Tuesday, August 20, 2019

பயணத்தின் ஏழாம் நாள் பகுதி 3

Sea to Sky Highwayவல்லிசிம்ஹன்
எல்லோரும் வளமாக  வாழ வேண்டும் 

பயணத்தின் ஏழாம் நாள்   பகுதி 3
 Vancouver லிருந்து  கிளம்பி  பிரிட்டிஷ் கொலம்பியாவின் 
கடலோரமாகச் செல்லும்  கடற்கரை  சாலை புகழ் பெற்றது.
ஏழாம்  நாள்   காலை 
விடுதியின்  காலை உணவை முடித்துக் கொண்டு 
கிளம்பினோம். கனடா நாட்டின் இயற்கைக்கு காட்சிகளும்  மிதமான உஷ்ணமும் எல்லோருக்கும் பிடித்திருந்தது.
காலையிலே மதிய உணவுக்கான  ஏற்பாடாக கத்திரிக்காய்  சாதமும்  பலவிதமான  நொறுக்குத் தீனிகளும்    கூ டவே ஏறின. 
மாப்பிள்ளையும், பெரிய பேரனும் பழவகைகளை  சிறிய அளவில் நறுக்கிக் கொண்டு  ஐந்து பைகளில் போட்டு வைத்தார்கள்.
Image result for sea to sky highway
இரு வழிச்சாலை கள் நிறைய விரையும்  பலவித  வண்டிகள் 

முதல் நிறுத்தம்  இந்தப் பாலம். கண்ணுக்கெட்டிய  வரை  நீல நிறம் தான்.
நீல நிறம் வானுக்கும் கடலுக்கும்  நீல நிறம் பாடல் நினைவுக்கு வந்தது.
   ஊசி இலைக்காடுகள் கடலின் காட்சியை  மறைத்தாலும்  வெண்மேகங்கள் பலவித வடிவங்களில்  எங்களைத் தொடர்ந்தன.

Image result for sea to sky highway
ஒரு  இடத்தில்  நிறுத்த பலமைல்கள் போக வேண்டி இருந்தது 
மலையும்  மடுவும்
பாறைகளாகச் சில மலைகள்.  பச்சை வண்ணம் போர்த்திய சில மலைகள். தூரத்தில் தெரிந்த நீலமலைகள்  என்று கண்கொள்ளாக்காட்சிகள். மேலே  போகும் சாலையிலிருந்து 

கீழே  தெரியும்  சாலை. என்று  பல காட்சிகளை 
காமிராவில் பாதி ,மனதில் மீ தி என்று இருத்திக் கொண்டோம் 

Sunday, August 18, 2019

பயணத்தின் ஒன்பதாம் நாள்......சியாட்டில், வான்கூவர், விக்டோரியா...2

வல்லிசிம்ஹன்

எல்லோரும் நலமாக வாழ வேண்டும்.


   பயணத்தின் ஒன்பதாம் நாள்......சியாட்டில், வான்கூவர், விக்டோரியா...2
தங்கியிருந்த  விடுதியின் ஜன்னலிலிருந்து.
 பயணம்  முடிந்து  கிளம்பும் நாள் வந்தது.

அன்புத் தோழி திருமதி.பானுமதி வெங்கடேஸ்வரனின் கணவர் பூரண குணம் பெற  வேண்டும். நம் எல்லோருடைய  பிரார்த்தனைகளும் அவர்களுடன் தான்.

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
 ஆரம்பித்திலிருந்து ஆரம்பிக்காமல் ஒரு மாறுதலுக்காக
பூர்த்தியான பயண நாளிலிருந்து எழுதுகிறேன்.

காலை 8 மணிக்கு சியாட்டிலிலிருந்து கிளம்ப வேண்டும்.
நான்கு  அனைவரும் எழுந்தாகி விட்டது. 
இந்த எட்டு நாட்கள் , அருமையான சாலைகளில்,
சொகுசான வண்டியில்  அமர்ந்து பயணம் செய்தாலும் சென்ற இடங்கள்

200 மைல்கள் தூரத்தில் அமைந்திருந்ததால்
முதுகும் ,காலும் தங்களைக் கவனிக்கச் சொல்லி வற்புறுத்தின.
சின்னப் பேரனே, கால் வலி சொன்னான் என்றால்
பார்த்துக் கொள்ளுங்கள்.
பெரிய பேரன் கொண்டுவந்த டிராலியில் பெட்டிகளை
அடுக்கி வைத்தான். அவன் இந்த ஊரில் மூன்று மாதங்களாகத்
தொழில் பயிற்சி மேற்கொண்டிருந்ததால்,
அவன் பெட்டிகள் இரண்டு எங்கள் நால்வருக்கும் ஏழு நாட்களுக்கான
 உடைகள் நிரம்பிய பெட்டிகள் மூன்று என்று அந்த 
தள்ளு வண்டி நிரம்பியது.
காப்பி தயாரித்துக் குடித்துவிட்டு, ஹில்ட்டன் அளிக்கும் 
விமான நிலையத்துக்கான பெரிய வண்டியில் ஏறத்தயாரானோம்.
மற்ற பயணிகள் ஏறியதும் என் முறை. உயரமாக இருந்த அந்த வண்டியின்
படியில் ஏற முயற்சி செய்து முழங்காலில் அடி வாங்கியதுதான் 
மிச்சம்.
பிறகுதான் அந்த ஓட்டுனர் ஒரு ஸ்டூலைக் கொடுத்து உதவினார்.
அதன் மேல் கால் வைத்து ஏறுவது சுலபமாக இருந்தது.
இதை அப்பவே கொடுத்திருக்கக் கூடாதோ
இந்த மனிதர் என்று சுணங்கிய வண்ணம் காலைக் கதிரின் உதய நேரம் விமான நிலையம்
வந்தடைந்தோம்.

Sea/tac Airport , Seattle Tacoma, வசதி நிரம்பியது. ஆர்ப்பாட்டம் இல்லாமல் 
சக்கிர நாற்காலி ஏற்பாடு செய்துகொண்டு 
உதவிக்கு வந்த மரியாவுடன் முன்னேறினோம்.
American Airlines விமானம் தயாராகிக் கொண்டிருந்தது.
பக்கத்திலிருந்த  நம்மூர்க்காரர்களுடன் பேச்சுக் கொடுத்ததில்,
கல்கத்தாவிலிருந்து பயணம் மேற்கொண்டவர்கள் என்று 
தெரிந்தது. 
இரண்டு தம்பதிகள் .60 வயதுக்காரர்கள். ஒரு மாத பயணத்தில்
நியுஜெர்சியில் ஆரம்பித்து பத்து இடங்கள் சுற்றி, இங்கு
வண்டி ஏறுகிறார்கள்.மீண்டும் நியுஜெர்சி சென்று இந்தியா திரும்பப்
போவதாகவும் சொன்னார்கள்.

