2006 to 2026 வலைப் பயணம்.
இன்று ஏப்ரல் 24. இருபது வருடங்களுக்கு முன் — இதே நாளில் — நான் என் தமிழ் வலைப்பதிவைத் தொடங்கினேன். அதற்கு முன் ஆங்கிலத்தில் எழுதிக் கொண்டிருந்த நான், “ஏன் என் சொந்த மொழியில் எழுதக்கூடாது?” என்று ஒரு நாள் தோன்றியது. அந்த ஒரு எண்ணம்… இவ்வளவு நீண்ட பயணமாக மாறும் என்று அப்போது எனக்கே தெரியாது.
இந்த இருபது ஆண்டுகளில் நான் எழுதிய பதிவுகள், நான் சந்தித்த நல்ல மனசுக்காரர்கள், நான் பெற்ற அன்பு — எல்லாம் சேர்ந்து ஒரு பெரிய குடும்பம் மாதிரி ஆகிவிட்டது. சில சமயம் நான் எழுதாமல் விலகி இருந்தாலும், இந்த இடம் என்னை மறக்கவே இல்லை.
இன்று இந்த நாளில், என்னை வழிநடத்திய சிலரை நினைக்காமல் இருக்க முடியவில்லை. நியூசிலாந்தில் இருக்கும் என் தோழி —துளசி கோபால், பின்னூட்டப் பேரரசி என்று பட்டம் சூட்டப்பட்டவர்!!! எப்போதும் பிறரைப் பாராட்டி, ஊக்கப்படுத்தி, “மற்றவர்களுடைய பதிவுகளுக்கும் சென்று கருத்து சொல்லு” என்று மெதுவாக நினைவூட்டியவர். அவரைப் போல சிலர் இருந்ததால்தான் நான் இந்த உலகில் இவ்வளவு நாள் தங்க முடிந்தது.
சில காலம் நான் விலகி இருந்ததால், என் வாசகர்களும் அமைதியாகி விட்டார்கள். அது அவர்களின் தவறு இல்லை — நான் இல்லாத இடத்தில் அவர்கள் எப்படி வருவார்கள். இப்போது நான் மீண்டும் என் வட்டத்துக்குள் நடக்கத் தொடங்குகிறேன். மீண்டும் வாசிக்கவும், கருத்து சொல்லவும், பழைய நட்புகளைத் தேடிப் படிக்கவும் வேண்டும் .
இருபது ஆண்டுகள்… எழுத்து எனக்கு கொடுத்த மிகப் பெரிய பரிசு — தோழிகளும் தோழர்களும் அவர்களின் அன்பு, அவர்களின் வார்த்தைகள், அவர்களின் அமைதியான ஆதரவு.
இன்று என் வலைப்பதிவு பிறந்தநாள். நான் மீண்டும் வந்திருக்கிறேன். எழுதவும், பகிரவும், இணைக்கவும்.
என்னுடன் இருந்த அனைவருக்கும் — மனமார்ந்த நன்றி. இன்னும் வரப் போகிறவர்களுக்கும் — அன்பான வரவேற்பு.#TulsiGopal,#GeethaSambasivam,#SriramBalasubramaniyam,# GomathyArasu,#GeethaRengan,#Nellaiththamizhan MuraLi,#VengatNagarajan,#AdhiVenkat, இன்னும் நிறைய பெயர்கள் விட்டுப் போச்சு.மன்னிக்கணும்.
இன்னும் வளரலாம்.
Comments
நலமா? தங்களின் வலைப்பயண பிறந்தநாளுக்கு என் அன்பான நல்வாழ்த்துகள் சகோதரி. உங்கள் பாணி பேசு தமிழில் ஈர்க்கப்பட்டு, சில காலமாக உங்களுடன் பயணிப்பவர்களில் நானும் ஒருவள். உங்கள் எழுத்துக்கள் மிகவும் ஆழமானது. அன்பானது. நிறைய அனுபவங்களையும், அறிவுரைகளையும் தன்னுள் பெருமையாக அடக்கமாக்கிக் கொண்டது. உங்கள் எழுத்துக்களை நான் மிகவும் ரசிப்பேன் அப்பாணியிலேயே மீண்டும் பதிவுலகத்திற்கு வந்திருக்கும் உங்களது பதிவுகளை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். தொடர்ந்து அழகான உங்கள் பதிவுகளை தாருங்கள். எப்போதும் தொடர்ந்து வர நாங்களும் காத்திருக்கிறோம்.
நான் கடந்த ஒரு மாதமாக வெளியில் சென்றிருந்ததால் என் நட்புகளாகிய உங்களின் அனைவரின் பதிவுகளுக்கும் ஒழுங்காக வர இயலவில்லை. மன்னிக்கவும். மேலும், இதற்கு முந்தைய தங்களது பதிவுகளையும் நேற்று படித்தேன்.அருமையாக மலரும் நினைவுகளை தொகுத்து எழுதியிருந்தீர்கள். உங்களது இந்த எழுத்துத் திறமைக்கு என் அன்பார்ந்த பாராட்டுக்கள் சகோதரி. இன்றைய பகிர்வுக்கும் மிக்க நன்றி சகோதரி.
அன்புடன்
கமலா ஹரிஹரன்.
வலைபதிவுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள், வாழ்க வளமுடன் அக்கா. மீண்டும் உங்கள் எழுத்துக்கள் வலைத்தளத்தில் மலரட்டும் மணம் வீசட்டும்.
தொடர்ந்து வருகிறேன் அக்கா.
என்றும் அன்புடன்.
உங்கள் பதிவுகள் எங்களுக்கெல்லாம் ஒரு வரம் அம்மா. எத்தனை நினைவுகள், அவை படிப்பவர்களுக்குத் தரும் பாடம் என அனைத்துமே சிறப்பு. முடிந்தபோதெல்லாம் எழுதிக் கொண்டே இருங்கள். படிப்பதற்கு நாங்க ரெடி!
நல்லதே நடக்கட்டும்.
நீங்க எழுதியதிலேயே பிறருடைய அனுபவத்தைக் கதையாக தொடராக எழுதியது ரொம்பவே நல்லா இருந்தது.
இன்றுள்ள புகைப்படத்தையும், சின்னப் பெண்ணின் புகைப்படத்தையும் ஒப்பிடணும் என்பதால் அடுத்த பதிவில் சின்னப்பெண் படமா?
பதிவு எழுதும்போது பக்கத்திலேயே ஏஐ பெட்டியும் இருந்தது தான் வம்பாகிவிட்டது. நன்றி மா.
இரண்டு பதிவாக வெளிவந்து விட்டது.
செயற்கை அறிவியல் பதிவின்
பக்கத்திலேயே ஓடிக்கொண்டிருந்ததால் அந்தத் தவறு
.
பிறகுதான் அதை நீக்கிவிட்டு என் எழுத்தைப் பதிந்தேன்.
இனி எச்சரிக்கையாக இருப்பேன் மீண்டும் நன்றி அன்பு தங்கச்சி.
வாழ்க வளமுடன்.