Blog Archive

Wednesday, June 09, 2021

தோசையும் சாம்பாரும்






சென்ற சனிக்கிழமை மாலைக்கு 
ஹோட்டலில் சாப்பிடுவது போலத் தோசை  வேண்டும் என்று
பெரிய பேரன் சொல்ல,
சனி ஞாயிறு மட்டுமே அவனால் வீட்டில் சாப்பிட
முடியும் என்பதால் சின்னவனும் 
விட்டுக் கொடுத்தான்,

Anything Paatti makes is good for me:)

பிறகென்ன  கோதுமை மாவு கரைத்த தோசையும் 
பெப்பிள்ஸ் கறியும்,
வெங்காய,கத்திரிக்காய் வத்தக் குழம்பும் முடிவாகியது.

தனியா, மிளகாய், கடலைப்பருப்பு,பெருங்காயம், எள்,
வேர்க்கடலைப் பருப்பு  வறுத்து சேர்த்து அரைத்து,
வதக்கின பூண்டு வெங்காய,கத்திரிக்காயுடன்,
புளி ஜலம் விட்டு,மஞ்சள் பொடி ,உப்பு போட்டுக்
கொதித்தவுடன் , அரைத்த விழுதையும் சேர்க்க
சுகமான மணத்துடன் கெட்டி குழம்பு ரெடி.கூடவே,தேங்காய்த்துகையல்.

கோதுமை மாவு ஒரு டம்ப்ளர்,
ரவை கால் டம்ப்ளர்,
தயிர் அரை கப்,
வெங்காயம், ப.மிளகாய், இஞ்சி,கொத்தமல்லி,
கருவேப்பிலை எல்லாம் கலந்து 
இரண்டு மணி ஊறி இருந்தது.

அழகாக வார்க்க வந்தது.
ஆளுக்கு நாலு தோசை ,குழம்பு தொட்டுக் கொண்டு
சாப்பிட்டு, தயிரும் தேனும் கலந்து ஒரு டெசர்ட்.:)

சாப்பிட்டு ஜீரணமும் ஆயாச்சு:_)

வல்லிசிம்ஹன்

28 comments:

Kamala Hariharan said...

வணக்கம் சகோதரி

நான் இதற்கு முன் ஒரு கருத்து தந்திருந்தேன். அது வந்ததா எனத் தெரியவில்லை. நன்றி.

நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கமலாமா, இதோ இந்தக் கருத்தைதான் பார்த்தேன் அம்மா. உடனே பிரசுரித்து விட்டேன். நன்றி சகோதரி.

Kamala Hariharan said...

வணக்கம் சகோதரி

ஓ. அப்படியா? ஒரு வேளை நான் முதலில் அனுப்பியது வந்து விட்டதோ என நினைத்தேன். நான் கருத்து அடித்து அனுப்பும் போது எரர் என வந்தது. முதலில் சொன்ன கருத்தை மறுபடியும் அப்படியே வரி பிசகாமல் நினைவு படுத்தி அனுப்ப முடியுமா எனப் பார்க்கிறேன் சகோதரி. உடனடி பதிலுக்கு மிக்க நன்றி.

நன்றியுடன்
கமலா ஹரிஹரன்

Kamala Hariharan said...

வணக்கம் சகோதரி

ஆகா.. அருமையான கோதுமை மாவு+ரவா கலந்த தோசையும், கமகமக்கும் சாம்பாரும் பொருத்தமாக இருந்திருக்கும். தோசை,மற்றும் சாம்பார் செய்முறைகளை மிகவும் சிம்பிளாக,அதே சமயத்தில் சுவையாக,சொன்ன விதங்கள் மனதையும் கவர்ந்தது. படங்கள் கண்களையும் சேர்ந்து கவர்ந்தது. இப்போதுதான் எங்கள் வீட்டில் இரவு உணவாக சப்பாத்தி சாப்பிட்டிருந்தாலும்,படங்களோடு பதிவை பார்த்த ஆவல் காரணமாக நானும் மானசீகமாக சாம்பாரில் முக்கியெடுத்த ஒரு தோசையும் சாப்பிட்டேன். (பங்குக்கு யாரும் வரவில்லை என்ற தைரியத்தில்... :)) மிகவும் ருசியாக அருமையாக இருந்தது. பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கமலாமா,
பின்னூட்ட வர்ஷினி என்று பெயர் சூட்டப் போகிறேன் உங்களுக்கு!!!!!
நம் சின்ன கீதாவும் இது போலத்தான். அப்படியே
எழுத்தில் லயித்து அன்பைப் பொழிவார்.

என்னால் அது முடிவதில்லை அம்மா.
எத்தனை ரசனை உங்களுக்கு.
வாரம் முழுவதும் வெளியே இருக்கும் பேரன் வரும்போது
நாவுக்குச் சுவையாகச் செய்யலாமே என்ற நினைப்புதான்.

முடியும் வரை செய்வோமே.

இங்கே பாந்தமாக சீதோஷ்ணம் இருக்கிறது.
வேர்ப்பதில்லை. நம்மூர் அதாவது சென்னை என்றால்
என்னால் முடியாது.
எல்லாவற்றுக்கும் வேளை வரவேண்டும் போலிருக்கிறது.
ஆதர்சமாக வந்து ருசியும் பார்த்துச் சொன்னதற்கு
மனசு நிறைய நன்றி.
நன்றாக இருங்கள் .புதிதாக நல்ல தமிழில் உங்கள் பதிவுகளை
எதிர்பார்க்கிறேன்.

ஸ்ரீராம். said...

அடடே..  பார்க்கவே சூப்பரா இருக்கும்மா...   கோதுமை தோசை செய்வோம்.  ஆனால் அதில் இதுவரை ரவா சேர்த்ததில்லை.  வெந்தயக்குழம்பிலும் எள், மஞ்சள்பொடி சேர்த்ததில்லை.  வேர்க்கடலையும் அரைத்து விட்டதில்லை.  இப்படி ஒருமுறை முயற்சித்து விடலாம்!

Geetha Sambasivam said...

இதே தோசை நானும் செவ்வாய்க்கிழமை பண்ணினேன். அன்னிக்குக் காலம்பர முருங்கைக்காய் சாம்பார் வைத்ததால் சாம்பார் செலவாகணுமே என்பதால் மாலைக்கு தோசை வார்த்தேன். இதே காம்பினேஷன் தான். கூடவே சட்னியும் அரைச்சிருந்தேன். செவ்வாய்க்கிழமை என்பதால் நோ வெங்காயம்! :))) மைதா ரொம்பச் சேர்க்காததால் கோதுமை மாவுக்கு செலவு அதிகம். :)))) பேரன் நன்கு ருசித்துச் சாப்பிட்டிருப்பான். பாட்டியின் கைமணம் கூடவே ஒரு தோசையாவது சாப்பிடச் சொல்லி இருக்கும்.

Geetha Sambasivam said...

நீங்கள் இதில் சொல்லி இருக்காப்போல் குழம்பு பூண்டு இல்லாமல் பண்ணிப் பார்க்கணும்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஶ்ரீராம்,
பேரன் பூண்டு பைத்தியம் தாத்தா போல!

வெறுமனே அரைத்தும் செய்யலாம். கத்திரிக்காய் மட்டும் போதும் செய்து பாருங்கள்.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கீதாமா,

இங்கே மைதாமாவே உபயோகிப்பது இல்லை.
அதனால் கோதுமைமாவும் ,ரவையும்
நன்றாக வார்க்க வந்தது.
நீங்களும் செய்தீர்களா.

ஆமாம் பெரியவனுக்குப் பிடித்து,
குழம்பைப் பெண் அவனுக்கு பார்சல் கட்டிக் கொடுத்தாள்.

வல்லிசிம்ஹன் said...

அங்கே வேலை செய்யும் இடத்தில் பாஸ்தா, நூடில்ஸ்,
பீட்சா இதை சாப்பிட்டு அலுத்துப் போகிறது ...பாவம்.

பூண்டு போடவே வேண்டாம். வெறுமனே செய்தாலும் நன்றாகத் தான் இருக்கும்.
நன்றி மா.

திண்டுக்கல் தனபாலன் said...

கோதுமை தோசை எண்ணிக்கை தெரியாது உள்ளே போகும்...!

நெல்லைத் தமிழன் said...

ஆஹா... அருமையான தோசையும் சாம்பாரும். பூண்டு போடாமலேயே அருமையா இருக்கும். வாசனை இங்கு வரை வருகிறது.

இரண்டு நாட்களுக்கு முன்புதான் நான் கரைத்தமாவு தோசை செய்து சாப்பிட்டேன். பச்சை மிளகாயும் இஞ்சியும் போட மறந்துவிட்டேன். படம் பார்க்க அழகாக இருக்கு

Thulasidharan V Thillaiakathu said...

அம்மா ஆஹா பார்சல் ப்ளீஸ் இல்லேனா நான் அங்க வந்துவிடுகிறேன்...முதலி சட்னி/தொகையல் என்ன என்று கேட்க நினைத்தேன் நீங்களே சொல்லிட்டீங்க...கத்தரிக்காயும் குழம்பும் இங்கே மணக்கிறது. ஆந்திரா ஸ்டைல் குழம்பு?

எள்ளு, வேர்க்கடலை வந்திருக்கே அதான் கேட்டேன்..

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

கோதுமை தோசை வாவ்! செமையா இருக்கு...நேற்று இதுதான் இதே ப்ரொப்போர்ஷன் தான் டிஃபன். நன்றாகவே வரும். சிலப்போ கொஞ்சம் அரிசி மாவும் சேர்த்துக் கொள்வேன்..

ஆந்திரா ஸ்டைல் குட்டி வங்காயா (குட்டிக் கத்தரிக்காய் நாலா வகுந்து முழுசா போடுற குழம்பும் இதே பொருள்தான்...சூப்பரா வந்திருக்கும் யம்மி யம்மி!!!

செம கோம்போ!!!

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

இதுக்குத்தான் அம்மா பாட்டி தேவை...அன்பு கலந்து அன்னம்...பார்த்து பார்த்து, கேட்டு கேட்டுச் செய்வது...என் அம்மாவும் இப்படித்தான் யாராவது இதைச் செய்து தரயா என்று கேட்டால் போது உடனே கிச்சன்ல நுழைந்து அடுத்த நிமிடம் இறங்கிவிடுவார். கேட்கலைனாதான் மனம் வருத்தப்படுவார்.

உங்கள் அன்பு குழந்தைகளுக்குக் கிடைப்பது இறைவன் அருள் அம்மா....காட் ப்ளெஸ் குழந்தைகளை..

நான் அடிக்கடி சொல்லி வருவது "நல்ல" தாத்தா பாட்டி இருந்தால் தயவாய் அவர்களை உங்களோடு வைத்துக்கொள்ளுங்கள் உங்கள் குழந்தைகளுக்கு நல்ல ஆரோக்கியமான மனதும், உடம்பும் நல்ல மனதுடனான வளர்ச்சியும் இருக்கும் என்று...

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

உங்கள் பதிவு பார்த்ததும் உடனே நீங்கள் எப்படிப் பரிமாறியிருப்பீங்கன்னு ஒரு விஷுவல் எஃபெக்ட் கொடுத்துக் கொண்டேன் ஹாஹாஹாஹா

அது போல என் பாட்டியும் அம்மாவும் என் அத்தைகளும் நினைவுக்கு வந்தார்கள்..

அம்மா சும்மா குத்து மதிப்பாகவேனும் அளவு போடுங்க...அரைத்து விடுவதற்கு எல்லாம்~!!!!!

கீதா

கரந்தை ஜெயக்குமார் said...

அருமை

வல்லிசிம்ஹன் said...

அன்பின் தனபாலன்,
உண்மைதான். கரைத்த மாவு தோசை
மெல்லிதாக வார்த்தால் எவ்வளவு வேண்டுமானாலௌம் சாப்பிடலாம்.
உளுந்து இந்த ஊரில் வாயு கொடுக்கிறது.
அது என்ன மாயமோ தெரியவில்லை.
நன்றாக உண்டு நலமாக இருங்கள்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு முரளிமா,
இஞ்சி, பச்சை மிளகாய் வாசனைக்கும், வாயு இல்லாமல் இருப்பதற்கும்
நிறைய சேர்க்கிறேன்.
நல்லதாகவும் கிடைக்கிறது.
காரம் இல்லாத ப.மிளகாய் அதனால் வயிற்று வலியும் இல்லை.