நல்ல உற்சாகம், உடல் தெம்பு எல்லாம் இருந்தது.
அடுத்த பயணமாக ஜப்பான் முதலிய நாடுகளுக்குச் செல்லப் போவதாகத் திட்டம்
போட்டாகிவிட்டது.
விமான முன்னறிவிப்பு வந்ததும் கிளம்பினோம்.
நான்கு மணிகள் கடந்து சிகாகோ வந்துவிட்டோம்.
என் கைப்பையைத் தான் காணவில்லை.
சக்கிர நாற்காலியில் உட்கார்ந்த போது இருந்தது.
  வெளி லௌஞ் வந்த போது காணோம். 
பெண்ணும் மாப்பிள்ளையும் மீண்டும் உள்ளே ஓடினார்கள்.
என் க்ரெடிட் கார்ட், வங்கி கார்ட் எல்லாம் 
அதில் இருந்தன.
கடவுளைப் பிரார்த்தித்தபடி இருந்தேன்.
பெண்ணும் மாப்பிள்ளையும் கவலை தோய்ந்த முகத்தோடு விமானத்திலிருந்து வெளியே
வர ,கலங்கி விட்டேன்.
அடுத்த நிமிடம் விமானத்தைச் சுத்தம் செய்யும் பெண் 
இதுதான் உங்கள் பையா என்று நீட்டினார்.
சென்ற மூச்சு திரும்பி வந்ததும் நன்றி சொல்லி இடத்தைக் காலி செய்தோம்.
உள்ளிருக்கும் பர்சைத் திறந்து பரிசோதனை செய்தேன்.
அட்டைகள் இருந்தன, மாலை ஒன்றும், பேத்திகளுக்காக வாங்கிய
மணிகள் கோர்த்த வளையல்களையும் காணோம்.
அவைகளையும்   கையில் கொண்டு சேர்த்து விட்டார் . அந்தப் பணிப்பெண்.
என்றும் வளமுடன் வாழ வேண்டும் அவரது நேர்மை.

கடவுளுக்கு நன்றி சொல்லிய படி, வாடகை வண்டியில் ஏறி
ஒரு மணி நேரத்தில் வீடு வந்து சேர்ந்தோம். தொடரும்


Friday, August 16, 2019

பயணம் போய் வந்த கதை ///1

வல்லிசிம்ஹன்

எல்லோரும் வளமாக வாழ  வேண்டும்

பயணம் போய் வந்த கதை  ///1


இது எங்கள் எட்டாம் நாள் பயணத்தின் விவரம்.

இது  பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் இருக்கும் ஒரு  கனிமச்  சுரங்கம் 

இங்கே இங்கிலாந்து முதலாளிகள் ஆரம்பித்த   கம்பெனி  காட்சியகமாக 
இன்னும் இருக்கிறது.
பிரம்மாண்டமான கட்டிடம்.
அதில் வேலை செய்த  சுரங்கத் தொழிலாளியின் பாடல்.

ஒவ்வொரு  நாளும் 16    டன் கரி அள்ளும் அவனுக்கு கிடைத்ததெல்லாம் இந்தக் கம்பெனி ஸ்டோருக்குப் போய்விடுகிறது.

வாழ்வின் இறுதி வரும் வேளையில் என்னிடம்  ஒன்றும் இருக்காது,
என்று சொர்க்கத்தின் செயின்ட்    பீட்டரிடம்  சொல்கிறான்,
அவனது ஆத்மாவும் அந்தக் கம்பெனிக்குச் சொந்தமாம்.

நாங்கள் இங்கே சென்ற பொது அங்கிருந்த 
விற் 
பனைப் பெண்கள் எத்தனை வற்புறுத்தியும் எனக்கு அங்கு செல்ல மனமில்லை,.

எத்தனை ஆயிரம் தொழிலாளிகள் இங்கே பாடுபட்டிருப்பார்கள்.
ஒவ்வொரு நாட்டிலும் ,உயிரைக் கொடுத்து  உழைத்து பகைவகைக் கனிமங்களை  வண்டிகளில் தள்ளிக் கொண்டு மேலே வந்து நல்ல காற்றை சுவாசிப்பார்கள்.//சித்திரச்சோலைகளே பாடல் தான் நினைவுக்கு வந்தது.//
அந்தப் பெண்களிடம்  Sixteen tonnes பாடலைப் பற்றிச் சொன்ன பொது 
பாடியே காண்பி த்தார்கள். 
அங்கு வந்த ஓரிரு முதியவர்களும் தலையாட்டி ரசித்தார்கள்.
இங்கே  எடுத்த படங்களை இன்னும் வலை  ஏற்ற வில்லை.

இந்த மியூசியம் குழந்தைகளை அழைத்துச் சென்று காண்பிக்க வசதியாக
இருக்கிறது.

வெளியே  பார்த்த படங்களே  பிரமிப்பூட்டின.

எனக்குக்  கிடைத்த இனிமையான அனுபவம்  சிங்கத்தோட பாடலை இங்கே கேட்க முடிந்தது தான். கீழே இருப்பது அந்த மியூசியம் பற்றிய காணொளி.

Monday, August 05, 2019

பொறுமையின் பலம் 5

வல்லிசிம்ஹன்

எல்லோரும் வளமாக  வாழ வேண்டும்.


++++++++++++++++++++++++++++++++++++++++++
 பொறுமையின் பலம் 5உப்பிலி அப்பனைத் தொழுது , தம்பிகளும் ,மனைவிகளும் ,அவர்களது செல்வங்களும்   மனம் நிறை மகிழ்ச்சியுடன்
பந்தல்குடிக்குத் திரும்பினர் .
 காலையில் கிளம்புவதற்கு முன் ,தம்பிகள் இருவரும்
அக்காவிடம் கேட்டார்கள். ஏன் மைலி, நாங்கள் தானே திருமாங்கல்யம் வாங்கணும்.
நீ யேன் வாங்கினே என்றதும் ,மைதிலி விளக்கினாள். நம் அம்மாவுக்கு
பெற்றோர் இல்லைடா. நான் அந்த ஸ்தானத்துல செய்கிறேன்.
செய்யச் சொன்னது உங்க அத்திம்பேர்தான் என்று சிரித்தாள்.

ஓ. அப்போசரி. என்றபடி வெற்றிலை,பாக்கு, மஞ்சள் ,மஞ்சள் வாழைப் பழங்களை
வைத்து அக்கா அத்திம்பேர் இருவரையும் வணங்கி,
ஒருவாரம் முன்னயே வந்து நடத்தி வைக்கணும் என்று
சீரியசாக முகத்தை வைத்துக் கொண்ட தம்பிகள் அணைத்துக் கொண்டாள்
மைதிலி.

வந்துடறோம் டா. நீங்கள் பத்திரமாகப் போய் வாருங்கள்
என்று அனுப்பி வைத்தாள்.

வாரிஜாவின் அடுத்த பக்கத்தைப் பார்க்கலாம்.
பிடிவாதம் உண்டு தான். ஆனால் பாசம் வைப்பதிலும் சளைத்தவள் இல்லை.
மைதிலி அம்மாவை விட மங்கா பாட்டியையும், விஜயராகவன் தாத்தாவையும் மிகவே
பிடிக்கும்.

அம்மாவின் கண்டிப்பு இல்லாமல் சொகுசாகப் பாட்டி வீட்டில் வளைய வரப் பிடிக்கும்.
பாட்டியின் திருநெல்வேலிப் பழக்கங்கள் பிடிக்கும்.
தாத்தாவின் சாமர்த்தியம் பிடிக்கும்.
மாமாக்களின் செல்லம் சற்றே அதிகம்.
 இதோ இப்போது நடக்கப் போகிற விழாவில்  ராஜகுமாரியாக வளைய வரப் போவதும் அவள தான். இரண்டு குடும்பங்களுக்கும் ஒரே  பேத்தி .
மற்ற குழந்தைகள் எல்லாம் பசங்களாகப்
போனதில் அப்பாவின் பெற்றோருக்கும்,
அம்மாவின் பெற்றோருக்கும் அவள்தான் முக்கியம்.
அவளுக்குத் தெரியாததது  மங்காப் பாட்டியின் கண்டிப்பு.
அதைப் பந்தல்குடிக்கு வந்த அடுத்த நாளே உணர்ந்தாள்.

பொண்ணே அங்க இங்க நிக்காதே. நிறைய பேர் வருவா போவா. 
நீ உங்க அம்மா, மாமிகள் நிழலை விட்டுப் போகாமல் உதவி செய்ய வேண்டும்.
வாசல் பக்கம் பந்தல் பக்கம் அலைய வேண்டாம்.
என் பிறந்து வீட்டு மனிதர்களும் வந்திருக்கிறார்கள்.

என் அக்கா,திருவேங்கடம் அவள் பேத்தியை அழைத்து வந்திருக்கிறாள்.
இன்னோரு தங்கை அவள் பேரனை பாம்பேலிருந்து அழைத்துக் கொண்டு வந்திருக்கிறாள்.

இந்தக் கோமளம் அத்தைகள்ட்ட வாயாடாதே.
இதோ பாரு வரானே  திருமலை அவந்தான் 
பாம்பே பெரியம்மா பேரன். சட்டம் படித்துக் கொண்டிருக்கிறான்
\என்றதுமே வாரிஜாவின் கவனம் திரும்பியது.
22 வயது இளங்காளையாக ,நெடு நெடு உயரத்தோடு
அங்கு வந்து தன் பாட்டியோடு பேசியவனிடம் உடன் அவள் மனம் ஒன்றியது.

16 வயது  சிம்முவும் , எட்டு வயது ஆண்டாளும்  ஆமாம்  அப்பொழுதே என்னைக் கண்டு கொண்டதாகப் பின்னாளில் கேலி செய்வார்.எனக்கு நினைவில்லை.//அவள் கண்ணில்
படவே இல்லை.
திருமலை மற்றவர்கள் கவனம் தன்னிடம் இல்லாத போது
வாரிஜாவின் அழகை ரசித்தான். அவளின் அமரிக்கையான பேச்சு பிடித்திருந்தது. // ஓ வாரிஜாவைன் துடுக்கு வால்  எங்கே போச்சு என்ற கேள்வி வரும். அவள் சிந்தை முழுவதும் திருமலையிடம் போய் விட்டது.

அவள் அவனிடம் பாம்பே பற்றி விசாரிக்க, அவன் கும்பகோணமும், காவிரியும், கோவில்களும் தன்னைப் பிடித்துக் கொண்டதைச் சொல்ல 
அடுத்து வந்த நாட்கள் பறந்தன.

மங்காப் பாட்டிக்கும் விஜயராகவன் தாத்தாவுக்கும் முறையோடு
வேதமந்திரங்கள்  ஒலிக்க, திருமங்கல்ய தாரணம் ஆயிற்று.
பளிச்சென்று பாரம்பரிய உடையில் அனைவரும் மிளிர்ந்தார்கள்.
ஆசீர்வாதம் சொல்லிக் குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கப் படும்போது
மைதிலிக்கும் உப்பிலிக்கும்  பட்டுப்புடவை, வேஷ்டி , சிகப்புக் கல் பதித்த
நெக்லஸ்  தந்தை தாயை இருவரும் வணங்கினார்கள்.


அடுத்த சம்பந்திகள் சம்பாவனையாக எல்லா சம்பந்திகளுக்கும்
புடவை வேஷ்டி.
மைதிலியின் தம்பிகளுக்கும் மனைவிகளுக்கும் நகையும் பட்டும் வேஷ்டியுமாகக் 
கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது.

பேத்தி பேரன் களை அருகில் அழைத்து அவர்களுக்குப் பொருத்தமான பரிசுகளை வழங்கினார்
தாத்தா. வாரிஜாவுக்கு தனியாக கெட்டியான சங்கிலியில் அன்னப் பட்சி கோர்த்த செயின்.
அதைப் போட்டுக்கொண்ட அடுத்த நிமிடம் வாரிஜாவின் கண்கள் திருமலையைத் தேடின.

அவன் முகத்தில் தெரிந்த ஆமோதிப்பைப் பெருமையாக
ஏற்றுக் கொண்டாள். இதை யெல்லாம் பார்க்க வேண்டிய கண்கள் கவனித்துக் கொண்டன.


உப்பிலி, மைதிலி அருகே வந்து //நாடகம் எல்லாம் கண்டேன் உந்தன் ஆடும் 
விழியிலே.// என்று சிரிக்காமல் சொல்ல, //சட்டப் படிப்பு என்னாச்சு என் அருமை 
மாமா// மைதிலி  கேட்க அது கல்யாணத்தில் வந்து முடிந்தது //.

உங்க பெண்ணின் வீராப்பு என்று வினவ, அது சொக்கன் கண்ட மீனாட்சி
போலக் காற்றோடு போச்சு என்று பலமாகச் சிரிக்க
மச்சினர்களும் வந்து கலந்து கொண்டார்கள்.

எப்பொழுது திருமணம். /இதோ திருவேங்கடம் பாட்டியிடமும் 
ஸ்ரீனிவாசன் தாத்தாவிடமும் கேட்டு விடலாம்.

மதிய பூரண உணவுக்குப் பின் அனைவரும் உட்கார்ந்து பேச
அன்றே சம்ப்ரதாயமாகப் பாக்கு வெற்றிலை 
மாற்றிக் கொண்டாகிவிட்டது.
 வரப்போகும் தை மாதத்தில்  இதே பந்தல் குடியில்
 திருவாளர் உப்பிலியின் மகளும், பந்த நல்லூர் சாரங்கபாணி அய்யங்காரின் பௌத்திரியுமான 
வாரிஜா என்கிற விஜயவல்லியை, திருநெல்வேலி ஸ்ரீனிவாச அய்யங்காரின் தௌஹித்ரனும்
ஸ்ரீ சுந்தரராஜனின் புத்திரனுமான திருமலை என்கிற அழகிய நம்பிக்குத்
திருமணம் நடத்த உப்பிலியப்பன், திருக்குறுங்குடி நம்பி ஆசிகளுடன்
நிச்சயிக்கப் பட்டது.
வாரிஜாவின் வாய்த்துடுக்கு எல்லாம் எங்கே போனது என்று தெரியவில்லை.
மும்முரமாகச் சமைக்கக் கற்றுக் கொண்டாள். 
பாம்பே தபாலாபீஸும், கும்பகோணம் தபால் ஆபீசும்
உறங்கவே இல்லையாம்.அவ்வளவு கடிதங்கள்.

மங்காப்பாட்டி 


கதை முடிந்தது. வாரிஜா வின் ஆசையான பட்ட படிப்பும்  பூர்த்தியானது.
பாம்பேயில் திருமணம் முடித்த கையேடு கல்லூரியில் சேர்க்கப் பட்டாள் .

                                         ++++++சுபம்+++++

.


Sunday, August 04, 2019

கோடைவிடுமுறை குழந்தைகளோடு

வல்லிசிம்ஹன்
 Vancouver.https://youtu.be/_xMz2SnSWS4

கோடைவிடுமுறை குழந்தைகளோடு
இப்பொழுதுதான் அவர்களின்  விடுமுறை கிடைத்திருக்கிறது.
இன்னும் இரண்டு நாட்களில்
இங்கிருந்து கிளம்பி  ஒரு வாரம்  வரை சில  ஊர்களை சுற்றிப் பார்க்க முடிவு.
என் மெது நடைக்கும் மற்றவர்களின் உற்சாகத்துக்கும் கொஞ்சம் சம்பந்தமில்லாமல்
இருக்கும் தான்.

வெளி உலகத்தைப் பார்க்கும்  சந்தர்ப்பத்தை விடக்கூடாது என்றே நானும் கிளம்புகிறேன்.

வாரிஜாவுக்கு ஒரு வழி சொல்லாமல்  போக்க கூடாது இல்லையா.
இன்று பூர்த்தி செய்து விடலாம்.

பொறுமை வாழவைக்கும் 4

வல்லிசிம்ஹன்
எல்லோரும் வளமாக  வாழ வேண்டும் .

