எல்லோரும் நலமுடன் வாழ வேண்டும்.
Aha! Movie last seen in Nagesh theater :)திருமண பந்தத்தில் எப்படி இணைகிறார்கள் இருவர் என்று
பல நாட்கள் யோசித்திருக்கிறேன்.
நிறைய தம்பதிகளைப் பார்த்திருக்கிறேன்.
எல்லோருமே மனமொத்த முறையில் செயல்படுவதைத்தான் பார்த்தேன்.
அது யாரையுமே தவறாகவோ தப்பாகவோ எடை போடாத பருவம்.
என் மற்றத் தோழிகள் மேல்படிப்புப் படித்துக் கொண்டிருந்தபோது
எனக்குத் திருமணம் கூடி வந்தது.
இவர்தான் உனக்கு நிச்சயைக்கப் படப் போகிறவர் என்ற போது
மனதில் சட்டென்று பதிந்து விட்டது அந்த முகம்.
முதன் முதலாகப் பார்த்த போதே இருவருக்கும்
புரிந்து விட்டது. ஒரு சிறிதளவு சந்தேகம் இல்லை.
நடுவில் பெரியவர்களுக்குள் கடிதப் போக்குவரத்தில்
சலனம் ஏற்பட்டாலும் சரியாகிவிட்டது இரண்டு பக்கமும்
பெருந்தன்மையோடு நடந்து கொண்டதால்.
மனமுதிர்ச்சியில் அவருக்குப் பெரிய பங்கு. என்
சிறு தப்புகளை எல்லாம் பொறுத்துக் குடும்பத்தை
நடத்தினார்.
குறை ஒன்றும் இல்லை. 47 வருடங்கள்
சேர்ந்திருக்க விதிக்கப் பட்ட,வாழ்த்தப் பட்ட வாழ்வு.
சில தம்பதிகளுக்குக் கிடைக்காது.
எல்லோருக்கும் இனிய மணவாழ்வு அமைய வேண்டும்
என்று இறைவனைப்
பிரார்த்திக்கிறேன்.
என் கணவர் எங்கிருந்தாலும் என்னைக் காப்பார்.
குழந்தைகளுக்குத் துணை இருப்பார்
என்றே நம்புகிறேன்.
இணைந்த நாள் தை மாதம் 22 ஆம் நாள் 1966.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
#திருமணம் நற்காரியங்கள் பிப்ரவரி 1
மாமா பாரிஜாதம் மைலாப்பூருக்கு சென்று மாப்பிள்ளையின் பாத அளவு வாங்கி வந்தார்.
காசியாத்திரைக்கு செருப்பு வாங்கிக் கொடுக்க வேண்டுமே.
11 சைஸ் அளவு. கொஞ்சம் அதிசயமாக இருந்தது.
கூடவே பாய், கைத்தடி,குடை,ராமர் பட்டாபிஷேகப் படம் வெள்ளியில்,
எல்லாம் பாரீஸ் கார்னர் போய் வாங்கி வந்தாச்சு,.
என் புடைவைகளுக்கு ஏற்ற வகையில் வண்ண ரவிக்கைகள், மாமியார் வீட்டு வழக்கப்படி
கச்சேரி ரோடு நன்னுஜான் கடையில் தைத்து வந்தது.
நூதன் ப்ளௌஸ் என்று நாங்கள் சொல்லுவோம். எல்லாம்
கல்யாண மண்டபத்துக்குப் போகும் பெட்டியில் குடியேறின.
எனக்கு வேண்டிய குடை ஜிமிக்கி,சாந்து புடவைக்கேற்ற வண்ண வளையல்கள்
புது செருப்பு எல்லாம் புரசவாக்கம் ஹைரோடு
சென்று நானே வாங்கிக் கொண்டேன்.தோழிகளுக்கு என்னைவிட
பரபரப்பு அதிகமாயிற்று.:))
மீண்டும் பார்க்கலாம்.
அன்பின் திருமதி கமலா ஹரிஹரன் அவர்களின்
மகன் மருமகளுக்கு 3 ஆம் தேதி திருமண நாள் வாழ்த்துகள்.
என்றும் நலமுடன் வளமுடன்
குடும்பத்துடன் வாழ்ந்து அன்னை சொல் மிக்க மந்திரம் இல்லை
என்ற வேதத்தை அனுசரித்து சுபமாக இருக்க வேண்டும்.
இறை அருள் அனைவருடனும் கூட வேண்டும்.
தை மாதத் திருமண நாள் அதே வெள்ளிக்கிழமையில் வருகிறது.
57 ஆம் வருட ஆரம்பம். நாங்கள் பெற்ற செல்வங்களும்
அவர்கள் பெற்ற செல்வங்களும்
மற்றும் சுற்றங்களும் நட்புகளும் செழித்தோங்க
இறைவன் அருள்வான்.
10 comments:
வணக்கம் சகோதரி
திருமண நினைவுகளுடன் பதிவு அருமையாக இருந்தது. இது என்றுமே மனதை விட்டு நீங்காத அழியாத நினைவுகள். என்றும் புதிதாக மனதுள் குடியிருப்பது. மிக அழகாக உணர்வுபூர்வமாக எழுதியுள்ளீர்கள். இதை முன்பு படித்ததில்லை. ரத்தின சுருக்கமாக வார்த்தைகளை மடக்கிப் போட்டு திருமண நாள் விபரங்களை நீங்கள் எழுதியிருக்கும் முறை கண்டு பிரமித்து விட்டேன். இந்தக் கலை அனைவருக்கும் வராதது. இப்போது படிக்கும் சந்தர்ப்பம் கிடைத்ததே என நேற்றிரவு ரசித்துப் படித்தேன். இன்று கருத்திடலாம் என வரும் போது அவரைக்காய் பதிவு அதனை முந்தி விட்டது. எனினும் இன்றும் ஒரு தடவை ரசித்துப் படித்து என் கருத்தை பதிகிறேன்.அதற்கேற்ற பாடல்கள் தேர்வும் மிக அருமை.
என்னையும் குறிப்பிட்டிருப்பதற்கு மிகவும் நன்றி. என் மகனுக்கு தாங்கள் திருமணநாள் வாழ்த்துகள் கூறியிருப்பது மிகுந்த மகிழ்ச்சியை தந்தது. உங்கள் அன்பான ஆசிர்வாதங்கள் அவர்கள் வாழ்வை என்றும் நலமுடன் செய்யட்டும். அவர்களிடமும் கூறுகிறேன். இனிய நினைவுகளுடனான பதிவுக்கு மிக்க நன்றி சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
அம்மா அருமையான உங்கள் மண நாள் நினைவுகள். பிரார்த்திக்கிறேன் அம்மா. ஸாரி லேட்!!! ரசித்து வாசித்தேன். யம்மாடியோவ் 10 கஜம் புடவையா!!!!
கீதா
ஊஞ்சலில் அப்பாவின் கமென்ட்!! ஹாஹாஹாஹாஹா சிரித்துவிட்டேன்..
மாங்கல்யாதாரணம் உங்க சைட் போஸ் இருவரை நினைவுபடுத்துகிறது அந்த ஜாடை!!
ஃபோட்டோஸ் இனிமை
முதன் முதலில் பாட்டு எனக்கு ரொம்பப் பிடிக்கும். அந்தப் படமும் ஜாலி படம் தான்...கொஞ்சம் ட்ராமா போல இருந்தாலும் நல்ல டீசன்ட் படம். எனக்குப் பிடித்திருந்தது
கீதா
இந்தப் பதிவு படிச்சிருக்கேன் ரேவதி. நீங்க ஜனவரி 1966 என எழுதியதும் நானும் அப்போத் தான் எஸ் எஸ் எல்சி பரிட்சை என்பதால் உங்க கல்யாணத்துக்கு வரலைனு கருத்துப் போட்டதும் மங்கலாக நினைவுகளில். உங்கள் சிங்கம் என்றென்றும் உங்களுடனேயே இருக்கிறார்.
கமலா ஹரிஹரனின் பிள்ளை, மருமகள் ஆகியோருக்கும் திருமண நாள் வாழ்த்துகள். ஆசிகள்
அன்பின் கமலாமா,
நலமுடன் இருங்கள்.
எப்போதோ எழுதின பதிவை மீள் பதிவாகப்
பதிந்தேன் அம்மா.
தலைவலி அதிகமாவதால்
புதிதாக எழுத முடியவில்லை.
உங்கள் ரசனை என்னை எங்கோ உயரத்தில் வைக்கிறது.
நல்ல வார்த்தைகள் சொல்லப் படும் விதம் மனதை நெகிழ்விக்கிறது.
மிக நன்றி மா. இந்த அன்பு தொடரட்டும்.
அப்போதெல்லாம் மனம் நிறைய வார்த்தைகள்.
அதை அதே வேகத்தில் பதிவுகளில்
நான் ,கீதா சாம்பசிவம், துளசி கோபால்
எல்லோரும் பதிந்தோம்.
நம் தமிழ் ஆசிரியர்களுக்குத் தான் நன்றி சொல்லணும்.
நீங்கள், கீதா சாம்பசிவம், கீதா ரங்கன், ,ஸ்ரீராம்
பதிவு தோறும் பின்னூட்டம் இடுவது மிக மகிழ்ச்சி.
என்றும் குழந்தைகள்,
அவர்களின் குழந்தைகளோடு நலமாக இருங்கள்.
அன்பின் கீதா ரங்கன் மா,
என்றும் நலமுடன் இருங்கள்.
பதிவை ரசித்துப் படித்திருக்கிறீர்கள்.
நன்றி மா.
உற்சாகமான காலங்கள் அவை.
மிகவும் கொடுத்து வைத்திருந்தேன்.
சந்தோஷமாக இருப்பவர்கள் மற்றவர்களையும் மகிழ்விக்கிறார்கள்.
என் கணவர் அந்த விதம்.
ஃபோட்டோ யாரை நினைவுக்குக் கொண்டு வருகிறது?
புக்ககத்தில் அனைவரும் பத்துகஜம் தான் உடுத்துவார்கள்.
எனக்கு அப்போது கொஞ்சம் சின்ன உருவம்.
திணறித்தான் போனேன்.:)
அனைத்து எழுத்தையும் ரசித்துப்
படித்ததற்கு மிக நன்றி மா.
அன்பின் கீதா(சாம்பசிவம்) மா,
என்றும் நலமுடன் இருங்கள்.
இது பழைய பதிவுதானேம்மா. நீங்கள் படிக்காமல் ஏது.
நீங்கள் வரமுடியாமல் போனதே என்று சொன்னதும்,
உங்களுக்குப் பட்டுப் பாவாடை வாங்கி வைத்ததாகச் சொன்னதும் நினைவில்.ஹாஹ்ஹா.
மீண்டும் வந்து பின்னூட்டம் இட்டதற்கு மிக நன்றி மா.
அன்பு அக்கா இந்த பதிவை தவற விட்டு இருக்கிறேன். முன்பு படித்தது மனதில் ஓடுகிறது.
என்ன அருமையான எழுத்து.
பார்க்க , படிக்க பரவசம்.
வாழ்த்துக்கள் அக்கா.
//தை மாதத் திருமண நாள் அதே வெள்ளிக்கிழமையில் வருகிறது.
57 ஆம் வருட ஆரம்பம். நாங்கள் பெற்ற செல்வங்களும்
அவர்கள் பெற்ற செல்வங்களும்
மற்றும் சுற்றங்களும் நட்புகளும் செழித்தோங்க //
நானும் பிரார்த்தனை செய்து கொள்கிறேன்
இறைவன் அருள்வான்.
கமலா ஹ்ரிஹரன் மகனுக்கு இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்.
அன்பின் கோமதி,
வாழ்க வளமுடன்.
பழைய பதிவைத்தான் பகிர்ந்திருக்கிறேன்.
இப்பொழுது நினைவுகளின் ஆட்சியில் இருக்கிறோம்.
குளிர்காலப் போர்வையாக நம்மைக் காக்கிறது
அந்த எண்ணங்கள்.
நீங்கள் உங்கள் அன்பான மொழிகளால்
எனக்கு உயிர் தருகிறீர்கள்.
மிக மிக நன்றி மா.
Post a Comment