Blog Archive

Friday, December 27, 2019

1700, இங்கிலிஷ் பாட்டி 8

வல்லிசிம்ஹன்

எல்லோரும் நலமாக இருக்க வேண்டும் .
இங்கிலிஷ்  பாட்டி  8

அடுத்த நாள்  காலையில் அதிகாலையில்  விழிப்பு  வந்துவிட்டது
சந்தோஷுக்கு.
இன்னும் இரண்டு நாளுக்கு இப்படி இருக்கும். இன்றாவது  இரவு 10 மன்னிக்குத் தூங்கப் போக வேண்டும்,என்று 
நினைத்துக் கொண்டே, குளித்து அம்மாவிடம் சொல்லிக் கொண்டு வெளியே கிளம்பினான்.

வயல் வெளிகளிடை நடந்து கிராம எல்லைக்கு வந்து விட்டான்.

ஒரு ஓடையின் அருகில் நின்று சூரியன் உதிப்பதைக் 
கண்டு ரசித்துக் கொண்டிருந்தான்.

பக்கத்தில் யாரோ நிற்பதை உணர்ந்து திரும்பினான்.
வயதான பெரியவர் ஒருவர்,முகத்தில் புன்னகையுடன் நின்று கொண்டிருந்தார்,.

என் பேரு  சாம்பமூர்த்தி  . சீதாலெட்சுமியின் மாமனார்.

சந்தோஷ்  ஒரு நிமிடம் ஒன்றும் பேச முடியாமல் 
ஹலோ மட்டும்  சொல்லிப் புன்னகைத்தான்.

உங்கள்  அம்மா என்னிடம் வந்து பேசினார். எங்களுக்கு இந்த விஷயத்தில் பூரண சம்மதம் 
சீதா நாங்கள் பெறாத பெண். இந்த நாலு வருடமாக அவளை பார்த்து நாங்கள் வருந்திக் கொண்டிருக்கிறோம்.

நேற்று இங்கு வந்ததும்   ,கோயிலில் உங்களைப் 
பார்த்ததும் எங்களுக்கு மனம் லேசாகிவிட்டது.
அவர் குரல் நடுங்குவதை பார்த்து மனம்  குழைந்தது  சந்தோஷுக்கு.

உங்கள் மருமகளுக்கு இதில் ஈடுபாடு இருந்தால் 
மட்டுமே   நல்லது  நடக்கும் ஐயா. வருந்த வேண்டாம்.
அன்னை பரமேஸ்வரி  நினைக்க வேண்டும்.

கல்யாணத்தில்  மட்டும்  கட்டாயப் படுத்த  முடியாது. 
ஏற்கனவே தோல்வியைச் சந்தித்தவன்  நான்.
ஆழம் தெரியாமல் காலை விட முடியாது.

எந்த முடிவுக்கும் நான் தயார்.   
அம்மாவின்  ஆசை  நிறைவேறினால்  மகிழ்ச்சியே.
என்று பதில் சொன்னான்.

சாம்பமூர்த்தி  ஆழ்ந்த யோசனையுடன் அவனுடன் நடந்தார்.
கோவிலின் மணி ஓசை கேட்டதும் அவர்  கைகள் குவிதைக் கவனித்தான்.
மருமகள்  மீது இத்தனை அக்கறையா.
அந்தப் பெண் உண்மையில்   நல்ல மருமகளாக 
இருந்திருக்க வேண்டும் என்றதும், தன்  மனத்தில் ஆவல் துளிர் விடுவதை உணர முடிந்தது.

அவன் கையைப் பிடித்தபடி கோவிலுக்குள் 
அவர் நுழைவதைக் கண்ட சீதாவின் மனதில் 
பரவசமும் படபடப்பும்  ஒன்றாகப்  பூத்தது.

மறைந்த கணவனை நினைத்துக் கண்ணில் நீர் வந்தது.

அருகில் இருந்து எல்லாவற்றையும்  பார்த்துக் கொண்டிருந்த ஆனந்திக்கும் 

கண் கலங்கியது.  சீதாவை ஆதரவுடன் அணைத்துக் கொண்டாள் .

அம்பாளின் மாலையை  சந்தோஷுக்கு அணிவித்து மரியாதை செய்தார் குருக்கள்.
எல்லோரும்  மலர்கள், குங்குமப் பிரசாதங்களை பெற்றதும்,
அன்றைய   உணவுக் கட்டளையாகச் சர்க்கரைப் பொங்கல் எல்லோருக்கும் பரிமாறப்பட்டது.

எல்லோருக்கும் பொங்கலை பாக்கு மட்டையில் வைத்துக் கொண்டு வந்து கொடுத்த சீதா, சந்தோஷுக்கும்   கொடுத்தாள் .

தன்னருகில் வந்து உட்கார்ந்த சீதாவின் முகத்தை 
கெஞ்சாத குறையாகப் பார்த்தார் சாம்பமூர்த்தி.
எனக்குப் புரிகிறது மாமா. இன்னும் கொஞ்சம் நாட்கள் எனக்கு வேண்டும்.
சட்டென முடிவுக்கு  வர முடியவில்லை. என்றபடி ஆனந்தியையும் , இன்னும் மாலையைக் கழற்றாத   சந்தோஷையும்   நிமிர்ந்து பார்த்துவிட்டுப் புன்னகைத்தாள்.


ஆனந்தியின் மனதில்  பூ மழை  சொரிந்த உணர்வு. இனி எல்லாம் நல்லபடி நடக்கும் என்று அம்பாள் சொல்வது பொல்லாத தோன்றியது.
உடனே நேரே சந்நிதி அருகே சென்று விட்டாள் .
அருகே  சந்தோஷ் வந்து நின்று கொண்டு என்னம்மா, காரியம் பழமா 
என்று  கேட்டான்.

அப்படித்தான் நினைக்கிறேண்டா என் செல்லமே.

இன்னும்   ஆறு  மாதங்களில் எனக்கு இன்னொரு மருமகள் 
வந்துவிடுவாள். இது அம்பாள் கொடுக்கும்  நல்வாழ்வு 
என்றபடி சீதாவையும் அவள் மாமனாரையும் பார்த்துப் 
புன்னகை செய்தாள் .

அவள் எதிர்பார்த்தபடியே   அம்பாளின் அனுக்கிரகத்தில்  சந்தோஷும் சீதாவும்   அவர்களின் கிராம வீட்டிலேயே 
அவர்களின் நட்புக்கள் உறவுகள் சூழ   மணம் புரிந்து கொண்டனர்.

சிக்கல் ஏதும்  இல்லாமல்  அமெரிக்காவுக்குப்  பயணித்தார்கள்.

புதிய பாதையில் பயணித்த இருவர் மனதில் 
தூய அன்பு நிறைந்திருந்தது.

ஆனந்தி மீண்டும் பாட்டியாகும் வாய்ப்பு அடுத்த வருடம் 
கிடைத்தது.

மிக நீண்ட கதையைத் தொடர்ந்து வந்து படித்த  அன்பு கோமதி, கீதா மா, ஸ்ரீராம்,மாதேவி  அனைவருக்கும்  என் மனம் நிறைந்த நன்றி.










7 comments:

வெங்கட் நாகராஜ் said...

முதல் பகுதியை மட்டும் படித்து காணாமல் போய் விட்டேன் நான்! இன்று வந்து அனைத்து பகுதிகளையும் ஒரே மூச்சில் படித்து முடித்தேன். நல்ல விஷயம் செய்திருக்கிறார் இங்க்லீஷ் பாட்டி. சீதாலக்ஷ்மியின் வாழ்வில் எல்லா நலமும் விளைய எல்லாம் வல்லவள் அருள் புரிந்திருக்கிறார்!

மிகவும் ரசித்துப் படித்தேன் வல்லிம்மா. தொடரட்டும் சிறப்பான பகிர்வுகள்.

கோமதி அரசு said...

//புதிய பாதையில் பயணித்த இருவர் மனதில்
தூய அன்பு நிறைந்திருந்தது.//

அன்பால் இணைந்த சொந்தம் காலம் கடந்து செல்லும்.
வாழட்டும் பல்லாண்டு.
ஆனந்தி பாட்டியை மகிழ்விக்க அன்பு செல்லம் வேறு வந்து விட்டது இனி என்ன! எல்லாம் நலமே!

மாற்றத்தை ஏற்றுக் கொண்ட ஆனந்தி பாட்டி வாழ்க!
சந்தோஷ் வாழ்வில் இனி சந்தோஷமே!

Geetha Sambasivam said...

மிக அருமையாகச் சென்றது நிகழ்வுகள் எல்லாம். ஆனால் முடிவில் கொஞ்சம் வேகமாக முடிச்சுட்டீங்களோனு ஒரு எண்ணம். ஆனாலும் நல்ல சுபமான முடிவு. சீதாவின் மறுவாழ்வு சிறக்கட்டும்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு வெங்கட்,
அதனால் என்ன அம்மா பரவாயில்லை. அந்த ஊர்க்குளிரில் நீங்கள் நலமாக இருக்க வேண்டும்.
இது வெளியூர்க் கோவிலில் பார்த்த நிகழ்ச்சி ஒன்றை அடிப்படையாக வைத்து எழுதின
கதை.
வந்து படித்துக் கருத்து சொன்னதற்கு மிக நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கோமதி தொடர்ந்து வந்து படித்து
ஊக்கப்படுத்தினீர்கள். வாழ்வில் நேரில்
பார்த்த சம்பவங்கள் ,எழுதத் தூண்டின.
இடங்களை மட்டும் மாற்றினேன். கொஞ்சம் கற்பனை,நல்லவைகள் நடக்க வேண்டும் என்ற ஆவல் இவையே எழுத்துக்கு ஆதாரம்.
ஆமாம் ஆவர்கள் வாழ்க்கை இனி இனித்திருக்கும்.நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

சுபஸ்ய சீக்கிரம் இல்லையாமா கீதாமா.
மார்கழி வருவதற்குள் மணம் முடிக்க நினைத்திருந்தேன்.
சுருங்கச் சொல்வது என் கதையில் நடக்காத காரியம்.

ரொம்பவும் இழுத்தால் சுவாரஸ்யம் போய் விடும்.
நீங்களே சொன்ன மாதிரி
எல்லொருக்கும் விடுமுறை தேவையாக இருக்கிறது.
நாம் இன்னமும் தொந்தரவு கொடுக்க வேண்டாம் என்றே
எழுதி முடித்தேன்மா. மிக மிக நன்றி.

மாதேவி said...

"தூய அன்பு நிறைந்திருந்தது "அதுவே இனிய வாழ்கை. கதையை அழகாக சொல்லியுள்ளீர்கள்.ஆவலுடன் படித்தோம்.