Follow by Email

Thursday, July 11, 2019

மனம் இருந்தால் மார்க்கம் உண்டு.

வல்லிசிம்ஹன்
ஆடிக்காற்றின்  அலைகள்  பொங்கி வந்த கடலைப் பார்க்கையில்
பொறுமையாகக்  காத்திருக்கும்  கரை எத்தனை
பாடங்களைக் கொடுக்கிறது. அது இழக்கும் மணலையும்  பெறும் சிப்பிகளையும்  இணையாக மதிப்பிடுகிறது.
கடலோர நண்டுகள், மனிதர்களின்
தடங்கள் , அவர்கள் எறியும் குப்பைகள்
எரிக்கும்  குப்பைகள் எல்லாவற்றுக்கும் சாட்சியாக நின்று யுகா யுகாந்தரமாக அமைதி  காக்கிறது.

இல்லறமும்  இதுதான்.
மக்களின் மகிழ்ச்சி வரவு.
அவர்களின் ஆரோக்கியம் வரவு.
அவர்கள் வாழ்வில் சஞ்சலம் இல்லாமல் இருக்க இறைவனை என்றும்
பிரார்த்தனை செய்வது  தாயின் தந்தையின் கடமை.

கூடிய வரை  தந்தை தாய் மனங்கள் நோகாமல் நடக்கவே
குழந்தைகள்  கற்று வாழ வேண்டும்.
என்  71 வயதில்  நான் பேசலாம்.
என் பெற்றோர் வழி நான் செல்கிறேன்.
என் வழி எங்கள் மக்களும் நடப்பார்கள்
என்று நம்புகிறேன்.

வயதாவதால் எனக்கு  சலுகைகள்  கூட வேண்டும் என்று நினைக்கவில்லை.

சுதந்திரம்  இன்னும்  அதிகமாகக்  கிடைக்க வேண்டும் .
கிடைக்கும் என்ற நம்பிக்கையும் இருக்கிறது.
போராடுவதை மறக்காமல் இருக்கவே
சவால்கள் நம்முன் வைக்கப் படுகின்றன.


எல்லோரும் வளமாக வாழ வேண்டும் 

22 comments:

ஸ்ரீராம். said...

கவிதைபோல ஒரு பதிவு.

துரை செல்வராஜூ said...

நல்ல மனதின் சிந்தனைகளும் ஆசைகளும் நன்மையில் தானே முடியும்...

சுதந்திரம் என்ற வார்த்தையின் அர்த்தம் நமது நாட்டைப் பொறுத்தவரை தவறாகப் போய் விட்டது...

நல்ல தாய் தனது மக்களைக் காப்பதில் இருந்து சுதந்திரத்தை விரும்புவாளோ!..

வாழ்க நலம்..

துரை செல்வராஜூ said...

எந்த வகையான சுதந்திரமும் கேள்வியில் தான் முடிகின்றது...

கட்டுப்பட்டுக் கிடப்போம்
அன்பின் காலடியில்!..

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஸ்ரீராம்,
இனிய காலை வணக்கம்.
மிக மிக நன்றி மா. எனக்கு இங்குள்ள அனைவருமே
புத்திரச் செல்வங்கள் தான்.
அதனால் தான் வார்த்தைகள் கவிதையாகிறது.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் துரை செல்வராஜு,

இனிய காலை வணக்கம்.நான் குருவாரத்தில் இருக்கும் போது நீங்கள் அனைவரும் சுக்கிரவாரத்தை எதிர்கொள்கிறிர்கள்.
நான் மக்களிடமிருந்து விடுதலை கேட்கவில்லை.
நான் விரும்பினபடி நடக்க ஆதரவு.
சமீப காலமாக தாய் நாடு திரும்ப மிக ஆசை.
ஒருவருக்கும் நேரம் ஒதுக்க முடியவில்லை.
நான் தனியாக வீடு திரும்புவது அவர்களுக்கு
விருப்பமாக இல்லை.
வேடிக்கையும் வேதனையும் இந்த மாதிரி
எழுத வைத்து விட்டன.
இறைவன் நல்ல பிள்ளைகளையே கொடுத்திருக்கிறார்.
அவர்களி விட்டால் எனக்கேது வேறு வாழ்வு.
உங்களுக்குப் புரியும் என்று நம்புகிறேன். நன்றி மா

வல்லிசிம்ஹன் said...

உலகத்திலியே உயர்ந்தவராக நான் மதிக்கும் என் அப்பாவும்
அம்மாவை அழைத்துக் கொண்டு
தனியாக இருக்க விரும்பினார். என்னிடமும் சொன்னார்.

இயலாமையே காரணம். அன்பின்மை காரணம் இல்லை.
அன்பு துரை, நன்றி மா..

Thulasidharan V Thillaiakathu said...

அம்மா ஆஹா ! கவிதையா! ரொம்ப அழகா சொல்லிருக்கீங்க. யதார்த்தம் அம்மா...

நாம் குழந்தைகளாய் இருக்கும் போது நம் பெற்றோரிடம் சில சுதந்திரங்களை விரும்புவோம் தான். நம்மிடம் மீதான அக்கறையினால் அவரள் சில விதிகளை விதித்தாலும் நாம் இன்னும் கொஞ்சம் சுதந்திரம் வேண்டும் என்று விரும்புவோம்தான். அது போல நமக்கு வயதாகும் போது நாம் நம் குழந்தைகளாகிவிடுகிறோமோ? நம்மை தங்கள் அன்புப் பிடியில் நம் உடல் நலனில் அக்கறை என்று ஒரு அன்புப் பிடிக்குள் வைத்திருக்கும் நம் குழந்தைகளிடமும் கொஞ்சம் சுதந்திரம் வேண்டும் என்றும் தோன்றுவது இயல்புதான்.

இங்கு தனியாக இருக்கும் வயதானவர்களையும் பார்க்க நேரிடுகிறது. யாரும் கேள்வி கூடக் கேட்பதற்கு இல்லைதான். ஆனாலும் ஒரு வெறுமை இருக்கத்தான் செய்கிறது அவர்களிடம். குழந்தைகளிடம் இருக்கும் போது அவர்களின் அன்பிலும் அக்கறையிலும் கட்டுண்டு கிடக்கத்தான் வேண்டியிருக்கிறது. நம்முடன் இயலாமையும் சேர்ந்து கொண்டு விடுவதால்...

எல்லாரும் சந்தோஷமாக இருக்க வேண்டும் அம்மா..

உங்களுக்காகவும் பிரார்த்தனைகள் எப்போதும் உண்டு.

கீதா

Geetha Sambasivam said...

உங்கள் ஏக்கம் புரிகிறது. விரைவில் யாருக்கேனும் நேரம் கிடைத்து உங்களை இந்தியா அழைத்து வர அமையும்படிப் பிரார்த்திக்கிறேன். என்ன தான் இருந்தாலும் நாமெல்லாம் இங்கே வேரோடிப் போனவர்கள். அங்கே ஒட்டாது. அழகாய்ச் சுருக்கமாய்ச் சொல்லி விட்டீர்கள்.

துரை செல்வராஜூ said...

எல்லாரும் நலமாக வாழ்வதற்கு வேண்டிக் கொள்கிறேன்..

KILLERGEE Devakottai said...

இன்றைய பலரது வாழ்வு நிலையை கவிதைபோல் விவரித்த விதம் அருமை அம்மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கீதா ரங்கன்,
இனிய காலை வணக்கம்மா.

அவர்கள் என்னைக் கவனித்துக் கொள்வதில்
அமோகமாக ஆதரவு கிடைக்கிறது.
அதில் குறை இல்லை.

மனதின் ஒரு மூலையில் எங்கள் வீடு எங்கள் பெருமாள்
என்று ஏக்கம் தட்டுகிறது.
இதையும் தாண்டலாம். எது சாத்தியமோ அதுதான் நடக்கும்.

குழந்தைகளின் அருமை கிடைக்காத பெற்றோரையும் இங்கே பார்க்கிறேன்.
நான் மன சங்கடப்படுவதில் அர்த்தமே இல்லை.
மிக மிக நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அதேதான் கீதா மா. உலகத்தில் எத்தனையோ கவலைகள்
வியாதிகள் இருக்கும்போது ஏதோ அசட்டுக் குழந்தை போல நினைப்பது எனக்குப் புரிகிறது.
உங்கள் புரிதல் மனம் நிறைய ஆறுதல்.
நடக்கும் .நவம்பரில் வாய்ப்பு இருக்கிறது.
அவன் மனம் வைக்க வேண்டும். உங்கள் பிரார்த்தனைகளுக்கு மிக மிக நன்றி.

வல்லிசிம்ஹன் said...

அன்பு தேவகோட்டை ஜி.
நம் எல்லோரின் எண்ணங்களும் ஒத்துப் போவதுதான் இதில் அருமை. நன்றி மா.இன்னாள் இனிதாக இருக்கட்டும்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு துரை செல்வராஜு,
அதுதான் நம் எல்லோரின் வேண்டுதலும்.

திண்டுக்கல் தனபாலன் said...

திண்டுக்கல்லில் சுற்றுலா, எனது பொறுப்பு அம்மா...

மாதேவி said...

உங்கள் எண்ணம்போல் நலமாக அமையட்டும்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு தனபாலன். மந்திரச்சொல்லைச் சொல்லிவிட்டீர்கள். தென் தமிழகம் ஒன்றே
என் பயணக்குறிக்கோள்.
திண்டுக்கல்லும்,மதுரையும்,திருனெல்வேலியும் இதில் அடக்கம்.
உங்கள் அன்பு இந்த எண்ணத்தை நிறைவேற்றும்.
கடவுள் சித்தம் இருந்தால்
நாம் கண்டிப்பாகச் சந்திக்கலாம் அம்மா.வாழ்க வளமுடன்.

வல்லிசிம்ஹன் said...

மிக மிக நன்றி மாதேவி. எனக்கு அதற்கான கொடுப்பினை இருக்க வேண்டும்.
நடக்கட்டும். நன்றி மா.

கோமதி அரசு said...

குழந்தைகளுடன் வந்து உங்கள் என்ணம் போல் எல்லா இடங்களுக்கும் போய் மீண்டும் குழந்தைகளுடன் மகிழ்வாய் இருங்கள்.
மதுரை வருகையை எதிர்பார்க்கிறேன்.

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

பெற்றோர் வழியில் நாம் செல்லும்போது நம் குழந்தைகளும் நம் வழியில் நடப்பர் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு. நடைமுறையில் அதனைக் காண்கிறேன்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கோமதி,

உங்கள் நல்ல உள்ளம் சொல்லும் பிரார்த்தனைகள் நிறைவேறட்டும்.
மதுரை வரும் பாக்கியமும் உங்களை நேரில் பார்க்கும் நன்மையும்
நடக்கட்டும். இரண்டு நாட்களாக பக்கத்துவீட்டு அம்மாவின் விபரீத நடவடிக்கைகளைப்
பார்த்து மனம் சோர்கிறது.
கடவுள் அவர்களைக் காக்கட்டும்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு முனைவர் ஐயா,
நீங்கள் சொல்லும் உண்மை உணர்கிறேன். கடவுள் அனைவரையும் நன்றாக
வைக்கட்டும்.