Vallisimhan
எல்லோரும் வாழ வேண்டும் .
சிறிது நேரம் படுத்து எழுந்திருந்த ஜானம்மாவுக்கு
ஒரு தெளிவு கிடைத்தது போல நிம்மதி.
ஒரு நடை தன் கிராமத்து தேவதையைத் தரிசித்து வரவேண்டும்
என்ற ஆர்வம் மனதில் கிளம்பியது. வாழைத்தோப்பு அம்மன் என்ற பெயரில்
இருக்கும் மாரியம்மன் ,ஜானம்மாவின் எல்லாத் துயரங்களுக்கும் பதில் சொன்னவள்.
கொஞ்சம் கிலேசம் ஏற்பட்டாலும் அந்த அம்மனைப் போய்ப் பார்த்துவிடுவார்.
நிம்மதி கிடைக்கும் வரை அவளிடம் தன் மன சங்கடங்களைச் சொல்லி
விட்டுத்தான் வருவார்.
பிறகு தன் கடமைகளைத் தொடருவார்.
தன் பக்கத்தில் அயர்ந்து உறங்கும் ஷண்முகத்தை ஆதுரத்துடன்
பார்த்தார். எழுந்து சென்று தண்ணீர் அருந்திவிட்டு மீண்டும் வந்து உட்கார்ந்தார்.
சலனம் கேட்டு எழுந்துவீட்டான் மகன். அம்மா, காப்பி ஏதாவது வேணுமா
நான் வாங்கி வரவா என்றதும் சிரிப்பு வந்துவிட்டது அம்மாவுக்கு.
நாம வீட்டிலதானப்பா இருக்கோம். வாடாமல்லி உள்ளே காப்பி
போட்டுக் கொண்டிருக்கா.
செண்பகம் ஏதோ வேலையா வெளியே போயிருக்கா.
ஏம்மா எனக்கு ஒரு வரியாவது எழுதக் கூடாதா.
நான் வந்து அழைத்துப் போயிருப்பேனே. இப்படி சங்கடத்தில இருக்கியே மா. உனக்கு இது தேவையா.
நம் ஊரில் இல்லாத மருத்துவரா, கஷ்டமோ நஷ்டமோ , வாடாமல்லி
பார்த்துப்பா.
உடம்பு இவ்வளவு தளர்ந்து போயிட்டயே என்று அலமந்து போய்விட்டான்.
நான் நல்லாத்தான் இருக்கேன். வயசானால் வரும் ஓய்ச்சல் தான்.
நீ கவலைப் படாதே. அதற்காக என்னை அழைத்துப் போகணும்னு கட்டாயம்
இல்லை.
ஷண்முகம் வாயைத் திறக்கு முன் ,வாசலில் ஸ்கூட்டர் சத்தம் கேட்டது.
வியர்த்து விறுவிறுத்து குமரன் வந்தான்.
அவன் கையில் பால் பாக்கெட்களும், பழங்களும் இருந்தன.
ஃப்ரிட்ஜைத் திறந்து உள்ளே வைத்து, அண்ணா முகம் கழுவிப் புறப்படுங்க, திருவொத்தியூர்
வடிவுடை அம்மனைத் தரிசித்து விட்டு,
வெளியே சாப்பிட்டு விட்டு வரலாம். நாளை வண்டிக்குச் சொல்லி இருக்கேன்.
உன்னுடன் வருகிறேன் வீட்டை ஒழுங்கு படுத்திவிட்டுத்தான் மறு வேலை
என்று பொரிந்து தள்ளும் தம்பியைப் பாசத்துடன் பார்த்தான் அண்ணன்.
நீ லீவு போட்டு அங்க செய்ய பெரிய அரண்மனை இல்லடா அது. எங்களுக்குத் தேவையும் குறைவு,அதற்கேற்ற பொருட்களும் கொஞ்சம் தான்.என்றான்.
ஆஹா எல்லாம் தெரியும்.
நான் வரத்தான் செய்வேன் என்று அடம் பிடிக்கும் குழந்தை போல
பேசும் தம்பியைப் பார்த்து சிரித்தான்.
சரிடா உன் விருப்பம். இப்போ கோவிலுக்குப் போகலாம் வா. அம்மா, தலையை வாரிக்கோமா.
நல்ல புடவை கட்டு, வா குடும்பத்தோடு போய் வரலாம் என்றான்.
ஜானம்மாவுக்கு தன் தேவதையே அழைத்தது போல சமாதானம் பிறந்தது.
பெரிய கால் டாக்சியை வரவழைத்த குமரன் ,மனைவியைத் தேடினான். இன்னுமா வரல அவ. ராயபுரம் போய் வரேன்னு சொன்னாளே, என்ற வண்ணம் யோசித்தவன், நாம் கிளம்பலாம். அவளை ஆட்டோவில் வரச் சொல்லலாம் என்று கிளம்பினான்.
வடிவுடைய அம்மன் கோவிலில் தாயைப் பார்த்ததும் மனம் நெகிழப் பிரார்த்தித்தாள்.
இந்தக் குடும்பம் தழைக்கட்டும் தாயே. எனக்கு வேற என்ன வேணும் என்றவாறு, தியாகேஸ்வரரையும் வணங்கிவிட்டு,
குமரன் சொன்ன ஹோட்டலில் ,குழந்தைகள் கேட்ட அத்தனையும் வாங்கிக் கொடுத்தான்.
சாப்பிடுங்கடா. சத்தே இல்லாம இருக்கக் கூடாது
என்று சிரித்து சந்தோஷப் படுத்தினான்.
போன்ல சொன்னேன், யேன் இவளைக் காணொம் என்றவாறு வீடு திரும்பினார்கள்.
மணி எட்டரை தான் ஆகி இருந்தது.,
செண்பகம் என்று அழைத்த வண்ணம் உள்ளே போனவனைச் சந்தித்தது
தன் மாமியாரைத்தான்.
மகள் ராயபுரம் அத்தைக்கு உடம்பு முடியாமல் போனதால் அங்கே தங்கிவிட்டுக்
காலையில் வருவாளாம். என்று சொன்னதும் குமரன் மனம் கொதித்தது.
சரி அத்தை நாங்க சாப்பிட்டாச்சு நீங்க இருந்து சொன்னதுக்கு நன்றி
என்று அவளை அனுப்பினான்.
அண்ணா, பால் காய்ச்சி சாப்பிட பால் வாங்கி வந்திருக்கேன். நாளை வியாழன் எமகண்டம்
போனதும் எல்லோரும் சாஸ்திரி நகர் போறோம்.
என்று மங்களவைப் படுக்க வைத்தான்.
அசதி தாங்காமல் , எல்லோரும் பாய்களை விரித்துப் படுத்துவிட்டனர்.
அடுத்த நாளும் விடிந்தது. அனைவரும் குளித்து,மங்களாவையும் அழைத்துக் கொண்டு
புது வீட்டுக் கிளம்பினர்.
அதுவரையில் செண்பகத்தைக் காணோம்.
பிள்ளையைப் பத்திக் கூடக் கவலைப் படலியே என்று வருத்தப் பட்டார் ஜானம்மா.
காலைக் காற்றில் தூரத்தில் நீல வண்ணக் கடல் தெரியும் இடத்தில் வீடுகள்
அமைந்திருந்தன. முதல் மாடியில் அமைந்திருந்த வீடு
அமைப்பாக இருந்தது.அண்ணே நீங்க முதல்ல போங்க. அம்மா கூடப்
போ. அண்ணீ உங்க வாழ்க்கை சுகமாக அமைய வாழ்த்துகள் என்றபடி கீழே
ஸ்கூட்டர் நிறுத்திய இடத்துக்குப் போனான்.
அவர்கள் உள்ளே போய் பத்து நிமிடங்களில் மீண்டும் ஸ்கூட்டர் சத்தம்
கேட்டது. கையில் கொண்டு வந்திருந்த வாழைத்தோப்பு அம்மன் படமும், பிள்ளையார்
படத்தையும் சமையல் மேடையில் வைத்துக் கோலமிட்டாள்.
அழகான ஜோடி விளக்குகளை ஏற்றி வைத்தாள்.
ஆட்கள் வரும் சத்தம் கேட்க எல்லோரும் திரும்பினர்.
வரிசையாக வைக்கப் பட்ட பொருட்களைக் கண்டு ஆச்சரியம் அலையாகத் தாக்கியது.
அண்ணி முதல்ல பாலைக் காய்ச்சுங்க.எல்லாரும் சாப்பிடலாம்.
அண்ணா ,அழகாக் காஸ் கனெக்ஷன் எல்லாம் கொடுத்திட்டியா.
இதோ வரான் பாரு என் நண்பன் என்று கூச்சத்தோடு நின்றிருந்த
செல்வத்தைக் காண்பித்தான்.
பாலும் காய்ச்சப் பட்டது. மனதார வாழ்த்திக் கொண்டே பாலைக் குடித்தனர்.
குமரன் கொண்டுவந்த மின்விசிறிகள் இரண்டு படுக்கை அறையிலும் கூடத்திலும்
பொருத்தப் பட்டன.
அடுத்து வந்தது புது தொலைக்காட்சிப் பெட்டி.
அண்ணா ஒண்ணும் சொல்லாத. நீ அனுப்பின பணம் அப்படியே இருந்தது.
பயிரறுவடை ஆன பணத்தைச் செலவழிக்கவில்லை.
இதோ அப்பா ஆசியா உனக்கு வந்துவிட்டது
என்று சொன்ன தம்பியைக் கண்ணீரோடு தழுவிக் கொண்டான்
ஷண்முகம்.
சிலையாக நின்ற அம்மாவின் கால்களில் மொத்தக் குடும்பமும்
விழுந்து ஆசி வாங்கிக் கொண்டது.
வாடாமல்லி மங்களாவுக்கு , தான் கொண்டு வந்த தாழம்பூவை
வைத்துப் பின்னினாள். பக்கத்திலிருந்த உணவுவிடுதியிலிருந்து காலை உணவு வாங்கி வந்த குமரன், அண்ணி நீங்க சமைத்து நான் சாப்பிடணும், மத்த வேலைகளை நாங்கள்
பார்த்துக் கொள்ளுகிறோம் என்ற போது,
வாடாமல்லி திக்கு முக்காடிப் போனாள்.
மாயாபஜார் படம் போல எல்லப் பொருட்களும் அதற்கான அலமாரிகளில் அமர்ந்தன.
பிள்ளைகளின் யூனிஃபார்ம் அடுத்த நாள் தான் வரும் என்பதால், திங்களிலிருந்து
பள்ளி போவதாக ஏற்பாடு.
அண்ணி,நீங்களும் அம்மாவும் இங்க இருக்கிற எல்லாக் கோவிலுக்குப்
போய்வரலாம், கடைகண்ணி, டாக்டர் எல்லாம் இருக்காங்க.
நடப் பயிற்சிக்கு பீச் இருக்கு என்று அடுக்கின கொழுந்தனைப்
பார்த்துச் சிரித்தாள் அண்ணி.
அப்ப நீங்களும் குடும்பத்தோட இங்கே இருக்கலாம்.
அதுவும் நடக்கும் அண்ணி. தண்டையார்ப் பேட்டையைவிட்டுக் கிளம்ப வேண்டிய நாள் வந்துவிட்டது என்று மலர்ந்த முகத்துடன் நிற்கும் குமரனை இன்னோரு லக்ஷ்மணனாகவே
பார்த்தாள்.
மாமியார் முகம் முழுவதும் மகிழ்ச்சி.
இனி என்ன வந்தாலும் தன் தாயாக அவளைப் பார்த்துக் கொள்ள வேண்டிய
பொறுப்பு அவள் மனதில் இறங்கியது.
செண்பகத்தின் மனமும் குளிர்ந்து நல்லுறவு நீடிக்க அம்மனே அருள்வாள்
என்ற உறுதியும் தோன்றியது.
அனைவரும் வாழ்க வளமுடன்
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