Blog Archive

Wednesday, March 30, 2022

சூழ வரும் பிள்ளையார்..

எல்லோரும்  நலமாக வாழ வேண்டும்.

வினாயகர் படிப்புக்குத் துணையாக  அறிமுகம் ஆனவர். பயத்தைப் 
போக்க உதவினவர்.
முன்பே சொன்னது போல நம் பெற்றோர் 
அறிவு சொன்னது போல நடந்தகாலம்.
திருமணம் ஆன பின்னும் மாறவில்லை.

சிங்கத்தின் துணை கொண்டு ராமரும் சீதையும்
பட்டாபிஷேகக் கோலத்தில் எங்களுடன் சேர்ந்தனர்.

திருமங்கலத்தில்  வீட்டிலிருந்து 100 கஜ தூரத்தில் ஒரு அரசமரம்.

அந்தப் பிள்ளையாரிடன் தோப்புக்கரணம் போட்டுவிட்டே
பள்ளிக்குச் செல்வோம்.
தோழிகளைப் பிரிந்தது போல
அந்த அழகுப் பிள்ளையாரைப் பிரிவதும் சிரமமாயிருந்தது.

திண்டுக்கல்லில் அந்த இடத்தை வெள்ளைப் பிள்ளையார்
பிடித்துக் கொண்டார்.
பள்ளி இறுதிவரை  ஆறுமாதத்துக்கு ஒரு முறை
சின்னக் கடைத்தெருவில் தேங்காய் வாங்கி 
18 தேங்காய்கள் உடைப்பது வழக்கமாக இருந்தது.

அவர் கருணையில் கல்லூரியையும் எட்டினேன்.
தம்பிகளுக்கும் அவரிடம் ஈடுபாடு.

அவர்கள் முன்னேற்றத்துக்கும் அவரே காரணம்.

எப்பொழுதுமே ஆதாரமாக இருந்தது ,
புரசைவாக்கம் வினாயகர்.

நான் படித்த போது அவர் சின்னக் கோயிலில் இருந்தார்.
இப்பொழுது முற்றும் மாறி கிழக்கு பார்த்து, தெருவெங்கும் பிரகாசமாகத் தெரிய அருள்மிகு

வினாயகர் ஆகிவிட்டார்.
முன்பு நாங்கள் உட்கார்ந்து கதை பேசிய அவர் திண்ணை
சுவர் எழுப்பி , பிரகாரம் ஆகிவிட்டது.
கோவிலுக்குக் கதவும் போட்டு விட்டார்கள்.
நினைத்த போது எட்டிப் பார்த்து ஹலோ
சொல்ல முடியாது:(
திருமணம் ஆனதிலிருந்து இப்போது வரை
லஸ் வினாயகர் தான் எல்லாக் குறைகளையும்
தீர்த்து வைப்பவர்.
வழிகாட்டுபவர். மதுரை முக்குறுணிப் பிள்ளையார்,
பசுமலையில் பக்கத்து வீட்டுக் காம்பவுண்டு
பிள்ளையார்,
சேலம் சுகவனேஸ்வரர் கோயில் 
பிள்ளையார், கோவை மருதமலைக் கோவில்
பிள்ளையார் ,திருச்சி மலைக் கோட்டைப்
பிள்ளையார் எல்லோருமே ஒளிவடிவில்(டியுப் லைட்)
எனக்குத் தினம் ஆதரவு தந்தவர்கள்.
சங்கடங்கள் அனைத்தையும் தீர்த்து,
திருமணங்களைக் கூட்டி வைத்து,
தம்பதியரை ஆசீர்வதித்து அவரே அருள்வார்.
அதில் ஒரு சந்தேகமும் கிடையாது.
கஜமுகனே ஐங்கரனே நவசக்தி கணபதியே சரணம்.




பிள்ளையார் சுழி போட்டுப்
போடும் பல திட்டங்கள்  அவரே நினைத்து முடி போட்டு வைப்பார்.
அல்லாததைத் தள்ளுவார்.
நமக்கு வேண்டும் நன்மையைத் தருவார்.
அவை கிடைக்காவிடில் அதுவும் நம் நன்மைக்கே.

2 comments:

கோமதி அரசு said...

//பிள்ளையார் சுழி போட்டுப்
போடும் பல திட்டங்கள் அவரே நினைத்து முடி போட்டு வைப்பார்.
அல்லாததைத் தள்ளுவார்.
நமக்கு வேண்டும் நன்மையைத் தருவார்.
அவை கிடைக்காவிடில் அதுவும் நம் நன்மைக்கே//

ஆமாம். அப்படித்தான் நினைக்க வேண்டும்.
அவ்வையார் படம் பகிர்வு அருமை.
உச்சி பிள்ளையார் கோவில் இரவு ஒளி வெள்ளத்தில் நன்றாக இருக்கிறது.
பிள்ளையார் பட்டி பேர் விவர நகரத்தார் பெருமை தெரிந்து கொள்ள முடிகிறது அடுத்த காணொளியில்.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கோமதி மா,
வாழ்க வளமுடன்.
நகரத்தார் மகிமை நாம் அறிந்தது தானே.
நம் வீட்டுக்கு எதிர் தெருவில்
இருக்கும் வினாயகர் கோவிலும் அவர்கள்
கட்டியதுதான்.
எங்கும் நிறைந்திருக்கும் பிள்ளையார்
நம் அனைவரின் சோதனைகளையும் தீர்த்து

நல்ல வழியில் காக்க வேண்டும்.
வெய்யில் கொடுமை யிலிருந்து நீங்களும்
பத்திரமாக இருங்கள்.
உங்கள் பறவைகளும் க்ஷேமமாக
இருக்க வேண்டும். நன்றி மா.