Blog Archive

Friday, February 28, 2020

எல்லையில் வந்திருக்கும் கொரோனா மிருகம் 2020

வல்லிசிம்ஹன்

எல்லோரும் இனிதாக  வாழ வேண்டும்.

எல்லையில் வந்திருக்கும் கொரோனா மிருகம் 
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++\

அங்கே இங்கே  வாய் வைத்து விட்டு 
உலகம் முழுவதும் ஆட்களை அனுப்பிப் 
பரவ வைக்கிறது.
இதுவோ ஒன்றே உலகம்  என்றாகிவிட்டது.
ஆனானப் பட்ட வெறும் ஆள்   நான்,
 ஊர் உலகம் சுற்றும்   சுற்றும்போது,
எத்தனையோ வணிக சம்பந்தமாக  ஆண்களும் பெண்களுமாகப் பறந்து கொண்டுதான் இருக்கிறார்கள்.

சுற்றி இருக்கும் இத்தாலி,ப்ரான்ஸ்   இவை 
நிறைய பாதிக்கப் பட்டு,
மெதுவாக மீள முயற்சிக்கின்றன.

அங்கிருந்து வெளியுர்களுக்குக் கிளம்பினவர்கள் 
தங்களை அறியாமலேயே இந்த   ஊருக்கும் கொண்டுவந்து விட்டார்கள்.

ஆனால் நல்ல பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டு மேற்கொண்டு என்ன செய்யலாம் என்று சமாளிக்கத் தயார் ஆகிறார்கள்.

இதோ நாளை கிளம்புகிறோம்.

எல்லோரும் நலமுடன் இருக்கப் பிரார்த்தனைகள்.

Thursday, February 27, 2020

வாசமுள்ள மஞ்சள் மலரே !

வல்லிசிம்ஹன்

கொக்கி 200125  நம்ம ஏரியா கதை.



எல்லோரும் வளமாக  வாழவேண்டும் 

வாசமுள்ள  மஞ்சள் மலரே !

இந்தப் பூ மரம் எங்கள் வீட்டுக்கு 1983யில் வந்தது.
ஒரு இரண்டடி   வளர்ந்ததும் மொட்டு வந்துவிட்டது.

மொட்டாக இருக்கும்போதே அத்தனை வாசனை ,ஜன்னல் வழியே வந்து மூக்கை வருடும்.
நிறைய  விருந்தாளிகள் வீட்டுக்கு வரும் காலம் அது.
அவர்களில் சிலர் இது வீட்டில் வைக்கக் கூடாத மரம் 
என்ற எண்ணம்.

இந்த மரத்தின் பூக்கள்  மாடியில் ஜன்னலை உரசியபடி இருக்கும். 10 வருடங்களில் அவ்வளவு வளர்ந்து விட்டது.

தம்பிகளின் மனைவிகள் வரும்போதெல்லாம்,
இதன் மலர்களை ஆசையுடன் எடுத்துச் செல்வார்கள்.

Image result for Frangipani  tree

இந்த நெல சம்பங்கி   வளர  எங்கள் குடும்பமும் வளர்ந்தது.
அத்துடன்  பக்கத்தில் நடப்பட்ட  மணிபிளாண்டு இந்த மரத்துடன் 

பின்னிப் பிணைந்து வளர்ந்து வீடு அமேசான் காடு போல ஒரு தோற்றம் கொடுத்தது.
மணி பிளாண்டின் ஒவ்வொரு இலையும்   பலகாரம் வைத்து சாப்பிடலாம் போல 
பெரிதாக இருந்தது.

1983 லிருந்து 2013  எங்களுக்கு  நல்ல   மணத்தை    அள்ளித் தந்து,
பச்சைப் புல்களுக்கிடையே     மஞ்சளும் வெண்மையாக மனதை 

மயக்கிக்  கொண்டாடிக் களித்தது.

சென்ற வருடம் 16 நாட்கள்   சென்னையில் இருக்கும் பாக்கியம் கிடைத்தது.
ஐப்பசியில்   அபரிமிதமாகப் பூக்கும். வருபவர்கள் 
மீது  ஒவ்வொரு மலராக விழும்.

சிதறிக்கிடக்கும்   மஞ்சள் பூக்களை ஒரு பெரிய  பாத்திரத்தில் தண்ணீரில் இட்டு வைப்பேன்.

மேலே படத்தில் இருக்கும் மலரின் அழகுக்கு 
சில  வரிகள்.
//
பூத்து மணம் வீசி  மரம் விட்டு வீழ்ந்த பூவே 
கவலை வேண்டாம்.
இதோ அடுத்து  வரப்  போவது  உன் துணைப்பூ.
தனிமை நிரந்தரமில்லை.

வேறு யாரும் உன்னை மிதிக்காமல் 
காற்று உன்னைக் காக்கும்.//

அழகான படத்தைக் கொடுத்த நண்பர் கௌதமன் ஜி க்கு மிக மிக நன்றி.



நம்ம ஏரியாவில் சந்தோஷ இல்லம்

வல்லிசிம்ஹன்

எல்லோரும் வளமாக  வாழ வேண்டும்   சந்தோஷ இல்லம் 

  பெண் இருக்கும் ஊரில் இது போல , ஆனால் இன்னும் வெளிச்சமாக ,
ஒரு தனி வீடு ஒன்று இன்னும் உண்டு. அது மாறிய கதைதான் இது.
அங்கே ஒரு 85 வயது  தாத்தாவும் அவரது செல்லம் 
ஒரு கோல்டன் ரெட் ரீவர் 
  ஒன்றும்  விளையாடியபடி  காட்சி கொடுப்பார்கள்.
தாத்தா ரொம்பத் தனிமைப் படுத்தப் பட்டதாக உணர்வேன் 

பெண்  நான் பேசுவதை மறுத்துவிடுவாள்.
நம்  ஊர் மாதிரி இல்லைம்மா இங்கே.
இவர்கள் மனவலிமை  கொண்டவர்கள்.
கவலைப் படாதே ''  என்பாள்.

இரண்டு வாரங்ள் கழித்துப் போன பொது 
அங்கே ஆம்புலன்ஸ்  நிற்பதை பார்த்தோம்.

நான் நினைத்தேன் ,தனியா இருக்காரே, என்ன ஆச்சோ என்று நான் கவலைப் பட மகள் 
இந்த ஊர் மனிதர்கள் திடமானவர்கள் மா ஒன்றும் கெடுதல் இருக்காது என்றபடி சொல்லிக் கொண்டிருக்கும் போதே 

ஆம்புலன்சில் இருந்து ஒரு  முகம்  பெண்ணைப் பார்த்துக் கை 
காண்பித்துச் சென்றது.
''ஓஹோ, நம்ம ரஞ்சனி மா, தாத்தா ராஷ் காப்லி  மருத்துவ மனைக்குப் போகிறார்  என்றாள்  பெண்.
ரஞ்சனி எங்கள் சப் டிவிஷனில் இருக்கும் பெண்தான்.

அவளிடம் தொலைபேசிய பொது ,
தாத்தா மயக்கமாகி விழுந்து விட்டதாகவும்  எப்பொழுதும் கழுத்தில் அணிந்திருக்கும் அலார்ம் ஹாஸ்பிடலில் ஒலித்ததால் உடனே 
வந்ததாகவும் சொன்னாள் .
கால்  கணுக்கால்  பிசகி நினைவு தப்பி இருக்கிறது.
ரத்த அழுத்தம் அதிகமாகி,  
சின்ன ரத்த அடைப்பு இருப்பதாகவும். அவருக்கு,
அறுவை சிகித்சை செய்யப்பட்டு,
அடுத்த நாள்  முதல் பத்து நாட்கள்.
அவர் மருத்துவ மனையில் தங்க வேண்டி இருக்கும் 
என்றும் 
அவர் மகன்  நியூயார்க்கில் இருந்து  வருவார் என்று செய்திகளை 
பகிர்ந்து கொண்டாள் .






.

'' நீ தான் அந்தப் பக்கம் அடிக்கடி போவியே 
இரண்டு வாரத்தில்  தாத்தா வெளியில்  உட்கார்ந்திருப்பார் பார் "
என்று பேசி முடித்தாள்  ரஞ்சனி.

பேரனின் இசை குழு பங்கேற்கும் நிகழ்ச்சிக்குப்  போகும் வழியில் 
ரஞ்சனி  சொன்னது போலவே தாத்தா வெளியில் 
காலை நன்றாக நீட்டிக் கொண்டு  
உட்கார்ந்து , தன்  செல்லத்தின் 
 தலையைத் தடவிக் கொடுத்தபடி உட்கார்ந்திருந்தார்.

முகம் தெளிந்திருந்தது .
உள்ளிருந்து  ஒரு  பெண்  அழகாக மூடப்பட்ட தட்டில் 
ஏதோ  ஒரு பழச்சாறு கொண்டுவந்து கொடுத்ததைப்  பார்த்தபடி கடந்தோம்.

Image result for old house with trees around
ஆம் .வசந்தம் வந்தே விட்டது. Image result for Old man with dog

தாத்தாவுக்குப் பணம் பிரச்சினை இல்லை.

மருத்துவ மனையில்  படுத்திருந்த போது ,
தன மன
 நிலையையும் மேம்படுத்திக் கொண்டார். இரண்டு வருடங்களுக்கு முன் மனைவி மறைந்தது அவரை  இந்த  உயிர்ப்பில்லாத வாழ்க்கையில் அமர்த்தி விட்டது.

அவரது  தமக்கை அவருடன் வந்து இருந்தார்.
அவரும் தன இடத்துக்குத் திரும்பி விட்டார்.
ஒரே மகன், 45 வயதில்  மறு  மணம்  முடித்து  
தன வாழ்க்கையை,அனுபவத்துக்கு கொண்டிருந்தான்.
அவனைப் பொறுத்தவரை, 
'அப்பா   வலிவுள்ளவர். வாழ்வை சமாளித்துக் கொள்வார் என்ற நம்பிக்கை.
அவனுக்கிருந்தது. 'அதற்கு மேல் அவன் வாழ்வு அவனுக்கு 
முக்கியமானது.

மருத்துவ மனையில் இருக்கும்போது   வீட்டுக்கு வேண்டும் 
எது மாற  வேண்டும்  என்றெல்லாம்  யோசிப்பது அவருக்குப்  பிடித்த பொழுது போக்கானது.
உடனே செயலில் இறங்கினார்.

அவருக்குத் தெரிந்த மெக்சிகன் தோட்டக்காரரை 
வரவழைத்து 
அந்தப் பெரிய தோட்டத்தை ஒழுங்கு படுத்த சொன்னார்.
உடலில்  தெம்பு ஏற ஏற 

அவரது சிந்தனைகளும்  சுறு சுறுப்படைந்தன .
அவரைப் பார்க்க வந்த செல்லத்தின் அன்பும் 
அவரை ஊக்கப் படுத்தியது.

அடுத்து என்ன என்று யோசிக்க வைத்தது.
வீட்டுக்குப் புது  மேக் ஓவர் எனப்படும் ,வெளிப்பூச்சு, புது ஜன்னல் 
கதவுகளுக்கு வர்ணங்கள், புது சிட்  அவுட் ,

வீட்டுக்குப் பின்னால் மக்காச்ச்சோளம்  பயிரிடப் பட்டது.

அவருக்கு உதவியாக வந்த  கரேன்  ,
தன்  முனைப்போடு   கவனம் செலுத்தி  
பல பூக்கும் செடிகளை  வண்ணங்களின் கோலாகலமாகப் 
பாதை எங்கும் நட  வீடே  பளபளப்பாகியது.

ஏப்ரில் சென்று மே  வந்ததும்,
மகன்  பார்க்க 
வந்தான்.  பேய்ப்பங்களா என்ற  பெயர்  மறைந்து 
சந்தோஷ இல்லம்  என்ற பெயரைத் தரித்து நிற்கிறது 
இப்போது அந்த வீடு.

பகல் வேலைக்கு கரேன்  உதவியும் ,இரவில் 
 பிலிப்  என்ற  40 வயது மனிதரும் துணை 
இருக்க, அங்கே நர்சரி  ஒன்றை ஆரம்பிக்கப் 
போகிறாராம் தாத்தா ஜேகப் .

Image result for CORN FIELDவாழ்க வளமுடன்




















Tuesday, February 25, 2020

PONGAL CELEBRATION in Village by farmers | We celebrate Our Traditional ...

வல்லிசிம்ஹன்.
Valamudan vaazhka.

இனிய உகாதி வாழ்த்துகள்.2020

வல்லிசிம்ஹன்



Thursday, March 24, 2011

பேரைச் சொல்லவா ...அது நியாயமாகுமா:)



அன்பு  சாரல் அழைத்து நானும் எழுத வந்துட்டேன். பெயருக்கான வரலாறு:)
நன்றி  மா

அம்மா என்னைக் கருவில் தரித்தது ஸ்ரீவில்லிபுத்தூரில்.

தாயார் வீடு  சென்னை. அம்மாவின் அப்பாவுக்கு  புதிதாகப் பிறந்த பேத்தியின்
மீது  மிகுந்த  பாசம்.
புண்யாஹ வசனம் என்று குழந்தை பிறந்த பதினோறாம் நாள் பெயர் வைக்கும் ஏற்பாடு.
நெல்லையிலிருந்து தந்தை வழிப் பாட்டி தாத்தாக்களும், அத்தைகளும்
 சித்தப்பாக்களும் வந்துவிட்டார்கள்.
அப்பா ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து வந்தார்.
புரசவாக்கம் வெள்ளாளத்தெரு வீடோ சிறியது. இருந்தும் பக்கத்துவீட்டில் சாப்பாடு பரிமாற
ஏற்பாடு செய்து  வீடு களை கட்டியது.
அம்மா வழி உறவினர்கள் அனைவரும் சென்னையில் தான்.
அம்மாவின் அத்தை,மாமாக்களும் அங்கே.
சேச்சிப் பாப்பாவுக்கு பொண்ணு பொறந்திருக்காம்.

