Wednesday, October 03, 2018

நாச்சிப் பெரியம்மா ..காருகுறிச்சி

Vallisimhan
மேலச்செவல் ராமய்யங்காருக்கும் லட்சுமிபாட்டிக்கும் பிறந்த   செல்வங்கள், 
ஜியா மாமா என்ற நாராயணன்,நாச்சியார்  என்ற நாச்சி, கிருஷ்ணம்மா  என்ற கிச்சம்மா, ,ருக்மிணி, வரதமாமா, பொன்னி என்கிற பொன்னுக்குட்டி,,தாத்தம் 
மாமா.

இத்தனை  அருமைப் பெரியவர்களின் அன்பும் ஆதரவும் எனக்கு எப்பொழுதும் கிடைக்கித்திருக்கிறது.

நாச்சிப் பெரியம்மா  வரதப் பெரியாவைத் திருமணம் புரிந்தார்.
வீட்டில் ஏற்கனவே வரதன்  இருந்ததால், மாப்பிள்ளைக்குப் பெரியா  பட்டம் கிடைத்தது.
காருகுறிச்சியில் நல்ல குடும்பம்.
 மேல அக்ராஹாரம்   .எதிராப்பில  மிகப் பெரிய குளம் உண்டாம்.
வீட்டுக்குப் பின்னால் வாய்க்கால் ஓடுமாம்.
இந்தத்தகவல் அம்மா எனக்குச் சொன்னது.

நாச்சிப் பெரியம்மாவின் மச்சினர் 
வைணவ மடத்தில்  ஆச்சாரியராக இருப்பவர்.

செல்வம் கொழிக்கும் இடத்தில் பிள்ளை இல்லை.
அதனால் மடாதிபதி ஆகும் முன்னரே 
நாச்சிப் பெரியம்மாவின் இளைய மகனை,ராகவன் என்னும் நாமத்தோடு 
செல்வமாக வளர்ந்த பிள்ளையைத் தத்து எடுத்துக் கொண்டனர்.
அந்தப் பிள்ளைக்கோ அம்மாவை விட்டுப் போக மனம் இல்லை.
 அண்ணா,தங்கைகள்,தம்பி என்று இருக்கும் கலகலப்பான குடும்பத்தைவிட்டு 
 ஒத்தையாகப் பெரியப்பா வீட்டில் இருக்க முடியவில்லை.
அடிக்கடி அழுது கொண்டே இந்த வீட்டுக்கு வந்துவிடுவானாம் அந்தப் பிள்ளை.

சமாதானப் படுத்தி  ஓரகத்தியின் வீட்டில் கொண்டு விட்டு வருவாராம் நாச்சிப் பெரியம்மா.
மகன் நலமாக வளர்வதில் மிகப் பெருமை. 
மற்ற  குழந்தைகளின்  வளர்ச்சியில் கவனம் செலுத்தி மகன் கள்  ,மகள் திருமணம் முடிக்கும் பொது 
உடல் தளர்ந்து வயிற்று வலி வந்துவிட்டது.

முகம் வலி யில் சுருங்கினாலும் , எங்களை பார்க்கையில் அந்தச் சின்ன உருவமே மலர்வது போலத்  தோன்றும்.
காருகுறிச்சியை விட்டு சென்னைக்கு வந்தது குடும்பம். திருவல்லிக்கேணியில் வீடு பார்த்து வசித்துவந்தபோது என் திருமணம் நடந்தது.

 அதற்கு முதல் வருடம்  திருமலைக்குச் சென்றபோதுதான், பெரியம்மாவுக்கு  வயிற்றுவலி என்றே எனக்குத் தெரியும்.
 திருமலை மடைப்பள்ளி அருகே ,இப்போது 
தீர்த்தம் சடாரி கொடுக்கும் இடத்தில்  
மாவிளக்கு ஏற்றி  தன்  வயிற்றின் மீது  வாழை இலையில் வைத்துப் படுத்திருந்ததைக் கண்டு அதிர்ந்து போனேன்.
இப்படிக்கூட வேண்டிக் கொள்வார்களா 
என்று.
அதன் பிறகு அவர் மதுரைக்கு மகள் வீட்டுக்கு வந்தபோது என் முதல் பிரசவம்.

கஷாயம் வைத்துக் கொடுத்து அம்மாவுக்குத் துணையாக இருந்தார்.
அந்தச் சின்னக் கைகள் என் உடல் வலிக்கு இதமாகத் தடவிக் கொடுத்த கருணையை மறக்க மாட்டேன் .

உடனே வர முடியாத என் பாட்டிக்குப் பிரதியாக  இருந்தார்.
பசுமலையில் 
இப்போது மிகப் பெரிய   தொழிலதிபராகிவிட்டிருந்த 
தத்துக் கொடுத்திருந்த  ராகவன் மாமாவும் ,மனைவி ஜானகியுடன் வந்து பார்த்தார்.

மகனைக் கண்டு அடக்க முடியாத பெருமை பெரியம்மாவுக்கு.
அந்த மாமாவுக்கோ தன்னை அம்மா 
தத்துக் கொடுத்த வருத்தம் மறையவே இல்லை.

எல்லோருக்கும் வேண்டிய நல்வாழ்க்கைக்காக 
எத்தனையோ தியாகங்கள் செய்த நாச்சி  பாட்டி, பத்து வருடங்கள் கழித்து அதே வயிற்று வலி யில் இறையடி சேர்ந்தார். 

இன்னும் என் கண்ணில்  அந்த நாலரையடி உருவம், அழகாக  முகம் நிறைய 
Add caption

மஞ்சள் பூசி, கட்டம் போட்ட ரவிக்கையும், பவழ மாலை,
பச்சை நூல் புடவையுடன் என்னடி குட்டி என்று கேட்பது போலத்  தோன்றுகிறது.


No comments: