Vallisimhan
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
குழுவினர் கலந்து பேசி, இன்னும் ஒரு பத்து நாட்கள் இந்தியாவில் தங்க அனுமதி வாங்கிக் கொண்டு
சென்னைக்குக் கிளம்பினார்கள்.
இன்னும் ஒரு தடவை மொஹஞ்ச தாரோவையும் , சேர்த்து
புதிதாக வந்திருக்கும் கருவிகளுடன் வந்து ஆய்வை மேற்கொள்ளலாம். அதற்கு உரிய
மாதம் டிசம்பர், உஷ்ணம் குறைவான மாதமாக இருக்கும் என்ற தீர்மானத்துடன்,
மாரிஷியஸ் உறுப்பினர்கள் மட்டும் இந்தியக் குழுவுடன் கிளம்பினார்கள்.
எல்லோரும் கடைசியாக ஒரு முறை ஒவ்வொரு இடத்திலும் தமக்கு ஏற்பட்ட
கண்டுபிடிப்புகளை ஒத்து நோக்கி மகிழ்ந்த வண்ணம், புது தில்லி வந்து
அங்கிருந்து சென்னைக்கு ரயிலேறினர்.
இங்கே சென்னையில் செல்லிப் பாட்டிக்கு இருப்புக் கொள்ளவில்லை.
இதென்ன இந்தப் பொண்ணு போனாப் போன இடம் இருக்கே.
முன்ன மாதிரி உனக்கு போன் கூட பேசலியே
அப்படி என்ன பெரிய ஆராய்ச்சி. இவனாவது போயிருக்கணும்.
ஏதோ வனாந்தரத்துல அத்தனை ஆண்பிள்ளைகளுக்குச் சமமா
இவளால ஈடு கொடுக்க முடியுமா.
இத்தோட மூட்டை கட்டச் சொல்லு. போறும் எல்லாம்
என்று பொரிந்து கொண்டிருந்தாள்.
அம்மா இன்னிக்கு இப்போ தபால் அனுப்பி இருக்கா பாரு. எத்தனை அழகான
இடங்கள் இதோ அந்த பத்ம நாபன் மாமா. அதான் பொறுப்பாப் பார்த்துக் கொள்கிறேன்னு அழைத்துக் கொண்டு போனாரே.
அடுத்த படங்களைப் பார்த்துக் கொண்டு வந்த செல்லிப்பாட்டி, இது யாரு
,சீதா பக்கத்தில உசரமா நிக்கறானே.
அவர்கள் எல்லாரும் மாரிஷியஸ்லேருந்து வந்தவர்கள் அம்மா.
வேற ஒரு பொண்ணையும் காணமே
அடுத்த கேள்வி.
எல்லாம் பாண்ட், ஜாக்கெட் போட்டுக் கொண்டு இருக்கிறார்கள்
அம்மா, வெளினாட்டுக்காரர்கள்..
இதோ லெட்டர் எழுதி இருக்கிறாள் பாருங்கோ உங்களுக்குத் தான்.
பாட்டி உடனே படிக்க ஆரம்பித்தார், பாட்டி இத்தனை அழகான
இடத்தை நான் பார்த்ததே இல்லை.
ஏதோ பழைய ராஜாங்கம் இங்க இருந்திருக்கு.
பாதி இடங்களைத் தான் ஆராய்ந்து முடித்திருக்கிறோம்.
லேசில முடிக்கக் கூடிய வேலை இல்லை இது.
உன்னுடன் முக்கியமாகச் சொல்ல ஒரு விஷயம் இருக்கு. நேரில் சொன்னால்
ஆச்சரியப்படுவே.
என் பக்கத்துல ஒருவர் நிக்கிறார் பார்த்தியா. அவரைப் பார்த்தியா.
அவரைப் பத்திதான்.
தயாரா இரு.
அம்மா அப்பாவுக்கு என் உம்மா சொல்லிடு.
நாளை மறு நாள் அங்கே இருப்பேன்
என்று எழுதி இருந்தாள்.
அத்தேரிமாக்குன்னு பிடித்துக் கொண்டார் பாட்டி.
தானாப் பாத்துண்ட மாப்பிள்ளையோடு வருகிறாளா இந்தப் பொண்ணு.
என்ன விஷயம் புரியலையே.
யாரூ, என்ன குடும்பம், அவளுக்கு ஒத்துக்குமா.
சைவமா,அசைவமா .இதுக்கு என்ன தெரியும்னு இப்படி எழுதி இருக்கு.
தேவகிக்கு லேசாகத் தலைவலிப்பது போலிருந்தது.
அசட்டுப் பெண். கடிதத்தில் இதை எல்லாம் எழுத வேண்டூமா.
இனி ஓய மாட்டாரே என்றபடி கணவரைப் பார்த்தாள்.
அவர் கண்ணல் சைகை செய்து தன் கையில் இருந்த கடிதத்தைக் காண்பித்தார்.
தேவகியின் கண்கள் விரிந்தன.
வயிற்றில் ஏதோ சங்கடம் செய்தது.
அம்மா சூடாக் காப்பி கொண்டுவரேன்.
நீங்கள் ஊஞ்சலில் உட்காருங்கள்
நம்மை மீறி ஒன்றும் நடக்காது. நம் சீதா நல்ல சூடிகையான பெண்.
இப்போதையப் பெண்கள் போல நாளுக்கு ஒரு உடை உடுத்தி சுற்றுபவள் இல்லை.
படிப்பிலும், சரித்திர ஆராய்ச்சியிலும் தான் அவளுக்கு
முனைப்பு.
எல்லாம் நல்லதுக்குத் தான் நடக்கும்
என்றபடிக் கணவரை உள்ளே வரச் சொல்லி சைகை காண்பித்து
சமையலறைக்குச் சென்றாள்.
என்ன விஷயம் சொல்லுங்கோ எனக்குப் பயமா இருக்கே
என்றவளைப் பார்த்து
சிரிப்பு வந்தது ரங்கனாதனுக்கு.
நீயும் ஒரு போஸ்ட் க்ராஜுவேட் தானே.
பட்டிக்காடு மாதிரி கவலைப் படறியே.
அவளுக்கு அந்தப் பையனைப் பிடித்திருக்கு. அவனும் அப்படித்தான் நினைக்கிறான்
போலிருக்கு.
அந்தப் பையன் ரகுராமன் குஜராத்திலிருந்து போன ஜெயின் குடும்பம்.
சைவம் தான்.
அவன் பெற்றொருக்கு ஏற்கனவே சொல்லிட்டானாம். அவர்கள் இவன் அங்கு போனபிறகு இங்கே நம்மைச் சந்திக்க வருகிறார்கள்.
சரி சொல்ல வேண்டியதுதான் நம் கடமை.
மற்றவை தன்னைப் போல நடக்கும் என்று கடிதத்தைக் கொடுத்தார்.
உடல் தூக்கிவாரிப் போட்டது. தேவகிக்கு. ஜெயின் பையனா. அவர்கள் கடவுளே வேற
ஆச்சே. நீங்க இப்படி அமைதியாக இருக்கிறீர்களே.
அம்மாவை என்ன சொல்லி சமாளிப்பேன் என்று,முணுமுணுத்தபடி,
தயாரித்த காப்பியை எடுத்துக்
கொண்டு கூடத்துக்கு வந்தாள்.
என்னடிம்மா ரெண்டு பெறும் மந்திராலோசனை செய்தீர்கள். என்னதான் செய்யப் போகிறா சீதா.
நாளைக்குக் காலையில் வருகிறார்கள் அம்மா. மற்றவர்கள் தாஜ் ஹோட்டலில் இறங்கிக் கொள்வார்கள்
இவள் இங்கே வந்துவிடுவாள் என்று விவரம் சொன்னாள் தேவகி.
ஆரத்தி கரைச்சு வைக்கச் சொல்லி இருக்காளோ
என்று சிரித்த மாமியாரைப் பார்த்து அதிர்ந்து விட்டாள்
மருமகள். அப்படி எல்லாம் ஒண்ணும் இல்லம்மா.
எப்படி வேணா இருக்கட்டும். அவள் சந்தோஷம் தான் முக்கியம்.
நீ கவலைப் படாதே நான் பார்த்துக் கொள்கிறேன், என்று ஆதரவாகத் தேவகியின் முதுகைத் தட்டிக் கொடுத்தாள்.
தன் மாமியாரின் தீர்க்க புத்தியைப் பார்த்து ஆனந்தப் பட்டாள் தேவகி.
No comments:
Post a Comment