Follow by Email

Monday, June 21, 2021

அன்புள்ள அப்பா

வல்லிசிம்ஹன்


தந்தையர் தினம்......

அனைவருக்கும் இனிமையான வாழ்க்கையைத் தரும் 
உழைத்த, உழைத்துக் கொண்டிருக்கும், உழைக்கப் 
போகும்  தந்தைகளின்  சிறப்பு  நாம் உணர்ந்ததுதான்.

மகனோ மகளோ  அந்த அருமையை 
உணராமல் இருக்க முடியாது.
எங்கள் நாட்களில் தந்தையைத் தொட்டுப் பேச வேண்டும் என்றெல்லாம்
தோன்றியதில்லை.
மரியாதை. கடவுள் நேரில் வந்துவிட்ட உணர்வுதான்.

அப்பாக்களை அந்த உயரத்தில் வைக்க அம்மாவும் ஒரு காரணம்.
அவள் அவரைத் தெய்வமாக நினைத்தாள்.
அப்பா தன் தந்தை தாயைத் தெய்வமாகப் 
பார்த்தார்.
அவர்கள் சொல்லை மீறிய  வினாடி என்று 
ஒன்று கூடக் கிடையாது.
தாத்தாவின் எதிரில் அப்பா உட்கார்ந்து கூடப் 
பார்த்ததில்லை.
பாட்டியின்  மனதில் என் அப்பாவும் சித்தப்பாவும்
ராமர் லக்ஷ்மணர்தான்.

அண்ணன் தம்பி இருவரும் ஒருவரை ஒருவர் நேசித்தனர்.
தாத்தா பாட்டி மறைவுக்குப் பிறகு இருவரிடமும் 
பாசம் இன்னும் அதிகரித்தது.
சித்தப்பாவின் பச்சை இங்க் கடிதங்கள் இன்னும் நினைவில்!!
இருவரும் படித்தது பாளையங்கோட்டையில் தான்.

அந்த மாதிரி கையெழுத்தை ஆங்கிலத்திலோ தமிழிலோ
வேறெங்கும் பார்த்ததில்லை.
எங்கள் மாமா ராமசாமியும் அப்படித்தான் எழுதுவார்.
இத்தனை நல்ல ஆண்கள்  இருந்த குடும்பத்தில்
வளர்ந்த என் தம்பிகளும் நல்ல தந்தைகள்
ஆனார்கள்.
இந்தத் தலைமுறைக்கு சித்தப்பா மகன்,
அவனுடைய மகன், எங்கள் பையர்கள்
எல்லோருமே நாணயமான முறையில் தங்கள் குடும்பத்தைக்
காத்து வருவார்கள்.
நல்ல விதைகள் நல்ல நாற்றுகள் நல்ல பயிர்கள்.
அனைவருமே இறைவன் அருளால் அளவில்லா
ஆரோக்கியத்துடனும்  நீண்ட வாழ்வுடனும் செழிப்பாக
இருக்க வேண்டும்.
நம் இணையத் தந்தையர் அனைவருக்கும்
நல் வாழ்த்துகள். உங்களைக் கௌரவிப்பதால்
அன்னையரும் பெருமை கொள்கிறார்கள்.


23 comments:

ஸ்ரீராம். said...

அழகான அஸ்திவாரம்.  நல்லதொரு குடும்பம்.  பல்கலைக்கழகம்.  உங்கள் அப்பா அம்மா அவர்கள் அப்பா மாமாவை மதித்த பாங்கு..  பெரியவர்கள் அடுத்த தலைமுறைக்கு உதாரணமாக திகழ்கிறார்கள்.

ஸ்ரீராம். said...

ஆனந்த யாழை மீட்டுகிறாய்..   என்ன அருமையான பாடல்.

KILLERGEE Devakottai said...

கோமதி அரசு  சகோவும் இதே தலைப்பில் பதிவிட்டுள்ளார்கள்.

எனது வாழ்த்துகளும்கூடி...

//அப்பாக்களை அந்த உயரத்தில் வைக்க அம்மாவும் ஒரு காரணம்.//

ஒரு காரணம் இல்லை அம்மா மூலகாரணமே அம்மாதான்.

"அந்த அம்மா" எனது பிள்ளைகளுக்கு இல்லாததால்தான் எனக்கு இந்தநிலை.
அருமையான பாடல்.

Geetha Sambasivam said...

அனைத்துத் தந்தையர்களுக்கும் பணீவான நமஸ்காரங்கள். வாழ்த்துகள்.

கில்லர்ஜியின் வேதனை கலங்க அடிக்கிறது. :(

கோமதி அரசு said...

அருமையான பதிவு.

தேவகோட்டை ஜி சொல்லி இருப்பது போல் அம்மா ஒரு இணைப்பு பாலம் குழந்தைகள் அப்பா, மற்றும் உறவுகளுடன் நல் உறவாக இருப்பதற்கு .

அவர்கள் எல்லாம் உடன்பிறந்தவர்களுடன் இல்லை , ஒன்று விட்ட பெரியப்பா, சித்தப்பா, மாமா, மாமிகளீடமும் பிரியமாக இருக்க கற்றுக் கொடுத்தவர்கள். அந்த ஆலமரங்களின் நிழலில்தான் எத்தனை எத்தனை பறவைகள்(உறவுகள்) வந்து இளைப்பாறி செல்லும். அப்பா, அம்மா போன் பின் காலமாற்றத்தால் சில உறவுகளுடன் நெருக்கம் இல்லை. இந்த தலைமுறைகளுக்கு அப்படி போய் வந்து மகிழ சந்தர்ப்பம் குறைவு. அவர்கள் சூழ்நிலை அப்படி. யாரையும் குறை சொல்ல முடியவில்லை.

அப்பாவின் செல்லப்பிள்ளை நான். திருமணமாகி தலை தீபாவளி சீர் கொடுக்க கோவை வந்த போது மடியில் படுத்துக் கொண்டு பேசியதை என் ஓர்ப்படிகள் எல்லாம் வியந்து பார்த்தார்கள்.

அவர்கள் அப்பாவிடம் எட்டி நின்றுதான் பேச வேண்டுமாம். என் அப்பா தான் பெற்ற எல்லா குழந்தைகளிடமும் மிகவும் பிரியமாக சிறு குழந்தை போல் விளையாடுவார்கள். முதல் மாதம் சம்பளம் வாங்கி வந்தால் கை நிறைய இனிப்புகள், பிஸ்கட் என்று வாங்கி வந்து தருவார்கள். எந்த ஊர் சென்றாலும் பெண் குழந்தைகளுக்கு பாசிமணி மாலைகள், கலர் ரிப்பன் வாங்கி வருவார்கள்.

முன்பு அப்பாவைப்பற்றி நிறைய பதிவுகளில் சொல்லி இருக்கிறேன்.
கோமதி அரசு said...

பாடல் பிடித்த பாடல் கேட்டு ரசித்தேன் அக்கா.

Thulasidharan V Thillaiakathu said...

அம்மா, அருமையான வார்த்தைகள் வாக்கியங்கள் கொண்ட பதிவு ஓர் அழகான குடும்பத்தைப் பற்றி.

அம்மா தான் அப்பாவை பிள்ளைகள் மதிக்கக் காரணம் கண்டிப்பாக.

உங்கள் பாட்டி சூப்பர் அம்மா! அப்படித்தான் இருக்க வேண்டும் பிள்ளைகளை ஒரே போல பார்ப்பது...

அன்பு ஒரே போலக் கொடுப்பது..

அழகான பதிவு அம்மா

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

பாட்டு அருமையான பாட்டு அம்மா

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

அம்மா தன் பிள்ளைகள் எத்தனை பேர் இருந்தாலும் அனைவரையும் ஒரே போல அன்பு செலுத்தி நடத்த வேண்டும். அப்படித்தான் நடத்துவாள் அம்மா என்றால் தாய்மை என்றெல்லாம் நான் நம்பிக் கொண்டிருந்தேன் உலகிலேயே உயர்வானவள் அம்மா என்றெல்லாம்...ஆனால் பிள்ளைகளில் குணங்களில் சில வித்தியாசங்கள் இருக்கலாம், ஆரோக்கியக் கோளாறுகள் இருக்கலாம்... ஆனால் அதற்காக ஒருவனை தூக்கி வைத்துக் கொண்டாடுவது மற்றவரை தாழ்த்திப் பேசுவது என்பதை நான் கண்ணால் நேரில் கண்டதால்தான் ஏனோ எல்லாத்தாய்களும் என்று சொல்வதில் எனக்கு மாறுபட்ட கருத்தும் ஏற்பட்டது.

கீதா

திண்டுக்கல் தனபாலன் said...

சிறப்பான பாடல்...

Kamala Hariharan said...

வணக்கம் சகோதரி

அருமையான பதிவு. தந்தையர் தினத்தை நினைவாக மிகவும் அழகாக பதிவாக்கியிருக்கிறீர்கள்.

/எங்கள் நாட்களில் தந்தையைத் தொட்டுப் பேச வேண்டும் என்றெல்லாம்
தோன்றியதில்லை.
மரியாதை. கடவுள் நேரில் வந்துவிட்ட உணர்வுதான்.

அப்பாக்களை அந்த உயரத்தில் வைக்க அம்மாவும் ஒரு காரணம்.
அவள் அவரைத் தெய்வமாக நினைத்தாள்.
அப்பா தன் தந்தை தாயைத் தெய்வமாகப்
பார்த்தார்.
அவர்கள் சொல்லை மீறிய வினாடி என்று
ஒன்று கூடக் கிடையாது./

ஒவ்வொரு வரிகளும் சிறப்பாக உள்ளது.ஆம்...உண்மைதான்.. நாம் மரியாதை நிமித்தம் நம் அம்மாவின் சொல்படி அப்பாவை, உடன் பிறந்த அண்ணாவை, குடும்பத்திலுள்ள மற்ற பிடித்தமான ஆண் உறவுகளை தொட்டுப் பேசியது கிடையாது. ஆனால் அவர்களிடம் தள்ளி நின்று பேசும் போதே நம் மகிழ்வு, அவர்களின் அன்பு, பாசம் வார்த்தைகளில் வெளிப்படும்.நீங்களும் அழகான பதிவாக வெளிப்படுத்தியுள்ளீர்கள். பாடலும் நன்றாக உள்ளது. இன்றுதான் முதன் முதலில் கேட்கிறேன் என நினைக்கிறேன். அன்பான பகிர்வுகளுக்கு மிக்க நன்றி சகோதரி.

நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.

மாதேவி said...

நல்லதோர் குடும்பம். தலைவணங்குகிறேன்.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் ஸ்ரீராம்,
அண்ணன் தம்பிகளுக்குள் குணங்களில் மாற்றம் இருக்கலாம்.
ஆனால் அப்போது
பாசம் பொதுவாக இருந்தது,
தம்பி குடும்பத்தை அண்ணன் கவனிப்பதும், அண்ணன் குழந்தைகளைத் தம்பி போற்றுவதுமாக இருந்த சூழல்.
செழிப்பான உறவுகளுக்கு அடிப்படையாக
இருந்தது.
நாம் சொல்லி நடந்துதான் பிள்ளைகள் அந்த வழி நடக்கிறார்கள்.
இப்போது நிறைய மாறிவிட்டது.
இருந்தாலும் நன்மை செழிக்க இருக்கட்டும்.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் தேவகோட்டைஜி,

அம்மா இல்லாத சம்சாரத்தை நினைத்துக் கூடப்
பார்க்க முடியவில்லை.
இந்த இளம்வயதில் இத்தனை சோதனைகளா என்று
மிக மிக வேதனையாக இருக்கிறது.

நீங்கள் நல்ல தந்தையாகக் கடமையை நிறைவேற்றி விட்டீர்கள்.
உங்களுக்கும்
அன்பும் ,பாசமும் மீண்டும் கிடைக்க வேண்டும்.

வல்லிசிம்ஹன் said...

அவர்கள் எல்லாம் உடன்பிறந்தவர்களுடன் இல்லை , ஒன்று விட்ட பெரியப்பா, சித்தப்பா, மாமா, மாமிகளீடமும் பிரியமாக இருக்க கற்றுக் கொடுத்தவர்கள். அந்த ஆலமரங்களின் நிழலில்தான் எத்தனை எத்தனை பறவைகள்(உறவுகள்) வந்து இளைப்பாறி செல்லும். அப்பா, அம்மா போன் பின் காலமாற்றத்தால் சில உறவுகளுடன் நெருக்கம் இல்லை. இந்த தலைமுறைகளுக்கு அப்படி போய் வந்து மகிழ சந்தர்ப்பம் குறைவு. அவர்கள் சூழ்நிலை அப்படி. யாரையும் குறை சொல்ல முடியவில்லை./////////////////////////////////////////////////////////////////////////அன்பின் கோமதிமா,
வாழ்க வளமுடன். அருமையாகச் சொல்லி இருக்கிறீர்கள்.
பலபல தேசங்களில் விரவிக் கிடக்கும் குடும்பம். சென்னை வரும்போது கண்டு கொள்ளும் உறவுகள்.
எல்லாமே மாறி விட்டன.
யாரையும் ஒன்றும் சொல்லுவதில் பலன் இல்லை.
என் பசங்க. அத்தைகளுடனாவது
பேச்சு வார்த்தை வைத்துக் கொண்டிருக்கிறார்கள்
குடும்பங்கள் நலமாக
இருக்கட்டும் அம்மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கீதாமா, காலங்களின் கொடுமை
பழமையான குடும்ப உறவுகளை மாற்றி இருக்கிறது. பாவம் நம் தேவகோட்டைஜி.
அவரின் மக்கள் குணங்கள் மாறட்டும்.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் சின்ன கீதா,
நம் திருக்குறுங்குடிப் பாட்டி பெருந்தன்மையான
மனுஷி.
மகள்களிடம் பொருட்களைக் கொடுப்பார்.
மரும்கள்களிடம் அன்பு காட்டுவார்.
நல்ல உழைப்பாளி.
சர்க்கரை நோய் வந்த்ராவிட்டால்
இன்னும் நிறைய காலம் இருந்திருப்பார்,.

வல்லிசிம்ஹன் said...

அவர்கள் அப்பாவிடம் எட்டி நின்றுதான் பேச வேண்டுமாம். என் அப்பா தான் பெற்ற எல்லா குழந்தைகளிடமும் மிகவும் பிரியமாக சிறு குழந்தை போல் விளையாடுவார்கள். முதல் மாதம் சம்பளம் வாங்கி வந்தால் கை நிறைய இனிப்புகள், பிஸ்கட் என்று வாங்கி வந்து தருவார்கள். எந்த ஊர் சென்றாலும் பெண் குழந்தைகளுக்கு பாசிமணி மாலைகள், கலர் ரிப்பன் வாங்கி வருவார்கள்.//////////////////

@Gomathi என் அப்பாவும் இதெல்லாம் செய்வார். அம்மாவின் தூண்டுதல் வேண்டும். கைவினைப் பொருட்கள் செய்து ஒவ்வொரு குழந்தைக்கும் கொடுப்பார்.
பாசம் எல்லாம் மனம் கொள்ளா அளவு.

பேத்தி பேரங்களை மடியில் வைத்து க் கொஞ்சி செய்வார்.
பெற்ற பிள்ளைகளிடம் தள்ளினின்றெ

பாசம் காட்டுவார்,:)
உங்கள் அப்பாவைப் பற்றிப் படிக்கப் படிக்க
இன்னும் மகிழ்ச்சிமா.
நன்றி கோமதி . வாழ்க வளமுடன்.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் சின்ன கீதாமா,
சில குடும்பங்களில்
இது போல நிகழ்வதைப் பார்த்திருக்கிறேன்.

ஆரோக்கியக் குறைபாடுகளுடைய பிள்ளைகளின் மேல் தனிப் பாசம் காண்பிக்கும்
பெற்றோரைக் கண்டிருக்கிறேன்.
சம்பாதிக்காத பிள்ளைகளை இன்னும்
செல்லம் கொடுத்துக் கெடுக்கும் அம்மாக்களையும்
பார்த்திருக்கிறேன்.
எல்லாருமே நல்ல அம்மாக்களாக இருப்பது
இயலாத காரியம்.இருப்பதில்லை.
நன்றி கண்ணா.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் தனபாலன் மிக மிக நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

ஒவ்வொரு வரிகளும் சிறப்பாக உள்ளது.ஆம்...உண்மைதான்.. நாம் மரியாதை நிமித்தம் நம் அம்மாவின் சொல்படி அப்பாவை, உடன் பிறந்த அண்ணாவை, குடும்பத்திலுள்ள மற்ற பிடித்தமான ஆண் உறவுகளை தொட்டுப் பேசியது கிடையாது. ஆனால் அவர்களிடம் தள்ளி நின்று பேசும் போதே நம் மகிழ்வு, அவர்களின் அன்பு, பாசம் வார்த்தைகளில் வெளிப்படும்.நீங்களும் அழகான பதிவாக வெளிப்படுத்தியுள்ளீர்கள். பாடலும் நன்றாக உள்ளது. இன்றுதான் முதன் முதலில் கேட்கிறேன் என நினைக்கிறேன்.//////////அன்பின் கமலாமா,

பாசம் தொட்டால் தான் வளருமா என்று அம்மா சிரிப்பார்.

இப்போது எல்லோரும் அப்படித்தான் இருக்கிறார்கள். என் நாட்களில்
கொஞ்சம் அதிசயம் தான். ஆனால்
ஒருவரோடு ஒருவர்
பார்க்கும் போதே ஆனந்தம் கண்களில்
வழியும். கத்தலுக்கும் கூச்சலுக்கும் குறைவே
இராது.
நீங்கள் சொன்ன விதம் தான்.

அதுதான் சரி. உங்கள் புரிதல் மிகுந்த மன மகிழ்வைத் தருகிறது மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் மாதேவி,
மிக நன்றி மா.

வெங்கட் நாகராஜ் said...

தந்தையர் தினத்திற்கான உங்கள் பதிவு சிறப்பு. அம்மா தான் மூலகாரணம் என்பதும் சரியான வார்த்தைகள்.

The Secret Language of Trees