Blog Archive

Monday, March 28, 2022

வினை தீர்க்கும் வினாயகர்.


வல்லிசிம்ஹன்


 எல்லோரும் வளமாக  வாழ வேண்டும்

 சென்ற பதிவில் நம் பிள்ளையார் படங்களை
மட்டும்  பதிவிட்டு எழுதாமல் விட்டு விட்டேன்.

வினாயகர் உருவம் முதலில் மனதில் பதிந்த 
நாளை நினைக்கிறேன்.

அப்பா அம்மாவுடன் அவ்வையார் படம் பார்த்த அன்றுதான்
அந்த அன்புக் கடவுளின்  வருகை வீடெங்கும் நிறைய ஆரம்பித்தது.

அப்பா ஒரு தீர்ந்த பிள்ளையார் பக்தர்.
எப்பொழுதும் வீட்டில் பிள்ளையார் கோவில்
விபூதி இருக்கும்.
இரவு படுத்துக் கொள்ளுமுன் நெற்றியில்
இட்டு விடுவார். என்னுடைய பல பயங்களை
அந்த விபூதி போக்கி இருக்கிறது.     அதே போல எங்கள் மூவரையும் பரீட்சை எழுத
ஆரம்பிக்கும் முன் பிள்ளையாரை நினைத்து
சுழி போட்ட பிறகே எழுத வேண்டும் என்றும்
சொல்வார்.


அரச மரத்தடி பிள்ளையாரே
ஆத்தங்கரை ஓரப் பிள்ளையாரே
ஆதாரம் வாழ்வில் நீயே பிள்ளையாரே
அருளுடனே எம்மை ஆளும் பிள்ளையாரே...

அங்கும் இங்கும் என்றும் தேடும்பிள்ளையாரே
ஆதரவு தந்திடுவாய் பிள்ளையாரே
என்றும் உன்னை மறவாமல் பிள்ளையாரே
என் மனதில் நிலை பெறுவாய் பிள்ளையாரே.

சஞ்சலங்கள் போக்கிடுவாய் பிள்ளையாரே
சங்கடங்கள் நீக்கிடுவாய் பிள்ளையாரே.
தேங்காமல் ஓடும் ஆற்று நீரைப் போலே 
தேர்ந்து எம்மைக் காத்திடுவாய் பிள்ளையாரே.

அஞ்சி அஞ்சி வாழ வேண்டாம் பிள்ளையாரே. உம்
அஞ்சேல் உரை கேட்டால் பிள்ளையாரே.

கெஞ்சாமலே அன்புப் பிள்ளையாரே
நெஞ்சிலிருந்து காத்திடுவாய் பிள்ளையாரே.

பிள்ளையார் திருவடிகளே சரணம்.
சட்டென்று மனதில் தோன்றிய வரிகளை
எழுதினேன். 



தொடரலாம்?


17 comments:

ஸ்ரீராம். said...

பிள்ளையார் துதி நன்றாய் எழுதி இருக்கிறீர்கள்.

அவ்வையார் படம் நான் தஞ்சை ராஜேந்திரா தியேட்டரில் பார்த்தேன்.  விநாயகர் வரும் காட்சி, யானை வரும் காட்சி என்று ரசித்த படங்களில் ஒன்று அது.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் ஸ்ரீராம்,
என்றும் நலமுடன் இருங்கள்.
நன்றி மா.

ஏதோ தோன்றியது எழுதினேன் மா.
வினாயகர் பெருமையை ஒரு பதிவில் சொல்ல முடியுமா.
மீண்டும் அவ்வையாரின் யானை காட்சியைப் பார்த்து ரசித்தேன் மா.

Geetha Sambasivam said...

பிள்ளையார் மேல் நீங்க எழுதி இருக்கும் பாடல் அருமை. சிக்கனமான வார்த்தைகளில் அருமையாக அமைந்திருக்கு. எங்கள் எல்லோருக்குமே பிள்ளையார் தான் இஷ்ட தெய்வம். ஔவையார் படம் தொலைக்காட்சி மூலமே சில முறைகள் பார்த்திருக்கேன். பிடித்த படமும் கூட. பகிர்வுக்கு நன்றி.

Thulasidharan V Thillaiakathu said...

அம்மா வாவ்! அழகான வரிகள். சூப்பரா எழுதியிருக்கீங்க.

ரசித்துப் பாடியும் பார்த்துக் கொண்டேன். சும்ம மெல்லிதாக. பாட முடிவதில்லை இப்போதெல்லாம்.

ஔவையார் படம் முன்பு பல வருடங்களுக்கு முன் பார்த்த நினைவு அதன் பின் அந்தப் படம் பார்க்கவெ இல்லை. யுட்யூபில் இருக்கிறது என்பதும் தெரிகிறது.

இவ்வளவு அழகாக பாடல் கூட எழுதுகிறீர்களே அம்மா. சூப்பர் போங்க!!

கீதா

Jayakumar Chandrasekaran said...

எனது இஷ்ட தெய்வம் பிள்ளையார். வீடு கட்டியபோது வீட்டின் கேட்டின் தூணில் பெரிய மாடம் வைத்து பிள்ளையார்  சிலையையும் வைத்தேன். திருடு போயின. போகப் போக மாற்றிக்கொண்டே வந்தேன். தற்போது யாரும் எடுத்தால் பிரயோஜனம் இல்லாத மண் பிள்ளையார் கொஞ்ச நாளாக இருக்கிறது. 

மரம், பித்தளை, கருங்கல், மாக்கல், ரெசின், கண்ணாடி, பீங்கான், சுட்ட மண், ஜிப்சம், எருக்கன் வேர், என்று விதம் விதமாக சேகரித்தேன். வருவோர் போவோர்  பலவற்றை கொண்டு போகின்றனர். மீதி இருப்பது சொற்பமே.

  Jayakumar

கோமதி அரசு said...

பிள்ளையார் துதி மிக அருமையாக எழுதி இருக்கிறீர்கள். சட்டென்று தோன்றியது அவர் அருளே!

"வெள்ளை கொம்பன் விநாயகரை தொழ"பாடல் எங்கள் வீட்டில் சங்கடஹர சதுர்த்தி அன்று எப்போதும் ஒலிக்கும். பதிவு செய்த பாடல்.

இப்போது டேப்ரிக்காடு பழுது அடைந்து இருக்கிறது.

youtube ல் கேட்கிறோம். நீங்கள் பகிர்ந்த சீர்காழி அவர்கள் பாடல் பிடித்த பாடல்.

கோமதி அரசு said...

அப்பாவின் நினைவுகள் அருமை.

Thulasidharan V Thillaiakathu said...

உங்கள் அப்பாவைப் பற்றிய நினைவுகளோடு, உங்கள் பிரார்த்தனைப் பாடலும் அருமையாக இருக்கிறது. நன்றாக எழுதியிருக்கிறீர்கள்.

துளசிதரன்

Thulasidharan V Thillaiakathu said...

காலையில் சொல்ல விட்டுப் போன கருத்து. உங்கள் அப்பா விபூதி சேர்த்து பயத்திற்குக் கொடுத்தது போல் என் அம்மா செய்வார்.

நல்ல நினைவுகள், அம்மா

கீதா

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கீதாமா,
என்றும் நலமுடன் இருங்கள்.

பிள்ளையார் மாதிரி ஒரு காப்பாற்றும் தெய்வம்
எப்பொழுதும் மனதில் இருக்கும்.
இருக்கும் வரை கவலையை சமாளிப்பதும்
கூடி வரும்.

நமக்குப் பாடங்கள் ஆரம்பிக்கும் போதே
சொல்லி வைக்கிறார்கள் இல்லையா.

ஏதோ ஒரு மெட்டுக்கு
இந்த வரிகள் தோன்றின.
இப்போது அந்த இசையும் நினைவில் இல்லை:)

நீங்கள் சொல்வதே சந்தோஷம்.
நன்றி மா.
அவ்வையார் படம் என்றும் இனிமை.

வல்லிசிம்ஹன் said...

@Geetha Rangan,
என்றும் நலமுடன் இருங்கள்.
உங்களுக்கு மீண்டும் அவ்வையார் படம்
பார்க்க சந்தர்ப்பம் கிடைக்கட்டும்.

பாட்டுக்காகவே பார்க்கலாம்.

நம் தமிழ் எல்லாமே கடவுளர் தந்த கருணைதானே.
அதுவும் உங்கள் இனிய குரலில்
பாடிக் கேட்டதும் எனக்கு மிக மகிழ்ச்சிமா.
இந்த அன்பு வேறெங்கு கிடைக்கும்.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் ஜெயக்குமார் சார்,
என்றும் நலமுடன் இருங்கள்.

நம்மூரில் உடைந்த பக்கெட் துண்டுகளே
திருட்டுப் போகும்.
பிள்ளையாரே கிடைத்தால் விடுவார்களா.

உங்கள் பொறுமையை மிகவும் வியக்கிறேன்.

விடாக்கண்டனாய் எடுத்துப் போயிருக்கிறார்கள்.

அனேகமாகப் பிள்ளையாரை நேசிப்பவர்களுக்கு
வித விதமான பிள்ளையார்களைச் சேகரிக்கும்
பழக்கமும் வந்துவிடுகிறது.

உங்கள் பிள்ளையார்களுக்கு என் வந்தனங்கள்.
என் கணவரின் சகோதரி பங்களூரில் அவர் வீட்டில்

நூற்றெட்டு பிள்ளையார்கள் வைத்திருந்தார்.
அவருக்குப் பிறகு அவருடைய குழந்தைகளுக்கு

அவர்களைக் காப்பதில் பிடிப்பில்லை.
அரண்மனை போன்ற வீட்டை விற்றுவிட்டு வேறிடம்
போய் விட்டதாகக் கேள்வி.
இங்கு வந்து படித்துக் கருத்தும் சொன்னதற்கு
மிக நன்றி திரு ஜெயக்குமார்.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கோமதி மா,
வாழ்க வளமுடன்.

நம் எல்லோருக்கும் பிடித்தவர் பிள்ளையார்.
உங்கள் கணவரும் ,மகனும் செய்து வைத்த
பிள்ளையார்கள்
நினைவுக்கு வருகிறது.
குழந்தைத் தெய்வம் நம் கவலைகளை எல்லாம்
போக்கி நிம்மதியான வாழ்வு தர வேண்டும்.
நமக்கு வேறென்ன தெரியும்.
பிரார்த்தனை ஒன்றே கதி.

பாராட்டுக்கு மிக நன்றி மா.


நல்ல தமிழைக் கொடுத்த இறைவனுக்குத் தான் நன்றி சொல்லவேண்டும்.நம் வாழ்வின் நன்மைகளுக்கும் பெற்றோரே
காரணம்.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் துளசிதரன், என்றும் நலமுடன் இருங்கள். நம் வாழ்வில் தெய்வத்தை அறிமுகம் செய்வது தந்தை தாய் தானே.அந்த விஷயத்தில் அப்பா மிக உறுதியாக இருப்பார். அது ஒரு தொன்மையான நம்பிக்கை கொடுத்தது அப்பா. மிக நன்றி.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கீதாம்மா. அதுதான் நமக்கு உள்ளத்துக்கு உரம் தரும் இப்பொழுதும் விபூதி இட்டுக் கொண்டு தான் தங்கப் போவேன்.பிள்ளையார் விபூதி!

KILLERGEE Devakottai said...

பிள்ளையார் பாடல் அருமை அம்மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் தேவகோட்டைஜி,
நலமுடன் இருங்கள்.
மிக நன்றி மா. பிள்ளையார் நம்மைக் காப்பார்.