Blog Archive

Wednesday, March 02, 2022

நினைவெல்லாம்....மகிழ மட்டுமே.


         1966  ஏப்ரல்  +++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++    ஏப்ரில்  மாதம்  வந்தது.  சேலத்துக்கு மாற்றல் உத்தரவு வந்தது.   சேலம்   இதுவரை போகாத ஊர்.    எப்படி இருக்குமோ தெரியாது. அதற்குள்   சென்னையிலிருந்து மாமனாருக்கு  உடல் நலம் சரியில்லை  என்றும்  இருவரையும் உடனே புறப்படச் சொல்லித் தொலைபேசி அழைப்பு வந்தது.                                                                                                                                                                                                                                                                           ரயில்   டிக்கட்கள்  வாங்கி  வந்துவிட்டோம். மாமனாருக்குக் கழுத்தில்  ஏதோ கட்டி வந்து  அறுவை சிகித்சை செய்ய வேண்டும் என்று சொல்லிவிட்டார்கள்.           அது  வேறுவிதமாகத் திரும்பலாம் என்ற ஐயத்தில்  இவரை அழைத்திருக்கிறார்கள்.                                                                                                                                                                                                                                                            நாங்கள் சென்ற அடுத்த நாள்  ஆபரேஷன்.    மாமியார் மாமனாரோடு    அடையார் கான்சர் ஆஸ்பத்திரிக்குக் கிளம்பிச் சென்று விட்டார். கூடவே  இவரும்.   அவ்வளவு பெரிய வீட்டில்    நானும் பாட்டியும் தாத்தாவும் தான்.  மாடிப்படி வளைவில்  ஒரு பெரிய ஜன்னல் இருக்கும். அதன் உட்புறத்திண்ணையில் உட்கார்ந்து கொண்டு   வெளியே  தொலைவில் தெரியும் சாலையைப் பார்த்த வண்ணம் இருந்தேன்.                                                          நான்கு மணி நேரம் கழித்து  அழைப்பு வந்தது.   ஒரு பெரிய கிரிக்கெட்  பந்து அளவில் கட்டி எடுக்கப் பட்டதாகவும்                ஆனால் அது கான்சர் கட்டி இல்லை என்றும் சொல்லிவிட்டார்கள். ஆஜிப் பாட்டி பகவான் சந்நிதியில் விளக்கேற்றி    வணங்கினார். எதற்குமே அஞ்சாத  பெண்மணி. கலங்கியதை அப்போதுதான் பார்த்தேன்.                                                                                                                                                               ஆள்கட்டு,வண்டி என்று எதற்கும் குறைவில்லாத நாட்கள். வாழ்வில் ஏதாவது தவறு நடந்துவிடப்போகிறதே என்று பயந்த தாயாக இருந்தார்.           அடுத்த இரண்டு நாளில் இவர்     புதுக்கோட்டைக்குக் கிளம்பினார்.    பாட்டி அவள் இங்கே இருக்கட்டும். நல்ல சாப்பாடே   சாப்பிடுவது இல்லை போலிருக்கே.என்னடா பாத்துக்கறே அவளை  என்று செல்லமாக அதட்டினார்.    அவள் சாப்பிடுவதே இல்லை ஆஜி. நான் எப்ப வேலையை முடிந்து வருகிறேனோ அதுவரை  பட்டினிதான்      என்று சிரித்தவண்ணம் சொன்னவரை.,எல்லாம் தெரியும்டா  இப்போதைக்கு ஐந்து மாதத்துக்கு உண்டான    பூச்சூட்டல்,புடவை வாங்கிச் செய்யவேண்டியதைச் செய்து அவள் பாட்டியோட அனுப்புகிறேன் என்றார்,. அடுத்த வாரம் வரட்டுமா. நானே கார் கொண்டுவந்து கூட்டிப் போகிறேன்     என்ற பதில் வந்தது.   