அனைவரும் நலமாக இருக்க பிரார்த்தனைகள்.
இந்தத் தொற்று நோய் தொடாத பகுதியே இல்லை என்று ஆகிவிட்டது.
அதையும் மீறி வர.சில நல்ல காரியங்களும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.
இறைவன் கருணையில். சிக்கனத் திருமணங்களை நடத்திக் காட்டும் பெற்றோர்.
எப்பொழுதும் அக்டோபர் மாதத்துக்குப்
பதிவிடும் நினைவு நாள்.
இந்த வருடம் ஐப்பசி அமாவாசை சீக்கிரம்
வர,
ஏகாதசியும் கூட சிங்கம் வரும் நாள் சூம் மீட்
ஆக நிறைவேறியது. சென்ற வருடம்
நாங்கள் அங்கே இருந்தோம்.
வீட்டுக்கு சென்று ஒரு வருட அழுக்கை நீக்கி, பூஜை அறை
முதல் வாயில் கதவு வரை சுத்தம் செய்து
பழைய நிலைக்குக் கொண்டு வந்தோம்.
''இத்தனை நாட்கள் எங்கே போனீர்கள்?''
வீடு கேட்டதா, மனம் கேட்டதா இல்லை
படத்தில் இருந்தவர் தான் கேட்டாரா தெரியாமல்
வந்தவர்களை உபசரித்து, சேர்ந்து உண்டு
கலகலப்பாக இருக்க முயற்சித்தேன்.
எல்லோருக்கும் சாப்பாட்டு அறையில் முக்கிய ஆள் இல்லை என்ற
கலவரம் போகும் வண்ணம் ஏதோ பேச்சு,
சிங்கம் செய்த கலாட்டாக்கள்
என்று பேச்சு.
ஓர்ப்படிகளும் நாத்தனாரும் அணைத்து ஆதரவு சொல்லிக் கிளம்பினார்கள்.
அன்று சாப்பிட வந்தவர்களில் இருவர் தொற்றுக்கு
இரையானார்கள்.
சிங்கத்தின் அத்தை மகன் ,இன்னொருவர் பெரியப்பா மகன்.
அதுதான் வாழ்க்கைச் சக்கரம்.
எதையும் கடக்க வேண்டிய காலம். நிகழ்கால
நல்லதுக்கு வேண்டுவோம். இருப்பதை விட்டுப்
பறப்பதை நினைத்து என்ன செய்ய முடியும்.
அடுத்த பரம்பரை நலமுடன் இருக்க வேண்டும்.
11 comments:
நினைவுகள் சுகமானவை, சில சமயங்களில் கனமானவை. மறந்தால்தானே நினைப்பதற்கு என்றும் சொல்லலாம். சென்ற வருடம் நவம்பர் மாதம்தான் நான் உங்களை சந்தித்தேன். உங்கள் மூலம் ரமாவையும். நிலைமை சீராக இருந்திருந்தால் நீங்கள் இந்த வருடமும் சென்னைக்கு வந்திருப்பீர்கள் இல்லையா?
வணக்கம் சகோதரி
அனைவருக்குமே நினைவுகள் என்றும் பெட்டகங்களில் வைத்து பாதுகாக்கப்பட்டு வருபவை. நீங்கள் தந்த விபரங்கள் என்னை மிகவும் வருத்தப்பட வைத்து விட்டது. நம் அனைவருக்கும் உங்களவரின் ஆசிர்வாதங்கள் எப்போதும் உண்டு. உங்களுக்கு ஆறுதல் சொல்ல என்னிடம் பலம் இல்லை. ஆனால், இறைவன் நல்ல பொறுமையும், அன்பையும் இரு கண்களாக உங்களுக்கு தந்தருளி உள்ளார். அவர்தான் எதையும் தாங்கும் மனோ தைரியத்தையும் தங்களுக்கு தவறாமல் தந்தருள வேண்டும்.நானும் அவ்வண்ணமே பிரார்த்தித்துக் கொள்கிறேன்.
அன்புடன்
கமலா ஹரிஹரன்.
அன்பு பானுமா, ஒரு வருடம் ஓடிவிட்டது
பார்த்தீர்களா. நம் எல்லோரையும் பிணைக்கும்
பாசம் இந்த நட்புதான். நீங்கள் எத்தனையோ
தூரத்திலிருந்து வந்துவிட்டு சென்றீர்கள்.
அதையும் எழுதி இருக்க வேண்டும்.
ஏதோ நினைவுகளில் மூழ்கி விட்டேன்.
ஆமாம் இந்தத் தொற்று இல்லாவிட்டால் வந்திருப்பேன். எல்லோரையும்
தொந்தரவு செய்து என்ன சாதிக்கப் போகிறேன்.
மிக மிக நன்றி மா. எல்லாம் கடவுள் செயல்.
அனைவரையும் அவரே காக்க வேண்டும்.
அன்பு கமலாமா,
அருமையான வார்த்தைகளால் அணைக்கிறீர்கள்..
உண்மையே. நினைவுகளைப் பூட்டி வைத்து
அனுபவிக்கிறோம். நான் மட்டும் இல்லை. இழப்பு அனைவரையும்
தவிக்க வைக்கிறது.
யாரும் தப்புவதில்லை.
இந்தக் காலத்தில் இணைய நட்புகளாவது கிடைக்கின்றன.
பாட்டி காலத்தில் இன்னும் கடுமையான கட்டுப்பாடுகளைத் தாண்டி
தன் குழந்தைகளை வளர்த்தார்.
ஏதோ ஆற்றாமையில் பதிவிடுகிறேன் அம்மா.
இறைவன் நம்மைக் காக்கட்டும். நம்
மக்கள் செல்வங்களையும் அணைத்து செழிக்க வைக்கட்டும்.
மனத்துக்கு வருத்தத்தையும், அதற்கு முந்தைய சுக நினைவுகளையும் உங்கள் எல்லோருக்கும் தரும் நாள்.
சென்ற வருடம் சந்திக்க இயலவில்லை. பிரச்சனைகளெல்லாம் முடிந்து மீண்டும் உங்கள் வீட்டிற்கு நீங்கள் பயணித்து நினைவில் சில நாட்களாவது மூழ்க வேண்டும்.
மனதில் என்றென்றும் நினைவில் இருக்கும். மறந்தால் தானே நினைக்க! எங்களுக்கே இதை நினைத்து மனம் ஆறவில்லை. உங்கள் அருகிலேயே எப்போதும் இருந்து அனைவரையும் காத்து நிற்பார். தெய்வமாக இருந்து வழிகாட்டுவார். மனதை ஆறுதல் படுத்திக் கொள்ளுங்கள் என்று சொல்லத்தான் முடியும். ஆனால் எத்தனை கஷ்டம் என்பதும் புரிகிறது. இனி வரும் நாட்கள் நல்லவையாக இருக்கட்டும்.
அன்பு முரளிமா,
எத்தனையோ நிகழ்வுகள். ஆத்ம விசாரம் என்று
போனால் இதெல்லாம் சகஜமாக நிகழ்வதுதான்.
அதைத் தாண்டி மேற்கொண்டு
வாழ வேண்டிய கடமையும் இருக்கிறது.
ஆனால் அந்த ஒருவாரமாவது, நம் வாழ்க்கையின் ஆதாரத்தை
நினைத்துப் பார்க்க வேண்டும் என்பதே என்
எண்ணம். அவர் இல்லாவிட்டால், குழந்தைகள், அவர்களின் வளர்ச்சி, இதோ இந்தக் கணினி,
இணையம்,நட்பு எல்லாம் சாத்தியமாகி
இருக்க சந்தர்ப்பங்கள் குறைவு.
பெரும்பங்குக்கு அவர்தான் ஆதாரம்.
விட்டால் சொல்லிக் கொண்டே போவேன்.
அதனால் தான் என் வலைப் பதிவில்
பதிந்து வைக்கிறேன்.
நீங்களும் இப்போது உங்கள் அம்மாவைப்
பற்றி நினைத்துக் கொண்டிருப்பீர்கள்.
நன்றி மா.
ஆமாம் முரளிமா,
வீட்டுக்கு செல்வது எப்பொழுதாவது நிகழலாம்.
பார்ப்போம்.
அன்பு கீதாமா,
மறக்க முடியாத மனம் பகவான் கொடுத்து விட்டார். மறக்க
விரும்பவில்லை.
நீங்கள் எல்லோரும் இங்கு வந்து பகிர்ந்து கொள்வதில்
மனதுக்கு மிக மிக ஆறுதல்.
பித்துப் பிடித்த மனதுக்கு மருந்து.
எல்லோருக்கும் இது புரியாது.
புரிந்து சொல்பவர்கள் நம் மனதுடன் இருக்கிறார்கள்
இணைகிறார்கள். நன்றி மா. என்றும் நலமுடன் இருங்கள்.
எல்லாமே அவர்தான் என்று வாழும் போது பிரிவு மனதை வேதனைப்படுத்தும். எத்தனை வருடம் ஆனாலும் மறக்க முடியாது.
என்று உங்கள் நினைவுகளில் வாழ்ந்து கொண்டு இருப்பார்கள்.
குழந்தைகளை, உங்களை ஆசீர்வாதம் செய்து கொண்டு இருப்பார்கள்.
நல்ல நினைவுகளை நினைத்து மகிழ்ந்து இருங்கள்.
என்றும் அழியா நினைவுகள். குடும்பத்தை ஆசீர்வதிப்பார்.
Post a Comment