Blog Archive

Monday, February 28, 2022

துள்ளித் துள்ளி அலைகள்

வல்லிசிம்ஹன்

அனைவரும் என்றும் நலமுடன் வாழ வேண்டும்.

என் வாழ்வின் பெரிய அலையாக வந்து
சம்சார பந்தத்தில் என்னை இழுத்துக் கொண்ட
சிங்கத்துக்கு மாசி உத்ராடம் பிறந்த நாள் அதாவது
28 ஃபெப்ரவரி    .82 ஆவது வயது ஆரம்பிக்கிறது. எங்கேயாவது நலமாக இருப்பார்.அன்பு வாழ்த்துகளும் வணக்கங்களும் என் கணவருக்கு.
பிள்ளைகளை நலமாக வைக்க வேண்டும்.





 எஸ்பி பியின் இனிய குரலே துள்ளும். கேட்பவரின்
மனதில் 
 வாழ்வின் மேல் சலிப்பு வராது. இயக்கம் முடங்காது.
அந்தக் குரலுக்கு அத்தனை மகிமை.
பழைய படம். இனிமையான பாடல்.

  திரு மனோஹர் ரொமாண்டிக் ஆகக் கூட 
நடித்திருக்கிறாரா என்று இப்போது யோசிக்கிறேன்.
அப்போதெல்லாம் பாட்டு மட்டும் தானே தெரியும்:)
'' பாக்கு மர சோலையிலே
பளபளக்கும்   பாளையிலே
பறந்து பறந்து குருவி எல்லாம்
என்ன பண்ணுது.......
அது வாழ்க்கை தனை உணர்ந்து கிட்டு
மனசும் மனசும் கலந்துகிட்டு
மூக்கினாலே கொத்தி கொத்தி கூடு பின்னுது''

வாழ்க்கையின் முழு தத்துவம். 
வேண்டுவது ஒரு  வாசஸ்தலம்.
எலிப்பாழ் தனிப்பாழ் இந்த வசனமெல்லாம் கேட்டிருக்கிறோமே!!

 திருமணம் ஆன போதில் உலகமே 
கண்ணில் படாது.
கணவனுக்கு மனைவி மட்டும் தான்
கண்ணில் படுவாள்.
மனைவிக்கு  கணவன் மட்டுமே அகிலம்.

இது எத்தனை நாள் நீடிக்கும்?

குடும்பம் பெருகும். பெற்றோர் ஆதரவு தேவைப்படும்.

அதுவும் எங்களைப்போல இரண்டு வருடங்களுக்கு
ஒரு குழந்தை பெற்றுக் கொண்டால்:).....
நல்ல வேளை உதவிக்கு இரண்டு பெண்கள் இருந்தார்கள்,
சிங்கத்துக்குத் தன் உழைப்பை அவரது 
அலுவலகத்துக்குக்
கொடுக்க முடிந்தது.

திருமணமான பத்து வருடங்களுக்குள்
நிறைய சவால்களைச் சந்திக்க வேண்டி வந்தது.
இருவருமே இளவயதாக இருந்ததால் 
மகிழ்ச்சியாகவே  எதிர் கொண்டோம்.


பிறகு சென்னையில் எங்களுக்குப் பொறுப்பேற்கும் காலம் வந்தது.

பெரியவர்கள், அவர்களை விடப் பெரியவர்கள்
மிகப் பரந்த உறவினர்கள்.
தனி மரத்திலிருந்து ஆல மரத்துக்குக் 
குடி வந்துவிட்டோம்!!
நதி அலைகளைப் போல இல்லாமல் கடல் அலைகளானது வாழ்வு.

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

இப்போது இன்னோரு துள்ளும் மனம்.





 


   கல்யாண பரிசு..... இல்லை இல்லை நடுவில் ப் கிடையாது.
ஏழு எழுத்து மாஜிக்:) டைரக்டர் ஸ்ரீதர் நம்பிக்கை.
மீண்ட சொர்கம் தான் க் நடுவில் கிடையாது!!

இந்தப் பாடலில் வரும் விஜய குமாரியைக் கண்டு எங்களுக்கெல்லாம்
அவ்வளவு கோபம் வரும்.
தங்கை வாழ்வை  இப்படிச் செய்து விட்டாரே என்று:)பதினோரு
வயதில் வேறென்ன தெரியும்:)

வாய் கிழிய பேசத் தெரியும். 
காதல் என்ற வார்த்தை கூட சொல்லக் கூடாது 
வீட்டில்.
பின்னே  எப்படி அத்தனை தொடர்கதைகளையும் 
படித்தேன்?
ஏன் திருமணம் என்றால் மேளம் நாதஸ்வரம்,
அலங்காரம் என்ற அளவில் மட்டும் நின்றது
அறிவு.

இன்னது என்று சொல்லி ,விழிப்பு உணர்வு 
கொடுக்க வேண்டாமா.?
வரும் கணவருக்கு இதனால் எவ்வளவு பெரிய
பொறுப்பு வருகிறது?????

ஆனால் உரம் மட்டும் கொடுத்திருந்தார்கள் 
பெற்றோர். 
எதை வேண்டுமானாலும் சமாளிக்கும்
பொறுமை, மீண்டு வரத் தேவையான தைரியம்,
விகல்பம் இல்லாத  அன்பு.  மகிழ்வுடன் வாழ்ந்து வளம் பெறத்  தேவையான உற்சாகம்   எல்லாம்

பெற்றிருந்தோம்.



வளம் பெறுவோம்.



25 comments:

கோமதி அரசு said...

சாருக்கு பிறந்த நாள் வாழ்த்துகள், வணக்கங்கள்.
பாடல் பகிர்வு அருமை.

//வாழ்க்கையின் முழு தத்துவம்.
வேண்டுவது ஒரு வாசஸ்தலம்.//

வாழ்க்கை பாடத்தை நீங்கள் அழகாய் சொன்னீர்கள்.

அருமையான பதிவு.

ஸ்ரீராம். said...

இன்று சிங்கத்துக்கு நட்சத்திர பிறந்த நாளா?  வணங்குகிறேன்.  ஒரு சுய அலசல் போல பழைய சம்பவங்களை விவரித்திருப்பது சிறப்பு.  அந்தக் காலத்தில் பெண்களுக்கு மட்டுமில்லை, நிறைய ஆண்களுக்கும் கல்யாணம் என்றால் என்ன என்று புரிந்திருக்காது.  எல்லாமே அனுபவத்தில் வருவதுதானே...  பகிர்ந்திருக்கும் பாடல்களில் சிப்பிக்குள் முத்த பாடல் என் தெரிவில் டாப்.

Geetha Sambasivam said...

//இன்னது என்று சொல்லி ,விழிப்பு உணர்வு
கொடுக்க வேண்டாமா.?
வரும் கணவருக்கு இதனால் எவ்வளவு பெரிய
பொறுப்பு வருகிறது?????//

கன்னாபின்னாவென ஆதரிக்கிறேன். கல்யாணம், குழந்தை என்றாலே ஏதோ சொல்லத்தகாத வார்த்தைகளாகச் சொல்லியே வளர்த்தார்கள். குழந்தை பற்றியோ கல்யாணம் பற்றியோ வீட்டில் பேச்சு வார்த்தைகள் நடந்தால் அந்த இடத்திலேயே நாம் இருக்கக் கூடாது! இந்த வயசிலேயே இதெல்லாம் எதுக்கு உனக்கு? என்று திட்டு விழும். பின்னர் திருமண ஏற்பாடுகளின் போதும் மனதில் பல சந்தேகங்கள். யாரையும் கேட்டுத் தெரிந்து கொள்ளவோ/தெளிந்து கொள்ளவோ முடியாது. எப்படியோ தட்டுத் தடுமாறித் தான் ஆரம்பித்தது மணவாழ்வின் தனிக்குடித்தனம். புரிய நான்கைந்து வருடங்கள் ஆகின.

Geetha Sambasivam said...

இந்த விஷயத்தில் நம் குழந்தைகளை விடவும் இப்போதைய தலைமுறை இன்னமும் புரிந்து கொண்டிருக்கிறார்கள். ஆனாலும் நம் காலத்தை விட இப்போத் தான் விவாகரத்து, மனம் பாதிப்பு, தவறான தேர்வு என அதிகமாகிக் கொண்டிருக்கு. விஷயம் புரியாமல் இருந்தாலே நல்லதோ என்றே எனக்கு இப்போது தோன்றுகிறது. நம் குழந்தைகள் புரிந்து கொள்ளும்படி நாம் வளர்த்தாலும் அவங்க கட்டுப்பாடுகளை மீறாமல் வளர்ந்தார்கள். ஆனால் இப்போ?

Geetha Sambasivam said...

ஆமா இல்ல! கடைசியிலே சொல்ல வந்த விஷயத்தைச் சொல்லாமல் விட்டுட்டேனே. சிங்கத்திற்கு எங்கள் நமஸ்காரங்கள். பிறந்த நாள் வாழ்த்துகள். என்றென்றும் உங்கள் குடும்பத்தையும் உங்களையும் வழி நடத்திக் கொண்டிருப்பார்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கோமதிமா,
இனிய காலை வாழ்த்துகள்.

வாழ்க வளமுடன்.
உங்கள் வாழ்த்துகளுக்கும் நன்றி.

ஏதோ நினைவுகள் வரும்போது எழுதிவிடுகிறேன்.

உங்களுக்கும் தோன்றி இருக்கும். நலமுடன் வாழ்வோம் மா.

KILLERGEE Devakottai said...

எனது நமஸ்காரங்களும் அம்மா.
பழைய நினைவலைகள் நன்று.

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

ரசிக்கும்படியான பாடல்கள்.

மாதேவி said...

சிங்கத்துக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் என்றும் அவர் அன்பும் ஆசியும் உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் கிடைக்கும் வாழ்க நலமுடன் மகிழ்வுடன்.

Thulasidharan V Thillaiakathu said...

அம்மா ஒவ்வொரு வரியையும் ரசித்து வாசித்தேன்.

சிங்கம் அப்பாவுக்கு என் வணக்கங்கள்.

அதை ஏன் கேக்கறீர்கள் அப்போது உங்களுக்கு அடுத்த தலைமுறையா நான்? எனக்கும் இப்படித்தான் வீட்டில் எந்தக் கதை பற்றியும் பேசக் கூடாது, ஆண் பிள்ளை கள் வந்தால் நாம் ஒதுங்கி இருக்க வேண்டும். சினிமா என்ற வார்த்தையே கூடாது. சினிமா பாட்டு நோ...வீட்டில் பாட்டு நோ, காதல் கெட்ட வார்த்தை, கல்யாணம்? அதெல்லாம் ஆனா தானா தெரியும்..பேசக் கூடாது. ஏஜ் அட்டென்ட் செய்தால் ஊருக்கெ அறிவிப்பு!!! மாத மூன்று நாள் வீட்டு விலக்கு? அது மட்டும் எல்லாருக்கும் தெரியலாம். ஊருக்கே தெரியலாம். முரண்!!

ஊரில் எல்லா வீட்டுப் பெண்களோடும் பேசக் கூடாது. ஒரு குறிப்பிட்ட வீட்டுப் பெண்களோடு அதுவும் தெருவில் பார்த்தால் மட்டுமெ வீட்டுக்குப் போகக் கூடாது...இப்படி என்னென்னவோ எத்தனை எத்தனையோ...

ஆனால் நீங்கள் சொல்லியிருப்பது போல் மனோ தைரியம்! அதுதான் துணை...

கீதா

வல்லிசிம்ஹன் said...

அன்பின் ஸ்ரீராம்,
என்றும் நலமுடன் இருங்கள்.

நீங்கள் சொல்வது உண்மை தான். ஒரு தலைமுறையில் இதெல்லாம்
மாறி இருக்கின்றன.
அவரவர் இஷ்டப்படி வாழ நினைக்கிறார்கள்.
நாம் பெற்றோருக்குக் கட்டுப் பட்டோம்.

எங்கள் பிள்ளைகளுக்கும் அது இருந்தது.
இனி வரும் சமுதாயம் எப்படியோ.
எதுவானாலும் நலமுடன் இருக்கட்டும்.
உங்கள் வாழ்த்துகளுக்கு நன்றி அப்பா.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கீதாமா,

நம் தலைமுறையும் அடுத்த தலைமுறையும் பரவாயில்லை.

வழி காண்பித்தார்கள் சென்றோம்.
''கன்னாபின்னாவென ஆதரிக்கிறேன். கல்யாணம், குழந்தை என்றாலே ஏதோ சொல்லத்தகாத வார்த்தைகளாகச் சொல்லியே வளர்த்தார்கள். குழந்தை பற்றியோ கல்யாணம் பற்றியோ வீட்டில் பேச்சு வார்த்தைகள் நடந்தால் அந்த இடத்திலேயே நாம் இருக்கக் கூடாது!''

உண்மை. நமக்கே கேட்கத் தோன்றாது.
வெளி உலகம் அப்படி இல்லையே:(
என் தோழிகள் என்னைவிட விவரம் அறிந்தவர்களாக

இருந்தார்கள்.
கண் ,காது ,வாய் எல்லாமே பெற்றோர்
கட்டுக்குள். இல்லாவிட்டால் பாட்டி
கட்டுக்குள்.
நல்ல புரிதல் உள்ள கணவர்கள் வாய்த்ததால் ஏதோ
பிழைத்தோம்.

இப்போது நம் பேரன் பேத்திகள் விவரம் வேறு கதை.
இளைய வகுப்பிலேயே எல்லாம் போதிக்கப்
படுகிறது.

பாட்டி, நீ பாவம் ஒண்ணுமே தெரியவில்லை:)
இது நான் அடிக்கடி கேட்கும் சொற்கள்!!!!!

வல்லிசிம்ஹன் said...

இந்த விஷயத்தில் நம் குழந்தைகளை விடவும் இப்போதைய தலைமுறை இன்னமும் புரிந்து கொண்டிருக்கிறார்கள். ஆனாலும் நம் காலத்தை விட இப்போத் தான் விவாகரத்து, மனம் பாதிப்பு, தவறான தேர்வு என அதிகமாகிக் கொண்டிருக்கு. விஷயம் புரியாமல் இருந்தாலே நல்லதோ என்றே எனக்கு இப்போது தோன்றுகிறது.''


மிக மிக உண்மை. இவர்களால் வாழ்க்கையை எப்படி எதிர்கொள்வது என்றே
தெரியவில்லையோ என்று தோன்றுகிறது.

எது விதிக்கப்பட்டதோ அது நடக்கிறது என்றாலும்
நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோமே!!!

கவலையாகத்தான் இருக்கிறது.
நமக்கு நல்ல பாதை வகுத்துக் கொடுத்த போது மரியாதையாக
அந்தப் பாதையில் நடந்தோம்.

எல்லாமே மாறி வருகிறது இப்போது.
நம் கண் முன்னே எல்லோரும் சௌக்கியமாக இருக்கட்டும்.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கீதாமா,
உங்கள் வாழ்த்துகளுக்கு மிக மிக நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் தேவகோட்டைஜி,
நலமுடன் இருங்கள் அப்பா.

எனக்கு என் வலைப்பூ ஒன்றே பேசும் இடமாகி விட்டது.
நீங்கள் எல்லோரும் படித்து பின்னூட்டம் இடுவது
என் மகிழ்ச்சி.
நன்மையை எழுதப் பார்க்கிறேன்.
நன்றி மா.

திண்டுக்கல் தனபாலன் said...

2 பாடல்களும் அருமை...

வல்லிசிம்ஹன் said...

அன்பின் முனைவர் ஜம்புலிங்கம் ஐயா,
வணக்கம்.
பதிவுக்கு வந்து ,பின்னூட்டம் இட்டதற்கு மிக நன்றி.
என்றும் நலமுடன் இருங்கள்.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் மாதேவி,
என்றும் நலமுடன் இருங்கள்.

உங்கள் வாழ்த்துகளுக்கு நன்றி மா.
ஆமாம் அவருடைய பாதுகாப்பு பிள்ளைகளுக்கு என்றும் வேண்டும்.
நன்றி அம்மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கீதா ரங்கன்,

''சினிமா பாட்டு நோ...வீட்டில் பாட்டு நோ, காதல் கெட்ட வார்த்தை, கல்யாணம்? அதெல்லாம் ஆனா தானா தெரியும்..பேசக் கூடாது. ஏஜ் அட்டென்ட் செய்தால் ஊருக்கெ அறிவிப்பு!!! மாத மூன்று நாள் வீட்டு விலக்கு? அது மட்டும் எல்லாருக்கும் தெரியலாம். ஊருக்கே தெரியலாம். முரண்!!

ஊரில் எல்லா வீட்டுப் பெண்களோடும் பேசக் கூடாது. ஒரு குறிப்பிட்ட வீட்டுப் பெண்களோடு அதுவும் தெருவில் பார்த்தால் மட்டுமெ வீட்டுக்குப் போகக் கூடாது...இப்படி என்னென்னவோ எத்தனை எத்தனையோ...''

அட ராமா. எங்க வீடு மாதிரியே உங்க வீடு!!!!!!

பேசா மௌனியாக எத்தனை நாட்கள் இருந்தோம்:(
அதுவும் வீட்டு விலக்கு. கடவுளே. ஆனால் என் பாட்டியை விடப்
பெற்றோர் தேவலை. இருந்தும் ஜன்னல் பக்கம் கூட நிக்கக்
கூடாது.
வீடு,பள்ளி வீடு இதுதான் எல்லை.

பழகி விட்டது என்று நினைக்கிறேன்.

வல்லிசிம்ஹன் said...

ஆனால் நீங்கள் சொல்லியிருப்பது போல் மனோ தைரியம்! அதுதான் துணை...''


வேற வழி இல்லை அம்மா.
அன்பின் கீதாரங்கன்,
வாழ்த்துகளுக்கு மிக நன்றி.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் தனபாலன்,
அந்த இரண்டு பாடல்களும் எனக்கும்
எப்பொழுதுமே பிடிக்கும்.
வந்து கருத்திட்டதற்கு மிக நன்றி அப்பா.

Geetha Sambasivam said...

//மாத மூன்று நாள் வீட்டு விலக்கு? அது மட்டும் எல்லாருக்கும் தெரியலாம். ஊருக்கே தெரியலாம். முரண்!!//
நாங்க ஒரு பெரிய வீட்டின் ஒரு போர்ஷனில் குடி இருந்தோம். அங்கே மொட்டை மாடியில் தனியாக அறை கட்டி இருப்பாங்க. அங்கே தான் 3 நாட்களும் இருக்கணும். பள்ளிக்குச் செல்ல வாசல் வழி மாடிப்படி வழியாக இறங்கிப் போகணும். ஊரெல்லாம் தெரியும்படி உரக்கச் சொல்லுவாங்க, நாம் வருவதை! :( சமயங்களில் 2,3 பேர் இருப்போம். படுக்கப் பிரச்னை. ஒருத்தர் கதவைச் சாத்தச் சொன்னால் இன்னொருத்தர் திறந்து வைக்கணும் என்பார். :)))

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கீதாமா,
இது ஒரு தீராத சாபம் ஆக இருந்தது.

பல காலம் தொடர்ந்தது.
அதுவும் பாட்டியுடன் இருக்கையில்

வீட்டுக்கு வெளியில் ஒரு குறுகிய மண் பாதையில், மதில்
பக்கத்தில் உட்கார வேண்டும்.
யார் கண்ணில் பட்டாலும்
அவமானமாக இருக்கும்.
எப்படிக் கடந்தோம் அந்த நாட்களை
என்று நினைக்கையில் பிரமிப்பாக
இருக்கிறது.:(

உங்கள் மாடி அறையை நினைத்தால் ''கோராமை''
தான் நினைவில் வருகிறது.

Geetha Sambasivam said...

ஆமாம், அப்படியும் சில ஊர்களில்/சில வீடுகளில் ஒதுங்கணும். படுக்கக் கூட முடியாது. என் தாத்தா வீட்டில் சமையலே தனியாக இருக்கும். அடுப்பு, புளி, மிளகாய்ப்பொடி, உப்பு, பருப்பு, ஊறுகாய், அரிசி எனத்தனியாக வைச்சுடுவாங்க. வீட்டில் இருந்து எடுத்துக்கறதுன்னா மோரும், காய்களும் தான். அதுவும் முக்கால்வாசி துவையலை அரைச்சு ஏதேனும் காயை வதக்கி மோரை விட்டுப் போடுவாங்க. இன்னும் அதிகமாச் சொல்லணும்னா எங்க சித்தி வீட்டில் (சின்னமனூர்) மாத விலக்கான பெண்களுக்குக் காலையில் பழைய சாதமும் தனியாக வைத்திருக்கும் ஊறுகாய் அல்லது முதல் நாள் குழம்பு. மத்தியானம் காஃபியோடு ஓட்டலில் ஏதேனும் ஓரணாப்பொட்டலம் வாங்கிப் போடுவாங்க. அதையும் தூக்கித் தான் எறிவாங்க. பின்னர் ஐந்தரை மணிக்குள் சூர்யாஸ்தமனத்துக்கு முன்னால் சாப்பாடு சாப்பிட்டு விட வேண்டும். ராத்திரி பசிச்சால்? அப்படியே தான் இருக்கணும். :)))))

வெங்கட் நாகராஜ் said...

உங்களவருக்கு பிறந்த நாள் வாழ்த்துகள். பகிர்ந்த பாடல்கள் அனைத்தும் சிறப்பு.