆடி போயி ஆவணி வந்தா எல்லாம் டாப் ஆகும் ''என்று எதிர்பார்ப்போம்.:)
அனைவரும் நலமுடன் இருக்க என் பிரார்த்தனைகளும் வாழ்த்துக்களும்.
🔅🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆




Friday, October 16, 2020

கேட்க இனிமை.

வல்லிசிம்ஹன்

1967 எல்லாப் பெண்களின் உள்ளத்திலும் இந்தப்
பாடல் ஓடி இருக்கும். என்ன குரலம்மா
உங்களுக்கு சுசீலாம்மா.
அதுவும் நாகேஷ், ஜெயலலிதா உணர்ச்சிக் குவியல்
நடிப்பில் சிகரம் எட்டும் காட்சி.மிகப் பிடித்தது.
திருமணமாகி கைகுழந்தையுடன் பிறந்த வீட்டில் இருக்கும் போது
சிங்கம் மட்டும் இந்தப் படத்தைப் பார்த்து விட்டு வந்து
சொல்லும்போது அவ்வளவு  கோபம் வந்தது.
சரி போன்னு விட்டு விட்டேன்:)


பாத காணிக்கை ஒரு குடும்பப் படம்.
1963இல் திரையிடப்பட்டதோ.

திண்டுக்கல்லில் கேட்ட பாடல்.

சாவித்ரி அம்மாவின்  நடிப்புடன் குழையும் குரல்.
படம் பின்னாட்களில் பார்த்தேன்.
அன்பும் காதலும் இழையோடும்.
இந்தப் பாடல் வரிகளும் வேறெந்தப் பாடலுக்கும் அமையவில்லை.
''பச்சைக் கிளியானால் பறந்தே சென்றேகுவேன்.
பாடி வரும் தென்றல் 
காற்றேறி ஓடுவேன்.
சென்ற காணேன்
சிந்தை வாடலானேன்
சேதி சொல்ல யாரும் தூது சொல்லக் காணேன்''    .....

venkatesh bhat makes urulaikizhangu bonda | recipe in tamil | allo bonda...

வல்லிசிம்ஹன்
சாயந்திர வேளைக்கு அருமை.

Thursday, October 15, 2020

உண்மை நட்பு எப்பொழுதும் அழைக்கலாம்.


வல்லிசிம்ஹன்

சமீபத்தில் படிக்க நேர்ந்த எண்ணங்கள்,
 தோழிகளின் வாட்ஸாப் செய்திகள்.........
மிகவும் சிந்திக்க வைத்தன.
இந்தத் தொற்று வெளிப்பட்டு எட்டு மாதங்கள் ஆகின்றன.

எத்தனையோ விதமான விபரீதங்களைப் பார்த்தாகிவிட்டது.
வெளியே போக முடியாத சூழ்னிலை.
வெளியே போயே ஆகவேண்டிய சில நண்பர்களைப்
பற்றிய கவலை.


குழந்தைகள் வீட்டுக்குள் இருப்பதால் 
அவ்வப்போது ஏற்படும் சிறு உரசல்கள்.
எந்த வித சூழ்நிலையிலும் மன உறுதி
கலையாமல் எப்பொழுதும் போலக் கலந்துரையாடி வரும் நட்புகளே
இப்போது கை கொடுக்கின்றன.
 பழைய படத்தைப் பார்த்ததும்  அதிரடி அதிரா நினைவு வந்தது.:)
தேம்ஸிலே குதிக்கிறதை விட்டு விட்டார்களா?
ஏன் எழுதுவதில்லை?

ஒவ்வொரு ஊரிலும்  சேகரித்து வைத்திருக்கும்  நட்புப் 
பொக்கிஷங்கள் .
லண்டனில் ஏஞ்சல்.
ஜகார்த்தா வில் தான்  யாரும் கிடைக்கவில்லை.

எங்கள் ப்ளாக்  அரட்டை செய்த புண்ணியம் என்  உயிர்த்தோழி 
கிடைத்தாள் .
மீண்டும் ஆவலுடன் பேசுவது  , தொடர்கிறது.
இருவருக்கும்  அந்தக் காலம் மாதிரி  இருந்தால் 
தினப்படி  பத்து பக்கக்  கடிதங்களை அஞ்சல் செய்து கொண்டிருப்போம்.

இப்பொழுது அவரவர் குடும்பம், அவரவர் வாழ்க்கை 
கொஞ்சமாகத்தான்   நேரம் கிடைக்கிறது.

மிக  அழகான அருமையான பாடல்.
நட்பு என்பது என்ன?

புரிதல் கட்டாயம் வேண்டும்.  இவள் என் தோழி. என்னை  புரிந்தவள்.
குற்றம் குறை கண்டுபிடிக்க மாட்டாள்   .

நானும் அனுசரித்து நடந்தால் எல்லாம் இனிமை.

என்னுடன் சேர்ந்து பயணித்த இன்னும் பயணித்து வரும் 
நட்புகள் எல்லோருமே ஆதரவானவர்கள்.

கீதா சாம்பசிவம், துளசி கோபால், கோமதி அரசு,
ஸ்ரீராம் பாலசுப்ரமணியம், கீதா ரங்கன், கவுதமன் ஜி,  வெங்கட் நாகராஜன் ,,Kamala Hariharan,அன்பு தேவகோட்டைஜி,
துரை செல்வராஜு, பானுமதி வெங்கடேஸ்வரன்,

ஷாந்தி மாரியப்பன் , உஷா ராமச்சந்திரா,மதுமிதா,
 இன்னும் அந்தரங்கத்    தோழிகளாக  விடாமல் 
அரவணைக்கும்  எல்லாக் குழுக்களும் 
 நான் எழுதத்  தொடங்கின நாட்களிலிருந்து கிடைத்தவர்கள்.

 என் இனிய நாட்களிலும் , இனிமை இல்லாத நாட்களிலும் 
கூடவே  இணைந்திருந்தவர்கள்.
தமிழ் கொடுத்த இந்த இனிமை  ,இணையம் கொடுத்த நட்பு 
எல்லாமே வார்த்தைகளில் அடைத்து விட முடியாது.

இவை எல்லாம்  தொடர இறைவனே அருள் செய்ய வேண்டும்.

இன்னும் நண்பர்கள்  பெயர்கள் விட்டுப் போயிருக்கும்.
நம் சந்திரமௌலி கணபதி போல.
எல்லோரும் முக நூலுக்கு மாறிய வேகத்தில் வலைப் 

பதிவில் எழுதுகிறார்களா தெரியவில்லை.

ஐப்பசி வர போகிறது. கூடவே மௌனமாக இருக்க வேண்டிய தினங்களும் வரும்.

நன்மைகள்  சேர அனைவரும் மிக நலமாக இருக்க வேண்டும்.
அனைவருக்கும் நவராத்திரி நாட்களுக்கான வாழ்த்துக்கள்.

எல்லோரும்   எப்படிக் கொண்டாடப்  போகிறீர்களோ 
தெரியவில்லை. இதுவும்  ஜூம்  வழியே நடக்குமோ.:)
பார்க்கலாம்.

Special mention to Sujatha Yagnaraman,and Latha Ganesan











Major Chandrakanth - Nagesh tells his story

வல்லிசிம்ஹன்
  மிகப் பிடித்த சினிமா. மிகப் பிடித்த காட்சி.
மிகப் பிடித்த நடிகர்கள்.

Tuesday, October 13, 2020

Homemade pani puri recipe | golgappa recipe | puchka recipe |How to mak...

வல்லிசிம்ஹன்

கடைக்குப் போய் இதெல்லாம் சாப்பிட முடிவதில்லை.
அதனால் யூ டியூபில் பார்த்து இங்கு பதிவிட்டேன்.

Sunday, October 11, 2020

மதுரையும் வடையும் - Vadas of Madurai - MSF

வல்லிசிம்ஹன். Ahaa. our Madhurai.

ஒன்று சேர்ந்த அன்பு மாறுமா....2

ஸாலியும், அவள் கணவரும் கொண்டு வந்த பூங்கொத்து.


வல்லிசிம்ஹன்

ஒரு நாள் முன் கூட்டியே தொலைபேசிவிட்டு 
ஸாலி வரேன் என்றதும் 
எங்களுக்கு ஒரே ஆச்சர்யம்.
அவளுக்கு நம் எலுமிச்சை சாதம் பிடிக்குமாம்.
ஒரு இந்திய குடும்பத்து விருந்தில் சாப்பிட்டிருக்கிறாளாம்.
இதைச் சொல்லி
''மம்மா கிட்ட ரெசிப்பி வாங்கிக் கொள்ள வருகிறேன்''
என்றாள்..

ஏதாவது கேசரி செய்து வைக்கலாமா 
திருமணமாகி வருகிறார்களே என்றேன்.
மாப்பிள்ளையும் மகளும் சிரிக்க ஆரம்பித்து விட்டார்கள்.

    "Just a social visit ma" . நீ பேசிக்கொண்டிருந்தால் போதும்.
நம் சாய் கொடுத்தால் போதும் என்றார்கள்.
சரி போ நமக்கென்ன ' என்று இருந்து விட்டேன்.
அவர்களும் வந்தார்கள் ஒரு மதியம்.

அருகில் பார்த்ததும் தான் அவர்களின் 
முகத்தில் இருந்த கவலைக் கோடுகளையும்
கண்ணில்  வழிந்த அன்பையும் காண முடிந்தது.

அங்கே இங்கே சுற்றி திருமணத்தில் வந்து நின்றது.
''உங்களையும் அழைக்க எனக்கு விருப்பம்.
எங்கள் உணவு எல்லாம் உங்களுக்குப் 
பிடிக்குமோ தெரியாது''
இதோ ஆர்தர்,என் சார்பில் சாக்கலேட் அண்ட் காண்டி
என்று இருவரும் சேர்ந்து கொடுத்தார்கள்.

எனக்கு உங்கள் திருமணம் ஒரு சர்ப்ப்ரைஸ் 
என்று சொன்னேன்.
ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டவர்கள்
''முப்பது வருடம் காத்திருந்து மணம் செய்தோம்''
என்றார்கள்.

பிறகுதான் முதல் பாகத்தில் சொல்லி இருக்கும் விஷயங்களைச் சொன்னார் ஆர்தர்.
இருபது வயதில் ஸாலியைப் பிரிந்த நான்
அவளைத்தவிர யாரையும் மணம் செய்வதில்லை
என்று உறுதியாக இருந்தேன்.

அந்த ஊரில் இருக்கவும் முடியாமல் இன்னோரு மாகாணத்துக்கு
வந்துவிட்டேன். 20 வருடங்கள் சென்ற நிலையில்
 ஸாலியின் கணவர்  புற்று நோயில்
சிரமப் படுவது தெரிந்தது.
அவளிடம் வளர்வது எங்கள் மகள் என்பதும் 
ஸாலியின் தந்தையை சர்ச்சில் பார்த்த போது சொன்னார்.

என் பெற்றோர்களூக்கு நான் ஒரே மகன். திருமணம்
செய்து கொள்ளும்படி
எத்தனையோ சொல்லிப்  பார்த்தார்கள்.
நான் மறுத்து ஸாலியின் வேதனைகளில் பங்கு கொண்டேன்.
உதவி செய்தேன். அவள் கணவர் எட்வர்ட்
மிக நல்லவர். எனக்கு உற்ற தோழன் ஆனார்.
நாலு வருடங்கள் நரக வேதனையில் கழிந்தன.

அவர் இறைவனடி அடைந்த போது ஸாலியின் துயரத்தை 
என்னால் தாங்க முடியவில்லை.

மகள் திருமணமாகி வாஷிங்டன் சென்று விட்டாள்.
வளர்ப்பு மகன் காலிஃபோர்னியாவில் ஆராய்ச்சிப் படிப்பு
படிக்க வேண்டும் என்ற நிலையில்
நான் வேலை செய்யும் இந்த மாகாணத்துக்கு வருமாறு ஸாலியை
அழைத்தேன்.

முதலில் தயங்கியவள் மூன்று வருடங்கள் முன் சம்மதித்தாள்.
 இங்கே வந்தோம்..

ஸாலி தன் துயரத்திலிருந்து மீண்டு வரக் காத்திருந்தேன்.
இதோ நாங்கள் இணைந்து விட கடவுள் வழிவிட்டார்
என்று  சொன்ன ஆர்தரைப் 
பார்த்து என் பிரமிப்பு அடங்காமல்
ஸாலியிடம் கேட்டேன்.
''நீ உண்மையிலேயே கொடுத்து வைத்தவள்.
இத்தகைய மனிதரைப் பார்ப்பது மிக அரிது "
என்றேன்.
மென்மையாகச் சிரித்தவள் நான் திருமண பந்தத்தை
மிக மதிக்கிறேன்.
என் இருதயத்தில் ஆர்தருக்குக் கொடுத்த அன்பை ,என் கணவரிடம் கூட செலுத்த முடியவில்லை.
என் தந்தையின் பிடிவாதத்துக்காக எட்வர்ட் என்னை மணந்தார்.

மனம் ஒன்றாததாலோ என்னவோ குழந்தைகள் 
பிறக்கவில்லை.
பந்தத்தில் இருந்தோம். ரத்து செய்ய மனமில்லை.
இப்போது இறைவன்  சித்தம்  இணைகிறோம்.
ஆர்தருக்கு  இனியாவது வாழ்க்கையில்
இனிமை வேண்டும் என்றபடி தன் கணவரைப் 
பார்த்து புன்னகை செய்தவளை

நாங்களும் மகிழ்ச்சியுடன் வாழ்த்தினோம்.
வசந்தம் அவர்களுடன் நிலைக்க வேண்டும்.


Friday, October 09, 2020

ஒன்று சேர்ந்த அன்பு மாறுமா....1

இது புதுப் படம்


வல்லிசிம்ஹன்
இது பழைய படம்.

2018இல் நான் பார்த்த தம்பதியர்  சாலியும் அவள் கணவன் ஆர்தர் மில்லரும்.

எங்கள் வீட்டு வேலிக்குப் பின் புறம் இருக்கும்
மில்லியன் டாலர் வீட்டில் இருப்பவர்கள்.

அவர்களது தோட்டத்தில் ஸாலியும் கணவரும் வேலை செய்வார்கள்.
நானும் மகளும் செம்பருத்திச் செடிகளை நட்டுக் கொண்டிருந்தோம்.

ஓரிரண்டு வார்த்தைகளில் ஆரம்பித்த நட்பு
வளர்ந்தது.

அது கோடைக்காலமாதலால்  வருபவர்கள் போகிறவர்கள்
என்று கலகலப்பாக இருந்த நேரம்,
ஒரு சனிக்கிழமை மாலை வீட்டைக் சுற்றி விள்க்குகள்.

குழந்தைகளின் விளையாட்டுச் சத்தம்.
என்ன விசேஷம் என்று மகளைக் கேட்டேன்.
 ஸாலி ஆர்தர் Getting married '' என்றாள்!!
என்னது. இனிமேதானா. ?
எனக்குப் புரியவில்லை. ஸாலி இரண்டாவது தடவையாகத் திருமணம்
செய்கிறாள்....ஆர்தருக்கு இதுதான் முதல் என்றாள்.

ஸாலியின் மகளும் மகனும் சிறப்பாக உடை உடுத்தி
பலூன் ,பூ அலங்காரம் எல்லாம் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
அவர்களின் குழந்தைகள் களியாட்டம்
போட்டுக் கொண்டிருந்தார்கள்.

அந்தப் பெரிய தோட்டம் அழகான பெரிய  ஷாமியானா
போடப்பட்டு, நாற்காலிகள்  ,அதற்கான அலங்காரங்கள்
என்று சிறப்பாக  ஒளிர்ந்தது.

விருந்தினர்கள் வர ஆரம்பித்ததும்
நாங்கள் உள்ளே வந்து விட்டோம்.
 இசை, நடனம் என்று இரவு 10 மணி வரை தொடர்ந்தது.
 

இது ஆர்தருக்காகப் போடப்பட்ட பாடல்.

இது ஸாலிக்காக இசைக்கப் பட்டது.

 கிட்டத்தட்ட இரண்டு வாரங்களுக்குப் 
பிறகு  ஸாலியை நம் வீட்டுக்கு வரச் சொல்லி 
அழைத்தாள் மகள்.

பிறகே இந்தத் திருமணத்துக்கான கதை 
புரிந்தது!!!!!


இந்த ஊரில் ஹைஸ்கூல் ஸ்வீட் ஹார்ட்ஸ்னு சொல்வார்கள் .
பள்ளியிலேயே  காதலிப்பது. சில திருமணங்களில்
முடியும்.
சிலர் பிரிந்து விடுவார்கள்.
ஆர்தர் குடும்பமும் ,ஸாலி குடும்பமும் 
பக்கத்து வீட்டுக்காரர்களாம்.

ஏதோ ஒரு  குழப்பத்தில் ஸாலியின் தந்தை
பக்கத்து வீட்டுக்காரர்களைப்
பகைத்துக் கொண்டார்.
 
காதலிக்கத் தொடங்கி இருந்த ஆர்தர் ,ஸாலி ஜோடியைப்
பிரித்தார்,.
அப்பொழுது ஸாலி கர்ப்பமாக இருந்திருக்கிறார்.
ஆர்தர் மனம் உடைந்து வேற்றூரில் கல்லூரிப் 
படிப்பைத் தொடர்ந்து விட்டாராம்.

அவர் தன்பெற்றோரைப் பார்க்கவே
நாலைந்து வருடங்கள் கழித்தே வந்தாராம்.
தந்தையின் கெடுபிடியில் வேற்று ஊருக்கு 
அழைத்து செல்லப்பட்டு அங்கே குழந்தை பெற்றாராம்
ஸாலி.

அங்கேயே மற்றோரு தொழிலதிபருக்கு
தந்தை திருமணம்  ஸாலியைத் திருமணம்
செய்து வைத்தாராம்.
பென்னட் என்று பெயர்.
துரதிருஷ்ட வசமாக  பென்னட் , ஸாலிக்குக்
குழந்தை இல்லை.
அதனால்  ஆதரவு அற்ற குழந்தைகள் இல்லத்தில் இருந்து
இன்னோரு ஆண் குழந்தையைத் தத்தெடுத்தார்களாம்.

இதென்னடா இது !!! நாம் படிக்கும் கதைகளுக்கு மேலே
பெரிய கதையாக இருக்கிறதே என்று நான் திறந்த வாயை மூடவில்லை!!!!!!!!!!





Wednesday, October 07, 2020

ஒற்றை டெய்சி

வல்லிசிம்ஹன்


எல்லாமலரும்  பூத்து ஓய்ந்து 
மண்ணுக்கு உரமாகும் போது 
தனித்து நின்ற இந்த  ஒரு டெய்ஸிச் செடி எனக்கு 
ஆச்சர்யமாக  இருந்தது.

எல்லாவற்றுக்கும் முதியவளா நீ என்று கேட்டேன்.
தனியே நிற்பதில்  உனக்கு 
சோகம் இல்லையா என்ற   .போது 
அது  காற்றில் தலையை ஆட்டியது.

இல்லை. இப்போதிருக்கும் காற்றும் வெளிச்சமும்
 நலம் விசாரிக்கும் வண்டுகளும் 
எனக்குத் துணை.
இதோ இன்னும்  நவம்பர் பனி  காத்திருக்கும் வேளையில் 
நிற்க எனக்கு  வளம் இருக்கிறது.
இதோ வாடி நிற்கும் என் தோழிகள் மீண்டும் உயிர்க்கத்தான் போகிறார்கள்.
அந்த வேளை  வரும் போது நானும் 
கூட வருவேன்.

இயற்கையின் நியதிதானே.
முன் சென்றவர்கள் முன் வருவதும் 
பின் சென்றவர்கள் பின் வருவதுமாக சுழற்சியில் 
எனக்கேதும் வருத்தம் இல்லை.

நீயும் வந்து பேசினால் இன்னும் 
சந்தோஷம்  என்று பூரித்துச் சிரித்தது.


Tuesday, October 06, 2020

பொய்யில் பிழைக்க முடியுமா?


வல்லிசிம்ஹன் 
எல்லோரும் வளமாக வாழவேண்டும்.

நம்மூரில்  சில காலங்களுக்கு முன்

ஏதாவது  அரசியல் வாதிக்கு  சவாலாக ஏதாவது சந்தர்ப்பம் நேரந்தால் உடனே நெஞ்சுவலி என்று சொல்லி 
பொது மருத்துவமனையில் சேரந்து விடுவார்கள். இது பற்றி அடிக்கடி  துக்ளக்கில் வரும் ஜோக்.

 தம்பி. கல்கத்தாவில் இருக்கும் போது அங்கு இருந்த உயர்தர மருத்துவமனை  யில் அனுமதிக்கப் படும் பெரிய மனிதர்களைப் பற்றி வேடிக்கையாகச் சொல்வான்.



அந்த ஹாஸ்பிட்டல் பெரிய ரிஸார்ட் போல இருக்குமாம். அடிக்கடி
உள்ளே. இருப்பவர்கள். கலந்து பேச வசதி இருக்குமாம்.
இது ஒரு கேலிக் கூத்தாகவே நடந்தது. புதிய தலைமுறை அரசியல்வாதிகளின் 



போக்கு அப்படித்தான்   இன்னும் இருக்கிறதா தெரியவில்லை.

இது நம் ஊருக்கு மட்டும் உரித்தான ஸ்பெஷல் நடவடிக்கையாக இல்லை.
அநுதாப அலைக்காக. எதுவும் நடக்கச் சான்ஸ் இருக்கிறது 
என்பது தெரிகிறது.

ராமர் ஒரு அஸ்திரம் எடுத்தால்
நினைத்த காரியத்தை முடிக்காமல் திரும்பாதாம்.

அது போல் இந்தத் தொற்று எல்லோரையும் நோக்கிப் பாய்ந்தால்
என்ன செய்வது.
அனுப்பினவனிடமே சரண் அடைய வேண்டும்.

சொல்லப்பட்ட கட்டளைகளை மீறக் கூடாது.
இது எல்லாம் உணர்ந்தே இருக்கிறோம்.

தினப்படியே உழைத்துப் பிழைப்பவர்களை
எப்படிக் காப்பது?
 அந்த நினைப்புடன்  எங்கள் உறவினர்கள் 
சில நடவடிக்கைகள் எடுத்து வருகிறார்கள்.
பல குடும்பங்கள் ஒன்று சேர்ந்து அரிசி 
வகையறாக்களைச் சேர்த்து  பக்கத்துக் குடியிருப்புகளில்
வினியோகிப்பதாகவும்,
பல குடும்பங்கள் வெவ்வேறு விதமாகப்
பணம் சம்பாதித்துக் கொள்ள ஆரம்பித்திருப்பதையும்
என் அம்மா வழி உறவினர் சொன்னார்.
சிறு துளிதானே பெரு வெள்ளம்.

இங்கு வீட்டு மராமத்துக்கெல்லாம் ஆட்களை
வரவழைப்பது குறைந்துவிட்டது.
அனேகமாக வெளித்தோட்டத்து வேலை செய்பவர்கள்
தொற்றில்லாமல் இறைவன் காத்து வருகிறான்.
இறைவனுக்கு நன்றி.
இந்த ஊரைச் சேர்ந்த ஒருவர்
தலைவரைப் பின் பற்றி பல கூட்டங்களுக்கும் சென்று வருபவர்.
அவரை வீட்டுக்குள் வரவிடவே 
பயமாக இருப்பதால் அந்த வேலைகள் நிற்கின்றன.

நம் ஊரில் இருக்கும் வயதானவர்களைப் 
பற்றிய கவலை இருக்கத்தான் செய்கிறது.
அதுவும் வீட்டில் தங்காமல் பயணங்களிலேயே
 இருப்பவர்கள் கொஞ்சம் மன நிலை
குன்றி கலவரப் படுவதையும் தொலைபேசியில் தெரிகிறது.

எல்லா மன சிரமங்களும் தீரும் காலம் வரும். 
அதுவரை நம் மனசாட்சிக்கு ஒப்ப நடப்போம்.
பித்தம் பிடித்தவர்கள் பேச்சைக் கேட்க வேண்டாம்.



Em Mannin Vendhargal - Episode 11 | Kavitha's KadhaiPodcast | எம் மண்ணின...

வல்லிசிம்ஹன்

மிக அருமையாக இரண்டு தளங்களில் இயங்கி வரும்
கவிதா ஜீவா அவர்களுக்கு வாழ்த்துகள்.
எம்மண்ணின் வேந்தர்கள்
ஒரு தளம்.
கல்கியின் சிவகாமியின் சபதம் இன்னோரு Podcast.

நண்பர்கள் அனைவரும் கண்டு,கேட்டு மகிழும்படி
வேண்டிக்கொள்கிறேன்.


Monday, October 05, 2020

தூண்டில் புழு

வல்லிசிம்ஹன்

தமிழில் Instigator வார்த்தைக்கு என்ன பொருள்
என்று பார்த்தேன்.
சிறு வயதில் இருந்து எனக்கு இந்த விஷயத்தில் பொறுமை 
இருந்ததில்லை என்று தெளிவாகியது.

இல்லாவிட்டால் உலகில் கேலி செய்பவர்களும், 
அதனால் 
பாதிக்கப் படுபவர்களும்,
அவர்களின் துன்பத்தைக் கண்டும் 
அலட்சிய ப்    படுத்துபவர்களும்  இருப்பதைக் காணும் போது
இத்தனை வருந்த வேண்டாம்.
நம்மால் இதற்கு  என்ன செய்ய முடியும்?

.


இதோ இங்கே ஒரு நாடகம் அரங்கேறிக் கொண்டிருக்கிறது.
உலகம் எங்கும் தொற்று விளையாடிக் கொண்டிருக்க
அத்தனை உயிர்களும் அதிர்ந்து மரித்துக் கொண்டிருக்க

யார் முன்னோடியாக இருக்க வேண்டுமோ
அவரே எல்லாவற்றையும் கேலிக்கூத்து என்று
சொல்லிக் கொண்டிருந்தார்.
அகத்தியர் படத்தில் இராவணன் பாடுவது போல
வென்றிடுவேன்'' என்று சூளுரைத்தவர்
தானே அந்தப் புயலில் மாட்டிக் கொண்டிருக்கிறார்.

இறைவன் தான் அனைவரையும் காக்க வேண்டும்.
 இரண்டு நாட்களுக்கு முன் கோவிட் 19க்கு 
இரையான என் தோழிக்கு இந்தப் பதிவு சமர்ப்பணம்.

சாந்தமே வடிவானவள். அதிர்ந்து பேசத் தெரியாது.
சென்ற வருடம், இந்த ஊரில் இருக்கும் அவளுடைய மகள் வீட்டிற்கு
வந்திருந்த போது
சந்தித்துப் பேசிக்கொண்டோம்.

நல்ல ஆரோக்கியமான வாழ்க்கை. வேலைக்கு அஞ்ச மாட்டாள்.
யார் வழியாக இந்த நோய் வந்தது என்று தெரியாமலேயே
5 நாட்களில் இறைவனடி சேர்ந்தாள்.
அந்த மக்கள் படும் துன்பம் அளவிட முடியாதது.

தாயைப் போய்ப் பார்க்க முடியாத நிலை.

உலகம் மாறட்டும். நல்ல வார்த்தைகள் சொல்லி
பிரார்த்தனை செய்வதைத் தவிர வேறு வழி இருப்பதாகத் தெரியவில்லை.
முகக் கவசம் அணிவோம்.
முடிந்தவரை வெளியில் செல்வதைத் தவிர்ப்போம்.
நம்மால் மற்றவருக்கும் 
அவர்களால் நமக்கும் தொற்று வராமல் 
இருக்க ஒரே வழி அது.

Friday, October 02, 2020

நல்ல நடிப்பு என்றால் என்ன?

அந்த நாள் படமும் இன்னோரு கோணத்தில் சிவாஜியைக் காண்பித்தது. ஆண்ட்டி
ஹீரோ. முழுமையான படம்.
வீர பாண்டியக் கட்டபொம்மன், கப்பலோட்டிய தமிழன் எல்லாமே
நடிப்பின் மைல் கற்கள்.

அவர் நடிப்பும் என்றும் நம்முடன்.


வல்லிசிம்ஹன்

இந்தப் பதிவு என்னைப் போன்ற சிவாஜி ரசிகர்களுக்கு மட்டுமே.:)))))))))))

நடிப்பு என்ற ஒன்றுக்காகவே படங்கள் 
வெற்றி பெற்ற காலங்களில் வளர்ந்த நாங்கள் நல்ல கருத்துகளைக் கேட்டோம்.
குடும்பம் , பாசம், கட்டுப்பாடு, நேர்மை
தேச பக்தி என்று கட்டுக்கோப்பாய் அமைந்து வந்த
படங்களை நடிகர்கள் நடித்து வெளி
வந்த போது நன்மை வெற்றி பெறும்.
தீமை தொலையும் என்றே  நம்பினோம்.

