Blog Archive
Monday, May 31, 2021
Sunday, May 30, 2021
அப்பா 100.வந்தனங்கள். வாழ்த்துகள். May 30.
வல்லிசிம்ஹன் Happy Birthday dearest Appa.
வெற்றிலைப் பெட்டி இல்லாமல் அப்பாவால் எங்கேயும்
செல்ல முடியாது:)உன் செல்லமாப்பா. அதுதான் கையோடு வருகிறதா என்று நாங்கள் கேலி செய்வோம்.
எப்பொழுதுமே மெல்லிய தேகம். ஆனால் உறுதி வாய்ந்தது.
என்ன வேலை செய்யவும் அலுக்க மாட்டார்.
அம்மாவுக்கு வலது தோள் கை தூக்க முடியாமல்
போனபோது அம்மியில் கூட அரைத்துத் தந்ததாக
அம்மா சொல்வார்.
தேவையான போது சமைக்கத் தெரியும்.
கீரைக் குழம்பு ஸ்பெஷலிஸ்ட்.
உ.கிழங்கு வதக்கல், ரசம். இதுதான் நன்றாகத் தெரியும்.
நிறைய எண்ணேய் வைத்து ,மூன்று நாளுக்கு வேண்டிய
அப்பளம் வடாம் பொரித்து வைத்து விடுவார்.
வானொலிப் பெட்டி எனக்காகவே வாங்கி வந்தார்.
எப்படி இயக்க வேண்டும் என்றும் அறிவுரை கூடவே வரும்.
அந்த ஸ்டேஷன் கண்டு பிடிக்கிற அவசரத்தில்
கடக்கா முடக்கா என்று திருப்பாதே!
மென்மையாகக் கையாண்டால் எப்பொழுதும் உழைக்கும்
என்று சொல்லிக் கொண்டே இருப்பார்,
அவர் தன் சைக்கிளைக் கையாள்வதும் அது போலத்தான்.
பின்னாட்களில் தம்பி தன் லாம்ப்ரெட்டா ஸ்கூட்டரைத்
துடைக்கும் போது அப்பாவை நினைவு கொள்ள வைப்பான்,
பெரியவன் அப்பா சொன்ன சொல்லைத் தட்ட மாட்டான்.
நான் தான் அவர் சொல்லுக்கு
ஏன் என்று கேட்பேன்.
தணிஞ்சு போகணும் மா. எப்பவும் அதுதான் நல்லதுன்னு
சதா அறிவுரை,.
பெற்ற மக்களிடம் அத்தனை பாசம். பொத்திப் பொத்திக்
காப்பார்.
அந்த அப்பாவுக்கு இன்று நூறு வயது.
நல்லபடியாக இருந்து சட்டென்று இறைவனடி
சேர்ந்தார். அவர் போல மானஸ்தனுக்கு எல்லாம்
நீண்ட நாள் வியாதி எல்லாம் திகில்
கொடுத்திருக்கும். ராமனைத் துதித்தபடியே
கண்கள் பிரகாசமாகத் திறந்திருக்க கைகள்
குவித்து இறைவனை அடைந்தார்.
அப்பா எங்கிருந்தாலும் நன்றாக இரு.
Saturday, May 29, 2021
மனம்
வல்லிசிம்ஹன்
நோய்களில் எழுபது சதவீதம் மனம் சம்பந்தப் பட்டவை தான்.
ஆனால் அவற்றை உடல் மூலமாகத்தான் வெளிப் படுத்த முடியும்.
ஆனால் நோயின் துவக்கம் என்னவோ மனத்தில்தான்.
நோய் நீங்கி விட்டது என்கிற எண்ணத்தை மனதிற்குள் செலுத்தி விட்டால் நோய் மறைந்து விடும்!
மனதிற்கு உடல் மீது அபாரமான பலம் உண்டு.
உங்கள் உடலில் எல்லாவற்றையும் மனம்தான் நடத்திச் செல்கிறது.
உங்கள் மனதை மாற்றுவதன் மூலமாக உடலிலுள்ள எழுபத சதவீத நோய்களை மாற்ற முடியும்.
உங்கள் மனம் உங்களை சில நோய்களுக்குத் தயாராக வைத்திருக்கிறது.
சில நோய்களில் இருந்து உங்களைப் பாது காக்கிறது.
உங்கள் மனம்தான் உங்கள் உலகம்.
உங்கள் மனம்தான் உங்கள் ஆரோக்கியம்.
உங்கள் மனம்தான் உங்கள் நோய்.
நீங்கள் உங்கள் சொந்த மனதை தூக்கிப் போடுங்கள்.
அப்போதுதான் எதார்த்தம் என்னவென்று தெரிய வரும்.
அதன் பிறகு உங்கள் மனம் பிரபஞ்ச மனம் ஆகிறது.
உங்கள் சொந்த மனம் உங்களிடம் இல்லாத போது உங்கள் உள்ளுணர்வே பிரபஞ்சமாகிறது.
உங்கள் எல்லா பிரச்சினைகளுமே உள ரீதியானவை.
உடலும் மனமும் இரண்டல்ல.
உடலின் உள்பகுதி தான் மனம்.
உடலின் வெளிப்பகுதியே மனம்.
உடலில் துவங்கும் எதுவும் மனத்திற்குள்
நுழைய முடியும்.
அதுபோல மனத்தில் துவங்கி உன் உடலுக்குள் நுழைய முடியும்.
ஓஷோ
மருத்துவத்திலிருந்து
மனமற்ற நிலை வரை
உடல் மனம் ஆரோக்கியம்.
A Forward from cousin Subha Srivathsan.
Friday, May 28, 2021
Thursday, May 27, 2021
வந்து வந்து செல்லுவதேன்......
வல்லிசிம்ஹன்
சென்னையில் மழையில் செழித்த மரம் கொட்டிய தங்கப் பூக்கள்!!!
சாலையெங்கும் நிறைகிறது.இறைவன் கருணையில் நன்மையே நிறையட்டும்
அன்பின் கோமதி அரசு இருக்கும் ஊரில்
பாலைவன நிலா பன்மடங்கு
அழகுடன் தெரியும். அவர்களும் படங்கள்
பதிவிட்டிருந்தார்கள். வாழ்க வளமுடன்.
நிலா ரசிகர்கள் உலகம் முச்சூடும் இருப்பார்கள்.
எனக்குத் தான் தெரியவில்லை.
பலே பாண்டியா படம் வந்த புதிதிலும் இப்பொழுதும்
பிரபலமான நிலவுப்பாடல்.மிக ரம்யமானது. வானொலியில் கேட்டு ரசித்தது.
கண்ணதாசன் ஐயாவுக்குத் தான் அத்தனை நன்றியும் சொல்ல வேண்டும்.
பலவித செய்திகள் மனதுக்குப் பிடிக்காத வம்புகள்.
தொற்று நோய் தலை விரித்தாடும் போது
தீர்வு காண முயற்சிக்காமல்
மாற்று செய்திகளைப் பரப்பி, திசை மாற்றும்
இணையக் காட்சிகள்.
தவறு நடந்த இடத்தில் ,அதை செய்தவரைப்
பிடிப்பதுதான் சிறந்த அணுகு முறை.
அதை விட்டு ஒட்டு மொத்த சமுதாயத்தையே
குறை சொல்வது ....ஆரம்பித்திருக்கிறது.
