Vallisimhan
1994 November. 24 ஆம் தேதி எடுத்த படம். |
ஒரு செப்டம்பர் 27 ஆம் நாள் 1960இல் அப்பாவின் அப்பா இறைவனடி சேர்ந்தார்.
அதற்கு முன் வருடம் தான், மதுரையிலிருந்து வண்டி எடுத்துக் கொண்டு
நவ திருப்பதிகளையும், திருக்குறுங்குடியையும் தரிசித்து வந்தோம்.
இனிமையான பயணம். அதன் பிறகு சதாபிஷேகம் நடந்தது.
பாட்டியின் உறவுகளும், தாத்தாவின் உறவுகளும் நிறைந்து மிக மகிழ்வாகக் கொண்டாடினோம்.
பாட்டி தனக்கு வந்து விலை உயர்ந்த புடவைகளை இரண்டு பெண்களுக்கும், மூன்று மருமகள்களுக்கும் கொடுத்தார்.
மிகவும் மதிக்கப் பட்ட மனுஷி. தாத்தாவின் மனைவி என்பதினாலா ,அவளுக்கே இருந்த ஆளுமையாலா தெரியவில்லை.
மன உறுதி மிகப் படைத்தவர்.கம்பீரம். அந்த கெம்புத் தோடு காதில் ஆடும் அழகே தனி.
ஒரு வளையத்தில் கட்டின மாதிரி இருக்கும்.
கண்ணில் குறும்பு எப்பொழுதும் உண்டு. வாக்கில் சாதுர்யம்.
கணவரின் சகோதரி தொழிலதிபர் மனைவி என்பதால், அவர் எத்தனை பேருக்கு வேலை வாங்கிக் கொடுத்திருப்பார் என்பதற்குக் கணக்கே தெரியாது.
அப்பா அந்த வட்டத்தில் மாட்டவில்லை.
தன் தந்தை போலவே தபால் துறையில் இருந்தார்.
அதில் அவருக்கு நிம்மதியும் திருப்தியும் இருந்தன,.
தாத்தாவுக்கு உடம்பு முடியவில்லை என்றதும், அவசரமாகத் தன்னை ரிலீவ் செய்யச்
சொல்லி மதுரைக்குத் தந்தி அடித்து, திண்டுக்கல்லிலிருந்து
பழங்கா நத்தம் வந்தோம்.
39 வயது அப்பா முகம் சிவக்க அழ்ததை அன்றுதான் பார்த்தேன்.
மாத காரியங்களைச் செய்து வைக்க,மதுரையிலிருந்து
காளி என்கிற காளமேகம் தான் வரவேண்டும்.
ஓராண்டு பூர்த்தியானதும் மஹாலயம் வந்தது.
அம்மாவுக்கு எல்லா சிராத்த காரியங்களும் அத்துபடி.
பாட்டியும் எங்களுடன் இருந்தார்.
அந்த ஊரில் மருந்துக்குக்கூட ஒரு அதிதி கிடைக்க மாட்டார்.
ஊரைவிட்டுத் தள்ளி,கொடைக்கானல் ரோடு பக்கத்தில் இருந்தோம்.
அப்பாவுக்கும் ஒரு பள்ளிக்கூட வாத்தியார் கிடைத்தார்.
சிராத்த தினத்துக்கு முன் நாகல் நகருக்குச் சென்று
அவரை முறையாக அழைத்து அடுத்த நாள் வரச் சொல்வார்.
அவரும் நாங்கள் அங்கே இருந்தவரை எல்லாக் கிரமங்களுக்கும்
வந்து சென்றதை நன்றியோடு நினைக்கிறேன்
பாட்டி உட்கார்ந்தபடி வேலைகள் செய்வார். காய்கறி நறுக்குவது மட்டும் அவருக்கு அம்மா
கொடுப்பார்.
அடுப்பு விறகு காயவைத்து, விராட்டி, சிராய்த்தூள் வாங்குவது சின்னத் தம்பியின் பொறுப்பு..
பெரியவன் அப்பா வேஷ்டியத் தோய்த்து வைப்பான். உலர்த்துவதெல்லாம் அம்மாதான்.
காலையில் குடித்த காப்பியுடன் அப்பா காத்திருக்க
வருவார் காளி ஸ்வாமி 11 மணிக்கு.
பிறகு குளித்து ஸ்ராத்தம் முடிய மதியம் ஒன்றரை ஆகிவிடும்.
ஈரத்தலையோடு புகையுடன் போராடிய அம்மாவுக்குத் தலைவலி
நிச்சயம்.
நாங்கள் பள்ளியிலிருந்து வரும்போது ,பாட்டிதான் வரவேற்பார்.
கை கால் அலம்பிண்டு தாத்தா படத்தை சேவிங்கோ.
அம்மா வந்து எங்களைப் பாட்டியையும் வணங்கச் சொல்லுவார்.
ஆசிகளை மனமார வழங்குவார் பாட்டி.
பிறகே, தேகுழல், அப்பம், சுகியன், வடை,எள்ளுருண்டை
எல்லாம் கிடைக்கும்.
மிளகு காரத்தோடு ரசம் சாப்பிட்டு ரங்கனுக்கு எப்பவும் புரைக்கேறும்.
பாயாஸம் சாப்பிட்டதும் தான் அடங்கும்.
அம்மா காக்கா இன்னும் கத்தறது மா. கொஞ்சம் பட்சணம் குடேன் என்பான்.
முரளி, டேய் ரங்கலாலா உன்னோட வடையைப் போடு. அதுதான் வேணுமாம்.
என்று கேலிகாட்டுவான்.
அப்பாவும் தன் தந்தைக்கு 36 வருடங்கள் சிரத்தையுடன் செய்தார்.
தம்பிகள் தொடர்ந்தனர்.
இப்போது தம்பியின் மகனும், எங்கள் பிள்ளைகளும் செய்கிறார்கள். பெரியோர் ஆசிகள் அனைவரையும் அடையட்டும். வாழ்க வளமுடன்.
No comments:
Post a Comment