Blog Archive

Tuesday, February 25, 2020

இனிய உகாதி வாழ்த்துகள்.2020

வல்லிசிம்ஹன்



Thursday, March 24, 2011

பேரைச் சொல்லவா ...அது நியாயமாகுமா:)



அன்பு  சாரல் அழைத்து நானும் எழுத வந்துட்டேன். பெயருக்கான வரலாறு:)
நன்றி  மா

அம்மா என்னைக் கருவில் தரித்தது ஸ்ரீவில்லிபுத்தூரில்.

தாயார் வீடு  சென்னை. அம்மாவின் அப்பாவுக்கு  புதிதாகப் பிறந்த பேத்தியின்
மீது  மிகுந்த  பாசம்.
புண்யாஹ வசனம் என்று குழந்தை பிறந்த பதினோறாம் நாள் பெயர் வைக்கும் ஏற்பாடு.
நெல்லையிலிருந்து தந்தை வழிப் பாட்டி தாத்தாக்களும், அத்தைகளும்
 சித்தப்பாக்களும் வந்துவிட்டார்கள்.
அப்பா ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து வந்தார்.
புரசவாக்கம் வெள்ளாளத்தெரு வீடோ சிறியது. இருந்தும் பக்கத்துவீட்டில் சாப்பாடு பரிமாற
ஏற்பாடு செய்து  வீடு களை கட்டியது.
அம்மா வழி உறவினர்கள் அனைவரும் சென்னையில் தான்.
அம்மாவின் அத்தை,மாமாக்களும் அங்கே.
சேச்சிப் பாப்பாவுக்கு பொண்ணு பொறந்திருக்காம்.

முத்தண்ணா ஸ்பெஷல் நர்ஸ் போட்டு பிரசவம் பார்த்தானாமே.
''ஆமாம் முதல்  குழந்தைக்கு அப்படி ஆனதால் இந்தக் குழந்தையை இன்னும் தீவிரமாகக்
கவனிக்கணும்.
 இதுவும்  சின்னக் குழந்தையத்தான் இருக்கு.
பரவாயில்லை  தேத்தி விட்டுடலாம். ''
தாயும் சேயும் நலமாக இருக்க   வீட்டருகில் இருக்கும் பிள்ளையாருக்கு
 தேங்காய்கள் வேண்டிக் கொள்ளப் பட்டன.
ஸ்ரீனிவாசப் பெருமாளிடம்  அர்ச்சனைகள்.
இத்தனையும் செய்தும் பிறந்ததென்னவோ ஒரு வெள்ளை சைனா  பொம்மை போல
ஒரு சின்னக் குழந்தை.

பாட்டி(மதுரை)'அட ராமா , நாராயணா,(எங்க அப்பா) என்னடா இப்படி ஒரு கண்ணு.
 மூக்கு இருக்கும் இடம் தெரியவில்லையே. கீத்து மாதிரி கண்ணு.இந்தப் பக்கம் தண்ணீர் விட்டால்
அந்தக் கண்ணுக்குப் போயிடும் போல இருக்கே""
என்று வழக்கம் போல பரிகாசம் செய்தாலும் ஆசையாக மடியில் எடுத்துவைத்துக் கொண்டு
தன் பெயரையே வைக்கும் படி சொல்லிவிட்டார்.
அதனால் முதல் பெயர் திருவேங்கட வல்லி!!
அம்மாவுக்கு  வில்லிபுத்தூர் பாவையின் மேல் அளவிட முடியாத பாசம். அதனால்
ஆண்டாள் என்றும் கூப்பிடுவதாக  ஏற்பாடு ஆச்சு.

மாமாக்கள் சும்மா இருப்பார்களா. குழந்தை பிறந்த அன்று ஜெமினி தயாரிப்பான 'சந்திரலேகா' படம்
வெளிவந்தது.

அதனால் மாடர்னா அந்தப் பெயரும் வைக்கணும் என்று வேண்டுகோள்.
ஆகக்கூடி மூன்று பெயர் நெல்லில் எழுதியாகி விட்டது.
வேறு யார் ''ரேவதி'' என்னும் பெயர் சொன்னார்களோ
தெரியவில்லை. அதுவும் சேர்ந்து கொண்டது.

கொஞ்சம் வருடங்களானதும் சுயமாக(!)ச் சிந்திக்கும் திறன் பெற்ற
ஆண்டாள், ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து  அப்பா, திருமங்கலத்துக்கு
மாற்றலாகி வந்து, ஆறாவது படிக்க திருமங்கலம் போர்ட்  உயர்நிலைப் பள்ளியில்
 சேரப் போனபோது, 'தன் பெயர் ரேவதி' என்று ஹெச்.எம்.
எனப்படும் தலைமை ஆசிரியையிடம் அறிமுகப் படுத்திக் கொண்டு
என்ட்ரன்ஸ் டெஸ்டும் எழுதியாச்சு.:)
ஆண்டாள் ''நா.ரேவதி'' ஆனது இப்படித்தான்.
பரீட்சைக்கு அழைத்து வந்தது  ஐந்தாவது வகுப்பு வரை படித்த ஆதாரப் பள்ளியின்
தலைமை ஆசிரியை, பெரிய டீச்சர்.
அதனால் பெயர் மாற்றுவது ஆண்டாளுக்குச் சுலபமாகிவிட்டது.
தேர்வு முடிந்து அழைத்துச் செல்ல வந்த அப்பாவின் கைகளில்
அந்தப் பள்ளியில் சேர்த்துக் கொண்டதற்கான ரசீதைக்  கொடுத்தார் ஆசிரியை.
பெயரைப் பார்த்ததும் அப்பாவுக்குச் சிரிப்பு வந்துவிட்டது.
''பிஞ்சிலே பழுத்ததா'? என்று  வேறு  ஒன்றும்  சொல்லாமல்
வீட்டுக்கு அழைத்துச் சென்று அம்மாவிடமும் சொன்னார்.
அம்மாவுக்கு அவ்வளவு   இஷ்டம் இல்லை.

''அதென்ன  தானே அழகி தம்புரான் பொண்டாட்டி' னு
அதிகப் பிரசங்கித்தனம்  என்று அலுத்துக் கொண்டார்.

இருந்தாலும் வீட்டில 'ஆண்டாளாகவும் வெளியில் ரேவதியாகவும்''
 இருக்க ஒப்புக் கொண்டார்.
இந்த நாள் வரை அதுவெ வழக்கமாகிவிட்டது.
திருமணத்தின் போது நான் ரேவதியாகவே ஆகிவிட்டேன்.
ஆண்டாள் என்னும் பெயரே ஏதோ ஒன்பதுகஜ மாமியைக் கர்நாடகமான
கோலத்தில் பார்ப்பது போல புகுந்த வீட்டில்  தோன்றியதாம்.!

பிறகு வலையுலகத்துக்கு வந்த போதுச் சரியாக ஐந்து வருடங்களுக்கு
முன்னால், நாச்சியார் பதிவும் வல்லிசிம்ஹனும் உருவானார்கள்.
பழைய பேரில் பாதி, கணவர் பேரில் பாதி.:)

மாற்றுப் பெயர் அவசியமா என்று யோசித்ததற்குப் பெரிய காரணம் ஒன்றும் இல்லை. ஏதோ ஏகப்பட்ட (எனக்கு)த்  தெரிந்த
நபர்கள் படிப்பது போலவும், ஓ நம்ம ரேவதியா இது:( என்று அவர்கள்
நினைத்துக் கொள்ளுவார்கள் என்ற நினைப்புதான் காரணம்:)))))

என்னவோ  நானும் பல அவதாரங்களில் நடமாடிக் கொண்டிருக்கிறேன்.:)))

இந்த மாதிரிப் பெயர் விவரம்,மாற்றம்,காரணம் பற்றி எழுத என் நண்பிகளை
அழைக்கிறேன்.
ஏற்கனவே எழுதி விட்டார்களோ தெரியாது.

அன்பு அக்கா  நைன் வெஸ்ட்  ''நானானி''
அன்பு  துளசிகோபால்
அன்பு  கீதா  சாம்பசிவம்,
அன்பு கோமதி அரசு(திருமதி பக்கங்கள்_)
அன்பு மாதங்கி
அனைவரும் முக்கிய வேலைகளில் இருப்பவர்கள். கொஞ்சம் நேரம் ஒதுக்கி
எழுத வேண்டுமாய்க் கேட்டுக் கொள்கிறேன்.

3 comments:

வெங்கட் நாகராஜ் said...

இனிய நினைவுகள்.

முன்பு எழுதியபோது படித்த நினைவில்லை மா...

மூன்று பெயர்கள்! எங்களுக்கு எப்பவும் வல்லிம்மா!

வல்லிசிம்ஹன் said...

இனிய காலை வணக்கம் வெங்கட். எப்பவும் உங்க அன்பு
உங்க்ளுக்கு உண்டு. இந்த ஆதரவுதான் என்ன நிறுத்தி
வைக்கிறது.

கோமதி அரசு said...

இனிய உகாதி வாழ்த்துக்கள்

நீங்கள் அழைத்து நானும் எழுதியது.
நீங்கள் அழைத்து நான் எழுதிய பதிவுகள் நிறைய.
அப்போது எல்லாம் தொடர் பதிவுகள் என்று வலைத்தளம் மிக சுறு சுறுப்பாய் இருந்தது. இப்போதும் எழுதுகிறார்கள் ஆனால் முன் மாதிரி இல்லை.

ஒருத்தரை இருத்தர் ஊக்கப்படுத்திக் கொண்டு எழுதி கொண்டு இருந்தோம்.

இப்போது நானும் இருக்கிறேன் என்ற அளவில் இருப்பை காட்ட எழுதி கொண்டு இருக்கிறேன்.