பொறுமை வாழவைக்கும் 4
++++++++++++++++++++++++++++++++
ஆடி வெள்ளியும் வந்தது. புதிதாக வாங்கிய ஸ்டுடிபேக்கர் வண்டியில் தம்பிகள் குடும்பத்துடன்
வந்தனர்.
மைதிலியும் உப்பிலியும் வண்டியைப் பாராட்டி மெச்சினர்.
மாமாக்கள் குடும்பம் வரும்போதெல்லாம் தாவி வந்த அணைத்துக்கொள்ளும்
வாரிஜா வண்டியையே பார்த்துக் கொண்டு நின்றாள்.
ஏய், வாவா நாம் ஒரு ரவுண்டு வரலாம் ரிஜாக்குட்டி
என்று பெரிய மாமா அழைத்ததும் சரி என்று ஏறிக்கொண்டாள்.
மைதிலியும், உப்பிலியும் மற்றவர்களை அழைத்துக் கொண்டு உள்ளே சென்றனர்.

தன் தம்பி மனைவிகளை உபசாரம் செய்து, அவர்களோடு
மற்ற ஏற்பாடுகளைப்
பற்றிப் பேசி அறிந்து கொண்டாள்.
மகன் ராஜ கோபாலனைத் தேடினால், அவனும் ராமசாமி மாமாவுடன்
சென்றிருப்பது புரிந்தது.
புதுக்கார் மோகம் குழந்தைகளுக்கு இருப்பது சகஜம் தானே அக்கா
என்று பரிந்தாள் தம்பி மனைவி  சாரங்கா.
எல்லாம் நீங்கள் கொடுக்கும் செல்லம் தான் என்று சிரித்தாள்
மைதிலி.
அப்பா எப்படி இருக்கார். என்றதும், வைதீகக் காரியங்கள்
கச்சிதமாக நடக்க வேண்டும் என்பதில் அம்மா அப்பா
இருவரும் மும்முரமாக இருக்கிறார்கள்.
 பந்தல்குடியைச் சுற்றி எத்தனை வேத விற்பன்னர்கள் இருக்கிறார்களொ
அவர்களை உங்கள் தம்பிகள் அழைத்து விட்டார்கள். இது சின்னவனின் மனைவி
செங்கமலம்.

அக்கம்பக்கம் வீடுகளைச் சேர்த்து பந்தல் போடப் போகிறோம்.
எங்கள் பெற்றோரும்  இரண்டு நாட்கள் முன்பே வரப் போகிறார்கள்.
சின்னக் கோமளம், பெரிய கோமளம் இரண்டு அத்தைகளும்
வந்துவிடுவார்கள். இதைச் சொன்னபடி இருவரும் நாத்தனாரைப் பார்த்தார்கள்.

நீங்க அவர்களிடம் ஜாக்கிரதையாகப் பேசும்படி அம்மா சொல்லச் சொன்னார்.
நல்ல வார்த்தைகள்  அவர்களிடம் பலிப்பதில்லை.

என்றதும்மைதிலி தலை ஆட்டினாள். தெரியும் .இங்க வந்திருந்த போது
வாரிஜாவின்  மனசைக் கலைத்துவிட்டுப் போனார்.
அதற்கு மேல் சொல்ல விருப்பமில்லாமல்
சாப்பிட்டு விட்டு நாம் கடைகளுக்குப் போகலாம்
ஆண்கள் வேஷ்டி ,சட்டை விஷயங்களைக் கவனிக்கட்டும்.
நாம் நகை, புடவைகளைப் பார்த்துக் கொள்ளலாம்
என்றாள்.... அன்று இரவு  எல்லோரும் சேர்ந்து பார்த்த
இந்தித் திரைப்படப் பாடல் கீழே.

Friday, August 02, 2019

பொறுமை வெல்லும் 3வல்லிசிம்ஹன்

எல்லோரும் வளமாக  வாழ வேண்டும் .

பொறுமை  வெல்லும்  3
++++++++++++++++++++++
  மறு  நாள்   , தந்தையிடமிருந்து தபாலும்   ,மாப்பிள்ளைக்கு தங்கள் வீட்டில் நடக்கப் போகும்   ஷஷ்டி அப்த பூர்த்தி  விழாவைப்
பற்றிய விவரங்களை எழுதி  மைதிலியின்  தம்பி ராமசுவாமி
அனுப்பிய  அழைப்பிதழும் வந்தது.

   ஆவணி மாத சதய நட்சத்திரம் அன்று அப்பாவுக்கு
அறுபதாம் பிறந்த நாள்.
தம்பியின் கைக்கடுதாசியும் மிக அழகாக வடிவமைத்திருந்தான்.
மைதிலிக்கு ராமசாமி மற்றும் கோபாலன் என்று இரு தம்பியர்.

இருவரும் படித்து விட்டு தந்தையுடனேயே பந்தல்குடி கிராமத்தில் இருந்தனர்.

தண்ணீருக்குப் பஞ்சமில்லை. நல்ல விளைச்சல்.
நல்ல மனைவிகள், ஆளுக்கு இரண்டு குழந்தைகள் என்று
மிக மகிழ்ச்சியான குடும்பம்.

மாப்பிள்ளை உப்பிலியின் உதார குணத்தை என்றுமே தவறாக நினைத்தது
கிடையாது. எப்பொழுதும் மற்றவர்களைப் பேணும் குடும்பத்தில் வந்தவர்க்கு
எப்பொழுதும் தாழ்வில்லை என்பதை நம்பினார்கள்.
தாங்கள் அனைவரும் கும்பகோணத்துக்கு ஜவுளி எடுக்க வருவதாகவும்,
அக்கா தங்களுடன் வந்து புடவை,பாவாடை,மற்றும் குடும்பத்துக்கு வேண்டிய

எல்லாம் வாங்க தங்களுடன் வரவேண்டி எழுதப் பட்டிருந்தது
அந்தக் கடிதம்.
மைதிலியின் உள்ளம் பூரித்தது.
அம்மாவுக்கு வாங்க வேண்டிய திருமாங்கல்யம் ஒரு பவுனிலாவது
 இருக்க வேண்டும், மகள் வீட்டு சீராக,தந்தைக்குப் பத்துமுழம் மயில்கண்
வேஷ்டி, தாயாருக்கு ஒன்பது கஜம் இரட்டைப் பேட் போட்ட
நாகப் பழக்கலர் புடவை,தம்பிகளுக்கு பொருத்தமான
உடை என்று எழுதிக் கொண்டிருக்கும் போதே
உப்பிலியும் கலந்து கொண்டார்.
பெரிய விசேஷம் நாம் மூன்று நாட்கள் முன்பே அங்கே
போய்விட வேண்டும். திரட்டிப்பால் கிளற மறந்து விடாதே
என்று மகிழ்ச்சியுடன் சொன்னார்.

கேட்டுக்கொண்டே வாரிஜாவின் முகத்தைப் பார்த்ததுமே
மைலி உஷாரானாள்.
ஆடி வெள்ளிக்கு அவர்கள் வண்டி எடுத்துக் கொண்டு வருகிறார்கள்.
துடுக்குப் பேச்சை இப்போதே அடக்கு.
ஒருவார்த்தை இசகு பிசகாகப் பேசினால்
உனக்கு எங்கிருந்தும் உதவி கிடைக்காது
என்று உறுதியாகச் சொன்னாள்.

உப்பிலி இருவரையும் மாறி மாறிப்
பார்த்துக் குழம்பினார். ஏன் குழந்தையைக் கோவிக்கிறாய்.
நீ இங்க வாம்மா , உனக்கு என்ன வேண்டும்
சொல்லு. // என்றவரை வாரிஜா பார்த்துவிட்டு
எனக்கு சட்டம் படிக்கணும்பா என்றாள்.
ஓ அதுக்கென்ன செய்துட்டாப் போச்சு.
இந்த இண்டர்மீடியட்டை நன்றாக முடி.

அடுத்தது லா காலேஜ் தான் என்றார்.....தொடரும்.


Thursday, August 01, 2019

பொறுமை எனும் நகை ....2

வல்லிசிம்ஹன்

எல்லோரும் வளமாக   வாழ வேண்டும்

பொறுமை எனும் நகை ....2
+++++++++++++++++++++++++++++
தம்பி ராஜகோபாலனுக்கு அக்கா அம்மாவிடம் இப்படிப் பேசுவது 
பிடிக்கவில்லை. 
அப்பாவின் நடத்தையில் தர்ம நியாயம் இருப்பதை 
அவன் உணர்ந்தவன். இன்னோருத்தருடைய பணத்தை 
எப்பொழுதும் விரும்புபவர் அல்ல.
உண்மைதான்  வசதியுள்ள சில விவசாயிகளிடம் அவர் ஏமாந்து போவதையும்
பார்த்திருக்கிறான்.
இன்னும் முஞ்சாக்கிரதையாக இருந்திருக்கலாமே என்று 
தோன்றும். இந்தப் பணம் வந்துதான் வீடு நடக்க வேண்டும் என்ற நிலைமை
இல்லாததால் சரிதான்.

ஆனால் ஏமாறக் கூடாது என்பதில் உஷாராக இருப்பான்.
அப்பாவுக்கு அவன் தான் குறிப்புகள் எழுதுவான்.
சில பேர் ப்ராமிசரி நோட் எழுதிக் கொடுப்பதையும்
பத்திரமாக எடுத்து வைத்துக் கொள்வான்.

இந்த அதிகப் பிரசங்கித்தனமான பேச்சுக்கு அம்மா என்ன பதில் 
சொல்லப் போகிறார் என்பதைக் கவனித்தான்.
மைதிலி, உக்கிரமாகப் பேசும் பெண்ணை
உறுத்துப் பார்த்தாள்.
எந்த விதத்தில் உன் அப்பா குறைந்து விட்டார்.
மற்றவர்கள் மாதிரி வெற்றிலை ,புகையிலை ,அத்தர் என்று வலம் 
வருகிறாரா, காசு வைத்து சீட்டாடுகிறாரா,
உன் நகைகள் எதையாவது எடுத்துப் போய் விற்று விட்டாரா.

ஒரு நாணயமான மனிதரை, அதுவும் உங்க அப்பா
மாதிரி தங்கமான மனிதரை இப்படி அலட்சியமாகப்
பேச எப்படி மனம் வந்தது உனக்கு.
என்று உஷ்ணமாகப் பேசும் அம்மாவை
பதிலுக்கு முறைத்தாள் வாரிஜா. நேத்திக்கு உன் அத்தை வந்திருந்தாரே
அதுதான் அந்த சின்னக் கோமளம்,
என்ன சொன்னார் தெரியுமா, அடியே உங்க வீடு இப்பக் காலி 
பெருங்காய டப்பா. 
முன்னே மாதிரி இரும்புப் பெட்டி, தங்கக் கிண்ணம் எல்லாம்
இல்லை. நீ என் பேரனைக் கல்யாணம் செய்ய வேண்டும் என்றால்
இப்பவே தீர்மானமா உங்க அப்பா கிட்டப் 
பேசிக்கொள்.
இதோ, எதிர் அகத்து திருமலை எப்படி சுலபமாக 
சப் ஜட்ஜ் ஆகிட்டான் பாரு. 
அந்த சாமர்த்தியம் உங்கப்பனுக்கு இல்லையே.
அவர்கள் எப்போது பார்த்தாலும் கும்பகோணத்து வீதிகளில் ,
புடவையோ,நகையோ வாங்கிக் கொண்டுதான்
இருக்கிறார்கள்.
உன் அம்மாகிட்ட அவள் அப்பா கொடுத்ததற்கு மேல்
என்ன இருக்கிறது. //என்று  எகத்தாளமாப் பேசினாரே
அம்மா. எனக்குக் கோபம் வராமல் என்ன செய்ய.//
என்ற பெண்ணை, வருத்தத்துடன் நோக்கினாள்.
 கோபித்துப் பயன் இல்லை. வயதுக் கோளாறு,
கூடா நட்பு எல்லாம் இப்படிப் பேச வைக்கிறது.

கணவர் கிராமத்திலிருந்து வந்ததும் இதற்கு
முடிவு கட்ட வேண்டும்.இப்படியே வளர விட்டால்,
அவள் புக்ககம் ,சென்றால் வாங்குவது 
நல்ல பெயராக இருக்காது என்று தீர்மானித்தாள்.

கணவரின்  அருமையை நன்றாக உணர்ந்தவள் .  அவருடைய 
முன்னோர்கள்  இல்லறம் துறந்து மடாதிபதிகளாக இருந்தவர்கள் .
இவருக்கும் அது போல, தெய்வ பக்தியும், காருண்யமும் 
இருந்ததில் அதிசயம் இல்லை. அந்த விசால மனதை புரிந்து கொள்ள தன மகளுக்கு மனமில்லையே 
என்று வருத்தமே மேலோங்கியது.

மகன் ராஜகோபாலன்  அப்பாவைப் புரிந்து செயல்படுவதில் 
அவளுக்கு நிம்மதி .
தன தந்தையின் அறுபதுக்கு அறுபது  அடுத்த மாதம் வர போவதை விட்டு செய்ய வேண்டிய ஏற்பாடுகளில்  தன்னை உட் படுத்திக் கொண்டே அந்த யோசனையில்  சின்னக் கோமளத்தின் பேரனைப் பற்றியும் விசாரிக்க முடிவு செய்தாள் . தொடரும் 

Wednesday, July 31, 2019

பொறுமை என்னும் நகை.

வல்லிசிம்ஹன்
எல்லோரும் வளமாக   வாழ வேண்டும் .

பொறுமை என்னும் நகை.
+++++++++++++++++++++++++++
ஏம்மா எல்லாவற்றையும் பொறுத்துக் கொண்டே
இருந்தே. உனக்கு அப்பா செய்யறதெல்லாம் தப்பா
தெரியவில்லையா.
என்ன பெரிய தியாகின்னு மனசில நினைப்போ.

.

எத்தனையோ முன்னுக்கு வந்திருக்க வேண்டிய குடும்பம்
ஒரு மனுஷனின் அசட்டுத்தனத்தால எல்லாருக்கும் ஏளனமாகப்
போச்சே.இந்தப் பாடல் வந்த காலமும்  இந்த சம்பவங்கள் நடக்கும் காலமும் ஒன்று.
அதாவது 1955.

கும்பகோணம் டவுனை ஒட்டிய கிராமம் அது.
அதில் வசதியான குடும்பம் தான் அது.
வீடும் செழுமையும் வெளியே தெரியும்படி
வீட்டின் அமைப்பு இருக்கும்.

17 வயது பெண்ணும் 13 வயது மகனும் 
உப்பிலிக்கும் மைதிலிக்கும்.
அந்தக்காலத்திலியே  சட்டம் படித்து, கும்பகோணம் கோர்ட்டுக்குப் போய் வருபவர்
உப்பிலி.
அவரது பெற்றோர் வேறு ஒரு கிராமத்தில்
நிலபுலன்களைக்கவனித்து வந்தனர்.

குழந்தைகளின் படிப்புக்காகக் கும்பகோணத்துப் பக்கம் வந்தார்கள்.

நிலங்களில் பாடுபட்டு வழக்கப் பட்டவருக்கு
வக்கீல் தொழில் பிடிபடவில்லை.
தன்னை நம்பி வந்த விவசாயிகளிடம் அருமையாக 
நடந்து கொண்டு ,அவர்களுக்காக வாதாடி , 
வெற்றி தேடிக் கொடுத்தாலும்
அவர்களிடம் பணம் வசூல் செய்ய மனமாகவில்லை.

சேர்த்து வைத்திருக்கும் சொத்து போதும்.
அரிசி வந்துவிடுகிறது.
காய்கறிகளுக்கும் குறைவில்லை.
மைதிலியின் தகப்பனாரும் அவர் பங்குக்கு
பெண்வீட்டில் எண்ணெய் முதலான தேவையான
பொருட்களைக் கொண்டு வந்து சேர்த்து விடுவார்.

17 வயது மகள் வாரிஜாவின் அதிகப்படியான 
துடுக்குப் பேச்சுக்குக் காரணம்
அவளது தோழியின் தந்தையின் தந்தைக்கு
அதே கும்பகோணம் கச்சேரியில் கிடைத்த சப் ஜட்ஜ்
பதவிதான். கண்மண் தெரியாத செல்லம்  அந்தப் பெண்ணைப் பேச வைத்தது.  மைதிலி எப்படி கையாளுகிறாள்  என்பதை.......... 
மீண்டும் பார்க்கலாம்.Monday, July 29, 2019

வட்டம் போடும் வாழ்க்கை

வல்லிசிம்ஹன்

எல்லோரும்  வளமாக வாழ வேண்டும்

வட்டம் போடும் வாழ்க்கை. இரண்டு வருடங்கள் ஆகிவிட்டது, இந்தியாவை விட்டு வந்து.
வாழ்க்கை ஆரம்பிக்கும் போது
எல்லாச் சிறார்களைப் போலத்தான் நாங்களும் வளர்ந்தோம்.
படித்தோம்.
அவரவருக்கு விதிக்கப்பட்ட வாழ்க்கையை நிம்மதியாகவே வாழ்ந்தோம்.
பொருளாதாரம் சம் நிலையில் தான் இருந்தது.
ஓஹோ என்று இல்லாவிட்டாலும் கடனில்லாத வாழ்க்கை.

தந்தை வழி,சகோதரகள் வழியும் அதே,.

பிள்ளைகள்,பெண் படிக்கும் வரை சிக்கனமே வாழ்க்கை.

பிறகு அவரவர் வேலைக்குச் சேர்ந்து வெளினாட்டுக்குப் பறந்தனர்.
எங்கள் சுமை பெண்ணின் திருமணத்துக்குப்
பிறகு குறைந்தது.
வெகு பல வருடங்களுக்குப் பிறகு தனி வாழ்க்கை
தொடங்கியது. இதுவும்  புதிதாகத்தான் இருந்தது.
பிறகு பேரன்கள் பேத்திகள் வரவு.
பல கோவில்கள் சென்று வர இருந்தோம்.
அமெரிக்காவுக்கும் அடிக்கடி பயணம்.

இந்தப் பழைய கதை அத்தனையும், இன்றைய வால்மார்ட்
கடைக்குப் பொருட்கள் வாங்க பெண்ணுடன் சென்றபோது
நினைவு வந்தது.
 இவரில்லாமல் முதல் தடவை இதே கடையில் ஒரு சிகரெட்
பெட்டியைப் பார்த்துக் கண் கலங்கியதும் ஞாபகம். இப்பொழுது
அதே இடத்தை அமைதியாகக் கடந்தேன்.

அவ்வளவுதான். பழைய நினைவுகளைச் சுமக்கும் போது
பாரம் நம்மை வளைத்து விடும். தூக்கி எறிந்துவிடவேண்டும்
என்று பாரதி பாஸ்கர் சொன்னது,எதிர்மறை சிந்தனைகளை.

மறக்க முடியாத இனிய நினைவுகள்
இப்போது என் வலைப்பதிவில் தடங்கள் பதிக்கின்றன.

முடிந்த வரை எழுதலாமே. நட்புகள் இத்தனை பேர் இருக்கும்போது என்ன குறை.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Saturday, July 27, 2019

மருதமலை முருகன் மகிமை

வல்லிசிம்ஹன்

எல்லோரும்  வளமாக  வாழ வேண்டும்.

மருதமலை முருகன் மகிமை  1971

கோவையில் நாங்கள் இருந்தது நான்கு வருடங்கள்.
சின்னவன் பிறந்தது காரைக்குடியில் என்றாலும்
வளர்ந்தது அங்குதான்.
பெரியவனும் ,மகளும்  முதன் முதல் கல்விக்கூடம்
செல்ல ஆரம்பித்தது அங்கே தான்.

சிங்கத்துக்கு  உடல் நலம் சரியில்லாமல் இருந்ததும் அங்குதான்.
அதீதக் களைப்பும்,
தொழிலாளர் பிரச்சினைகளால் மன உளைச்சலும்
உஷ்ணத்தைக் கிளப்பி விட கால்களில்
வேனல் கட்டிகள் கிளம்ப  என்னவென்று தெரியாமல் அவதிப் பட்டோம்.
வாரத்தில் சில நாட்கள் வேலைக்குச் செல்ல
முடியவில்லை.
நாங்கள் இருந்த வீடில் வெளியே வந்தால் மருதமலையும், அதன் உச்சியில் இருக்கும் விளக்கும் தெரியும்.
தினம் வாயில் Gate பூட்டும்போது முருகா நீயே துணை என்று
வணங்கி வருவேன்.

வல் தாங்கமுடியாமல் அவர் சிரமப் படும்போது ஒரு நாள் கம்பெனி வைத்தியர்,
colonoscopy வேண்டும்.வயிற்றில் ஏதாவது புண் இருந்தால்
இது போல் தோலில் காட்டும் என்று சொன்னார்.
நல்ல அனுபவமிக்க டாக்டர்.

இந்த ஸ்கோபி விஷ்யம் எனக்கு மிகப் பயம்.
திருமணமாகி 5 வருடங்கள் ஆன நிலையில்

அந்த நிமிடத்தில் நிறைய வயதானது போல
உணர்ந்தேன்,.
கடவுளே  அந்த பயாப்சியில் தவறேதும் இருக்கக்
கூடாதே.. மருதமலை முருகா, எனக்குத் தெரிந்தது பால் அபிஷேகம் மட்டுமே.
அவர் உடல் உஷ்ணத்தைக் குறைத்து விடு. எங்கள் சின்னக் குடும்பத்தக் காத்து வா
காக்க வா என்று இரவில் அந்த மலை விளக்கிடம் வேண்டிக் கொண்டேன்.

மறு நாள் மருத்துவமனைக்குச் சென்றவர் மாலையில் தான் வந்தார்.
இரண்டு நாட்கள் கழித்து சொல்வார்கள்.
மனுஷனுக்கு இது போல வரக்கூடாது என்று மனம் நொந்தார்.

முருகன் கைவிடவில்லை.
பயாப்சி ரிசல்ட் வரும் முன்னமே புண்கள் உடைந்து
காய ஆரம்பித்தன.
இது என்னமா அதிசயம் என்றவர், முகத்தில் தெளிவு
பிறந்தது.
நான் அவரிடம் சொல்லவில்லை. இது எனக்கும் முருகனுக்குமான
ஒப்பந்தம் அல்லவா.
என் மனம் அந்த ரிசல்ட்டைப் பற்றிக் கவலைப்
படவில்லை. அமைதியாக உணர்ந்தேன். எதுக்காகப் பயந்தேனோ அது
இல்லை என்று வந்து விட்டது.

எல்லாம் மலைமேல் முருகன் செய்த நலம்.
அன்றிலிருந்து எதை மறந்தாலும் காலையும் மாலையும் மருதமலை
முருகன் தரிசனம் வீட்டிலிருந்தே.
 பாலபிஷேக  பிரார்த்தனை நிறைவேற்றியது ஐந்து வருடங்களுக்குப்
பிறகு. அவனை வணங்க வேண்டும் என்ற நினைப்பைக் கொடுத்ததும் அவன் அருளே.

வாழ்க முருகன் நாமம்..
மருதமலை ஆண்டவன் ,நான் வணங்கும் சமயபுரத்தாள், திருச்சி மலைக்கோட்டைப் பிள்ளையார், திருப்பதி தெய்வம் இவர்களோடு
என் மனக் கோவிலில் சேர்ந்து கொண்டான்.

Thursday, July 25, 2019

ஹவுஸ் ஓனர்...படைப்பு பார்வை

வல்லிசிம்ஹன்
 எல்லோரும் வளமாக  வாழ வேண்டும்.

இன்று  இணையத்தில் நான் பார்த்த படம் ஹவுஸ் ஓனர்.
திரு, ராமகிரூஷ்ணனும், லட்சுமி ராமகிருஷ்ணனும் தயாரித்திருக்கும் படம்.

காதலில் ஒருமித்த தம்பதியரில் கணவருக்கு  Alzhimer  வந்துவிடுகிறது.
இப்படி ஒரு எளிமையான படத்தை ஒரு அழுத்தமான கருவை வைத்து எடுக்க முடியும் என்று நிரூபித்திருக்கிறார்.அதற்கு மனம் நிறை வாழ்த்துக்களும் வணக்கங்களும்.

படத்தின் பெயர்  ஹவுஸ் ஓனர்.
CHENNAI: He survived the times spent in sensitive areas and in firing lines while serving the Indian Army. However, 72-year-old retired Lt.Col. G.Venkatesan had a tragic death along with his wife drowning inside his house after nine hours of struggle. Neighbours who heard them cry for help watched helplessly until their voice ceased to be heard. Venkatesan and his wife Geetha drowned inside their ground floor residence, “Geethalaya” in Defence officers colony in Ekkatuthangal, unable to get out of it.//2015இல் சென்னையைத் தாக்கிய வெள்ளம் யாராலும்  முடியாது. அப்போது படித்த செய்தி
படைப்பு பார்வை


இதுதான் கதையின் கரு. இதில் ஒரே ஒரு மாறுதல்,

கணவருக்கு அல் சைமர்  வந்ததிலிருந்து அவரைத் தாய்க்கு மேல்

கவனித்துக் கொள்ளும் நடிகை ஸ்ரீரஞ்சனியின் நடிப்பு.
காதல் மனைவியுடன்  அழகாக்க கொஞ்சும்  கிஷோர்.

கர்னலுக்குத் தன மனைவியை, தான் பரிபூரணமாக நேசித்த காதலியை அடையாளம் தெரியவில்லை.

ஆனால் அவள் சொல்லுக்கு கட்டுப்படுகிறார்,


மழையின் போது அழகாக வெளியே சென்று வருகிறார்.

கடைசி  நிமிடம் வரை வீட்டை விட்டு வெளியேற  மறுக்கிறார்.


//இது என் வீடு .நான் இதை விட்டு நகர மாட்டேன்//  அதற்காகத்தான் இந்தப் பெயர் படத்துக்கு வைக்கப் பட்டிருக்கிறது //

அவருக்கு ,தன திருமணம், தன ராணுவ நடவடிக்கைகள்
எல்லாம் நினைவிருக்கிறது.
இப்பொழுது பெய்து கொண்டிருக்கும் பிரளயத்தை பி புரிந்து கொள்ளவில்லை.
மனைவி ராதாவாக வரும் நடிகை ஸ்ரீரஞ்சனி எத்தனை

புரிதலோடு கணவரைக் கையாளுகிறார்.
கவிதையாகப் படமாக்கப் பட்டிருக்கிறது.மகளும் தங்கையும் கெஞ்சியும் கிளம்பத் தயங்கும் மனைவி .

அவரை அழைத்துச் செல்லும் இடத்தில் அவர் முரண்படுவாரே என்கிற பயம்.
இதெல்லாம் தான் சோகம்.

இனிமை சேர்க்கும் பாலக்காட்டுத் தமிழ். இனிமையான பாடல்கள்.


நல்ல வேளையாக அவர்கள் இறக்கும் காட்சி வரவில்லை.
ஆனால் கடைசி நிமிடம் வரை மனையின் போராட்டத்தை கர்னலால் புரிந்துகொள்ள முடியவில்லை.
மனம் படபடக்க வைக்கும் காட்சிகள் அவை.


நல்ல படம் நீங்களும் பார்க்கலாம்.


Image result for House owner tamil movie stars

Monday, July 22, 2019

1603,நோயுற்ற மனம்.

வல்லிசிம்ஹன்

எல்லோரும்  வளமாக  வாழ வேண்டும்
நோயுற்ற மனம்.
+++++++++++++++++++++++
அன்பின் எங்கள் ப்ளாக் ஸ்ரீராம் முகனூலில் 
கொடுத்திருந்த  இந்த அம்மாவின் படமும்
கவிதையும் மனதை உலுக்கி விட்டன.
மறைந்த  அம்மா, மற்றும் சில முதியோர் நினைவுக்கு
வந்துவிட்டனர்.
அம்மாவாவது ஒரு வாரம் மட்டுமே சிரமப்பட்டார்.

நாலைந்து வருடங்கள் சிரமப்பட்டவர்கள் எல்லாம் இருக்கிறார்கள்.
எப்படித்தான் இந்த மன அழற்சி வருமோ தெரியவில்லை.

செல்லம்மா பாட்டியும் அப்படித்தான் நோயில் விழுந்தார்.
குளியலறையில் விழுந்து பினமண்டையில் பட்ட அடி
அவரது வலிமையான மனத்தைத் தாக்கிவிட்டது.
மெல்ல மெல்ல முன்னேறியது முதலில் தெரியவில்லை.
நிகழ்வது மறந்து, கடந்த காலத்துப் பயங்கள்
அவரை ஆக்கிரமித்தன.

நல்ல நிகழ்ச்சிகள் அவருக்கு மட்டும் கண்ணுக்குத் தெரியும்.
கணவரை விளித்த வண்ணம் இருப்பார்.

அவர்தான் ஊன்றுகோல். அவரிடம் மகன் மக்கள் பள்ளியிலிருந்து இன்னும் வரவில்லை  என்று வருத்தப் படுவார்.
சிலசமயம் நல்ல தெளிவு கிடைக்கும்.
அந்த சமயங்களில் நானும் இருந்தால் நல்ல குறும்புடன்
சிரிக்க சிரிக்க பேசுவார்.

கொஞ்சம் கொஞ்சமாக மூளை நரம்புகள் செயலிழக்க
பேச்சும் குறைந்தது. உட்கார முடியவில்லை. நடக்க முடியாமல் சக்கர நாற்காலியும்
கவனித்துக் கொள்ள நர்ஸும் ஏற்பாடு செய்யப் பட்டது.
மகன் நன்றாகக் கவனித்துக் கொண்டார். மருமகளோ அதற்கு மேல்.
படுத்தே இருந்ததால் நிமோனியா வந்து மூன்று மாதங்களுக்கு
முன் மறைந்தார்.வாழ்க்கையின் கடைசி வருடங்கள் 
அவர் மனதில் பதியவில்லை.
எனக்குத் தெரிந்த இன்னோருவர் மிகப் பிரமாதமாக
வெளி நாட்டு  அலுவலகம் ,,

அரசாங்க வேலையில் இருந்த  எஞ்சினீயர்.
 சிங்கத்தின் நண்பர்களில்  ஒருவர்.
ரிடயராகிச் சென்னை வந்த   சில நாட்களில்
பார்கின்சன் வியாதி, கூடவே மறதி, ஆட்டம் கொண்ட
உடம்பு.
பார்க்க அத்தனை களையான முகம் ,அங்கும் இங்கும் சுறுசுறுப்பாக
இயங்கிய அந்த மனம்,
எல்லாம் கரையத் தொடங்கின. 
மனைவி மிக உன்னதமாகப் பார்த்துக் கொண்டார்.
சிங்கம் மறைந்த இரண்டாண்டுகளில் 
அவரும் இறைவனடி ஏகினார்.
83 வயது என்பதே ஒரு ஆறுதல். நல்ல மருத்துவர்களின் கவனிப்பு
எல்லாம் இருந்தது. குடும்பத்துக்காக உழைத்தவர்
குடும்பத்துடன் பேசாமல் சென்றார்.