இலங்கையில் சீதை சிறையில் இருக்கும் போது,
இடைவிடாமல் ராமனையே நினைத்துத் துதித்துக்
கொண்டிருந்தாளாம்.
அதை சகிக்க முடியாத அரக்கியர் குழாம்,
"வெறும் மனிதனைத் துதிக்கிறாயே.மானுடன் கேவலமானவன்.
எங்கள் அரசன் ராவணனைப் பார்.
அவன் கம்பீரம் உன் ராமன்,வெறும் கனி வகைகளை
உண்டு பிழைப்பவன், அவனுக்கு வருமா""
என்று ஏசுகிறார்கள்.
தன் ராமனையும், மனித வர்க்கத்தையே ஏசும் அவர்களைப்
பரிதாபம் ,கருணையுடன் பார்க்கிறாள் சீதா.
இவர்களே ராமன் கருணையால் ஆட்கொள்ளப்
படுவார்கள் என்று மீண்டும் மௌன தவத்துக்குச் செல்கிறாள்.
அதுதான் இப்பொழுதும் செய்ய வேண்டும்.
அனைவரும் வாழ்க வளமுடன்..
Wednesday, May 26, 2021
அத்தை ...தொடர்கிறாள்.
வல்லிசிம்ஹன்
மனதில் எழுந்த சங்கடத்தை அடக்கிக் கொண்டு
வெளியே வந்த சுந்தரி அத்தை என்ன செய்வது என்று தெரியாமல்
வாசல் நாற்காலியில் உட்கார
வண்டி வரும் சத்தம் கேட்டது.
''ஐய்யா வராருங்க'' என்ற படி வாசல் கேட்டைத் திறந்தான்
கோபாலு.
ஏதோ பயம் தோன்ற வரும் தம்பியைப் பார்த்தாள்
சுந்தரி.
''என்னக்கா வெளியில உட்கார்ந்திருக்கே?"
என்று வினவியபடி வந்தவன் முகத்தில்
களைப்பு.
''ஏதாவது சாப்பிடுடா. பிறகு பேசலாம்.
ஏன் இந்த நேரத்தில் திரும்பி விட்டாய்.? ஆனாலும் மிக அலைச்சல்
உனக்கு"
என்றபடி இருவரும் உள்ளே நுழைய
இந்த சத்தத்தில் மெதுவாகக் கதவைத் திறந்து
கொண்டு மாலாவும் அவள் தோழனும் வெளியே
வந்தார்கள்.
கணபதி முகத்தில் ஒன்றும் உணர்ச்சி தெரியவில்லை.
யாரும்மா உன் ஃப்ரண்டா.?
என்றபடி, 'அக்கா இதோ வரென் ''என்றபடி,
உள்ளே குளிக்கச் சென்று விட்டான்.
இன்னதென்று தெரியாத குழப்பம் சுந்தரி மனதில்.
மாலாவின் பரிகாசமான புன்னகையை
வாங்கிக் கொள்ள சக்தி இல்லை.
சட்டென்று எழுந்தவள் ,பங்காருவை அழைத்து அவளிடம்
தான் வாங்கி வந்த பலகாரங்களைக் கொடுத்துவிட்டு,
ஐய்யாவை எனக்கு ஃபோன் பண்ணச் சொல்லு.
பிறகு பார்க்கலாம் என்றபடி திரும்பியவள் கண்ணில்
கணபதியின் மனைவியின் படம் பட்டது.
நீயே உன் குடும்பத்தைப் பார்த்துக் கொள்'
என்று வேண்டியபடி வெளியே இறங்கி நடந்து
விட்டாள்.
பஸ் டெர்மினசில் 41 ஆம் நம்பர் பஸ்ஸில் ஏறி உட்கார்ந்ததும் தான்
தன் கண்கள் நீர் வடிப்பதை உணர முடிந்தது.
எதற்காக இந்தப் பாசம்.
யார் வாழ்க்கைக்கு யார் பொறுப்பு.
கணபதிக்கு 47 வயதில் இந்த சோகம் வேண்டாம் தான்.
அதற்காக அவனால் ,தாயில்லாத குழந்தைகளை
விட்டுக் கொடுப்பானா. ஏதோ சமாளிப்பான்.
இந்தக் காலம் எல்லோரும் எல்லாவற்றையும்
புரிந்தே செய்கிறார்கள்.
தான் ஒரு பழங்காலப் பெண்மணி.
இனி கணபதி ,தொலைபேசினால் பார்த்துக்
கொள்ளலாம்.
கைப்பையைத் திறந்து கந்த சஷ்டி கவசத்தைப்
படிக்க ஆரம்பித்தாள்.
வீட்டுக்கு வந்து ,கணவரிடமும் ,மாமியாரிடமும் சொல்லி
அரற்றினாள்.
''இனிமே காலம் இப்படித்தான். நீ மனசைத் தேற்றிக் கொள்''
யாருக்கு யார் பொறுப்பு' என்று தேற்றினார் மாமியார்.
கணவர் அதிகம் சொல்ல வில்லை.
இரண்டு நாட்களில் கணபதியிடம் இருந்து
ஃபோன் வந்தது. ''அக்கா, பெரியவளுக்குத் திருமணம்
நடக்கப் போகிறது. எதிராஜ மண்டபத்தில்
நீயும் அத்திம்பேரும் வந்து நடத்திக் கொடுக்கணும்.
அடுத்த இரண்டு மாதங்களில்
மாலாவுக்கும் அர்ஜுனுக்கும் அவர்கள் வீட்டு முறைப்படி
திருமணம்.
படிப்பு முடியாத நேரத்தில் ஏன் இவ்வளவு அவசரம் என்று கேட்காதே.
புரிந்து கொள்வாய் நு நினைக்கிறேன்.
நம் காலம் இல்லை இது.
எனக்கு சக்தி இல்லை.
என் மாமனார் மாமியார் வந்திருந்து நடத்தப் போகிறார்கள்.''
என்று சொன்னவன் குரலில் மகிழ்ச்சியை விட விரக்தி தான் தெரிந்தது.
சுந்தரிக்குத் தன் பாசங்களை இந்த நாளில்
நினைத்து நடத்த முடியாது என்று புரிந்தது.
20 வருடங்களுக்கு முன் காலம் சென்ற அத்தைக்காக
இந்த நாளில் இத்தனை பாடு பட்டிருக்க வேண்டாம்.
அன்பு கூடத் தேவையானால் தான் கொடுக்கலாம் .
அனாவசியமாக நம் பாசத்தை வேண்டாதவர்களிடம்
காண்பிக்க வேண்டாம்.
இனி நாம் எச்சரிக்கையுடன் இருக்கலாம் என்று
மனதில் தெளிவுடன் இருக்க ஆரம்பித்தாள்.
சம்பவம் நடந்த காலம், நகரம் எல்லாம் வேறு..
நடந்தது உண்மை.
திருமணங்களுக்கு அவர்கள் சென்று வந்தார்கள்.
மாலாவின் திருமணத்துக்கு ஏன் அவசரம் என்பது
பிறகே தெரிந்தது.
அவள் கருவுற்றதால் ,சீக்கிரத் திருமணம்.
இன்னும் அவர்கள் வாழ்க்கையில் ஸ்திரமாகத் தான்
இருக்கிறார்கள்.
லீலா குட்டி மத்திரம் இன்னும்
மெயில் தொடர்பில்.அமெரிக்க கலிஃபோர்னியாவில்
கல்லூரி ப்ரொஃபெசராக வேலை .
56 வயதில் நல்ல குடும்பப் பெண்ணாகவும்
இருக்கிறாள்.
கணபதிதான் பாவம். டிமென்ஷியா வந்து
17 வருடங்களுக்கு முன் இறைவனடி
அடைந்தான்.
கதை தெளிவாகச் சொல்லி இருக்கிறேன் என்று நம்புகிறேன்.
அத்தை......1
வல்லிசிம்ஹன்
எங்கள் ப்ளாகில் வெளியிட்ட கௌதமன் ஜி க்கும் ஸ்ரீராமுக்கும் மிக நன்றி.
அங்கு வந்து பின்னூட்டம் இட்ட எல்லோருக்கும்
மீண்டும் நன்றி. வாழ்வு நிறைவது அன்பு நட்புகளின்
துணையுடன் தான். சங்கடங்கள் தீர்ந்து
நல் வாழ்வு தொடர இறைவன் அருள வேண்டும்.🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++1980 களில் ஒரு சம்பவம்.
''அக்கா, !!
என்ன மாலா?
அந்த அத்தை நம் வீட்டுக்கு வருகிறாளாம். எதுக்கு அண்ணா நகரிலிருந்து இங்க மைலாப்பூர் வரணும்.
அப்பாவுக்குபெரியப்பாவின் பெண் என்றால் அந்தக் காலத்தோடு
போச்சு. இங்க வந்து நம் நேரமும் வீணாக்கி,
நம் மீது அதீத அன்பைக் கொட்டணும்னு
என்ன அவசியம்?''
"பெற்ற பிள்ளைகள் எல்லாம் திருமணம் ஆகி
வெளியூர் போயாச்சு. பொழுது போக இங்கே வர வேணுமா?''
கோபத்துடன் பொரிந்த தங்கையை
அன்புடன் கண்டித்தாள் பெரிய அக்கா லக்ஷ்மி.
அப்படியெல்லாம் சொல்லாதேம்மா.
அவர்கள் எல்லாம் கசின்ஸ் ஆக இருந்தாலும்
நல்ல பாசத்தோடு இருந்தவர்கள்.
நம் அம்மா திடீரென்று இப்படி காலமானது அவர்களுக்கு அதிர்ச்சி.
அதுதான் வந்து நம்மைப் பார்த்து விட்டுப்
போகிறார்.
''கசின்ஸ் நா, அந்தக் காலத்தோட போச்சு''
நம் வாழ்க்கையில் இப்போ வந்து குறுக்கிட என்ன அவசியம்?
சரியான busybody" என்று கரித்துக் கொட்டின
தங்கையைப் பார்த்து வியந்தாள் அக்கா.
அவர்கள் மூவரும் பதின்ம வயதுப் பெண்கள்.
இரண்டு மூன்று மாதங்கள் முன் தான்
அவர்களின் தாயார், தீராத வியாதிக்குப்
பலியானார்.
அப்போது ஆரம்பித்த பாசம், ,கவனிப்பு இந்த அத்தையோடது.
தன் வியாபாரத்தில் மும்முரமாக இருக்கும்
பெரியப்பா மகன்,
அவன் பெற்ற பெண் குழந்தைகள்
மீது கவலை கொண்டு , கிடைத்த பலகாரங்களைப்
பையில் அடைத்துக் கொண்டு வந்து
தந்து சில மணி நேரம் இருந்து பேசிச் செல்வாள்
சுந்தரி அத்தை.
சின்ன லீலா,கடைசிப் பெண்ணுக்கு சுந்தரி அத்தையைப் பிடித்திருந்தது.
14 வயதே ஆகி இருந்தது அந்தப் பெண்ணுக்கு.
அம்மாவை இழந்த துக்கத்திலிருந்து மீள முடியாத சூழ்னிலையில்
இந்த அத்தை வருவது
அந்தக் குழந்தைக்கு மிக இதமாக இருந்தது.
ஐந்து வருடங்களுக்கு முன் தான் சென்னை வந்தார்கள். அதுவும்
அவர்கள் அம்மாவின் உடல் நலம் சரியில்லாமல் போனதும்
வைத்தியத்துகாகச் சென்னைக்கு வந்தனர்.
இந்த ஐந்து வருடங்களும் அம்மாவின் நோயோடு
போராடிக் களைத்து விட்டனர்
கணபதியும் குழந்தைகளும்.
சுந்தரி அவர்கள் சென்னை வந்த நாளிலிருந்து
தன்னால் முடிந்த உதவிகளைச் செய்து வந்தாள்.
பெரிய மகள் அந்த வருடம் கல்லூரியில்
சேர்ந்திருந்தாள். நடுவில் பிறந்த மாலா
பள்ளி இறுதி வகுப்பை எட்டி இருந்தாள்.
கடைக்குட்டி லீலா ,ஒன்பதாம் வகுப்பு.
இவர்களுக்கு உதவியாகக் கூடவே இருக்கும்
பங்காரு சொந்த ஊரிலிருந்து
இங்கே வந்திருந்தாள்.
நூற்பாலை சம்பந்தமான இயந்திரங்களை
இறக்குமதி செய்து விற்பனை செய்யும்
வியாபாரத்தில் இருந்த கணபதிக்கு
கடந்த வருடங்களில் சரியாகக் கவனம்
செலுத்த முடியாமல் போனது.கோயம்பத்தூருக்கும்
சென்னைக்கும் அலைய வேண்டிய
தொழில்.
சுந்தரி அடிக்கடி வந்து போவது அவனுக்கு
நிம்மதி.
தனியாக இருக்கும் பெண்குழந்தைகளைப்
தன் சொந்தத்தில் மாப்பிள்ளை பார்த்து வைத்திருந்தாள்.
அவனும் அவ்வப்போது வந்து போய்க் கொண்டிருந்தான்.
எல்லாமே சற்று ஏறுக்கு மாறாக நடந்தாலும்
கணபதியால் ஒன்றும் செய்ய முடியவில்லை.
அவன் கோவைக்குப்
போயிருந்த ஒரு மாலை,
சுந்தரி அத்தைக்குப் பங்காரு ஃபோன் செய்திருந்தாள்.
தனக்கு மாலாவின் போக்கு பிடிபடவில்லை என்றும்.
பள்ளிக்குச் செல்லும் போது
இன்னோரு வாலிபனுடன் தெரு முனையில்
நின்று பேசி வருவதாகவும்,
அவர்கள் இருவரும் சினிமாவுக்குக் கூடச் சென்று வந்ததாகத்
தன் கணவன் சொல்கிறான் என்றும்
செய்தி சொன்னாள்.
பங்காருவின் கணவன் அந்த வீட்டுக்கு வாட்ச்மேன்.
இந்த செய்தி வந்ததிலிருந்து
சுந்தரிக்கு அந்தப் பெண்களைத் தனியே விடுவதில்
விருப்பம் இல்லை.
கணபதிக்கும் அவளுக்கும் கிட்டத்தட்ட
6 வயது வித்தியாசம்.
அவனைச் சிறுவனாகவே பார்த்து, தம்பியாகவே
பழகி வந்திருக்கிறாள்.
இப்பொழுது மனைவியும் இல்லாத வேளையில் அந்தக்
குடும்பம் சீரழிவதில் அவளுக்கு வேதனை. அதனாலயே
ஏதாவது ஒரு காரணம் காட்டி
மைலாப்பூருக்கு வர ஆரம்பித்தாள்.
இது நீடித்தால் கணபதியுடன் பேச வேண்டிய தேவை
வரும் என்று யோசனை வந்தது.
இந்த நேரத்தில் தான் நம் கதை ஆரம்பித்தது.
சுந்தரி தன் மதிய சாப்பாட்டை முடித்துக்
கொண்டு மயிலை வந்தடைந்தாள்.
மந்தைவெளியில் இறங்கி சிறிது நடந்தால்
அந்தத் தனி வீடு வரும்.
அவள் தொலைவில் வருவதைப் பார்த்த
பங்காரு, அவசரமாக வெளியே வந்தாள்.
''சுந்தரி அம்மா, அந்தப் பையன் வீட்டுக்கே வந்து விட்டான்"
ஐய்யா இன்னும் வரவில்லை. லக்ஷ்மிப் பொண்ணும்
வரப் போகிற மாப்பிள்ளை வீட்டுக்குப்
போயிருக்கு. சின்னப் பாப்பா டென்னிஸ் விளையாடப் போயிருக்கு"
என்று படபடத்தாள்.
சுந்தரி சற்றே நிதானித்தாள்.
அவளுக்கு மாலாவின் கோப குணம் தெரியும்.
இருந்தாலும் இப்போது அதை எல்லாம்
பார்க்கும் நிலைமை இல்லை.
என்னதான் 80கள் என்றாலும் பண்பாடு மீறி நடப்பது
எப்பொழுதும் சரியில்லையே.!!
பங்காருவை அனுப்பிவிட்டு வீட்டுக்குள் நிதானமாக
நுழைந்தாள்.
வாசல் கதவு சாத்தியிருந்தது.
உள்ளே வானொலி சத்தமும் சிரிப்பும் கேட்டன.
காலிங்க் பெல் அடித்ததும் சத்தம் நின்றதும்
கொஞ்ச நேரத்தில் வாசல் கதவு திறந்து மாலாவின் முகம்
தெரிந்தது.
கதவைத் திறந்து விட்டு உள்ளே தன் அறைக்குள்
போய்விட்டாள்.
''என்னம்மா.லக்ஷ்மி எங்கே? ''
என்று சுந்தரியும் விடாமல் கேட்டாள்.
வெளில போயிருக்கா. சாயந்திரம் ஆகும் என்றபடி அறைக்கதவை
மூடிக்கொண்டாள்.
தொடரும்.
Tuesday, May 25, 2021
Monday, May 24, 2021
Sunday, May 23, 2021
பெரிய தம்பி ,சின்னத் தம்பிக்குப் பிடித்த....
முதல் இரண்டு பாடல்களும் பெரிய தம்பியின்
விருப்பங்களில் இரண்டு.
பிறகு வரும் மபாடல்கள்
சின்னத்தம்பியின் மனதைக் கவர்ந்தவை.
Saturday, May 22, 2021
தம்பி
வல்லிசிம்ஹன்
கவலையை விட்டொழிக்கத் தம்பி முரளி
தேர்ந்தெடுத்தது
தெய்வ தரிசனங்கள்.
1992 இல் முதல் இதய அதிர்ச்சி வந்த போது
காப்பாற்றிக் கொடுத்த விஜயா மருத்துவ மனைக்கும் நன்றி.
அத்தனை மருந்துகளையும் தேகப் பயிற்சிகளையும்
இம்மி பிசகாமல் ஏற்றுக் கொண்டான்.
அறுவை சிகித்சை முடிந்து ஆறு மாதங்களில்
வெளி நாட்டுப் பயணங்கள்.
அசரவே இல்லை. எந்த விதத்திலும் தன்னை
முன் நோக்கி செலுத்திக் கொண்டே இருந்தான்.
எந்த தேசம், எந்த சூழ்னிலை என்றே கவலைப் படவில்லை.
இரவானாலும் பகலானாலும் மூன்று மைல்களாவது நடப்பான்.
அத்தனை நம்பிக்கை மருத்துவத்தில்.
சின்னத்தம்பி மறைந்த போது எனக்கும் அம்மாவுக்கும் அவனே
துணை.
அம்மாவும் சென்றாள். சிங்கமும் மறைந்தார்.
அந்த மெலிந்த தேகத்துடன்,என்றும் துணை இருப்பேன் என்று சொன்னவன்,
சிரித்த முகத்துடன் என்றும் மாறா தெய்வ நம்பிக்கையுடன்
நான் அவனைக் கடைசியாகப் பார்த்தது
2016 ஐப்பசி மாதம்.
ஜகார்த்தாவில் ஒரு காலை அவனும் இறைவனடி
சேர்ந்த செய்தியை மகன் கொண்டுவந்தான்.
உடனே கிளம்ப முடியாத நிலையில்
ஒரு வாரத்தில் சென்னை வந்தோம்.
இயந்திரமாகச் செயல் பட்டது மனமும் உடலும்.
அவன் குடும்பம் மனைவி,
மகன்,மருமகள்,
பேத்தி பேரன் என்றும் நிறைவோடு இருக்க
அவனே காத்திருப்பான்.
Thursday, May 20, 2021
SUPERMAN RETURNS: How it Could Have Been
எப்பொழுதும் அதிசயங்களிலும் நல்ல எதிர்காலத்திலும்
நம்பிக்கை வைக்க வேடிய கட்டாயத்தில் இருக்கிறோம்.
Tuesday, May 18, 2021
ஐயா. 2
வல்லிசிம்ஹன்
இப்போது கி.ரா. தன்னுடைய படைப்புகளுக்கான உரிமையை மூவருக்கும் எழுதி வைத்திருப்பதோடு அந்த மூவரிடம் ஒரு வேண்டுகோளையும் முன்வைத்திருக்கிறார். கி.ரா.வின் படைப்புகள் வழியாகக் கிடைக்கும் வருவாயின் ஒரு பகுதியை ‘கரிசல்’ என்ற பெயரில் ஒரு அறக்கட்டளை நிறுவி, எழுத்தாளர்களுக்கும் சிறுபத்திரிகைகளுக்கும் பணமுடிப்புடன் கூடிய விருதுகளை வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருக்கிறார். “எழுத்தாளர் – வாசகர் உறவுக்கு அப்பாற்பட்டு, ஒரு தந்தையாகவும் நண்பராகவும் என்னோடு கி.ரா. பழகியிருக்கிறார். உண்மையில், நான் பாக்கியவான்” என்றார் புதுவை இளவேனில்.
முதுபெரும் எழுத்தாளுமை கி.ராஜநாராயணன் அவருடைய எழுத்தாக்கங்களுக்கும் படைப்புகளுக்குமான உரிமை டிசம்பர் 26, 2020 முதல் மூவரைச் சேரும் என்று எழுதி வைத்திருக்கிறார். 1) சங்கர் (எ) புதுவை இளவேனில், 2) திவாகரன், 3) பிரபாகர். பொதுவாக, தமிழ் எழுத்தாளர்கள் தாங்கள் வாழும் காலத்திலேயே படைப்புரிமையை எழுதி வைப்பது வழக்கம் கிடையாது. அந்த வகையில் இந்த அறிவிப்பு முக்கியமானது. இன்னொரு காரணத்துக்காகவும் இந்த அறிவிப்பு பேசப்பட வேண்டியதாகிறது. கி.ரா.வின் மூத்த மகன் திவாகரன், இளைய மகன் பிரபாகர் இருவருக்கும் முன்வரிசையில் இருக்கும் புதுவை இளவேனில் எனும் பெயர்தான் நம் கவனம் ஈர்க்கக் காரணம். புதுவை இளவேனிலுக்கு கி.ரா. கொடுத்திருக்கும் முன்னுரிமை உண்மையில் மெச்சத்தக்கது.
அப்போது புதுவை இளவேனிலுக்கு 14 வயது. ஓவியராகும் கனவோடு சுற்றிக்கொண்டிருக்கும் சிறுவன். ‘ஆனந்த விகடன்’ இதழில் கி.ரா.வின் ‘கோபல்லபுரத்து மக்கள்’ நாவல் தொடராக வந்துகொண்டிருந்தபோது அதை ஆதிமூலத்தின் ஓவியத்துக்காக வாசிக்கிறான். அப்படித்தான் அந்தச் சிறுவனுக்கு கி.ரா. அறிமுகமாகிறார். பின்பு, இளவேனிலுக்கு அவரது 18-வது வயதில் கி.ரா.வைச் சந்திக்கக் கிடைத்த வாய்ப்பானது, தந்தை – மகன் உறவாகும் அளவுக்கு வளர்ந்தது.
“கி.ரா.வுடனான முதல் சந்திப்பில் என் பெயரைக் கேட்டபோது ‘பாபு’ என்றேன். என் உண்மையான பெயரான சங்கர் என்பதையோ, புனைபெயரான இளவேனில் என்பதையோ அவரிடம் சொல்லவில்லை. என்னுடைய அம்மா என்னைச் செல்லமாக அழைக்கும் பாபு என்ற பெயரை யதேச்சையாக அன்று உச்சரித்துவிட்டேன். அன்றிலிருந்து என்னை பாபு என்றே அவர் அழைக்கிறார். கி.ரா.வுக்கு இப்போதும் நான் பாபுதான்” என்று பழைய நாட்களை நினைவுகூர்ந்தார் இளவேனில். சாப்பாட்டுக்குக்கூட வழியில்லாமல் மிக வறுமையான வாழ்க்கைச் சூழலைக் கொண்டிருந்த இளவேனில், உணவுக்காக கி.ரா. வீட்டுக்குச் சென்ற கதையைப் பகிர்ந்துகொண்டார். காலை 10 மணி வாக்கில் கி.ரா. வீட்டுக்குச் சென்றால் டிபன் கிடைக்கும், அதை முடித்துவிட்டு கி.ரா.வோடு கொஞ்ச நேரம் அளவளாவல், பிறகு நேரே நூலகம். இதுதான் சில வருடங்களுக்கு இளவேனிலின் அன்றாடம்.
பத்தாம் வகுப்பு மட்டுமே முடித்திருக்கும் இளவேனிலோடு இலக்கியம் பேசுவதற்கு அப்பாற்பட்டு அவரது வாழ்க்கைப்பாடுகளுக்கு வழி சொல்பவராகவும் கி.ரா. இருந்திருக்கிறார். “ஒருமுறை மாலைபோல வீட்டுக்கு வரச் சொல்லி கி.ரா. கூப்பிட்டார். தினமும் அவர் வீட்டுக்குப் போய்வருபவனாக இருந்தாலும் என் பின்னணி அவருக்குத் தெரியாது. என் வீடு தெரியாது, என் முகவரி தெரியாது, நான் யாரென்றே அவருக்குத் தெரியாது. அப்படி இருக்கும் என்னிடம், நாளிதழில் சுற்றி வைக்கப்பட்ட ரூ.60 ஆயிரம் பணக்கட்டை என்னிடம் கொடுத்தார். ‘அப்பா எதுக்கு இது?’ என்று கேட்டேன். ‘ஆட்டோ ஓட்டத் தெரியும் என்று சொன்னாய் அல்லவா. இந்தப் பணத்தை வைத்து ஆட்டோ வாங்கிக்கொள்’ என்றார். பணத்தை வாங்கிக்கொண்டேன். அது என் வாழ்க்கையில் முக்கியமான தருணம்” என்றார் இளவேனில். அவர் ஆட்டோ ஓட்ட ஆரம்பித்த நான்கைந்து வருடங்களிலேயே ஸ்டுடியோ வைக்கிறார். ஸ்டுடியோவைத் திறந்து வைப்பதும் கி.ரா.தான். அதன் பிறகு, தமிழ் எழுத்தாளர்கள் பலரையும் ஆவணப்படுத்தும் அரிதான புகைப்படக் கலைஞராக இளவேனில் வளர்ந்தது நாம் அறிந்த கதை.
மொழிக்காகவும் சமூகத்துக்காகவும் எழுத்தை அர்ப்பணிக்கிறேன் என்ற சொற்கள் நம் சமூகத்தில் சகஜம் என்றாலும், அதைச் செயலில் காட்டியவர்கள் அரிது. கி.ரா. முன்னதாகத் தன்னுடைய படைப்புகளை எவரும் பயன்படுத்திக்கொள்ள ஏதுவாக எல்லோர்க்கும் பொதுவாக அர்ப்பணிக்கவே விரும்பினார். பின்னர், அதிலும் ஓர் ஒழுங்குமுறை பேணப்பட வேண்டும் என்ற நோக்கிலேயே இந்த ஏற்பாட்டைத் தேர்ந்தெடுத்திருக்கிறார். இளவேனிலுக்கான உரிமைப் பங்கு என்பது ஒரு குறியீடுதான். தமிழுக்காக உழைக்கும் பலர் தமக்குப் பின்னர் தம் படைப்புகள் எப்படிப் போய் மக்களிடம் இலகுவாகச் சேர வேண்டும் என்று யோசிப்பதில் சொதப்பிவிடுவது உண்டு. பலர் குடும்பப் பொறுப்பில் உரிமையை முழுமையாக விட்டுச்செல்வதில் நேரும் துயரம் என்னவென்றால், குடும்பத்தினர் ஏதோ ஒருகட்டத்தில் எழுத்துலகோடு முழுத் தொடர்பு அற்றவர்களாக மாறும்போது, எழுத்துகளைத் தொடர்ந்து பிரசுரிப்பதிலேயே சங்கடம் நேரிடுவது இயல்பாகிவிடுகிறது; மாறாக, தன்னையும் தன் எழுத்தையும் முழுமையாக உள்வாங்கிய ஒருவரைக் குடும்பத்தினரோடு இப்படி எழுத்துரிமைக்கான வாரிசாக நியமிக்கும்போது மேற்கண்ட சங்கடம் தவிர்க்கப்படும் ஒரு வாய்ப்பு உருவாகிறது. ஆனால், இத்தகைய முடிவை எடுக்க ஒரு பெரிய மனது வேண்டும். கி.ரா. தன்னை மீண்டும் நிரூபித்திருக்கிறார்!
Message sent by My Cousin Smt. Subha Srivathsan.
திரு கி. ராஜ நாராயணன் ஐயா.
அன்பின் ஐயா திரு .ராஜ நாராயணன் இயற்கை எய்தினார்.
2006 ஆம் ஆண்டு வீட்டுக்கு வந்து எங்களைக் கௌரவித்தது
இன்னும் இனிமையாகத் தங்கி இருக்கிறது.
சென்று வாருங்கள் ஐயா.
பெருந்தன்மையின் வடிவம்.
அவருடையாவது எண்பதாவது வயதின் விழா சென்னையில் கொண்டாடினார்கள்.
அதற்கு முன் அவரது பாண்டிச்சேரி வீட்டிற்குத் தொடர்பு கொண்டு பேசினேன்.
விழாவுக்கு வாருங்கள் என்று அழைப்புக் கொடுத்தார்.
அங்கெல்லாம் போக அவ்வளவு தைரியம்
இல்லை.
ஐய்யா நீங்களும் அம்மாவும் எங்கள் வீட்டுக்கு வரவேண்டும்
என்று மட்டும் கேட்டுக் கொண்டேன்.
ஏனெனில் அவரது அணுகுமுறை அவ்வளவு எளிமையாக
இருந்தது.
சிங்கமும் நானும் ,ஐயாவையும் அம்மா கணவதியையும்
வாசலில் இருந்து அழைத்து வைத்து.,
உட்கார வைத்து ,நமஸ்கரித்து வாங்கி வைத்திருந்ததையும்
கொடுத்தோம்.
மிகமிகமிகப் பெருந்தன்மையோடு ஏற்றுக் கொண்டார்கள்.
30 நிமிடங்களே தங்கி இருந்தவர்கள்,
அதற்குள் வீடு ,செடி,மரம் ,கிணறு என்று எல்லாவற்றையும்
பார்த்துவிட்டு,
அப்போது வளர்ப்பில் இருந்த பெரிய அரோவானா
மீனையும் பார்த்து மகிழ்ந்து பேசிச் சென்றார்கள்.
என் தாய் தந்தையே வந்திருந்தது போல உணர்ந்தேன்.
அவரது புத்தகங்களில் அவரது கையெழுத்தையும் வாங்கிக்
கொண்டேன்.
விடை பெற்றுச் சென்றவர்
அடுத்த தபாலில் இன்னும் இரண்டு
புத்தகங்களும் ,கடிதம் ஒன்றையும் அனுப்பி விட்டார்.
கிருஷ்ண பரமாத்மா வந்த ஆனந்தத்தில் நான் இருந்தேன்.
இவ்வளவு பெரிய எழுத்தாளர் ,இவ்வளவு
இறங்கி வந்து பாசம் காட்ட முடியுமா என்ற
வியப்பை இன்னும் நன்றியுடன் அனுபவிக்கிறேன்.
அவரது எழுத்துகள் என்றும் நம்முடன்.
வணக்கம் அப்பா.
Monday, May 17, 2021
.(ரோஜா பூந்தோட்டம் காதல்சில பாடல்கள் 90களில்
சின்ன மகனுக்கும் , என் தம்பியின் மகனுக்கும் பிடித்த
விஜய் படங்களின் பாடல்கள்
எப்பொழுதும் மிக இனிமை.
Sunday, May 16, 2021
Saturday, May 15, 2021
ஸ்விஸ் ஆல்ப்ஸ் பற்றிய காணொளி....
2002 என்று நினைக்கிறேன்.
விடாமல் 15 நாட்கள் ஸ்விட்சர்லாந்தை
சுற்றி வந்தோம்.
ஒரு நாள் மகன் வீட்டில் இருப்போம் ,அடுத்த நாள் காலையில் சாப்பாடு எடுத்துக் கொண்டு எட்டுமணிக்கு
வண்டியேறினால் இரவு பத்துமணிக்கு
வந்துவிடுவோம்.
ஒவ்வொரு நிமிடமும் வீணாகாமல் ,ரயில் ஏறி இறங்குவ்தும், அடுத்த ரயிலைப்
பிடிப்பதுமாகக் கழிந்த நாட்கள்.
ஸ்விஸ் விமான நிலையத்தில் இறங்கியதும்
ஒரு நல்ல காப்பி.
அத்தனை களைப்பும் பறந்துவிடும்.
விமான நிலையத்திற்குக் கீழேயே ,ரயில் நிலையம்.
அங்கே ஒரு மாதத்துக்கான ரயில் பாஸ் எடுத்துக் கொண்டோம்.
இன்னும் நினைவு இருக்கிறத். 143 ஃப்ராங்க்ஸ்.
இருவருக்கும் சேர்த்து!!!
இப்பொழுது அதிகரித்திருக்கலாம்.
ஒரு நாள் வெளியே சுற்றுவோம், ஒரு நாள் ஓய்வும்
உள்ளூருக்குள் நடையும்.
அந்த செப்டம்பர் மாதம் அதிகக் குளிரும் இல்லாமல்,
இதமான வெய்யிலுடன்
களைப்பே தெரியாமல் ஊர் சுற்றினோம்.
70 கிலோ எடை 62 கிலோவாகக் குறைந்தது.!!!!!!!!!
அன்பு மகனுக்குத் தான் அத்தனை நன்றியும்.
அப்போது ஒரு மாத விசா தான் கிடைத்தது.
இப்போது 90 நாட்கள் அங்கே இருக்கலாம்.
வயதானதற்குக் கிடைக்கும் மரியாதை.
அங்கே வேலை தேடிக் கொண்டு அங்கேயே தங்கி
விடுவோம் என்ற பயம் அவர்களுக்கு
இப்போது இல்லை:)
இந்த மகிழ்ச்சியும் நிறைவும்
Friday, May 14, 2021
சாதனை சிங்கம்
கோவையில் இருக்கும் போது பல விஷயங்களில் முன்னணியில் இருந்தது
சிங்கம் வேலை பார்த்த கம்பெனி.
சேலத்திலிருந்து இங்கே மாறி வரும்போது யூனியன்
வழியே பல தொந்தரவுகள்.
எத்தனையோ இரவுகள் தாமதமாக வருவார்.
தொழிலாளர் ஒத்துழைப்பு அவ்வளவு இல்லை.:(
அப்போது வந்தது தான் இந்த சிறப்பு வேலை.
அப்பொழுது திரு ஜி.டி, நாயுடு
இருந்தார்.
அவரது வாகனக் கலெக்ஷன் மிகவும் பேசப்படும்.
அவரிடம் இருந்த ரோல்ஸ் ராய்ஸ் வண்டிக்குப்
புதிதாக வண்ணம் அடிக்க வேண்டி இருந்தது.
சிங்கம் தானே போய் அவரைப் பார்த்து
அந்த வேலையைத் தான் செய்து தருவதாகச் சொல்லி
திரு நாயுடு அவர்களின் மகனிடமும் சம்மதம் வாங்கிக் கொண்டார்.
அதற்கான பச்சை வண்ணம் நம் ஊரில் கிடையாது.
எல்லாமே இங்கிலாந்து ரோல்ஸ் ராய்ஸ்
கம்பெனிக்கு எழுதி வரவழைத்து
மேலே இருக்கும் வீடியோ போல செய்து கொடுத்தார்.
கிட்டத்தட்ட ஒரு மாதத்துக்கான வேலை.
இங்கே வந்த டாக்குமெண்டரி பார்க்கும் போது
வந்த நினைவுகள் இவை.
அந்தக் கரங்களை நினைத்துகொள்கிறேன்.
N
Thursday, May 13, 2021
Wednesday, May 12, 2021
Singapore Airlines A380 First Class Suite London to Singapore (PHENOMENAL!)
லண்டனிலிருந்து சிங்கப்பூர் விமான முதல் வகுப்பு சேவை.
Tuesday, May 11, 2021
மெய் மறுப்பு
வல்லிசிம்ஹன் ''உங்க ஊர்ல வருகிற செய்தி எல்லாம் தவறு.
சென்னையில் அத்தனை பாதிப்பு இல்லை.
ஊடகங்கள் ஊதி ஊதிப் பெரிது செய்கின்றன.'
அத்தனை தொற்று கிடையாது.
எப்படி இருக்கிறீர்கள் என்று யாராவது கேட்டால்
கோபம் தான் வருகிறது '
என்று பொரிந்தார் ஒரு நட்பு.
நான் கேள்விப்பட்டது ஊடகங்களிலிருந்துமட்டும் இல்லை!!!!.
பாதிக்கப்பட்ட தோழிகள், அவர்கள் குடும்பங்கள்,
உறவுகள் இவை அடங்கிய செய்திகளே.
அவர்களுக்கு என்னிடம் பொய் சொல்ல வேண்டிய
அவசியம் இல்லை.
பூனை கண்ணை மூடிய கதைதான்.
அவரோ வீட்டை விட்டு நகர்வதில்லை.
எல்லோரும் தடுப்பூசி போட்டுக்
கொண்டாகிவிட்டது.
அனாவசியமாக அமெரிக்காவையோ, லண்டனையோ
குறை சொல்லி ஆக வேண்டியது என்ன???
இந்தியாவின் அண்டை நாடுகள், தென் அமெரிக்க நாடுகள்,
துருக்கி,நெதர்லாண்ட்ஸ் என்று விரிகிறது நோய்த் தொற்று.
ஒரு அலை இங்கே பாதித்தால் அடுத்த அலை
அங்கே பாதிக்கிறது.
அடிப்படையில் நானும் ஒரு சென்னைப் பிரஜை
என்பதையே அவர் மறந்து பேசினது வருந்த வைத்தது.
மிகவும் சிரமமான காலம் தான் இது.
மக்களுடன் சகஜமாகப் பழக் முடியாமல்
மனமே நொந்து போகிறது.
எங்கேயோ தள்ளித்தள்ளி இருக்கும்
பிள்ளைகளை,அவர்களுக்குத் தடுப்பூசி
கிடைக்காத சோகத்தை என்ன சொல்லி மறக்க முடியும்.?
தினசரி பிரார்த்தனைகளைத் தவிர வேறு ஏது
செய்ய முடியும்.
தொற்று பாதித்தவர்கள் சீக்கிரம் மீளவேண்டும்.
மற்றவர்கள் பாதிக்கப் படாமல் இருக்க வேண்டும்.
மனத் திடமும் ,நல் வார்த்தைகளும் எல்லோரையும் காக்கட்டும்.
Sunday, May 09, 2021
அம்மா.
வல்லிசிம்ஹன்
அனைவருக்கும் அன்னையர் தின வாழ்த்துகள்.
வரும் நாட்களும் வாழும் நாட்களும் நாம் பெற்ற செல்வங்கள்
நன்றாக இருக்க இறைவனை வேண்டுவோம்.
கீழே இருக்கும் பாடல் 1950களின் கடைசியில் திருமங்கலத்தில்
ஒலி பெருக்கிகளில்
கேட்ட நினைவு.
பள்ளி விட்டு வரும் வழியில் இந்தப் பாட்டைக் கேட்டு விட்டு,
வீட்டுக்கு வந்து அம்மாவிடம் அழுத நினைவு.
''வெறும் சினிமாப் பாட்டு தானே , ஏன் அழறே''
என்று முதுகில் தட்டித் தேற்றிய அம்மாவை நினைத்துக் கொள்கிறேன்.
எதற்கெடுத்தாலும்
அம்மா,அப்பாவிடம் ஓடும் சுபாவம்
என்னை விட்டுப்போகப் பல வருடங்கள் ஆயின.
நம் சிரமங்களை நாமே சமாளிக்க வேண்டும் என்ற திடத்தையும்
கற்றுக் கொடுத்தவள் அவளே.
அதைத் தன் அம்மாவிடமிருந்து அவள் கற்றிருக்க வேண்டும்.
இப்போது அதே திடத்தை என் மகளிடமும் காண்கிறேன்.
நமக்கு வல்லமை தருவது அந்த அன்னை சக்தி.
தாய்மைக்கே உண்டான இரக்கம்,கருணை, மன்னிக்கும் குணம்,
ஈகை,அரவணைப்பு, உண்மை எல்லாம்
வழி வழியாக நம்மை அடைய நாம் பொறுமையுடன்
இருக்க வேண்டும்.
இருப்போம். துன்பம் தாண்டி வருவோம்.
''இன்பமே வேண்டி நிற்போம்..
யாதும் அவள் தருவார். நம்பினார் கெடுவதில்லை''
பராசக்தி அன்னையின் அருள் நம்மைக் காக்கட்டும்.
அன்னையின் ஆணைப் படப் பாடலை
இசையுடன் பதிய மனம் வரவில்லை.
நான் கேட்கும் போதே கரைந்துவிடுவேன்.
இன்று நம்மைக் கரைய வைக்கும் துன்பங்கள் விலகப்
பத்து மாதம் சுமந்திருந்து பெற்றாள்
பகல் இரவாய் விழித்திருந்து வளர்த்தாள்
வித்தகனாய் கல்வி பெற வைத்தாள்
மேதினியில் நாம் வாழ செய்தாள்... ஆஆஆஅ....
அன்னையைப் போல் ஒரு தெய்வம் இல்லை
அன்னையைப் போல் ஒரு தெய்வம் இல்லை
அவள் அடி தொழ மறுப்பவர்
மனிதரில்லை ... மனிதரில்லை ...
மன்ணில் மனிதரில்லை....
அன்னையைப் போல் ஒரு தெய்வம் இல்லை
துன்பமும் தொல்லையும் ஏற்றுக் கொண்டே........ஏ .....ஏ......ஏ.....
ஆஆஆஆஅ......
துன்பமும் தொல்லையும் ஏற்றுக் கொண்டே..........நம்மை
சுகம் பெற வைத்திடும் கருணை வெள்ளம்
சுகம் பெற வைத்திடும் கருணை வெள்ளம்
அன்னையைப் போல் ஒரு தெய்வம் இல்லை
அவள் அடி தொழ மறுப்பவர்
மனிதரில்லை ... மனிதரில்லை ...
மன்ணில் மனிதரில்லை......
நாளெல்லாம் பட்டினியாய் இருந்திடுவாள்
ஒரு நாழிகை நம் பசி பொறுக்க மாட்டாள்
மேலெல்லாம் இளைத்திட பாடு பட்டே.......
நேர்மையாய் நாம் வாழ செய்திடுவாள்
ஆஆஆஆஆஆஆ.....
அன்னையைப் போல் ஒரு தெய்வம் இல்லை
அன்னையைப் போல் ஒரு தெய்வம் இல்லை
அவர் அடி தொழ மறுப்பவர் மனிதரில்லை ... மனிதரில்லை ...
மண்ணில் மனிதரில்லை....
Saturday, May 08, 2021
Friday, May 07, 2021
மரகதமணி சார் அன்று.
பல பாடல்களுக்கு இசை அமைத்திருக்கிறார் மரகதமணி.
நான் தான் இதையறியாமல் இத்தனை
நாட்கள் ரசித்திருக்கிறேன்.
