முன்பு நம் ஊரில் ஸ்டார் ப்ளஸ் ஆரம்பித்த புதிதில்
டிசிஎம் Turner classic movies திரைப்பட சானல் இருந்த போது
பார்த்த படங்கள் அனேகம்.
எல்லாமே நான் பிறப்பதற்கு முன்
இல்லாவிட்டால் 1950 களில் வந்தவை.
திரை அரங்குகளுக்குப் போய்ப் படம் பார்க்கும்
சந்தர்ப்பம் குறைந்தது.
அந்த அளவுக்கு ஒலியும், சங்கடமும் நிறைந்த
இடங்களில் சினிமாவை எப்படி
நிலைத்து ரசிப்பது?
குழந்தைகள் திருமணங்கள் முடிந்து , கைகளில்
நேரம் தேங்கிக் கிடந்த காலம்.
பழைய தமிழ்த் திரைப்படங்கள் மதியம் பார்க்கலாம்.
ஆங்கிலப் படங்கள் எப்பொழுது வேண்டுமானாலும்
பார்க்கலாம்.
அப்போது மனதுக்கும் ஆறுதல் தேவையாக இருந்தது.
சிறிது காலத்தில் அந்த சானலை நிறுத்தி விட்டார்கள்.
பிறகு இந்த ஊருக்கு வரும்போதெல்லாம்
பார்க்க முடியும்.
இப்போது இணையத்திலேயே எல்லாம்
காணக் கிடைக்கிறது.
வீட்டிலிருந்து வேலை செய்பவர்களுக்கு
பொதுவாகச் சத்தம் ஆகாது.
அதனால் நம் மடிக்கணினியே நமக்கு எல்லாம்
ஆகிறது.
ஒரு எஸ்கேப் ரூட் என்று சொல்வார்களே
அது போல.
இப்போது உலகம் எங்கும் பரந்து இருக்கும் உறவினர்களின் நலம்
மாறி மாறிச் செய்தி வந்தால்,
அவர்கள் நலம் பெறுவார்கள் என்ற நம்பிக்கையோடு
இறைவனைப் பிரார்த்திக்கவும்
நம் மனம் நல்லதாக இருக்க வேண்டும் இல்லையா
திரைப்படங்களும் இசையும், இறை வழிபாட்டு
மந்திரங்களும் நம் வாழ்க்கையை வளப்படுத்த வழி.
முன்னாட்களில் ,சிங்கத்தின் பாட்டி சொல்வார்,
''வெறுமனே குழந்தைகளுக்கும் அவனுக்கும்
சமைத்துப் போட்டால் மட்டும் போதாது.
செருப்பைப் போட்டுக்கோ வெளில போய் வா"
என்ன அர்த்தம் தெரியுமா,ராஜேஸ்வரி லெண்டிங்க் லைப்ரரிக்குப்
போ. வடுவூர் துரைசாமி துப்பறியும் த்ரில்லர் நாவல்களை
எடுத்து வா என்பதுதான்:)))))
அதற்கப்புறம் இருக்கவே இருக்கு ஆர் ஆர் ஃபார்மசி,
லஸ் பிள்ளையார், தண்ணித்துறை ஆஞ்சனேயர்
எல்லா இடங்களுக்கும் நடைதான்.
இன்னோரு நாள் ,கபாலி, முண்டகக்கண்ணி, எல்லை அம்மன்
என்று தொடரும். #ஆடி மாத நினைவுகள்