Blog Archive
Wednesday, June 30, 2021
Tuesday, June 29, 2021
Monday, June 28, 2021
அறநீர் - சிறுகதை எழுதியவர் விழியன் என்னும் உமாநாத்.
அன்பின் தங்கை சுபா,
அனுப்பிய சிறுகதை.
வலைப் பதிவாளர்களுக்குப் பழகிய நண்பர்.
விழியன் என்னும் உமாநாத்.
நன்றி சுபா.
[5:18 AM, 6/28/2021] Subha.: இன்று ஒரு குட்டி கதை
படித்ததில் நெகிழ்ந்தது:
அருமை கொண்ட சிறு கதை
அறநீர் - சிறுகதை
அப்பாவிற்கு ஆரம்பத்தில் இருந்தே இந்த வேலை பிடிக்கவில்லை.
பன்னிரெண்டாம் வகுப்பு முடித்த போது நான் நர்ஸிங்கில் சேருகின்றேன் என்ற போது கடுமையாக எதிர்த்தார்.
எனக்கு அந்த சேவை மீது அளப்பறிய ஆவல் இருந்தது. அதே போல, கிட்டத்தட்ட அதே போல இப்போது இந்த வேலை. சைக்காலஜியில் முதுகலை பெற்றிருந்தேன் அந்த சமயம் தான் இந்த நிறுவனத்தில் இருந்து பணிக்கு அழைத்தார்கள். பணி என்றாலும் இது ஒரு சமூகத்திற்கான சேவை தான்.
“தி சர்வீஸ்” என்ற நிறுவனம் அது. முழுக்க முழுக்க சேவை மனப்பான்மை கொண்ட நிறுவனமா அல்லது லாப நோக்கத்தில் செயல்படும் நிறுவனமா என்று என்னால் கணிக்க இயலவில்லை.
பீடிகை இல்லாமல் அது என்ன நிறுவனம் எனச் சொல்லிவிடுகிறேன். வயதானவர்களை இந்தியாவில் விட்டுவிட்டு அயல்நாடுகளுக்கு செல்பவர்கள் பயன்படுத்தும் சேவை இது. எங்கள் நிறுவனத்தில் வயதானவர்களுக்கான சகல சேவைகளும் உண்டு.
ஈமெயிலில் தங்கள் தந்தை/தாயின் தகவல்கள், வீட்டு முகவரி ஆகியவற்றை கொடுத்துவிடுவார்கள்.
நாங்கள் தினமும் அவர்களை கவனித்துக்கொள்ள வேண்டும்.
தினசரிகளை அவர்களே கவனித்துக்கொள்வார்கள். அவர்களுக்கான Emotional Balance ஐ கொடுக்கும் பணியில் தான் நான் அமர்த்தப்பட்டேன்.
இறுக்கமாக இருக்கும் அவர்களிடம் பேச வேண்டும்.
ஒவ்வொரு வீட்டிலும் சுமார் ஒரு மணி நேரம் இருந்தால் போதும்.
மாலை அலுவலகம் திரும்பி அன்று சந்தித்த நபர்கள், அவர்களின் நிலை பற்றி சின்ன அறிக்கையை அலுவலகத்தில் கொடுத்துவிட வேண்டும்.
இந்த சேவை என்று மட்டுமல்ல அவர்களுக்கு உடல்நல கவனிப்புகள், இதர சேவைகள் (வெளியே சென்று பில் கட்டுதல்) ஆகியவையும் எங்கள் நிறுவனத்தில் உண்டு.
வாரத்தில் ஒருமுறை அவர்களின் பிள்ளைகளுக்கு பெற்றோர்களின் நிலை அனுப்பப்படும். எந்தெந்த சேவை தேவையோ அதற்கு ஏற்றார்போல பணம்.
ஆரம்ப நாட்களில் மிகவும் செயற்கைத்தனமாக இருந்தது. அவர்களிடம் செயற்கையாக நலம் விசாரிப்புகள். ஆனால் ஒரு வாரத்திலேயே ஒருவித நெருக்கம் எல்லா பெரியோர்களிடமும் ஏற்பட்டுவிட்டது.
ஒதுக்கப்பட்டது என்னவோ ஒரு மணி நேரம் தான் ஆனாலும் கணக்கு வழக்கில்லாமல் அவர்களிடன் செலவழிக்க ஆரம்பித்தேன். அவர்களின் விருப்பங்கள் விசித்திரமாகவே இருக்கும் ஆனால் மிக மிக எளிதானவை தான்.
தாமோதரன் சாருக்கு அவருடன் வாக்கிங் போக வேண்டும்.
சரஸ்வதி அம்மாவிற்கு அவர்களுடன் சில நிமிடங்களாவது தாயம் ஆட வேண்டும்.
மோசஸ் தம்பதிக்கு அன்றைய அரசியல் செய்திகளைப்பற்றி பேசிவிடவேண்டும்.
சின்னச்சின்ன ஆசைகள் தான். சைக்காலஜி படித்திருந்ததால் பேசியே அவர்களின் ஆசைகளை கேட்டுவிடுவேன்.
ஆனால் நாயர் சார் மட்டும் இதுவரைக்கும் எதுவே கேட்டதில்லை. கேட்ட கேள்விக்கு கூட பதில் சொல்லமாட்டார். எங்களுக்கு ஏற்கனவே பயிற்சி கொடுத்திருந்தார்கள். பெரியவர்கள் காட்டமாக நடந்துகொள்வார்கள் ஆனாலும் பொறுமையாக இருக்க வேண்டும் என்று.
நாயரின் மனநிலையை என்னால் புரிந்துகொள்ள முடிந்தது.
வழக்கமாக செல்லும் நேரத்தில் எனக்காக டீ மட்டும் போட்டுவைத்து மேஜையில் எனக்காக அமர்ந்திருப்பார்.
பெரும்பாலான நேரங்கள் தன் மனைவியின் புகைப்படத்தின் முன்னர் அமர்ந்து இருப்பார். எனக்கு இது வேண்டும் அது வேண்டும் என்று கேட்டதில்லை. அவர் பேசினால் அது அனேகமாக கொஞ்சம் மலையாளம் கலந்த தமிழில் தான் இருக்கும் என்பது என் யூகம்.
அவர்கள் முன் மகிழ்வாக இருந்தாலும், அலுவலகம் திரும்பி ஒவ்வொருத்தர் பற்றிய குறிப்புகள் எழுதும்போது கண்ணீரும் கோபமும் நிச்சயம் வந்துவிடும்.
