மனதில் எழுந்த சங்கடத்தை அடக்கிக் கொண்டு
வெளியே வந்த சுந்தரி அத்தை என்ன செய்வது என்று தெரியாமல்
வாசல் நாற்காலியில் உட்கார
வண்டி வரும் சத்தம் கேட்டது.
''ஐய்யா வராருங்க'' என்ற படி வாசல் கேட்டைத் திறந்தான்
கோபாலு.
ஏதோ பயம் தோன்ற வரும் தம்பியைப் பார்த்தாள்
சுந்தரி.
''என்னக்கா வெளியில உட்கார்ந்திருக்கே?"
என்று வினவியபடி வந்தவன் முகத்தில்
களைப்பு.
''ஏதாவது சாப்பிடுடா. பிறகு பேசலாம்.
ஏன் இந்த நேரத்தில் திரும்பி விட்டாய்.? ஆனாலும் மிக அலைச்சல்
உனக்கு"
என்றபடி இருவரும் உள்ளே நுழைய
இந்த சத்தத்தில் மெதுவாகக் கதவைத் திறந்து
கொண்டு மாலாவும் அவள் தோழனும் வெளியே
வந்தார்கள்.
கணபதி முகத்தில் ஒன்றும் உணர்ச்சி தெரியவில்லை.
யாரும்மா உன் ஃப்ரண்டா.?
என்றபடி, 'அக்கா இதோ வரென் ''என்றபடி,
உள்ளே குளிக்கச் சென்று விட்டான்.
இன்னதென்று தெரியாத குழப்பம் சுந்தரி மனதில்.
மாலாவின் பரிகாசமான புன்னகையை
வாங்கிக் கொள்ள சக்தி இல்லை.
சட்டென்று எழுந்தவள் ,பங்காருவை அழைத்து அவளிடம்
தான் வாங்கி வந்த பலகாரங்களைக் கொடுத்துவிட்டு,
ஐய்யாவை எனக்கு ஃபோன் பண்ணச் சொல்லு.
பிறகு பார்க்கலாம் என்றபடி திரும்பியவள் கண்ணில்
கணபதியின் மனைவியின் படம் பட்டது.
நீயே உன் குடும்பத்தைப் பார்த்துக் கொள்'
என்று வேண்டியபடி வெளியே இறங்கி நடந்து
விட்டாள்.
பஸ் டெர்மினசில் 41 ஆம் நம்பர் பஸ்ஸில் ஏறி உட்கார்ந்ததும் தான்
தன் கண்கள் நீர் வடிப்பதை உணர முடிந்தது.
எதற்காக இந்தப் பாசம்.
யார் வாழ்க்கைக்கு யார் பொறுப்பு.
கணபதிக்கு 47 வயதில் இந்த சோகம் வேண்டாம் தான்.
அதற்காக அவனால் ,தாயில்லாத குழந்தைகளை
விட்டுக் கொடுப்பானா. ஏதோ சமாளிப்பான்.
இந்தக் காலம் எல்லோரும் எல்லாவற்றையும்
புரிந்தே செய்கிறார்கள்.
தான் ஒரு பழங்காலப் பெண்மணி.
இனி கணபதி ,தொலைபேசினால் பார்த்துக்
கொள்ளலாம்.
கைப்பையைத் திறந்து கந்த சஷ்டி கவசத்தைப்
படிக்க ஆரம்பித்தாள்.
வீட்டுக்கு வந்து ,கணவரிடமும் ,மாமியாரிடமும் சொல்லி
அரற்றினாள்.
''இனிமே காலம் இப்படித்தான். நீ மனசைத் தேற்றிக் கொள்''
யாருக்கு யார் பொறுப்பு' என்று தேற்றினார் மாமியார்.
கணவர் அதிகம் சொல்ல வில்லை.
இரண்டு நாட்களில் கணபதியிடம் இருந்து
ஃபோன் வந்தது. ''அக்கா, பெரியவளுக்குத் திருமணம்
நடக்கப் போகிறது. எதிராஜ மண்டபத்தில்
நீயும் அத்திம்பேரும் வந்து நடத்திக் கொடுக்கணும்.
அடுத்த இரண்டு மாதங்களில்
மாலாவுக்கும் அர்ஜுனுக்கும் அவர்கள் வீட்டு முறைப்படி
திருமணம்.
படிப்பு முடியாத நேரத்தில் ஏன் இவ்வளவு அவசரம் என்று கேட்காதே.
புரிந்து கொள்வாய் நு நினைக்கிறேன்.
நம் காலம் இல்லை இது.
எனக்கு சக்தி இல்லை.
என் மாமனார் மாமியார் வந்திருந்து நடத்தப் போகிறார்கள்.''
என்று சொன்னவன் குரலில் மகிழ்ச்சியை விட விரக்தி தான் தெரிந்தது.
சுந்தரிக்குத் தன் பாசங்களை இந்த நாளில்
நினைத்து நடத்த முடியாது என்று புரிந்தது.
20 வருடங்களுக்கு முன் காலம் சென்ற அத்தைக்காக
இந்த நாளில் இத்தனை பாடு பட்டிருக்க வேண்டாம்.
அன்பு கூடத் தேவையானால் தான் கொடுக்கலாம் .
அனாவசியமாக நம் பாசத்தை வேண்டாதவர்களிடம்
காண்பிக்க வேண்டாம்.
இனி நாம் எச்சரிக்கையுடன் இருக்கலாம் என்று
மனதில் தெளிவுடன் இருக்க ஆரம்பித்தாள்.
சம்பவம் நடந்த காலம், நகரம் எல்லாம் வேறு..