முடிந்தவரை செய்யலாமே என்று தான் யோசனை.

வல்லிசிம்ஹன் said...

இது இரண்டும் சேரும்போது
குழம்பு கெட்டியாக இருக்கிறது. நிறைய எண்ணெயும்
செலவாவதில்லை.
அதுதான் சிலசமயம் இது போலச் செய்கிறேன்.மா.மகளுக்கும் மாப்பிள்ளைக்கும் எள்
மிகவும் பிடிக்கும். வேர்க்கடலையும் தான்:)

வல்லிசிம்ஹன் said...

சின்ன கீதாமா,
ஆமாம். பக்கத்தில இந்த்ரான்னு ஒரு தெலுங்குப் பொண்ணு இருக்கு.
ரொம்பப் பிரமாதமா சமைக்கும்.
கஷ்டப்பட்டுத் தமிழ் பேசும்.:)
எண்ணெய்க் கத்திரிக்காய் குழம்பு
நன்றாக செய்யும். அந்த நினைவில் தான் செய்தேன் மா. சரியாகச் சொன்னீர்கள்.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் சின்னகீதாமா,
இங்கே தான் கிச்சனும்
சாப்பிடும் இடமும் ஒன்று தானே.
அதனால தோசை வார்க்க வார்க்கப்
போட்டுக் கோண்டே இருக்கலாம்.

கணினியை மூடிவிட்டு வந்தால் தான் சாப்பாடு:)
இன்னிக்கு வேற வேலை இருக்கு. அப்புறமாதான்
தளிகை.

வல்லிசிம்ஹன் said...

குழந்தைகள் நல்லவர்கள் கீதாமா. நாம் அனுசரித்து
ஆதரவாக இருந்தால் எல்லாம் நல்லதுக்குத்தான். உங்களுக்கும் அந்த அனுபவம் சீக்கிரம் கிடைக்கணும். பெருமாள் அனுக்கிரஹம்.

வெங்கட் நாகராஜ் said...

கரைத்த தோசை வித் சாம்பார் - ஆஹா! நல்ல காம்போ!

பொதுவாக கரைத்த தோசையை பலரும் விரும்புவதில்லை! எப்போதாவது என்றால் ஓகே!

வல்லிசிம்ஹன் said...

அன்பு வெங்கட், உண்மைதான் வெங்கட்.

கரைத்த தோசை இரண்டாம் பட்சம் அதன். அரவை சேர்த்து வார்த்ததில் எல்லோருக்கும் பிடித்தது மா. தொட்டுக்கத் துவையலும் இருந்தால் உத்சாகம்:)

கோமதி அரசு said...

தோசையும் சாம்பாரும் தலைப்பு அருமை.
படங்களும், செய்முறை குறிப்பும் மிக அருமை.
அன்பாய் செய்து தரச்சொல்லி கேட்கும் போதும் நாம் செய்ததை ருசித்து சாப்பிடும் போதும் கிடைக்கும் ஆனந்தம் அள்விட முடியாது .

பேரன் ருசித்து சாப்பிட்டு இருப்பார் என்று நினைக்கிறேன்.
கோதுமை ரவை தோசை அருமை.
கெட்டிக்குழம்பும், தேங்காய்த்துவையலும் பாட்டியின் அன்பு உபசரிப்பும் கேட்க வேண்டுமா!

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கோமதி மா, வாழ்க வளமுடன் மா.

கரைத்த மாவு தோசை அவ்வளவாக எடுபடாது.
இந்தத் தடவை எல்லோருக்கும் பிடித்தது மா.
ரவையும் கோதுமை மாவும் சேர்ந்த காம்பினேஷன்,
சாம்பார்+ துகையல் நல்லபடியாகச் செலவாகியது.
இறைவனுக்கு நன்றி.

நீங்கள் சொல்வது போல இந்த விசேஷ காலங்களில்
இது போலச் சிறிய விஷயங்கள் மன நிம்மதியைக் கொடுக்கின்றன.
நன்றி மா.