Blog Archive

Tuesday, May 18, 2021

ஐயா. 2


வல்லிசிம்ஹன்



இப்போது கி.ரா. தன்னுடைய படைப்புகளுக்கான உரிமையை மூவருக்கும் எழுதி வைத்திருப்பதோடு அந்த மூவரிடம் ஒரு வேண்டுகோளையும் முன்வைத்திருக்கிறார். கி.ரா.வின் படைப்புகள் வழியாகக் கிடைக்கும் வருவாயின் ஒரு பகுதியை ‘கரிசல்’ என்ற பெயரில் ஒரு அறக்கட்டளை நிறுவி, எழுத்தாளர்களுக்கும் சிறுபத்திரிகைகளுக்கும் பணமுடிப்புடன் கூடிய விருதுகளை வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருக்கிறார். “எழுத்தாளர் – வாசகர் உறவுக்கு அப்பாற்பட்டு, ஒரு தந்தையாகவும் நண்பராகவும் என்னோடு கி.ரா. பழகியிருக்கிறார். உண்மையில், நான் பாக்கியவான்” என்றார் புதுவை இளவேனில்.
முதுபெரும் எழுத்தாளுமை கி.ராஜநாராயணன் அவருடைய எழுத்தாக்கங்களுக்கும் படைப்புகளுக்குமான உரிமை டிசம்பர் 26, 2020 முதல் மூவரைச் சேரும் என்று எழுதி வைத்திருக்கிறார். 1) சங்கர் (எ) புதுவை இளவேனில், 2) திவாகரன், 3) பிரபாகர். பொதுவாக, தமிழ் எழுத்தாளர்கள் தாங்கள் வாழும் காலத்திலேயே படைப்புரிமையை எழுதி வைப்பது வழக்கம் கிடையாது. அந்த வகையில் இந்த அறிவிப்பு முக்கியமானது. இன்னொரு காரணத்துக்காகவும் இந்த அறிவிப்பு பேசப்பட வேண்டியதாகிறது. கி.ரா.வின் மூத்த மகன் திவாகரன், இளைய மகன் பிரபாகர் இருவருக்கும் முன்வரிசையில் இருக்கும் புதுவை இளவேனில் எனும் பெயர்தான் நம் கவனம் ஈர்க்கக் காரணம். புதுவை இளவேனிலுக்கு கி.ரா. கொடுத்திருக்கும் முன்னுரிமை உண்மையில் மெச்சத்தக்கது.



அப்போது புதுவை இளவேனிலுக்கு 14 வயது. ஓவியராகும் கனவோடு சுற்றிக்கொண்டிருக்கும் சிறுவன். ‘ஆனந்த விகடன்’ இதழில் கி.ரா.வின் ‘கோபல்லபுரத்து மக்கள்’ நாவல் தொடராக வந்துகொண்டிருந்தபோது அதை ஆதிமூலத்தின் ஓவியத்துக்காக வாசிக்கிறான். அப்படித்தான் அந்தச் சிறுவனுக்கு கி.ரா. அறிமுகமாகிறார். பின்பு, இளவேனிலுக்கு அவரது 18-வது வயதில் கி.ரா.வைச் சந்திக்கக் கிடைத்த வாய்ப்பானது, தந்தை – மகன் உறவாகும் அளவுக்கு வளர்ந்தது.

“கி.ரா.வுடனான முதல் சந்திப்பில் என் பெயரைக் கேட்டபோது ‘பாபு’ என்றேன். என் உண்மையான பெயரான சங்கர் என்பதையோ, புனைபெயரான இளவேனில் என்பதையோ அவரிடம் சொல்லவில்லை. என்னுடைய அம்மா என்னைச் செல்லமாக அழைக்கும் பாபு என்ற பெயரை யதேச்சையாக அன்று உச்சரித்துவிட்டேன். அன்றிலிருந்து என்னை பாபு என்றே அவர் அழைக்கிறார். கி.ரா.வுக்கு இப்போதும் நான் பாபுதான்” என்று பழைய நாட்களை நினைவுகூர்ந்தார் இளவேனில். சாப்பாட்டுக்குக்கூட வழியில்லாமல் மிக வறுமையான வாழ்க்கைச் சூழலைக் கொண்டிருந்த இளவேனில், உணவுக்காக கி.ரா. வீட்டுக்குச் சென்ற கதையைப் பகிர்ந்துகொண்டார். காலை 10 மணி வாக்கில் கி.ரா. வீட்டுக்குச் சென்றால் டிபன் கிடைக்கும், அதை முடித்துவிட்டு கி.ரா.வோடு கொஞ்ச நேரம் அளவளாவல், பிறகு நேரே நூலகம். இதுதான் சில வருடங்களுக்கு இளவேனிலின் அன்றாடம்.

பத்தாம் வகுப்பு மட்டுமே முடித்திருக்கும் இளவேனிலோடு இலக்கியம் பேசுவதற்கு அப்பாற்பட்டு அவரது வாழ்க்கைப்பாடுகளுக்கு வழி சொல்பவராகவும் கி.ரா. இருந்திருக்கிறார். “ஒருமுறை மாலைபோல வீட்டுக்கு வரச் சொல்லி கி.ரா. கூப்பிட்டார். தினமும் அவர் வீட்டுக்குப் போய்வருபவனாக இருந்தாலும் என் பின்னணி அவருக்குத் தெரியாது. என் வீடு தெரியாது, என் முகவரி தெரியாது, நான் யாரென்றே அவருக்குத் தெரியாது. அப்படி இருக்கும் என்னிடம், நாளிதழில் சுற்றி வைக்கப்பட்ட ரூ.60 ஆயிரம் பணக்கட்டை என்னிடம் கொடுத்தார். ‘அப்பா எதுக்கு இது?’ என்று கேட்டேன். ‘ஆட்டோ ஓட்டத் தெரியும் என்று சொன்னாய் அல்லவா. இந்தப் பணத்தை வைத்து ஆட்டோ வாங்கிக்கொள்’ என்றார். பணத்தை வாங்கிக்கொண்டேன். அது என் வாழ்க்கையில் முக்கியமான தருணம்” என்றார் இளவேனில். அவர் ஆட்டோ ஓட்ட ஆரம்பித்த நான்கைந்து வருடங்களிலேயே ஸ்டுடியோ வைக்கிறார். ஸ்டுடியோவைத் திறந்து வைப்பதும் கி.ரா.தான். அதன் பிறகு, தமிழ் எழுத்தாளர்கள் பலரையும் ஆவணப்படுத்தும் அரிதான புகைப்படக் கலைஞராக இளவேனில் வளர்ந்தது நாம் அறிந்த கதை.
மொழிக்காகவும் சமூகத்துக்காகவும் எழுத்தை அர்ப்பணிக்கிறேன் என்ற சொற்கள் நம் சமூகத்தில் சகஜம் என்றாலும், அதைச் செயலில் காட்டியவர்கள் அரிது. கி.ரா. முன்னதாகத் தன்னுடைய படைப்புகளை எவரும் பயன்படுத்திக்கொள்ள ஏதுவாக எல்லோர்க்கும் பொதுவாக அர்ப்பணிக்கவே விரும்பினார். பின்னர், அதிலும் ஓர் ஒழுங்குமுறை பேணப்பட வேண்டும் என்ற நோக்கிலேயே இந்த ஏற்பாட்டைத் தேர்ந்தெடுத்திருக்கிறார். இளவேனிலுக்கான உரிமைப் பங்கு என்பது ஒரு குறியீடுதான். தமிழுக்காக உழைக்கும் பலர் தமக்குப் பின்னர் தம் படைப்புகள் எப்படிப் போய் மக்களிடம் இலகுவாகச் சேர வேண்டும் என்று யோசிப்பதில் சொதப்பிவிடுவது உண்டு. பலர் குடும்பப் பொறுப்பில் உரிமையை முழுமையாக விட்டுச்செல்வதில் நேரும் துயரம் என்னவென்றால், குடும்பத்தினர் ஏதோ ஒருகட்டத்தில் எழுத்துலகோடு முழுத் தொடர்பு அற்றவர்களாக மாறும்போது, எழுத்துகளைத் தொடர்ந்து பிரசுரிப்பதிலேயே சங்கடம் நேரிடுவது இயல்பாகிவிடுகிறது; மாறாக, தன்னையும் தன் எழுத்தையும் முழுமையாக உள்வாங்கிய ஒருவரைக் குடும்பத்தினரோடு இப்படி எழுத்துரிமைக்கான வாரிசாக நியமிக்கும்போது மேற்கண்ட சங்கடம் தவிர்க்கப்படும் ஒரு வாய்ப்பு உருவாகிறது. ஆனால், இத்தகைய முடிவை எடுக்க ஒரு பெரிய மனது வேண்டும். கி.ரா. தன்னை மீண்டும் நிரூபித்திருக்கிறார்!