ஆயிரம் ஆயிரம் கேள்விகள் அவர்கள் பிள்ளைகள் மீது எழும். ஆனால் அவர்கள் தங்கள் குழந்தைகளை குற்றவாளி கூண்டில் நிறுத்துவதே இல்லை. “அவர்கள் வாழ்கையை அவர்கள் வாழ்கின்றார்கள்” என்ற தொனியிலேயே அவர்கள் பேசுகிறார்கள். அதுவும் சரி தான் என்றும் தோன்றும்.
சாந்தா என்னுடைய ஜூனியர். நானும் அவளும் வாரத்திற்கு மூன்று முறையேனும் யாராவது கதையைச் சொல்லி அழுதுவிடுவோம்.
மெல்ல மெல்ல எனக்கு வெளிநாடு மீது வெறுப்பும் வராமல் இருக்கவில்லை.
அப்பா தீவிரமாக வரன்களை தேடிக்கொண்டு இருந்தார். அவருக்கு மிகுந்த கோபம் என்மீது. கைகூடிவந்த ஒரு வரனை நான் நிராகரித்துவிட்டேன்.
காரணம் மாப்பிள்ளை போனில் சொன்ன தகவல் தான். “ ரெண்டு பேரும் பாரின் போய் செட்டிலாகிடலாம். நிம்மதியா காசு பார்க்கலாம்” என்பதுதான்.
வாழ்க்கை கவிதைப்போல ஓடிக்கொண்டிருந்தது,
ஒரு நாள் மொத்த உலகமும் ஸ்தம்பிக்கும்படியான செய்தி வந்தது. சைக்கிளில் சென்ற அப்பா விபத்தினை சந்தித்தார். ICUவில் சேர்த்துவிட்டார்கள். டாக்டர்கள்
எங்கே அடி என்ன ஆனது என்றும் சொல்லவில்லை. யாரையும் பார்க்கவும் அனுமதிக்கவில்லை.
வரன் பார்க்கத்தான் எங்கோ போயிருக்கார். அவர் பையில் இருந்த மாப்பிள்ளை போட்டோகள் அதையே காட்டியது.
அலுவலகத்திற்கு தகவல் சொல்லிவிட்டேன். கையில் இருந்த மொத்த காசும் கட்டிவிட்டேன்.
மருத்துவமனையில் சேர்த்த இரண்டு மணி நேரத்தில் நான் கவனித்துக்கொள்ளும் பெரியவர்கள் எல்லோருமே மருத்துவமனைக்கு வந்துவிட்டர்கள். இதனை நான் எதிர்பார்க்கவேயில்லை.
அலுவலகத்திற்கு செய்தி சொன்னதும் அவர்கள் இன்று நான் வீட்டிற்கு நேரடியாக வர இயலாது என தகவல் சொல்லி இருக்கின்றார்கள். எல்லோரும் மருத்துவமனை விலாசம் கேட்டுவிட்டு வந்துவிட்டார்கள்.
ஒரு சுவாரஸ்யம் என்னவெனில் வந்திருந்தவர்கள் ஒவ்வொருவரும் மற்றவர்களுக்கு அறிமுகம் இல்லாதவர்கள் தான்.
அவர்களை இணைக்கும் இரண்டு புள்ளிகள். ஒன்று முதுமை மற்றொன்று நான். ICU வாசலில் ஒருத்தருக்கு இவ்வளவு பேரா என விரட்டிவிட்டார்கள். எல்லோரையும் எல்லோருக்கும் அறிமுகம் செய்துவைத்தேன்.
சரஸ்வதி அம்மா ஒரு ப்ளாஸ்கில் டீ எடுத்து வந்திருந்தார். ஆனால் அவர் இத்தனைப்பேரை எதிர்பார்க்கவில்லை.
அவர்கள் எல்லோரும் எளிதில் நண்பர்களாகிவிட்டார்கள். தங்கள் கதைகளையும் மருத்துவமனை அனுபவங்களையும் பேச ஆரம்பித்துவிட்டார்கள். தோள் மீது கைப்போட்டு கல்லூரி நண்பர்களைப்போல தாமோதரன் சாரும் மோசஸ் சாரும் பேசுவதை பார்த்ததே மனதிற்கு இதமாக இருந்தது. மருந்து மாத்திரைகள் பழக்கப்பட்டு இருந்தாலும் இந்த ஆஸ்பிட்டல் வாசம் ஏனோ பிடிக்கவே இல்லை.
மாலையில் தான் நாயர் சார் வந்தார். என்னிடம் என்ன விபத்து என்றெல்லாம் விசாரிக்கவில்லை. நேராக முதன்மை டாக்டர் அறைக்குச் சென்றார். அன்று தான் நாயர் ஒரு டாக்டர் என்ற விஷயம் தெரியும். ரிப்போர்ட்டுகளை பலவந்தமாக பேசி வாங்கி எல்லா டாக்டர்களுக்கு டோஸ்விட்டார். ஏதோ சொதப்பி இருக்கின்றார்கள். உடனே ICU பரபரப்பானது. என்னிடம் வந்து “ஆப்பரேஷன் உடனடியா செய்யனும் ஐம்பதாயிரம் கட்டுங்க” என்று சொல்லிவிட்டனர். கையிருப்பு தீர்ந்துவிட்டது.
அலுவலகத்தில் கேட்டதற்கு பெரிய ப்ராசஸஸ், இன்று கிடைக்காது என சொல்லிவிட்டார்கள். தோழிகளுக்கு ஃபோன் அடிப்பதற்குள் சரஸ்வதி அம்மா பில்லை பிடிங்கி பணம்கட்டச்சென்றார்.
“நாளைக்கு பணம் வந்ததும் கொடுத்திட்றேம்மா”
“நான் கேட்டேனா?” என்றார் புன்னகைத்தபடியே.
அந்த நொடி தான் உடைந்து போனேன். ஆஸ்பிட்டலில் மனங்களின் மனதினை கமழ்வதை நுகர்ந்தேன். எதற்காக இந்த வேகமான ஓட்டம் என்றே புரியவில்லை. எதனை எதிர்பார்க்கின்றது மனது? இன்னொரு அதிர்ச்சி காத்துக்கொண்டிருந்தது.
உடனடி ஆப்பரேஷன் என்பதால் உடனடியாக ரத்தம் தேவை என்று சொல்லிவிட்டார்கள். ரத்தம் கொடுத்தது நாயர் சார் தான். ரத்தம் கொடுத்தவர் மெல்ல நிதானமாக வெளியே வந்தார். காபி வாங்கிச்சென்றேன். வராண்டாவில் அமர்ந்தார். அருகினில் அமர்ந்தேன்.
அவர் என் கைகளைப் பற்றி
“காலையிலயே, இந்த அப்பாகிட்ட ஒரு வார்த்தை சொல்லி இருக்கலாமில்ல”
வழிந்தோடியது அறநீர்..
(குழந்தைகளுக்கான எழுத்தாளர்- விழியன் அவர்கள் எழுதியது.)
பயணம் செய்யும் நாட்களுக்கு:)
2015 என்று நினைக்கிறேன். சூரிக் விமான நிலையத்தில்
எஸ்கலேட்டரில் விழுந்து தலை அடிபட்டதில்
இருந்து
மீண்டும் அதில் ஏறி மேல் தளத்துக்கு செல்வதில்
அபரிமிதமான பயம் இருந்தது.
அங்கே என் வார்த்தையை மகன் மட்டும் நம்பினான்.
உடனே இரண்டு வலி மருந்துகள் கொடுத்து
சிகாகோ வந்து சேர்ந்தோம்..
இங்கே ஸ்கான் செய்து, பெரிய பாதிப்பு இல்லை என்றாலும்
மூன்று மாதங்கள் திரும்பக் கூட முடியாமல்
இடுப்புப்
பகுதி வலித்தது இன்னும் நினைவில்.
இப்போதுதான் பயணங்களே இல்லையே.
கடைக்கும் போவதில்லை.
பார்க்கலாம் எத்தனை நாட்கள்
இப்படிச் செல்கிறது என்று.:_))))))))
Saturday, June 26, 2021
ராஜாவின் பாடல்கள் தொடரும்.
ஏ.எம் ராஜா ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்தவர்
என்பதே எனக்கு வியப்பாக இருந்தது.
அவர் மனைவி ஜிக்கியின் குரலில் தமிழ் நல்
உச்சரிப்புடன் வெளிவந்தது.
பல மொழிகளிலும் பாடி இருக்கிறார்கள்.
விக்கி பீடியாவில் நிறைய செய்திகள் இன்று
படித்தேன். அவர் ஒரு பட்டதாரி என்பதெல்லாம்
தெரியாது.
ராஜாவின் இசை அமைப்பில் ஜிக்கியும் அவரும் சேர்ந்து பாடிய
பாடல்கள் எப்பொழுதும் இனிமை.
ஜிக்கி அவர்கள் தனியாகப்
பாடிப் பிரபலமான பாடல்களும் நிறைய இருக்கின்றன.
Friday, June 25, 2021
ஏ எம் ராஜா , சுசீலா அம்மா பாடல்கள்.
ஏ.எம் . ராஜா பாடல்களில் டைரக்டர் ஸ்ரீதர்
படங்கள் மெருகேற்றிய வண்ணங்களில்
மின்னின.
ராஜாவும் ஜிக்கியும் சேர்ந்த பாடல்கள்
மிகப் பிரபலம் அடைந்தன.
மல்லிகா,அவன், ஆசை என்று வரிசையாகப்
படங்கள்.
எல்லாமே ஜெமினிகணேசன் பத்மினி
சேர்ந்து நடித்த திரைப்படங்கள்.இந்தித் திரைப்பட நாயகன் திரு ராஜ்கபூர் அவர்களால் அழைக்கப்
பட்டு, அவருடைய இந்தப் பாடல்களைத் தமிழ் தெலுங்கில் பாடியதாக
நினைவு.
அவருடைய சம்சாரம் படப்பாடல்,மீண்ட சொர்கம்படத்தின்
துயிலாத பெண்
ஒன்று கண்டேன். இவற்றுடன் 'செந்தாமரையே செந்தேன் மலரே'
இவை எல்லாம் மிகச் சிறந்த பாடல்.
'
பிறகு ''எதிர்பாராதது'' வந்தது.
ராஜாவின் இசையில் இந்திப்பட டியூன் இருக்கும்.
கல்யாண பரிசு ஒரிஜினல் இசை.
கல்யாணப் பரிசு என்று எழுதக் கூடாது.
ஏழு எழுத்துகள் தான் ஒரு படத்தின் பெயருக்கு
இருக்க வேண்டும். இதெல்லாம் அந்தக்கால 'பேசும் படம் 'பத்திரிக்கையில்
வந்த விஷயங்கள்.
பிறகு இந்த ஃபார்முலா மாறியதோ தெரியவில்லை. தேன் நிலவு,
விடிவெள்ளி, மீண்ட சொர்கம் என்று எத்தனையோ
பிரபலமான பாடல்கள்.முக்கியமாகத் "துயிலாத பெண் ஒன்று கண்டேன்."
எத்தனையோ வேண்டாத செய்திகள் வந்தாலும் அவர் குரலைக் கேட்கும்போது அதெல்லாம் மறந்து விடும்.
எல்லா நடிகர்களுக்கும் அவர் பின்னணி பாடி இருக்கிறார்.
ராஜாவுக்கு என்றும் தனி இடம் தான்.
Thursday, June 24, 2021
சிங்கம் பாடல்கள் சில....
வாழ்வின் சில நிகழ்ச்சிகள் அவரைப் பாதிக்கும் போது ஜிம் ரீவ்ஸ்
கேட்பார்.
பிறகு சந்தோஷம் தான்.
அவர் கேட்கும் பாடல்களிலிருந்து
அது என்ன என்று தெரியும்.
அதுவும் இல்லை என்றால்
என்னைப் பாடச் சொல்லி உறங்குவார்.
நல்ல மனிதருக்கு நன்றி.
Wednesday, June 23, 2021
Tuesday, June 22, 2021
முக்கால்மணி நேர கோர தாண்டவம்.
வல்லிசிம்ஹன்
நேற்று இரவு மறக்க முடியாத இரவானது. குளிர் முடிந்து
கோடையின் சூடு அதிகரித்ததுமே
மனதில் பயம் தேங்க ஆரம்பித்தது.
நல்ல மழை பெய்து தாகம் தணித்தால் தேவலை.
தந்தையர் தினக் கொண்டாட்டங்கள் முடிந்து
மிதமான மழையில் வீடு திரும்பியவர்களுக்கெல்லாம்
காத்திருந்து பதுங்கி இருந்தது கடும் சூறாவளி.
நஷ்டம் என்று பார்த்தால் சொத்துகள் அதிகம்.
உயிர் சேதம் இல்லை. இடிபாடுகளில் அடி பட்டவர்கள் ஆறு .
வீடிழந்தவர்களுக்கு எல்லோரும் தண்ணீர் உணவு
என்று கொண்டு போய்க் கொடுத்த வண்ணம் இருக்கிறார்கள்.
மனிதம் வாழ்க.
நான் மழை நிலவரத்தைப் பார்த்து விட்டு
உறங்கப் போனேன்.
நல்ல உறக்கம். மகள் அருகே வந்து நிற்கும் அதே நேரம்
கலவரமான சைரன் நீண்டு ஒலிக்க ஆரம்பித்தது.
'சரி ,அடித்தளத்துக்குப் போக வேண்டும் ,தண்ணீர் ,கைபேசி, மருந்து என்று நான் எடுக்க,
மகளும் பேரனும் என்னைக் கீழ்னிலைக்கு அழைத்துச் சென்றனர்.
இடிமழைக்கு இவ்வளவு சைரன் ஒலிக்க மாட்டார்களே
என்று யோசித்தேன்.
பேரன் டொர்னேடோ வார்னிங்க் பாட்டி
என்றதும் கலக்கம் வந்தது.
அதற்குள் தேவையான, படுக்கை, தண்ணீர், போர்வைகள்,
டார்ச் லைட்டுகள், முதலுதவிப் பெட்டி, தயாரித்த உணவு என்று
பசங்கள் கீழே எடுத்துக் கொண்டு வர,
மகள் அக்கம்பக்கத்தினரை
எழுப்பி செய்தியைச் சொல்ல அத்தனை பேரும்
அவரவர் பேஸ்மெண்டிற்கு செல்ல ஆரம்பித்தார்கள்.
முக்கால் மணி நேரம் என்று சொன்னார்கள். வெளியே
யாரோ, வானத்தைக் கிழித்துக் கங்கையைக் கொட்டுவது போல
மழை.
காற்று.
எப்போது முடியும் ,எப்படி முடியும் ஒன்றும் தெரியாத நிலையில்
இறைவனை வழிபடுவது ஒன்றே தெரிந்தது.
பயப்பாடாதே பாட்டி, இதுதான் பாதுகாப்பான் இடம்.
அப்படியே தூங்கு என்று பேரன் பக்கத்தில் உட்கார்ந்து
கொண்டான்.
மாப்பிள்ளை என்ன நடக்கிறது என்று கண்காணித்துக் கொண்டே
இருந்து,
நம்மைக் கடந்து விட்டது என்று சொல்ல ஒரு மணி நேரம்
பிடித்தது.
இறைவன் எப்படி எல்லாமோ காக்கிறான்.
அப்படி வல்ல காற்று எங்களின் அடுத்த டிவிஷனில்
வீசிச் சென்றிருக்கிறது.
அந்தப் படங்கள் மேலே.
அனைவரும் பத்திரமாக இருக்க அவனே துணை.
இன்னும் நடுக்கம் உடலை விட்டுப் போகவில்லை.
Monday, June 21, 2021
அன்புள்ள அப்பா
வல்லிசிம்ஹன்
தந்தையர் தினம்......
அனைவருக்கும் இனிமையான வாழ்க்கையைத் தரும்
உழைத்த, உழைத்துக் கொண்டிருக்கும், உழைக்கப்
போகும் தந்தைகளின் சிறப்பு நாம் உணர்ந்ததுதான்.
மகனோ மகளோ அந்த அருமையை
உணராமல் இருக்க முடியாது.
எங்கள் நாட்களில் தந்தையைத் தொட்டுப் பேச வேண்டும் என்றெல்லாம்
தோன்றியதில்லை.
மரியாதை. கடவுள் நேரில் வந்துவிட்ட உணர்வுதான்.
அப்பாக்களை அந்த உயரத்தில் வைக்க அம்மாவும் ஒரு காரணம்.
அவள் அவரைத் தெய்வமாக நினைத்தாள்.
அப்பா தன் தந்தை தாயைத் தெய்வமாகப்
பார்த்தார்.
அவர்கள் சொல்லை மீறிய வினாடி என்று
ஒன்று கூடக் கிடையாது.
தாத்தாவின் எதிரில் அப்பா உட்கார்ந்து கூடப்
பார்த்ததில்லை.
பாட்டியின் மனதில் என் அப்பாவும் சித்தப்பாவும்
ராமர் லக்ஷ்மணர்தான்.
அண்ணன் தம்பி இருவரும் ஒருவரை ஒருவர் நேசித்தனர்.
தாத்தா பாட்டி மறைவுக்குப் பிறகு இருவரிடமும்
பாசம் இன்னும் அதிகரித்தது.
சித்தப்பாவின் பச்சை இங்க் கடிதங்கள் இன்னும் நினைவில்!!
இருவரும் படித்தது பாளையங்கோட்டையில் தான்.
அந்த மாதிரி கையெழுத்தை ஆங்கிலத்திலோ தமிழிலோ
வேறெங்கும் பார்த்ததில்லை.
எங்கள் மாமா ராமசாமியும் அப்படித்தான் எழுதுவார்.
இத்தனை நல்ல ஆண்கள் இருந்த குடும்பத்தில்
வளர்ந்த என் தம்பிகளும் நல்ல தந்தைகள்
ஆனார்கள்.
இந்தத் தலைமுறைக்கு சித்தப்பா மகன்,
அவனுடைய மகன், எங்கள் பையர்கள்
எல்லோருமே நாணயமான முறையில் தங்கள் குடும்பத்தைக்
காத்து வருவார்கள்.
நல்ல விதைகள் நல்ல நாற்றுகள் நல்ல பயிர்கள்.
அனைவருமே இறைவன் அருளால் அளவில்லா
ஆரோக்கியத்துடனும் நீண்ட வாழ்வுடனும் செழிப்பாக
இருக்க வேண்டும்.
நம் இணையத் தந்தையர் அனைவருக்கும்
நல் வாழ்த்துகள். உங்களைக் கௌரவிப்பதால்
Friday, June 18, 2021
Thursday, June 17, 2021
| Ilakkanam Maarudho | Nizhal Nijamaagirathu | E...
மாயம் ,மாஜிக் என்ன ஒரு ஜாலம்,,, ஐயா உங்கள் குரலில்!!!!!
பாடகர் ஸ்ரீனிவாஸ், மகள் சரண்யா ஸ்ரீனிவாஸ்...இவர்கள் குரல்களில் என்ன ஒரு இனிமை!!!
மறக்க முடியாத பாடல்களைப்
புதுப்பித்துத் தரும் ஸுபஸ்ரீ தணிகாசலம் அவர்களுக்கு நன்றி.
மலேசியா வாசுதேவன், ஜானகி அம்மா குரல்களில் வரும் இசை வெள்ளம்
அடுத்த பாடலில்
நம்மை அடித்துச் செல்கிறது.
அடுத்து மூன்றாவது பாடல் ஒலிக்கவில்லை.
அதுவும்
மிக நல்ல பாடல். ந ஜியா லாகேனா. 'என்னால்
நீயில்லாமல் வாழ முடியாது.''
ஆனந்த் படப் பாடல்.
அதே நம் எஸ் பி பியின் குரலில்
தேன் வழிந்தோட 'நாஆஆஆன் எண்ணும் பொழுது'
என்று கேட்கும்போது உருகாமல் இருக்க முடியுமா.
Wednesday, June 16, 2021
தமிழ்ப் பாடல்கள் ஆங்கிலத்தில்
எங்கள் ப்ளாக் அரட்டையில் மேலெழும்பிய
பரிமாறல்களில் என் தேடல் தொடர்கிறது. இப்பொழுது
தமிழ்ப் பாடல்களின் ஆங்கில மொழிபெயர்ப்பு
நன்றாகவே இருக்கிறதோ?
6 வருடங்கள் முன் வந்த ஒரு மஹா பெரிய படத்தின் தமிழ் வரிகள்
கொச்சையாகவே இருந்தன.
அர்த்தம் தெரியாமல் பாடிய தோழியின் மகளிடம்
நீ இதே பாடலைத் தெலுங்கிலோ, இல்லை இந்தியிலோ
பாடு.
தமிழ் அர்த்தம் சரியில்லை என்று சொன்னதும் மாற்றிக்
கொண்டாள்.
Tuesday, June 15, 2021
நம்பிக்கை பூக்கும் தருணம் | Erode Kathir | நினைவலைகள் - 2
மீண்டும் மதுமிதா.
ஈரோடு கதிர் உடன் சந்திப்பு.
Saturday, June 12, 2021
சங்கடமான சமையலை விட்டு சங்கீதம் பாடப் போறேன்......
வல்லிசிம்ஹன்
வாட்ஸ் ஆப்பில் வந்த தகவல்
தம்பி முகுந்தன். உபயம்.
#குமுறல்
சமைக்குறதெல்லாம் பெரிய மேட்டரே இல்லை...
எது மேட்டர் தெரியுமா?
இன்னைக்கு சமைக்குறது; அப்புறம் நாளைக்கு சமைக்குறது; அப்புறம் நாளன்னைக்கு சமைக்குறது; சமைச்சுக் கிட்டே இருக்குறது.
ஒவ்வொரு நாளும் சமைக்கனும், நேத்து சமைச்ச மாதிரி இல்லாம இன்னிக்கு சமைக்கனும், புதுசு புதுசா சமைக்கனும், ருசியா சமைக்கனும், அது எல்லார்க்குமே பிடிக்கனும், உப்பு கூடிடக் கூடாது, சோறு குழைஞ்சிடக் கூடாது, பிடிக்காத ஐட்டங்கள் இருந்துடக் கூடாது,
ஒவ்வாத ஐட்டங்கள் இருந்துடக் கூடாது,
இருக்குற பொருள்களை வச்சு அட்ஜஸ்ட் பண்ணனும்..
வேஸ்ட் பண்ணிடக் கூடாது. இருக்குற காச வச்சு சமைக்கனும்.
பட்ஜெட் இடிச்சிடக் கூடாது.
ஒவ்வொரு நாளும் விடியுறப்போ, இன்னைக்கு என்ன வாங்கலாம், என்ன சமைக்கலாம், வீட்டில என்ன இருக்கு, வீட்டில என்ன இல்லன்னு யோசிச்சே விடியும்.
சாப்பிட்டு முடிச்சதும் பாத்திரம் கழுவி வைக்கனும்.
இதையே ஒரு நாளைக்கு நாலு தடவை பண்ணனும். பகல் சமைச்சத கழுவுறப்போ திரும்ப இரவுக்கும் இதையே பண்ணனுமேன்னு மனசுல யோசிக்கும். நாளைக்கும் முதல் இருந்து இது எல்லாமே பண்ணனும்லன்னு யோசிக்கும். ஆனாலும், நாளைக்கும் விடியும். நாளைக்கும் பசிக்கும். நாளைக்கும் சமைக்கனும்.
சமைக்குறதெல்லாம் பெரிய மேட்டர் இல்ல.
ஆனா.. தொடர்ந்து நாலு நாளைக்கு சமைக்குறது மேட்டர் தான்.
அதையே நாப்பது நாளைக்கு சமைச்சா?
நாப்பது வருசமா சமைச்சுக்கிட்டே இருந்தா?
சமைக்குறதுல இருக்குற சவால்கள் எல்லாம் புரியுது.
கஷ்டம் தெரியுது. வெறுக்குது.
இவ்வளவும், எனக்காக மட்டும் சமைக்குறப்போ. இதுவே இன்னும் அஞ்சு பேர்க்கு சேர்த்து சமைச்சா?
அந்த அஞ்சு பேருக்குமே வேற வேற டேஸ்ட் இருந்தா?
அந்த அஞ்சு பேருமே, அவர்களுக்கு சமைச்சுக் கொடுக்கத் தான் நான் பிறந்ததேன் என்கிற நினைப்புல இருந்தா?
உக்கார்ந்த இடத்துல இருந்துக்கிட்டே சாப்பாட்ட கொண்டு வரச் சொன்னா?
அதுல உப்பு இல்ல, இதுல உறைப்பு இல்லன்னு கம்ப்ளய்ன் பண்ணா?
சாப்பிட்டு அப்படியே அதே இடத்துல விட்டுப் போனா?
நம்ம வீட்டுல நமக்காக சமைக்குறவங்கள நாம எந்த அளவுக்கு கவனிச்சிருக்கோம்?
எந்தளவு அங்கீகரிச்சிருக்கோம்?
எந்தளவு சப்போர்ட்டிவ்வா இருந்திருக்கோம்?
முப்பது வருசமா அம்மா சமைக்குறாங்க.
இடையில வெளில வாங்கிக்கலாம் சொன்னா, சமைக்கிறத தவற வேற வேலை என்ன? அதைக் கூட செய்ய முடியாதானு பேசுவோம், இங்க வந்து கிண்டலா பதிவு போடுவோம்.
என் வீட்டுல மனைவிக்கு கிச்சன் எங்க இருக்குதுனே தெரியாதுனு பதிவை போட்டுட்டு ஸ்மைலி எமோஜிஸ் வந்ததும், எதையோ சாதிச்ச மாதிரி, "சாப்பாடு ரெடியானு" குரல் கொடுப்பாங்க.
இதுல வீட்டில் சமைப்பதே ஆரோக்கியம். இப்போல்லாம் தோசைலருந்து அதுக்கு தேவப்படற மாவு வரைக்கும் கடைல வாங்குறாங்க.
இப்போ covid புண்ணியத்துல எல்லாரும் வீட்ல சமைச்சி சாப்பிட்டு நிம்மதியா இருக்காங்கனு போஸ்ட்டா போட்டுத் தள்ளுறாங்க!
மூணு வேளையும் ஆரோக்கியமான உணவு சாப்பிட்டு நிம்மதியா இருப்பாங்க தான்!
ஆனா சமைக்கிறவங்க....
ஆறு நாள் அடுப்படி வேலையா இருக்கியே, இந்தா ஒரு நாள் உனக்கு ஓய்வுனு வீட்டில யாராவது சொன்னா யாரும் ஹோட்டல வாங்கிக்கிட்டா தேவலனு யோசிக்க மாட்டாங்க!
இதுல தோசைக்கு மாவு அரைக்குற அர்ப்பணிப்பு இருக்கே! அதுக்கே ஆரத்தி காட்டணும்!
இன்னொரு தடவ வீட்டில சமையலைப் பத்தி பேச்செடுத்தாலோ, வெளில வாங்கி சாப்புட்றதப் பத்தி பிரசங்கம் பண்ணாலோ, மாவரைச்சு கிரைண்டர் கழுவி வச்சிட்டுத் தான் போகணும்னு ஸ்ட்ரிக்ட்டா சொல்லிடுங்க, அதுக்கப்பறம் நக்கலா பேச மாட்டார்கள்.
கருவறை பத்து மாசம்னா, சமையலறை வாழ்நாள் மட்டும்.
தனக்குப் பசியில்லாத போதும், பிறர்க்காய் சமைக்கும்
ஒவ்வொரு தாய்க்கும், மனைவிக்கும்
சமர்ப்பணம்!🙏🙏
அனைத்து பெண்மணிகளுக்குமான குமுறல்
வாட்ஸாப் உபயம் தம்பி முகுந்தன்.
Friday, June 11, 2021
Never hurt anybody | நாக்குக்கு சரியாகப் பேசத் தெரியணும் | வல்லிசிம்ஹன் ...
அன்பின் மதுமிதா மிக நல்ல இலக்கியவாதி.
நிறைய புத்தகங்கள் எழுதிப்
பிரசுரித்திருக்கிறார்.
கவிதைகள் எழுதிக் கொண்டு,
அதை இசையாகப் பாடவும் முடியும்.
ஒரு பெரிய குடும்பத்தின் நிர்வாகி. அனுசரித்துப் போகும் குணம்
கொண்டவர். அதிர்ந்து பேசாத பாசம் நிறைந்த மனுஷி. என்னை
நேர்காணல் செய்யலாமா என்று கேட்டதும்
யோசனையாகத் தான் இருந்தது.
இதில் தப்பொன்றும் இல்லை என்று தெளிந்து ஒப்புக் கொண்டேன்.
மிக மிக மகிழ்ச்சி மதுமா. நன்றி.
Thursday, June 10, 2021
v.kumar tamil music director | @Janagi Stories
கொஞ்சம் நிதானமாகச் சொல்லி இருக்கலாமோ. நிறைய தகவல்கள்.
வாழ்க குமார் அவர்களின் புகழ்.
Wednesday, June 09, 2021
தோசையும் சாம்பாரும்
சென்ற சனிக்கிழமை மாலைக்கு
ஹோட்டலில் சாப்பிடுவது போலத் தோசை வேண்டும் என்று
பெரிய பேரன் சொல்ல,
சனி ஞாயிறு மட்டுமே அவனால் வீட்டில் சாப்பிட
முடியும் என்பதால் சின்னவனும்
விட்டுக் கொடுத்தான்,
Anything Paatti makes is good for me:)
பிறகென்ன கோதுமை மாவு கரைத்த தோசையும்
பெப்பிள்ஸ் கறியும்,
வெங்காய,கத்திரிக்காய் வத்தக் குழம்பும் முடிவாகியது.
தனியா, மிளகாய், கடலைப்பருப்பு,பெருங்காயம், எள்,
வேர்க்கடலைப் பருப்பு வறுத்து சேர்த்து அரைத்து,
வதக்கின பூண்டு வெங்காய,கத்திரிக்காயுடன்,
புளி ஜலம் விட்டு,மஞ்சள் பொடி ,உப்பு போட்டுக்
கொதித்தவுடன் , அரைத்த விழுதையும் சேர்க்க
சுகமான மணத்துடன் கெட்டி குழம்பு ரெடி.கூடவே,தேங்காய்த்துகையல்.
கோதுமை மாவு ஒரு டம்ப்ளர்,
ரவை கால் டம்ப்ளர்,
தயிர் அரை கப்,
வெங்காயம், ப.மிளகாய், இஞ்சி,கொத்தமல்லி,
கருவேப்பிலை எல்லாம் கலந்து
இரண்டு மணி ஊறி இருந்தது.
அழகாக வார்க்க வந்தது.
ஆளுக்கு நாலு தோசை ,குழம்பு தொட்டுக் கொண்டு
சாப்பிட்டு, தயிரும் தேனும் கலந்து ஒரு டெசர்ட்.:)
சாப்பிட்டு ஜீரணமும் ஆயாச்சு:_)
வல்லிசிம்ஹன்
Tuesday, June 08, 2021
Monday, June 07, 2021
பூக்கள் மலரும் தருணம்
ரோஜா மலர்க்கூட்டம் |
வல்லிசிம்ஹன்Peonies
இளவேனில் மறைந்து கோடை தொடங்கி விட்டது.
எங்கு பார்த்தாலும் மலர்கள் .பல வண்ணங்கள்.
கார்டீனியா, இம்பேஷன்ஸ், இன்னும் எத்தனை பெயர்களில் செடிகள்
கண்ணுக்கு விருந்து வைக்கின்றன.
அதுவும் மஞ்சள் ரோஜாவின் அழகு சொல்லி முடியாது.எத்தனை பெரிதாக இருக்கிறது.
அப்படியே ஜன்னல் வழி அந்த ரோஜாக்களைப்
பார்த்துக் கொண்டே இருக்கலாம்.
இயற்கை அன்னைக்கு நன்றி.
Sunday, June 06, 2021
வந்த செய்தி.
வல்லிசிம்ஹன்்நப்பின்னை - வாலி
(Shared by Vino Mohan) -edited
ஸ்ரீ ரங்கத்தில் மேல சித்திர வீதியில் ஒரு ரங்க ராஜன்...
கீழ சித்திர வீதியில் இன்னொரு ரங்கராஜன்....
மே.சி.வீதி ரங்கராஜன் தான் வாலி....கவிஞர் வாலிதான்...
கீ.சி. வீதி ரங்கராஜன்.......என்ன கேள்வி இது?....நம் சுஜாதா தான்...
அவர்கள் இருவரும் நப்பின்னையும் மட்டுமே அறிந்த ஒரு சம்பவத்தை நப் பின்னை என்று தலைப்பிட்டு 2013 ஆம் ஆண்டு குமுதம் பொங்கல் மலரில் எழுதியிருந்தார் வாலி...
கட்டுரை,சிறுகதை என்று எப்படி வேண்டுமானாலும் அழைக்கலாம்.. வாசிப்பவர் பிரியம் அது..
வாலி ஸ்ரீரங்கத்து தமிழில் அவர்களின் பரிபாஷை எல்லாம் கலந்து சொன்ன கதை...
முடிந்தவரை சீர் கெடாமல் நப்பின்னை பற்றி சொல்ல ஆசை...சொல்லட்டுமா?அழகிய சிங்கர் வாத்தியாரின் பெண் நப்பின்னை...
அழகிய சிங்கரைப் பற்றியே அரை பக்கம் வர்ணித்திருந்தார் வாலி.
கோபுலு, அழகிய சிங்கரைப் பார்த்திருந்தார் என்றால் kent paper, crayon இரண்டையும் எடுத்து caricature போட்டு விடுவாராம்...
சுஜாதா வீட்டுக்கு எதிர் வீடு அவர் வீடு.
ஒரு சாயரட்சையில் இரு ரங்கராஜன்களும் பேசிகொண்டிருந்த போது சுஜாதாவின் எதிர் வீட்டில் இருந்து ஒரு பங்குனி உத்திர தேர் வெளிப் போந்து மாசிக்கோனார் மளிகை ஸ்டோர் நோக்கி சென்றது..
பனி பிரதேசத்தில் அம்மணமாக நிற்பது போல பாதாதிகேசம் உறைந்து நின்றேன் என்கிறார் வாலி.
அழகிய சிங்கரையே அரை பக்கம் வர்ணித்தவர் நப்பின்னையை எவ்வளவு வர்ணித்திருப்பார்?அந்த வர்ணனைகளில் கை வைக்க அடியேனால் ஆகாது.. விட்டு விடுகிறேன்...
நப்பின்னையைப் பார்த்து வாலிக்கு ஏற்பட்ட உபாதைகளை உணர்ந்து கொண்ட சுஜாதா அழகிய சிங்கத்திற்கு வாலியை அறிமுகம் செய்து வைக்கிறார்...
இன்று போய் நாளை வா படத்தில் மூன்று இளைஞர்கள் ராதிகாவிற்காக செய்த சேவைகளை தனி ஒருவனாக வாலி செய்திருக்கிறார் நப்பின்னை வீட்டிற்கு..
ஊஹூம்....முன்னேற்றம் ஒன்றும் இல்லை..
சுஜாதாவே இன்னொரு யோசனை சொல்கிறார்.
உன்னுடைய நாடகத்திற்கு இரண்டு காம்ப்ளிமென்ட்ரி டிக்கெட் கொடுத்து கூப்பிடு....
உன் தமிழை பார்த்து நப்பின்னைக்கு உன் மேல் காதல் வரலாம் என்று யோசனை சொல்கிறார்..
அப்படியே கொடுத்தாயிற்று..
அந்தோ!
தனியாகத்தான் அழகிய சிங்கர் வாத்தியார் வந்தாராம் நாடகத்திற்கு.
கேட்டதற்கு பொண்ணு - நேத்து ராத்திரி கொல்லை ரேழியில் உட்காந்துண்டுட்டா என்றாராம்.
வாலி நொறுங்கி போனாராம்...
இனி பொறுப்பதில்லை என்று எரிதழல் கொண்டு வரச் சொன்ன வீமன் போல காவிரிக்கு குளிக்க வந்த நப்பின்னையிடம் காதல் கடிதம் கொடுத்திருக்கிறார்....
பின்னாட்களில், அன்புள்ள மான் விழிக்கு ஆசையில் ஓர் கடிதம்...நான் அனுப்புவது கடிதம் அல்ல,உள்ளம் என்றெல்லாம் பாடல்கள் எழுதிய வாலி,தன் காதலிக்கென்று எழுதிய அந்த காதல் கடிதம் காண ஆசை..
கிடைத்தால்,நரகத்தில் ஆயிரம் ஆண்டுகள் தலை கீழாக தொங்கவும் சம்மதம்.
அய்யகோ! கடிதத்தை படிக்காமலே கசக்கி வாலி முகத்தில் எறிந்து விட்டு இரு இரு,அப்பாவண்ட சொல்லி என்ன பண்றேன் பார் என்று வெகுண்டளாம் நப்பின்னை.
பின் ஒரு பிராதக் காலத்தில் காதலுக்கு காவிரியில் காதலுக்கு தலை முழுகியிருக்கிறார் வாலி..
வாலி சென்னையை ஏக......
சுஜாதா டெல்லிக்குப் போக........
இருவருமே உலகறிந்த ஸ்ரீரங்கத்து மணிகளாக ஒளி வீச...காதல் கடிதம் கொடுத்து நாற்பது ஆண்டுகளுக்கு பிறகு வாலி ஸ்ரீ ரங்கம் போகிறார்..யதேச்சையாக சுஜாதாவும் வந்திருக்கிறார் ஸ்ரீ ரங்கத்திற்கு...
இருவரும் ஒரு மாலையில் தாயார் சந்நிதிக்கு போக...தொலைவில் பிராகாரதில் சேவித்து கொண்டிருந்த ஒரு மூதாட்டியை காட்டி சுஜாதா,
"வாலி தெரியறதா?நப்பின்னை........அழகிய சிங்கர் வாத்தியார் பொண்ணு" என்றாராம்..
"அப்பாவும் போயாச்சு.ஆத்துக்காராரும் போயாச்சு.. பசங்க மாசாமாசம் பணம் அனுப்புறானுங்க... நப்பின்னை நிம்மதியாக இருக்கா..போய் பேசேன்" என்று சுஜாதா சொல்லியிருக்கிறார்.....
வாலியும் நப்பின்னை முன்னே பிரசன்னாமாகி "என்னை தெரியறதா?" என கேட்க..
"உலகத்திற்கே தெரியும். எனக்கு தெரியாதா? வாலி" என்றாள்.
அப்படியே பிரதட்சினம் செய்து கொண்டே பேசி கொண்டு போகிறார்கள் இருவரும்.
"நப்பின்னை,கோபிக்க கூடாது. இவ்வளவு புகழ்,செல்வத்தோடு இருக்கிறேன்..என்றாவது ஒருநாள் வாலியை நிராகரித்தது தப்பிதமோ? என்று நினைத்தது உண்டா" என்று அசட்டு தனமாக கேட்டிருக்கிறார் வாலி..
இராமானுஜர்,பாண்டவர் பூமி எல்லாம் எழுதி முடித்த பின்னால்...
"அப்போ வருத்த படலே.. இப்போ வருத்த படறேன். இப்படி ஒரு கேள்வி கேட்ட உங்களை பார்த்து...உங்க மேல அன்னைக்கு வராத காதல் காசு வந்ததும் வந்து விடுமா? பெண்கள் காசில்லாதவனைத் தான் காதலிப்பா.."
"கவிஞர் ஆச்சே..கம்பராமாயனம் படிச்சிருப்பேளே..இது தெரியலையா? காசு என்றால் பணம்னு மட்டும் அர்த்தமில்லே..குற்றம் என்றும் அர்த்தம்.. அதனால் தான் கம்பன் பாடினான் காசில் ராம காதையை! என்று சொன்னான்.
"குற்றமற்ற ராமன் கதையை பாடினேன் என்று சொன்னான். காதல் காசில்லாதவன் மேல் தான் வரும்.நன்னாருங்கோ! வர்றேன்" என்று பிரதட்சிணத்தை போய் விடுகிறாள்.
தன் கன்னத்தில் பளீர் பளீர் என்று யாரோ அறைந்தது போல உணர்ந்ததாக வாலி முடிக்கிறார் நப்பின்னை கதையை.....
அவசியம் படிக்க வேண்டும்...
அந்த தமிழுக்காக மட்டும் அல்ல...
நப்பின்னைகாகவும் தான்...
மாட்டு வண்டி பூட்டி கிட்டு..................
காலையில் கண் விழிக்கும் முன்
மாட்டு வண்டிகளின் சக்கரங்கள் போடும் கட கட சத்தமும்,
மாடுகளின் கழுத்து மணி சத்தமும்
காதுகளை அடையும்.
அவ்வப்போது பஸ் ஒலி கேட்கலாம்!!!
இப்போதெல்லாம் அறவே கிடையாது.
60களில் தஞ்சாவூர்ப்பக்கம் ஏதோ திருமணத்துக்குப்
போனபோது ,....
அது ஒரு தை மாதம் என்ற நினைவு.
வரிசையாக வண்டிகள் போகும் சத்தம்
இளங்காலையிலிருந்து கேட்டுக் கொண்டே இருந்தது.
ஊரின் செழுமை அந்த வண்டிகளில்
நிறைந்து சென்ற நெல் மூட்டைகளில் தெரிந்தது.
மீண்டும் மாலை அவை திரும்பிச் செல்லும் சத்தம்.
ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து வண்டியிலேறி பக்கத்தில் இருக்கும்
திருவண்ணாமலைக் கோவிலுக்குச் சென்ற ஞாபகம்.
வண்டி ஓடும் வேகத்தில் பக்கத்துப் பக்கம் தலை
இடித்தது நல்ல வலி.:)
பயணங்கள் மாறி வண்டிகளும் மாறியாகிவிட்டது.
நல்ல பயணங்கள் தொடரட்டும்.
Saturday, June 05, 2021
Friday, June 04, 2021
Thursday, June 03, 2021
1955 காலப் பாடல்கள்.
திருமங்கலத்தில் இருந்த போது
கேட்ட ஒலி பெருக்கிப் பாடல்களைப் பற்றிச் சொல்லி இருக்கிறேன்.
எந்த ஒரு நிகழ்வானாலும்
உடனே அந்த வீட்டில் பந்தல் கட்டியதும் பாடல்கள் ஒலிக்க
ஆரம்பிக்கும். முதல் பாடல் மாதர்குல மாணிக்கம்
படத்தில் வந்த தங்கவேலு ,எம்.என் ராஜம்
பாட்டு. எல்லாம் கலந்த ஒரு இசை,
வேறேதோ இந்திப் பாட்டின் சாயல்:)
பிறகு
வருவது 'ராஜ சேகரா என் மேல்''
வருவது 'ராஜ சேகரா என் மேல்''
அனார்க்கலி படப் பாடல்.
படம் பார்க்காததால் இது என்ன சூழ்னிலையில்
வரும் என்றும் தெரியாது.
கண்டசாலா ஜிக்கி குரல் மட்டும் தெரியும்.
ஹிந்தி படத்தைத் தழுவி எடுக்கப் பட்ட படம் என்பதால்
அந்த இந்துஸ்தானி இசையும் தாளக்கட்டும்
மிகப் புதிதாக இருந்தது.
மகிழ்ச்சியாக ஒலிக்க வேண்டிய பாடலே சோகமாக
ஒலித்தது. ...அவ்வளவாக ரசிக்க முடியவில்லை...
பழகிவிட்டது.:)
மூன்றாவது பாடல் மஞ்சள் மகிமை
படத்தில் தங்கவேலு, ராஜ சுலோச்சனா
பாடும் காமெடி பாடல்.
அப்போது வந்த படங்களைப்
பார்க்க அப்பாவிடம் அனுமதி கிடைக்காது.
அதுவும் கெட்ட பழக்கம் கொண்ட கதா நாயகன் என்றால் அறவே மறுப்பு.
எல்லாமே இப்படி ஆரம்பிக்கும் படங்கள் ஒரு பெண்ணால்
அந்தக் கணவன் திருந்துவது போலவே முடிக்கப்
படும்:)
''மானம் மணி பர்ஸ் ரெண்டும் காலி.
ஊரை சுற்றுவதே ஜோலி
மைனர் லைஃப் ரொமba
ஜாலி"
ஜாலி"
இப்படி வரும் அந்தப் பாடல்.
அடுத்து வருவது....
கசக்குமா இல்லை ருசிக்குமா பாடல், பத்தினி தெய்வம்
என்ற படத்திலிருந்து
சட்டென்று பிடித்துப் போனது இந்தப்
பாடல். டப்பிங்க் செய்யப்பட்ட இந்திப் படம்.
இசை மெல்லிசை மன்னர்கள் என்று
பதிவாகி இருக்கிறது.
Tuesday, June 01, 2021
புத்தம்புதுக் காலை
வல்லிசிம்ஹன்
அன்பின் சூடா, சூடாமணி.
வாழ்வின் அனேக அத்தியாயங்களை
பொறுமை, மேலும் பொறுமையுடன்,
கடந்து உன்னை விட இளையவர்களான
எங்களிடம் எத்தனை அருமையாகச் சிரித்துப் பழகினாய்.
இன்று காலை எனக்குக் கிடைத்த செய்தி,
உன்னைக் கடவுளிடம் சேர்த்து விட்டதாகச் சொன்னது.
என் அப்பாவின் அன்பான அக்காவின் மகள் நீ.
87 வயதில் ஆரோக்கியமாக இருந்து,
ஒருவரையும் நோகவைக்காமல்
அமைதியாக இறைவனிடம் கலந்தாய் என்று உன் தம்பி சொன்னான்.
வெகு நாட்களுக்குப் பிறகு குடும்பத்துடன்
உரையாட ஒரு சந்தர்ப்பம் கொடுத்து
அதில் நீ கலந்து கொள்ள முடியவில்லை.
குணவதியாக இருந்து குணவதியாக மறைந்தாய்.
அமைதி பெற பிரார்த்தனைகள்.
Subscribe to:
Posts (Atom)