மஹாளய பக்ஷம் இன்றுடன் பூர்த்தியானது. பதினைந்து நாட்களும் பெரியவர்கள் நினைவுதான்.
பெண்களுக்கு இந்தக் காரியங்கள் செய்ய உரிமை கொடுத்திருந்தால் எத்தனையோ நன்றாக இருக்கும்
அது இல்லாவிட்டாலும் நான் உளமார அவர்களை நினைத்து நல்ல கடமைகளை நிறைவேற்றின திருப்தி இருக்கின்றது.
இனி அடுத்துவரும் பத்து நாட்களும் இறைத்தம்பதிகளைக் கொலு இருத்தி
தினம் ஒரு வகையாகத் துதி செய்து,
உரிய பண்டங்களை நிவேதனம் செய்து, அக்கம்பக்கத்திலுள்ளோர் அனைவருடன் கொண்டாட வேண்டும்.
எங்கள் வீட்டில் ,பாட்டி இருந்த போது
காலை ஒரு கலந்த சாதம், ஸ்ரீஸ்துதி சொல்லி ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வகைப் பூவை
வைத்துப் பூஜைகள்
நடைபெறும். அதே போல மாலை ஒரு சுண்டலும், ஒரு இனிப்புப்
பண்டமும் கொலுவிற்கு நைவேத்யம் உண்டு.
எப்பொழுதும் வீட்டில் தேங்காய் இருக்கும். தினம் வெற்றிலை கொண்டுவந்து கொடுப்பார்
தண்ணித்துறை கடையிலிருந்து ஒருவர். அமாவாசைக்கு நான்கு நாட்களுக்கு முன்பே சென்னகேசவலு செட்டியார் கடைக்கு, தொலைபேசியில் நவதானியங்களுக்கும் ஜாபிதா கொடுத்துவிடுவார்.
அதனுடன் வெல்லம், ஏலக்காய் எல்லாம் நவராத்திரி பண்டங்களாக வந்திறங்கும்.
ரெஃபைண்ட் எண்ணெய், தாம்பூலம் வைத்துக் கொடுக்க குண்டுமஞ்சள், கொட்டைப்பாக்கு இவை எல்லாம் வந்த பிறகு. அவைகளைச் சுத்தமான பாட்டில்களில்
கொட்டிவைக்க வேண்டியது என் கடமை.
முதல் பொம்மை மஹாலக்ஷ்மி முதல் படியில் வைத்ததும் பழுக்காத்தட்டு ஒன்று
எடுத்துவைத்து நான்கு வெற்றிலைகளை வைத்து,தேங்காய் சகிதம் பாக்கு,மஞ்சள் ,ஒரு நல்ல ரவிக்கைத்துண்டு என்று தயாராக வைத்து விடுவார்.
முழு கொலு வைத்த பிறகு கோலம் தினம் போட்டு, இரண்டு விளக்கு ஏற்றி வைக்கச் சொல்வார்.
சாயந்திரம் மாட வீதிக்குப் போய் அர்ச்சனை மலர்கள் வாங்கி வரவேண்டியதும் என் வேலை.
பூக்காரர் ஒவ்வொரு நாளும் 6 முழம் மல்லிசரமோ, ஜாதி மல்லியோ, கதம்பமோ கொடுத்துவிட்டுப் போவார்.
பத்திரிக்கை அடித்து அழைப்பதெல்லாம் கிடையாது. உறவுகளே
சென்னை முழுவதும் இருப்பதால் வந்த வண்ணம் இருப்பார்கள். பத்து நாட்கள்
வீடு முழுவதும் கோலாஹலம் தான்.
பல நன்மைகளை எங்களுக்கு அளித்த பெரியவர்களுக்கு
என் மனமார்ந்த நமஸ்கார்ங்களைச் சொல்லிக் கொண்டு அனைத்து
மகளிருக்கும் நவராத்திரி நல்வாழ்த்துகள் சொல்லிக் கொள்கிறேன்.
No comments:
Post a Comment