ம்ஹூம் சொன்ன பேச்சைக் கேளு. கிளம்பற வழியைப் பாரு. அவளை நான் பத்திரமாகப் பார்த்துக் கொள்கிறேன். உங்க அப்பா வீட்டுக்கு  வந்துடட்டும்.  அப்புறம் பார்க்கலாம் என்றதும்  இவர்  முகம் போன போக்கைப் பார்க்கவேண்டும்.                          மாடியில் அறையில் அவரது பெட்டியை மட்டும் தனியாக எடுத்துக் கொண்டு இறங்குபவரைப் பார்க்கப் பரிதாபமாக இருந்தது.   என்னம்மா நான் இல்லாமல் இங்க தைரியமா இருப்பியா என்று கேட்டார்.     ம்ம்ம் இருப்பேன். நீங்க பத்திரம் என்றவளைப் பார்த்து புருவத்தை உயர்த்தினார். என்ன  அம்மா பாடு ஜாலி போல இருக்கே.   சமைக்க    வேண்டாம். ஊஞ்சலாடலாம். பாட்டி வீட்டுக்குப் போகலாம்னு நினைப்பா......சரி சரி இரு.  நாந்தான் வருவேன். யாரோடயும் நீ கிளம்பவேண்டாம் என்று புறப்பட்டார்.  டாக்சி வந்து ஏறிச் செல்பவரைப் பார்த்து   எனக்கே கஷ்டமாக இருந்தது,. அதற்குள் தாத்தா வாசலுக்கு வந்து    புருஷா ஊருக்குப் போகும்போது கண்கலங்கக் கூடாது  என்று அதட்டும் குரல் கேட்டது. அவசரமாக     நகர்ந்து ஊஞ்சல்  கூடத்துக்கு வந்துவிட்டேன்.                                                                                                                                                                                                                                       ஒரு வாரத்தில் மாமாவும் வீட்டுக்கு வந்துவிட்டார்.  பாரிஜாதத்துக்கு என்று தனியாகத் தறி போடுபவர் முத்துச் செட்டியார். அவரிடம் சொல்லி   கறுப்புக் கலந்த நீலப்  புடவை   அழகான நட்சத்திரங்கள்   பதித்த  புடவை சொல்லி  அவரும் கொண்டு வந்து கொடுத்தார்.  ஒரு நல்ல நாள் பார்த்து  புரசவாக்கத்துக்குத் தொலைபேசிப் பாட்டியிடம் செய்தி  சொன்னார்  மாமியார்.                                                                                                                                                                             பாட்டியும் நல்ல திரட்டுப் பால்  கிளறி மாமாவிடம் அனுப்பினார். சுலபமாக     அந்த வீட்டுப் பெண்கள் பத்துப் பேரை அழைத்து   ஒரு நாள் சாயந்திரம்      அந்தப் புடவையைக் கட்டிக் கொண்டு    கோவிலும் போய் வந்தாச்சு,.   அதற்குள் புதுக்கோட்டையிலிருந்து நான்கு தடவை ஃபோன் வந்தாச்சு.     இன்னும் கிளம்பவில்லையா. சிநேகிதனோட திருமணம்  இந்த மாதக் கடைசியில் வருகிறது. நான் வரப் போகிறேன். என்னோட திரும்பி வந்துவிடு என்றார்.     நாங்கள் தனியாக இருக்கிறோம் என்ற நினைப்பில் நான் ஏதோ கேட்க அவர் ஏதோ சொல்ல , பின்னால் ம்க்கூம் என்ற மாமாவின் கனைப்புக் குரலில் நான் விழித்துக் கொண்டேன்.                                        தேவ் சாப்  பேசி முடிச்சுட்டாரா. இல்ல நீ ஃபோன்   வழியாகவே ஊருக்குப் போகிறாயா  என்றார்.    ஒரே  கூச்சமாகி விட்டது.  ஒரு வழியாகத் தோழனின்  திருமண நாளுக்கு முதல் நாள் வந்தார்.   நாளை சாயந்திரம்   ரயில் டிக்கட் வாங்கி வந்தாச்சு.    உனக்குப் பட்டுப் புடவை கூடக் கொண்டுவந்திருக்கிறேன். என்று எங்கள் திருமணப் புடவையை எடுத்துக் காட்டினார்.                                                    எத்தனை முன்னேற்பாடு என்று சிரிப்பே வந்தது.                         அப்புறம் அடுத்த நாள் கிளம்பி  புதுக்கோட்டை வந்து  இரண்டு வாரங்களில் சேலத்துக்குக்  கிளம்பினோம்.:)


மைசூர் பாக்கும் மற்றவர்களுக்கு.
பக்கம் வராதே பற்றிக் கொள்வேன் என்னும் சர்க்கரை:))))


  '' நீ இல்லாத உலகத்திலே  நிம்மதி இல்லை. உன் நினைவில்லாதஇதயத்திலே சிந்தனை இல்லை.''
  


 நீ வேண்டும் என்று நினைத்தபிறகுவாழ்வில் வேறெது வேண்டும்..

10 comments:

ஸ்ரீராம். said...

இனிமையான நினைவுகள். ஊருக்கு அழைத்துச் செல்லும் ஆவல், அதைக் காட்டிக்கொள்ளாத கம்பீரம்... அந்தக் காட்சிகள் ரசிக்க வைத்தன அம்மா.

Geetha Sambasivam said...

1966 ஏப்ரலில் எஸ் எஸ் எல்சி பரிக்ஷை முடிந்து வீட்டில் தான் இருந்தேன். இரண்டுமே அருமையான பாடல்கள். அதிலும் சஞ்சீவ் குமாரும் சுசித்ரா சென்னும் மிகப் பிரமாதமாக வாழ்ந்து காட்டிய படம்.

மீள் பதிவோ?

கோமதி அரசு said...

மலரும் நினைவுகள் மிக அருமை.
ஆஜி பாட்டியின் அக்கறை உங்களை தங்க வைத்து கொண்டது சாரின் முகபாவம் மாறியது எல்லாம் கண் முன்னே வந்து போகிறது. அவ்வளவு அழகாய் எழுதி இருக்கிறீர்கள். கறுப்பு கலந்த நீல புடவை உங்களுக்கு அழகாய் இருந்து இருக்கும்.

மைசூர் பாக் அருமை.
இரண்டு பாடல்கள் பகிர்வு மிக அருமை.

//'' நீ இல்லாத உலகத்திலே நிம்மதி இல்லை. உன் நினைவில்லாதஇதயத்திலே சிந்தனை இல்லை.''//

என்றும் நினைவுகளில்.

Thulasidharan V Thillaiakathu said...

அருமையான நினைவுகள்! தாத்தா பாட்டி என்று ஆஹா

எனக்கும் கல்யாணமான புதிதில் மாமியாரின் அம்மா இருந்தார். எங்களோடு வந்து தஇருந்தார்கள் பாட்டி, மாமனார் மாமியார். பாட்டி ரொம்ப அன்பாக இருப்பார்.

உங்கள் புகுந்தவீட்டுப் பாட்டியைப் பற்றி வாசித்ததும் இந்தப்பாட்டி நினைவுக்கு வந்தார். தினமும் மாலையில் எனக்குத் தலைவாரிப் பின்னிவிடுவார் இருந்த எலி வாலை!!!!! தாயக்கட்டம், பல்லாங்குழி விளையாடுவோம்!!!

இந்தப் பாட்டியும் உங்களிடம் மிகுந்த அன்பாக இருந்திருக்கிறார். நல்ல சந்தொஷமான நினைவுகள்.

கீதா

வல்லிசிம்ஹன் said...

அன்பின் ஸ்ரீராம்,
என்றும் நலமுடன் இருங்கள்.
ஏற்கனவே பதிந்திருக்கீறேன்.

ஆமாம்.
திருமணம் ஆன புதிது. இல்லாவிட்டாலும்
என்னை விட்டு அவரால் இருக்க முடியாது.
நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...


மீண்டும் மீண்டும் நினைக்கிறேன் கீதா.
நாம் ஏன் சந்திக்காமல் போனோம் என்று.:)

அப்பா அனுமதித்திருக்க மாட்டார்.
நான் 64 இல் எஸ் எஸெல் சி பாஸ் செய்தேன்.
இது மீள் பதிவு தான் மா.
உங்களுக்குத் தெரியாததா!!

சுசித்ரா சென் நல்ல நடிகை. சஞ்சீவ் குமார் இன்னும் சிறப்பானவர்.
கௌரவமான நடிப்பு.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கோமதி மா,
வாழ்க வளமுடன்.
இது ஒரு மீள் பதிவுதான்.

நினைவுகள் நீங்காமல் இருப்பதால் தான் உயிரோடு
இருக்கிறோம்.
உங்கள் அன்பும் ஆதரவும் துணையாக
வருகிறது.
என் மூன்று ஜி என்று மகள்
கேலி செய்கிறாள்.
கீதா சாம்பசிவம், கோமதி அரசு, கீதா ரங்கன்:)
பாடல்கள் உங்களுக்குப் பிடிக்கும் என்றே நினைத்தேன்.

வல்லிசிம்ஹன் said...

Dear Geetha Rangan,
உங்கள் புகுந்தவீட்டுப் பாட்டியைப் பற்றி வாசித்ததும் இந்தப்பாட்டி நினைவுக்கு வந்தார். தினமும் மாலையில் எனக்குத் தலைவாரிப் பின்னிவிடுவார் இருந்த எலி வாலை!!!!! தாயக்கட்டம், பல்லாங்குழி விளையாடுவோம்!!!

:)))) பிறந்த வீட்டுப் பாட்டியும் ரொம்பச் செல்லம்.

இந்தப் பாட்டியும் மிக அருமை. அப்படிப்
பார்த்துக் கொள்வார்.
பழைய கதைகள் சொல்வார்.
அவ்வப்போது திட்டும் விழும்.:)

மாதேவி said...

இனிய நினைவுகள்.

வெங்கட் நாகராஜ் said...

கண் முன் விரிந்த காட்சிகள்.... இனிமை. பகிர்ந்து கொண்ட பாடல்கள் எனக்கும் பிடித்த பாடல்கள்.