Blog Archive

Wednesday, December 30, 2009

சென்னையில் பசுமை தேடி....

சென்னை ஹார்டி கல்சுரல் சொசைட்டிக்கும் எங்களுக்கும் நீண்ட நாட்கள் பந்தம் உண்டு.
இருப்பத்தாறு வருடங்களாக அங்கிருந்து செடிகள் கொண்டு வருவதும், செம்மண் , உரம் எல்லாம் வாங்கி வருவோம்.

நடுவில் மகன் பெங்களுருவில் வசித்த
நாட்களில் அங்கே இந்தோ அமெரிக்கன் சொசைடியில் இருக்கு,கள்ளி செடிகளும், கண்ணுக்கு இதமான வண்ணங்களோடு இருக்கும் பூச்செடிகளும் வாங்கி வந்து நட்டு அவை பெரியதாகி மீண்டும் சொசைட்டிக்கே விற்று விடுவோம்.
நேற்று மீண்டும் அங்கே போகவேண்டிய அவசியம்.
சிங்கம் சார் அவர் வேலையைப் பார்க்கப் போய் விட்டார்.
நான் வண்டியை விட்டு வெளியே வந்து அந்தப் பசுமையை அனுபவித்துக் கொண்டிருந்தேன்.
அனுமதி வாங்கிக் கொண்டால் இங்கேயேதினசரி நம் நடைப் பயிற்சியை வைத்துக் கொள்ளலாம் என்று தோன்றியது.



இதென்ன மரம் என்று தெரியவில்லை. பலாவோ?




நம்மை வீட்டில் இருப்பதை விட இன்னும் ஆரோக்கியமாக இருக்கும் தாவரங்கள்.
தண்ணிர் விடும் பெரியவர் எதோ பேசியபடி மண்ணைக் கெட்டிப் படுத்திக் கொண்டிருந்தார்.


இது எங்க வீட்டு அந்தூரியம் செடி. பக்கத்தில் மீனாட்சி இல்லாத தொட்டி.





கார்த்திகைக்கு வந்துவிட்ட மாங்கனி. மார்கழியில் சுவாமிக்கு அர்ப்பணம் செய்தாச்சு.இது ஒட்டு மாம்பழம், ''இமாம் பசந்த் '' என்று பெயர். ஸ்ரீரங்கம் தோட்டத்திலிருந்து வாங்கி வந்தது.
இன்று புத்தகக் கண்காட்சியும் ஆரம்பித்துவிடும்.
வலை நண்பர்கள் அனைவரின் புத்தகங்களும் கண்ணாரக் காணலாம். இன்று பாபாசி , ஒருங்கிணைப்பாளர் சொல்லியது போல, நம் தமிழ்ப் புத்தகங்கள் தான் விலை குறைவாம். முடிந்த அளவு வாங்கலாம்.
புதிது வாங்குவதற்கு முன், இருக்கும் புத்தகங்களை முடிக்க வேண்டும்.
திரு பாரதி மணி அவர்களின் பலநேரங்களில் பல மனிதர்களை ஆரம்பித்திருக்கிறேன்.
அருமையான சம்பவங்கள் சுவையாகக் கூறப்பட்டிருக்கின்றன.
அனைவருக்கும் வரும் புத்தாண்டு இனிமையும் ஆரோக்கியமும் செழிப்பும் வழங்க இறைவன் அருள் புரியட்டும் .






எல்லோரும் வாழ வேண்டும்.

Saturday, December 26, 2009

நெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலே நீராடி...

மார்கழித் திங்கள் பிறந்து நாட்களும் ஓடி விட்டன . இதோ இன்று வைகுண்ட பெருமாளின் ஏகாதசியும் சேர்ந்தது.

ஆண்டாள் இரண்டாவது பாசுரத்திலே கூறி விட்டாள் .நெய்,பால் சாப்பிட மாட்டோம் என்று. அதிர்ஷ்டவசமாக குடும்ப வைத்தியரும் உப்பைக் குறைக்கக் சொல்லிவிட்டார். :))
அதனால் நெய்யில்லாமல், உப்புக் குறைவா போட்டு மிளகு சீரகம்,இஞ்சி மட்டும் சானோலால வறுத்துப் போட்டு ,
தினம் அவருக்குக் கை காண்பித்துக் கொண்டிருக்கிறேன்.
பெரிய சிங்கம் சாப்பிட மறுக்கவில்லை.
ஆனால் எங்க வீட்டுக்கு உரிய சிங்கம் இதெல்லாம் பொங்கலா... என்று விச்வாமித்திரர் போலக் கை காண்பித்துவிட்டார் .:(( முந்திரிப்பருப்பு வேற இல்லையே :)




ஸ்ரீ ஆண்டாள்


ஸ்ரீ தாயார்

சரி,மையிட்டு எழுதோம்னு சொன்னாளேன்னு அதையும் செய்யறதில்ல. எப்பவுமே:)
செய்யாதன செய்யோம் ,தீக்குறளைச் சென்றோதோம்னும் சொன்னாங்க.
அவங்களுக்கு அது ஒண்ணும் சிரமமில்லை. எல்லோரும் ஊர் முச்சூடும் தோழிகள். நமக்கு அப்படியா.

இருந்தாலும் புறம் கூறாமல் இந்தப் பதிவை முடித்து விடுகிறேன்.
இன்று பொதிகையிலும் ,ராஜ் டிவியிலும்,ஜயா டிவியிலும் பரமபத வாசல் திறப்பதைக் கண்டு
நல்ல தரிசனமும் செய்தாச்சு.
அதிசயமாகத் தூக்கம் கண் விழித்தேனே என்று என்னையெ மெச்சிக் கொள்கிறேன்.
ஏதோ பெருமாளா திரு
உள்ளம்
வைத்து வானொலி அலார்ம் அடித்தது. அது என்னிக்கோ வைத்த அலார்ம்.
இன்னிக்குத் திருப்பாவை சொல்லி எழுப்பிய ஆண்டாளாக
செயல் பட்ட என் பழைய ரேடியோவுக்கு வணக்கங்கள்.
காலையிலெ எழுந்து பார்க்க முடியாதவர்கள் நாள் பூராவும் ஓடும் செய்திச் சானல்களில் வைகுண்ட ஏகாதசியைக் கொண்டாடலாம்.
இன்று முழுவதுமாவது
கண்ணன் தியானம் மனதில் இருக்க அவனையே பிரார்த்தித்துக் கொள்ளுகிறேன்.

எல்லொருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள். நலமாக வளமாக வாழ்வோம்.













பலராம ஸ்ரீ கிருஷ்ணன்


ஸ்ரீ முரளிதரன் .

பின் குறிப்பு.
இன்று நம் தோழி,சகவலைப் பதிவர்
திருமதி ராமலக்ஷ்மிக்குப் பிறந்த நாள். அவர்கள் சுற்றத்தோடும்,நட்போடும் சீரும் சிறப்புமாக வாழ இறைவனைப் பிரார்த்திக்கிறேன்
ஹாப்பி பர்த்டே ராமலக்ஷ்மி !


















எல்லோரும் வாழ வேண்டும்.

Friday, December 25, 2009

சென்னை -நான்கு லஸ் சாலையில் பூமியின் நேரம்

டிசம்பர் இருபத்தி மூன்றாம் தேதி வழக்கம்போலத்தான் சென்றது. சாயந்திரம் நான்கு மணிவரை. வந்திருந்த உறவினர்களும் கிளம்பினார்கள், அந்தக் சத்தம் பெரிதாகக் கேட்டது.
உடனே ஒரு தீய்ந்த வாசனை. மின்சக்தியும் போய்விட்டது.


அதான் இநவரட்டார் இருக்கு. மின்சாரம் வந்துவிடும் என்று அதன் பட்டனைத் தட்டினால் ஒ ''என்று காத்த ஆரம்பித்துவிட்டது. இதென்னடா இன்னிக்கு வந்த வேதனை என்று சலித்தபடி,சரி, போ . தானே சரியாகிவிடும் என்று ,ஒரு பொன்மாலைப் பொழுது என்று பாடிக் கொண்டே வாசலில் செடிகள் பக்கத்தில் நாற்காலியைப் போட்டுக் கொண்டு ,

என்ன இருந்தாலும் இந்தக் காற்றை உள்ளே அனுபவிக்க முடியுமா என்று நினைத்தபடி தி.ஜானகிராமனின் 'அன்பே ஆரமுதே' நாவலை விட்ட இடத்திலிருந்து படிக்க ஆரம்பித்தேன்.
குளிர் காலமாச்சே :) இருட்ட ஆரம்பித்துவிட்டது. கொசுக்கள் படையெடுப்பும் ஆரம்பிக்க, உடல் பயிற்சிக்குப் போயிருந்த சிங்கமும் வந்தார். ஏன் இருட்டில உட்கார்ந்திருக்க ? என்று கேட்டபடி உள்ள போய் விளக்கு ஸ்விட்ச் ஒவ்வொன்றாகப் போட்டுப் பார்த்துவிட்டு,, ஒ!பவர் இல்லையா. வந்துடும் அப்படினுட்டுப் பக்கத்து வீடுகளைப் பார்த்தார்.
ஒரே ஜகஜ்ஜோதியாக விளக்குகள் சுற்றிலும்.

அட, நம்ம வீட்ல தாம்மா இல்ல.''ஈ.பி '' கூப்பிடு என்று விட்டுக் குளிக்கச் சென்றார்.
அங்கயும் வெளிச்சம் இல்லாததால் ,
தேடும் படலம் ஆரம்பித்தோம்.
மெழுவர்த்தி எங்கே, டார்ச் எங்கே.
சாமான் வச்ச இடத்தில இருந்தா இந்தப் பிரச்சினை கிடையாது . தீப்பெட்டில இருந்து ,தேட வேண்டியதா இருக்கே என்ற முனுமுனுப்பு காதில் விழுந்தாலும் நான் நகருவதாக இல்லை.

இருட்டில மோதிக்க வேணாம் என்கிற நல்ல எண்ணம்தான்.!
197 அழைத்து, மாறின லஸ் (கம்ப்ளைன்ட்)நம்பரை அழைத்தால் அவர்கள் இதோ வருகிறேன்னு சொல்லி ஒரு மணி கழித்து வந்தார்கள்.
அப்போதான் புரிந்தது இந்த மின்வெட்டு மாயம். எங்க வீட்டிலிருந்து மூன்றாவது வீட்டை இடித்துவிட்டுப் புதிதாகக் கட்டும்போது, எங்கள் லைனிலிருந்து பிரித்துக் கேபிள் கொடுத்திருக்கிறார்கள். அது நம் மின்சாரத்தைத் துண்டித்து இருக்கிறது
இந்த நேரத்தில் யாரோட சண்டை போடுகிறது என்று நொந்தபடி ,

வந்த லைன்மேன் சொன்னபடி , இவர் பைக்கை எடுத்துப் போய் எக்ஸ்ட்ரா கேபிள் லைன் வாங்கி வந்தார். மணி ஒன்பதரை.
அதற்கு மேல் அவர்கள் வேலை ஆரம்பித்து நடுவில் காப்பி ,குடிக்கப் போய், மின்சக்தி வந்த பொழுது ,மணி பத்தரை.

அதற்குத்தான் இந்தத் தலைப்பு வைத்தேன். நாமளும் ஒரு ஆறு மணி நேரம் இருட்டில இருந்து பூமி நேரம் கொண்டாடி பூமியின் வெப்பத்தைத் தணித்து விட்டோம் என்று:)



எல்லோரும் வாழ வேண்டும்.

Thursday, December 24, 2009

அனைவருக்கும் கிருஸ்துமஸ் தின வாழ்த்துகள்

அன்பின் வழி அமைதியாக அமையப் பிறந்த
அருள் நிறை குழந்தை
பிறந்த நாள்,
வாழ்த்துகள் நண்பர்கள்,அன்பர்கள் அனைவருக்கும்.








எல்லோரும் வாழ வேண்டும்.

Wednesday, December 23, 2009

கள்ளிக்காட்டுப் பள்ளிக்கூடம்--டிவி தொடர்

தொலைக்காட்சியில் திரைப்படங்கள் அவ்வப்போது பார்ப்பது வழக்கம்.
இந்திப் படங்களில் அவ்வளவு ஈடுபாடு இல்லை. மருமகள் ஏதாவது சிபாரிசு செய்வார் .அப்போது கண்டு களித்துவிட்டு மீண்டும் பழைய
படி பழைய ஆங்கிலப் படங்களுக்கும், நினைவில் நிற்கும் தமிழ்ப் படங்களைப் பார்ப்பதே பழகிவிட்டது.
அப்போதுதான் விஜய் தொலைக்காட்சியில், ''கள்ளிக்காட்டுப் பள்ளிக்கூடம்'' பற்றி முன்னோட்டம் கொடுத்துக் கொண்டிருந்தார்கள்.

எங்கே பார்த்டலும் ஒரே கிராம மணம்னு படங்கள் எடுப்பது போல இதுவும் இன்னோரு சீரியல் என்று நினைத்தேன்.
ஆனால் அந்தப் பாடல் வரிகள் மிகவும் அருமையாக அர்த்ததோடு இருந்தன.
''படி படிபடி, தங்கப் பயலே படிதாண்டினாக் கவலை இல்லே''
என்று இசையோடு நல்லத் தமிழ். அதைக் கேட்டதும் பார்த்துத்தான் செய்வோமே என்று ஆவலோடு முதல் எபிசோட் பார்த்தென்.
கப்' என்று பிடித்துக் கொண்டார்கள் காரியான் பட்டிப் பசங்கள். ஆறு பசங்களும் மூன்று பெண்களும் பத்தாவது தேறின கையோடு, தேனியில் இருக்கும் மேல்நிலைப் பள்ளிக்கு ப்ளஸ் டூ படிப்புப் படிக்க ஆசைப் படுகிறார்கள்.
ஆனால்
இரு ஊர்களுக்குமான பகை அவர்களைப் பொசுக்கும் அளவுக்கு வளர்ந்திருக்கிறது. தேனி நபர் ஒருவரை, காரியா பட்டி நபர் தாக்கிக் கொன்றுவிட்டு சிறைவாசம் அனுபவிக்கிறார்.
கொலையுண்டவர் மகனும் தேனிப் பள்ளியில் தான் படிக்கிறான்.
காரியா பட்டிப் பையன்களில் ஒருவனான சக்தியின் அப்பாதான் சிறையில் இருப்பது.
இது ஒரு காரணம், இன்னோரு நிகழ்ச்சியாக,
ஏதோ ஒரு வேகத்தில் பத்துப் பதினைந்து வருடங்களுக்கு முன்னால் காரியாபட்டி மக்கள் தேனி குமரகுருபரர் மேல்நிலைப் பள்ளிக்குத் தீ வைத்துவிடுகிறார்கள். அதையும் காரணம் காட்டி,
இரண்டு ஊருக்கும் தீராப்பகை.

