Blog Archive

Tuesday, October 30, 2018

புதுப்பயணம் ..கதை பகுதி இரண்டு

Vallisimhan
எல்லோரும் நலமாக வாழ வேண்டும் 

  வனிதா கவலையே பட்டிருக்க வேண்டாம்.
அவள் நின்றாளா ,உட்கார்ந்தாளான்னு தெரியாமல் உறவுகள் வகை. சந்த்ருவுக்கு ஏகப்பட்ட 
ஒன்றுவிட்ட சகோதர சகோதரிகள். அனைவரும்
விருந்துக்கு வந்திருந்தார்கள். 

திருச்சியைச் சேர்ந்த வனிதாவிடம் பேச அவர்களுக்கு நிறைய விஷயங்கள்.
இருந்தன. அவர்கள் வீட்டுக்கு வரச் சொல்லி அழைப்பு விடுத்தார்கள்.
 சென்னையில் , உள்ள கலை நிகழ்ச்சிகளுக்கு அழைத்துப் போவதாகச் சொன்னார்கள்.
வியப்பிலும், மகிழ்ச்சியிலும் பூரித்துப் போனாள் வனிதா.

எல்லாம் கிளம்புங்கோ. சனி ஞாயிறு அவர்கள் வருவார்கள் என்று பெரியப்பா
அவர்களைக் கிளப்பினார்.
அம்மா,நீ மாடிக்குப் போய் கொஞ்சம் ஓய்வு எடுத்துக்கோ.
இதோ இன்னும் இரண்டு மணி நேரத்தில் உன் புருஷன் வந்துடுவான்.
நீ முகம் கழுவித் தயார் செய்து கொள் என்றார் மாமியார்கண்ணம்மா..

கைக்குக் கிடைத்த புத்தகத்தை எடுத்து மாடிக்குத் தங்கள் அறைக்குப் 
போனவள். அங்கே எல்லாவற்றையும் ஒழுங்கு படுத்தி வைத்தபடி 
அம்மாவுக்குத் தொலைபேசினாள்.
பெண்ணின் குரலில் தெரிந்த மகிழ்ச்சியைக் கேட்டு
அம்மாவுக்கும் சந்தோஷம். அளவாப் பேசு. பெரியவர்கள் என்ன சொன்னாலும் செய்.
நல்ல மனிதர்கள் மனம் சுளிக்கப் பேசிவிடாதே.
நாளாக நாளக உன்னைப் புரிந்து கொள்வார்கள்.
கணவன் தேவைகளை எப்பொழுதும் மறக்காதே. 
உனக்கென்று தனி வேலைகள்,படிப்பு, ஓவியம்
எல்லாக் கலையையும் வளர்த்துக் கொள்.
மாமியாரிடம் கேட்டுக் கொண்டு ,கோவிலுக்கு அழைத்துப் போகச் சொல்
 என்றெல்லாம் புத்திமதி சொன்னார் அம்மா. அனைத்துக்கும் சரிம்மா
என்றவள் தங்கை தம்பிகளை விசாரித்தாள்.
சற்றே கண்ணசந்த பிறகு, கணவன் வருகைக்குத் தயாரானாள்.
 வனிதாவின் நாத்தனார்களும் கல்லூரிக்குப் போகிறவர்கள்.
அவர்கள் வரவும் வீடு இன்னும் கலகலப்பாகியது.

புது மதினியைச் சுற்றி வரவே நேரம் சரியாக இருந்தது அவர்களுக்கு.
மாமியார் வந்து அவர்களை அடக்கி
அவரவர் அறைக்கு அனுப்பி வைத்தார்.
அவர்கள் மாடி ஏறவும் சந்த்ரு வரவும் சரியாக இருந்தது.
காலையைவிட முக மலர்ச்சியுடன் இருக்கும் மனைவியைக் கண்டு அவனுக்கும் மகிழ்ச்சி.

என்ன எல்லோருடனும் பொழுது போச்சா என்று மனைவியை விசாரித்தான்.
வெகு உற்சாகமாகத் தலை ஆட்டிய வனிதாவைப் பார்த்து,
அப்பாடா நிம்மதி.
என் பெரிய குடும்பத்தைப் பார்த்துப் பயந்துவிடுவாயோன்னு எனக்குப் பயம்
என்றான்.

இல்லை சந்த்ரு. எனக்கு இந்த சூழல் மிகப் பிடித்திருக்கிறது .
மிகப் பாதுகாப்பாக உணர்கிறேன் என்றாள் வனிதா.

நீ கவலைப்படாதேடா,உன் பெண்டாட்டியை நாங்கள்
எங்கள் வலைக்குள் கொண்டு வந்துவிட்டோம் என்று சிரித்தபடி வந்தார்
கண்ணம்மா.

எங்காவது வெளியே போவதானால் சாப்பிட்டுவிட்டுப் போங்கள்.
சென்னை புதிது அவளுக்கு. ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்
என்று சொல்லிக்  கணவருடன் பேசப் போய்விட்டார் அவர்.

ராதா மாமி வேலை முடிந்து ,வீட்டுக்குக் கிளம்பிக் கொண்டிருந்தார். இருவருக்கும் சாப்பாட்டு மேஜையில் உணவு வைத்திருக்கிறேன். மிச்சம் வைக்காமல்
சாப்பிட வேண்டும் ...குழந்தைகளுக்குச் சொல்வது போல்
சிரித்துக் கொண்டே சொல்லிவிட்டு, அம்மா வனிதா ,நீ
ஸ்வாமிக்கு விளக்கேத்துமா என்று சொல்லிவிட்டு,
விரைந்தார்.

வனிதாவின் முகத்தைப் பார்த்துப் பக்கென்று சிரித்துவிட்டான் சந்த்ரு.
எங்க வீட்டு மஹாலக்ஷ்மி இனி நீதான். இன்னும் பார்.
வா சாப்பிடலாம். பிறகு கடற்கரை என்று அவள் கைபற்றி அழைத்துச் சென்றான்.
மேலே இருந்து இரு சகோதரிகளின் குரல் கேட்டது,
அண்ணா திருமணம் ஆகி இரண்டு வாரம் ஆச்சு ,இன்னும் கையை விட
உனக்கு மனசில்லையாக்கும் என்று கேட்டாள் தங்கை.
ஆமாம். என் பெண்டாட்டி நான் பிடித்துக் கொள்வேன்
என்று சிரித்து உள்ளே சென்றான்....தொடரும்.

No comments: