Blog Archive

Wednesday, October 31, 2018

என் பயணம் ஆரம்பித்த நாள்

Vallisimhan
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும் 

அக்டோபர் 31
++++++++++++++++++
ஐப்பசி மாதம் மருதாணி வாசம், மழை, நீண்ட புரட்டாசியின் வெய்யிலிலிருந்து விடுதலை.
இதமான சீதோஷ்ண மாறுதல்.
மதுரை மிக அழகாகத் தோன்றும் நாட்கள்,இந்த மழையும் ,குளிரும் சேர்ந்த நாட்கள். இந்த ஊரில் அதை வசந்தம் எனக்கூடச் சொல்லி இருப்பார்கள்.

புலரும் காலைப் பொழுதிலிருந்து , இருள் சூழும் மாலை வரை
அலுக்காமல் ,சலிக்காமல் நேரம் சென்ற வருடம் 1965.
அப்பா பைண்ட் செய்த தொடர்கள், சென்னையிலிருந்த தோழிகளுக்குக்
 கடிதங்கள். வாரம் ஒரு முறை கோவில்கள் தரிசனம். 
தீபாவளி பக்கம் வர  புரட்டாசியிலியே வாங்கிவிட்ட புடவைகள். பசுமலை தையற்காரர் தைத்த அழகு ரவிக்கை.

எல்லாம் ரசனையுடன் நடந்த இந்த மாதத்திலேயே 
வாழ்வின் முக்கிய கட்டமும் நிறைவேறியது.

மனதுக்கு இனிய மணாளனை முதன் முதல் சந்தித்த நாள் இன்று 31 அக்டோபர் ,ஞாயிற்றுக்கிழமை.

இனிமை மட்டுமே தெரிந்த நாட்கள்.
அவற்றின் சுவாரஸ்யம் மாறாமல் நடக்கத் தெரிந்த கணவர்.
47 வருடங்கள் நீடித்த சந்தோஷம். பிள்ளைகளிடம் அவர் வைத்திருந்த பாசம்

எல்லாமே அழகான கனவாய் மனதில் தங்கி இருக்கின்றன.
இன்னும் இருக்கும்.


Tuesday, October 30, 2018

புதுப்பயணம் ..கதை பகுதி இரண்டு

Vallisimhan
எல்லோரும் நலமாக வாழ வேண்டும் 

  வனிதா கவலையே பட்டிருக்க வேண்டாம்.
அவள் நின்றாளா ,உட்கார்ந்தாளான்னு தெரியாமல் உறவுகள் வகை. சந்த்ருவுக்கு ஏகப்பட்ட 
ஒன்றுவிட்ட சகோதர சகோதரிகள். அனைவரும்
விருந்துக்கு வந்திருந்தார்கள். 

திருச்சியைச் சேர்ந்த வனிதாவிடம் பேச அவர்களுக்கு நிறைய விஷயங்கள்.
இருந்தன. அவர்கள் வீட்டுக்கு வரச் சொல்லி அழைப்பு விடுத்தார்கள்.
 சென்னையில் , உள்ள கலை நிகழ்ச்சிகளுக்கு அழைத்துப் போவதாகச் சொன்னார்கள்.
வியப்பிலும், மகிழ்ச்சியிலும் பூரித்துப் போனாள் வனிதா.

எல்லாம் கிளம்புங்கோ. சனி ஞாயிறு அவர்கள் வருவார்கள் என்று பெரியப்பா
அவர்களைக் கிளப்பினார்.
அம்மா,நீ மாடிக்குப் போய் கொஞ்சம் ஓய்வு எடுத்துக்கோ.
இதோ இன்னும் இரண்டு மணி நேரத்தில் உன் புருஷன் வந்துடுவான்.
நீ முகம் கழுவித் தயார் செய்து கொள் என்றார் மாமியார்கண்ணம்மா..

கைக்குக் கிடைத்த புத்தகத்தை எடுத்து மாடிக்குத் தங்கள் அறைக்குப் 
போனவள். அங்கே எல்லாவற்றையும் ஒழுங்கு படுத்தி வைத்தபடி 
அம்மாவுக்குத் தொலைபேசினாள்.
பெண்ணின் குரலில் தெரிந்த மகிழ்ச்சியைக் கேட்டு
அம்மாவுக்கும் சந்தோஷம். அளவாப் பேசு. பெரியவர்கள் என்ன சொன்னாலும் செய்.
நல்ல மனிதர்கள் மனம் சுளிக்கப் பேசிவிடாதே.
நாளாக நாளக உன்னைப் புரிந்து கொள்வார்கள்.
கணவன் தேவைகளை எப்பொழுதும் மறக்காதே. 
உனக்கென்று தனி வேலைகள்,படிப்பு, ஓவியம்
எல்லாக் கலையையும் வளர்த்துக் கொள்.
மாமியாரிடம் கேட்டுக் கொண்டு ,கோவிலுக்கு அழைத்துப் போகச் சொல்
 என்றெல்லாம் புத்திமதி சொன்னார் அம்மா. அனைத்துக்கும் சரிம்மா
என்றவள் தங்கை தம்பிகளை விசாரித்தாள்.
சற்றே கண்ணசந்த பிறகு, கணவன் வருகைக்குத் தயாரானாள்.
 வனிதாவின் நாத்தனார்களும் கல்லூரிக்குப் போகிறவர்கள்.
அவர்கள் வரவும் வீடு இன்னும் கலகலப்பாகியது.

புது மதினியைச் சுற்றி வரவே நேரம் சரியாக இருந்தது அவர்களுக்கு.
மாமியார் வந்து அவர்களை அடக்கி
அவரவர் அறைக்கு அனுப்பி வைத்தார்.
அவர்கள் மாடி ஏறவும் சந்த்ரு வரவும் சரியாக இருந்தது.
காலையைவிட முக மலர்ச்சியுடன் இருக்கும் மனைவியைக் கண்டு அவனுக்கும் மகிழ்ச்சி.

என்ன எல்லோருடனும் பொழுது போச்சா என்று மனைவியை விசாரித்தான்.
வெகு உற்சாகமாகத் தலை ஆட்டிய வனிதாவைப் பார்த்து,
அப்பாடா நிம்மதி.
என் பெரிய குடும்பத்தைப் பார்த்துப் பயந்துவிடுவாயோன்னு எனக்குப் பயம்
என்றான்.

இல்லை சந்த்ரு. எனக்கு இந்த சூழல் மிகப் பிடித்திருக்கிறது .
மிகப் பாதுகாப்பாக உணர்கிறேன் என்றாள் வனிதா.

நீ கவலைப்படாதேடா,உன் பெண்டாட்டியை நாங்கள்
எங்கள் வலைக்குள் கொண்டு வந்துவிட்டோம் என்று சிரித்தபடி வந்தார்
கண்ணம்மா.

எங்காவது வெளியே போவதானால் சாப்பிட்டுவிட்டுப் போங்கள்.
சென்னை புதிது அவளுக்கு. ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்
என்று சொல்லிக்  கணவருடன் பேசப் போய்விட்டார் அவர்.

ராதா மாமி வேலை முடிந்து ,வீட்டுக்குக் கிளம்பிக் கொண்டிருந்தார். இருவருக்கும் சாப்பாட்டு மேஜையில் உணவு வைத்திருக்கிறேன். மிச்சம் வைக்காமல்
சாப்பிட வேண்டும் ...குழந்தைகளுக்குச் சொல்வது போல்
சிரித்துக் கொண்டே சொல்லிவிட்டு, அம்மா வனிதா ,நீ
ஸ்வாமிக்கு விளக்கேத்துமா என்று சொல்லிவிட்டு,
விரைந்தார்.

வனிதாவின் முகத்தைப் பார்த்துப் பக்கென்று சிரித்துவிட்டான் சந்த்ரு.
எங்க வீட்டு மஹாலக்ஷ்மி இனி நீதான். இன்னும் பார்.
வா சாப்பிடலாம். பிறகு கடற்கரை என்று அவள் கைபற்றி அழைத்துச் சென்றான்.
மேலே இருந்து இரு சகோதரிகளின் குரல் கேட்டது,
அண்ணா திருமணம் ஆகி இரண்டு வாரம் ஆச்சு ,இன்னும் கையை விட
உனக்கு மனசில்லையாக்கும் என்று கேட்டாள் தங்கை.
ஆமாம். என் பெண்டாட்டி நான் பிடித்துக் கொள்வேன்
என்று சிரித்து உள்ளே சென்றான்....தொடரும்.

Monday, October 29, 2018

புதுப் பயணம் ....

Vallisimhan 
எல்லோரும் இனிதே வாழ வேண்டும்.


காலையில் கண் விழித்தப் புது மருமகள் வனிதாவின் 
காதில் முதலில் விழுந்தது பூஜை மணி ஓசை.
தன்னை அறியாமல் கைகூப்பக்
கணவனை எழுப்பத் திரும்பியவள் அவனைக் காணாது திகைத்தாள்.

மணியைப் பார்த்தால் தூக்கி வாரிப் போட்டது.
7 மணி ஆகி இருந்தது.
தங்கள் அறையின்  ஒட்டியிருந்த குளியலறையில்
காலைக் கடன் களை முடித்துக் கொண்டுக்
கீழே அவசர அவசரமாக இறங்கினள். 
அங்கே ஒரே சாம்பிராணி மூட்டம். மெள்ள மெள்ளக்
காப்பி கிடைக்குமா என்று சமையலறையைப் பார்த்தால், சமையல் 
செய்யும் மாமி ,முகம் நிறையப் புன்னகையோடு வரவேற்றார்.
பயப்படாதேம்மா.
இங்கே எல்லாம் சீக்கிரம் எழுந்து வேலைக்குப் போகிறவர்களுக்கு
உணவு தயாராகணும். இந்தா புதுப்பாலில் காப்பி சாப்பிடு.
என்று டபரா தம்ளரில் மணக்கும் காப்பியைக் கொடுத்தாள். 
நன்றி சொல்லிவிட்டு  உதட்டில் படாமல் தூக்கி சாப்பிட்டு விட்டு
கழுவப் போனாள்.
இங்கே அலம்பக் கூடாதுமா. வெளில குழாயடியில் போட்டுவிடு.

 பூஜை அறையில் எல்லோரும் இருக்கிறார்கள்.
நீயும் சேர்ந்து கொள். என்றார் ராதா மாமி.
 எல்லோரும் என்றால், பெரிய மாமனார், மாமியார், தன் மாமியார்,
கணவன் எல்லோருமேவா என்று சற்றுக்கலக்கத்துடனே
பூஜை அறையின் வாசலில் நின்று எட்டிப் பார்த்தாள்.
ஆமாம். எல்லோரும் அங்கேதான் இருந்தார்கள்.
நல்லவேளைக் கற்பூரம் ஒற்றிக்கொள்ளும் வேளைக்கு
வந்துவிட்டோம் என்றவாறு மற்றவர்களைப் பார்த்துக் கொண்டுக்
கணவன் சந்துருவின் அருகே நின்று கொண்டாள்.


சற்றே திரும்பிய மாமியார், எல்லோரையும் கீழே விழுந்து வணங்கச் சொன்னார். முறைப்படி வணங்கினதும்,
பெரிய மாமாவிடம், குங்குமம்,பூ எல்லாம் பெற்றுக் கொள்ளக் கைகாட்டினார்.
பயபக்தியுடன் பெற்றுக் கொண்ட வனிதா
தயங்கி நிற்கவும், நீ போய்ச் சந்துருவை 
அலுவலகம் அனுப்பும் வழியைப் பார்.
விடுமுறைக்கப்புறம் போகிறான் அல்லவா.
கையில் சாப்பாடும் கட்டிக் கொடுத்துவிடும்மா.
ராதா உதவி செய்வார் என்று அனுப்பினார் மாமி விமலா.
சந்துருவோடு வெளியே வந்த வனிதா, ஏன்பா என்னை எழுப்பலை,
முதல் நாளே தாமதம் செய்துட்டேனே. என்றாள்.
யாரும் ஒன்றும் சொல்ல மாட்டார்கள். பயப்படாதே, வா மாடிக்குப்
போய் உடை மாற்றி வருகிறேன்.
நீ ராதா மாமியிடம் கேட்டுக் கொள்.
என்றவாறு படிகளில் தாவி ஏறினான்.

திருமணமானதும் தேன் நிலவுக்கு, மெர்க்காரா சென்றுவிட்டுக்
குடும்பம் பற்றி எல்லாம் தெரிந்து கொண்டதால்,
புகுந்தவீடு பழகின இடமாகவே தெரிந்தது.
சந்துரு வேலைக்குப் போய்விட்டால் தான் என்ன செய்வோம் என்ற
யோசனையுடன், சமையலறைக்குள் புகுந்தாள்.
Add caption



Thursday, October 25, 2018

இன்பக் கனவொன்று கண்டேன்... கதை

Vallisimhan
என்றும்  ஆனந்தமே .

 கனவுகளுக்கு என்றுமே பஞ்சமில்லை  கனகாவுக்கு.
 ஒரு இரவில் நான்கு  தடவையாவது கனவுகள்  வரும்.

சினிமா தியேட்டரில் காட்சிகள் ஓடுவது போல 10 லிருந்து 12 அரை வரை ஒன்று. விழித்தெழுந்து தண்ணீர் குடித்து இறை நாமம் உச்சரித்தபடி தூங்கிவிடுவாள்.

அடுத்த இரண்டு மணி நேரத்தில்  இன்னோரு கனவு .இது கொஞ்சம் பயங்கரமாக இருக்கும்.
அப்போதுதான்  நினைவுக்கு  வரும், கனவில் வந்தவர்கள்
கஷ்டப்படும்  நிலமை இப்போது இல்லை. இறைவன் திருப்பாதங்களை அடைந்து விட்டார்கள் என்று. இந்த நிம்மதி தனக்குத் தோன்றும் என்று கற்பனை செய்ததில்லை.

ஐந்து மணிக்குக் கணவர் சபாபதி, நடைப்பயிற்சிக்குக் கிளம்பும் 
சத்தம் கேட்கும் போது, மெதுவாக நனவுலகுக்கு வருவாள்.

கடைசியாக வந்த கனவு என்ன என்று நினைவில் இருக்காது.
நல்லவேளை என்று நினைத்தபடி,அந்த நாளைத்தொடங்குவாள்.

அதிகப் படியான மருந்துகள் உள்ளே போவதால் 
வரும் தொந்தரவு இது என்று நினைத்தபடி 
 காலை உணவு  தயார் செய்து ,கணவருக்கு எடுத்து வைத்துவிட்டு
கணினியில் வேலை தொடங்கும் போது, முதலில் கூகிளில்
கனவு பற்றி ஆராய்ச்சி செய்யவேண்டும் என்று தேடுபொறியை இயக்கினாள். 

ஒன்பது மணிக்குத்தான் அலுவலகத்துக்கு லாகின் செய்ய வேண்டும்.
இல்லாவிடில் அவளின் தலைமை ping செய்து செய்துவிடுவார்.

கனவுகள் பற்றி ஒரு 15, 20  நபர்கள் விளக்குவதைப் படித்துக் களைத்து
ஒரு முடிவுக்கும் வரமுடியாமல்,கையில் வைத்திருந்த ரொட்டிக் கலவையைச் சுவைத்தபடி

முருகா நீ வரவேண்டும் என்று டிஎமெஸ் கணீரென்று பாடுவதை
ரசித்தவாறு வேலையை ஆரம்பித்தாள்.

சத்தமில்லாமல் உள்ளே வந்த சபாபதி, மெல்ல மனைவியின் 
தோளில் கைவைத்தார்.
புன்னகையுடன் திரும்பிய கனகா, எவ்வளவு நடந்தீர்கள் இன்று 
 கேட்டபடி எழுந்தாள்.
காலை உணவை அவருடன் தான் உண்ண வேண்டும்
என்ற தீர்மானம் அவளுக்கு.பேசாவிட்டாலும் அமைதியாகத் தொடங்க
இந்த வேளை உதவும். இதற்காகக் கையில் புத்தகம் இல்லாமல் சாப்பிடத்தெரியாத தன் வழக்கத்தையே விட்டிருந்தாள்.
அவருக்கு அது பிடிக்காததுதான் முதல் காரணம். ஏம்மா, சாதம் எங்க இருக்கு ,வாய் எங்க இருக்குன்னு தெரியாமல் அப்படி
அந்தப் புத்தகத்தின் மேல் ஈடுபாடு என்று சிரித்துக் கொண்டே சொல்வார்.

கனகாவின் மாமியார் மதியம் சாப்பிடும்போது கனகா விகடன் இருக்கு எடுத்துக்கோ, சாப்பிடும்போது வேணுமே என்பார்.
புதிதாக யாரவது இருந்தால் விகடன் எல்லாம் இந்த அம்மா // ஒரு பேச்சுக்குத் தான்//
சாப்பிடுவாங்களோன்னு கூடத் தோன்றிவிடும்.
இன்று அவர் சாப்பிடும்போது அவரிடம் தான் கண்ட கனவைச் சொல்லத் தோன்றியது  கனகாவுக்கு.
எங்கம்மா சொப்பனத்தில் வந்தார் என்றாள்.
முதல் தடவை வராங்களா அத்தை என்றார் சபாபாதி.
ஆமாம் என்னும் போதே கண் கலங்கியது அவளுக்கு.
முடியாமப் படுத்திட்டிருக்காங்க. அவங்க உதவிக்கு ஒரு பருமனான அம்மா
ஒருவர் கட்டில் மேலேயே அமர்ந்திருந்தார். அரக்குப் புடவை, கறுத்த நிறம், பெரிய குங்குமப் பொட்டு.
இதைதான் நான் பார்த்தேன். அம்மாவை டாய்லெட்டு அழைத்துச் சென்று
அழைத்து வந்தார்.
அவ்வளவு உடம்பு பலவீனத்திலும்  அம்மா , இவளுக்கு
நல்ல புடவையாக வாங்கிக் கொடு என்றார்.
விழித்துக் கொண்டேன் என்றாள்.

இவ்வளவுதானே, உனக்கு சமயபுரம் போகவில்லை,
சங்கரன் கோவில் போகவில்லை என்ற ஏக்கம் எப்போதும்.

இப்பொழுதே மணி ஆர்டர் அனுப்பிவிடுகிறேன்.
நாம் இந்த டிசம்பரில் இந்தியா செல்லும்போது
கோமதியம்மனுக்கும், சமயபுரத்துக்கும் புடவைகள் வாங்கி
சார்த்திவிடலாம்.
நிம்மதியாக இரு. என்று சாப்பிட்டு முடித்தார்.

திருப்பதி என்று ஆரம்பிக்காதே. அம்மாவுக்குத் தள்ளாது இரண்டு மூன்று பயணம்.
அடுத்த தடவை. 
நம் பாலாஜி மந்திரில் காணிக்கை செலுத்திவிடு என்றாரே பார்க்கணும்.
கனகாவின் முகத்தில் சிரிப்பு பொங்கியது.
நான் நினைக்கலியே. உங்களுக்கும் ஏதாவது கனவு வந்ததோ
என்றபடி எழுந்தாள்.
நீண்ட பயணமோ வாழ்க்கை.
அம்மா 
Add caption
    

Tuesday, October 23, 2018

நடந்தது எல்லாம் நன்மைக்கே. நடப்பதும் நன்மைக்கே.

22 வயதில் சிங்கம் லண்டனில்.
Add caption
Vallisimhan
அனைவரின் அன்புக்கும் நன்றி. புதல்வர்கள் அவர்கள் செய்ய வேண்டிய
திதிக் காரியங்களை பூரண சிரத்தையுடன் செய்து விட்டு அவரவர் இடம் திரும்பிவிட்டார்கள்
அவர்களுக்கு நன்றி.
அவர்கள் குடும்பம் தழைத்தோங்க இறை அருள் என்றும் இருக்கும்.

இன்னும் 15 நாட்களில் தீபாவளித்திருநாள் வருகிறது.

எங்கும் இன்பம் தங்க இறைவனிடம் பிரார்த்தனைகள்.






Tuesday, October 16, 2018

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்.

Vallisimhan

நவராத்திரி  பூர்த்தியாகும் நாள் இன்னும் இரண்டு தினங்களில் வருகிறது.
அனைவருக்கும் இன் மம் நிறை ஆசிகளையும் வாழ்த்துகளையும் சொல்கிறேன்.
உடல் தளர்வு மனம் தளர்வு  இரண்டினாலும் பல பதிவுகளை வாசிக்க வில்லை. மன்னிக்கணும்.
சனிக்கிழமை எங்கள் எஜமானருக்கான்  வழிபாடுகள் முடிந்து, பிள்ளைகளும்
மறு நாள் அவரவர் இடங்களுக்குத் திரும்புவார்கள்.

எல்லாம் நல்ல விதமாக நடைபெற இறைவனே காப்பு.
வாழ்க வளமுடன்.

Sunday, October 14, 2018

மழை நாட்களும் நவராத்திரியும்.

Vallisimhan
எல்லோரும்  நலமாக  வாழ வேண்டும் 

பகல் முழுவதும் காயும்,இராத்திரி முழுவதும் பெய்யும்.
புரட்டாசியில் பொன்னும் உருகும் இதெல்லாம் மாமியார் சொல்லும் வார்த்தைகள்.
அனைவரும் அறிந்ததே.

அதே போல நவராத்திரி நாட்களில் வருண பகவான் கொலு பார்க்க வந்துவிடுவான்.
ஒருவருடம்  மாலையில் கொட்டித் தீர்த்த மழையால்
சுண்டல் வினியோகம் தடைப் பட்டது.
 நாளைக்கு மழியில்ல்லாத போது வருகிறேன் என்றால்
நாம் கொலு மஞ்சள் குங்குமம் வாங்கக் குறித்திருந்த வீடுகளுக்குச் செல்லத் தடையேற்
படூம்.

ரேவதி மாமி ஒரு தடவையாவது கொலுவுக்கு வந்தாள்
என்றே கிடையாது.
அப்படி என்ன வேலையோ நமக்கில்லாத வேலை என்று 
என் தோழி அலுத்துக் கொள்வாள்.

நம்ம வீட்டில சிங்கம் என்னைத் தனியா விட்டுட்டுப் போகாதே,
எதிர் வீட்டு அம்மா வாசலோடு போய்விடுவாள்.
பக்கத்து வீட்டு ப்ரேமா, நீ வர வரைக்கும் போக மாட்டா.
விஜயதசமி அன்னிக்கு எல்லோர் வீட்டுக்கும் போய் வா என்று பெருந்தன்மையாகக்
கட்டளை சொல்லிவிடுவார்.


நவராத்திரியின் போது ஒரு நாளைக்கு ஒருத்தருக்காவது
தாம்பூலம் கொடுக்க வேண்டும் என்பது மாமியார் சொல்லி வைத்தது.

இந்த மழையிலும் வந்து என்னைக் கௌரவித்த என் நாத்தனார்களை
 அன்புடன் நினைக்கிறேன்.

 தோழிகளும் அந்த மழையிலும் வந்திருக்கிறார்கள்.
யாரும் நவராத்திரி சந்திப்பை விட்டுக் கொடுப்பதில்லை.
2008 வரை உள்ளே கூடத்தில் இருந்த கொலு,
வாசலில் அறை கட்டிய பிறகு அங்கே இடம் மாறினார்கள். கொலுப்படிகள்
இரண்டு மூன்றுதான். பொம்மைகளோ பிரம்மாண்ட அளவு.

கடைசியாக கொலு வைத்த போது 2016 என்று நினைக்கிறேன்.
ஒரேஒரு பெஞ்சில் புடவை விரித்து அத்தனை பொம்மைகளையும்

வைத்துவிட்டேன்.எல்லோரையும் விட  ராணி,அவள் குழந்தைகள்,பேரன் 
பேத்திகள், இஸ்திரி மீனா அவள் பெண்கள்.,இவர்கள் வருவதுதான் 

சந்தோஷமாக இருக்கும்.எல்லா பொம்மைகளையும் ரசிப்பார்கள். 
உள்ளே வருமுன் செருப்பு ,ரெயின் கோட், எல்லாம் 
கழற்றி வைத்துவிட்டு பூப்போல வருவது அழகாக இருக்கும்.

இப்பொழுது சென்னையில் மழை இருக்கா  என்று தெரிய வில்லை. வந்த
மழை ஒடிஷாவுக்குப் போய்விட்டதாமே.

அனைவருக்கும் சரஸ்வதி பூஜை, விஜய தசமி நலவாழ்த்துகள்.
அன்னை அருள் நிறையட்டும்

Saturday, October 13, 2018

நவராத்திரியும் நாங்களும்...2

Vallisimhan
எல்லோரும் வளமாக  வாழ வேண்டும்.
    நவராத்திரி பழையது, நவராத்திரி புதியது என்றெல்லாம்
எழுதிவைத்திருந்த பதிவு, ஒரு படத்தை எடுக்க  பதிவே போய் விட்டது. 
இதெல்லாம் பெரிய சோகம் இல்லை.

அன்று எழுதும்போது இருந்த  கருத்துகள் அடுத்த மணி நேரத்தில் கூட நினைவில் வருவதில்லை.
பாசிங்க் க்ளௌட்ஸ்  மாதிரி போயே போயிந்தி.

பரவாயில்லை. இளவயது நினைவுகளுக்கு அழிவேது.
திருமங்கலம் அழகிய கிராமமும் இல்லை நகரமும் இல்லை. 
இடைப்பட்ட தாலுக்கா.
 ஒரே ஒரு அக்ரஹாரம். அதில் இரு வரிசையிலும் தெலுங்கு,தமிழ்,கன்னட,பாலக்காடு, கும்பகோணம்,திருனெல்வேலியைச்  சேர்ந்தவர்களூம், ,குடிசைத் தொழிலாக தீக்குச்சி அடுக்கும்
நாங்கைந்து குடும்பங்களும், மீனாட்சி அம்மன் கோவிலும், 
 ராதே கிருஷ்ணா பஜன் மண்டலி, ஒரு சத்திரம், ஒரு சின்ன ஆறு,அதற்கப்புறமாக 
ஒரு இபி மின் மண்டல ப்ளாண்ட்,
கடைசியில் ஒரு சமரசம் உலாவும் இடம்.

என் தோழிகளில் எல்லா வகையினரும் உண்டு.
 எலிசபெத் ரெஜினால்ட், ஆசியா, பத்து என்கிற பத்மா,ரஜினி கங்காதரன்
என்று இனிமையான நண்பிகள்.
நவராத்திரி வந்ததும்,
 அனைவர் வீட்டுக்கும் சென்று அழைப்பது என் வேலை.

அந்த வருடம் திருமணமான மாமா வாங்கிக் கொடுத்த மிளகாய்ப்பழ  வண்ணப் பட்டுப் பாவாடை,
பச்சை வெல்வெட் சட்டை எல்லாவற்றையும் காண்பிக்கணுமே.

குங்குமம் கொடுத்து மாமி எங்களகத்தில் கொலு வச்சிருக்கு,
நீங்க எல்லாம் வெற்றிலை பாக்கு,மஞ்சள் குங்குமம் வாங்கிக் கொள்ள வரணும் என்று அம்மா சொன்னதை  அப்படியே ஒப்பிப்பேன்.

சில அம்மாக்கள் வருவார்கள் சில பேர் மாட்டார்கள்.
நமக்கு அதைப் பற்றிக் கவலை இல்லை. தெரு முழுக்க வைத்திருக்கும் கொலுக்களை பார்க்கவேண்டும். சின்ன கொலுவென்றால் நம்ம கொலு பெரிசுன்னு 
நினைத்துக் கொள்ளணும். பத்து வீட்டில் பதினோரு படிகள் வைப்பார்கள்.

அவளுக்கு நான்கு அக்காக்கள். அதனால் கொலுவும் பெரிசு. கும்மோணத்தில்
இருந்து வேற வரும்..
பரவாயில்லை. நம்ம அப்பாதான் டிஷ்யு பேப்பர் கலர் கலராக வளையம் பின்னிக் கட்டி இருக்கிறார்.
அம்மா க்ரோஷா  ரோஜாக்களாக கொலுப்படிகளுக்குப் பின்னால் தொங்க விட்டிருக்கிறார்.
பாட்டி கிட்ட சொல்லிப்
புது மண்டபத்திலிருந்து யானை, மீனாகஷி, பார்க் செட் எல்லாம் சித்தப்பா கொண்டு வந்து கொடுத்திருக்கிறார். கவலையே இல்லைன்னு பத்து அம்மாவிடம் அரட்டை அடிப்பேன்.
உனக்கென்னடிம்மா, காதுக்கு ஜிமிக்கி, பட்டுக் குஞ்சலம் என்று அலங்காரம் பண்ண உங்க அம்மாவுக்கு நேரம் இருக்கு.
நான் பாரு, தளிகை உள்ளுலயே இருக்கேன் என்று சிரிப்பார் அந்த மாமி. மிகவும் நல்லவர்.
பத்துவின் அண்ணா நச்சுவும் வண்ண பல்புகளால் அலங்காரம் செய்வார்.
உங்க கொலுதான் பெஸ்ட் மாமி என்ற பிறகு பாடச் சொல்வார்.

அன்று பள்ளிப் ப்ரேயரில் ஒலித்த தேன் இனிமையிலும் ஏசுவின் நாமம் திவ்ய மதுரமாமே
என்று முழுவதும் பாடி முடித்தேன்.
பத்து முதற்கொண்டு பத்து அப்பா வரை சிரித்து முடித்தார்கள்.
ஒரு வரவீணா பாடக் கூடாதாடி என்று கடிந்தாள் பத்து.
மறந்து போச்சுடி. நாளைக்கு பாடறேன் என்று சொல்லிவிட்டு அவர்கள் வீட்டு சுண்டலை ரசித்துவிட்டு,பக்கத்துவீட்டுகு
போனோம். அது மாது என்கிற மாதவன் வீடு. வாசலில் இருந்து பின் பக்கம் வரை இருளோன்னு
இருக்கும்.

மாமிக்கு வெளிச்சமே ஆகாது. மைக்ரெய்ன்.

மாது எங்கள் ட்ரேட் பார்ட்னர்.
என்னடா கொலு இல்லையா என்றால் இந்த வருஷம் இல்லை.
சுண்டல் கேட்டா கொடுப்பியா என்பான்.
எங்க வீட்டுக்கு வா என்று சொல்லி,அடுத்த வீட்டுக்குப் போவோம்.
பத்து நாள் கொண்டாட்டம் இப்படித்தான் இருக்கும்..
சின்னத்தம்பி ரங்கன் சுண்டலுக்காக என்னுடன் வருவான்.
சந்தோஷ வாழ்க்கை. அனைவருக்கும் நல் வாழ்த்துகள்.
தாயே  மீனாக்ஷி  காப்பாத்து.

Friday, October 12, 2018

என்னுயிர் நின்னதன்றோ....

Vallisimhan  எங்கள் ப்ளாக்  குழும  படத்துக்கான கதை.
1996.
     எழும்பூர் ப்ளாட்ஃபார்மில்  ராமேஸ்வரம்  எக்ஸ்ப்ரஸ் பெருமூச்சு விட்டுக்
கொண்டு காத்திருந்தது. பயணிப்பவர்களும் ,அவர்களுக்கு விடை கொடுக்க வந்தவர்களும் கலந்து
உள்ளே போவதும் வெளியே வருவதுமாக இருந்தனர்.
புதுமணத்தம்பதியினர் ,அவர்களுக்குப் புத்திமதி சொல்லும் பெரியவர்கள் என்று ஒரு கம்பார்ட்மெண்டில் நின்று கொண்டிருந்தனர்.

பெண்ணின் அப்பாவும் அம்மாவும் மகளிடம் கண்கள் கலங்க ஏதோ பேச அவள் அவர்களைச் சிரித்து வழி அனுப்பிக் கொண்டிருந்தாள்.
பையனின் பெற்றோர் ஏற்கனவே தங்களுக்கான  இடத்தில்
உட்கார்ந்து கொண்டு வந்த பொருட்களை ஒழுங்காக அடுக்கிக் கொண்டிருந்தனர்.

கல்யாணப்பாயும் ,குடையும்,பத்திரமாக வைத்தீர்களா
 என்று கேட்டு நிமிர்ந்த
ஜானகியின் முகம் பல நாட்கள் அலைச்சலில் வாடி இருந்தது.
ராகவன் அவள் கைகளைப் பிடித்து உட்கார வைத்தார்,.
நம்ம நாட்கள் மாதிரி இல்லம இப்போ.
.புதுக்கோட்டை போனதும் மாடி அறையில் பீரோ மேல் ஏறப்போகிறது.
நான் பத்திரமாப் பாத்துக்கறேன்.
நீ உன் தம்பிகள் மனைவியருக்கு பைபை சொல்லு. என்றார்
புன்முறுவலோடு.
ஜன்னலோரம் சென்று தம்பி மனைவிகளை ஆதரவுடன்
பார்த்தாள். நீங்கள் இல்லாவிட்டால் ரொம்ப சிரமப் பட்டிருப்பேன்.
டேய் உங்களையும் சேர்த்து தான் சொல்கிறேன்.
மாமாக்கள் பலசாலிகளாக மாப்பிள்ளைப் பையனைத் தூக்கி மாலை மாற்ற வைத்தீர்களே
என் கண்ணே பட்டிருக்கும் டா.
ஆமாம் இந்த 27 வயசுக் காளையைத் தூக்குவதற்குள்
எங்கள் முதுகு பிடித்துக் கொண்டது பாரு. 52 வயதுப் பெரிய தம்பியும், 48 வயது
சின்னத்தம்பியும் ஒருவர் மேல் ஒரு வர் சாய்ந்து கொண்டது சிரிப்பாக வந்தது.

போறும்டா கோமாளித்தனம்.
இதோ விசில் கொடுத்துட்டான் . அகத்துக்குப் போகும் வழியைப் பாருங்கோ.

இந்தாத்து கடைசிக் கல்யாணத்தையும் நன்றாக நடத்திக் கொடுத்தீர்கள்.
இந்தா இந்தா அத்திம்பேரோட 59 வயது பூர்த்திக்கு சாந்தி செய்யணும்   மறந்திட்டியா.
இதோ மாசி மாதம் உத்ராடம் வந்துண்டே இருக்கு.

ஜானகி சட்டென்று உணர்ச்சி வசப்பட்டவளாக
எல்லாம் உச்சிப் பிள்ளையார் கருணையில் நன்னா நடக்கணும்.
 நீங்க தேவையான ரெஸ்ட் எடுத்துண்டு தை மாசக் கடைசியில் வந்துடுங்கோ
என்றாள்.
 நடுவுலயும் வருவோம் ஏண்டா புது மாப்பிள்ளை .......வரலாம் இல்லையா
என்று  கோவிந்தனை ச் சீண்டினார்கள்.
வாங்கோ மாமா ஆல்வேஸ் வெல்கம்
என்றபடி தன் மனைவியை அழைத்தபடி அடுத்த கம்பார்ட்மெண்டில்
ஏறிக் கொண்டான்.
வண்டி வேகம் பிடிக்க , மெதுவாக வந்து அமர்ந்து கொண்டாள்
ஜானகி.
 இந்த வண்டி கொஞ்சம் எட்டு மணிவாக்கில்  இருக்கக் கூடாதோ
இந்தப் பசங்க திருவான்மியூர் போணுமே என்று கவலைப் பட்டாள்.இதப் பாரு அவர்களைப் பார்த்துக் கொள்ள உங்க அம்மா அப்பா இருக்கிறார்கள். 7 வருடங்கள் முன்னாடி பொறந்துட்டதனால  நீ அந்த வேலையைய் எடுத்துக் கொள்ளாதே.
நல்ல வேளையா இரண்டு லோயர் பர்த் கிடைத்திருக்கு.

என்றபடி ஜானகி படுத்துக் கொள்ள ஏற்பாடு செய்தார்.
பால் சாப்பிடுங்கோ என்றபடி ஃப்ளாஸ்கிலிருந்து , டம்ப்ளரில் விட்டுக் கொடுக்க, அவரும் நீயும் சாப்பிட்டுக்கோ. இந்த ரயில் சத்தத்தில்
தூக்கம் எங்க  வரப் போறது என்றபடி தன்னிடத்தில் படுத்துக் கொண்டார்.

உண்மையாகவே தூக்கம் வரவில்லை.
ஜானுவோ படுத்ததுதான் தெரியும் அசந்துவிட்டாள்.

இரண்டு பெண்கள் கல்யாணத்துக்கு அவளுடைய அக்காக்கள் இருந்து உதவீ செய்தனர்.
காலத்தின் கோலம் அவர்களை ஏதோ நோயின் பெயரில் அழைத்துக்
கொண்டுவிட்டது.
மூன்றாவது பையனின் மணம் திருச்சியில் நடந்தது.
அவனுக்கு அங்கேயே வேலை. புதுக்கோட்டைக்கு
வரப் போக இருப்பான்.
நான்காவதுதான்  இந்த கோவிந்தன்.
பெண்கள் மும்பையிலும் தில்லியிலும் இருந்தனர்.
திருமணம்  பள்ளிக்கூட நாட்களில் இருந்ததால்
அவர்கள் மட்டும் வந்து போனார்கள். மாப்பிள்ளைகள்
வரவில்லை என்று ஜானகிக்குக் குறைதான்.

இதே ராமேஸ்வரம் எக்ஸ்ப்ரஸ்ஸில் முதன் முதலில்
ரகசியமாக ஜானகியைப் பார்த்தது நினைவுக்கு வந்தது.
பெண்பார்த்த அன்று ஜானகியைப் பார்த்தது போதவில்லை அவருக்கு.

அப்போது ஜானுவின் அப்பா அம்மா கும்பகோணத்தில் இருந்தார்கள்.
இவர்களும் இதே வண்டியில் கிளம்புகிறார்கள்
என்று தெரிந்தே  அம்மாவின் வேண்டுகோளையும் மீறி
இந்த வண்டியில் டிக்கெட் வாங்கி வந்தார்.
ஜன்னலோரம் பாவாடை தாவணி அணிந்து உட்கார்ந்திருந்த
ஜானுவையும் பார்த்துவிட்டார்.
மனம் ஜிவ்வென்று பறக்க நிதானமாக அந்தப் பக்கம் நடந்தார்.
அவர் நினைத்தபடி ஜானுவும் அவரைப் பார்த்துத் திகைத்தது தெரிந்தது.
படபடப்புடன் தலையை உள்ளே இழுத்து அம்மாவை எழுப்புவதையும் அந்த வெற்றிலைப் பாக்குக் கடையின் பக்கத்தில் இருந்து பார்த்தார்.
சின்னப் பெண்ணைத் திருமணம் செய்து கொள்கிறோமோ
என்ற கவலை வந்து விட்டது.
ஒன்பது வயது வித்தியாசம். .ஜானு அப்பாவுக்கும் கும்பகோணம் பக்கம்
பந்தல்குடி கிராமம்.

ஜானுவின் வற்புறுத்தலுக்கு இணங்கி, அவள் தந்தை உப்பிலி
ப்ளாட்ஃபார்மில் இறங்குவது தெரிந்தது.
சட்டென்று எதிர்பக்கம் உலாவுவது போலப் போய்த் திரும்பவும்
வருங்கால மாமனார் முகம் எல்லாம் புன்னகையுடன்
தன்னை எதிர்கொள்ளவும் சரியாக இருந்தது.

நீங்களா நாங்களூம் விசாரணை முடிந்ததும்.
ஜானுவின் கலவரம்+சந்தோஷக் கண்கள் கண்ணில் தெரிந்தன.
நீங்கள் ஏறிக் கொள்ளுங்கள் மாமா. நான் புதுக் கோட்டையில் இறங்கணும்.

அம்மாவிடம் சொல்கிறேன் என்றபடி இவர்கள் இருந்த கம்பார்ட்மெண்டைத் தாண்டி
அடுத்ததில் ஏறிக் கொண்டதும் நினைவுக்கு வரச் சிரிப்பு வந்தது அவருக்கு.

ஜானு அவர் மகிழ்ச்சியக் காணவில்லை. ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தாள் அதெ
செங்கல்பட்டு ஜங்க்ஷன் வந்தது.
மேலும் இருவர் இவர்கள் இடத்திற்கு வந்தனர்.
அந்தப் பெண்கர்ப்பிணி என்று தெரிந்தது.
ராகவன் உடனே எழுந்து இங்கே உட்காரம்மா.
நான் சமாளித்துக் கொள்கிறேன் என்றார்.

ஜானு. கொஞ்சம் நகர்ந்து கொள்ளுமா. நானும் இங்கேயே
உட்கார்ந்துக்கிறேன் என்றவர் சொன்னதைக் கேட்டு கண் விழித்த ஜானு,
 நிலைமையைப் புரிந்து கொண்டாள்.
ஓ செங்கல்பட்டு வந்துவிட்டதா என்றபடி  மனதில் பூத்தப் பழைய நினைவுகள்
புது உற்சாகம் கொடுக்க எழுந்து உட்கார்ந்து
எதிரில் இருப்பவர்களிடம்
பேசத் தொடங்கினாள்.......
அந்த நேரத்தில் ராகவனுக்குக் கண்கள் சொக்கி உறக்கம் வந்தது,.
தான் ஜன்னலோரம் உட்கார்ந்து கொண்டு அவரைப் படுத்துக்கச் சொன்னாள்
ஜானகி.

அவரும் தூங்க, வெளியே  மங்கலாகத் தெரியும் நிலவை
கண்கொட்டாமல் பார்த்தபடி,பழைய நினைவுகளில்.ஆழ்ந்தாள் ஜானு.
43 வருடங்கள் எங்கே போயின.

எத்தனை ஏற்றம் இறக்கம்.
பெண்கள் திருமணங்கள்,மூன்றாவது மகன் சக்கிரபாணி திருமணம்
இதோ கோவிந்தன் மைதிலி திருமணம்.

புதுக்கோட்டையில் தொழிற்கூடம் ஒன்று நிறுவி,
ஆட்டோமொபைல்  உதிரி பாகங்கள் செய்து விற்பனை செய்து வந்தார்.
இப்போது கோவிந்தனும் அவருடன் சேர்ந்து பங்குதாரர்
ஆனதில் அவரது வேலைப் பளு மிகக் குறைந்திருந்தது.
இருந்தும்  தொழிலில் அலைச்சல் மிகுதியால்
உடல் அலுப்பு கூடி இருந்தது.

அசந்து தூங்கும் கணவரை ஆதுரத்துடன் பார்த்தாள்.
இது போலக் கணவரைத் தன்னுடன் இணைத்த,உப்பிலியப்பனுக்கு
மனம் நிறைந்த நன்றியுடன் கரம் கூப்பினாள்.
இதுவரை பட்ட அலைச்சல் சேர்த்த பணம் போதும். இனி அவரவர்
வாழ்க்கையை அவரவர் கவனித்துக் கொள்வார்கள்.

புதுக்கோட்டை வீடு கட்டின நாட்கள்.
மெதுமெதுவே விரிந்து மாடியில் மூன்று படுக்கும் அறைகளும்
கீழே இரண்டு படுக்கும் அறைகளும்,
கூடம், சமையல் உள் ,பூஜை அறை,  வீட்டைச் சுற்றி வராந்தா.
நல்ல தோட்டம் ,தோட்டத்து வீட்டில்,வீட்டுப் பணியாளர்களும், தோட்டக்காரர்
 இருக்க சிறியவீடும்  என்று செழிப்பாகத்தான் இருந்தது,.

அறந்தாங்கி செல்லும் சாலையில் , அவர்களது தொழிற்கூடத்தை ஒட்டியே
வீடு இருந்ததால் தந்தை மகன் இருவருக்கும் சௌகரியமாகவே இருந்தது.

வண்டி குலுக்கலுடன் நின்றதும்தான் தெரிந்தது , திருச்சி வந்து விட்டது என்று
தெரிந்தது.
சொல்லிவைத்தாற்போல் விழிப்பு வந்தது ராகவனுக்கு.
எதிர் சீட்டில் இருந்த தம்பதியினர் இறங்குவதற்கு தயாராயினர்.
இதோ  இரண்டு மணி நேரத்தில் புதுக்கோட்டை
வந்துவிடும்.  காப்பி வாங்கி வரட்டுமா என்றார் ராகவன். நீங்க சாப்பிட்டு வாங்கோ.
நான் கொஞ்சம் தலை சாய்த்துக் கொள்கிறேன் என்றாள் .
ஆமாம் இறங்கியதும்  வேலை பிடித்துக் கொள்ளும்
நீ போர்த்துக் கொண்டு படுத்துக்கொள் . எதிராப்பில காப்பி விற்கிறான் வாங்கி வருகிறேன் என்று இறங்கினார்.
மகனும் இறங்கி அவர்களை பார்க்க வந்து கொண்டிருந்தான்.
அம்மாவை எழுப்பாதடா. ராத்திரி பூராவும்  முழித்துக் கொண்டு வந்தாள்  என்று சொல்லியபடி காப்பியை வாங்கி கொண்டு வண்டி ஏறினார்.
ஐந்து நிமிடங்களில் வேகம் எடுத்துக் கிளம்பியது வண்டி.
முன்ன மாதிரியா , 7 மணி நேரத்தில் புதுக்கோட்டை வந்து விடுகிறது என்று நினைத்தபடி  அசந்து தூங்கும்   மனைவியைப்  பார்த்தார்.
ஆதரவாக அவள் தலைமாட்டில் உட்கார்ந்து கொண்டு
அவள் தலையைத் தன்  மடியில் ஜாக்கிரதையாக  வைத்துக் கொண்டார்.
கணவனுடைய ஆதரவான செய்கையில்
மனம் மலர்ந்த ஜானு இன்னும் சுருண்டு படுத்து   ஆழ்ந்த நித்திரைக்குச் சென்றாள் .

அவள் முதுகில் கை  வைத்து அரவணைத்தபடி அவரும் கண்மூடிக்கொண்டார்
இன்னும் பிறவிகள் எத்தனை வந்தாலும் என் ஜானுவே என் கூட வரவேண்டும்   என்று  பிரார்த்தனை செய்து கொண்டார்.
என்றும்  வாழ்க வளமுடன்.


Thursday, October 11, 2018

நவராத்திரியும் நாங்களும்

கொலுவுக்கு வருகை தரவும்.
அனைவரும் வாழ்க வளமுடன்.
உன் துணை எப்போதும் வேண்டும்.
 எழுதிய  வார்த்தைகள் வாக்கியங்கள்
மாயமானது எப்படி.
தான் எழுதியதை  தானே அழித்ததோ இந்த கணினி.
ஆச்சரியமாக இருக்கிறது.
Add caption

நவராத்திரி நாயகி

எண்ணம்  நிலைபெற  என்றும் துணை அம்மா நீயே 

நவராத்திரியின் ஞானம்//1

Vallisimhan

Tuesday, October 09, 2018

முன்னோர்களும் இறை அவதாரங்களும்



மஹாளய பக்ஷம் இன்றுடன் பூர்த்தியானது.  பதினைந்து நாட்களும்  பெரியவர்கள் நினைவுதான். 

பெண்களுக்கு இந்தக்  காரியங்கள் செய்ய உரிமை கொடுத்திருந்தால்  எத்தனையோ நன்றாக இருக்கும் 

அது  இல்லாவிட்டாலும்   நான் உளமார அவர்களை நினைத்து நல்ல கடமைகளை நிறைவேற்றின  திருப்தி இருக்கின்றது.

 இனி அடுத்துவரும் பத்து நாட்களும் இறைத்தம்பதிகளைக் கொலு  இருத்தி 
தினம் ஒரு வகையாகத் துதி செய்து,
உரிய பண்டங்களை நிவேதனம் செய்து, அக்கம்பக்கத்திலுள்ளோர் அனைவருடன் கொண்டாட வேண்டும்.

 எங்கள் வீட்டில் ,பாட்டி இருந்த போது

காலை ஒரு கலந்த சாதம், ஸ்ரீஸ்துதி சொல்லி ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வகைப் பூவை
வைத்துப் பூஜைகள் 
நடைபெறும். அதே போல மாலை ஒரு சுண்டலும், ஒரு இனிப்புப்
பண்டமும்  கொலுவிற்கு நைவேத்யம் உண்டு.
 எப்பொழுதும் வீட்டில் தேங்காய் இருக்கும். தினம் வெற்றிலை கொண்டுவந்து கொடுப்பார்
தண்ணித்துறை கடையிலிருந்து ஒருவர். அமாவாசைக்கு நான்கு  நாட்களுக்கு முன்பே சென்னகேசவலு செட்டியார் கடைக்கு, தொலைபேசியில் நவதானியங்களுக்கும் ஜாபிதா கொடுத்துவிடுவார்.
அதனுடன் வெல்லம், ஏலக்காய் எல்லாம் நவராத்திரி பண்டங்களாக வந்திறங்கும்.
ரெஃபைண்ட் எண்ணெய்,  தாம்பூலம் வைத்துக் கொடுக்க குண்டுமஞ்சள், கொட்டைப்பாக்கு இவை எல்லாம் வந்த பிறகு. அவைகளைச் சுத்தமான பாட்டில்களில்
கொட்டிவைக்க வேண்டியது என் கடமை.
முதல் பொம்மை மஹாலக்ஷ்மி முதல் படியில் வைத்ததும் பழுக்காத்தட்டு ஒன்று 
எடுத்துவைத்து  நான்கு வெற்றிலைகளை வைத்து,தேங்காய் சகிதம் பாக்கு,மஞ்சள் ,ஒரு நல்ல ரவிக்கைத்துண்டு என்று தயாராக வைத்து விடுவார்.

முழு கொலு வைத்த பிறகு கோலம் தினம் போட்டு, இரண்டு விளக்கு ஏற்றி வைக்கச் சொல்வார்.
 சாயந்திரம் மாட வீதிக்குப் போய் அர்ச்சனை மலர்கள் வாங்கி வரவேண்டியதும் என் வேலை.
பூக்காரர்  ஒவ்வொரு நாளும் 6 முழம் மல்லிசரமோ, ஜாதி மல்லியோ, கதம்பமோ கொடுத்துவிட்டுப் போவார்.

பத்திரிக்கை அடித்து அழைப்பதெல்லாம் கிடையாது. உறவுகளே 
சென்னை முழுவதும் இருப்பதால் வந்த வண்ணம் இருப்பார்கள். பத்து நாட்கள்
வீடு முழுவதும் கோலாஹலம் தான். 
பல நன்மைகளை எங்களுக்கு  அளித்த பெரியவர்களுக்கு
என் மனமார்ந்த நமஸ்கார்ங்களைச் சொல்லிக் கொண்டு அனைத்து
மகளிருக்கும் நவராத்திரி நல்வாழ்த்துகள் சொல்லிக் கொள்கிறேன்.

Saturday, October 06, 2018

அவளும் நானும்


எல்லோரும்  நன்றாக வாழ வேண்டும் 

1996 இல், நானும்  நீரஜா சுந்தரும் , 
அவரவர் கணவர்களொடு , மும்பை விமானத்தில் 
திரும்பிக் கொண்டிருந்தோம்.
நீரஜாவுக்கும் எனக்கும் திருமணம் ஆறு மாத இடைவெளியில் நடந்தது.
அப்பொழுதே ஆங்கில மேற்படிப்பு முடித்து டெக்கன் ஹெரால்டில்
 நல்ல உத்தியோகத்தில்  இருந்தாள். 
திருச்சியில் அவர்கள் இருந்த போது,நாங்கள் புதுக் கோட்டையில் இருந்தோம்.குழந்தைகள் பிறக்கவில்லை.
  நல்ல பழக்கம்.திருச்சிக்கு வரும்போது அவர்கள் வீடும்
ஒரு விசிட் உண்டு.
கணவர் சுந்தர் மிக அப்பாவி. அதற்குச் சரியான 
திட்டவட்டமாகப் பேசும் நீரு. 

வெட்டு ஒண்ணு துண்டு இரண்டு.
அவர்கள் வீட்டுக்குப் போனால் சாப்பிடாமல் வர முடியாது.
சிங்கத்துக்கு நீரு போடும் காப்பி மிகப் 
பிடிக்கும்.
காப்பி இருக்கா என்று கேட்டபடியே நுழைவார்.

காஃபி என்ன, பஜ்ஜி போடப் போறேன். ரெண்டு பேரும் சாப்பிட்டுட்டுத்தான் போகணும் என்பாள்.
அந்தக் குட்டி வீட்டுக்குள் அழகான ரேடியோ, ஒரு படுக்கை அறை,
வாசலில் ஒரு ரோஜாச் செடி, பின்னால் துளசி மாடம் என்று லக்ஷ்மி நாவலில் வருவது போல இருக்கும்.
எங்கள் பாபு பிறப்பதற்கு முன் அவர்களுக்கு சுனீலா பிறந்தாள்.
பிறகு கண்ணன்.
இந்தப் பயணத்தின் போது நாங்கள் பாபு வீட்டிலிருந்து திரும்பிக் கொண்டிருந்தோம். அவர்கள் பாரீசிலிருந்து திரும்பி வந்து கொண்டிருந்தார்கள்.
நீரு மாறவில்லை அதே பட படா பேஷு.
பெண் நியூரோ சர்ஜனாக இருப்பதாகவும், பையன் லண்டனில் பிரபல சட்ட நிபுணரிடம்
உதவியாளராக இருப்பதாகவும் சொன்னாள்.

விமானப் பயணம் முடியும் போது எல்லாவற்றையும் சொல்லி முடித்தவள்,
அப்புறம் பார்க்கலாம்
எல்லாம் சௌக்கியம்தானே என்றபடி விமானத்தை விட்டு வெளியேறிவிட்டாள். சுந்தர் ஒரு லேசான புன்னகையோடு அவளைத் தொடர்ந்தார்.

ஏம்மா உனக்குக் கழுத்து சுளுக்கிக்காமல் இருக்கா என்று கேலி செய்தார்
சிங்கம்.

ஏன்னா, நீ தலை ஆட்டின வேகம் அப்படி இருந்தது.

நீரஜாவின் உலகிலிருந்து வெளிவந்தவளுக்கு அப்போதான் உரைத்தது. தன்னைப் பற்றி இவ்வளவு சொன்னவளுக்கு, உன் குழந்தைகள் எப்படி இருக்கிறார்கள் என்று  கேட்கவில்லையே.
எப்போதிலிருந்து  இப்படி மாறினாள். 

சிங்கத்திடம் கேட்டால் அவள் அப்படியே தாம்ம இருக்கா.
இப்பதான் உனக்குப் புரிகிறது. நீயும் அப்படித்தான் இருக்க.
மற்றவர்களைப் பேசவிடாமல் உன் புலம்பலோ, மகிழ்ச்சியோ சொல்லும் வேகத்தில்
 விசாரிக்க மறந்து விடுகிறாய்.

Better look out madam என்று சிரித்தார். சேன்னு போச்சு எனக்கு. 
😁😆😍😗😒😑😏

Wednesday, October 03, 2018

நாச்சிப் பெரியம்மா ..காருகுறிச்சி

Vallisimhan
மேலச்செவல் ராமய்யங்காருக்கும் லட்சுமிபாட்டிக்கும் பிறந்த   செல்வங்கள், 
ஜியா மாமா என்ற நாராயணன்,நாச்சியார்  என்ற நாச்சி, கிருஷ்ணம்மா  என்ற கிச்சம்மா, ,ருக்மிணி, வரதமாமா, பொன்னி என்கிற பொன்னுக்குட்டி,,தாத்தம் 
மாமா.

இத்தனை  அருமைப் பெரியவர்களின் அன்பும் ஆதரவும் எனக்கு எப்பொழுதும் கிடைக்கித்திருக்கிறது.

நாச்சிப் பெரியம்மா  வரதப் பெரியாவைத் திருமணம் புரிந்தார்.
வீட்டில் ஏற்கனவே வரதன்  இருந்ததால், மாப்பிள்ளைக்குப் பெரியா  பட்டம் கிடைத்தது.
காருகுறிச்சியில் நல்ல குடும்பம்.
 மேல அக்ராஹாரம்   .எதிராப்பில  மிகப் பெரிய குளம் உண்டாம்.
வீட்டுக்குப் பின்னால் வாய்க்கால் ஓடுமாம்.
இந்தத்தகவல் அம்மா எனக்குச் சொன்னது.

நாச்சிப் பெரியம்மாவின் மச்சினர் 
வைணவ மடத்தில்  ஆச்சாரியராக இருப்பவர்.

செல்வம் கொழிக்கும் இடத்தில் பிள்ளை இல்லை.
அதனால் மடாதிபதி ஆகும் முன்னரே 
நாச்சிப் பெரியம்மாவின் இளைய மகனை,ராகவன் என்னும் நாமத்தோடு 
செல்வமாக வளர்ந்த பிள்ளையைத் தத்து எடுத்துக் கொண்டனர்.
அந்தப் பிள்ளைக்கோ அம்மாவை விட்டுப் போக மனம் இல்லை.
 அண்ணா,தங்கைகள்,தம்பி என்று இருக்கும் கலகலப்பான குடும்பத்தைவிட்டு 
 ஒத்தையாகப் பெரியப்பா வீட்டில் இருக்க முடியவில்லை.
அடிக்கடி அழுது கொண்டே இந்த வீட்டுக்கு வந்துவிடுவானாம் அந்தப் பிள்ளை.

சமாதானப் படுத்தி  ஓரகத்தியின் வீட்டில் கொண்டு விட்டு வருவாராம் நாச்சிப் பெரியம்மா.
மகன் நலமாக வளர்வதில் மிகப் பெருமை. 
மற்ற  குழந்தைகளின்  வளர்ச்சியில் கவனம் செலுத்தி மகன் கள்  ,மகள் திருமணம் முடிக்கும் பொது 
உடல் தளர்ந்து வயிற்று வலி வந்துவிட்டது.

முகம் வலி யில் சுருங்கினாலும் , எங்களை பார்க்கையில் அந்தச் சின்ன உருவமே மலர்வது போலத்  தோன்றும்.
காருகுறிச்சியை விட்டு சென்னைக்கு வந்தது குடும்பம். திருவல்லிக்கேணியில் வீடு பார்த்து வசித்துவந்தபோது என் திருமணம் நடந்தது.

 அதற்கு முதல் வருடம்  திருமலைக்குச் சென்றபோதுதான், பெரியம்மாவுக்கு  வயிற்றுவலி என்றே எனக்குத் தெரியும்.
 திருமலை மடைப்பள்ளி அருகே ,இப்போது 
தீர்த்தம் சடாரி கொடுக்கும் இடத்தில்  
மாவிளக்கு ஏற்றி  தன்  வயிற்றின் மீது  வாழை இலையில் வைத்துப் படுத்திருந்ததைக் கண்டு அதிர்ந்து போனேன்.
இப்படிக்கூட வேண்டிக் கொள்வார்களா 
என்று.
அதன் பிறகு அவர் மதுரைக்கு மகள் வீட்டுக்கு வந்தபோது என் முதல் பிரசவம்.

கஷாயம் வைத்துக் கொடுத்து அம்மாவுக்குத் துணையாக இருந்தார்.
அந்தச் சின்னக் கைகள் என் உடல் வலிக்கு இதமாகத் தடவிக் கொடுத்த கருணையை மறக்க மாட்டேன் .

உடனே வர முடியாத என் பாட்டிக்குப் பிரதியாக  இருந்தார்.
பசுமலையில் 
இப்போது மிகப் பெரிய   தொழிலதிபராகிவிட்டிருந்த 
தத்துக் கொடுத்திருந்த  ராகவன் மாமாவும் ,மனைவி ஜானகியுடன் வந்து பார்த்தார்.

மகனைக் கண்டு அடக்க முடியாத பெருமை பெரியம்மாவுக்கு.
அந்த மாமாவுக்கோ தன்னை அம்மா 
தத்துக் கொடுத்த வருத்தம் மறையவே இல்லை.

எல்லோருக்கும் வேண்டிய நல்வாழ்க்கைக்காக 
எத்தனையோ தியாகங்கள் செய்த நாச்சி  பாட்டி, பத்து வருடங்கள் கழித்து அதே வயிற்று வலி யில் இறையடி சேர்ந்தார். 

இன்னும் என் கண்ணில்  அந்த நாலரையடி உருவம், அழகாக  முகம் நிறைய 
Add caption

மஞ்சள் பூசி, கட்டம் போட்ட ரவிக்கையும், பவழ மாலை,
பச்சை நூல் புடவையுடன் என்னடி குட்டி என்று கேட்பது போலத்  தோன்றுகிறது.


Monday, October 01, 2018

Kallidaik kuRichchi amma.

Vallisimhan

மங்கைப் பாட்டியின் கதை

Vallisimhan


எல்லோரும் நலமாக  இருக்க வேண்டும்.

  மங்கைப் பாட்டி ,என் பழங்கானத்துப் பாட்டியின் பெரியம்மா மகள்.
மிக அழகாக இருப்பார்.
 திருக்குறுங்குடியைச் சேர்ந்தவர்தான்.

  பாட்டிக்கும் அவருக்கும் ஒரே நேரத்தில் திருமணம். கணவர் விவசாயத்தில்
ஈடுபட்டிருந்தார்.  வீடும் செழுமை. மாமியாரும் நல்லவர். 
ஒரே ஒரு மகன் தான்.
பெண் ஒன்று மகன் ஒன்று பிறந்ததும் ,
பாட்டி,தாத்தா ஸ்ரீவைகுண்டம் சென்றதில் தோழியரிடையே தொடர்பு இல்லை.

  எங்கள் பாட்டிக்கு பிறந்த குழந்தைகள் எட்டு என்றும் மிஞ்சியது ஐந்து என்றும் 
சொல்வார்கள்.
இரண்டு அத்தைகளுக்கும் திருமணம் முடிந்து ,
பிள்ளைகளுக்கும் பாட்டி திருமணம் செய்துவைக்கும்
போது மங்கை நினைவு வந்தது.
 அவள் எப்படி இருக்கிறாள் என்று கூடத் தெரியவில்லையே
என்று சொல்லிக் கொண்டே இருப்பார் பாட்டி.
நாங்கள் மீண்டும் திருக்குறுங்குடிப் பயணத்தில் 
மங்கைப் பாட்டியைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.
நாற்பது வருடங்களில் குறுங்குடி மாறி இருந்த வேகத்தில்
மங்கைப்பாட்டியும் மாறி இருந்தார். கணவர் வயலில் பாம்பு கடித்து இறந்துவிட்டதாகச் சொன்னார்கள்.
அந்த நாள் வழக்கப்படி நார்மடியும்,கிழத்தோற்றமுமாகத் தோழியைப் பார்த்ததில்
பாட்டீகு ஒரே துக்கம். 
ஒரு வரி எழுதமாட்டியாடி.
நான் வந்திருப்பேனே வண்டி கட்டுக் கொண்டு என்று புலம்பினார்.
பெண்ணுக்குத் திருமணம் ஆனதாகவும் ,
பம்பாயில் சுகமாக இருக்கிறாள் என்றும் சொன்னார்.
மகன் பாளையம்கோட்டையில் படித்துவிட்டுத் திருனெல்வேலியில் இருப்பதாகவும்.
தான் வயலில் இருந்து வருமானத்தில் அவனுக்கும் கொடுத்துத்
தானும் இருப்பதாகவும் சொன்னார்.
குடியானவர்கள் முன் போல் உண்மையாக இல்லை  என்றும்
தன்னாலும் வயக்காட்டில் நின்று கவனிக்க முடியவில்லை என்றும் சொன்னார்.

நீங்களும் த்ருனெல்வேலிக்கே போய்விடலாமே என்று அம்மா கேட்டார். 
அம்மாவுக்கு மங்கைப் பாட்டி பிறந்தகத்து மாமி.

எனக்கு நம்பி துணை. அவனுக்கு நான் துணை. 
இதோ கொஞ்ச நாளில் நிலத்தை விற்று விடப் போகிறோம்.
அப்பொழுது இங்கிருக்கும் என் வயதுக்காரர்கள் எல்லாம் சேர்ந்து அப்பளம் இடலாம் என்று நினைக்கிறோம்.
மெஷின் அப்பளத்தைவிடக் கையால் செய்த அப்பளத்துக்கு
மதிப்பு நிறையவாமே என்றார் . மெஷின் அப்பளமா,அதென்ன
என் பாட்டிக்கு அதிசயம் தாங்கவில்லை.
அப்பளம் நாம தான் இடணும். மாவு பிசியறது  இந்தவேலை எல்லாத்துக்கும் மெஷின் வந்திருக்காம்.  குறிச்சியில் சொன்னார்கள்.

65 வயசுக்கு மங்கைப் பாட்டி திடமாகத்தான் இருந்தார்.
தன் கையே தனக்கு உதவி என்பதில் மும்முரம் காட்டியது 
என் பாட்டிக்குப் 
பிடித்திருந்தது.  நன்னா இருடி மங்கா. இல்லைன்னால் மதுரைக்கு வந்துடு நான் பார்த்துக்கறேன்
என்று சொல்லிவிட்டுத்தான் வந்தார்,.
மங்காப் பாட்டி கடைசி வரை எங்கேயும் போகவில்லை.
சதர்ன் ரோட்வேஸ் லாரியில் என் பாட்டிக்கு அப்பளங்கள் வந்தன.
பிரண்டை வாசனை தூக்கலாக அந்த அப்பளத்தின் மணமும் ருசியும்
இன்னும் என் நினைவில்.

நட்புகளொடே  வாழ்ந்து கௌரவமாகத் தான் இறைவனடி அடைந்தார்.

பிள்ளைக்கும் பெண்ணுக்கும் இன்னும் கொஞ்சம் சொத்து சேர்த்து வைத்திருந்தார் என்று கேள்வி