Blog Archive

Saturday, October 06, 2018

அவளும் நானும்


எல்லோரும்  நன்றாக வாழ வேண்டும் 

1996 இல், நானும்  நீரஜா சுந்தரும் , 
அவரவர் கணவர்களொடு , மும்பை விமானத்தில் 
திரும்பிக் கொண்டிருந்தோம்.
நீரஜாவுக்கும் எனக்கும் திருமணம் ஆறு மாத இடைவெளியில் நடந்தது.
அப்பொழுதே ஆங்கில மேற்படிப்பு முடித்து டெக்கன் ஹெரால்டில்
 நல்ல உத்தியோகத்தில்  இருந்தாள். 
திருச்சியில் அவர்கள் இருந்த போது,நாங்கள் புதுக் கோட்டையில் இருந்தோம்.குழந்தைகள் பிறக்கவில்லை.
  நல்ல பழக்கம்.திருச்சிக்கு வரும்போது அவர்கள் வீடும்
ஒரு விசிட் உண்டு.
கணவர் சுந்தர் மிக அப்பாவி. அதற்குச் சரியான 
திட்டவட்டமாகப் பேசும் நீரு. 

வெட்டு ஒண்ணு துண்டு இரண்டு.
அவர்கள் வீட்டுக்குப் போனால் சாப்பிடாமல் வர முடியாது.
சிங்கத்துக்கு நீரு போடும் காப்பி மிகப் 
பிடிக்கும்.
காப்பி இருக்கா என்று கேட்டபடியே நுழைவார்.

காஃபி என்ன, பஜ்ஜி போடப் போறேன். ரெண்டு பேரும் சாப்பிட்டுட்டுத்தான் போகணும் என்பாள்.
அந்தக் குட்டி வீட்டுக்குள் அழகான ரேடியோ, ஒரு படுக்கை அறை,
வாசலில் ஒரு ரோஜாச் செடி, பின்னால் துளசி மாடம் என்று லக்ஷ்மி நாவலில் வருவது போல இருக்கும்.
எங்கள் பாபு பிறப்பதற்கு முன் அவர்களுக்கு சுனீலா பிறந்தாள்.
பிறகு கண்ணன்.
இந்தப் பயணத்தின் போது நாங்கள் பாபு வீட்டிலிருந்து திரும்பிக் கொண்டிருந்தோம். அவர்கள் பாரீசிலிருந்து திரும்பி வந்து கொண்டிருந்தார்கள்.
நீரு மாறவில்லை அதே பட படா பேஷு.
பெண் நியூரோ சர்ஜனாக இருப்பதாகவும், பையன் லண்டனில் பிரபல சட்ட நிபுணரிடம்
உதவியாளராக இருப்பதாகவும் சொன்னாள்.

விமானப் பயணம் முடியும் போது எல்லாவற்றையும் சொல்லி முடித்தவள்,
அப்புறம் பார்க்கலாம்
எல்லாம் சௌக்கியம்தானே என்றபடி விமானத்தை விட்டு வெளியேறிவிட்டாள். சுந்தர் ஒரு லேசான புன்னகையோடு அவளைத் தொடர்ந்தார்.

ஏம்மா உனக்குக் கழுத்து சுளுக்கிக்காமல் இருக்கா என்று கேலி செய்தார்
சிங்கம்.

ஏன்னா, நீ தலை ஆட்டின வேகம் அப்படி இருந்தது.

நீரஜாவின் உலகிலிருந்து வெளிவந்தவளுக்கு அப்போதான் உரைத்தது. தன்னைப் பற்றி இவ்வளவு சொன்னவளுக்கு, உன் குழந்தைகள் எப்படி இருக்கிறார்கள் என்று  கேட்கவில்லையே.
எப்போதிலிருந்து  இப்படி மாறினாள். 

சிங்கத்திடம் கேட்டால் அவள் அப்படியே தாம்ம இருக்கா.
இப்பதான் உனக்குப் புரிகிறது. நீயும் அப்படித்தான் இருக்க.
மற்றவர்களைப் பேசவிடாமல் உன் புலம்பலோ, மகிழ்ச்சியோ சொல்லும் வேகத்தில்
 விசாரிக்க மறந்து விடுகிறாய்.

Better look out madam என்று சிரித்தார். சேன்னு போச்சு எனக்கு. 
😁😆😍😗😒😑😏

No comments: