Wikipedia

Search results

Sunday, May 09, 2021

அம்மா.

வல்லிசிம்ஹன்

அனைவருக்கும் அன்னையர் தின வாழ்த்துகள்.

வரும் நாட்களும் வாழும் நாட்களும் நாம் பெற்ற செல்வங்கள்
நன்றாக இருக்க இறைவனை வேண்டுவோம்.
கீழே இருக்கும் பாடல் 1950களின் கடைசியில் திருமங்கலத்தில்
ஒலி பெருக்கிகளில் 
கேட்ட நினைவு.
பள்ளி விட்டு வரும் வழியில் இந்தப் பாட்டைக் கேட்டு விட்டு,
வீட்டுக்கு வந்து அம்மாவிடம் அழுத நினைவு.

''வெறும் சினிமாப் பாட்டு தானே , ஏன் அழறே''
என்று முதுகில் தட்டித் தேற்றிய அம்மாவை நினைத்துக் கொள்கிறேன்.
 எதற்கெடுத்தாலும் 
அம்மா,அப்பாவிடம் ஓடும் சுபாவம் 
என்னை விட்டுப்போகப் பல வருடங்கள் ஆயின.

நம் சிரமங்களை நாமே சமாளிக்க வேண்டும் என்ற திடத்தையும்
கற்றுக் கொடுத்தவள் அவளே.
அதைத் தன் அம்மாவிடமிருந்து அவள் கற்றிருக்க வேண்டும்.

இப்போது அதே திடத்தை என் மகளிடமும் காண்கிறேன்.
நமக்கு வல்லமை தருவது அந்த அன்னை சக்தி.
தாய்மைக்கே உண்டான இரக்கம்,கருணை, மன்னிக்கும் குணம்,
ஈகை,அரவணைப்பு, உண்மை எல்லாம்
வழி வழியாக நம்மை அடைய நாம் பொறுமையுடன்
இருக்க வேண்டும்.
இருப்போம். துன்பம் தாண்டி வருவோம்.
''இன்பமே வேண்டி நிற்போம்..
யாதும் அவள் தருவார். நம்பினார் கெடுவதில்லை''
பராசக்தி அன்னையின் அருள் நம்மைக் காக்கட்டும்.அன்னையின் ஆணைப் படப் பாடலை
இசையுடன் பதிய மனம் வரவில்லை.
நான் கேட்கும் போதே கரைந்துவிடுவேன். 
இன்று நம்மைக் கரைய வைக்கும் துன்பங்கள் விலகப்
பாடலை மட்டும் பார்ப்போம்.


பத்து மாதம் சுமந்திருந்து பெற்றாள்
பகல் இரவாய் விழித்திருந்து வளர்த்தாள்
வித்தகனாய் கல்வி பெற  வைத்தாள்
மேதினியில்  நாம் வாழ செய்தாள்... ஆஆஆஅ....

அன்னையைப் போல் ஒரு தெய்வம் இல்லை
அன்னையைப் போல் ஒரு தெய்வம் இல்லை
அவள்  அடி தொழ மறுப்பவர்
மனிதரில்லை ... மனிதரில்லை ...
மன்ணில் மனிதரில்லை....
அன்னையைப் போல் ஒரு தெய்வம் இல்லை

துன்பமும் தொல்லையும் ஏற்றுக் கொண்டே........ஏ .....ஏ......ஏ.....
ஆஆஆஆஅ......
துன்பமும் தொல்லையும் ஏற்றுக் கொண்டே..........நம்மை
சுகம் பெற வைத்திடும் கருணை  வெள்ளம் 
சுகம் பெற  வைத்திடும் கருணை வெள்ளம்
அன்னையைப் போல் ஒரு தெய்வம் இல்லை
அவள்  அடி தொழ மறுப்பவர்
மனிதரில்லை ... மனிதரில்லை ...
மன்ணில் மனிதரில்லை......

நாளெல்லாம்  பட்டினியாய் இருந்திடுவாள்
ஒரு நாழிகை நம் பசி பொறுக்க மாட்டாள்
மேலெல்லாம் இளைத்திட பாடு பட்டே.......
நேர்மையாய் நாம் வாழ செய்திடுவாள்
ஆஆஆஆஆஆஆ.....
அன்னையைப் போல் ஒரு தெய்வம் இல்லை
அன்னையைப் போல் ஒரு தெய்வம் இல்லை
அவர் அடி தொழ மறுப்பவர் மனிதரில்லை ... மனிதரில்லை ...
மண்ணில்  மனிதரில்லை....
அன்னையைப் போல் ஒரு தெய்வம் இல்லை........

16 comments:

Thulasidharan V Thillaiakathu said...

அழகான பாடல் அம்மா இன்றைய தினத்திற்கு.

என்ன அழகான வார்த்தைகள்!

என் அம்மாவிற்கு என் மனம் நிறைந்த அன்னையர் தின வாழ்த்துகள்!

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

கடைசியில் சொல்லியிருப்பது போல நம் எல்லோருக்கும் சக்தி தரும் அந்த சக்தி இல்லை என்றால் நாம் எல்லாம் ஏது? அவள் மனம் கனிந்துஇரங்கி எல்லோரையும் ரட்சித்திட வேண்டும்.

கீதா

Kamala Hariharan said...

வணக்கம் சகோதரி

பதிவு அருமை. உங்களுக்கு என் இனிதான அன்னையர் தின வாழ்த்துகள். அம்மாவின் மேன்மையான குணங்களைப்பற்றி அழகாக சொல்லியுள்ளீர்கள். நாம் கற்றதுதானே,நாம் கற்பிக்கும் போதும் வெளிவரும். இது நம் மனதோடு ஒன்றிப் போனவை. எனக்கும் நீங்கள் பகிர்ந்த பாடல் அடிக்கடி கேட்கும் போது மனதை கனமாக்கும். நீங்கள் அந்தப்பாடலை கேட்டவுடன், உங்கள் அம்மாவிடம் வந்து அழுது விடுவீர்கள் எனும் போது என் கண்களும் குளமானது.

எங்கள் அம்மா என்னுடன் (சென்னையில்) தங்கி விட்டு தங்கள் ஊருக்கு (திருநெல்வேலி) செல்லும் செல்லும் போது அன்று காலையிலிருந்தே என் மனம் இனம் புரியாத ஒரு துயரத்தில் ஆழ்ந்து விடும். இயல்பாக அன்று முழுவதும் வேலைகளை கைகள் செய்தாலும், மாலை அவர்களை ரயில் ஏற்றி விட்டு வந்த பின்,இரவு தலையணையை கண்ணீரில் நனைத்து விடுவேன்.மனதுக்குள் இந்தப்பாடல் வேறு ஒலித்து மன பாரத்தை கண்ணீராக வெளியேற்றும். என்னவோ சகோதரி.. இன்று அந்தப்பாடலை படித்ததும், நானும் என் அன்னையின் நினைவாக என் மன பாரங்களை உங்கள் பதிவிலும் ஒரு பதிவாக இறக்கி விட்டேன். மன்னிக்கவும். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் சின்ன கீதாமா,

என்றும் நலமுடன் இருக்க ஆசிகள். நம்மை உலகுக்கு அறிமுகம் செய்து வைத்து நம் வளர்சசிக்கு வித்திட்டவர் நம் அன்னை.

சில சமயம் அம்மா ஏன் என்னைப் பொறுமையாக இருக்கும்படி வைத்தார் என்று வருத்தமாக இருக்கும்.
இப்பொழுது பின்னோக்கிப் பார்ககும் போது அவள் செய்தது தான் சரி, என்னை ஒரு கட்டுக்குள்
வைத்திருந்த முடிவு அது.,என்று உணர்கிறேன்.
திடமும் பொறுமையும் மட்டுமே நம்மைச்சரியான பாதையில் செலுத்தும். நன்றாக நலமுடன் இருங்கள் கீதா. இறைவன் நம்முடன்.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கமலாமா,
அச்சோ உங்களை வருத்தப் பட வைத்ததா? அந்தப் பாடலை எழுதும் போதே நான்
அழுதுவிட்டேன்:(

எந்தக் கைகள் இந்தப் பாடலை எழுதியதோ..... அத்தனையும் உண்மை அல்லவா!

நம் வயிறு பார்த்து உணவளித்தவள் ஒரு சுடு சொல் சொல்லி இருப்பாளா? அவளின் கடைசி நாளன்று கூட, கொஞ்சம்
பால் சாப்பிட்டு போ என்று சொல்லும் மனம் அன்னைக்கு மட்டுமே இருந்தது.

வருந்தாதீர்கள் அம்மா. நாம் ஒருவருக்கு ஒருவர் அன்புடன் அருமையுடன் இருப்போம்.
அன்னையர்தினம் செழிக்கட்டும்.
நம் செல்வங்களும் அவர்கள் பெற்ற செல்வங்களும்வளமோடு இருக்கட்டும்.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கீதாமா, நீங்களும கணவரும் மகனும் மேலும் மேலும் நலம் பெறவேண்டும் நன்மையே விளையும்.

ஸ்ரீராம். said...

அன்னையின் அருமையை விளக்க இதைவிட சிறந்த பாடல் வேறுண்டோ...  டி எம் எஸ் அவர்களும் தன் குரலினால் இந்தப் பாடலுக்கு உயிரூட்டி இருப்பார்.

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் ஸ்ரீராம்.
எத்தனையோ புண்ணியம் செய்துதான்
அன்னையின் வழி பிறக்கிறோம்.
இந்தப் பாடலை எழுதியது மருதகாசியா,
கா.மு.ஷெரீஃபா என்று நிச்சயமாகத் தெரியவில்லை.

திண்டுக்கல் தனபாலன் said...

அருமையான பாடல்... எப்போது கேட்டாலும் கண்ணீரை வரவழைக்கும்...

Geetha Sambasivam said...

அருமையான பாடல். அம்மாவின் கடைசிக்காலங்களில் என்ன நினைத்தார்/என்ன பேச விரும்பினார் என்பதே தெரியாமல் போய்விட்டது. இத்தனைக்கும் 3 மாதங்கள் தான் படுத்த படுக்கை! முதலில் எல்லாம் தெளிவாய்ப் பேசினார். பின்னால் எல்லாம் குறைந்துவிட்டது. மனதில்/உடலில் எத்தனை வேதனைகள் அனுபவித்தாரோ! இந்தப் பாடல் எப்போவுமே கண்ணீர் வர வைக்கும். இப்போதும். நல்லதொரு தேர்வு அன்னையர் தினத்துக்காக. எல்லோருக்கும் அவங்க அம்மா நினைவு வராமலே போகாது.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் தனபாலன் ,
வளமுடன் இருங்கள்.
அன்னை தந்தை நம்மை விட்டுப் பிரியவே
மாட்டார்கள் என்று நம்பிய காலம் ஒன்றுண்டு.
அப்படி எல்லாம் பாக்கியம் செய்திருந்தால் நடக்கும்.
உங்கள் வீட்டில் இருக்கும் அன்னையர்க்கும் என் மனம் நிறை வாழ்த்துக்கள்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கீதாமா,
வாழ்த்துக்கள் மா.
உங்கள் தாயை நினைக்கும் போது இன்னும் வேதனையாகிறது,.
இந்த மாதிரிப் படுக்கையில் கிடப்பது அவர்கள் எல்லாம்
அனுபவித்த கொடுமை.
அம்மா அதை இறப்பதற்குக் கொஞ்ச காலம் முன்னாலேயே
அனுபவித்து விட்டாள்.
அக்ஷ்ய திரிதியை தான் அவள் சுய நினைவோடு இருந்த
நாள். செய்யும் கார்யங்களை ஏதோ ஒரு
யந்திரம் போலச் செய்து பேசி,
இது நம் அம்மா தானா என்று ஏங்க வைத்து விட்டாள்.
அந்த நிலையிலும் நீ சாப்பிட்டியான்னு கேட்க மறக்கவில்லை.

ஆறுதலை நாமே தேடிக்கொள்ள வேண்டியதுதான் அம்மா.
உங்கள் மகள் ,மருமகளுக்கு அன்பு வாழ்த்துகள்.

வெங்கட் நாகராஜ் said...

அன்னையர் தினத்திற்கு தகுந்த பதிவு. சிறப்பாக எழுதி இருக்கிறீர்கள் அம்மா.

எந்தப் பிரச்சனை என்றாலும் அம்மாவை நாடுவது தான் பலருக்கும் வழக்கம். அவரிடம் சொல்லி விட்டால் எல்லா துயரங்களும் தீர்ந்தது போல ஒரு சுகம்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு வெங்கட் நன்றி மா.

என் நிலைமை ஸ்திரப்பட்டதும்
அம்மாவுக்கு புடவை, புத்தகங்கள் என்று வாங்கிக்
கொடுக்க முடிந்தது.
அப்பொழுதும் கடிந்து கொள்ளாமல் சொல்வார்.
உன் தம்பிகள் இருக்கும் போது
இது போல ஆடம்பரம் வேண்டாம்.''
என்பார். மற்றவர்கள் நோகக் கூடாது என்பதில்
அவ்வளவு கவனம்.

நீங்களும் தாய் தந்தையரும் , ஆதி,ரோஷ்ணி அனைவரும் எப்போதும் நலமாக இருக்கணும் மா.

மாதேவி said...

'அன்னையைப் போல் ஒரு தெய்வம்....' சிரம் தாழ்த்தி வணங்குவோம்.
அனைவருக்கும் அன்னையர் தின வாழ்த்துகள்.

கோமதி அரசு said...

மிக அருமையான பதிவு .

பாடல் மிகவும் பிடித்த பாடல். எப்போது கேட்டாலும் கண்ணில் நீர் வரும்.

அன்னையர் தின வாழ்த்துக்கள்.

குழந்தைக்கு எப்போதும் தாயின் மடி வேண்டும் என்பது போல் சோகத்தை பகிர்ந்து கொள்ள தாய் வேண்டும்.

மௌனம்...