முத்தண்ணா ஸ்பெஷல் நர்ஸ் போட்டு பிரசவம் பார்த்தானாமே.
''ஆமாம் முதல்  குழந்தைக்கு அப்படி ஆனதால் இந்தக் குழந்தையை இன்னும் தீவிரமாகக்
கவனிக்கணும்.
 இதுவும்  சின்னக் குழந்தையத்தான் இருக்கு.
பரவாயில்லை  தேத்தி விட்டுடலாம். ''
தாயும் சேயும் நலமாக இருக்க   வீட்டருகில் இருக்கும் பிள்ளையாருக்கு
 தேங்காய்கள் வேண்டிக் கொள்ளப் பட்டன.
ஸ்ரீனிவாசப் பெருமாளிடம்  அர்ச்சனைகள்.
இத்தனையும் செய்தும் பிறந்ததென்னவோ ஒரு வெள்ளை சைனா  பொம்மை போல
ஒரு சின்னக் குழந்தை.

பாட்டி(மதுரை)'அட ராமா , நாராயணா,(எங்க அப்பா) என்னடா இப்படி ஒரு கண்ணு.
 மூக்கு இருக்கும் இடம் தெரியவில்லையே. கீத்து மாதிரி கண்ணு.இந்தப் பக்கம் தண்ணீர் விட்டால்
அந்தக் கண்ணுக்குப் போயிடும் போல இருக்கே""
என்று வழக்கம் போல பரிகாசம் செய்தாலும் ஆசையாக மடியில் எடுத்துவைத்துக் கொண்டு
தன் பெயரையே வைக்கும் படி சொல்லிவிட்டார்.
அதனால் முதல் பெயர் திருவேங்கட வல்லி!!
அம்மாவுக்கு  வில்லிபுத்தூர் பாவையின் மேல் அளவிட முடியாத பாசம். அதனால்
ஆண்டாள் என்றும் கூப்பிடுவதாக  ஏற்பாடு ஆச்சு.

மாமாக்கள் சும்மா இருப்பார்களா. குழந்தை பிறந்த அன்று ஜெமினி தயாரிப்பான 'சந்திரலேகா' படம்
வெளிவந்தது.

அதனால் மாடர்னா அந்தப் பெயரும் வைக்கணும் என்று வேண்டுகோள்.
ஆகக்கூடி மூன்று பெயர் நெல்லில் எழுதியாகி விட்டது.
வேறு யார் ''ரேவதி'' என்னும் பெயர் சொன்னார்களோ
தெரியவில்லை. அதுவும் சேர்ந்து கொண்டது.

கொஞ்சம் வருடங்களானதும் சுயமாக(!)ச் சிந்திக்கும் திறன் பெற்ற
ஆண்டாள், ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து  அப்பா, திருமங்கலத்துக்கு
மாற்றலாகி வந்து, ஆறாவது படிக்க திருமங்கலம் போர்ட்  உயர்நிலைப் பள்ளியில்
 சேரப் போனபோது, 'தன் பெயர் ரேவதி' என்று ஹெச்.எம்.
எனப்படும் தலைமை ஆசிரியையிடம் அறிமுகப் படுத்திக் கொண்டு
என்ட்ரன்ஸ் டெஸ்டும் எழுதியாச்சு.:)
ஆண்டாள் ''நா.ரேவதி'' ஆனது இப்படித்தான்.
பரீட்சைக்கு அழைத்து வந்தது  ஐந்தாவது வகுப்பு வரை படித்த ஆதாரப் பள்ளியின்
தலைமை ஆசிரியை, பெரிய டீச்சர்.
அதனால் பெயர் மாற்றுவது ஆண்டாளுக்குச் சுலபமாகிவிட்டது.
தேர்வு முடிந்து அழைத்துச் செல்ல வந்த அப்பாவின் கைகளில்
அந்தப் பள்ளியில் சேர்த்துக் கொண்டதற்கான ரசீதைக்  கொடுத்தார் ஆசிரியை.
பெயரைப் பார்த்ததும் அப்பாவுக்குச் சிரிப்பு வந்துவிட்டது.
''பிஞ்சிலே பழுத்ததா'? என்று  வேறு  ஒன்றும்  சொல்லாமல்
வீட்டுக்கு அழைத்துச் சென்று அம்மாவிடமும் சொன்னார்.
அம்மாவுக்கு அவ்வளவு   இஷ்டம் இல்லை.

''அதென்ன  தானே அழகி தம்புரான் பொண்டாட்டி' னு
அதிகப் பிரசங்கித்தனம்  என்று அலுத்துக் கொண்டார்.

இருந்தாலும் வீட்டில 'ஆண்டாளாகவும் வெளியில் ரேவதியாகவும்''
 இருக்க ஒப்புக் கொண்டார்.
இந்த நாள் வரை அதுவெ வழக்கமாகிவிட்டது.
திருமணத்தின் போது நான் ரேவதியாகவே ஆகிவிட்டேன்.
ஆண்டாள் என்னும் பெயரே ஏதோ ஒன்பதுகஜ மாமியைக் கர்நாடகமான
கோலத்தில் பார்ப்பது போல புகுந்த வீட்டில்  தோன்றியதாம்.!

பிறகு வலையுலகத்துக்கு வந்த போதுச் சரியாக ஐந்து வருடங்களுக்கு
முன்னால், நாச்சியார் பதிவும் வல்லிசிம்ஹனும் உருவானார்கள்.
பழைய பேரில் பாதி, கணவர் பேரில் பாதி.:)

மாற்றுப் பெயர் அவசியமா என்று யோசித்ததற்குப் பெரிய காரணம் ஒன்றும் இல்லை. ஏதோ ஏகப்பட்ட (எனக்கு)த்  தெரிந்த
நபர்கள் படிப்பது போலவும், ஓ நம்ம ரேவதியா இது:( என்று அவர்கள்
நினைத்துக் கொள்ளுவார்கள் என்ற நினைப்புதான் காரணம்:)))))

என்னவோ  நானும் பல அவதாரங்களில் நடமாடிக் கொண்டிருக்கிறேன்.:)))

இந்த மாதிரிப் பெயர் விவரம்,மாற்றம்,காரணம் பற்றி எழுத என் நண்பிகளை
அழைக்கிறேன்.
ஏற்கனவே எழுதி விட்டார்களோ தெரியாது.

அன்பு அக்கா  நைன் வெஸ்ட்  ''நானானி''
அன்பு  துளசிகோபால்
அன்பு  கீதா  சாம்பசிவம்,
அன்பு கோமதி அரசு(திருமதி பக்கங்கள்_)
அன்பு மாதங்கி
அனைவரும் முக்கிய வேலைகளில் இருப்பவர்கள். கொஞ்சம் நேரம் ஒதுக்கி
எழுத வேண்டுமாய்க் கேட்டுக் கொள்கிறேன்.

Monday, February 24, 2020

நற்காரியங்கள்

வல்லிசிம்ஹன்
எல்லோரும்  வளமாக  வாழ வேண்டும்.


அடுத்து முயன்றாலும் ஆகும்நாள் அன்றி
எடுத்த கருமங்கள் ஆகா – தொடுத்த
உருவத்தால் நீண்ட உயர்மரங்கள் எல்லாம்
பருவத்தால் அன்றிப் பழா.

நற்காரியங்கள் 
++++++++++++++++++

Saturday, February 22, 2020

வளம் வாழ எந்நாளும் ஆசிகள்

வல்லிசிம்ஹன்

எல்லோரும் வளமாக  வாழ வேண்டும்.
வளம் வாழ  எந்நாளும்  ஆசிகள் 

சில பல காரணங்களால்  , எழுதும் வேலை கடினமாகிறது.
மனஉற்சாகம்,  உடல் வலிமை 
சொல்ல வந்த   வார்த்தைகளைச் சொல்ல 
எண்ணம்  ஓடாமல்  எழுத்தும் நின்றுவிடுவது.
" சொல்ல நினைத்த  ஆசைகள் 
சொல்லாமல் போனதேன்//
சொல்ல வந்த வேளையில்  பொல்லாத நாணம்  ஏன் .
மன்னன் நடந்த பாதையில் 
என் கால்கள் செல்வதேன் //

மன்னன் சென்ற பாதையில் மனைவியும் செல்ல 
நாட்கள் வருடங்கள் ஆகும்.
பொறுப்புகள் எல்லாம் தீர்ந்தாலும் 
நம் ஆன்மாவுக்கு ஆற்ற வேண்டிய கடமைகள் எத்தனையோ.

நாம் பிறக்கும் போது இருந்தவர்கள் எல்லாம் போகும் வரை நிலைப்பதில்லை என்ற உண்மை நிதர்சனத்தைப் புரிந்து கொண்டு 
இறந்த காலத் தவறுகளை,
இனிமேலும் செய்யாமல் , 

வளர்த்த மகன்களிடமோ ,மகள்இடமோ 
உரிமை பாராட்டாமல், பாசம் மட்டுமே  காட்டி 
மிச் ச நாட்களை நிம்மதியாகக் 
கடந்து செல்ல இறை யை எந்நாளும் 
இடைவிடாமல்    மறக்காமல் துதித்து 
உய்யும் வழி காண்பேன்.

Thursday, February 20, 2020

80 ஆம் பிறந்த நாள் (சிங்கம்)

வல்லிசிம்ஹன்

எல்லோரும் வளமாக  வாழ வேண்டும் 
80 ஆம் பிறந்த நாள்  (சிங்கம்)

2010 இல்   மயிலையில்  தோழர்கள் தோழிகள், உறவினர்கள் மத்தியில் 
உணவு உண்டு மகிழ்ந்த பொது எடுத்த படம்.

என்றும் நினைவில் தாங்கும் சிங்கம்.
என் வாழ்வின் ஆதாரம்.
எனைப்புரிந்து கொண்டவர் அவரைத் தவிர யாரும் இல்லை.
அவரை உணர்ந்தவள் என்னைத் தவிர  யாரும் யில்லை'
Image result for flower garlands

தனக்கு நோய் வந்தால் நான் வருந்துவேன் என்றே அவர் 
சொல்லாமல் சட்டென்று இறைவனை அடைந்தார்.

பரம தயாளு என்று இறைவனைச் சொல்வோம்.
என்னை ப்  பொறுத்தவரை என் சிங்கம் தான் 
எனக்கு இறைவன். இன்றும் என்னைக் காப்பவர்.

இனிய இன்பம்  நிறை எண்பதாம் பிறந்த நாள் வாழ்த்துக்களை அவர் 
பாதங்களில் சமர்ப்பிக்கிறேன்.

Monday, February 17, 2020

வெங்காய ரசம்

வல்லிசிம்ஹன்

எல்லோரும் வளமாக  வாழவேண்டும்   

 வெங்காய ரசம்.
+++++++++++++++++++++
சின்ன வெங்காயம் தமிழ்க் கடையில் கிடைத்தது.
கூடவே ,முருங்கைக்காய்,   கொத்தவரங்கா, பீர்க்கங்காய் எல்லாம் கிடைத்தது. நானும் மகனுடன் டவுனு பக்கம் போயிருந்தேன்.
அரிசி வாங்கிக்கொண்டு இவைகளையும் சேர்த்து பைக்குள் போட்டுத் திரும்பும்போது
"கண்ணா நீ தூங்கடா' பாட்டைப் போட்டதும்
ப்ரேக் போட்டு நின்றேன்.
அம்மா ஃப்ரீஸ் மோடுக்குப் போய்விடாதே.
மழை வருகிறது.
எட்டாம் நம்பர் டிராமைப் பிடிக்கணும்னு வலுக்கட்டாயமாக
இழுத்துவந்தான். ஹூம் இழுக்கக் கூடிய உடம்பா இது:)

ஜன்னல் வழியும் மழை சரங்களைப் பார்க்கும் ஆர்வத்தில் ஒரு வெள்ளைத்
தோலின் மேல் என் கை பட்டுவிட்டது.
அந்த அம்மா முறைத்த வேகத்தில் சீட்டொடு முடிந்தவரை
ஒட்டிக் கொண்டேன்.
இறங்கும் இடம் வந்ததும் அவர் சிரமப்பட்டு இறங்கினார்.
தன் கையைக் காண்பித்து ஏதோ சொல்லி விட்டுப் போனார்.
மகனைத் திரும்பிப் பார்த்தேன்.
அவள் டிராமில் ஏறும்போது முழங்கையில் அடிபட்டுக் கொண்டாளாம்.
அதில் நீ இடித்ததும் அதனால் தான் முறைத்தாளாம்.
ஸாரி என்று சொல்லிட்டுப் போகிறாம்மா என்றான்.
அடப்பாவமே இது நம்ம கேசுன்னு அவளை நோக்கிக் கையசைத்தேன்.

வீட்டுக்கு வந்ததும் ஒரு மாறுதலுக்கு
ஆனியன் ரசம் செய்யலாமாடா.
சூப் மாதிரியும் சாப்பிடலாம் என்றேன்.

சரி கொஞ்சமா செய்மா. குழந்தைகள் சாப்பிடுவார்களோ என்னவோ.''
என்றான்.
என் பரிசோதனைகளில் வளர்ந்தவன் இல்லையா.
 மருமகள் கோயிலுக்குச் சென்றிருந்ததால்,
சமையலறை என் வசம் வந்தது.
குட்டிக் கல்லுரலில் சின்ன வெங்காயம்,ஒரேஒரு பூண்டு,
கொத்தமல்லி  விரை, மிளகு சீரகம்,பச்சைக் கொத்தமல்லி,
துளி புளி இடித்துக் கொண்டு,
அடுப்பில் வாணலியை ஏற்றி
நல்லெண்ணெயில் சீரகம் வெடிக்க விட்டு,
இந்தக் கலவையை வதக்கி,
தண்ணீர் விட்டேன். பொடியாக நறுக்கிய
தக்காளித்துண்டுகளைப் போட்டு,
ஒரே ஒரு கொதி வந்ததும் அப்படியே நுரையோடு இறக்கி வைத்தேன்.
குழந்தைகள் ப்ரெட் டோஸ்ட்டுடன் ரசித்து சாப்பிட்டார்கள்.
மழைக்கு சூப்பர் ஜோர் ரசம்.
முன்பே எழுதி இருக்கிறேனோ என்னவோ.
பரவாயில்லை செய்து பாருங்கள்:)

Sunday, February 16, 2020

Breadப்ரெட் பணியாரம் ,.

வல்லிசிம்ஹன்
எல்லோரும் வளமாக  வாழ வேண்டும் 

  இன்றைய காலை உணவாக ப்ரெட் பணியாரம் ,.
என் மாமியார் சொல்லிக் கொடுத்ததைச்
செய்தேன்.
மாடர்ன் ப்ரெட் வந்த புதில் , ஒரு பாக்கெட் ஒரு ரூபாய்க்கு வாங்கிய நினைவு இருக்கிறது. பிறகு நீல்கிரியில் (ஸ்டொர்ஸ்).2 ரூபாய்க்கு பெரிய அளவில்
கிடைத்தது.
வாங்கின அன்றே தீர்ந்து விடும்.சிலசமயம் ,கணவரும் 
வாங்கி வந்து நானும் வாங்கி
இருந்தால் உடனே  அதை உபயோகிக்க
 வேண்டிய அவசியம் நேரும்.
இல்லாவிட்டால், ஒரு மாதிரி மஞ்சள், பச்சை நிறம் எல்லாம் வந்துவிடும்.
இந்த ஊரில் ஷெல்ஃப் லைஃப் இரண்டு வாரமாவது
இருக்கிறது. குளிர்ச்சியின் காரணமாக இருக்கலாம்.

இப்போது பணியாரத்துக்கு வரலாம்.
மீதி இருக்கும் ரொட்டித் துண்டுகளை மிக்ஸியில்
இட்டு பொடி செய்து கொண்டு, அத்துடன்,
(கண்ணளவுக்கு) சமமான கோதுமை மாவும், அரிசிமாவும்,
தயிரும் சேர்த்து மாவாக்கி அரைமணி நேரம் வைக்க வேண்டும்.

இந்தக் கலவையில் வழக்கம் போல் 
ப.மிளகாய், வெங்காயம், கொத்தமல்லி,
உப்பு கலந்து கொண்டு,
பணியாரக் குழிகளில் போட்டு எடுக்க வேண்டும்.
எளிமையான, மொறு மொறு பணியாரம் தயார்.

Friday, February 14, 2020

௧ொள்ளுப் பருப்பு சாம்பார் | Village food Paruppu Sambar | Village cookin...

வல்லிசிம்ஹன்

எங்க ராணியைப் பற்றி எழுதின முகூர்த்தம்
 தோழி ஒருவர் இந்த லிங்க் அனுப்பி இருந்தார். ராணி சொன்னது கண்முன்னால் நடப்பது
போலிருக்கிறது.
இந்த அம்மாவின் வெள்ளைப்பற்களும், அவர் சிரிக்கும் அழகும் என்ன்வென்று சொல்வது.
அமிர்தம். கொள்ளுக் குழம்பாம்.

Thursday, February 13, 2020

எங்கள் வீட்டு ராணியின் சமையலில் அவியல்

வல்லிசிம்ஹன்
எல்லோரும் வளமாக வாழ வேண்டும்.

எங்கள் வீட்டு ராணியின்  சமையலில் அவியல் 

Image result for GRANDMA SAMAYAL AVIAL

ராணி எங்க வீட்டு மெய்க்காப்பாளர், உதவி வேலை செய்பவர், அவரும் ,அவர் வீட்டுக்காரர்  திரு அருணாச்சலமும்  எங்கள் வீட்டைப் பொன் போலக்  காத்து வருகிறார்கள்.
கடந்த ஐப்பசி மாதப் பதினைந்து நாட்களில் ஒரு மத்திய நேரம் என்னுடன் உட்கார்ந்து  பேசிக்கொண்டிருந்தாள்.

அம்மா வீட்டில சமைக்கவே இல்லையே, வெளி சாப்பாடு அலுக்கவில்லையா என்றாள் .
தண்ணிர்ப் பற்றாக்குறை, உடல் நலம் கெடுவது 
எல்லாவற்றையும்  அவளிடம் சொன்னேன்.

எப்படியோ இங்க உங்களால்  தங்க முடியவில்லம்மா  என்று வருந்தினாள் .
என் வருத்தமே  எனக்கு  இருந்ததால் 
பேச்சை மாற்றினேன்.

அன்னிக்கு ஒரு தடவை நீ சொன்னியே 
நான் செய்த அவியலில் காரமே  இல்லைன்னு ,
இப்பதான் உங்கள் செய்முறையைச் சொல்லேன்.
என்றேன்.

உங்களோடது உப்பு சப்பு குறைவாக இருந்தது  அம்மா.. நாங்க சிகப்பு ,மிளகாய், பச்சை மிளகாய் ,சின்ன வெங்காயம் 

மிளகு எல்லாம்   கூடுதலாகச் சேர்ப்போம் என்கிறாள் :)

அவியலில் வெங்காயமா  என்று சிரிப்பு வந்தது.
ஆமாம் மா, பொடி சாம்பாரும், அவியல்  கூட நல்லா இருக்கும்.

நம்ம வீட்டில கூடப் பொடி 
 போட்ட  சாம்பார் தான் செய்வேன் 
என்றதும் இந்த முறை அவள் சிரித்தாள் .
அது எங்க குழம்பு மாதிரி வராதுமா...நாங்க தினம் அம்மியில் அரைச்சு 
செய்வோம் அம்மா.
பொடி சாம்பார்னால் உரல்ல இடிச்சு செய்வது .

அமாவாசை,நல்ல நாள்ள  செய்வோம்.
உனக்கு எங்கே  நேரம் கிடைக்கும் . இவ்வளவு வீட்டில 
வேலைப்பாக்கறே." என்றேன் நான்.