இந்த வியாதிகளுக்கு மருந்து இருக்கிறது.
அது ஆயுளை நீட்டிக்கலாம்.
மனதை இயக்கும் மூளையை சரிப்படுத்துவதில்லை.
பார்க்கலாம் இதற்கும் சிகித்சை வரலாம்.
சிகிச்சை  வரும்.  அனைவரும்  பூர்ண  ஆரோக்கியத்துடன் 
இருக்கப் பிரார்த்தனைகள்.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

Sunday, July 21, 2019

சிங்கத்தின் கைவினைப் பொருட்கள்


 மரங்களெல்லாம்  மிருகங்களாக மாறிய காலம் .


எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
Posted by Picasa

இருவர் மனம் ஒரே வழி.5

வல்லிசிம்ஹன்

எல்லோரும் வளமாக  வாழவேண்டும்

இருவர் மனம் ஒரே வழி.
 தரையில் நெடுகப் படுத்தபடி,தம்பி ஸ்ரீனிவாசனின் இரண்டாவது பேரனுடன் கொஞ்சிப் பேசி 
சிரிக்க வைத்துக் கொண்டிருந்த கணவரைப் பார்த்து
ஜானுவுக்கு சிரிப்பு வந்தது. அந்த மூன்று மாதக் குழந்தையும் பொக்கை வாயைத் திறந்து கிளு கிளுவென்று சிரிப்பைக் கொட்டியது..

இதை எல்லாம் விட்டுவிட்டு கிளம்பி விடுவாரா இவர். ரிஷிகேசத்துல எந்தக் குழந்தையைக் கொஞ்சுவார். ஏன் இப்படி ஒரு ஏக்கம் இவருக்கு.
பாவமாக இருந்தது அவளுக்கு.
அகஸ்மாத்தாகப் பார்வையை உயர்த்திய ராகவன்,
கண்ணாலையே கேள்வி எழுப்பினார்.
முகத்தில் புன்னகை மலர்ந்தது.

இன்னும் உனக்கு சந்தேகமா. நம்மால் முடியாது என்று நினைக்கிறாயா.//

அதுதான் டாக்டர் உங்களுக்கு செர்டிஃபிகேட் கொடுத்துவிட்டாரே
அதைப் பற்றிக் கவலை இல்லை.
இந்த சுற்றுச் சூழல் அங்கே இருக்குமா. வெறும் யோகா, நடை, மற்ற
வயோதிகர்களூடன் பேச்சு, கங்கைக் குளியல்,புத்தகம்
மாலை நேரத் தொலைக் காட்சி இது போதுமா.

ஒன்றை விட்டுவிட்டாயே. நீயும் இருப்பியே.

//உண்மைதான். குழந்தைகள் இரண்டு நாட்களில் வருகிறார்கள்.//
ஆமாம், உன் பெண்கள் 51 வயதுக் குழந்தைகள்,
உன் பையன்கள் 47 வயது பாப்பாக்கள். உன் பார்வை இன்னும்

45 வருடங்களுக்கு முன் தான் இருக்கிறது.

மன வேகம் குதிரை வேகம்.

நாங்கள்  ஸ்விஸ் பேத்தியுடன்.

சரி.அப்படியே இருக்கட்டும். அவர்கள் நம் வீட்டை, வியாபாரத்தைப் பார்த்துக் கொள்ள உங்கள் அனுபவத்துணை வேண்டாமா.


எனக்கு யார் வந்து புத்திமதி சொன்னார்கள். இருவரும் 
இந்தக் கம்பெனிப் பொறுப்புகளில் புகுந்து 25 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது.
 இதோ பார், அவர்கள் வந்ததும் நீ  தெளிவில்லாமல் இருக்காதே.
உன் எண்ணங்களைத் தெளிவாகச் சொல்லு.
உனக்கு விருப்பமில்லாத எதையும் நான் செய்ய மாட்டேன்
என்று அவள் அருகில் அமர்ந்து சொன்னார்.

இப்படிப் பேசிப் பேசியே என்னை நீங்கள் மடக்கிவிடுகிறீர்கள்.
என்று சிரித்தபடி அவருக்கு காப்பி 
கொண்டு வரப் போனாள் ஜானு.
மீண்டும் பாப்பா அருகே உட்கார்ந்து கொண்டார் ராகவன்.

அடுத்த இரண்டு நாட்களில் பரபரப்பாக் இருந்தது
ஸ்ரீனிவாசன் இல்லம்.
பெற்றோருக்குத் தள்ளாது,
அங்கே மருத்துவ வசதி போதாது.
சட்டென்று உடல் நலம் பார்த்துக்கொள்ள தில்லி வரவேண்டி இருக்கும்

இப்படி நீண்டது அவர்கள் வாதம்.
ராகவன் அசைந்து கொடுப்பதாக இல்லை.
அம்மாவை அசைத்துப் பார்த்தார்கள்.
அவள் அப்பா எங்கெயோ அங்கே நானும்.. என்று விட்டாள்.

ஆவணி பிறந்ததும் தான் ரிஷிகேசம் கிளம்புவதாகவும்,
யார் வேண்டுமானால் அங்கே வரலாம். எல்லோருக்கும் இடம் உண்டு
என்று அவர் சொன்னதும் ஜானகியின் மனம் சிலிர்த்தது.

பழைய திண்மையும், குரல் உறுதியையும் பார்த்தாள்.
இவருடன் செல்வதில் எனக்கென்ன தயக்கம்.
என் வாழ்வு ஆரம்பமானது இவருடன் தானே,.
அன்றிலிருந்து இன்று வரை அந்த நேசத்துக்கு  ஒரு குறை இல்லாமல் தான் 
நடந்திருக்கிறார்.
யாரிடமும் விட்டுக் கொடுத்ததில்லை.
இனி இருடிகேசன் வழி காட்டுவான். நம்பிக்கையுடன் அடுத்த அடியை அவருடன் வைப்பேன்
என்று மனதோடு உறுதி சொன்னாள்.

சட்டென்று லேசான மனத்துடன், ஏன்னா அங்கே இப்போது
குளிருமா என்று கேட்டவளை ஆதுரத்துடன் பார்த்தார் ராகவன்.

பிறகென்ன, புதுக்கோட்டை சென்று ,தேவையான உடைகள்,
மட்டும் எடுத்துக் கொண்டு வீட்டுப் பொறுப்பை மருமகள்களிடம் 
ஒப்படைத்துக் கிளம்பியே விட்டார்கள்.
அடுத்த ஒரு வாரத்தில் சென்னை /தில்லி எக்ஸ்ப்ரசில்
இருவரும் ஏறியாச்சு. ஒரே ஒரு மாற்றம்,ஸ்ரீனிவாசனும் அவர்களுடன் வந்தான்.
அத்திம்பேர் ,அக்காவை ஒழுங்காக செட்டில் செய்துவிட்டு
வந்துவிடுவதாக அவன் திட்டம்.
சென்ட்ரலுக்கும், கூடி இருந்த தங்கள் மக்களுக்கும் 
மகிழ்ச்சியுடன் கை ஆட்டி விடை கொடுத்தபடி
இருவரின் புதுப்பயணம் ஆரம்பித்தது.
வானப்ரஸ்த ஆஸ்ரமம்  ரிஷிகேஷ்.

சுபம்.