பராசக்தி முதல் உயர்ந்த மனிதன் வரை  நடிகர் திலகம் 
படங்களை அத்தனையும் பார்க்காவிட்டாலும் 

நல்ல விமரிசனம் வந்த படங்களுக்கு
அப்பாவே அழைத்துப் போவார்.
ப'' வரிசைப் படங்களில் இசையும் நன்றாக இருகும்.
கருத்தும் நன்றாக இருக்கும்.

ஆமாம் பணம் வாங்கிக் கொண்டுதான் 
நடித்தார்கள்.
 ஆனால் எவ்வளவு உண்மையாக இருக்க முடியுமோ
அத்தனை திறமையையும் கொடுத்தே
நடித்தனர்.

சின்னத்தம்பி ரசித்தது போல அவர் நடிப்பை அங்குலம் அங்குலமாக்ச் 
சொல்ல முடியாது.
மொத்தத்தில் அவரது பாடல்கள்
ரசிக்கும்படி இருக்கும்.
வயதான பிறகு அவர் நடித்த படங்களை நான் விரும்பிப்
பார்க்கவில்லை.
தேவர் மகன் படம் அந்தக் குறையைத் தீர்த்தது.

சோகம் நிரம்பிய படம் என்பதற்காகப்
பாசமலர் முடிவதற்கு முன்பே வெளியே வந்த நினைவும் 
இருக்கிறது.
எழுத்தாளர் சுகா அவர்களின் 'தாயார் சன்னிதி'யில்
பாசமலர் படப் பெயரைப் 
பார்த்ததுமே அவர் நண்பர் அழுதுவிடுவாராம்:)
உண்மையிலேயே  மிகச் சிறப்பான வசனங்களுடன்,
காட்சி அமைப்புகளுடன் வந்த படம்.
அண்ணனும் தங்கையும் ஒன்றாக உயிர் நீத்த கதை அது ஒன்றுதான் 
என்று நினைக்கிறேன்.
அப்படி எல்லாம் நடக்க சாத்தியக்கூறுகள்
இல்லை என்றாலும், நம்ப வைத்தார்கள் சிவாஜியும் நடிகையர் 
திலகமும்.
அதே போல ''கை கொடுத்த தெய்வம்''

உயர்ந்த மனிதனின் கௌரவமான நடிப்பு.

சாவித்திரியின் நடிப்புக்கு இன்னோரு கோணம்,
பெருமை கொடுத்த படம்.
முதல் பாதியில் அட்டகாசம் செய்தாலும் அடுத்த பாதியில்
மிக அடக்கி நடித்திருப்பார் சிவாஜி.

''தங்கப்பதக்கம்'' இன்னோரு பக்கம்.
மிகை மிகை என்று சொல்பவர்களுக்கு
இந்த நடிப்பை நேரில் மேடையில் 
பார்த்திருக்கும் எனக்கு என்ன பதில் என்றே சொல்ல 
முடியவில்லை.
இப்படி எல்லாம் காவல் துறை அதிகாரிகள் 
இருந்திருக்கிறார்கள்.என்று நம்ப வைத்த படம்.






ஞான ஒளி நாடகமும் , திரைப்படமும் 
பார்த்திருக்கிறேன்.
மேஜரும், சிவாஜியும் நல்ல ஜோடி.
இருவரும் நடிப்பில் வல்லவர்கள்.

மெலோட்ராமா என்று வைத்துக் கொண்டாலும் அலுக்காத 
படம்.
அதுவும் கடைசிக் காட்சியில் நடிகை சாரதாவும், 
மேஜரும்,சிவாஜியும்  நடிப்பில் ஜெயித்திருப்பார்கள்.

Thursday, October 01, 2020

வாழ்க்கையின் நலங்கள்.



ஓம் சாயி ராம்
வல்லிசிம்ஹன்

குளிரோ வெயிலோ வாழ்க்கையைத் தொடரும் 
வாத்துக் கூட்டம்.

இன்றைக்கு  வந்து கொண்டிருக்கும் முழு நிலா. மேகம் மறைக்காமல்
இருக்கட்டும்.
இனிமையான பயணங்களைக் கொடுத்த இறைவனுக்கு நன்றி.

என்றும் வாழ்க உங்கள் குரல். அஞ்சலிகள்.