2006 to 2026 வலைப் பயணம்.
வல்லிசிம்ஹன்இன்று ஏப்ரல் 24. இருபது வருடங்களுக்கு முன் — இதே நாளில் — நான் என் தமிழ் வலைப்பதிவைத் தொடங்கினேன். அதற்கு முன் ஆங்கிலத்தில் எழுதிக் கொண்டிருந்த நான், “ஏன் என் சொந்த மொழியில் எழுதக்கூடாது?” என்று ஒரு நாள் தோன்றியது. அந்த ஒரு எண்ணம்… இவ்வளவு நீண்ட பயணமாக மாறும் என்று அப்போது எனக்கே தெரியாது.
இந்த இருபது ஆண்டுகளில் நான் எழுதிய பதிவுகள், நான் சந்தித்த நல்ல மனசுக்காரர்கள், நான் பெற்ற அன்பு — எல்லாம் சேர்ந்து ஒரு பெரிய குடும்பம் மாதிரி ஆகிவிட்டது. சில சமயம் நான் எழுதாமல் விலகி இருந்தாலும், இந்த இடம் என்னை மறக்கவே இல்லை.
இன்று இந்த நாளில், என்னை வழிநடத்திய சிலரை நினைக்காமல் இருக்க முடியவில்லை. நியூசிலாந்தில் இருக்கும் என் தோழி —துளசி கோபால், பின்னூட்டப் பேரரசி என்று பட்டம் சூட்டப்பட்டவர்!!! எப்போதும் பிறரைப் பாராட்டி, ஊக்கப்படுத்தி, “மற்றவர்களுடைய பதிவுகளுக்கும் சென்று கருத்து சொல்லு” என்று மெதுவாக நினைவூட்டியவர். அவரைப் போல சிலர் இருந்ததால்தான் நான் இந்த உலகில் இவ்வளவு நாள் தங்க முடிந்தது.
சில காலம் நான் விலகி இருந்ததால், என் வாசகர்களும் அமைதியாகி விட்டார்கள். அது அவர்களின் தவறு இல்லை — நான் இல்லாத இடத்தில் அவர்கள் எப்படி வருவார்கள். இப்போது நான் மீண்டும் என் வட்டத்துக்குள் நடக்கத் தொடங்குகிறேன். மீண்டும் வாசிக்கவும், கருத்து சொல்லவும், பழைய நட்புகளைத் தேடிப் படிக்கவும் வேண்டும் .
இருபது ஆண்டுகள்… எழுத்து எனக்கு கொடுத்த மிகப் பெரிய பரிசு — தோழிகளும் தோழர்களும் அவர்களின் அன்பு, அவர்களின் வார்த்தைகள், அவர்களின் அமைதியான ஆதரவு.
இன்று என் வலைப்பதிவு பிறந்தநாள். நான் மீண்டும் வந்திருக்கிறேன். எழுதவும், பகிரவும், இணைக்கவும்.
என்னுடன் இருந்த அனைவருக்கும் — மனமார்ந்த நன்றி. இன்னும் வரப் போகிறவர்களுக்கும் — அன்பான வரவேற்பு.#TulsiGopal,#GeethaSambasivam,#SriramBalasubramaniyam,# GomathyArasu,#GeethaRengan,#Nellaiththamizhan MuraLi,#VengatNagarajan,#AdhiVenkat, இன்னும் நிறைய பெயர்கள் விட்டுப் போச்சு.மன்னிக்கணும்.
இன்னும் வளரலாம்.

9 Comments:
வணக்கம் சகோதரி
நலமா? தங்களின் வலைப்பயண பிறந்தநாளுக்கு என் அன்பான நல்வாழ்த்துகள் சகோதரி. உங்கள் பாணி பேசு தமிழில் ஈர்க்கப்பட்டு, சில காலமாக உங்களுடன் பயணிப்பவர்களில் நானும் ஒருவள். உங்கள் எழுத்துக்கள் மிகவும் ஆழமானது. அன்பானது. நிறைய அனுபவங்களையும், அறிவுரைகளையும் தன்னுள் பெருமையாக அடக்கமாக்கிக் கொண்டது. உங்கள் எழுத்துக்களை நான் மிகவும் ரசிப்பேன் அப்பாணியிலேயே மீண்டும் பதிவுலகத்திற்கு வந்திருக்கும் உங்களது பதிவுகளை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். தொடர்ந்து அழகான உங்கள் பதிவுகளை தாருங்கள். எப்போதும் தொடர்ந்து வர நாங்களும் காத்திருக்கிறோம்.
நான் கடந்த ஒரு மாதமாக வெளியில் சென்றிருந்ததால் என் நட்புகளாகிய உங்களின் அனைவரின் பதிவுகளுக்கும் ஒழுங்காக வர இயலவில்லை. மன்னிக்கவும். மேலும், இதற்கு முந்தைய தங்களது பதிவுகளையும் நேற்று படித்தேன்.அருமையாக மலரும் நினைவுகளை தொகுத்து எழுதியிருந்தீர்கள். உங்களது இந்த எழுத்துத் திறமைக்கு என் அன்பார்ந்த பாராட்டுக்கள் சகோதரி. இன்றைய பகிர்வுக்கும் மிக்க நன்றி சகோதரி.
அன்புடன்
கமலா ஹரிஹரன்.
AI உதவியுடன் ஒரு மீள் தொடக்கப் பதிவா? நாங்கள் உங்கள் கூட வந்து கொண்டேதான் இருக்கிறோம்!
அம்மா படம் தெய்வீக அழகு. உங்கள் படங்களும் அழகு.
வலைபதிவுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள், வாழ்க வளமுடன் அக்கா. மீண்டும் உங்கள் எழுத்துக்கள் வலைத்தளத்தில் மலரட்டும் மணம் வீசட்டும்.
தொடர்ந்து வருகிறேன் அக்கா.
என்றும் அன்புடன்.
ஸ்ரீராம் ,AI உதவியுடன் முதல் படத்தை சொல்கிறீர்களா அது அக்காவின் அம்மா.
இருபது வருட வலைப்பயணம். மகிழ்ச்சி.
உங்கள் பதிவுகள் எங்களுக்கெல்லாம் ஒரு வரம் அம்மா. எத்தனை நினைவுகள், அவை படிப்பவர்களுக்குத் தரும் பாடம் என அனைத்துமே சிறப்பு. முடிந்தபோதெல்லாம் எழுதிக் கொண்டே இருங்கள். படிப்பதற்கு நாங்க ரெடி!
நல்லதே நடக்கட்டும்.
அன்பின் சகோதரி கமலா ஹரிஹரன் உங்களின் பாசம் நிரம்பிய வார்த்தைகள் எப்பொழுதும் உற்சாகப் படுத்தும். உடல் நலமும் குடும்ப நலமும் சிறப்பாக இருக்கிறது என்று நினைக்கிறேன். மதில் மேல் பூனையாக நானும் எழுதலாமா வேண்டாமா என்று யோசித்துக் கொண்டிருந்தேன். நீங்கள் இங்கே வந்து பார்த்திருந்தாலும் புதுப் பதிவு இருந்திருக்காது. இப்போது இரண்டு வாரங்களாகத்தான் இயங்குகிறேன், இந்த ஊரின் குளிர் உடலை முடக்கிப் போடுகிறதுப்பா. இனி வாரத்துக்கு இரு முறையாவது வந்து எழுத வேண்டும். உங்களின் மனம் நிறை அன்புக்கு நன்றி மா. வாழ்க வளமுடன்.
ஶ்ரீராம், :) அது அவசரமாகப் பதிவு செய்தது. நான் அழகியில் எழுதி சரிபார்த்து மீண்டும் பதிவிட்டேன். தவறாகப் பதிந்தது ஏஐ யின் சஜ்ஜஷன்.:)))) இப்போது இருப்பது என் எழுத்து!! அன்பு ஸ்ரீராம்
பதிவு எழுதும்போது பக்கத்திலேயே ஏஐ பெட்டியும் இருந்தது தான் வம்பாகிவிட்டது. நன்றி மா.
அன்பு தங்கச்சி கோமதி என்றும் வாழ்க வளமுடன். அம்மா படத்தை சிலாகிக்கும் உங்கள் அன்பு தான் நம் நட்பை இவ்வளவு தூரம் கொண்டு வந்திருக்கிறது. ஸ்ரீராம் சொன்னதில் தவறு இல்லை.
இரண்டு பதிவாக வெளிவந்து விட்டது.
செயற்கை அறிவியல் பதிவின்
பக்கத்திலேயே ஓடிக்கொண்டிருந்ததால் அந்தத் தவறு
.
பிறகுதான் அதை நீக்கிவிட்டு என் எழுத்தைப் பதிந்தேன்.
இனி எச்சரிக்கையாக இருப்பேன் மீண்டும் நன்றி அன்பு தங்கச்சி.
வாழ்க வளமுடன்.
அன்பின் வெங்கட், கொஞ்சம் பிரமிப்பாகத்தான் இருக்கிறது. வாழ்த்துகளுக்கு மிக நன்றி. எல்லாப் பதிவிலும் உங்கள் பெயரும் ஸ்ரிராம் பெயரும் தவறாமல் இருக்கும்.கோமதி,கமலா கீதா ரங்கன் ,கீதாசாம்பசிவம் எல்லோரும் பக்கத்துணை. என் வலை நட்புகள் எப்போதும் நலமோடு இருக்க வேண்டும். இப்போது ஒரு பதிவு எழுதவே இரண்டு நாட்கள் ஆகிறது. முதுமையின் ஆக்கம்:))))))))