|
அருள்மிகு பூதத்தாழ்வார் |
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
மகனின் குடும்பம் இங்கு வந்து தங்கின அக்டோபர் மாதம் எப்படியாவது என்னை ஸ்ரீரங்கமாவது அழைத்துப் போக வேண்டும் என்று சொல்லி இருந்தான்.
பலப்பல வேலைகளைக்கு நடுவில் அந்த இரண்டு நாட்கள் விடுப்பு எடுப்பது கூடச் சிரமமாக இருந்தது.
அதனால் சோர்ந்து போய்விட்டேன்.
அப்பொழுதுதான் விஜய் தொலைக்காட்சியில் ஆழ்வார்கள்
தரிசனம் தொடரில் பூதத்தாழ்வார் சம்பந்தப் பட்ட செய்திகளைத் தொகுத்துக் கொடுத்ததைப் பார்க்க நேர்ந்தது.
கடல்மல்லை சிறப்பையும் , பூதத்தாழ்வார் அவதரித்த பெருமைகளையும்
வெகு அழகாகச் சொல்லி, மல்லையில் உறையும் தல சயனப் பெருமாளின் அவதார வைபவத்தையும் சொன்னார்கள்.
பல் நூறு ஆண்டுகளுக்கு முன்னால் நடந்த கதையாக இருக்க வேண்டும்.
கடவுளே நேரே வந்தார் என்றால் , அந்தக் காலமாகத்தான் இருக்கும்.
புண்டரீக மஹரிஷி என்ற முனிவர் திருமாலிடம் அளவிறந்த பாசம் வைத்தவர்.
கடல்மல்லையில் வசித்துவந்தவருக்கு நாளுக்கு நாள் பெருமாளை நேரில் காணும் ஆசையும் ஏக்கமும் அதிகரிக்க,
பாற்கடலில் தானே அவன் இருக்கிறான், இதோ கண்முன்னால் கடல் இருக்கிறது, இந்தத் தண்ணீரை இறைத்துவிட்டால் அவனைத் தரிசித்து விடலாம் என்று முழு முயற்சியில் இறங்கினார்.
அந்தச் சித்திரம் தான் மேலே இருக்கிறது.
சற்று யோசித்தால் நம் போன்றவர்களுக்கு இந்த நடவடிக்கை
சாதாரண மனநிலையில் இருப்பவர்கள் செய்யும் காரியமாகத் தெரியாது.
அவரோ மனித எல்லையைக் கடந்த பூரணர்.
தன் பெருமாள் தன்னை ஆளவருவான் என்ற பரிபூரண நம்பிக்கை
அவரை அசராமல் உழைக்க வைத்தது. எத்தனை ஆண்டுகள் கடந்தனவோ
...தண்ணீர் வற்றும் அடையாளமே தெரியவில்லை.
போகிறவர்கள் வருகிறவர்கள் எல்லாம் சிரித்துவிட்டுப் போனார்கள்.
அசராமல் தண்ணீரை இறைப்பதும் கரையில் கொண்டு போய்க் கொட்டிக்
கொண்டிருக்கும் தன் அடியானைப் பார்த்து மனம் கரைந்தார் பகவான்.
ஒரு நல்ல பகல் வேளையில் ஒரு வயோதிகராக முனிவர் முன் தோன்றினார்.
கருமமே கண்ணாயிருந்தவர் கண்ணுக்கு இந்தப் பெரியவர் எதற்கு வந்திருக்கிறாரோ என்று விசாரம் எழுந்தது.
வேலையை நிறுத்தாமல் என்ன வேண்டும் ஸ்வாமி என்று வினவ,
மிகவும் பசியாக இருக்கிறது,.
கொஞ்சம் உணவு ஏதாவது கிடைத்தால் தான் உயிர் தங்கும் என்று
சொல்கிறார்.
புண்டரீக ரிஷிக்கோ தர்மசங்கடம்.
கைவேலை அதுவும் கடவுளைக் காணும் வேலை , இதை விட்டுச் செல்வதா என்று யோசிப்பதைப் பார்த்ததும் நான் உங்கள் வேலையைப் பார்க்கிறேன் ,
நீங்கள் உணவு எடுத்து வாருங்கள்'' என்று சொல்ல, சரிவயோதிகரைப் பட்டினி போடுவது மிகவும் பாவம் என்று,'இதோ வருகிறேன்' என்று ஊருக்குள் சென்று உணவுக்கு ஏற்பாடு செய்து
திரும்புகிறார்.
கடற்கரையில் கிழவரைக் காணோம்,
கூவி அழைத்துப் பார்க்கும் போது இன்னோரு குரல் கேட்கிறது. ''இங்கெ
வாரும் ரிஷியே என்ற குரல் வந்த திசையைப் பார்த்தவருக்கு உடலெல்லாம் பரவசத்தில் நடுங்குகிறது. அங்கெ தரையிலேயே படுத்திருக்கிறான்
கார்வண்ணன்.
வலது கரம் சற்றே மேலே தூக்கி வா என்று அழைக்கிறது.
பாற்கடலில் , ஆதிசேஷனின் அரவணையில் ஸ்ரீதேவி பூதேவி சேவை செய்ய
துயில் கொள்ளும் பரந்தாமன்
தனக்காக இங்கே தரையில் படுத்துத் தரிசனம் கொடுத்தானே என்று உருகுகிறார்.
இவ்விதம் உருவான கோவில் தான் கடல் மல்லை ஸ்தல சயனப் பெருமாள்
சரிதான் அந்த ரங்கனைப் போய்ப் பார்க்க முடியாவிட்டால் என்ன, இவரும் தான் சயனம் கொண்டிருக்கிறார்.
எல்லாம் ஒன்றுதானே என்று மகனிடம் கேட்க அவனும் சரியென்று சொல்ல
ஒரு மாலை நேரம் ஒரு மணி நேரப் பயணத்தில் மாமல்லபுரம் அடைந்தோம்.
கோவிலுக்குக் கும்பாபிஷேகம் நடந்திருக்கிறது போல. நான் பத்துவருடங்களுக்கு முன் பார்த்த போது இருந்த பழைய கோவில் இல்லை. எல்லா சந்நிதிகளும் பளிச்சென்று இருந்தன.
பெருமாளுக்கு அர்ச்சனை செய்பவரும் பொறுமையாகத் தலபுராணம் சொல்லி, பெருமாளின் அழைக்கும் வலக் கரத்துக்கும் தீப தரிசனம் செய்து வைத்தார்.
முதலாழ்வார்கள் மூவரில் ஒருவரான பூதத்தாழ்வார்
சந்நிதியையும் திறந்து காணக் கொடுத்தார்.
மனதில் அவனை இருத்திவிட்டால் வேறேங்கும் தேடவேண்டாம்
என்று என்னையே சமாதானப் படுத்திய அந்தக் கடல்மல்லையானுக்கு நமஸ்காரங்கள்.
26 Comments:
Links to this post: