#தைத்திருமண நாள்.
பிப்ரவரி 4 ஆம் தேதி, சிறிது குளிருடனே விடிந்தது.
9 மணிக்கு முஹூர்த்தம்.அதற்கு முன் பெரிய தம்பிக்கு உப நயனம்.
காலையிலிருந்து வயிற்றுக்கு எதுவும் ஈயப்படவில்லை.
அது ஒரு மாபெரும் சங்கடம். பாட்டியுடைய அக்கா
ரகசியமாக அழைத்துச் சென்று ஒரு டம்ப்ளர் பாலைக் கொடுத்தார்.
11,12 மணியாகும் சாப்பிட .உன் பின்னால் தான் நிற்பேன்.
எதுக்கும் என்னைத் திரும்பிப் பார்த்தியானால்
கொண்டு வந்து கொடுக்கிறேன் என்று நம்பிக்கை கொடுத்தார்.
அப்போதிருந்த பரபரப்பில் எதையும் கேட்கத் தோன்றவில்லை.
முதல் நாள் இரவே வீடு திரும்பிவிட்ட புக்ககத்தார்
சரியாக எட்டு மணிக்கு வர,தலை சந்திரப் பிரபை,சூரியப்பிரபை,
ராக்கொடி, ஆண்டாள் கொண்டை என்று இறுக்க,
தடுக்கிவிழாமல் மண்டப வாயில் ஊஞ்சல் அருகே
வந்தேன்.பின்னாலயே அம்மா,மன்னி,குட்டித் தங்கைகள்.
ஒரு சின்னப் புன்னகையுடன் மாலை மாற்றல் ஆரம்பித்தது.
"கொஞ்சம் நிமிர்ந்து உட்கார். எனக்கே நினைவிருக்காது நான்
யாரைக் கல்யாணம் பண்ணிக் கொண்டேன் " என்று சொன்னதும்
அங்கே சிரிப்பலை.ஜெயா மன்னி,அம்மா அருகில்
நின்று ஊஞ்சல் பாட்டுப் பாடியதும், அம்மாவின் தோழி சரோஜாம்மா,
கன்னூஞ்சல் ஆடி இருந்தாள் பாட்டுப் பாடும்போதே
புரோஹிதர் வரதன் கச்சேரி பண்ணாதீங்கோ. 9.10க்கு தாலி கட்டியாகணும்
என்று மிரட்ட உள்ளே விரைந்தோம்.
அக்னி வளர்த்து, ஹோமப்புகை கண்ணில் ஏற, நாத்தனார்
அணிவித்த பத்துகஜம் கூரைப் புடவையில்,
அப்பாவுக்கு வலிக்கக் கூடாதே என்பதில் கவனமாக
அவர் மடியில் உட்கார, சிங்கம் மங்கல முடிச்சுப் போட்டார்.
முறையாக சப்தபதி, தம்பி முரளியுடன் பொரியிடல்,
மைலாப்பூருக்கு கிரஹப்ரவேசம் என்று முடித்து
மண்டபம் திரும்பும்போது மணி ஒன்று.
இனிமையும்,மகிழ்ச்சியுமாக அன்பு வாழ்க்கை ஆரம்பமானது.
92Kalyani Shankar, Tulsi Gopal and 90 others
102 Comments
Share