Vallisimhan
எல்லோரும் நலமாக இருக்க வேண்டும்.
மங்கைப் பாட்டி ,என் பழங்கானத்துப் பாட்டியின் பெரியம்மா மகள்.
மிக அழகாக இருப்பார்.
திருக்குறுங்குடியைச் சேர்ந்தவர்தான்.
பாட்டிக்கும் அவருக்கும் ஒரே நேரத்தில் திருமணம். கணவர் விவசாயத்தில்
ஈடுபட்டிருந்தார். வீடும் செழுமை. மாமியாரும் நல்லவர்.
ஒரே ஒரு மகன் தான்.
பெண் ஒன்று மகன் ஒன்று பிறந்ததும் ,
பாட்டி,தாத்தா ஸ்ரீவைகுண்டம் சென்றதில் தோழியரிடையே தொடர்பு இல்லை.
எங்கள் பாட்டிக்கு பிறந்த குழந்தைகள் எட்டு என்றும் மிஞ்சியது ஐந்து என்றும்
சொல்வார்கள்.
இரண்டு அத்தைகளுக்கும் திருமணம் முடிந்து ,
பிள்ளைகளுக்கும் பாட்டி திருமணம் செய்துவைக்கும்
போது மங்கை நினைவு வந்தது.
அவள் எப்படி இருக்கிறாள் என்று கூடத் தெரியவில்லையே
என்று சொல்லிக் கொண்டே இருப்பார் பாட்டி.
நாங்கள் மீண்டும் திருக்குறுங்குடிப் பயணத்தில்
மங்கைப் பாட்டியைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.
நாற்பது வருடங்களில் குறுங்குடி மாறி இருந்த வேகத்தில்
மங்கைப்பாட்டியும் மாறி இருந்தார். கணவர் வயலில் பாம்பு கடித்து இறந்துவிட்டதாகச் சொன்னார்கள்.
அந்த நாள் வழக்கப்படி நார்மடியும்,கிழத்தோற்றமுமாகத் தோழியைப் பார்த்ததில்
பாட்டீகு ஒரே துக்கம்.
ஒரு வரி எழுதமாட்டியாடி.
நான் வந்திருப்பேனே வண்டி கட்டுக் கொண்டு என்று புலம்பினார்.
பெண்ணுக்குத் திருமணம் ஆனதாகவும் ,
பம்பாயில் சுகமாக இருக்கிறாள் என்றும் சொன்னார்.
மகன் பாளையம்கோட்டையில் படித்துவிட்டுத் திருனெல்வேலியில் இருப்பதாகவும்.
தான் வயலில் இருந்து வருமானத்தில் அவனுக்கும் கொடுத்துத்
தானும் இருப்பதாகவும் சொன்னார்.
குடியானவர்கள் முன் போல் உண்மையாக இல்லை என்றும்
தன்னாலும் வயக்காட்டில் நின்று கவனிக்க முடியவில்லை என்றும் சொன்னார்.
நீங்களும் த்ருனெல்வேலிக்கே போய்விடலாமே என்று அம்மா கேட்டார்.
அம்மாவுக்கு மங்கைப் பாட்டி பிறந்தகத்து மாமி.
எனக்கு நம்பி துணை. அவனுக்கு நான் துணை.
இதோ கொஞ்ச நாளில் நிலத்தை விற்று விடப் போகிறோம்.
அப்பொழுது இங்கிருக்கும் என் வயதுக்காரர்கள் எல்லாம் சேர்ந்து அப்பளம் இடலாம் என்று நினைக்கிறோம்.
மெஷின் அப்பளத்தைவிடக் கையால் செய்த அப்பளத்துக்கு
மதிப்பு நிறையவாமே என்றார் . மெஷின் அப்பளமா,அதென்ன
என் பாட்டிக்கு அதிசயம் தாங்கவில்லை.
அப்பளம் நாம தான் இடணும். மாவு பிசியறது இந்தவேலை எல்லாத்துக்கும் மெஷின் வந்திருக்காம். குறிச்சியில் சொன்னார்கள்.
65 வயசுக்கு மங்கைப் பாட்டி திடமாகத்தான் இருந்தார்.
தன் கையே தனக்கு உதவி என்பதில் மும்முரம் காட்டியது
என் பாட்டிக்குப்
பிடித்திருந்தது. நன்னா இருடி மங்கா. இல்லைன்னால் மதுரைக்கு வந்துடு நான் பார்த்துக்கறேன்
என்று சொல்லிவிட்டுத்தான் வந்தார்,.
மங்காப் பாட்டி கடைசி வரை எங்கேயும் போகவில்லை.
சதர்ன் ரோட்வேஸ் லாரியில் என் பாட்டிக்கு அப்பளங்கள் வந்தன.
பிரண்டை வாசனை தூக்கலாக அந்த அப்பளத்தின் மணமும் ருசியும்
இன்னும் என் நினைவில்.
நட்புகளொடே வாழ்ந்து கௌரவமாகத் தான் இறைவனடி அடைந்தார்.
பிள்ளைக்கும் பெண்ணுக்கும் இன்னும் கொஞ்சம் சொத்து சேர்த்து வைத்திருந்தார் என்று கேள்வி
No comments:
Post a Comment