இதுவரை 45 நாட்களுக்கான பாடங்களையும் பார்த்துவிட்டேன். நடுவில் இ]ரண்டு மூன்று எபிசோட் தவற விட்டிருப்பேன்.
இந்த சீரியலில் என்னை மிகவும் கவர்ந்தது, காரியாப் பட்டிப் பையன்களாக வரும் பதின்ம வயசுப் பிள்ளைங்களின் பாத்திரப் படைப்பும், மன நலன்களும்,அவர்கள் உண்மையாகவே பாடு பட்டு நடிப்பதும்தான்.

நகைச்சுவைக்கும் பஞ்சமில்லை. எல்லாமெ எளிமையாக இனிமையாக இருக்கின்றன.

''டூரிங் டாக்கீஸ் என்ற நிறுவனம் இந்தத் தொடரை எடுப்பதாகத் தெரிகிறது.
ஒரு ஆர்ப்பாட்டம் இல்லாமல், அசட்டுத்தனமான வசனங்கள் இல்லாமல்,

மனதோடு ஒன்றிப் போகிறது.
ஒருத்தர் கூட அலட்சியமாக நடிக்கவில்லை. அத்தனை ஈடுபாட்டோடு கண்முன் நடப்பது போல காட்சிகள் அமைக்கப் பட்டிருக்கின்றன.
இந்தக் கால இளைஞர்களுக்கு வேடிய ஒற்றுமையும்,தோழமையும் பளிச்சிடும்,அதே சமயம்,அந்தவயதிற்கான சஞ்சலங்கள் எல்லாம் அழகாக எடுத்திருக்கிறார்கள்.
முடிந்தால் நீங்களும் பாருங்கள்.
விஜய் தொலைக் காட்சியில் இரவு ஏழரை மணிக்கு வாரநாட்களில் ஒளி பரப்பாகிறது.



எல்லோரும் வாழ வேண்டும்.

Thursday, December 17, 2009

சித்திரராமன்...10 சுந்தரகாண்டம்----மீள்பதிவு


மழைக்காலம் முடிகிறது. நான்கு மாதங்கள் கடந்துவிட்டன்.குகையில் காலத்தைத் தள்ளி விடுகிறான் ராமன்
சீதை நினைவில்,
முள்ளாக இருக்கிறது அவனது உள்ளம் சீதையைப்
பற்றிய கலவரத்தில்.
'எப்படி துயர்ப் படுகிறாளோ
'நான் அவளை மறந்துவிட்டென் என்று துடிக்கிறாளோ.
ஒரு சிறு பிரிவு கூடத் தாங்காமல் கோபிப்பாளே..
என்னுடன் இருக்கத்தானே வனம் வந்தாள். ஒரு சூரிய குலத் தோன்றலாக நடக்காமல் பெண்டாட்டியைக் களவு கொடுத்தேனே.'
என்னவெல்லாமோ புலம்புகிறான்.
அவனைச் சமநிலைப் படுத்த லட்சுமணன் செய்ய்யுமத்தனை காரியங்களும் விரயம்.
அண்ணனின் துயர் கண்டு ,
சுக்ரீவன் அலட்சியத்தின் மேல் சினம் பொங்குகிறது.
சொன்ன வார்த்தையை மீறியவனை என்ன செய்கிறேன்
பபர் என்று கிளம்பியவனை ராமன் அறிவுரை கூறி
நிறுத்துகிறான்.
''லட்சுமணா ,அவனால் தான் இந்த நேரத்தில் உதவ முடியும்.
அவனைக் கொல்ல வேண்டாம்.
இந்த ஒரு வார்த்தை சொல் போதும்.
''சுக்ரீவா, வாலி சுவர்க்கம் சென்ற வழி இன்னும் திறந்துதான் இருக்கிறது''
இது சொல் போதும்.வந்துவிடு என்கிறான்.''
லட்சுமணனும் சுக்ரீவனின் அரண்மனைக்கு விரைந்து
அவனை விளிக்கிறான். அவன் கை வில் அதிர்கிறது.
வில்லின் கடினமான ரீங்காரம் சுக்ரீவனின் போதை நிறைந்த காதுகளில் கூட விழுகிறது.
பயந்து பதுங்குகிறான்.
அண்ணன் மனைவி தாரையை அந்தப்புரத்திலிருந்து அனுப்புகிறான்.
அவள்தான் சமயோசிதமாக நிலையைச் சமாளிப்பாள் என்று.
அனுமன் கூட அப்போது இளவலின் கோபத்தைக் கண்டு ஒதுங்கினான் என்று வரிகள் வருகிறது.
''வா வெளியே சுக்ரீவா. என் மன்னன் பணி உனக்குத் தூசாகி விட்டதா.
சொன்ன சொல்லை மறந்து தூங்கும் உன்னை நானே முடிப்பேன். ராமன் மனதுக்கு அஞ்சி சும்மா இருக்கிறேன்.
அக்னிக்கு முன் சொன்ன வார்த்தைகளை நினை!''
என்று கம்பீரமாக உக்கிரமான வார்த்தைகளை உதிர்க்கிறான் லட்சுமணன்
அவன் முன்பு தாரை வந்து நின்றதும் அவன் கோபம் தணிகிறது.
அவளின் கணவனை இழந்த கோலத்தைக் கண்டதும் தந்தை இல்லாமல் மங்களங்களைத் துறந்த தன் தாய்களின் நினைவு வர கலங்கிவிடுகிறான்.
அழுதும் விடுகிறான் மனஅழுத்தத்தில்.
தாரை அவனை நோக்கி இதமான வார்த்தைகளைச் சொல்லிச் சுக்ரிவனை அனுப்புவதாக
உறுதி சொல்லி அனுப்புகிறாள்.
அதே போல் சுக்ரீவனும் ராமன் கால்களில் வந்து விழுகிறான்.
''என் குல வாசனையைக் காட்டிவிட்டேன் ராம. மதுவிலும் மாதுவிலும் மூழ்கி உன் சோகம் மறந்தேன், இனி ஒரு தடை கிடையாது. இதோ வானரர்கள்
படை தயார்,.
நான்கு திசைகளும் சென்று தேடிச் சீதா பிராட்டியைக்
கண்டுபிடித்துக் கொண்டு வருவார்கள்
தென் திசைக்கு அனுமன் செல்கிறான்.
அங்கதன் வழி ந்டத்தும் இந்தப் படைக்கு அனுமன் பிரதம ஆலோசகன்.
அனுமன் ஆரம்பித்த எந்த காரியமும் பிழையுற்றதாகச் சரித்திரமே கிடையாது.
வாயுகுமாரன்,சொல்லின் செல்வன்,நுண்புத்தி படைத்தவன்,சமர்த்தன்
என்றெல்லாம் ராமனுக்குத் தேறுதல் சொல்லி அனுமனை
அவன் முன் நிறுத்துகிறான்.
அதுவரை தத்தளித்துக் கொண்டிருந்த
ராமனின் மனம் அனுமனைப் பார்த்து நிலைப்படுகிறது.
''ஆஞ்சனேயா நீ நல்ல செய்தி கொண்டுவா.
என் சீதையைக் கண்டால்
அவளிடம் இந்தக் கணையாழியைக் கொடு.
இதில் ராமா என்னும் என் நாமம் எழுதி இருக்கிறது.
அவளைத் தேற்றி நான் அவளைச் சிறைமீட்பேன் என்று உறுதி கொடுத்து அவளையுமென்னையும் காப்பபற்று'
என்கிறான்.
ராமனை வணங்கி மோதிரத்தைப் பெற்றுக் கொண்ட அனுமன்,
தன்னுடன் வரும் வீரர்களை நோக்கி உணர்ச்சி கூட்டும்
வசனங்களை உரைத்து உற்சாகத்தோடு கிளம்புகிறான்.
அவர்கள் சென்ற திசையையே பார்த்த வண்ணன் ராமன்
மானசீகமாக அவர்களுடன் பயணிக்கிறான்.
''ராம நாமம் துணை வரும் போது அனுமனே உனக்கு ஏது குறை?
வெற்றி உனக்குத்தான்.''
ராமபக்தன் மகேந்திர மலையின் அடிவாரத்துக்கு வந்துவிடுகிறான்.
கடல் தென்படுகிறது.
அதற்கு அந்தப் பக்கம் சீதை சோகித்து இருக்கிறாள்.
இந்தக் கடலை என்னால் தாண்ட முடியுமா என்று யோசித்தவனை,
ஜாம்பவான் நம்பிக்கை உரம் ஊட்டி அவனது விச்வரூப ,யோகமகிமையைக் கொண்டாடத் தன் பெருமையையும் பலத்தையும் மீண்டும் பெறக் கிடைத்த
அனுமன் கடலைத் தாண்டப் பாய்ந்தான்.
ராமநாமம் அவன் நாவில் நிறைந்தது
அனுமன் அடி சரணம்





வாழி ஆஞ்சனேயா.

Tuesday, December 15, 2009

அனுமன்,ஆண்டாள் மார்கழி

மார்கழிக் கோலம்


ஆண்டாள் ரங்கமன்னார் திருமணக் கோலம்



ஸ்ரீவில்லிபுத்தூர் கோபுரம்



சுந்தரனுக்குப் பிறந்தநாள்
டிசம்பரே அருமையான மாதம் சென்னையில்.
கச்சேரிகள், கலகலப்புகள், சுடச்சுட விமரிசனங்கள்

நீ அந்தக் கச்சேரிக்குப் போனயோ. அவர் இந்த வருஷம் அவ்வளவு
ரசிக்கிற படியில்லை.''...

இத்தனை சபைகள், இத்தனை பாட்டுக் கச்சேரிகள், ஆடல்கள்,
பட்டங்கள், என். ஆர். ஐ. க்குத் தனி கோட்டா.

என்று தூள் கிளப்ப ஆரம்பித்தது முதலாம் தேதியிலிருந்து.

நமக்கோ மார்கழியே குறி.

அதுவும் பிறக்கும் அன்றே அனுமனை ராமதூதனை,அஞ்சனை மைந்தனை,அன்னையின் சோகம் தீர்த்தவனை,
சுந்தர காண்டக் குருவை,
சொல்லின் செல்வனை,வினய மூர்த்தியை
அழைத்து வருகிறாள் , மார்கழிப் பாவை.

மார்கழி பிறக்கும் நேரமே அமாவாசையும், மூல நட்சத்திரமும்
கூடும் நாளில் அனுமன் பிறந்து வந்துவிடுகிறான்.
பிறகென்ன,
அவன் சிறிய திருவடியாக யாருடன் ஒன்றினானோ அந்த ராமகிருஷ்ணர்களைப் பாட ஆண்டாளும் தயார்.

அவளைப் பாராட்ட உபன்யாசகர்களும்,கதை சொல்பவர்களும்,
பாவை நோம்பை ஆரம்பிக்க பக்தர்களும்,
பிரும்ம முஹூர்த்த்ததைக் கொண்டாட
நாமும் தயார்...
இணையத்திலும் கோதையின் புகழைப் பாட மதுரையைச் சேர்ந்தவர் தயாராக இருப்பதாகச் செய்தி.
பிறகென்ன கொண்டாட்டம்தான்:)
ஆண்டாள் திருவடிகள் சரணம்.


எல்லோரும் வாழ வேண்டும்.

Sunday, December 13, 2009

என்குதிரை உன் குதிரை என்ன வித்தியாசம்??

இந்தக் காலத்துக்கு இது தான் குதிரை.



இது அந்தக் காலம்.

அண்மையில் பிறந்தநாள் கொண்டாடினான் சிறிய பேரன். அவனுக்குக் குதிரைதான் ,பரிசாக வேண்டும் என்று
பிடிவாதம்,ஆசை. இந்த டோரா என்ற பெண்குழந்தை கூட ஒரு டியெகோ என்று பையன் வருவான். அவன் குதிரையைத் தொலைக்காட்சி கார்ட்டூனில் பார்த்ததிலிருந்து அவனுக்கு அந்தக்
குதிரை மேல் மோகம் வந்துவிட்டது.

அவங்க ஊர்ல பொம்மைக் குதிரைக்கா பஞ்சம்.

அவன் தான் ஏறும்படி இருக்கணும். ஆனால் ஓடக் கூடாது என்று ஒரு கண்டிஷன் வேறு.
சரி மரக் குதிரை உங்க ஊரில கிடைக்காதா, ஆடும் குதிரை இருக்குமே என்று பெண்ணிடம் கேட்டேன்.
அவளுக்குக் கிடைத்த நேரத்தில் இணையத்தில் தேடிக் கிடைத்த குதிரைகளில்
அவன் விருப்பப் பட்டது இந்த ஃபெல்ட் என்ற செயற்கைத் துணியால் ஆன
பழுப்பு நிறக் குதிரை தான்.
ஸ்ஸ்ஸ்.... அப்பாடா!! ஒரு குதிரை வாங்க இவ்வளவு அலைச்சலா!!
அப்புறம் ஸாம்ஸ் கிளப் என்று அவர்கள் உறுப்பினராக இருக்கும் ஒரு
கூட்டுறவுக் கடையில் ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணாக இந்தக் குதிரை கிடைத்ததாம்.

இது காதைத் திருகினால் கனைக்கிறது. க்ளிப்பட்டி க்ளாப் என்று ஓடும் சத்தம் போடுகிறது.
ஆனால் அவன் இதில் உட்காரும் நேரம் குறைவுதான்.
நகராத குதிரை:)

இதைப் பார்க்கும்போது எங்கள் மாமா நாங்கள் சிறியவர்களாக இருக்கும்போது,
எங்களைப் பார்க்க ஸ்ரீவில்லிபுத்தூருக்கு ஒரு தடவை வந்தார்.

கையில் நீல வர்ணக் குதிரை. மரக் குதிரை. ஏறிக் காதைப் பிடித்துக் கொண்டால் ஆடும்.
மனோவேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல், குதிரையைக் கீழெ தள்ளிய அனுபவமும் உண்டு:)

நாங்கள் மூவரும் விளையாடி, அதைச் செல்லம் கொஞ்சி,அதற்கு வர்ணமெல்லாம் போய்க் கூட அது பசுமலை பரணில் கிடந்தது.
பிறகு அப்பாவுக்கு ராமேஸ்வரம் மாற்றல் ஆனதும் அப்பா எனக்குக் கடிதம் எழுதி ,நான் சம்மதம் தெரிவித்த பிறகே பசுமலை
தபால்காரருக்குக் கொடுத்தார்.
அந்த இருபது வயதில் கூட எனக்கு அது நம்மிடம் இல்லை என்ற வருத்தம் மேலிட்டது நினைவு வருகிறது;))

சில நபர்கள் வளருவதே இல்லை என்று நினைக்கிறேன்.!!


எல்லோரும் வாழ வேண்டும்.
என் நட்பு என் சொத்து- Emily Dickinson

Friday, December 11, 2009

மீசைக்கார பாரதி வாழ்க நீ பல்லாண்டு.

மகாகவி பாரதியார் பற்றி எழுதுவதற்கும் தகுதி வேண்டும்.

ஆனால் அவர் பிறந்த இந்த நாளில் அவரை வாழ்த்தத் தமிழ் மொழி தெரிந்தால் போதும் என்றே நினைக்கிறேன்.விழிகளின்
கூர்மை, இந்தப் பழைய படத்திலிருந்தே எட்டி நம்மைப் பிடிக்கும் காந்த முகம், அவர் மனைவியின் எளிமை .அவர் விட்டுச்சென்ற கவிதை வரிகள் இன்னும் எல்லோருக்கும் ஊக்கமும் பேச்சு வன்மையும் கொடுத்துக் கொண்டிருக்கிறது.
எப்போதும் கொடுத்துக் கொண்டிருக்கும் மகா மனிதருக்கு ,வள்ளலுக்கு
நம் எளிய பிறந்த நாள் வாழ்த்துக்களைச் சொல்லி வணங்குவோம்.


ஒளிபடைத்த கண்ணினாய் வா வா வா
உறுதி கொண்ட நெஞ்சினாய் வா வா வா.





எல்லோரும் வாழ வேண்டும்.
என் நட்பு என் சொத்து .
- Emily Dickinson

Tuesday, December 01, 2009

திருக்கார்த்திகை நல் வாழ்த்துகள்


























அன்புப் பதிவர்களுக்கும் அவர்கள் குடும்பங்களுக்கும் திருக் கார்த்திகை நன்னாள் வாழ்த்துகள்.
இதை எழுதும்போதே அண்ணாமலை தீபம் ஏற்றிவிட்டார்கள் திருமதி சுதா சேஷய்யன் வர்ணிக்க இந்த மங்கள தீபம் ஏற்றப்பட்ட அழகை என்ன சொல்வதுஇரு கருடன்கள் வட்டமிட்ட கருணையை எப்படி வர்ணிப்பதுஆடி வந்த அர்த்தநாரீஸ்வரர் கோலமோ இன்னும் அற்புதம்இதை எல்லாம் அற்புதமாக வழங்கிய பொதிகைத்தொலைக் காட்சிக்கு உளமார்ந்த நன்றி
எல்லோரும் வாழ வேண்டும்.
என் சொத்து என் நட்பு - Emily Dickinson

Thursday, November 26, 2009

அக்கா நலமா ?

அன்புள்ள அக்கா , நிறைய வருடங்கள் ஆகிவிட்டன . எப்படி இந்தப் பிரிவு வந்தது , இதைத்தான் யோசித்துக் கொண்டிருந்தேன் நேற்று. மீண்டும் மீண்டும் ஊட்டியில் மண்சரிவு என்று படிக்கும் போதுவருத்தமாகவும் கவலையாகவும் இருந்தது.



கோவையில் நம் நட்பு துளிர் விட்ட நேரம் வார விடுமுறைகள் உங்களுடனும் உங்கள் குழந்தைகள் கணவர் இவர்களிடமும் எங்கள் குடும்பம் களிப்பாகக் கழித்த நேரங்கள் இன்னும் பசுமையாக மனதில் இருக்கின்றன,.





நாங்களும் சென்னைக்கு வந்தோம். அடுத்த இரண்டு வருடங்களுக்குள் உங்கள் மகன் மகள் படிப்பு திருமணம் என்று சென்னைக்கு வரவேண்டிய அவசியம்

வந்தது.

நாம் அடைந்த சந்தோஷத்துக்கு அளவே இல்லை. அதுவும் பக்கத்திலேயே வீடும் அமைந்தது. மிகவும் வசதியாகப் போயிற்று.

உங்கள் கணவரும் இவரும் மிகச்சிறந்த உயிர்க் சிநேகிதர்களா இருந்தது நமக்கு இன்னும் இன்பம் கூட்டியது.
அவரவர் ,வேலைகள் முடிந்ததும் ஒன்றாக கடைகளுக்குப் போவதும், குழந்தைகளையும் கணவர்களையும் ஒன்றாக விட்டு விட்டு விட்டு சினிமா பார்க்கப் போவதென்ன தீபாவளிக்கு நீங்கள் எங்களுக்கு பரிசுகளும் உடைகளும் கொடுப்பதும் ,

டிசம்பரில் கிறிஸ்துமஸ் வரும்போது விதம் விதமான பலகாரங்கள் எங்கள் வீட்டிலிருந்து, உங்கள் கணவருக்குப் பிடித்த கொழுக்கட்டை yஇலிருந்து வீட்டிற்கு நடக்கும் மகிழ்வு....

எட்டு வருடங்கள் ஓடுவது போல பறந்தன. உங்கள் மகன்,மகள் திருமணங்களும் முடிந்து குழந்தைகளும் பிறந்தார்கள்.

அப்போது வந்தது ஒரு இறுதி ஒலை உங்கள் கணவருக்கு. அந்த அன்பும் ஆதரவும் தந்த செழுங்கிளையைக் ,கனவானைக் கொண்டு போவதற்கு காலனுக்குத்தான் எத்தனை கொடூரம்..



உங்கள் இறைநம்பிக்கை இவைகளையும் மீறி . இந்தப் பயங்கர விபரீதம் நம்மையும் கலைக்கப் பார்த்தது. அதை மீறி நாம் நல்ல தோழியராகவே இருந்தோம். இதோ அப்போது நீங்கள் எழுதிய கடிதங்கள் இன்னும் மணி மணியான எழுத்துக்களோடு ,அனுசரணையோடு என்னைப் பார்க்கின்றன அந்தக் கடிதங்கள்.




அதற்குப்பிறகு இந்த வீட்டில் பிள்ளைகள் படிப்பு,வேலை, திருமணம் என்று நானும் கவனத்தைத் திருப்பினேன்.
நீங்களும் ஆன்மீகத்துறையில் ஆழமாக இறங்கி, நீங்கள் உண்டு, உங்கள் காப்பித் தோட்டம், உங்கள் பெற்றொர் பிரிவு,
அவர்களுக்காக நீங்கள் எடுத்துக் கொண்ட சிரமம்
எல்லாம் நம்மை மெதுவாகப் பிரித்தனவா.

எத்தனையோ மகிழ்ச்சிகளையும் துன்பங்களையும் பகிர்ந்து கொண்ட நல்ல தோழிகள் ஏன் மாறினோம்.
கடலில் ஒரு கப்பலின் விளக்குகள் , கொஞ்சம் தள்ளிச் செல்லும் இன்னோரு கப்பலின் விளக்குகளுக்கு ஒரு குட்டி ஹலோ சொல்லுவது போல ஆகிவிடக் கூடாது
அக்கா., நம் நட்பு.

இதை ஒரு மீட்புப் பணியாக நான் தொலைத்த தோழியைத் தேடப் போகிறேன்.



எல்லோரும் வாழ வேண்டும். நாட்டில் எல்லோரும் வாழ வேண்டும்.

Monday, November 23, 2009

எங்கள் மீனாள்

வளையவந்தவளுக்கு என்ன
ஆயிற்று என்று புரியவில்லை.
சதா மேலிருக்கும் பெட்டி மூடிய முட்டிய வண்ணமே இருந்தாள்.

மருந்தும் வாங்கிப் போட்டது.
ஒரு தியானம் செய்யும் யோகியாக
இருந்தவள் இன்று ..அவளுடைய முன்னோர்களைப் பார்க்கக் கிளம்பிவிட்டாள்.

நானும் அந்த வெற்றுப் பெட்டியையும் அவள் விட்டுக் சென்ற மீன்களையும் வெறித்த வண்ணம் இருக்கிறேன்.
மீனாட்சியிடம் அன்பு செலுத்தியவர்களுக்கு நன்றி.

எல்லோரும் வாழ வேண்டும். நாட்டில் எல்லோரும் வாழ வேண்டும்.

Friday, November 13, 2009

நவம்பர் பதிமூன்று அன்புக்கான நாள்

இன்று உலக அன்பு நாள். அதாவது கைண்ட்னஸ் டே.

அன்புள்ளவர்களுக்கு இந்த உலகம் அடிமை.

வயதானவர்களுக்கு உதவி செய்யும் தொண்டு நிறுவனங்கள் .

கவனித்துக் கொள்ளும் செவிலியர்கள்.

உடல்நலம் இல்லாதவர்களைக் கவனித்துக் கொள்ளும் மருத்துவர்களும்
பெற்றொரைப் பாராட்டும் பிள்ளைகள்
பிள்ளைகளைக் காக்கும் பெற்றோர்கள்
இப்படி நீளும் பட்டியல்.

எல்லாவற்றுக்கும் அடிப்படை கருணையும் அன்பும்தான்.
இதற்கென்று ஒரு நாள் இருப்பதே இன்றுதான் தெரியும்.

அதுவும் எங்கள் இருவருக்கும் மிகவும் வேண்டப்பட்டவரின் பிறந்தநாள்.
அவருக்கு மயில் வாழ்த்துகள் அனுப்பலாம் என்றுதான் பொட்டியைத் திறந்தேன்:)
பார்த்தால்,

KINDNESS DAY என்று வருகிறது. இன்னிக்கு ஸ்பெஷல் இதுதான்.
நல்ல நாளில் தான் பிறந்திருக்கிறார் இந்த அன்பர்.
அவரும் இன்னும் அன்பாக ,மனித நேயத்தோடு வாழும் எல்லோரும் சிறப்பாக
இயங்க வாழ்த்துகள்
























பெற்ற பையனுக்கு வயதாகிறது என்று எந்தத் தாயும், முக்கியமாக இந்தத் தாய் :0) ஒப்புக் கொள்ள மாட்டாள்......
குழந்தைக்கு வாழ்த்துகள்.





எல்லோரும் வாழ வேண்டும். நாட்டில் எல்லோரும் வாழ வேண்டும்.