Sunday, July 14, 2019

வரதர் வைபவமும் வாட்சாப் செய்திகளும்

வல்லிசிம்ஹன்

எல்லோரும் வளமாக வாழ வேண்டும்.

வரதர் வைபவமும் வாட்சாப் செய்திகளும்
நம் பதிவர்களில் யாரெல்லாம் காஞ்சிபுரம் போய்வந்தார்களோ தெரியாது.
எங்கள் குடும்பத்தில் எங்களைத்  தவிர
அனைவருமே போய் வந்து படங்கள் அனுப்பி விட்டார்கள்.

சுலப தரிசனம் செய்தவர்கள் சிலர்.
5 மணி நேரம் வெய்யிலில் அவஸ்தை 
 பட்டு  முயன்று  சில நொடிகளே  முகம் கண்டவர்கள்
சிலர்.
 தெரிந்தவர்கள் வழியாக  தனி வழி சென்று அருகில்
கண்குளிரக் கண்டவர் சிலர்.

சென்றும் , நின்றும், தளர்ந்து அந்த தெய்வ முகத்தைக் காணாமல் வந்தவர்களும்
உண்டு.
அவர்களின் வேதனை சொல்ல முடியாது .

இதோ இங்கிருந்து கிளம்பி அவனைச் சேவிக்கக் கிளம்புபவர்களும் இருக்கிறார்கள்.

மனம் சிதையாமல் அவர்கள் ஸ்ரீ வரதனைக் கண்டு வரவேண்டும் என்று பிரார்த்திக்கிறேன்.

பேசும் தெய்வம் என்றொரு பெயர் உண்டு அவனுக்கு.
ஆலவட்டம் கைங்கரியம்  செய்த  திருக்கச்சி நம்பிகளிடம் அவர் பேசிய வரலாறு நமக்குத் தெரிந்ததே.
அதே போல ஆச்சார்யர்  ஸ்ரீராமானுஜருடனும்
அவர்  சொல்லாடியாதும் உண்டு.
 ஸ்ரீ பெருந்தேவித்தாயாருக்கும்,
அத்திகிரி வரதராஜனுக்கும்  தன பாமாலைகளையும் ஸ்தோத்திரங்களை மழையெனப் பொழிந்த கவிச்சிங்கம் என்று பெயர் கொண்ட  வேதாந்த தேசி கரும் காஞ்சியைச் சேர்ந்தவரே,

இத்தனை  பெருமைகளைக் கொண்ட காஞ்சியில்
அனந்தசரஸ் திருக்குளத்தில் சயனம் கொண்ட
தாரூ  என்ற அத்தி மரத்தால் ஆன  ஆதி  வரதர்,
எதோ ஒரு காரணத்துக்காக  அங்கே ஏளப்பண்ணப்பட்டிருக்கிறார்.

அதைப் பற்றி கணக்கில்லாத வீடியோக்கள்,
இண்டர்வியுக்கள்,  கம்பர் சொன்ன அத்தனை வைணவ சம்பிரதாயங்களின்  அபிப்பிராயங்கள்.

நாங்கள் படாத பாடு பட்டோம். யோசித்து செல்லுங்கள் என்கிற அட்வைஸ்.

வரதராஜனின் அழகு உலகப் பிரசித்தி.
அந்த அழகோடு கரிய திருமேனியும், தாமரை போல மலர்ந்த கண்களுமாக சயனித்திருக்கிறார்.
பார்க்கப் பார்க்காத தெவிட்டாத தேவராஜன்.

இன்னும் நின்ற நெடுங்கோலத்தில் எத்தனை கண்களை நிரப்பப் போகிறானோ

மக்கள் குழப்பம் இல்லாமல் திவ்ய தரிசனம்
பெற
வேண்டும்.19 comments:

KILLERGEE Devakottai said...

அனைவரும் நலம் பெற அத்தி வரதர் அருள் புரியட்டும் அம்மா.

நெல்லைத்தமிழன் said...