Message  sent  by  My Cousin Smt. Subha Srivathsan.

19 comments:

வல்லிசிம்ஹன் said...

இந்த செய்தி என் தங்கை அனுப்பினாள்.

வெங்கட் நாகராஜ் said...

பெரிய மனது கொண்டவர் அவர் என்பதை இந்த நிகழ்வு சொல்கிறது.

தகவல் பகிர்ந்து கொண்டதற்கு நன்றிம்மா.

கோமதி அரசு said...

//கி.ரா.வின் படைப்புகள் வழியாகக் கிடைக்கும் வருவாயின் ஒரு பகுதியை ‘கரிசல்’ என்ற பெயரில் ஒரு அறக்கட்டளை நிறுவி, எழுத்தாளர்களுக்கும் சிறுபத்திரிகைகளுக்கும் பணமுடிப்புடன் கூடிய விருதுகளை வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருக்கிறார். “//

நல்ல மனது.
நல்ல வேன்டுகோள்
அவர் வார்த்தைகள் நிறைவேற வேண்டும்.
நல்ல பகிர்வு.
நன்றி.

வல்லிசிம்ஹன் said...

உண்மைதான் அன்பு வெங்கட்,
மிகப் பெரிய மனிதர். எளிமையாக வாழ்ந்தவர்.
இள வயதில் ஏகப்பட்ட சிரமங்களை அவரும் ,மனைவியும் கடந்து வந்திருக்கிறார்கள்.

அதற்கு யார் மேலும் கசப்புக் காட்டாமல் சிரித்துக் கொன்டே வாழ்ந்து
பூரணம் எய்தினார். நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் அன்பு கோமதிமா.
பரிபூரண ஆயுசும்,
மனம் நிறைந்த தமிழ் சேவையும் செய்து
நிறைந்திருக்கிறார். என்றும் ஆத்ம சாந்தியுடன் இருக்க வேண்டும்.

ஸ்ரீராம். said...

புதிய தகவல்கள்.  நெகிழ்ச்சியாக இருக்கிறது.  அவர் படித்த பள்ளியில் அவருக்கு ஒரு சிலை வைக்கப்படும் என்றும் அவர் படைப்புகள் பாடநூலில் சேர்க்கபப்டும் என்றும் முதல்வர் அறிவித்திருக்கிறார்.

Geetha Sambasivam said...

முற்றிலும் கேள்விப்படாத செய்தியைப் பகிர்ந்தமைக்கு நன்றி. நல்ல மனம் கொண்டவர்களால் தான் இப்படி எல்லாம் வேறுபாடு இல்லாமல் செய்ய முடியும். பரந்த மனம்.

Thulasidharan V Thillaiakathu said...

மிகச் சிறந்த மனசு! பெரிய மனது படைத்த எழுத்தாளர்!!! மகத்தான சேவை. மனதில் மிகவும் உயர்ந்துவிட்டார்!!!

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

பெரிய எழுத்தாளர்கள் இப்படி இருப்பது அபூர்வம். அபூர்வ மனிதர் சிறந்தமனது! அவர் பெயர் நிலைத்திருக்கும்!

துளசிதரன்

திண்டுக்கல் தனபாலன் said...

சிறப்பான மனிதர்...

கரந்தை ஜெயக்குமார் said...

தன்னையும் தன் எழுத்தையும் முழுமையாக உள்வாங்கிய ஒருவரைக் குடும்பத்தினரோடு இப்படி எழுத்துரிமைக்கான வாரிசாக நியமிப்பது என்பது கற்பனையிலும் யாருக்கும் உதித்திடாத ஒன்று
கி.ரா தன் குணத்தால் தன் எழுத்தினும் உயர்ந்து நிற்கிறார்

வல்லிசிம்ஹன் said...

அன்பு வெங்கட்,
உண்மைதான். மிக மிகப் பெரியவர்.
இவ்வளவு எளிமையானவரை நாம்
எப்போதாவது தான் பார்க்க முடியும். நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கோமதிமா,
வாழ்க வளமுடன். திரு கி.ரா அவர்களின் புத்தகங்களை நான்
ஸ்விட்சர்லாந்து நூலகத்துலேயே
பார்த்து இருக்கிறேன்.

பெரிய மனிதர். நல்ல ஆளுமை.
நல்ல உள்ளம். என்றும் அவரை நினைக்கும்படி செய்திருக்கிறார்.
நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஸ்ரீராம்,

சிறப்பான மனிதர். பெருந்தன்மையின் மறு வடிவம்.
தன் பிள்ளைகளிடம் தமிழ் எழுத்தை எதிர்பார்த்ததாகச்
சொல்லி இருக்கிறார்.
அவருக்கு நல்ல துணையாக இருந்தவருக்கு
இந்த நல்ல முடிசூட்டி இருக்கிறார்.

என்னாளும் இந்த நல்ல செயல் தொடரவேண்டும்
என்பதில் அவருக்கு ஆவல் இருந்திருக்கிறது.

நிறைவேற வேண்டும். நன்றி ஸ்ரீராம்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கீதாமா,
மேன்மக்கள் என்றும் மேன்மக்கள் என்பதை நிரூபித்திருக்கிறார்.
மறைந்தும் மறையாப் புகழ் சிலருக்கு தான் வாய்க்கும்.
அதில் நம் கி.ரா ஐயாவும் ஒருவர்.
நமக்கு உண்மையான மகிழ்ச்சி இந்த மாதிரி நிகழ்வுகளே.
நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் அன்பு துளசிதரன்,
மிகப் பெரிய மனது. போதும் என்ற மனம்.
விசாலமான இருதயம்.

நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பண்புகள் எத்தனையோ அவரிடம் இருக்கின்றன.
அவருடைய ஆசிகள் நமக்குக் கிடைக்கட்டும்.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் சின்ன கீதாமா.
அவ்வளவு பெரிய மனிதர் ,நம் வீட்டிற்கு
வந்தும் ஒரு படம் எடுத்துக் கொள்ளத் தோன்றவில்லையே
எனக்கு:(
இப்போது நினைத்ததற்கெல்லாம் படம் எடுத்துக் கொள்கிறோம்.
மட மனது. போற்றப்பட வேண்டிய மனிதர்.
என்றும் நிலைத்திருக்கும் அவர் புகழ். நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு தனபாலன். மிகச் சிறந்த மனிதரை நாம் அறிந்திருக்கிறோம்.
நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஜெயக்குமார்,
அதுதான் பெரிய மனிதரின் அடையாளம். தீர்க்க சிந்தனை.
அவர் செழிப்பாகத் தன் கிராமத்திலேயே
இருக்க முடியாத நிலை.
நகர்ப்புறத்துக்கு வந்ததும் அதையுமேற்றுக் கொண்டார்.

எழுத்தாளர்களின் அதுவும் சிறிய நல்ல எழுத்தாளர்களின்
சிரமங்களை அறிந்தவர்.
அவர்களைப் பாராட்ட அவர் எடுத்த முயற்சி வெற்றி பெறும்.
நன்றி மா.