Blog Archive

Monday, February 17, 2020

வெங்காய ரசம்

வல்லிசிம்ஹன்

எல்லோரும் வளமாக  வாழவேண்டும்   

 வெங்காய ரசம்.
+++++++++++++++++++++
சின்ன வெங்காயம் தமிழ்க் கடையில் கிடைத்தது.
கூடவே ,முருங்கைக்காய்,   கொத்தவரங்கா, பீர்க்கங்காய் எல்லாம் கிடைத்தது. நானும் மகனுடன் டவுனு பக்கம் போயிருந்தேன்.
அரிசி வாங்கிக்கொண்டு இவைகளையும் சேர்த்து பைக்குள் போட்டுத் திரும்பும்போது
"கண்ணா நீ தூங்கடா' பாட்டைப் போட்டதும்
ப்ரேக் போட்டு நின்றேன்.
அம்மா ஃப்ரீஸ் மோடுக்குப் போய்விடாதே.
மழை வருகிறது.
எட்டாம் நம்பர் டிராமைப் பிடிக்கணும்னு வலுக்கட்டாயமாக
இழுத்துவந்தான். ஹூம் இழுக்கக் கூடிய உடம்பா இது:)

ஜன்னல் வழியும் மழை சரங்களைப் பார்க்கும் ஆர்வத்தில் ஒரு வெள்ளைத்
தோலின் மேல் என் கை பட்டுவிட்டது.
அந்த அம்மா முறைத்த வேகத்தில் சீட்டொடு முடிந்தவரை
ஒட்டிக் கொண்டேன்.
இறங்கும் இடம் வந்ததும் அவர் சிரமப்பட்டு இறங்கினார்.
தன் கையைக் காண்பித்து ஏதோ சொல்லி விட்டுப் போனார்.
மகனைத் திரும்பிப் பார்த்தேன்.
அவள் டிராமில் ஏறும்போது முழங்கையில் அடிபட்டுக் கொண்டாளாம்.
அதில் நீ இடித்ததும் அதனால் தான் முறைத்தாளாம்.
ஸாரி என்று சொல்லிட்டுப் போகிறாம்மா என்றான்.
அடப்பாவமே இது நம்ம கேசுன்னு அவளை நோக்கிக் கையசைத்தேன்.

வீட்டுக்கு வந்ததும் ஒரு மாறுதலுக்கு
ஆனியன் ரசம் செய்யலாமாடா.
சூப் மாதிரியும் சாப்பிடலாம் என்றேன்.

சரி கொஞ்சமா செய்மா. குழந்தைகள் சாப்பிடுவார்களோ என்னவோ.''
என்றான்.
என் பரிசோதனைகளில் வளர்ந்தவன் இல்லையா.
 மருமகள் கோயிலுக்குச் சென்றிருந்ததால்,
சமையலறை என் வசம் வந்தது.
குட்டிக் கல்லுரலில் சின்ன வெங்காயம்,ஒரேஒரு பூண்டு,
கொத்தமல்லி  விரை, மிளகு சீரகம்,பச்சைக் கொத்தமல்லி,
துளி புளி இடித்துக் கொண்டு,
அடுப்பில் வாணலியை ஏற்றி
நல்லெண்ணெயில் சீரகம் வெடிக்க விட்டு,
இந்தக் கலவையை வதக்கி,
தண்ணீர் விட்டேன். பொடியாக நறுக்கிய
தக்காளித்துண்டுகளைப் போட்டு,
ஒரே ஒரு கொதி வந்ததும் அப்படியே நுரையோடு இறக்கி வைத்தேன்.
குழந்தைகள் ப்ரெட் டோஸ்ட்டுடன் ரசித்து சாப்பிட்டார்கள்.
மழைக்கு சூப்பர் ஜோர் ரசம்.
முன்பே எழுதி இருக்கிறேனோ என்னவோ.
பரவாயில்லை செய்து பாருங்கள்:)

26 comments:

கோமதி அரசு said...

சூப் மாதிரி செய்து இருக்கிறீர்கள்.
சூப்பூக்கு புளி, மல்லி, சீரகம் கிடையாது. மற்றபடி வெங்காயம், பூண்டு மிளகு சோம்பு உண்டு.
குழந்தைகள் ரசித்து சாப்பிட்டார்களே அது போதும்.

KILLERGEE Devakottai said...

வெங்காயத்தில் ரசமா ?

Geetha Sambasivam said...

எங்களுக்கு ரொம்ப அதிகம் தெரிஞ்ச நண்பர் ஒருத்தர் சவேரா ஓட்டலில் செஃப் ஆக இருந்தார். அவர் அடிக்கடி இம்மாதிரி ரசம் புதினாவும் சேர்த்துச் செய்வார். அதற்குப் புதினா, வெங்காய ரசம் என்றே பெயர் சூட்டி இருந்தார். கிட்டத்தட்ட சூப் தான்! ப்ரெட் டோஸ்டுடன் தான் நன்றாகவும் இருக்கும்.

நெல்லைத் தமிழன் said...

அட... புதிய ரசமாக இருக்கிறதே... செய்துபார்க்கிறேன், கிச்சன் என் வசம் வரும் சமயத்தில். ஆனா, பசங்க, 'அம்மா செய்யும் ரசம் போல பண்ணுங்கப்பா'ன்னு சொல்லாம இருந்தால் சரிதான்.

வெங்கட் நாகராஜ் said...

வெங்காய ரசம். புதியதாக இருக்கிறது.

சின்ன வெங்காயம் இங்கே கிடைக்கிறது - செய்து பார்க்கிறேன் மா...

வல்லிசிம்ஹன் said...

இரவு சாப்பாட்டுக்கு ரசம் தேவையாக இருந்தது மா.
அதுதான் செய்ய வேண்டி வந்தது. குழந்தைகளுக்குப் பிடித்தது தான்'
அதிசயம். நன்றி கோமதி மா.

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் அன்பு தேவகோட்டைஜி.
சேலத்தில் இருந்த போது அங்கு என் உதவிக்கு இருந்த
வேனியம்மா சொல்லிக் கொடுத்த குறிப்பு. எங்க வீட்டுக்காரருக்கு மிகவும் பிடிக்கும்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கீதாமா,
சவேராவில் இருந்ததா, புதினா சேர்த்தால் நன்றாக இருக்குமே.
எனக்குத் தோன்றாமல் போச்சே.
இந்த ரசம் , சேலத்தில் இருந்தபொது கற்றுக் கொண்டது.

குழந்தைகளுக்குக் காரமே ஆவதில்லை. எல்லாம் கொஞ்சம் கொஞ்சம் போட்டுக் கொதிக்க வைத்து வெண்ணெயும் போட்டுக் கொடுத்தேன்.

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் முரளிமா. அவர்களுக்குப் பிடித்த மாதிரி செய்து சூடாக இருக்கும் போது க்ரீம்
இல்லாவிட்டால் வெண்ணெய் போட்டுக் கொடுங்கள்.:)

வல்லிசிம்ஹன் said...

அன்பு வெங்கட்,
இரண்டு சின்ன வெங்காயம் போதும். ஒரு பூண்டுப் பல். இப்போ
கீதாமா புதினா வேறு சொல்லி இருக்கிறார்.
செய்து பார்க்கவும். ஆதிக்குத் தெரிந்திருக்கலாம்.

Angel said...

டிராம் அனுபவம் நம்மெல்லாருக்கும் அமைவது தான் .மன்னிப்பு கேட்டாரே அதுவே பெரிய விஷயம் .அவருக்கு மனசு உறுத்தியிருக்கும் தன்  வலிக்கு உங்களை முறைச்சிட்டாரேன்னு .
சூப் ரசம் நானும் இப்படித்தான் செய்வன்ம்மா ஆனா ஒரு துண்டு தேங்காய் இடிப்பானில் இடிச்சோ தட்டியோ சேர்ப்பேன் சீரகத்துடன் .

ஸ்ரீராம். said...

செய்து பார்த்து விடுகிறேன்.  முன்னொருதரம்  நான் ரெகுலர் ரசத்தில் வெங்காயத்தை அரைத்துச் சேர்த்திருக்கிறேன்.

ஸ்ரீராம். said...

//வெங்காயத்தில் ரசமா ?//


இல்லை ஜி...   ரசத்தில் வெங்காயம்!!!

:)))

priyasaki said...

வெங்காயத்தில் ரசம்.... நான் ஒருபோதும் ரசத்தில் வெங்காயம் சேர்த்ததில்லை. வல்லிம்மா. உங்க செய்முறையின் படி செய்துபார்க்கிறேன்.

Anuprem said...

வெங்காய ரசம்...ரொம்ப புதுசா இருக்கு மா...

செஞ்சு பார்க்கணும்...

Anonymous said...

இதை வெங்காய ரசம் என்று சொல்வதை விட, சூப் ரசம் என்பதே சரியாக இருக்கும். ரசத்தின் மணம் இங்கு வீசுகிறது. நீங்கள் புகைப்படம் போடாவிட்டாலும், விவரித்த விதத்தில் கண்முன் வந்து விட்டது. 

Bhanumathy V said...

என் பாட்டி குட்டி கத்தரிக்காயில் சாம்பார் ரசம் என்று ஒன்று செய்வார். மேல் தெளிவை ரசமாகவும், அடி வண்டலை சாம்பராகவும் சாப்பிடலாம். மிகவும் நன்றாக இருக்கும். என் பாட்டிக்குப் பிறகு வேறு யாரும் அதை செய்யவில்லை. உங்களுக்குத் தெரிந்தால் பகிருங்களேன். 

முற்றும் அறிந்த அதிரா said...

வித்தியாசமாக இருக்கு வல்லிம்மா, முயற்சிக்கிறேன்.. ஒரு பல்லுப் பூண்டு மட்டும்தானா போட்டீங்க.. அதனாலதான் வெங்காய ரசம் எனப் பெயரோ...

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஏஞ்சல், மிகப் பெரிய உண்மை,

லண்டன் வந்த போது கூட இவ்வளவு
வித்தியாசம் தெரியவில்லை.
இவர்களுக்கு நமக்கும் பக்கத்து ஊர்க்காரர்களுக்கும்
அடையாளம் கண்டுபிடிக்க முடியவில்லை.
இப்போ இந்த வைரஸ் வேற வந்துடுத்தா
விசேஷம் தான். ஓரியண்டல்ஸ் பார்த்தாலே
பயம் வருவதாகச் சொல்கிறார்கள். பதிவை
சரியாகப் படிப்பவர்களில் நீங்களும் ,கீதா ரங்கன்,அதிரா
கீதா சாம்பசிவம்,கோமதி அரசு எல்லொரும் பெரிய சப்போர்ட்.:)தேங்காய் சேர்ப்பீர்களா .மிகச் சுவை.
நன்றி டா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஸ்ரீராம்,

ஏற்கனவே செய்தாச்சா. அதுதான் நல்ல முயற்சி. புதினாவையும்
கீதா சொன்ன மாதிரி செய்து பாருங்கள்.நேரம் கிடைக்கட்டும்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு அனானி,
மிக நன்றி.
ரசம் செய்தபோது ஆடியன்ஸாக குழந்தைகள்
இருந்ததால் படம் எடுக்க முடியவில்லை.

இதுவரை செய்ததில்லை என்றால்
செய்து பாருங்கள்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு அம்மு ப்ரியசகி,
நன்றி அம்மா. சின்ன வெங்காயத்துக்கு எப்போதும் நல்ல
மணம்.செய்து பாருங்கள்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு பானுமா,
அப்பா, பொதுவாக சமையல் செய்யும்போது

ரசத்தைக் கலக்கினால் சாம்பார்,
சாம்பார் தெளிந்தால் ரசம் என்று ஹோட்டல்
சாப்பாட்டைச் சொல்வார். உங்கள்
பாட்டி இப்படி ஒரு அதிசயமாக்வே செய்திருக்கிறாரா.

எங்கள் மாமி ஒருவர் இது போல்ச் சமையல் குறிப்புகள் சேகரிப்பார்.
அவர் மகளிடம் கேட்டுச் சொல்கிறேன். கேட்கவே சுகமாக இருக்கிறது.
மிக மிக நன்றி மா.புதுத் தகவல் கொடுத்ததற்கு
மனம் நிறை நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு அதிரா, இனிய காலை வணக்கம்.

ஆமாம் பா, எப்பவும் பூண்டு பெயரே வருகிறது.
பாவம் இல்லையா நம்ம சின்ன வெங்காயம்.
அதுதான் ரசத்தில் போட்டு விட்டேன் மா.

Geetha Sambasivam said...

அது தான் ஒரிஜினல் ரசவாங்கி வல்லி & பானுமதி. தஞ்சை ஜில்லாவில் வறுத்து அரைத்த கூட்டை ரசவாங்கி என்பார்கள். என் அம்மா இப்படித் தான் செய்வார். சின்னச் சின்னக் கத்திரிக்காய்களாக முழுசாகப் போட்டு அன்று தொட்டுக்க அப்பளம் மட்டுமே தே.எண்ணெயில் பொரிப்பார். கத்திரிக்காய்ப் பிரியர்களான நாங்க 3 பேரும் போட்டி போட்டுக் கொண்டு சாப்பிடுவோம்.

மாதேவி said...

எங்கள் அம்மா இந்த ரசம்தான் செய்வார்.