இன்று பங்குனி அமாவாசை. இந்த
நன்னாளில் தொடங்கப்படும் அனைத்துக்
காரியங்களும் வெற்றி பெற இறைவனின் அருள்
கிடைக்கப் பிரார்த்தனைகள்.
உகாதி பண்டிகைக்கான வாழ்த்துகள்.
பாட்டி விமரிசையாகக் கொண்டாடும் பண்டிகை.
பெற்றோர்களுடன் இருந்தபோது உகாதி
கொண்டாடிய வழக்கம் இல்லை.
சென்னையில் இருப்பவர்கள் மிக உத்சாகத்துடன்
கொண்டாடுவதைப் பார்த்திருக்கிறேன்.
திருப்பதியும் ஆந்திரப் பிரதேசமும்
சென்னையுடன் இருந்ததால் இந்த வழக்கமும்
வந்திருக்கவேண்டும்.
அதிக மகிழ்ச்சி அதிக நேர் எண்ணங்கள் இப்படித்தான்
இந்த விழாவை நான் பார்க்கிறேன்.
சென்னைத் தோழிகளை அன்புடன் வாழ்த்துகிறேன்.
அவர்கள் வீட்டிலிருந்து வரும் போளிகளையும்
மனதில் எண்ணி சுவைக்கிறேன்:)
சுலபமாகப் போளி செய்யும் முறையைத்
தினமும் மணமும் யூடீயூப் இணைப்பில்
பார்த்தேன்.
கடலை மாவு, வெல்லம், கொஞ்சம் மைதாமாவு,தேங்காய்ப் பொடி,ஏலக்காய் தூள்
சேர்த்துக் கரைத்து,(ஆமாம் கரைத்து)ப்
போளியைத் தோசைக்கல்லில் ஊற்றி செய்தார்கள்.
பார்க்க
நன்றாகத் தான் இருந்தது . அதுவும் நெய் ஊற்றி
இரண்டு பக்கத்தையும் பொன்னிறமாக
எடுத்தார்கள்.
இங்கும் அதை செய்து பார்க்க வேண்டும்.
பழைய படப் பாடல்கள் மனதுக்கு மிக இனிமை. அண்மையில்
நடிகர் ரஞ்சன்(பழைய நடிகர்) அவர்களின்
வாழ்க்கை பற்றிய சுவாரஸ்யமான தகவல்களைப்
படித்தேன்.
என் மாமியாரின் பிறந்து வீட்டுக்குப்
பக்கத்தில் அவர் இருந்ததாகவும், மாடவீதிகளில் அவர்
குதிரையில் சவாரி(மெதுவாகத்தான்) செய்த
விவரங்களையும் ஆனந்தமாகச் சொல்வார்,.
திரை உலகின் நெளிவு சுளிவுகளை அறியாத
திறமைசாலி சில படங்களில்
மட்டும் நடித்திருக்கிறார்.
பிறகு மும்பை சென்று விட்டாராம். சிறுவயதில்
மனத்தில் படிந்த நல்ல பாடல்களில் ஒன்றை
மேலே பதிந்தேன். வீர சாகசமும்,நேர்மையும்
எப்பொழுதுமே மனதை ஆட்கொள்ளும் இல்லையா!!!
வல்லிசிம்ஹன்
அன்பின் அனைவருக்கும்
யுகாதித் திரு நாள் வாழ்த்துகள். இறைவன் அருள் என்றும் கூடி நம்முடன் நிற்கவேண்டும்.
சென்னை மற்றும் தமிழகத்தின் எல்லா இடங்களிலும்
வெய்யிலின் தாக்கம் அதிகமாக
இருப்பதாகப் படிக்கிறேன்.
இந்த வட அமெரிக்காவிலேயே ஒரு பக்கம் வெய்யில்,ஒரு பக்கம் மழை காற்று சேதம், இந்த ஊரில் குளிர்.
எல்லாவற்றையும் கடப்போம்.
இறைவன் அருளால் தமிழகத்தில் நல்ல மழை பெய்து வெப்பம் தணிய வேண்டும்.
நம் ஊருக்கு வர வேண்டும் என்ற எண்ணம்
எப்போதும் உண்டு.
சந்தர்ப்பம் கூடி வரவேண்டும்.
தொற்று பற்றி பயம் இல்லாமல் தான் இப்போது அனைவரும் நடமாடுகிறார்கள்
என்று தோன்றுகிறது.
நேரம் கூடி வந்து அனைத்து நட்புகளையும்
காண ஆவல்.
லஸ் வினாயகரே என் கோரிக்கையை
நிறைவேற்ற வேண்டும்.
ஜூன் மாதத்திலிருந்து நிலத்தடி மெட்ரோவுக்கான
வேலைகள் தொடங்கப் போவதாகச் சொன்னார்கள்.
நம் வீட்டுக் காம்பவுண்டிருந்து இருபதடி தூரத்திலிருந்து
வேலைகள் ஆரம்பிக்கும். அந்தப் பக்கம் இருக்கும் கட்டிடங்கள்
பாதிக்கப் படும்.
வீடுகள் கட்டிக் குடி வந்தவர்கள் கதி என்ன என்று
யோசிக்க மாட்டார்களா.
பக்கத்துவீடு ,அதற்கப்புறம் இருக்கும் அடுக்கு மாடிக்
குடி இருப்பு எல்லாமே பாதிக்கப் படும்.
அத்தனை குடும்பங்களுக்கும் என்ன வழி செய்யப்
போகிறார்களோ .
இறைவன் காக்க வேண்டும்.