Tuesday, March 24, 2009

மீண்டும் மீனாட்சி!!







2006 நவம்பர் மாதம் சென்னையை விட்டுக் கிளம்பினோம். இன்னோரு குட்டிக் கிருஷ்ணனை வரவேற்க.
அப்போது வீட்டிலிருந்த இந்த மீனாளை வளர்ப்பு மீன்கள் விற்கும் ஒரு கடையில் பொட்டி படுக்கையோட எடுத்துக் கொண்டு விட்டுவிட்டு வந்தோம்.
சரி பத்து மாதம் கழித்துத் திரும்பும்போது அவளை அழைத்து வந்து விடலாம் என்றால் மீண்டும் ஒரு அழைப்பு. இந்தத் தடவை ஒரு குட்டி ராதையை வரவேற்க மீண்டும் கிளம்பினோம். அதனால் வாடகை வீட்டிலியே தங்கி விட்டாள் மீனாட்சி.
இந்தத் தடவை மீண்டும் வந்தவுடனே அவளை அழைத்துக் கொள்ளமுடியாமல் வீட்டில் கட்டுமானப் பணிகள் நடந்து முடிந்தன.
நேற்று அவள் மீண்டும் பிறந்த வீட்டுக்கு வரவேண்டிய ஆயத்தங்களைச் செய்தோம்.
வந்துவிட்டாள்.
அவளைப் பொறுத்தவரை நல்ல தண்ணீர், க்ளோரின் கலக்காத கிணற்றுத் தண்ணிரும் , ஐந்து ரூபாயில் அடங்கும் உணவும் போதும். வளைந்து வந்து கொண்டிருப்பாள். பூனைகள் நாய்கள் போல உணர முடியுமோ தெரியாது. இருந்தாலும் அவளும் ஒரு ஜீவராசி.
எங்க சிங்கத்துக்கு மிக நெருக்கமானவள்.
நாங்கள் தரும் பாதுகாப்பை அவள் உணருவாள் என்றே நம்புகிறேன்.
அவள் எப்போதும் நலமுடன் இருக்க நண்பர்களே வாழ்த்துங்கள்.



Posted by Picasa

Tuesday, March 17, 2009

அம்மாவின் கொடை.

ஒரு டயரி, ஒரு புத்தகம்,ஒரு சிவப்பு பேழை,ஒரு கையில வச்சிருக்கிற பர்ஸ்!




மகாத்மா காந்தியின் பொருட்களுக்கும் ஒரு விலை வைத்துக் கொண்டு வந்து விட்டார்கள்.
எனக்கும் கிடைத்த சில பொருட்கள் என் அன்பு அம்மாவிடமிருந்து கிடைத்தன.
அவள் இருக்கும் போது அனுபவித்த அன்பைப் போலவே இந்தப் பொருட்களும் கலப்படமில்லாத ஒரு நிறைவான மனுஷியின் உயர்ந்த நோக்குகளையே எடுத்துச் சொல்கின்றன.
அவள் தினம் சேவித்த பிரபந்தப் புத்தகம். யாரோ சொன்னார்கள் என்பதற்காக தனது உடன்பிறப்புகளுக்காகவும் எங்களுக்காகவும் அவள் சொல்லிய ஸ்லோகங்கள் அடங்கிய புத்தகம்.
உறவினர்களின் தொலைபேசி எண்களும் ,விலாசங்களும்(ஏனெனில் என்னுடைய மறதி அவளுக்குத் தெரியும்),
ஒரு காரைக்குடி பழுக்கா திருகு பொட்டி.
கடைசியாக எனக்குக் கிடைத்தது ஒரு சிறிய சிவப்புப் பெட்டி. அதைத் திறந்து பார்த்தால் இரு பவளத்தோடுகள்.
அவள் உடல் நிலை சரியில்லாமல் போன போது காதுகள் வெறிச்சோடி இருப்பதைப் பார்த்து நொந்து போய் அவளிடம் நான் கொடுத்த இரு சின்னத் தோடுகள்.
அதைத் தன் கடைசி நாளில் திருப்பிக் கொடுத்திருக்கிறாள் என் தம்பி மனைவியிடம்.
உள்ளே ஒரு சிறிய குறிப்படங்கிய தாள் ''இவை ரேவதியோடது'',.
என்று.
இத்தனை அறிவுள்ள முன்னெச்சரிக்கையான அம்மாவாக நீ இருந்ததை நான் ஏன் இவ்வளவு நாட்கள் கழித்துப் புரிந்து கொள்ளுகிறேன் அம்மா!!!

கடவுளின் மேல் அவளுக்கிருந்த அபார நம்பிக்கை.
எது வந்தாலும் ஏற்றுக்கொள்ளும் பக்குவம்.
மற்றவர்களை உடனுக்குடன் புரிந்து கொள்ளும் சூக்க்ஷமமான புத்தி,
அநுசரித்துப் போகும் தன்மை.
இதெல்லாம் எனக்கு நினைவு படுத்திய மகாத்மாவுக்கு நன்றி. எங்க அம்மா கூட மகாத்மாதான்.



Posted by Picasa

Friday, March 13, 2009

மார்ச் புகைப்படம்..போட்டிக்கு


பெசண்ட் நகர் கடற்கரையில் ஒரு மாலை நேரம்.

தோழிகளுடன் அரட்டை.

காமிராவும் நானும் இணைபிரியாத நண்பர்கள் ஆகிவிட்டோம்.

என் நண்பிகளும் அப்படியே.

அதில் இந்தப் படம் தோதாகப் போட்டிக்கு அமைந்தது;0)

உங்கள் அபிப்பிராயத்தைச் சொல்லுங்கள் நட்புகளே.

Posted by Picasa

Monday, March 02, 2009

மகளிர் சக்தி

ஒருவர் 37 வயதுக்கு மேல் படித்துத் தலைமை ஆசிரியைப் பொறுப்பு ஏற்றவர்.இன்னோருவர் குடும்பத்தையும் கவனித்துக் கொண்டு தன் நடனத்தையும் கலைக்குழுவோடு சேர்த்து வளர்த்துக்கொண்டிருப்பவர்.

சக்தி கொடுப்பவள் அசுர சக்தியை அழிப்பவள்.


அன்பான அம்மா உனக்கு ஏது நிகர்?



அவளும் ஓய்ந்து உட்கார்ந்தாள். மற்றவர்களுக்கும் ஓஒய்வெடுக்கக் கற்றுக் கொடுக்கிறாள்.