முதல் 5 நாட்களில் எந்தப் பிரச்சனையும் இல்லை. வார இறுதியில் என் மனைவியும் அவர் உறவினர்களும் சென்றபோது 5 மணி நேரம் ஆச்சு, கஷ்டமாக இருந்தது (வெயிலில் கார் பார்க் செய்த இடத்துக்கு அலைய..இத்தனைக்கும் 7 மணிக்கு வரிசையில் நின்றிருந்தார்கள்) என்றனர். இதனாலேயே பரீட்சைக்குப் படிக்கும் என் மகளை நான் இன்னும் அழைத்துச் செல்லவில்லை. (போய்வந்த கஷ்டத்தில் 2 நாட்கள் படிக்க முடியலைனா?)

ஆனால் குறைபட எழுதுபவர்கள், வயதானவர்களுக்கு ஏற்பாடு எதுவும் செய்யவில்லை என்று சொல்கிறார்கள். கோவிலுக்குள் நுழைந்த பிறகு அவர்களுக்குத் தனி வரிசை. ஆனால் இவர்கள் எதிர்பார்ப்பது காஞ்சி பேருந்து நிலையம் அல்லது இரயில் நிலையத்திலிருந்து அவர்களுக்கான உதவி. அது செய்யப்படவில்லை. என்னுடைய எண்ணத்தில் அப்படிச் செய்வார்கள் என்று எதிர்பார்ப்பதும் தவறு. திருப்பதியிலும், கோவில் முன் செல்லும்வரை சீனியர் சிடிசன்களுக்கு தேவஸ்தானத்தின் உதவி கிடையாது. அதற்குப் பிறகுதான் உதவி.

மற்றபடி வரதர் யாரை நினைத்திருக்கிறாரோ அவர்களை எல்லாம் அவர் பார்க்கிறார் என்றே நினைக்கிறேன்.

துரை செல்வராஜூ said...

அத்தி வரதர் தம் அருட்பார்வை நல்லோர் அனைவருக்கும் உரித்தாகட்டும்..

மனம் நெகிழும் வண்ணம் பதிவில் எழுதியிருக்கின்றீர்கள்...

அத்தி வரதன் திருவடிகள் போற்றி போற்றி...

வெங்கட் நாகராஜ் said...

அத்தி வரதர் அனைவருக்கும் அருள் புரியட்டும்.

சென்ற முறை 1979-ல் இந்த அளவிற்கு மீடியா ஹைப் இல்லை என்பதால் சுலபமாகவே பக்தர்கள் தரிசித்து இருப்பார்கள்.

இந்த முறை மீடியா செய்யும் ஹைப் ரொம்பவே அதிகம். மக்களும் சோசியல் மீடியாக்களில் தகவலை அதி விரைவாக பரப்புகிறார்கள். அதனால் கூட்டமும் அதிகம். வி.ஐ.பி./வி.வி.ஐ.பி. கலாச்சாரம் நம் ஊரில் ரொம்பவே அதிகம். அனைவருமே தங்களை நாட்டின் பிரதம மந்திரி/ஜனாதிபதி என்றோ, இல்லை அவர்களுக்கும் மேலே தான் நினைத்துக் கொள்கிறார்கள். :) அதனால் நிறைய எதிர்பார்க்கிறார்கள்! சரி போகட்டும் - அத்தி வரதர் அனைவருக்கும் அருள் புரியட்டும்!

எனக்குத் தெரிந்தவர் - ஜூலை நான்காம் தேதி - ஒரே ஒரு மணி நேரம் வரிசையில் நின்று திவ்யமாக சேவித்து வந்திருக்கிறார். பொறுமை வேண்டும். பொறுமை இருந்தால் போகலாம் - இல்லை என்றால் நம் மனக்கண்ணில் பார்த்து மகிழ்வுறலாம்!

கோமதி அரசு said...

அத்திவரதரை பார்த்தவர்கள் பாக்கியவான்கள்.

வரதர் எல்லோருக்கும் எல்லா நலன்களையும் தரட்டும்.

Geetha Sambasivam said...

கடந்த இரண்டு நாட்களாகக் கூட்டம் குறைவு எனவும் அரை மணி நேரத்திலிருந்து ஒரு மணி நேரத்துக்குள் தரிசனம் கிட்டி விடுவதாயும் முகநூல் காஞ்சீபுரம் நண்பர் கேசவபாஷ்யம் வி.என். எழுதி இருக்கிறார். ஒரு வேளை இனி கூட்டம் அதிகம் ஆகலாம்! போன வாரம் சென்ற பலரும் வரதரைப் பார்க்க முடியாமல் திரும்பி இருக்கின்றனர். நாங்க தினமும் எல்லாத் தொலைக்காட்சி சானல்களிலும் அத்திவரதரை தரிசனம் செய்து கொண்டு இருக்கோம். அது போதும்!

மாதேவி said...

அனைவருக்கும் நல்லருள் கிடைக்கட்டும்.

Anuprem said...

வரதரை நேரில் காண நாங்களும் காத்திருக்கிறோம் மா...

வல்லிசிம்ஹன் said...

அன்பு தேவ கோட்டைஜி,
அவன் அருள் எங்கும் பரவி இருக்கிறது. அதை ஒரு துளி உள்வாங்க இந்தக் காட்சி. அதற்கும்
வழி இல்லை எனில் மனதில் அவனை பூஜை செய்வதே பொருத்தம். அம்மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு முரளிமா,
முதல் வாரம் சற்று நிதானமாக இருந்திருக்கிறது. அதுவும் ஐந்தாம் தேதி
அங்கு சென்றவர்களுக்கு மூன்று மணி நேர காத்திருப்பும்,
மூன்று வினாடி தரிசனமும். நடுவில் நின்ற காவலரிடம்
5000 கொடுத்து ஒரு குடும்பமே கட்டைகளைத் தாண்டி முதல் வரிசைக்குச் சென்றதை மாப்பிள்ளை வீடியோ எடுத்திருக்கிறார்.
வயதானவர்கள் இப்படி எதிர்ப்பார்ப்பது எனக்குத் தெரியாது.
முன்பே சொல்லி இருந்தார்களே. கோவிலுக்குள்

அவர்களுக்கு வீல் சேர் கொடுக்கப் படும் என்று.
ரயில் நிலையத்திலிருந்து கொடுக்க இது விமானப்பயணம் இல்லையே.
எங்கேயோ தவறு நடக்கிறது மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு துரை ராஜு,

நம் எல்லோருக்கும் அருகில் மனதில் நிற்கும் வரதனின் கடைக்கண் பார்வைதான் உகந்தது.

இணையத்திலாவது அவனைக் காண முடிகிறது அதுவே போதும்.
அவன் என்னாளும் காப்பான்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு வெங்கட்,
நீங்கள் சொல்வதே சரி. ஆரம்பத்திலிருந்தே எனக்கு ஒரு தெளிவில்லாமல்
இருந்தது.
எப்படி சமாளிக்கப் போகிறார்கள் என்று.
வாலண்டியர்ஸ் நிறையக் கிடைக்கவில்லையாம்.
கடவுளை நம்பாத அரசியல் பிரமுகர்களின் வருகையும் அதிகமாம்.
அத்திவரதர் காட்சிப் பொருளகிவிட்டாரே என்று வருத்தமாகி விட்டது.
நாம் நம் மனதில் தரிசித்துக் கொள்வோம்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கோமதிமா. இந்த எண்ணமே நன்மை.
அந்த வெய்யிலையும், தண்ணீர் இல்லாமல் தவிப்பதையும் தாண்டி இறைவனை அணுகியவர்கள் பாக்கியம் செய்தவர்கள்.

அனைவரும் நலமுடன் இருக்க அவனே துணை.

Thulasidharan V Thillaiakathu said...

கூட்டம்னாலே மீக்கு அலர்ஜி!!

வெங்கட்ஜி சொல்லியிருப்பதை அப்படியே டிட்டோ செய்கிறேன். மீடியா ரொம்பவே ஹைப்!

