Blog Archive

Tuesday, June 22, 2021

முக்கால்மணி நேர கோர தாண்டவம்.

வல்லிசிம்ஹன்

   நேற்று இரவு மறக்க முடியாத இரவானது. குளிர் முடிந்து 
  கோடையின் சூடு அதிகரித்ததுமே
மனதில் பயம் தேங்க ஆரம்பித்தது. 
நல்ல மழை பெய்து தாகம் தணித்தால் தேவலை.

தந்தையர் தினக் கொண்டாட்டங்கள் முடிந்து

மிதமான மழையில் வீடு திரும்பியவர்களுக்கெல்லாம்
காத்திருந்து பதுங்கி இருந்தது கடும் சூறாவளி.
நஷ்டம் என்று பார்த்தால் சொத்துகள் அதிகம். 
உயிர் சேதம் இல்லை. இடிபாடுகளில் அடி பட்டவர்கள் ஆறு .

வீடிழந்தவர்களுக்கு எல்லோரும் தண்ணீர் உணவு 
என்று கொண்டு போய்க் கொடுத்த வண்ணம் இருக்கிறார்கள்.

மனிதம் வாழ்க.
நான்  மழை  நிலவரத்தைப் பார்த்து விட்டு
உறங்கப் போனேன்.

நல்ல உறக்கம். மகள் அருகே வந்து நிற்கும் அதே நேரம்
கலவரமான சைரன் நீண்டு ஒலிக்க ஆரம்பித்தது.
'சரி ,அடித்தளத்துக்குப் போக வேண்டும் ,தண்ணீர் ,கைபேசி, மருந்து என்று நான் எடுக்க,
மகளும் பேரனும் என்னைக் கீழ்னிலைக்கு அழைத்துச் சென்றனர்.
இடிமழைக்கு இவ்வளவு சைரன் ஒலிக்க மாட்டார்களே
என்று யோசித்தேன்.
பேரன் டொர்னேடோ வார்னிங்க் பாட்டி
என்றதும் கலக்கம் வந்தது.
அதற்குள் தேவையான, படுக்கை, தண்ணீர், போர்வைகள்,
டார்ச் லைட்டுகள்,  முதலுதவிப் பெட்டி, தயாரித்த உணவு என்று
பசங்கள் கீழே எடுத்துக் கொண்டு வர,
மகள் அக்கம்பக்கத்தினரை 
எழுப்பி செய்தியைச் சொல்ல அத்தனை பேரும்
அவரவர் பேஸ்மெண்டிற்கு செல்ல ஆரம்பித்தார்கள்.







முக்கால் மணி நேரம் என்று சொன்னார்கள். வெளியே

யாரோ, வானத்தைக் கிழித்துக் கங்கையைக் கொட்டுவது போல 
மழை.

காற்று.
எப்போது முடியும் ,எப்படி முடியும் ஒன்றும் தெரியாத நிலையில்
இறைவனை வழிபடுவது ஒன்றே தெரிந்தது.

பயப்பாடாதே பாட்டி, இதுதான் பாதுகாப்பான் இடம்.
அப்படியே தூங்கு என்று பேரன் பக்கத்தில் உட்கார்ந்து
கொண்டான்.

மாப்பிள்ளை என்ன நடக்கிறது என்று கண்காணித்துக் கொண்டே 
இருந்து,
நம்மைக் கடந்து விட்டது என்று சொல்ல ஒரு மணி நேரம் 
பிடித்தது.
இறைவன் எப்படி எல்லாமோ காக்கிறான்.
அப்படி வல்ல காற்று எங்களின் அடுத்த  டிவிஷனில்
வீசிச் சென்றிருக்கிறது.

அந்தப் படங்கள் மேலே.
அனைவரும் பத்திரமாக இருக்க அவனே துணை.
இன்னும் நடுக்கம் உடலை விட்டுப் போகவில்லை.

24 comments:

ஸ்ரீராம். said...

அந்த தருணங்களை வாழ்வில் மறக்கவே முடியாது.  நீங்கள் அனைவரும் பத்திரமாக இருப்பது மகிழ்ச்சி.  பேஸ்மெண்ட் என்பது பாதுகாப்பானதா?  அது இன்னும் ஆபத்தில்லையோ" அது பற்றி கொஞ்சம் சொல்லுங்கள்.

நெல்லைத்தமிழன் said...

நான் ரொம்ப த்ரில்லான அனுபவமாக இருக்கும் என்று நினைத்தேன். படங்களில் பார்க்கும்போது சூறாவளிக் காற்று தூண் போல நகர்ந்து வருவதும் மற்றதெல்லாம் கிராபிக்ஸ் உபயம் எனவும் நினைத்தேன்.

உயிரையும் உடமையையும் பறிப்பதாக அல்லவா இருக்கிறது.

இவ்வளவு எச்சரிக்கையில் எப்படி காயங்கள் ஏற்படுகின்றன? ஒவ்வொரு வீட்டுக்கும் பேஸ்மன்ட், படத்தில் காட்டுவதுபோல உண்டா? இதற்கெல்லாம் இன்ஸ்யூரன்ஸ் உண்டா?

Geetha Sambasivam said...

கிட்டத்தட்ட இதே போல் நாங்களும் 2007 ஆம் ஆண்டு மற்றும் 2011 ஆம் ஆண்டில் அனுபவித்திருக்கோம். ஒரே திக் திக் தான். மின்சாரம் வேறே துண்டித்து விட்டார்கள். நம்ம கார்ப்பரேஷன் மாதிரி அங்குள்ள நகர அலுவலகத்தின் தகவல்கள் மட்டும் நமக்கு அவ்வப்போது கிடைக்கும். தொலைபேசியிலும் அழைத்துச் சொல்லுவார்கள். இரவு சுமார் ஒன்பது மணியில் இருந்து பதினோரு மணி வரை அப்படி உட்கார்ந்திருந்தோம். அங்கேயும் எங்கள் வீடு இருந்த பகுதிக்கு அருகிலிருந்த ஜெர்மன் சிடி தான் அதிகம் பாதிப்புக்கு உள்ளானது. எப்படியோ நல்லபடியா இருக்கிறீர்கள் அல்லவா? இறைவனைப் பிரார்த்திக்கிறோம். கவனமாக இருங்கள்.

Thulasidharan V Thillaiakathu said...

அம்மாடியோவ் என்ன ஒரு தாக்கம். டொர்னடோ தாக்கம் கேள்விப்பட்டிருக்கிறேன். சுழன்று போகும்போதே தன் கைக்குக் கிடைத்ததை எல்லாம் அள்ளிப் போட்டுப் போகும் என்றும்...

எப்படியோ நீங்கள் எல்லோரும் பாதுகாப்பாக, எந்தவிதச் சேதமும் இல்லாமல் நலமோடு இருப்பது சந்தோஷம் அம்மா.

படங்கள் பயங்கரமாக இருக்கிறது, நம்மூரில் புயல் செய்வது போல.

நல்ல மனங்கள் உதவி செய்வதும் மகிழ்ச்சி.

பாதுகாப்பா இருங்கோ அம்மா

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

ஆமாம் அங்கு பேஸ்மென்டிற்குப் போவது கேட்டதுண்டு.

அபார்ட்மெண்டில் இருப்பவர்கள் என்ன செய்வார்கள் அம்மா? அவர்களுக்கும் பேஸ்மென்ட் இருக்குமோ? பொதுவான இடமாக? அப்பார்ட்மென்ட் என்றால் இன்னும் பயம்தான் இல்லையா.

ஆட்சேதம் இல்லாதது ஹப்பா என்றிருக்கிறது

நல்லது நடக்க வேண்டும்...

கீதா

கோமதி அரசு said...

கேட்கவே கஷ்டமாக இருக்கே! மழை இல்லை என்று சொல்லி கொண்டு இருந்தீர்கள் மழை வரும் கவலை படாதீர்கள் என்றேன் . இப்படி வந்து கஷ்டபடுத்தி இருக்கே!
இறைவன் அருளால் எல்லோரும் நலமாக இருக்க வேண்டும்.

அந்த நேரத்தை கடக்க எல்லோரும் கஷ்டப்பட்டு இருப்பீர்கள்.

அனைவரும் பத்திரமாக இருக்க இறைவன் அருள்புரிவான். பிரார்த்தனை செய்து கொள்கிறேன்.

இப்போது வீட்டுக்குள் வந்து விட்டீர்களா?
பக்கது டிவிஷ்னில் சேதங்களை ஏற்படுத்தி சென்ற சூறாவளி படங்கள் வயிற்றில் சங்கடம் கொடுத்தது.
பத்திரமாக இருங்கள் அக்கா.

கோமதி அரசு said...

//நஷ்டம் என்று பார்த்தால் சொத்துகள் அதிகம்.
உயிர் சேதம் இல்லை. இடிபாடுகளில் அடி பட்டவர்கள் ஆறு .//

உயிர் சேதம் இல்லாமல் கடவுள் காப்பாற்றி இருக்கிறார்.

நன்றி இறைவா!

திண்டுக்கல் தனபாலன் said...

இயற்கையின் சீற்றம் பயமுறுத்துகிறது...

கவனமாக இருங்கள்...

vaanampaadi said...

அன்புள்ள வல்லிம்மா, இயற்கையின் சீற்றத்தை என்னவென்று சொல்ல? அனைவரும் நலமுடன் வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன். நல்ல உள்ளங்களுக்கு சோதனைகள் வரும்...இறைவன் எக்குறையும் வைக்க மாட்டான். Take care and be safe ma .

Kamala Hariharan said...

வணக்கம் சகோதரி

நலமா? அனைவரும் எப்படியுள்ளீர்கள்.? படங்கள் எல்லாம் பார்க்கவே மனதுக்கு கஸ்டமாக இருக்கிறது. நீங்கள் விவரித்து பதிவில் கூறும் போது மனது பதற்றமடைந்தது. கடவுள் அருள் எப்போதும் நமக்கிருந்தால் நல்லது. அனைத்து சிரமங்களும் நல்லபடியாக நிவர்த்தியாக நானும் அங்குள்ள அனைவருக்காகவும் பிரார்த்தித்துக் கொள்கிறேன்.🙏. தங்கள் உடல்நலம் கவனித்துக் கொள்ளுங்கள்.

அன்புடன்
கமலா ஹரிஹரன்.

மாதேவி said...

மனதுக்கு மிகுந்த வருத்தமாக இருக்கிறது.படங்களை பார்க்கும் போது துன்பநிலைமை தெரிகிறது.

நாங்களும் சண்டைகாலத்தில் பங்கருக்குள் இருந்து பிரார்த்தனை செய்தவர்கள்தாம்.

நீங்கள் நலமாக இருப்பது அறிந்து மகிழ்ச்சி.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் ஸ்ரீராம்,
இந்த ஊரில் நான் இருக்கும் இடம் மிட்வெஸ்ட்.
இங்கே இந்த சூறாவளி,மழை கோடை காலத்தில் வரும். பயங்கர் இடிகளும், கண்ணைப் பறிக்கும் மின்னல்களும் அச்சுறுத்திவிட்டுப்
போகும்.

டொர்னாடோ வாட்ச் கொஞ்சம் சுமார்.
பாதிப் பாதி சன்ஸ்.
டொர்னாடோ வார்னிங்க் என்பது. நூறு சதவிகிதம்.
சுழலும் பம்பரமாகக் காற்றடித்து வீடுகளைத்
தரை மட்டம் ஆக்கிவிடும்.

இந்த பேஸ்மெண்ட், நிலவறை போல
கட்டிடத்தின் அஸ்திவாரத்தை ஒட்டி வீட்டின் கீழே
இருப்பது.
பாதுகாப்பானது.
அதாவது கடவுள் கிருபையில் உயிர்கள்
காப்பாற்றப் படும். மற்றது கடவுள் எழுதியபடி.
நாம் முன்சாக்கிரதையுடன், பதட்டம் இல்லாமல்
இருக்க வேண்டும்.

எல்லாமே அவன் அருள்தான்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு முரளிமா,
நம்புங்கள் இது விளையாட்டே இல்லை.

பயங்கரமானது. இன்று கூட மகளின் தோழி
வீட்டை இழந்தவர் வீடியோ அனுப்பி இருந்தார்.
மிக மிக வருத்தமாக இருந்தது.

இன்ஷுரன்ஸ் உண்டுமா.
ஆனால் இழந்த நல்ல பொருட்களுக்கு ஏது விலை?

நிலவறைகள் ஒவ்வொரு ஊருக்கு ஒருவிதம்.
இந்த ஊரில் எல்லாமே மரம் இல்லையா. அந்த
அறை மட்டும் , நல்ல காங்க்ரீட்டால் ஆகி இருக்கும்,
முழு வீட்டைப் போல அதே மாடலில்
அறைகள் இருக்கும்.
முந்தைய அனுபவங்களில் நான் கீழே இருக்கும்
குளியலறையில் ஷவர் ஸ்டாலுக்குள்
உட்கார்ந்தும்,
அதிர்வுகளை உணர்ந்திருக்கிறேன்.
அடுத்த பதிவில் அதைப் பற்றிச் சொல்கிறேன்.
இறைவன் அருள் என்றும் நம்முடன் இருக்கட்டும்.

வல்லிசிம்ஹன் said...

சூறைக்காற்றில் கார்களே நசுங்கிவிடும்.
மரங்கள் வேருடன் சாய்ந்து விடும்.
தகரம் பறந்தால் முகத்திலோ
வேறெங்குமோ அடிபடலாம். பத்திரமாக
இருக்க வேண்டும்.
ஜன்னல் எல்லாம் உடையும்.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கீதாமா,
ஆமாம்மா.
கோடைகாலத்தில் அப்போது இங்கே இருந்தீர்கள்
இல்லையா.

டெக்ஸாஸ் இன்னும் திறந்த வெளிகள் அதிகம்.
என்னவோ, இந்த ஊர் இவ்வளவு பெரிது.. இந்த ஊரின் பிரச்சினைகளும் பெரிது.
ஹ்யூஸ்டனின் வெள்ளம் மறக்காது.

அந்த படபடப்பு அடங்கவே 48 மணி நேரம் ஆனதுமா.
வுட்ரிட்ஜ் என்ற இடத்தில் வாயு பகவானின்
ஆட்டம் அதிகம்.
என்னேரமும் இறைவனே ,அவனுடைய நினைவே
நம்மைக் காக்க வேண்டும்.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் சின்ன கீதாமா,

எதிர்பாராத விருந்தாளியாக வந்து அதிர்ச்சி கொடுத்தது.
பத்து மணி வரை எல்லாம் சரி.
10.30க்கு சைரன் ஊத ஆரம்பித்தது.

மகள் எதற்கும் தளர மாட்டாள். அன்று அவள் முகத்திலேயே
கவலை பார்த்தேன்.

அபார்ட்மெண்டில் இருப்பவர்களுக்குத் தனி
ஷெல்டர்ஸ் உண்டு மா.
தொலைக்காட்சி பார்க்காதவர்கள்,
ரேடியோ கேட்காதவர்களுக்கு அவஸ்தை தான்.

வல்லிசிம்ஹன் said...

சேதம் அடைந்த வீடுகள் கட்டிக் கொடுக்கப்படும்.

அவர்களுக்கு அப்பார்ட்மெண்ட் கொடுப்பார்கள்.
7.8
மாதங்களாவது ஆகும் வீடு கைக்குக் கிடைக்க.

ஆமாம். உயிர் பிழைத்தது இறைவன் அருள். அவர்கள் எல்லோருமெ
இதைச் சொன்னார்கள்.

பகவான் நம்முடன் இருக்க வேண்டும் மா.
நன்றி கீதா மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கோமதிமா,
வாழ்க வளமுடன்.

ஆமாம்மா. இன்னும் கலவரம் அடங்கவில்லை.
பயப்பட்டுப் பயன் இல்லை. சின்ன மகன் சொன்னது போல
காட்டுத்தனமான ஊர்.

எத்ற்கும் துணிந்த மனம் எப்பொழுதும் வேண்டும்.
அரசாங்கத்தின் தயவு எப்பொழுதும் உண்டு.

மழை பற்றிப் பேசின நினைவு. இருக்கிறது.
மழையோடு கூடவே இதுவும் வரும் என்று
எதிர்பார்க்கவில்லை.
நீங்களே பார்த்திருப்பீர்களே .எல்லாமே பிரம்மாண்டம் தான்.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கோமதி மா,
எல்லோருக்கும் உண்டானதுதான் மா.
அவதிக்குள்ளானவர்களை நினைத்தே வருத்தம். படங்கள்

எல்லோருக்கும் வந்தது.
நானும் பதிவு செய்தேன் மா.
எல்லோரும் மீள வேண்டும் இறையருள் முன்னிற்கட்டும்.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் தனபாலன்,
நம்மூரிலும் இதை விட எத்தனையோ சேதங்கள் ஏற்பட்டனவே வெள்ளத்தின்
போது.
இங்கே சீக்கிரமாக உதவி கிடைக்கும்.
நம்மூரில் உதவி செய்ய மக்கள் அனேகம் இருப்பார்கள்.
அந்த இடத்தை அடையக் கொஞ்சம் நேரமாகும்.
அவ்வளவுதான்.
அனைவரும் நலம் பெறுவோம்.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் வானம்பாடி,
ஆறுதல் வார்த்தைகளுக்கு நன்றி மா.

எல்லாவற்றையும் சமாளிக்கணும் இல்லையாமா.

இறைவன் நம்மைக் காப்பான்.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கமலாமா,
அந்தப் பாதிக்கப் பட்ட குடும்பங்களுக்காகவும் '
எதிர்கால பாதுகாப்புக்காகவும் நாம் பிரார்த்திப்போம்.

நம்மால் முடிந்தது அதுதான்.
மிக அழகான ஆபத்தான ஊர்.

நாம் எப்பொழுதும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
கடவுள் நாமாவைச் சொல்லிக் கொண்டே ,'நல்ல சிந்தனைகளுடன்
நம் நேரத்தைச் செலவழிக்க வேண்டும்மா.
தங்கள் அன்புக்கும் ,ஆதரவுக்கும் மிக மிக நன்றி.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் மாதேவி ,
நீங்கள் எல்லாம் அங்கு படாத கஷ்டமே இல்லை. இது இயற்கை விளைவு.
அங்கு மனிதர்களின் செயல்.
இறைவன் நம்மை என்றும் காக்கட்டும். நலமுடன் இருங்கள் அம்மா.

வெங்கட் நாகராஜ் said...

படங்களைக் காணும்போதே அதிர்ச்சியாக இருக்கிறது. நலமே விளையட்டும். கவனமாக இருங்கள். நலமுடன் இருக்க இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறேன்.