Wednesday, January 06, 2010

கவிஞன் இல்லை கவிதை உண்டு










கவிதை அமைக்க கவிஞன் முற்பட்டால்
கவிபாட இனிதே கருத்துகளும் உருவெடுக்கும்
இதமான உள்ளத்தில் இணைந்தே இசைபாடும்
பதமான பாடல்கள் பண்ணோடு அமையப் பெறும்.


கற்பனைகள் உருவாகக் கருத்துக்கா பஞ்சம்
கற்றறிந்த இலக்கியத்தில் காணாத கருத்துகளா
காற்றின் ஓசைக்கும் கானல் நீருக்கும்
காரிகையின் இன்மொழிக்கும் காளையின் முரசொலிக்கும்
கடலின் அலைகளுக்கும் கறுத்திருக்கும் மேகத்துக்கும்


கனவுகளின் இனிமைக்கும்காட்சிகளின் தெளிவுக்கும்
மழலையின் சிரிப்புக்கும் மானிடரி மமதைக்கும்
மண்ணின் பெருமைக்கு மாசற்ற சூழலுக்கும்
எளிமையான பதத்தில் ஏற்றமான பாடல்
எளிதாக அமையும் எண்ணத்தில் தெளிவிருந்தால்..

கண்ணிமைக்கும் நேரத்தில் கனிவான வண்ணத்தில்
கவிஞனின் எண்ணம் கவிதையிலே மின்னும்
N.Rengan

1952-2004.


எல்லோரும் வாழ வேண்டும்.

Sunday, January 03, 2010

484 ,பொன்னெழில் பூத்தது ....


அஜந்தா ஓவியங்கள்


மாவீரன் கல்




பீமன் வெண்ணெய்




சிவகாமியும் சுகப் பிரம்மமும்





குள்ளன்,நாகநந்தி





நரசிம்ஹா நரசிம்ஹா பல்லவன்







மாமல்ல பல்லவன் .


முதல்ல டிஸ்கி!! அப்புறம் உண்மையான பதிவு:)


இந்தப் பதிவு உண்மையாவே என்னுடைய 484 ஆவது பதிவுதான் என்று
உறுதியாகச் சொல்லுகிறேன்.:)
புதுவருஷத்தன்னிக்கு ஒரு பதிவு ஏற்கனவெ ஆரம்பித்ததைப் பூர்த்தி செய்து
பப்ளிஷ் செய்யலாம்னு பதிவைத் திறந்தால் ஏதோ சரியாக இல்லை என்ற உணர்ச்சி.
டாஷ்போர்டில ,எடிட் போஸ்ட் அழுத்தினா 15 பதிவுகள் அதுவும் ட்ராஃப்ட் ஆகவே இருக்கு என்று வருகிறது. அப்படியே ஸ்தம்பிச்சுப் போச்சு இதயம். என்னது மொத்தமே 15 பதிவா.! என்னடா இது
அப்படியே ஒரு சில்லுனு உணர்வு உடம்பெங்கும். திகிலடிச்சாப் போல. சரி பதிவை மூடிட்டு மீண்டும் திறந்தால் 483 என்று காட்டுகிறது.
இல்லையெ நேத்திக்கு 872 பார்த்த மாதிரி இருக்கே.
என்னவோ குழப்பம்.

ஏதோ துக்கம்.இப்படிக் கூட நடக்குமா. என்ன காணாமப் போச்சு. என்ன இருக்கு தெரியவில்லையே.
பகல் ஒரு மணி .
துளசிதளம் தூங்காத பார்ட்டி.
எடுடா போனை, போடுடா நம்பரைன்னு அவசர உதவிக்குக் கால் போட்டாச்சு. துளசி குரல் கேட்டதும் ஒரு பாடு,
திருவிழா கூட்டத்துல தொலஞ்ச குழந்தை மாதிரி ஒரு அழுகை. உண்மையாவே அந்த மனுஷி நடுங்கிப் போயாச்சு.
அப்புறம் நடந்ததெல்லாம் துளசிதளம்''பயப்ப்ராந்தி விசுக்கி விசுக்கி''ல பார்த்து மனசாரச் சிரிங்க:)
பழைய கால டாக்டர் ஸ்ரீதரின் வீட்டு வைத்தியம் புத்தகத்தில்,
மதுமேகம்னோ எதுவோ டயபெடிஸ் பற்றி படித்த நினைவுதான் வந்தது. சில வேளை ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமானா
பாதிக்கப் பட்டவங்களோட நடவடிக்கையும் சற்றே மாறுபடும்னு எழுதி இருப்பார்.
அன்னிக்குத் திருவாதிரைக் களியைக் கொஞ்சம் ருசி பார்த்ததுதான் காரணம் என்று தோன்றுகிறது. திரு ஸ்ரீதர் எழுதின வார்த்தைகளை
இப்ப முழுசா அதை நம்பறேன்.
மற்றவை அடுத்த பதிவில் சிவகாமி நரசிம்ம வர்மனோடு பார்க்கலாம் :)




எல்லோரும் வாழ வேண்டும்.

Wednesday, December 30, 2009

சென்னையில் பசுமை தேடி....

சென்னை ஹார்டி கல்சுரல் சொசைட்டிக்கும் எங்களுக்கும் நீண்ட நாட்கள் பந்தம் உண்டு.
இருப்பத்தாறு வருடங்களாக அங்கிருந்து செடிகள் கொண்டு வருவதும், செம்மண் , உரம் எல்லாம் வாங்கி வருவோம்.

நடுவில் மகன் பெங்களுருவில் வசித்த
நாட்களில் அங்கே இந்தோ அமெரிக்கன் சொசைடியில் இருக்கு,கள்ளி செடிகளும், கண்ணுக்கு இதமான வண்ணங்களோடு இருக்கும் பூச்செடிகளும் வாங்கி வந்து நட்டு அவை பெரியதாகி மீண்டும் சொசைட்டிக்கே விற்று விடுவோம்.
நேற்று மீண்டும் அங்கே போகவேண்டிய அவசியம்.
சிங்கம் சார் அவர் வேலையைப் பார்க்கப் போய் விட்டார்.
நான் வண்டியை விட்டு வெளியே வந்து அந்தப் பசுமையை அனுபவித்துக் கொண்டிருந்தேன்.
அனுமதி வாங்கிக் கொண்டால் இங்கேயேதினசரி நம் நடைப் பயிற்சியை வைத்துக் கொள்ளலாம் என்று தோன்றியது.



இதென்ன மரம் என்று தெரியவில்லை. பலாவோ?




நம்மை வீட்டில் இருப்பதை விட இன்னும் ஆரோக்கியமாக இருக்கும் தாவரங்கள்.
தண்ணிர் விடும் பெரியவர் எதோ பேசியபடி மண்ணைக் கெட்டிப் படுத்திக் கொண்டிருந்தார்.


இது எங்க வீட்டு அந்தூரியம் செடி. பக்கத்தில் மீனாட்சி இல்லாத தொட்டி.





கார்த்திகைக்கு வந்துவிட்ட மாங்கனி. மார்கழியில் சுவாமிக்கு அர்ப்பணம் செய்தாச்சு.இது ஒட்டு மாம்பழம், ''இமாம் பசந்த் '' என்று பெயர். ஸ்ரீரங்கம் தோட்டத்திலிருந்து வாங்கி வந்தது.
இன்று புத்தகக் கண்காட்சியும் ஆரம்பித்துவிடும்.
வலை நண்பர்கள் அனைவரின் புத்தகங்களும் கண்ணாரக் காணலாம். இன்று பாபாசி , ஒருங்கிணைப்பாளர் சொல்லியது போல, நம் தமிழ்ப் புத்தகங்கள் தான் விலை குறைவாம். முடிந்த அளவு வாங்கலாம்.
புதிது வாங்குவதற்கு முன், இருக்கும் புத்தகங்களை முடிக்க வேண்டும்.
திரு பாரதி மணி அவர்களின் பலநேரங்களில் பல மனிதர்களை ஆரம்பித்திருக்கிறேன்.
அருமையான சம்பவங்கள் சுவையாகக் கூறப்பட்டிருக்கின்றன.
அனைவருக்கும் வரும் புத்தாண்டு இனிமையும் ஆரோக்கியமும் செழிப்பும் வழங்க இறைவன் அருள் புரியட்டும் .






எல்லோரும் வாழ வேண்டும்.

Saturday, December 26, 2009

நெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலே நீராடி...

மார்கழித் திங்கள் பிறந்து நாட்களும் ஓடி விட்டன . இதோ இன்று வைகுண்ட பெருமாளின் ஏகாதசியும் சேர்ந்தது.

ஆண்டாள் இரண்டாவது பாசுரத்திலே கூறி விட்டாள் .நெய்,பால் சாப்பிட மாட்டோம் என்று. அதிர்ஷ்டவசமாக குடும்ப வைத்தியரும் உப்பைக் குறைக்கக் சொல்லிவிட்டார். :))
அதனால் நெய்யில்லாமல், உப்புக் குறைவா போட்டு மிளகு சீரகம்,இஞ்சி மட்டும் சானோலால வறுத்துப் போட்டு ,
தினம் அவருக்குக் கை காண்பித்துக் கொண்டிருக்கிறேன்.
பெரிய சிங்கம் சாப்பிட மறுக்கவில்லை.
ஆனால் எங்க வீட்டுக்கு உரிய சிங்கம் இதெல்லாம் பொங்கலா... என்று விச்வாமித்திரர் போலக் கை காண்பித்துவிட்டார் .:(( முந்திரிப்பருப்பு வேற இல்லையே :)




ஸ்ரீ ஆண்டாள்


ஸ்ரீ தாயார்

சரி,மையிட்டு எழுதோம்னு சொன்னாளேன்னு அதையும் செய்யறதில்ல. எப்பவுமே:)
செய்யாதன செய்யோம் ,தீக்குறளைச் சென்றோதோம்னும் சொன்னாங்க.
அவங்களுக்கு அது ஒண்ணும் சிரமமில்லை. எல்லோரும் ஊர் முச்சூடும் தோழிகள். நமக்கு அப்படியா.

இருந்தாலும் புறம் கூறாமல் இந்தப் பதிவை முடித்து விடுகிறேன்.
இன்று பொதிகையிலும் ,ராஜ் டிவியிலும்,ஜயா டிவியிலும் பரமபத வாசல் திறப்பதைக் கண்டு
நல்ல தரிசனமும் செய்தாச்சு.
அதிசயமாகத் தூக்கம் கண் விழித்தேனே என்று என்னையெ மெச்சிக் கொள்கிறேன்.
ஏதோ பெருமாளா திரு
உள்ளம்
வைத்து வானொலி அலார்ம் அடித்தது. அது என்னிக்கோ வைத்த அலார்ம்.
இன்னிக்குத் திருப்பாவை சொல்லி எழுப்பிய ஆண்டாளாக
செயல் பட்ட என் பழைய ரேடியோவுக்கு வணக்கங்கள்.
காலையிலெ எழுந்து பார்க்க முடியாதவர்கள் நாள் பூராவும் ஓடும் செய்திச் சானல்களில் வைகுண்ட ஏகாதசியைக் கொண்டாடலாம்.
இன்று முழுவதுமாவது
கண்ணன் தியானம் மனதில் இருக்க அவனையே பிரார்த்தித்துக் கொள்ளுகிறேன்.

எல்லொருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள். நலமாக வளமாக வாழ்வோம்.













பலராம ஸ்ரீ கிருஷ்ணன்


ஸ்ரீ முரளிதரன் .

பின் குறிப்பு.
இன்று நம் தோழி,சகவலைப் பதிவர்
திருமதி ராமலக்ஷ்மிக்குப் பிறந்த நாள். அவர்கள் சுற்றத்தோடும்,நட்போடும் சீரும் சிறப்புமாக வாழ இறைவனைப் பிரார்த்திக்கிறேன்
ஹாப்பி பர்த்டே ராமலக்ஷ்மி !


















எல்லோரும் வாழ வேண்டும்.

Friday, December 25, 2009

சென்னை -நான்கு லஸ் சாலையில் பூமியின் நேரம்

டிசம்பர் இருபத்தி மூன்றாம் தேதி வழக்கம்போலத்தான் சென்றது. சாயந்திரம் நான்கு மணிவரை. வந்திருந்த உறவினர்களும் கிளம்பினார்கள், அந்தக் சத்தம் பெரிதாகக் கேட்டது.
உடனே ஒரு தீய்ந்த வாசனை. மின்சக்தியும் போய்விட்டது.


அதான் இநவரட்டார் இருக்கு. மின்சாரம் வந்துவிடும் என்று அதன் பட்டனைத் தட்டினால் ஒ ''என்று காத்த ஆரம்பித்துவிட்டது. இதென்னடா இன்னிக்கு வந்த வேதனை என்று சலித்தபடி,சரி, போ . தானே சரியாகிவிடும் என்று ,ஒரு பொன்மாலைப் பொழுது என்று பாடிக் கொண்டே வாசலில் செடிகள் பக்கத்தில் நாற்காலியைப் போட்டுக் கொண்டு ,

என்ன இருந்தாலும் இந்தக் காற்றை உள்ளே அனுபவிக்க முடியுமா என்று நினைத்தபடி தி.ஜானகிராமனின் 'அன்பே ஆரமுதே' நாவலை விட்ட இடத்திலிருந்து படிக்க ஆரம்பித்தேன்.
குளிர் காலமாச்சே :) இருட்ட ஆரம்பித்துவிட்டது. கொசுக்கள் படையெடுப்பும் ஆரம்பிக்க, உடல் பயிற்சிக்குப் போயிருந்த சிங்கமும் வந்தார். ஏன் இருட்டில உட்கார்ந்திருக்க ? என்று கேட்டபடி உள்ள போய் விளக்கு ஸ்விட்ச் ஒவ்வொன்றாகப் போட்டுப் பார்த்துவிட்டு,, ஒ!பவர் இல்லையா. வந்துடும் அப்படினுட்டுப் பக்கத்து வீடுகளைப் பார்த்தார்.
ஒரே ஜகஜ்ஜோதியாக விளக்குகள் சுற்றிலும்.

அட, நம்ம வீட்ல தாம்மா இல்ல.''ஈ.பி '' கூப்பிடு என்று விட்டுக் குளிக்கச் சென்றார்.
அங்கயும் வெளிச்சம் இல்லாததால் ,
தேடும் படலம் ஆரம்பித்தோம்.
மெழுவர்த்தி எங்கே, டார்ச் எங்கே.
சாமான் வச்ச இடத்தில இருந்தா இந்தப் பிரச்சினை கிடையாது . தீப்பெட்டில இருந்து ,தேட வேண்டியதா இருக்கே என்ற முனுமுனுப்பு காதில் விழுந்தாலும் நான் நகருவதாக இல்லை.

இருட்டில மோதிக்க வேணாம் என்கிற நல்ல எண்ணம்தான்.!
197 அழைத்து, மாறின லஸ் (கம்ப்ளைன்ட்)நம்பரை அழைத்தால் அவர்கள் இதோ வருகிறேன்னு சொல்லி ஒரு மணி கழித்து வந்தார்கள்.
அப்போதான் புரிந்தது இந்த மின்வெட்டு மாயம். எங்க வீட்டிலிருந்து மூன்றாவது வீட்டை இடித்துவிட்டுப் புதிதாகக் கட்டும்போது, எங்கள் லைனிலிருந்து பிரித்துக் கேபிள் கொடுத்திருக்கிறார்கள். அது நம் மின்சாரத்தைத் துண்டித்து இருக்கிறது
இந்த நேரத்தில் யாரோட சண்டை போடுகிறது என்று நொந்தபடி ,

வந்த லைன்மேன் சொன்னபடி , இவர் பைக்கை எடுத்துப் போய் எக்ஸ்ட்ரா கேபிள் லைன் வாங்கி வந்தார். மணி ஒன்பதரை.
அதற்கு மேல் அவர்கள் வேலை ஆரம்பித்து நடுவில் காப்பி ,குடிக்கப் போய், மின்சக்தி வந்த பொழுது ,மணி பத்தரை.

அதற்குத்தான் இந்தத் தலைப்பு வைத்தேன். நாமளும் ஒரு ஆறு மணி நேரம் இருட்டில இருந்து பூமி நேரம் கொண்டாடி பூமியின் வெப்பத்தைத் தணித்து விட்டோம் என்று:)



எல்லோரும் வாழ வேண்டும்.

Thursday, December 24, 2009

அனைவருக்கும் கிருஸ்துமஸ் தின வாழ்த்துகள்

அன்பின் வழி அமைதியாக அமையப் பிறந்த
அருள் நிறை குழந்தை
பிறந்த நாள்,
வாழ்த்துகள் நண்பர்கள்,அன்பர்கள் அனைவருக்கும்.








எல்லோரும் வாழ வேண்டும்.

Wednesday, December 23, 2009

கள்ளிக்காட்டுப் பள்ளிக்கூடம்--டிவி தொடர்

தொலைக்காட்சியில் திரைப்படங்கள் அவ்வப்போது பார்ப்பது வழக்கம்.
இந்திப் படங்களில் அவ்வளவு ஈடுபாடு இல்லை. மருமகள் ஏதாவது சிபாரிசு செய்வார் .அப்போது கண்டு களித்துவிட்டு மீண்டும் பழைய
படி பழைய ஆங்கிலப் படங்களுக்கும், நினைவில் நிற்கும் தமிழ்ப் படங்களைப் பார்ப்பதே பழகிவிட்டது.
அப்போதுதான் விஜய் தொலைக்காட்சியில், ''கள்ளிக்காட்டுப் பள்ளிக்கூடம்'' பற்றி முன்னோட்டம் கொடுத்துக் கொண்டிருந்தார்கள்.