எங்கள் குடும்ப வாட்சப்பில் சிலர் திவ்யமாக தரிசித்தோம் என்று சொல்லியிருந்தனர். சிலர் கொஞ்சம் மனக்கஷ்டம். அவர்கள் சீனியர் சிட்டிசன்கள். அன்று என்ன காரணமோ சீனியர் சிட்டிசன் க்யூவும் சரியாக இல்லை. போலீஸும் அதிகம் இல்லை கட்டுப்படுத்த என்று சொல்லியிருந்தார்.

மனதில் இருக்கும் இறைவன்! எங்கிருந்தாலும் எல்லோரையும் ரட்சிப்பான்!

கீதா

வல்லிசிம்ஹன் said...

அன்பு கீதா மா.
இந்தக் கடும் கோடையில் மேலே கூரையும் இல்லாமல் லட்சக்கணக்கான
மக்கள் பல்வேறு வழிகளில் அருள்மிகு அத்திவரதரை நோக்கிக் குவியும் வீடியோக்களைப்
பார்த்து அதிர்ச்சியாக இருந்தது.
திருப்பதியில் கூட இந்த மோதலைப் பார்த்ததில்லை.
நீங்கள் கூறியிருக்கும் செய்தி சற்றே ஆறுதல்.

இறைவன் விழைவதென்னவோ அனைவரின் நலத்தையும் தான்.
மீதி இருக்கும் நாட்களும் நலமே நடந்து பூர்த்தியாக வேண்டும்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு மாதேவி,
அன்பு அனுப்ரேம்,

நலமே நடக்கட்டும். உங்கள் தரிசனம் இனிதே நிறைவேறட்டும்.
வாழ்க வளமுடன்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கீதா. நான் இதைத்தான் சொல்ல வந்தேன். காணப் போவதோ இறைவனை.
இதில் முந்தி இருப்பதிலியே கவனம் வைத்தால் இறை எண்ணம் வலு இழந்து விடுமே.

உங்களைப் போலவேதான் நானும். கூட்டம் என்றாலெ
ஒதுங்கிவிடுவேன்.

இதற்காகவே பாட்டி என்னைக் கூட்டமில்லாத நாளில்தான் கோவிலுக்கே அழைத்துச் செல்வார்.
நம் பூஜை அறையே நம் கோவில்.
உங்களுக்கு ஒரு ஹை5.

நெல்லைத்தமிழன் said...

//நடுவில் நின்ற காவலரிடம் 5000 கொடுத்து ஒரு குடும்பமே கட்டைகளைத் தாண்டி முதல் வரிசைக்குச் சென்றதை மாப்பிள்ளை வீடியோ எடுத்திருக்கிறார்//

ஒருவேளை அந்த பக்தர், சினிமா காட்டுகிறார்கள் என்று நினைத்துவிட்டாரோ?

லஞ்சம் கொடுத்து மற்றவர்கள் வயிற்றெரிச்சலை வாங்கிக்கொண்டு பெருமாள் தரிசனமா? இது யாரை ஏமாற்ற?

வல்லிசிம்ஹன் said...

அன்பு முரளி மா. இனிய காலை வணக்கம்.
அவர்களுக்கு இவர் படம் எடுத்தது தெரியாது.
இவர்கள் வரிசையிலியே ஒரு பெண் மயங்கி
விழுந்திருக்கிறார்.
இவர்கள் தண்ணீர் முகத்தில் தெளித்து
வாயில் கொஞ்சம் எழுந்தவர், இவர்களையே முந்திக் கொண்டு
ஓடிவிட்டாராம். அசடு வழிய நின்றோம் என்று சிரிக்கிறார் மாப்பிள்ளை.
நாங்களும் பார்த்துட்டோம் வரதனைன்னு சொல்லிக் கொண்டே வந்து

பாக் செய்து வைத்திருந்த பெட்டிகளை எடுத்துக் கொண்டு

திரும்பி வர விமானத்தைப் பிடிக்க வந்துவிட்டாராம்.
ஒரே ஒரு நிம்மதி. வரதனின் மேல் சாற்றிய துளசி மட்டுமே.
அதுவும் இவரது தம்பி மனைவி ,பட்டாச்சாரியார் தட்டில் இரண்டாயிரம் போட்டதும் கிடைத்தது.

அதே அதே.