மருமக செய்தால் அவருக்குப் பிடிக்கவில்லைமா.
அதனால  நானே செய்து  கொண்டுவந்து  விடுவேன்.
உணக்கியா சாப்பிடணும்  என்றாள் .

கொஞ்சம் வரமிளகா, வர கொத்தமல்லி,வெந்தயம், மஞ்சாப் பொடி 
எல்லாம்  சின்ன உரல்ல  போட்டுபொடிச்சுப்பேன்.
புளியில தக்காளியைப்  போட்டு நல்ல  தண்ணீர் விட்டுப் 
பிசைந்து   வைத்துக் கொள்வேன்.

அதை மசாலா செலவு  என்று சொன்னாள் .
அப்புறம்  என்ன  செய்வ என்றேன்.

நல்லெண்ண  இருப்புச் சட்டில விட்டுக் கடுகு ,
பெரிய வெங்காயம் ,ஆறு பச்சைமிளகா,பூண்டு,
போட்டு,முருங்கைக்காய்  ,கத்திரிக்காய்  வெடிப்பு போட்டு,
புளிக்கரைசலை விட்டு  நல்லாக கொதிக்க  விட்டு விடுவேன்.
அப்புறமா பொடிய போட்டு  ,கொத்தமல்லி,கட்டிபெருங்காயம்,கருவேப்பிலை எல்லாம் சேர்த்து இறக்கி விடுவேன்  என்றதும் 
அதிசயமாக அவளை பார்த்தேன்.
தினமுமே  இப்படிச் செய்யறியா?  என்றதும் 
ஆமாம்மா,  இதையே  இரண்டு வேளை க்கும் வச்சிப்போம்.

என்று  சொன்னாள் .எனக்கும் 60 வயசாகிறது. அவருக்கும் 70 வயசுப்பக்கம்.
நல்லா சாப்பிட்டாத்தானே 
மிச்ச  வாழ்க்கையும்   நல்லாப்  போகும்.
என்றவள்  கண்ணில் திடீர்க் கண்ணீர்,.

அவள்  குடும்பக் கதை  எனக்கும் தெரியும்.

ரொம்ப  மானஸ்தி .
பெரியவனி டம் சொல்லி    அவர்கள்  சம்பளத்தை  உயர்த்துவது அவளின்  சிரமங்களைக் குறைக்கலாம்.

என்று நினைத்த போதே,
என்  மனம்  லேசானது.
Image result for PODIK KUZHAMBU


















Tuesday, February 11, 2020

காய்கறி ஸ்டூ!

வல்லிசிம்ஹன்
எல்லோரும்
 வளமாக வாழவேண்டும்.


மருமகள் நல்ல சமையலில் சுவாரஸ்யம் காட்டுபவர்.

குழந்தைகள்  காய்கறிகள் சாப்பிடுவத்தில் 
இன்டரஸ்ட்   காண்பிக்க மாட்டார்கள். எப்பொழுதும் பாஸ்தா, பிரெட் டோஸ்ட், இல்லாவிட்டால் சிரியல்.

நல்ல வேலையாக உருளையும், ப்ரோக்கொலி (sinnavanukku)யும், 
கத்திரிக்காயும்  ,கீரையும்  (அக்கா )
பிடிக்கும்.
Image result for Migro

இருவருக்கும் நேற்று அடித்த காற்று ஒத்துக் கொள்ளாமல்
நல்ல  ஜலதோஷம் பிடித்து விட்டது. 

பள்ளி முடிந்து வரும்போது , சாப்பிட  மிளகு சீரகம் பொடித்து வறுத்த 
நிறைய நெய் கலந்த    பாசுமதி  சாதமும்,
உ.கிழங்கு, ப்ரோக்கோலி,காரட், சிகப்பு குடமிளகாய்,
மஞ்சள் குடமிளகாய், எல்லாம் சின்ன அளவில் நறுக்கி குக்கரில் வேக 
வைத்து,  

மற்ற எளிய  காரம் இல்லாத   வெங்காயம்,
கொத்தமல்லி தழை, நிறையத் தேங்காயத் துருவல் 
சேர்த்து அரைத்து,

இந்தக் காய்கறி கலவையுடன் சேர்த்து 
ஒரே ஒரு கொதி  
வந்ததும் இறக்கி விட்டாள் .

மூடி யே வைத்ததில்  பச்சை வாசனை போய் விட்டது.


சாப்பிட்டு விடுவார்கள் என்று நம்புகிறேன்.

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

உபரி செய்தி.
நேற்று  
கிழக்கு  ஐரோப்பா முழுவதும் அடித்த காற்று,

நியுயார்க்கிலிருந்து லண்டன் வந்த  விமானத்தை ஒன்றரை மணி முன்பே  கொண்டு வந்து விட்டதாம். 
ரெகார்ட் ஸ்பீட்.😉😉😉😉😉😉😹😹😹😹



Monday, February 10, 2020

உலக நீதி கதை 5 மூத்தோர் சொல்

வல்லிசிம்ஹன்,

எல்லோரும் வளமாக  வாழ வேண்டும்.

உலக நீதி கதை  5

Image result for grand parents and kids"மூத்தோர் சொல் வார்த்தை  மறக்க வேண்டாம் .

 அமெரிக்க விடுமுறை நாட்களில்  வீட்டுப்பாடம்  செய்த நேரத்தைத் 
தவிர மற்ற நேரம் தொலைகாட்சி முன் செல்கிறது.

அதுவும்  எனக்குப் புரியாத மைண்டகிராஃப்ட்.
நிலைகுத்திய கண்களுடன் பார்ப்பது கண்ணுக்கு கெடுதி என்று சொல்லிக் கொண்டே இருப்பேன்.
வெளியே விளையாடப் போக முடியாத நிலையில் அவர்களும் என்னதான் செய்வார்கள்.

எங்கள் காலத்தில்  ,பெரியவர்கள் இ ட்டதுதான் கட்டளை. உடனே செய்ய வேண்டும் மகிழ்ச்சியுடன் செய்தொம்.
வேறு ஒன்றும் நினைக்காத தெரியாது.
இப்போது பிறக்கும்போது கையில் அலைபேசி  மற்றும் தொலைக் காட்சி.
 ஜுராசிக் பார்க் சம்பந்தப் பட்ட  எல்லா விவரங்களும் 
அவனுக்கு கரதலைப் பாடம் .

அதேவேகத்தில்  ஓடும்போது காலில் அடிபட்டுவிட்டது.
துடித்துப் போய் விட்டான் வலி யில்.

என்னுடன் உட்கார வேண்டிய நிர்ப்பந்தம் வந்ததும்.
''உன்னுடன் கொஞ்சம் பேசலாமாப்பா' என்று கேட்டுக் கொண்டேன்.
அவனும் தலை ஆட்டினான்.
ஏற்கனவே முட்டியில் அடிபட்டு இருக்கிறது இல்லையா 
என்று கேட்டேன்.
ஓடி ஆடி  விளையாட வேண்டியதுதான்.
கண்மண் தெரியாமல்  ஓடக்கூடாது என்றேன்.
"
ஓடாமல் விளையாட முடியாது பாட்டி."
தாத்தா கூட சொல்லுவாரே . நிறைய  ஓடணும் டான்னு.
சரிதான் அவர் சொன்னது பெரிய மைதானத்தில் ஓடணும் னு கண்ணா.
நீ சின்ன  வீட்டில்  இவ்வளவு  சோஃபா, நாற்காலிகள் மத்தியில் 
கண்ணைக்  கட்டிக் கொண்டு 
ஒரு அறையிலிருந்து  மற்ற அறைகளுக்குச் சென்று  வருவது சரியான்னு பாரு என்றேன்.

மாடிக்கு கூடத்தான் போய் வந்தேன். கீழேயும் போனேன் என்றான் நேர்மை வீரன்.😊😊😊😊😊
''குழந்தைகள்னா ஓடத்தானேம்மா  செய்யும்'',கோரசாகப் பாடிய 
மகன்,மருமகள்,மகள் .:)

ஆஹா. இளையோர்  வார்த்தைகளை நாமும் கேட்க வேண்டியதுதான்.
''எப்பொருள் யார் யார் வாய்''... நமக்கு மனப்பாடம் ஆன விஷயமே.
என் மதுரைத்தாத்தா  சொன்னது எல்லாம், பெரியவர்கள் வார்த்தையைக்  கேட்டு நடக்க வேண்டும் என்பதே. 

இப்பொழுது 65 வருடங்களுக்கு மேல்  விதிகள் 
மாறுகிறதோ.

ஆனாலும் நான் சொன்ன பிறகு  இரு பேரன் களும் 
நிதானித்து நடந்தார்கள் என்றதால்  நிம்மதியே  எனக்கு.

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

















Thursday, February 06, 2020

மசாலா வாழைக்காய்.

வல்லிசிம்ஹன்

எல்லோரும் வளமாக  வாழ வேண்டும்.

இன்று வாழைக்காயைப் புது முறையில் செய்யும்
குறிப்பு ஒன்று கிடைத்தது. இந்த ஊரின் எல்லையில், ஜெர்மனியின் எல்லை. அதில்
ஒரு இந்திய உணவு விடுதி. இலங்கைத்தமிழர்கள், ஜெர்மானியர்கள் என்று பல பேர் இருந்தார்கள்.

அது ஒரு சைவ அசைவ உணவகம் என்பதால் கொஞ்சம் தயக்கமாக
இருந்தது.

நாங்கள் கேட்டுக் கொண்ட வகைகளில் 
எண்ணெய்க் கலப்போ, அசைவ ஸ்டாக் கலப்போ
இல்லாமல் கவனம் வைக்குமாறு வேண்டிக்கொண்டோம். அவர்களும் தாங்கள்
இந்திய சைவ முறையைப் 
பின்பற்றுவதாகவும். கறி மசால் சேர்த்து வாழைக்காய்
செய்திருப்பதாகவும் மெனு கார்டில் காட்டினார்கள்.
அது கொஞ்சம் வினோதமாக இருந்தாலும்
எங்க அப்பா சொல்லும் கடல் வாழைக்காய் நினைவு
வந்து சிரித்துவிட்டேன்.
மீன் செய்ய இந்த மசாலா உபயோகப் படுத்துவீர்களோ
என்றும் அந்த இளைஞரைக் கேட்க அவர் ஒரு கணம் திகைத்தார்.
 என் ஏற்காட்டுத் தோழி அசைவம் செய்வதில் அரசி.(எதிர் வீட்டில் இருந்தவள், பெயர்   ராஜகுமாரி  )

வெள்ளிக்கிழமை அசைவம்    சாப்பிடாத நாட்களில் 
இது போல மசாலா சேர்த்து உ.கிழங்கு செய்து எனக்கும் கொடுத்தனுப்புவாள்.
மாமியாருக்கு ஒரே சந்தேகமாக இருக்கும்,
 உன்னையும் நான் வெஜ்க்குப் பழக்கி விட்டு விட்டாளா 
என்று கேலி செய்வார். இல்லம்மா. நான் அவளுக்கு நேத்திக்கு அரிசி உப்புமா அனுப்பினேன்.
அந்த டப்பாவில் இந்த உருளைக் கிழங்கு 
கரேமது அனுப்பி இருக்காள் என்று காண்பிப்பேன்.

சிம்முவுக்கு எடுத்து வச்சுட்டு நீங்க எல்லாம் சாப்பிடுங்கோ.
என்பார்:)
 சிங்கம்  ஏற்கனவே  அங்கே சாப்பிடப் போயிருப்பது அம்மாவுக்குத் தெரியாது!!
இப்பொழுது இந்த மசாலாவைப் பார்த்ததும் எனக்குப் 
புரிந்துவிட்டது.

தேவையான பொருட்கள்.

1, 4  , நான்கு பெரிய வாழைக்காய்,

ஒரு பெரிய தேங்காயின்  ஒரு மூடி துருவியது,
சின்னவெங்காயம்  400 கிராம் உரித்தது 
பூண்டு,இஞ்சி,மஞ்சள்,தனியா,    பச்சை மிளகாய்  எல்லாம் பச்சையாக அரைத்த 
கலவை ஒரு கிண்ணம்,

பெரிய வெங்காயம் அரிந்தது ஒரு கிண்ணம்,,
கறிமசாலா  ...சோம்பு,கசகசா ,லவங்கம்,பட்டை,ஏ ல க் காய்  ஒவ்வொன்றும் 
 ஒரு தேக்கரண்டி அளவில்  சேர்த்துப் பொடி செய்து கரைத்துக் கொண்டது 
ஒரு கிண்ணம் 

உப்பு , எலுமிச்சை அளவு புளி .

செய்முறை.

மொந்தன் வாழைக்காயை சதுரம் சதுரமாகப் பெரிய அளவில் நறுக்கி சிறிது உப்பு மஞ்சள் பொடி  போட்டு 
லேசாக வேக  வைத்து உலர விடவேண்டும்.
சின்னவெங்காயம், தேங்காய், தனியாக அரைத்துக்  கொள்ளணும்.
மசாலா பொருட்களைத் தனியாக அரைத்துக் கொண்டு,

ஒரு வாணலியில்  நிறைய நல் எண்ணெய்  விட்டு சின்னவெங்காயத் தேங்காய் கலவையை பழுப்பு நிறத்தில் வதக்கித் தனியாக வைத்துக் கொண்டு,
பெரிய வெங்காயம் போட்டு அதை வதக்கியதும் 
கறி  மசாலாவைச்  சேர்த்து வதக்க வேண்டும்.
இன்னொரு வாணலியில்  எண்ணெய் விட்டு,
சீரகம் வெடிக்க விட்டு, புளியைக் கெட்டியாகக் கரைத்துவிடவேண்டும் ,
புளி  கொதித்து  கெட்டியானதும்  வாழைக்காய்த் துண்டுகள் அரைத்த விழுதுகள்  அத்தனையையும்   சேர்த்துப் பிரட்டி எடுக்க வேண்டியதுதான். ஜம்மென்று   ருசியாக இருக்கும்.