நடந்தது உண்மை.
திருமணங்களுக்கு அவர்கள் சென்று வந்தார்கள்.
மாலாவின் திருமணத்துக்கு ஏன் அவசரம் என்பது
பிறகே தெரிந்தது.
அவள் கருவுற்றதால் ,சீக்கிரத் திருமணம்.
இன்னும் அவர்கள் வாழ்க்கையில் ஸ்திரமாகத் தான்
இருக்கிறார்கள்.
லீலா குட்டி மத்திரம் இன்னும்
மெயில் தொடர்பில்.அமெரிக்க கலிஃபோர்னியாவில்
கல்லூரி ப்ரொஃபெசராக வேலை .
56 வயதில் நல்ல குடும்பப் பெண்ணாகவும்
இருக்கிறாள்.
கணபதிதான் பாவம். டிமென்ஷியா வந்து
17 வருடங்களுக்கு முன் இறைவனடி
அடைந்தான்.
கதை தெளிவாகச் சொல்லி இருக்கிறேன் என்று நம்புகிறேன்.
5 comments:
அன்பு , அரவணைப்பும் தேவை படுவோர் நிறைய இருக்கிறார்கள். அவர்களுக்கு கொடுத்து மன நிறைவுடன் இருக்கலாம் அக்கா.
அன்பை விரும்பாதவர்களுக்கும் நாம் அன்பை கொடுப்போம்.
அவர்களிடம் எதையும் எதிர்பார்க்காமல்.
என் அம்மா ஒன்று சொல்வார்கள் அடிக்கடி
''செய்யாதவர்களுக்கு செய்து காட்டவேண்டும்"
அன்பு செலுத்த தெரியாதவர்களுக்கும் அன்பு காட்டுவோம். அவர்கள் ஏற்றுக் கொண்டாலும் ஏற்று கொள்ளவில்லையென்றாலும்.
அத்தை கதை நிறைய நினைவுகளை கொடுத்தது. உறவே இல்லாத சந்தன அத்தை, உறவான தென்காசி அத்தை ,அக்கம்பக்கத்து அத்தைகள் என்று எவ்வளவு நம் வாழ்வில் பார்த்து இருக்கிறோம்.
இந்தக் கால குழந்தைகள் இழந்தவைகள் நிறைய.
இப்போது கொரோனாவேறு அக்கம் பக்கம் உறவையும், நம் சொந்த உறவுகளையும் தள்ளி வைக்கிறது.
நிலமை மாறி எல்லோரும் அன்பு , நேசத்தோடு வாழ வாழ்த்துக்கள்.
அருமையான அனுபவக்கதை.
உண்மை தான். குடும்பத்தைத் தவிர வேறெதுவும்
தெரியாத காலத்தில் மனம் குறுகி இருந்தது. இப்போது
இணையத்துக்கு வந்து உறவல்லாத எல்லோரிடமும்
பழக ஆரம்பித்ததில் விசால நோக்கும் கிடைக்கிறது.
அன்புக்கு ஏங்கித் தேடுபவர்கள் எத்தனையோ.
தோழி சுந்தரியின் கதை என்னை விட சிறிய உலகம்.
அவள் அப்போது தவித்தது நன்றாகவே
தெரியும்.
தன் குடும்பம் என்று அவள் எடுத்துக் கொண்ட உறவு
அவளை,அவன் அன்பை மதிக்கவில்லை என்றே வருத்தம்.
விட்டுக் கொடுத்து வளர்ப்பது அன்பு என்பதுதான்
இப்போதைய நிலை.
தொற்று அதிகரித்துத் தொடுவதே இல்லாமல்
போகும் காலம் மனதளவிலாவது
அன்பைப் பேண வேண்டும்.
அருமையான கருத்துக்கு மிக நன்றி மா.
வாழ்க வளமுடன்.
எனக்கெல்லாம் "அத்தை" ஒரே ஒருத்தர் இருந்தாலும் அதிகம் பழக்கம் இல்லை. அப்பாவை விடப் பல வயது பெரியவர். அத்தையின் மூத்த மகன் என் அப்பாவை விடப் பெரியவர் என்பதால் அத்தை என்றால் எங்களுக்கெல்லாம் ஏதோ பெரியவங்க என்னும் எண்ணமே! வயது வித்தியாசம் காரணமாகவோ என்னமோ அதிகம் பழகவும் இல்லை. என்றாலும் நான் ஒரு அத்தையாக என் அண்ணா/தம்பி குழந்தைகளுடன் நெருங்கிப் பழகி வருகிறேன். அதே போல் என் குழந்தைகளும் அவங்க அத்தைகளோடு பழகுவார்கள்.
அன்பு காட்டி மோசம் போனதில் நானும் ஒருத்தி. அதிலும் சிறிதும் தகுதி இல்லாதவர்களுக்கு அன்பு காட்டி/விழுந்து விழுந்து செய்து! அவங்க நம்மோடு நன்றாய்ப் பேசுகிறார்கள் என்பதில் ஏமாந்து/அவங்க நம்ம முதுகுக்குப் பின்னால் வெட்டும் குழியைத் தெரிந்து கொள்ளாமல்/கடைசி நிமிஷத்தில் சுதாரித்துக் கொண்டு என எல்லாமும் நடந்திருக்கிறது. நல்லவேளையாக இந்த அத்தை சுதாரித்துக் கொண்டார். எல்லோரும் நன்றாக இருக்கட்டும். நன்றாக இருப்பதில் சந்தோஷமும் கூட. அதிலும் மாலதியும்/அர்ஜுனனும் ஸ்திரமாக இருப்பதில் சந்தோஷம்.
Post a Comment