Thursday, September 10, 2026

கோவிந்தா கோவிந்தா சரணம்.

வல்லிசிம்ஹன்


எல்லோரும் நலமுடன் வாழ வேண்டும்.



திருப்பதியில் ஏன் 'கோவிந்தா... கோவிந்தா...' என்று விண்ணதிர முழங்குகிறார்கள் தெரியுமா? ஶ்ரீமகாலட்சுமி தேவியுடன் ஏற்பட்ட பிரிவின் காரணமாக, உலக நலனுக்காக வைகுண்டத்தை விட்டு பூமிக்கு வந்தார் ஸ்ரீமந்நாராயணன். அவர் மனிதர்களுக்கு அருள் புரிய ஸ்ரீநிவாசன் என்ற திருநாமத்துடன் திருமலையில் தங்கினார்.
அந்தப் புனித மண்ணில் வாழ்ந்த மிக உயர்ந்த ஞானிகளில் ஒருவர் அகத்திய மகரிஷி. அவரது ஆசிரமம் அமைதியின் அடையாளமாக இருந்தது.
அந்த ஆசிரமத்தின் இன்னொரு பெருமை... அங்கிருந்த கோசாலை.

அவற்றில் இருந்தவை சாதாரணப் பசுக்கள் அல்ல... காமதேனுவை ஒத்தவை. ஒருநாள்...அந்த ஆசிரமத்திற்கு ஸ்ரீநிவாசப் பெருமாள் வந்தார். "முனிவரே... எனக்கு ஒரு பசுவை தானமாக வழங்க முடியுமா?" அகத்தியர் ஒரு கணம் அமைதியாக நின்றார். வந்து இருப்பவர் சாதாரண மனிதர் அல்ல என்பதை அவர் அறிந்து இருந்தார். அவர் பரம்பொருளே என்பதை அவரது ஞானக் கண்கள் உணர்ந்திருந்தன. ஆனால்...தர்மம் என்பது அனைவருக்கும் ஒன்றே. எனவே அன்புடன் கைகளை கூப்பி "சுவாமி சாஸ்திரப்படி பிரம்மச்சாரிக்கு பசுதானம் வழங்கக் கூடாது. தர்மத்தை மீறி நான் செயல்பட முடியாது. என்னை மன்னிக்க வேண்டும்." அந்த பதிலில் பக்தியும் மரியாதையும் இருந்தது. பெருமாளும் புன்னகைத்தார். அவர் கோபப்படவில்லை. வருத்தப்படவில்லை. அமைதியாக அங்கு இருந்து புறப்பட்டுச் சென்றார். அவரது அமைதியைப் பார்த்த அகத்தியரின் மனம் நெகிழ்ந்தது. "நான் சரியானதைத்தான் செய்தேன்...

ஆனால்... இறைவனையே வெறுங்கையுடன் அனுப்பி விட்டேனே..." என்ற எண்ணம் அவரை நீண்ட நேரம் வாட்டியது. காலங்கள் நகர்ந்தன. பின்னர் ஸ்ரீநிவாசப் பெருமாள், பத்மாவதி தாயாரை திருமணம் செய்து கொண்டார். 
அந்த தெய்வீகத் திருமணத்திற்குப் பிறகு, ஒரு நாள் தாயாருடன் அகத்தியர் ஆசிரமத்திற்கு மீண்டும் வந்தார்.

 இப்போது நான் கிரகஸ்தன்... இப்போது தர்மத்திற்கு எந்தத் தடையும் இல்லையே..." என்ற அமைதியான புன்னகை அவரது முகத்தில் தெரிந்தது.

அந்த நேரத்தில் அகத்தியர் ஆசிரமத்தில் இல்லை. சீடர்கள் மட்டுமே இருந்தனர். அவர்கள் பெருமாளை மரியாதையுடன் வரவேற்றனர்.

 ஆனால், முனிவர் இல்லாததால் தாங்களாக எந்த முடிவையும் எடுக்கத் தயங்கினர். சிறிது நேரம் காத்து இருந்த பெருமாள், "முனிவரிடம் என் வருகையைச் சொல்லுங்கள்" என்று கூறிவிட்டு, பத்மாவதி தாயாருடன் அங்கிருந்து புறப்பட்டார்.

_தவத்தை முடித்து விட்டு தன் ஆசிரமத்திற்குத் திரும்பினார் அகத்திய மகரிஷி. வாசலிலேயே அனைத்து சீடர்களும் கைகளை கூப்பி நின்றனர்.

அவர்களின் முகத்தில் ஒரு பதற்றம். "என்ன நடந்தது?" என்று அமைதியாகக் கேட்டார் முனிவர்.

ஒரு சீடன் பணிவுடன் கூறினான்.
"குருவே... இன்று ஸ்ரீநிவாசப் பெருமாளும், பத்மாவதி தாயாரும் தங்களைத் தரிசிக்க வந்திருந்தார்கள்.

 தாங்கள் இல்லாததால் எங்களால் எந்த முடிவும் எடுக்க முடியாது போனது. அவர்கள் தங்களைப் பற்றி விசாரித்துவிட்டு இப்போது தான் திரும்பிச் சென்றார்கள்."

அந்த வார்த்தைகள் அகத்தியரின் இதயத்தில் மின்னலாய் விழுந்தன. ஒரு கணம் அவர் பேசவே முடியவில்லை. அவரது கண்கள் கலங்கின. "என்ன செய்துவிட்டேன் நான்..." என்று தனக்குள் வருந்தினார்.

முதல் முறை தர்மத்தை காப்பாற்ற வேண்டி பெருமாளுக்கு பசுவை அளிக்கவில்லை. இரண்டாவது முறை..அவரே நேரில் வந்த போதும் தன்னைச் சந்திக்க முடியாமல் திரும்பிச் சென்று விட்டார். அவரது மனம் குற்ற உணர்ச்சியால் கனத்தது. அந்த நொடியில் ஒரு முடிவை எடுத்தார் முனிவர். "இனி ஒரு கணம் கூட தாமதிக்கக் கூடாது." ஆசிரமத்தில் இருந்த சிறந்த பசுவை அழைத்து வருமாறு சீடர்களிடம் கூறினார். அது சாதாரண பசு அல்ல, காமதேனுவிற்கு இணையான புனிதப் பசுவாகப் போற்றப் பட்டது. அதன் கழுத்தில் புதிய மாலை அணிவிக்கப்பட்டது. அன்புடன் அதன் தலையைத் தடவிய அகத்தியர் கூறினார். "இன்று நீ செல்லும் இடம் சாதாரணமல்ல... உலகைக் காக்கும் பரம்பொருளின் திருக்கரங்களில் நீ சேரப் போகிறாய்." சீடர்களும் உணர்ச்சியுடன் நின்றனர். "குருவே... நாம் பெருமாளை அடைய முடியுமா?" அகத்தியர் புன்னகைத்தார். "இறைவனைத் தேடி ஒரு அடி நடந்தால்... அவர் ஆயிரம் அடிகள் நம்மை நோக்கி வருவார். வாருங்கள்!" அனைவரும் உடனே புறப்பட்டனர்.

 திருமலையின் இயற்கை அற்புதமாக இருந்தது. சிறிது தூரத்தில், பத்மாவதி தாயாருடன் அமைதியாக நடந்து சென்று கொண்டிருந்தார் ஸ்ரீநிவாசப் பெருமாள்."சுவாமி...! சுவாமி...!" இது அகத்தியரின் குரல். கையில் பசுவின் கயிறு.
அவர் வேகமாக ஓடிக்கொண்டே வந்தார்.

"கோவு... இந்தா..." பெருமாளை அடைந்துவிட வேண்டும் என்ற ஆவலில் அகத்தியர் மீண்டும் மீண்டும் குரல் கொடுத்தார். சுவாமி... கோவு இந்தா..."
தெலுங்கில்... "கோவு" என்றால் பசு.

"இந்தா" என்றால் "எடுத்துக் கொள்ளுங்கள்" என்று பொருள்." 

அகத்தியர் மூச்சு இறைக்க தொடர்ந்து அழைத்தார். 'கோவு... இந்தா" "கோவு... இந்தா..." "கோவு... இந்தா...
"மலைகளில் எதிரொலித்த அந்த இரண்டு சொற்கள்...மெல்ல...ஒரே நாமமாக உருமாறின.

 கோவிந்தா 
என்ற அந்த ஒலி மலையைத் தாண்டி விண்ணையும் எட்டியது.

திரும்பிப் பார்த்தார் பெருமாள். அகத்தியரின் உண்மையான பக்தியையும், தர்மத்தின் மீதான நேர்மையையும் பார்த்த பெருமாள் மெதுவாக நின்றார். பத்மாவதி தாயாரும் புன்னகையுடன் திரும்பிப் பார்த்தார். மூச்சு திணறியபடி வந்து நின்ற அகத்தியர், பெருமாளின் திருவடிகளில் விழுந்தார். "சுவாமி... என்னை மன்னித்து விடுங்கள், உலகத்தையே காக்கும் உங்களை ஒரு பசுவிற்காக இரண்டு முறை காத்திருக்க வைத்துவிட்டேன்,

இன்று இந்தப் பசுவை என் உயிராக நினைத்து ஏற்றுக்கொள்ள வேண்டும்." அவரது குரல் நடுங்கியது. கண்களில் கண்ணீர் வழிந்தது. கருணை வடிவான ஸ்ரீநிவாசப்பெருமாள் உடனே அகத்தியரை எழுப்பினார். அவரது தோளில் கை வைத்து மெதுவாகச் சொன்னார். "முனிவரே...

நீங்கள் எந்தத் தவறும் செய்யவில்லை, தர்மத்தை காத்தீர்கள்,

 அதனால்தான் இன்று உங்கள் பக்தி உலகிற்கு எடுத்துக்காட்டாக இருக்கிறது." அகத்தியர் தலை குனிந்தார். பின்னர் காமதேனுவைப் போன்ற அந்தப் புனிதப் பசுவை பெருமாளிடம் தானமாக அளித்தார்.

 பெருமாளும் மகிழ்ச்சியுடன் அதை ஏற்றுக் கொண்டார். அந்தக் கணத்தில் தேவர்களே மலர்மழை பொழிந்ததாக புராணங்கள் கூறுகின்றன.

இனி என்னை கோவிந்தா என்றே அழையுங்கள், நீங்கள் என்னை அழைத்த இந்த நாமம் இனி கலியுகத்தின் மிகப் புனிதமான நாமமாக விளங்கும்

"'கோவிந்தா' என்று யார் மனமுருகி அழைக்கிறார் களோ..." அவர்களின் அழைப்பை நான் உடனே ஏற்றுக் கொள்வேன், அவர்களின் நம்பிக்கையை ஒருபோதும் கைவிட மாட்டேன்." அந்த அருள்வாக்கே... இன்று வரை கோடிக் கணக்கான பக்தர்களின் உதடுகளில் ஒலித்துக் கொண்டிருக்கிறது.
 அந்த நாள் முதல்... திருமலைக்கு வரும் ஒவ்வொரு பக்தரும்... பெருமாளை தரிசிப்பதற்கு முன்பே... *கோவிந்தா நாமத்தை உச்சரிக்கத் தொடங்கினர்.

ஓம் நமோ நாராயணாய

6 comments:

ஸ்ரீராம். said...

கோவிந்தா நாமம் வந்த காரணம் அறிந்தேன்.  அது எனக்கு புதிது.  இந்தக் கதையும் புதிது.  சுவாரஸ்யம்.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் ஶ்ரீராம். ஃபார்வார்ட் செய்யப்படும் சில செய்திகள் சிலசமயம் மனதை நெகிழ வைக்கின்றன. உண்மையில் வாட்சாப் நல்லதுதான்:) கோவிந்த நாமம் நமக்கு நன்மை செய்யும்.

மாதேவி said...

கோவிந்தா என அழைக்கும் கதை அறிந்தோம்.

கோவிந்தா சரணம்.

Kamala Hariharan said...

வணக்கம் சகோதரி

நலமா? பதிவு அருமை. உங்களின் பல பதிவுகளை நான் தவற விட்டு விட்டேன். மன்னிக்கவும் சிலசமயம் டேஸ்போர்டில் காட்ட மாட்டேன் என்கிறது.இனித் தொடர்கிறேன்.

இந்தப்பதிவில் கோவிந்த நாமம் வந்ததற்கான கதை மிகவும் மனநெகிழ்ச்சியை தந்தது. இதுவரை படித்ததில்லை.கதை மிக நன்றாக உள்ளது. இறைவனின் அன்பும், அகத்திய முனிவரின் தர்ம சிந்தனையும் மனதை கவர்ந்து கண்களில் நீர் வரச்செய்கிறது. பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் மாதேவி மிக நன்றி மா. இறைவன் நாமம் என்றும் காக்கும்.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கமலா ஹரிஹரன், எப்பொழுதும் நலமுடன் இருக்கப் பிரார்த்தனைகள். மீண்டும் எழுத ஆரம்பித்ததே மன நலம் சரியாக இருக்கத்தான். இனி மற்றவர்களின் பதிவுகளையும் போய்ப் படிக்கவேண்டும்..
மகான்களின் அருளால் தான் நாம மஹிமை தெரிகிறது. இன்னோரு சகோதரி எனக்கு அனுப்பிய செய்தி இது. பகிர வேண்டும் என்று தோன்றியது அம்மா.
ப்ளாகரில் நெடுனாள் பதியாதது என் பிழை. நன்றி.

வயதானவர்களின் கொண்டாட்ட நாள்.

வல்லிசிம்ஹன் எல்லோரும் நலமுடன்   வாழ்க. வயதானவர்கள் (சீனியர் இல்லை) தினம். அக்டோபர் 1. வயதான வயதாகிக் கொண்டிருப்பவர்கள் தினம் இன்று அக்டோபர்...