Blog Archive

Tuesday, July 09, 2019

இளங்காற்று வீசுதே ....

வல்லிசிம்ஹன்
எல்லோரும் வளமாக வாழ வேண்டும்.
காஞ்சி அத்திவரதர்
மழை வரம் அருளட்டும்.

Add caption
இளங்காற்று வீசுதே

முதல் காற்றை அனுபவித்தது  ஸ்ரீவில்லிபுத்தூர்
வாசல் திண்ணையில்  போகிறவர்கள்
வருகிறவர்களைப்பார்த்துக் கொண்டு கையில் சிலேட்டு,வாயில் கற்கண்டு
 வைத்துக்கொண்டு  மாலைக்காற்றை  ருசித்தது. வாசல் தெளித்தவுடன் வரும் ஈர வாசனை.
அம்மா போடும் கோலம், வடபத்ரசாயி,ஆண்டாள் உலாவரும் காட்சிகள்.மல்லிகை வாசனை.
இரண்டாம் காற்று
 திருமங்கல  வீட்டின் நீண்ட திண்ணைகளில் பெரியப்பா, சித்தப்பா பெண்களுடன் ஏழுகல் , மேற்கொள்ளப்போகும்
பயணத்தைப்  பற்றி  சுவாரஸ்யமான  கற்பனைகள்.
 இதனுடன் சேர்ந்து வரும் காலை க் காற்று

அதை உணருவதற்காகவே கிணற்றுக் குளியல்.

மூன்றாம் காற்று
திண்டுக்கல் கொல்லை த் தாழ்வாரம். கிணற்றடி
மாலை க் காற்று , கையில் ஆனந்தவிகடன்,சேவற்கொடியோன், குமுதம்  சின்னம்மா ,
கலைமகள் மாயாவியின் கதைகள் ,
என்று கனவுகளுடன் காற்றையும் சுவாசித்து
நுரையீரலை நிரப்பிக் கொண்ட பருவம்.

நான்காவது   பசுமலை வயல்வெளிகளில்
நடந்து முள் குத்தினாலும்  நடந்து கடந்து செல்லும்  எதோ
ஒரு ஊரை நோக்கி நகரும்  ரயில்

பாசஞ்சரை  நின்று அனுபவித்து,
அம்மாவின் குரலுக்குப் பணிந்து  வீடு திரும்பும் வரை வாங்கிய
தென்றல் சுகம்.

அதன் பிறகு  புதுக்கோட்டை,சேலம், கோவை,திருச்சி என்று நிற்க நேரமில்லாமல்
ஓடிய காலம்.
இளைய மகனின் ஊரில்  இயற்கையின் கருணையை அனுபவிக்க முடிந்தது.

இத்தனை  காற்றுகளையும் என் நினைவில் வீச வைத்தது
இன்றைய  காலை  காற்றை  அனுபவித்த நேரம்.

வாயில்  புல்தரையில்  ஒரு நாற்காலி யில்
அலைபேசியில்ல்லாமல் , ஐபாட் இல்லாமல், புத்தகம் இல்லாமல்
குருவிகளும்,மைனாக்களுமே துணையாக
சிலுசிலு காற்று  .வாழ்க்கையின் எத்தனையோ ஆசிகளுக்கு நன்றி.
Add caption





14 comments:

KILLERGEE Devakottai said...

தங்களது மலரும் நினைவுகளை கேட்பதில்கூட ஒரு சுகம் அம்மா.

இன்றைய அவசர உலகில் அடுத்த தலைமுறைகளுக்கு கிடைக்காது.

சமீபத்தில் உறவினர் கிரிகைக்கு ஸ்ரீவில்லிப்புத்தூர் சென்ற போது கோவில் வளாகம் அருகே சென்று வந்தேன்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு தேவகோட்டைஜி,
காற்று,நல்ல குடி நீர்,, தீமை இல்லாத சுற்றுச்சூழல்
எல்லாம் கிடைக்கும் போது மனதார் அனுபவிக்க வேண்டும்
இல்லையாப்பா.

ஸ்ரீவில்லிபுத்தூரில் பால் மணம் வீசும்.
என் குழந்தைக்காலத்துக்கு உரமிட்ட ஊர்.
நீங்கள் வேறு ஏதோ கிரியைக்குச் சென்றிருந்தாலும்
உங்களுக்கு அந்த தாயின் ஆசி கிடைத்திருக்கும்.
கருணையின் சாகரம் கோதை நாச்சியார்.
நன்றிமா.இனிய காலை வணக்கம் மா.

ஸ்ரீராம். said...

"அலைபேசி இல்லாமல், ஐபாட் இல்லாமல் புத்தகம் இல்லாமல்..."
நிஜமாக அனுபவிக்க வேண்டிய அற்புத கணங்கள்.

பசுமலையில் இப்போது வயல்வெளி எல்லாம் எதுவும் இருக்காது என்று நினைக்கிறேன்!

அருமையான தென்றல் நினைவுகள்.

கோமதி அரசு said...

இளங்காற்று வீசுதே! தலைப்பும் அது சொன்ன சங்கதிகள் இனிமையான காலங்கள்.
பாடல் பகிர்வு மிக அருமை.

சோழ நாட்டில் பௌத்தம் Buddhism In Chola Country said...

பழைய நினைவுகள் என்றுமே பசுமையானவை. என் இளமைக்கால நினைவுகளை மீட்டெடுத்தது இப்பதிவு.

நெல்லைத்தமிழன் said...

அந்த நாட்கள் ஏதோ வடிவத்தில் இப்போது உங்களுக்குக் கிடைத்ததில் மகிழ்ச்சி.

இளம் காற்று, சல சல வென ஓடும் நீரோடை, பறவைகளின் வித வித சப்தங்கள்.... இளம் வெயில்... கையில் ஏதேனும் புத்தகம்.. இது போதாதா?

Geetha Sambasivam said...

அழகாக நினைவலைகளைச் சொல்லி இருக்கிறீர்கள். சுருக்கமாகவும், தேர்ந்தெடுத்த வார்த்தைகளாலும். இங்கேயும் காற்று அவ்வப்போது வீசுகிறது. உடலில் படாமல் கதவுகளுக்கு மட்டும் படும்படியாக! :( இந்த வருஷம் என்னமோ இப்படிக் கடந்து கொண்டிருக்கிறது.

Geetha Sambasivam said...

பசுமலையில் பசுமை கொஞ்சம் மிச்சம் இருக்குனு நினைக்கிறேன்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஸ்ரீராம் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.

பூமியின் பசுமையை மனிதன் அழித்தால்,அதை விடக் கொடுமை உண்டா.

இன்னும் வரப்போகும் நம் மக்களுக்கு என்ன விட்டு விட்டுப் போகிறோம் என்ற
கவலை யாருக்கும் இல்லை.

அதுதான் கிடைக்கும் போது அனுபவிக்கும் மனோபாவம் வருகிறது ஸ்ரீராம்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கோமதி, மதுரை நாட்களில் தாத்தாவும் பாட்டியும் இந்தக் காற்றை மிக அனுபவிப்பார்கள். என் இன்னோரு பாட்டிக்கு
காற்று நன்றாக உடம்பில் பட்டால் போதும்.
கிராமத்திலிருந்து உத்யோக நிமித்தம் பட்டணம் புகுபவர்களுக்கு
காற்றில்லாக் கூடுகளில் அடைவது கடினமாக இருந்திருக்க வேண்டும்.
இந்தப் பாட்டு மிக அருமை இல்லையா கோமதி.

வல்லிசிம்ஹன் said...

அன்பு முனைவர் ஐயா, நீரும் காற்றும் என்றும் நிறைந்திருக்க இறைவன் அருள் புரிய வேண்டும்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு முரளிமா,
இளைய மகன், //அம்மா கெட் சம், சன் // என்று மிரட்டிக் கொண்டே இருப்பான்.
சரிடான்னு சொல்லிவிட்டு வெய்யில் இல்லாத இடத்தைப் பார்த்து அமர்ந்து கொண்டேன்.
உள்ளே வரவே மனமில்லை. இயற்கையே போதுமானதாக இருந்தது. நன்றி ராஜா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கீதாமா,

நல்ல செய்தி ,பசுமலையைப் பற்றி.
ஸ்ரீரங்கத்தின் மேல் வாயு பகவானுக்கு என்ன கோபம்.
இப்படி இருந்தாலே உடல் வலி எல்லாம் வருமே.
ஆடி பிறக்கப் போகிறது. காற்று வந்தே ஆக வேண்டும்.
பத்திரமாக இருங்கள் கீதா மா.

மாதேவி said...

"தென்றல் வந்து என்னை தொடும்....
உங்கள் நினைவுகள் இனிமை.