ஸ்ஸ்ஸ்ஸ்  அப்பாடி இத்தனை வேலை கொள்ளும் 
இந்த கரியமுதை  25 வருடங்கள் கழித்து இங்கே பார்த்தேன்.

நான் செய்யாததால் இதை படம் எடுக்கவில்லை.

அதே  காரணத்துக்காக  எங்கள் ப்ளாகுக்கும் அனுப்பவில்லை.

Experts comments are welcome:)😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇

Image result for RAW BIG SIZE BANANA






Sunday, February 02, 2020

வம்பு பேசுவது தீய பழக்கம் என்பதே உலக நீதி.

வல்லிசிம்ஹன்

தொடர்ச்சி  முந்தைய பதிவு  பப்லிஷ் ஆக மறுத்தது .
இதோ இன்னொரு  எழுத்து.

 இந்தப் பாடலைப் படித்துக் காண்பிக்கவும் சரியான நேரம் 
வந்தது.
 பேரனுக்கு அவன் தோழன் யாரையோ பற்றி இவனிடம் சொன்னது 
பாத்தித்து விட்டது.
Is it true Paatti? என்று கேட்டுக் கொண்டே இருந்தான்.
சொன்னவன் இந்த ஊர்க்காரன். 
சொல்லப்பட்டவனும் இந்த ஊர்க்காரர்கள்.
அவர்களது பெற்றோர் பிரிந்து விட்டதாக சேதி.

இவனைப் பாதித்தது.
குழந்தை வயதிலேயே இந்த வம்புகள் வேண்டாமே
என்று தோன்றியது.
அப்படி ஏதாவது கேட்டால், உனக்கும் அதற்கும் சம்பந்தம் இல்லை 
அப்பா.
அவரவர் வாழ்க்கையை அவரவர் பார்த்துக் கொள்வார்கள்.
நாளடைவில் சரியாகிவிடும் என்று சொல்லிவைத்தேன்.

இன்னோரு தடவை இது போல் பேச்சு வந்தால் 
பாஸ்கெட் பால், ஃபுட்பால் என்று பேச்சை மாற்றிவிடுடா
பையா. வம்பு பேசுவது மிகத் தவறு.
நமக்கு அது நஷ்டமே தவிர லாபம் ஒன்றில்லை
என்று சொல்லிவைத்தேன்.
மகன் வந்ததும் மருமகள்,பேத்தி எல்லோருமாக உட்கார்ந்து,
பழைய கால விளையாட்டான ,வாக்கியம் கடத்துதலை விளையாட
ஆரம்பித்தோம்.
The cow jumped over the moon like a fork and spoon''
என்கிற நீண்ட வாக்கியம் ஐந்து காதுகளில் 
புறப்பட்டு வந்த போது cow and moon ate with fork and spoon
என்று விஸ்வரூபம் எடுத்தது.
சின்னவனே சிரித்து விட்டான்.
சிறிது நேரத்தில் கொஞ்சம் தெளிவு வந்தது.
வம்பு பேசுகிறவரிடம் நட்பு வேண்டாம் என்று அவனுக்குப் புரிந்ததா

என்று இனிதான் தெரியும்.    வம்பு பேசுவது தீய பழக்கம் என்பதே உலக நீதி.

உலக நீதி 4.

வல்லிசிம்ஹன்


எல்லோரும் வளமாக  வாழ வேண்டும் .
உலக நீதி   4.

//வார்த்தை சொல்வார் வாய்பார்த்துத் திரியவேண்டாம்
மதியாதார் தலைவாசல் மிதிக்க வேண்டாம்
மூத்தோர்சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்
முன்கோபக் காரரோடு இணங்க வேண்டாம்
வாத்தியார் கூலியை வைத்திருக்க வேண்டாம்
வழிபறித்துத் திரிவாரோடு இணங்க வேண்டாம்
சேர்த்த புகழாளன் ஒரு வள்ளி பங்கன்
திருக்கை வேலாயுதனை செப்பாய் நெஞ்சே//

Image result for Gossiping
 இந்தப் பாடலைப் படித்துக் காண்பிக்கவும் சரியான நேரம் 
வந்தது.
 பேரனுக்கு அவன் தோழன் யாரையோ பற்றி இவனிடம் சொன்னது 
பாத்தித்து விட்டது.
Is it true Paatti? என்று கேட்டுக் கொண்டே இருந்தான்.
சொன்னவன் இந்த ஊர்க்காரன். 
சொல்லப்பட்டவனும் இந்த ஊர்க்காரர்கள்.
அவர்களது பெற்றோர் பிரிந்து விட்டதாக சேதி.

இவனைப் பாதித்தது.
குழந்தை வயதிலேயே இந்த வம்புகள் வேண்டாமே
என்று தோன்றியது.
அப்படி ஏதாவது கேட்டால், உனக்கும் அதற்கும் சம்பந்தம் இல்லை 
அப்பா.
அவரவர் வாழ்க்கையை அவரவர் பார்த்துக் கொள்வார்கள்.
நாளடைவில் சரியாகிவிடும் என்று சொல்லிவைத்தேன்.

இன்னோரு தடவை இது போல் பேச்சு வந்தால் 
பாஸ்கெட் பால், ஃபுட்பால் என்று பேச்சை மாற்றிவிடுடா
பையா. வம்பு பேசுவது மிகத் தவறு.
நமக்கு அது நஷ்டமே தவிர லாபம் ஒன்றில்லை
என்று சொல்லிவைத்தேன்.
மகன் வந்ததும் மருமகள்,பேத்தி எல்லோருமாக உட்கார்ந்து,
பழைய கால விளையாட்டான ,வாக்கியம் கடத்துதலை விளையாட
ஆரம்பித்தோம்.
The cow jumped over the moon like a fork and spoon''
என்கிற நீண்ட வாக்கியம் ஐந்து காதுகளில் 
புறப்பட்டு வந்த போது cow and moon ate with fork and spoon
என்று விஸ்வரூபம் எடுத்தது.
சின்னவனே சிரித்து விட்டான்.
சிறிது நேரத்தில் கொஞ்சம் தெளிவு வந்தது.
வம்பு பேசுகிறவரிடம் நட்பு வேண்டாம் என்று அவனுக்குப் புரிந்ததா
என்று இனிதான் தெரியும்.