Blog Archive

Monday, October 29, 2018

புதுப் பயணம் ....

Vallisimhan 
எல்லோரும் இனிதே வாழ வேண்டும்.


காலையில் கண் விழித்தப் புது மருமகள் வனிதாவின் 
காதில் முதலில் விழுந்தது பூஜை மணி ஓசை.
தன்னை அறியாமல் கைகூப்பக்
கணவனை எழுப்பத் திரும்பியவள் அவனைக் காணாது திகைத்தாள்.

மணியைப் பார்த்தால் தூக்கி வாரிப் போட்டது.
7 மணி ஆகி இருந்தது.
தங்கள் அறையின்  ஒட்டியிருந்த குளியலறையில்
காலைக் கடன் களை முடித்துக் கொண்டுக்
கீழே அவசர அவசரமாக இறங்கினள். 
அங்கே ஒரே சாம்பிராணி மூட்டம். மெள்ள மெள்ளக்
காப்பி கிடைக்குமா என்று சமையலறையைப் பார்த்தால், சமையல் 
செய்யும் மாமி ,முகம் நிறையப் புன்னகையோடு வரவேற்றார்.
பயப்படாதேம்மா.
இங்கே எல்லாம் சீக்கிரம் எழுந்து வேலைக்குப் போகிறவர்களுக்கு
உணவு தயாராகணும். இந்தா புதுப்பாலில் காப்பி சாப்பிடு.
என்று டபரா தம்ளரில் மணக்கும் காப்பியைக் கொடுத்தாள். 
நன்றி சொல்லிவிட்டு  உதட்டில் படாமல் தூக்கி சாப்பிட்டு விட்டு
கழுவப் போனாள்.
இங்கே அலம்பக் கூடாதுமா. வெளில குழாயடியில் போட்டுவிடு.

 பூஜை அறையில் எல்லோரும் இருக்கிறார்கள்.
நீயும் சேர்ந்து கொள். என்றார் ராதா மாமி.
 எல்லோரும் என்றால், பெரிய மாமனார், மாமியார், தன் மாமியார்,
கணவன் எல்லோருமேவா என்று சற்றுக்கலக்கத்துடனே
பூஜை அறையின் வாசலில் நின்று எட்டிப் பார்த்தாள்.
ஆமாம். எல்லோரும் அங்கேதான் இருந்தார்கள்.
நல்லவேளைக் கற்பூரம் ஒற்றிக்கொள்ளும் வேளைக்கு
வந்துவிட்டோம் என்றவாறு மற்றவர்களைப் பார்த்துக் கொண்டுக்
கணவன் சந்துருவின் அருகே நின்று கொண்டாள்.


சற்றே திரும்பிய மாமியார், எல்லோரையும் கீழே விழுந்து வணங்கச் சொன்னார். முறைப்படி வணங்கினதும்,
பெரிய மாமாவிடம், குங்குமம்,பூ எல்லாம் பெற்றுக் கொள்ளக் கைகாட்டினார்.
பயபக்தியுடன் பெற்றுக் கொண்ட வனிதா
தயங்கி நிற்கவும், நீ போய்ச் சந்துருவை 
அலுவலகம் அனுப்பும் வழியைப் பார்.
விடுமுறைக்கப்புறம் போகிறான் அல்லவா.
கையில் சாப்பாடும் கட்டிக் கொடுத்துவிடும்மா.
ராதா உதவி செய்வார் என்று அனுப்பினார் மாமி விமலா.
சந்துருவோடு வெளியே வந்த வனிதா, ஏன்பா என்னை எழுப்பலை,
முதல் நாளே தாமதம் செய்துட்டேனே. என்றாள்.
யாரும் ஒன்றும் சொல்ல மாட்டார்கள். பயப்படாதே, வா மாடிக்குப்
போய் உடை மாற்றி வருகிறேன்.
நீ ராதா மாமியிடம் கேட்டுக் கொள்.
என்றவாறு படிகளில் தாவி ஏறினான்.

திருமணமானதும் தேன் நிலவுக்கு, மெர்க்காரா சென்றுவிட்டுக்
குடும்பம் பற்றி எல்லாம் தெரிந்து கொண்டதால்,
புகுந்தவீடு பழகின இடமாகவே தெரிந்தது.
சந்துரு வேலைக்குப் போய்விட்டால் தான் என்ன செய்வோம் என்ற
யோசனையுடன், சமையலறைக்குள் புகுந்தாள்.
Add caption



No comments: