Wednesday, September 16, 2026

பாட்டி.

வல்லிசிம்ஹன்


2007இல் எழுதிய பதிவு

பாட்டி சுட்ட தோசை
+++++++++++++++++++++++++++
தோசை என்றால் பிடிக்காத மனிதர்கள் உண்டா.?

அதுவும் ஒரு அம்மாவோ பாட்டியோ
ஒரு கரி அடுப்பு,
இல்லாட்டா ஒரு கெரசின் வாசனை அடிக்காத ஒரு ஸ்டவ் அடுப்பில் 
செங்கோட்டைக்கல்லைப் போட்டு
முதல்நாள் ஊறப்போட்டு அரைச்சு வைத்துப் புளித்த மாவில் ..அதாவது நாலு பங்கு புழுங்கலரிசி ஒரு பங்கு கறுப்பு உளுந்து போட்டு ,நல்லாக்
களைந்து பிறகு ,உரல்ல போட்டு ஊர்க்கதையெல்லாம் அவள் சொல்ல 
நான் கேட்க
நிதானமாக அரைத்து வழித்து
பெரிய கல்சட்டி ,அதுஇல்லைன்னா ஒரு பீங்கான் பாத்திரத்தில்  *(மங்கு) வைத்துப்
புளித்த மாவு.

சீனிம்மா , மாவு அரைக்கிற பாங்கும்,அடுப்பை நிதானமாக எரிய விட்டு வேலை செய்யும் அழகும்,
இலையில் ,கையால் தைத்த தையல் இலையில் சிறிது அளவு
சாப்பாடே போட்டுக் கொண்டு,கருவேப்பிலை கூட மிச்சம் வைக்காமல்
உண்ணும் விதமும் என்னைக் கண் கொட்டாமல் பார்க்க வைக்கும்.

அந்தத் தோசையின் ருசி ,வேறு இடத்தில் நான் கண்டதில்லை.
எங்க அம்மா வார்க்கும் தோசையிலும் வட்டம்,அளவு
 எல்லாம் வேறு விதமாக இருக்கும்.

சீனிம்மா வீட்டு சமையலறை ஓடு மேய்ந்தது.
கூரையில் வெளிச்சம் வர ஒரு சின்னக் கண்ணாடி.

ஒரு மேடை கட்டி அதில் தினம் சாணி போட்டு மெழுகுவதுபோல
மண்ணால் ஆன அடுப்பு.
கொடி அடுப்புனு கூட ஒன்று இருக்கும்.
பெரிய அடுப்பில் நாலு விறகு என்றால் அதில் வரும் சூட்டில் சாதம் கொதிக்கும் போதே, கொடியடுப்பில் பருப்பு ஒரு குண்டானில் வேகும்.

கீழே தரையில் மாமாக்கள் உட்கார்ந்து அன்று வேண்டிய
காய்கறிகளை அரிந்து கொடுக்க
ஒரு பத்து நபர்களுக்கான சாப்பாட்டை இரண்டு மணி நேரத்தில் சமைத்து விடுவார்.
இப்போது அந்தத் தோசை நாட்களை நினைத்து
உச்சுக் கொட்டுவதற்குக் காரணம்,இங்கே ஸ்விஸில்(இந்தப் பதிவு எழுதிய காலம்)
அரிசி,பருப்பு எல்லாம் சேர்ந்து நல்ல தோசை கிடைக்கவில்லை,
அதான் காரணம்.
உயர்ந்த வகை க்ரைண்டர்தான். அளவும் அதேதான்.
வார்ப்பதும் நானே.

அந்த மாவு அரைக்கும்போதெ அந்தப் பாட்டி அன்பும் பொறுமையும் கலந்து அரைத்தாளோ.
லீவுக்கு வந்திருக்கும் பேரன் பேத்திகள் வயிறு வாட விட்டு
ஊருக்கு அனுப்பக் கூடாது என்று
பொன்னிறத்தில் கொஞ்சம் கூடக் கருகாமல் உணவு தயாரித்தாளோ.

அவள் மனம் பூரிக்க நான்கு வார்த்தையாவது சொல்லி இருப்பேனா.
இல்லை நாங்கள் சாப்பிட்டு விளையாடுவதையே
பாராட்டாக எடுத்துக் கொண்டாளோ...
எதையும் யாரிடத்திலும் எதிர்பாராமல் கடமையும் நேர்மையுமே
எங்கள் எல்லோருக்கும் சொத்தாகக் கொடுத்தாள்.
அதனால்தான் எதிர்காலம் எதிர்கொள்வது சுலபமாக இருந்தது எங்களுக்கு.

6 comments:

ஸ்ரீராம். said...

தோசையில் இரண்டு வகை!  கடுத்த மாவு தோசை...  அரைத்த உடன் வார்ப்பது.  என் அம்மாவுக்கு ரொம்பப் பிடிக்கும்!  முன்பெல்லாம் எனக்கு புளித்த மாவு தோசை பிடித்தது.  இப்போது அரைத்த மறுநாள் வார்த்து சாப்பிடுவதோடு வாய்ப்பு அமைகிறது!

ஸ்ரீராம். said...

/ ஒரு மேடை கட்டி அதில் தினம் சாணி போட்டு மெழுகுவதுபோலமண்ணால் ஆன அடுப்பு.கொடி அடுப்புனு கூட ஒன்று இருக்கும். //


எங்கள் வீட்டில் தரையோடு தரையுயாக இருக்கும்.  கீழே உட்கார்ந்துதான் அடுப்பு பற்ற வைக்கணும், சமைக்கணும்.  

செய்திருக்கிறேன்.

ஸ்ரீராம். said...

பாஸ் இட்லி தோசைக்கு அரைக்க ஐந்துக்கு ஒன்று என்று அளவு எடுக்கிறாள்.

வல்லிசிம்ஹன் said...

பாட்டி காலத்தில் கடுத்த மாவு தோசை கிடையாது. அம்மாவும் செய்ய மாட்டார். மாவு புளிக்கும் போது கையை விடக்கூடாது என்று என்னென்னமோ சொல்வார்கள். மிளகாய்ப் பொடி புதுசா செய்த்ஹு அடுத்த நாள் இட்லி உண்டு. மூணாம் நாள் இலப்பசட்டி தோசை. கடைசினாள் குணுக்கு. ஆகக் கூடி 4 நாளைக்கு டிபன் கவலை இல்லை:) நன்றி ஶ்ரீராம்.

வல்லிசிம்ஹன் said...

உண்மைதான் மா. திருமங்கலத்தில் உத்கார்ந்து தான். அம்மா சமைப்பார்.லீகோ கரி அடுப்பும் உண்டு. நன்றி ஶ்ரீராம்.

வல்லிசிம்ஹன் said...

அதுவும் வழக்கம் தான். . நாங்கள் இருந்த நகரங்களில் உ.பருப்பு செழுமையா கிடைக்காது. சென்னை வந்த பிறகு எல்லாம் மாறியது.நன்றி ஶ்ரீராம்.

ஃபிசியோ தெரபி 15 வருடங்களுக்கு முன்னால்.......

வல்லிசிம்ஹன் எல்லோரும் இனிதாக வாழ வேண்டும் கால் புராணம் +++++++++++++++++++++++ ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் அப்பாடி:( பிசியோ வலியோ தெரபி 199...