Blog Archive

Wednesday, October 07, 2020

ஒற்றை டெய்சி

வல்லிசிம்ஹன்


எல்லாமலரும்  பூத்து ஓய்ந்து 
மண்ணுக்கு உரமாகும் போது 
தனித்து நின்ற இந்த  ஒரு டெய்ஸிச் செடி எனக்கு 
ஆச்சர்யமாக  இருந்தது.

எல்லாவற்றுக்கும் முதியவளா நீ என்று கேட்டேன்.
தனியே நிற்பதில்  உனக்கு 
சோகம் இல்லையா என்ற   .போது 
அது  காற்றில் தலையை ஆட்டியது.

இல்லை. இப்போதிருக்கும் காற்றும் வெளிச்சமும்
 நலம் விசாரிக்கும் வண்டுகளும் 
எனக்குத் துணை.
இதோ இன்னும்  நவம்பர் பனி  காத்திருக்கும் வேளையில் 
நிற்க எனக்கு  வளம் இருக்கிறது.
இதோ வாடி நிற்கும் என் தோழிகள் மீண்டும் உயிர்க்கத்தான் போகிறார்கள்.
அந்த வேளை  வரும் போது நானும் 
கூட வருவேன்.

இயற்கையின் நியதிதானே.
முன் சென்றவர்கள் முன் வருவதும் 
பின் சென்றவர்கள் பின் வருவதுமாக சுழற்சியில் 
எனக்கேதும் வருத்தம் இல்லை.

நீயும் வந்து பேசினால் இன்னும் 
சந்தோஷம்  என்று பூரித்துச் சிரித்தது.


14 comments:

ஸ்ரீராம். said...

ஆஹா...   சூப்பர் மா...   நிஜமாய் அதுவே பேசுவது போல இருக்கிறது.

வல்லிசிம்ஹன் said...

இனிய காலை வணக்கம் அன்பு ஶ்ரீராம். தினமும் இந்த ஒற்றைப் பூவைப் பார்க்கிறேன். இந்த புதுமை ஈர்ககிறது.

Geetha Sambasivam said...

அழகான டெய்சிப் பூக்கள். உங்கள் கற்பனை அதை விட அழகு!

கோமதி அரசு said...

டெய்சியும், நீங்களும் பேசியது அருமை.

//இதோ வாடி நிற்கும் என் தோழிகள் மீண்டும் உயிர்க்கத்தான் போகிறார்கள்.
அந்த வேளை வரும் போது நானும்
கூட வருவேன்.

இயற்கையின் நியதிதானே.
முன் சென்றவர்கள் முன் வருவதும்
பின் சென்றவர்கள் பின் வருவதுமாக சுழற்சியில்
எனக்கேதும் வருத்தம் இல்லை.

நீயும் வந்து பேசினால் இன்னும்
சந்தோஷம் என்று பூரித்துச் சிரித்தது.//

இந்த வரிகளை ரசித்தேன்.

டெய்சி மீண்டும் பூத்து குலுங்கி உங்களுடன் பேசட்டும்.

வெங்கட் நாகராஜ் said...

ஆஹா...

ஒற்றைப் பூவுடனான உங்கள் உரையாடல் நன்று!

திண்டுக்கல் தனபாலன் said...

ஆகா...!

Kamala Hariharan said...

வணக்கம் சகோதரி

ஒற்றை பூவுடனான உங்கள் பேச்சை நான் மட்டுமல்ல... அந்தப் பூவும் ரசித்து மலர்ந்தி ருக்கிறது. எத்தனை மந்தகாசம் அதன் இதழ்களில்..ரசித்தேன் சகோதரி.

நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கீதாமா,
இவை எல்லாம் சுகமான நட்புகள்.
வாடும்போது வாட்டம் தான்.
மீண்டும் அடுத்த வருடம் இதையும் விட வீர்யமாக
வரும் அழகு இருக்கிறதே அதை சொல்ல முடியாது.
என்னவோ எழுதலாம் என்று தோன்றியதுமா.
மிக மிக நன்றி.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கோமதி மா.
அதைப் பார்க்கும் போது தனித்து நிற்கிறதே
என்று வருத்தமாக இருக்கும்.
ஒரு வெய்யில் நாளில் டெய்சியின் அருகே
நிறகும்போது
அந்த பாசிடிவ் உணர்வு கிடைத்தது.
ஏழு வருடங்களாகப் பெண் இங்கே வளர்க்கிறாள்.

4 மாதங்கள் பூத்துக் குலுங்கும்.
இந்தப் பூ அந்த விதியை மீறி
தனித்து நிற்கிறது. அதிசயம்.இறைவனின் கருணைமா.
ரசித்து சொன்னதற்கு மிகவும் நன்றி .

வல்லிசிம்ஹன் said...

அன்பு வெங்கட்,
அந்தத் தனிமை என்னை யோசிக்க வைத்தது.
மனிதர்களுக்குள்ளும்
இந்த தனிப்படுவது நிகழ்கிறது இல்லையா,.
அதிலிருந்து மீள இந்தப் பேச்சு உதவியது.
நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு தனபாலன் , நாம் எல்லோரும் டெய்சிகள் தான். உணர்வு
பூரிக்க உள்ளம் நலம் பெற உடலும் ஆரோக்கியப் படும்.
இதுதான் அந்தப் பூவின் வெள்ளைச் சிரிப்பைப்
பார்த்ததும் தோன்றிய எண்ணம்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கமலாமா,
உண்மையும் அதுதான்.
பூக்கள் போல நம்மை உற்சாகப் படுத்த வேறு சாதனம் கிடையாது.
இன்னோரு மஞ்சள் ரோஜா இருக்கிறது.
அது இந்தக் குளிரில் மலர முடியாமல் மொட்டாகி இருக்கிறது,
அதனிடமும் பேச வேண்டும்.

வந்து ரசித்துக் கருத்தும் சொன்னதற்கு
மனம் நிறை நன்றி.

Bhanumathy V said...

அருமையான கற்பனை! இதை கற்பனை என்று கூறினாலும்,சில சமயங்களில் பூக்களும், பறவைகளும் நம்மோடு பேசுவது போலவே இருக்கும்.

வல்லிசிம்ஹன் said...

மிக நன்றி அன்பு பானு மா.
பூக்கள் எப்பொழுதுமே அழகும் பேசும் தன்மை உண்டுதான்.