Blog Archive

Sunday, October 11, 2020

ஒன்று சேர்ந்த அன்பு மாறுமா....2

ஸாலியும், அவள் கணவரும் கொண்டு வந்த பூங்கொத்து.


வல்லிசிம்ஹன்

ஒரு நாள் முன் கூட்டியே தொலைபேசிவிட்டு 
ஸாலி வரேன் என்றதும் 
எங்களுக்கு ஒரே ஆச்சர்யம்.
அவளுக்கு நம் எலுமிச்சை சாதம் பிடிக்குமாம்.
ஒரு இந்திய குடும்பத்து விருந்தில் சாப்பிட்டிருக்கிறாளாம்.
இதைச் சொல்லி
''மம்மா கிட்ட ரெசிப்பி வாங்கிக் கொள்ள வருகிறேன்''
என்றாள்..

ஏதாவது கேசரி செய்து வைக்கலாமா 
திருமணமாகி வருகிறார்களே என்றேன்.
மாப்பிள்ளையும் மகளும் சிரிக்க ஆரம்பித்து விட்டார்கள்.

    "Just a social visit ma" . நீ பேசிக்கொண்டிருந்தால் போதும்.
நம் சாய் கொடுத்தால் போதும் என்றார்கள்.
சரி போ நமக்கென்ன ' என்று இருந்து விட்டேன்.
அவர்களும் வந்தார்கள் ஒரு மதியம்.

அருகில் பார்த்ததும் தான் அவர்களின் 
முகத்தில் இருந்த கவலைக் கோடுகளையும்
கண்ணில்  வழிந்த அன்பையும் காண முடிந்தது.

அங்கே இங்கே சுற்றி திருமணத்தில் வந்து நின்றது.
''உங்களையும் அழைக்க எனக்கு விருப்பம்.
எங்கள் உணவு எல்லாம் உங்களுக்குப் 
பிடிக்குமோ தெரியாது''
இதோ ஆர்தர்,என் சார்பில் சாக்கலேட் அண்ட் காண்டி
என்று இருவரும் சேர்ந்து கொடுத்தார்கள்.

எனக்கு உங்கள் திருமணம் ஒரு சர்ப்ப்ரைஸ் 
என்று சொன்னேன்.
ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டவர்கள்
''முப்பது வருடம் காத்திருந்து மணம் செய்தோம்''
என்றார்கள்.

பிறகுதான் முதல் பாகத்தில் சொல்லி இருக்கும் விஷயங்களைச் சொன்னார் ஆர்தர்.
இருபது வயதில் ஸாலியைப் பிரிந்த நான்
அவளைத்தவிர யாரையும் மணம் செய்வதில்லை
என்று உறுதியாக இருந்தேன்.

அந்த ஊரில் இருக்கவும் முடியாமல் இன்னோரு மாகாணத்துக்கு
வந்துவிட்டேன். 20 வருடங்கள் சென்ற நிலையில்
 ஸாலியின் கணவர்  புற்று நோயில்
சிரமப் படுவது தெரிந்தது.
அவளிடம் வளர்வது எங்கள் மகள் என்பதும் 
ஸாலியின் தந்தையை சர்ச்சில் பார்த்த போது சொன்னார்.

என் பெற்றோர்களூக்கு நான் ஒரே மகன். திருமணம்
செய்து கொள்ளும்படி
எத்தனையோ சொல்லிப்  பார்த்தார்கள்.
நான் மறுத்து ஸாலியின் வேதனைகளில் பங்கு கொண்டேன்.
உதவி செய்தேன். அவள் கணவர் எட்வர்ட்
மிக நல்லவர். எனக்கு உற்ற தோழன் ஆனார்.
நாலு வருடங்கள் நரக வேதனையில் கழிந்தன.

அவர் இறைவனடி அடைந்த போது ஸாலியின் துயரத்தை 
என்னால் தாங்க முடியவில்லை.

மகள் திருமணமாகி வாஷிங்டன் சென்று விட்டாள்.
வளர்ப்பு மகன் காலிஃபோர்னியாவில் ஆராய்ச்சிப் படிப்பு
படிக்க வேண்டும் என்ற நிலையில்
நான் வேலை செய்யும் இந்த மாகாணத்துக்கு வருமாறு ஸாலியை
அழைத்தேன்.

முதலில் தயங்கியவள் மூன்று வருடங்கள் முன் சம்மதித்தாள்.
 இங்கே வந்தோம்..

ஸாலி தன் துயரத்திலிருந்து மீண்டு வரக் காத்திருந்தேன்.
இதோ நாங்கள் இணைந்து விட கடவுள் வழிவிட்டார்
என்று  சொன்ன ஆர்தரைப் 
பார்த்து என் பிரமிப்பு அடங்காமல்
ஸாலியிடம் கேட்டேன்.
''நீ உண்மையிலேயே கொடுத்து வைத்தவள்.
இத்தகைய மனிதரைப் பார்ப்பது மிக அரிது "
என்றேன்.
மென்மையாகச் சிரித்தவள் நான் திருமண பந்தத்தை
மிக மதிக்கிறேன்.
என் இருதயத்தில் ஆர்தருக்குக் கொடுத்த அன்பை ,என் கணவரிடம் கூட செலுத்த முடியவில்லை.
என் தந்தையின் பிடிவாதத்துக்காக எட்வர்ட் என்னை மணந்தார்.

மனம் ஒன்றாததாலோ என்னவோ குழந்தைகள் 
பிறக்கவில்லை.
பந்தத்தில் இருந்தோம். ரத்து செய்ய மனமில்லை.
இப்போது இறைவன்  சித்தம்  இணைகிறோம்.
ஆர்தருக்கு  இனியாவது வாழ்க்கையில்
இனிமை வேண்டும் என்றபடி தன் கணவரைப் 
பார்த்து புன்னகை செய்தவளை

நாங்களும் மகிழ்ச்சியுடன் வாழ்த்தினோம்.
வசந்தம் அவர்களுடன் நிலைக்க வேண்டும்.


13 comments:

Kamala Hariharan said...

வணக்கம் சகோதரி

நிகழ்ந்த உண்மை கதை மனதை மிகவும் உருக்கியது. இத்தகைய அன்பை மட்டும் மனதில் சுமந்தபடி, பல வருடங்களாக காத்திருக்கும் மனிதர்கள் உலகில் இருக்கிறார்களே..! இவர்களின் நல்ல மனதுக்காக இறைவன் இவர்களை இந்தப் பிறவியிலேயே சேர்த்து வைத்துள்ளான். இறைவனின் கருணையே கருணை. அவர்கள் இருவரும் பல்லாண்டுகள் இணைந்து வாழ நானும் பிரார்த்துக் கொள்கிறேன்.

நேற்று தங்களின் இதன் முதல் பாகப்பதிவை படித்தேன்.எங்கள் வீட்டில் நெட் பிரச்சனையால் உடன் வர முடியவில்லை. நீங்களும் இன்று அதன் முடிவை பகிர்த்து விடவே, மனம் நிறைந்த மகிழ்ச்சியுடன் இதையும் படித்து அவர்களது பண்புகளுக்கு தலை வணங்கி என் மனமார்ந்த வாழ்த்துகளையும் கூறிக் கொள்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.

வெங்கட் நாகராஜ் said...

நல்ல மனிதராக இருந்திருக்கிறாரே இந்த ஆர்தர்.

உங்கள் பதிவு வழி நல்லதோர் தம்பதியைப் பற்றிய தகவல்கள் அறிந்து கொள்ள முடிந்தது. நன்றி வல்லிம்மா.

சாலி - ஆர்தர் தம்பதிக்கு வாழ்த்துகள்.

Geetha Sambasivam said...

மிக அருமையான மனிதர்கள்! ஒருவருக்கொருவர் எத்தனை ஆழ்ந்த அன்பு செலுத்தினால் இப்படிப் பல்லாண்டுகள் கழித்தும் நீடித்திருக்கும்! நினைக்கவே ஆச்சரியமாய் இருக்கிறது. நல்லதொரு பகிர்வைக் கொடுத்தமைக்கு நன்றி.

ஸ்ரீராம். said...

ஆச்சர்யமான அன்பு.  அசத்தும் அன்பு.  காலங்கள் கடந்தும் வென்ற அன்பு.  

திண்டுக்கல் தனபாலன் said...

அன்பு சிறப்பு...

வல்லிசிம்ஹன் said...

அன்பு கமலாமா ,
இனிய காலை வணக்கம்.

அருமையாகப் புரிந்து கொண்டீர்கள்.

தான் காதலித்தவளின் வாழ்வைக்
கெடுக்காமல் இவ்வளவு கௌரவமாக
நடந்து கொண்ட ஆண்மகனைக்
கண்டு எனக்கும் பெருமையாக இருந்தது அதிசயமாகவும்
இருந்தது.
இந்தப் பொறுமையை நான் கதைகளில் கூடக்
கண்டதில்லை.
கதையை வரவேற்றதற்கு மனம் நிறை நன்றிமா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு வெங்கட் ,
உண்மைதான். முதலில் அவர்களைப் புரிந்து கொள்ளவில்லை.
வீடு தேடி வந்து பேசிச் சென்ற அழகு
மிகப் பிடித்தது.
ஸாலியின் பொறுமையும்,
ஆர்தரின் மாறா அன்பும்
மனதிற்குப் பசுமை. மிக நன்றி வெங்கட்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கீதாமா,
கேட்கக் கேட்க எனக்கு ரொம்ப ஆச்சர்யம்.

இவர்கள் எல்லாம் இப்படிதான் இருப்பார்கள் என்று நினைத்ததெல்லாம்
தவிடு பொடியானது.
நிறைய தம்பதிகளைப் பார்க்கிறேன்.
முன்பு கூட ஆன்றியா, அவர் கணவர் போன்ற
மென்மையானவர்களைப் பார்த்ததில்லை என்று எழுதி இருந்தேன்.
இன்னும் இறைவனிடம் நம்பிக்கை வைத்து

குழந்தைகளை வளர்த்து சந்தோஷமாக இருப்பவர்களைப் '
பார்க்கும் போது
மனம் நிறைகிறது.

ஸாலி, ஆர்தர் கதை,கண் முன் கண்ட அவர்களின் அன்பு
எல்லாமே ஆனந்தம் தான்.
அவர்களின் குழந்தைகளின் பங்கேற்பும்
அதிசயிக்க வைத்தது.
மிக மிக நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் ஸ்ரீராம்.
அற்புதமான காதல். பொறுமையுடன்
காத்திருந்ததற்கு கிடைத்த வெற்றி.

கண்டு நாங்கள் அடைந்த ஆனந்தத்திற்கும்
அளவில்லை. உலகம் அழகானது.
நன்றி ராஜா.

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் அன்பு தனபாலன்.

கோமதி அரசு said...

அவர்கள் உண்மை அன்பு வென்று விட்டது.
கதை தலைப்பு மிக பொருத்தம்.
ஆர்தருக்கு இனி வாழ்கை இனிமைதான்.
நேசிக்கபடுவதும் நேசிப்பதுதானே உண்மையான வாழ்வு.

கோமதி அரசு said...

பாடலும் அருமை.

Bhanumathy V said...

உங்களின் முந்தைய பதிவையும் இன்று படித்தேன், பிரமித்தேன். நீங்க அதை சொல்லியிருக்கும் விதமும் அருமை!