எங்கே பார்த்டலும் ஒரே கிராம மணம்னு படங்கள் எடுப்பது போல இதுவும் இன்னோரு சீரியல் என்று நினைத்தேன்.
ஆனால் அந்தப் பாடல் வரிகள் மிகவும் அருமையாக அர்த்ததோடு இருந்தன.
''படி படிபடி, தங்கப் பயலே படிதாண்டினாக் கவலை இல்லே''
என்று இசையோடு நல்லத் தமிழ். அதைக் கேட்டதும் பார்த்துத்தான் செய்வோமே என்று ஆவலோடு முதல் எபிசோட் பார்த்தென்.
கப்' என்று பிடித்துக் கொண்டார்கள் காரியான் பட்டிப் பசங்கள். ஆறு பசங்களும் மூன்று பெண்களும் பத்தாவது தேறின கையோடு, தேனியில் இருக்கும் மேல்நிலைப் பள்ளிக்கு ப்ளஸ் டூ படிப்புப் படிக்க ஆசைப் படுகிறார்கள்.
ஆனால்
இரு ஊர்களுக்குமான பகை அவர்களைப் பொசுக்கும் அளவுக்கு வளர்ந்திருக்கிறது. தேனி நபர் ஒருவரை, காரியா பட்டி நபர் தாக்கிக் கொன்றுவிட்டு சிறைவாசம் அனுபவிக்கிறார்.
கொலையுண்டவர் மகனும் தேனிப் பள்ளியில் தான் படிக்கிறான்.
காரியா பட்டிப் பையன்களில் ஒருவனான சக்தியின் அப்பாதான் சிறையில் இருப்பது.
இது ஒரு காரணம், இன்னோரு நிகழ்ச்சியாக,
ஏதோ ஒரு வேகத்தில் பத்துப் பதினைந்து வருடங்களுக்கு முன்னால் காரியாபட்டி மக்கள் தேனி குமரகுருபரர் மேல்நிலைப் பள்ளிக்குத் தீ வைத்துவிடுகிறார்கள். அதையும் காரணம் காட்டி,
இரண்டு ஊருக்கும் தீராப்பகை.

இதுவரை 45 நாட்களுக்கான பாடங்களையும் பார்த்துவிட்டேன். நடுவில் இ]ரண்டு மூன்று எபிசோட் தவற விட்டிருப்பேன்.
இந்த சீரியலில் என்னை மிகவும் கவர்ந்தது, காரியாப் பட்டிப் பையன்களாக வரும் பதின்ம வயசுப் பிள்ளைங்களின் பாத்திரப் படைப்பும், மன நலன்களும்,அவர்கள் உண்மையாகவே பாடு பட்டு நடிப்பதும்தான்.

நகைச்சுவைக்கும் பஞ்சமில்லை. எல்லாமெ எளிமையாக இனிமையாக இருக்கின்றன.

''டூரிங் டாக்கீஸ் என்ற நிறுவனம் இந்தத் தொடரை எடுப்பதாகத் தெரிகிறது.
ஒரு ஆர்ப்பாட்டம் இல்லாமல், அசட்டுத்தனமான வசனங்கள் இல்லாமல்,

மனதோடு ஒன்றிப் போகிறது.
ஒருத்தர் கூட அலட்சியமாக நடிக்கவில்லை. அத்தனை ஈடுபாட்டோடு கண்முன் நடப்பது போல காட்சிகள் அமைக்கப் பட்டிருக்கின்றன.
இந்தக் கால இளைஞர்களுக்கு வேடிய ஒற்றுமையும்,தோழமையும் பளிச்சிடும்,அதே சமயம்,அந்தவயதிற்கான சஞ்சலங்கள் எல்லாம் அழகாக எடுத்திருக்கிறார்கள்.
முடிந்தால் நீங்களும் பாருங்கள்.
விஜய் தொலைக் காட்சியில் இரவு ஏழரை மணிக்கு வாரநாட்களில் ஒளி பரப்பாகிறது.



எல்லோரும் வாழ வேண்டும்.

அஞ்சலி நம் ஜானகி அம்மாவுக்கு.

வல்லிசிம்ஹன் வாழ்வின் பொன்னான தருணங்களுக்குச் சொந்தமானவர்கள் இசைக்கலைஞர்கள். சுசீலா அம்மா, லீலா அம்மா, ஜானகி அம்மா,ஜிக்கி , ஜமுனா ராணி, குழந...