எஸ்பிபி சாரின் குரலில் எந்தப் பாடலும் ஒளிவிடும்.
பாலச்சந்தர் படங்களுக்கு
ஸ்பெஷல் இசை அமைந்தது.
ரசிக்கலாம்.
Thursday, May 06, 2021
Wednesday, May 05, 2021
Tuesday, May 04, 2021
Monday, May 03, 2021
என்றும் சுஜாதா சார்.
வல்லிசிம்ஹன்
இன்னும் நினைவில் இருக்கிறது.
அவரை சந்தித்தது.
ஜெமினி ஃப்ளை ஓவர் கீழே ஒரு சாலையில்
''அம்பலம்'' அலுவலகம்.
சில வருடங்கள் வேலை செய்த இடத்திலிருந்து ஒரு கிலோ
மீட்டர் தொலைவில் இருந்தது.
என்ன தைரியத்தில் அவரைக் காணச் சென்றேன் என்று
இன்னும் புரியவில்லை.
வெளியே காத்திருந்த இருவரில் பதிப்பகத்தார் ஒருவர் என்று நினைவு.
சாரின் உதவியாளர் கிட்டே
ஒரு நிமிடம் அவரைச் சந்திக்க வேண்டும்
என்று கேட்க உள்ளே போகலாம் என்று அவர் சொல்ல
நான் தயக்கத்துடன் சென்றேன். சாதாரண மனிதராக
ஒரு நீல வண்ண முழுக்கை சட்டையில்
சிறு புன்னகையோடு அவரைப் பார்த்து
ஹலோ சார், வணக்கம்னு சொல்லி விட்டு
''அம்பலம் மின்னிதழ் அரட்டை நன்றாகச் செல்கிறது.நேரத்தை
நீட்டித்தால் எங்களுக்கெல்லாம் சந்தோஷம்'
என்று சொல்லி வெளியே வந்துவிட்டேன்.
அவ்வளவுதான் தைரியம்:)
அதற்கப்புறம் ஆட்டோ பிடித்து வீடு வந்து சேர்ந்ததெல்லாம்
ஒரு சொப்பனம் போல இருக்கிறது.
இன்னும் கொஞ்ச வருடங்கள் இருந்திருக்கலாம் சார் நீங்கள்.
ஜெயகாந்தனின் ஒரே interview
திரு ஜெயகாந்தன் அவர்களின் பேச்சை முதன் முறை
கேட்கிறேன்.
மதிப்புஇன்னும் உயர்கிறது.
Sunday, May 02, 2021
நட்புகள் புத்தகங்கள். ,மற்றும் வெங்காய போண்டா.
வல்லிசிம்ஹன்
கொண்டு வந்த ,வாங்கின புத்தகங்களை எல்லாம்
பத்து தடவையாகப் பாராயணம்
செய்தாகி விட்டது.
ஜானகிராமனும்,அகிலனும்,சுஜாதாவும், ஐயா ராச நாராயணனும்,
பிவிஆரும்,ஜெயகாந்தனும்,லக்ஷ்மியும்,காலச்சக்கிர நரசிம்மாவும்
என் கைகளையும் கண்களையும்
கண்டு அலுத்துப் போய்
புத்தக அலமாரிக்குப் பக்கம் நான் வந்தாலே சுருங்கிக் கொள்கிறார்களோ
என்று தோன்றி விட்டது.:)))))))))
இங்கே வந்த பிறகு மகளின் தோழிகள்
அனைவரும் என் தோழிகள் ஆகிவிட்டார்கள்.
அதில் ஒருவர் திருமதி லதா ராஜேந்திரன்.
வாழ்க வளமுடன். அவர் இங்கிருக்கும் நூலகத்தில்
நல்ல வேலையில் இருக்கிறார்.
நல்ல புத்தக அறிவு உண்டு.
என்னை சில நாட்கள் முன்னால் ''மாமி,பொன்னியின் செல்வன்
வந்திருக்கிறது .உங்களுக்குக் கொண்டு வந்து தரட்டுமா
என்றதும் தலைகால் புரியவில்லை.
தொற்று காரணமாக லைப்ரரி போவதையும் அங்கிருந்து
புத்தகங்கள் எடுப்பதையும் நிறுத்தி
15 மாதங்கள் ஆகிறது.
அப்பவும் ஆங்கில புத்தகங்கள் தான்
எங்கள் டிஸ்ட்ரிக்ட் லைப்ரரியில் கிடைக்கும்.
அன்பு லதா வேலை செய்யும் இடத்தில்
தமிழ்ப் புத்தகங்கள் இருப்பதாகச் சொன்ன நேரம்
நாங்கள் தடுப்பூசியும் போட்டுக் கொண்டுவிட்டோம்.
அஞ்சாமல் புத்தகங்களைப் படிக்கலாமே...
என்று நானே பாடிக் கொண்டேன்:)ஒரே ஒரு சந்தேகம் .சிறிய எழுத்தாக இருந்தால் படிக்க முடியாது!!!அதனால் ஒரு ஃபோட்டோ எடுத்து அனுப்பச் சொன்னேன்.
பொன்னியின் செல்வன் சின்ன எழுத்து:(
வரிசையாக ஆசிரியர்களை நிற்க வைத்துப்
பெயர்களைப் படித்தார்.
அதில் தேறியது 6 புத்தகங்கள்.
சுகிசிவம்,
கல்கியின் பார்த்திபன் கனவு,
பட்டுக்கோட்டை பிரபாகரின் சில புத்தகங்கள்,
எஸ்.ராவின் இடக்கை.
தொலைபேசியில் சொல்லி முடித்த பத்தாவது நிமிடம்,
அவர் வண்டி வாசலில்,
புத்தகங்களை வாயில்படியில் வைத்துவிட்டு
சென்றுவிட்டார்.
24 மணி நேரம் காத்திருந்து,உள்ளே கொண்டுவந்து
நன்றாகத் துடைத்துவிட்டு பார்க்கும் போது மனம் நிறைய
ஆனந்தம்.
இதோ நாலு புத்தகங்களை முடித்தாகிவிட்டது.
ஒன்று பிடிக்கவில்லை. பார்த்திபன் கனவு கனஜோராகப்
போய்க் கொண்டிருக்கிறது.
அன்பு லதாவிற்கு மனம் நிறை நன்றி.
புத்தகங்கள் படிக்கத் துணைக்கு ஏதாவது கொறிக்க வேண்டாமா?
கோதுமை மாவு+அரிசிமாவு+தயிர் கலந்து போண்டா.
வெங்காயம் கலக்காமல் இருந்தால் நல்ல
உருண்டையாக வந்திருக்கும். கலந்ததால் மாவு இளகி
கொஞ்சம் வடையாகி விட்டது.
உளுத்தம் பருப்பு ஊற வைத்து வடை போடும்போது
''ஹை..... போண்டாவா'' என்று பசங்க கேட்கும் நினைவு வர
சிரிக்கத் தான் தோன்றியது.
பேரன் சாப்பிட்டுவிட்டு ''பாட்டி, பஜ்ஜி வெரி நைஸ்''
என்றதும் எல்லோருமே சிரித்தோம்.
ரோஜாவை எந்தப் பெயர் வைத்து அழைத்தாலும் அது ரோஜா தான்.
அதைப் போல மாவு எத்தனை வடிவம் எடுத்தாலும்
Subscribe to:
Posts (Atom)