எல்லாம் அருளும் லட்சுமி
இவர்கள் அனைவரையும் இந்த மகளிர் தினத்துக்காக மட்டும் நினைக்காமல்
எப்போதும் நினைப்பேன்.
வசதிகள் அனைத்தும் இருந்து ,மக்கள் சேவையில் ஈடுபடுபவர்களுக்கு நம் வணக்கம் .
அதுவும் மற்ற எத்தனையோ பொழுது போக்குகள் இருக்க மெய்வருத்தம் பாராமல் தங்கள் ஆயுளையே செலவழிப்பவர்களும் எத்தனையோ.
அவர்களில் ஒருவர் எதிராஜ் மகளிர் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியை யாக இருந்த திருமதி.இந்திரா.
திருமணமே செய்யாமல் முழுவதும் தமிழுக்கே, அதுவும் கம்பராமாயணத்துக்கு அதிகமாக அர்ப்பணித்துக் கொண்டவர்.
வணக்கம் அம்மா.
அடுத்தவர் நோய் தன்னை வாட்டிய போதும் மனம் தளராது பாட்டுக்காக ஒரு குழு அமைத்து, கர்நாடக சங்கீதத்தையேத் தன் மூலதனமாக்க் கொண்டு ஆயிரக்கணக்கான பெண் குழந்தைகளுக்குப் பாடல் கற்பித்து இன்று அவர்களும் பிரகாசிக்கிறார்கள். அந்த சசிகலா அக்கா படம் போட மறுப்புத் தெரிவித்துவிட்டார்.
இன்னோருவர் இளவயதிலியே திருமணம் செய்து குழந்தைகளும் பெற்று,
வளமான வாழ்க்கையில், குடி(ஆல்கஹால்) புகுந்ததால் குடும்ப வாழ்வு பாதிக்கப் பட்டுக் கணவரைப் பிரிய நினைத்து,
சரியான வேளையில் கவுன்சிலிங் கிடைத்ததால், தானும் மாறித் தன் குழந்தைகளையும் மாற்றுச் சிந்தனையில் ஈடுபடுத்தி இன்று வெற்றிகரமான
குழுவுக்கு உதவியாகவும் இருக்கிறார்.சேரிகளில் நடக்கும் குடி சம்பந்தமான சோகங்களுக்கு வடிகால் அமைத்துக் கொடுக்கிறார்.
அவர்கள் குழுவுக்கே அனானிமஸ் என்று பெயர். அதனால் அவர் படமும் வெளியிடமுடியாது.
இவர்களைத்தவிர, நான் ஏற்கனவே உங்களுடனும் பகிர்ந்து கொண்ட உயர்ந்த பெண்ரத்தினங்கள்,
எங்கள் புகுந்த வீட்டுப் பாட்டி கோமளம்மாள்
என் பிறந்த வீட்டுப் பாட்டி ருக்மணி
என் அம்மா ஜயலக்ஷ்மி
என் மாமியார் கமலா சுந்தரராஜன்.
குறுகிய வட்டத்துக்குள் இவர்களை நான் வைக்க விரும்பவில்லை.
ஒவ்வொருவரும் தன் சுயத்தை இழக்கவில்லை. சுய மரியாதையை விட்டுக் கொடுக்கவில்லை.
மற்றவர்களுக்கும் உதவியாய் இருந்துவிட்டுத்தான் விண்ணுலகம் சென்றார்கள்.
மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம்''
இது பாடல்
மாதரே மாதரை இழிவு செய்யாமல் நம்மை நாமே உயர்த்திக் கொள்ள நல்ல வாய்ப்பாக இந்தத் தினத்தைக் கொண்டாடுவோம்.
இந்த வரிசையில் நம் வலையுலகச் சிந்தனையாளர்கள், இலக்கியப் பெண்கள்,ஆன்மீக வழிகாட்டிகள், நட்பிற்கு இலக்கணம் சொல்லும் பெண்கள்
இவர்கள் வரிசை இதோ.
கொத்ஸின் மாதாமகி துளசி கோபால்
அறிவுக்களஞ்சியம்,
ஆன்மீகச் சிந்தனையாளினி கீதா சாம்பசிவம்,
சகல துறையிலும் பளிச்சிடும் ஷைலஜா,
கவிதாயினி மதுமிதா,
பங்களூர்த்தென்றல் ராமலக்ஷ்மி,
நெல்லைத்தென்றல் நானானி,
அமெரிக்க கவிநயா,
மும்பையின் ஜெஸ்ரீ கோவிந்தராஜன் தாளித்தே நம்மைக் கவர்ந்தவர்.
இவர் பக்கத்தில் இருந்தால் சகலசமையலையும் கற்று,பத்திரிகை உலகையும் தெரிந்து கொள்ளலாம்.கம்பரையும் அலசலாம்:)
பிறகு நம் அருணா ஸ்ரீனிவாசன்,
உஷா ராமச்சந்திரன்,
நிர்மலா,
ராதாஸ்ரீராம்,
பத்மா அரவிந்த்,
மலர்வனம் லக்ஷ்மி
மங்கை,
முத்துலட்சுமி,
இவர்கள் அனைவரும் உடனே கவனத்துக்கு வந்தவர்கள் அனைவருக்கும் என் இனிய மங்கையர் தின வாழ்த்துகள்.
எப்போதும் போல் வாழ்க்கை உங்கள் எல்லோருக்கும் பூரணமான மகிழ்ச்சியைக் கொடுக்க என் பிரார்த்தனைகள்.
இதைதவிர, நம் மறுபாதிஆண் பதிவர்களின் துணைவிகளுக்கும் என் வாழ்த்துகள். வணக்கம்



முந்திய பதிவுகள்




Posted by Picasa

Sunday, February 22, 2009

சூரியன் கண்ட பனித்துளி








அடுத்த நாள் திங்கள். முதல் பெண் யமுனா என்கிற மூன்மூனும்,
ரெண்டாவது பெண் நர்மதா என்கிற நர்மியும்
தயாராக வேண்டும். எல்.கேஜியோ ப்ரி கேஜியோ காலை 7 மணிக்கு அவிலா கான்வெண்ட் பஸ்ஸுக்குப் போய் நிற்க வேண்டும்.
சாப்பிடவைத்து யூனிஃபார்ம் மாட்டி அன்றைய காலண்டரைச் சரி பார்த்து அனுப்ப வேண்டும்.

காலையில் எழுந்ததிலிருந்து எல்லாம் தகறார்தான்.
இன்னும் தூங்கணூம்ம்ம் என்று முனகல். காலை 7.45க்குக் கிளம்ப வேண்டிய பாசு, குளியலறையிலிருந்தே இன்னும் வரவில்லை. ஹேங்கோவர்.
முதல்நாள் நடந்த கூத்தை நினைத்து அழுகையும் ஆத்திரமாக வந்தாலும் காலை நேர அவசரத்தில் அதை ஒதுக்கி வைத்துவிட்டுக் குழந்தைகளைத் தயார் செய்தாள்.

ராஜம்மாவிடம் குழந்தைகளை ஒப்படைத்து கெட்டிச் சட்னி, முறுகல் தோசை என்று தட்டில் வைத்து,
பேப்பர், ஆரஞ்ச் ஜூஸ் என்று சாப்பாட்டு மேஜையில் வைத்துவிட்டுக் குளியலறைக் கதவை ஓங்கி ஒரு தட்டு தட்டிவிட்டுத் திரும்பினாள்.

துணி துவைப்பதற்கான் ஏற்பாடுகளைக் கவனிக்கும் போது,
பின்னாலிருந்து பாசுவின் குரல் கேட்டது. ''சாரிம்மா.
இப்பவே கோவில் போய் வந்துவிடலாம்'' என்றான்.
அதுவரை சும்மா இருந்த மனசு கேட்காமல் கண்ணீரை வெளியே தள்ளியது.
அது எப்படி உங்களால் முடிந்தது பாசு, நான் பார்க்க மாட்டேன் என்று நினைத்தீர்களா.
நம் நால்வரில் நிதானமாக இருந்தது நாந்தானே?" என்று அழத்தொடங்கினாள்.''

இது எத்தனை நாள் நடக்கிறது. அவருக்கும் தெரியுமா. இதுதான் இந்த நாட்களின் கலாசாரமா. இன்னொருவனின் மனைவியைத் தொட்டுப் பேசும் அளவிற்கு எப்படி வளர்ந்தது இது. எனக்குத் தெரியவில்லையே.''
''தப்பா எடுத்துக்காதேம்மா. ஏதோ அந்த கணநேரம் நடந்து விட்டது.அவள் பழகினது, தலையில் கலக்கிய போதை,என்னுடைய சொந்த ஏமாற்றங்கள் என்னை அப்படி நடக்கச் செய்துவிட்டது.
ஆனால் இதுவே எனக்கு அதிர்ச்சி.

எத்தனையோ வெளிநாடுகள் அங்கே கிடைத்த சந்தர்ப்பங்கள் ஒன்றிலுமே நான் தடுமாறியது இல்லை. உனக்கும் தெரியும் சுதா.
ஒரு சித்தம் தடுமாறிய நிலையில் நான் அவளை அணைத்ததும் தவறுதான். நீ வந்ததும் தெளிவு வந்ததும் நிஜம். ''
இந்த நொடியிலிருந்து இந்த வீட்டிற்குள் மது நுழையாது.
என்னை மீறி என் புலன்கள் போகவும் அனுமதிக்க மாட்டேன். என் பெற்றோர் அப்படி என்னை வளர்க்கவில்லை'' என்று நிறுத்தினான்.

அவன் அலுவலகம் சென்ற அரை மணி நேரத்தில் அவனுடைய தொலைபேசியில் சுதாவின் குரல்.
''நீங்கள் மதுவைத் தொடவில்லை என்றால் உங்களைத் தொடுவதிலும் எனக்கு மறுப்பு சொல்லும் எண்ணம் கிடையாது '' என்று சொல்லி
நிம்மதியாகப் போனை வைத்தாள்.
பாசுவின் அயர்ந்த பெருமூச்சு அவளை எட்டியது.

Posted by Picasa

மழையில் ஒரு நாள்----1






மழையும் மந்தாரமாக இருக்கும் வானத்தை ஜன்னல் திரை வழியாகப் பார்த்த சுதாவுக்கு, உற்சாகம் மீறி மனம் சுறுசுறுப்பானது.
குழந்தைகளின் படுக்கை அறையில் எட்டிப்ப் பார்க்கும்போது இரண்டு பெண்களும் அழகு தேவதைகளைப் போல் ஒரெ ரஜாய் அடியில் நல்ல உறக்கம் போட்டுக் கொண்டிருப்பது பார்த்து சந்தோஷப் புன்னகை வந்தது.


அடுத்து கணவனின் படிப்பறைக்கு வந்ததும் ,அவன் கைகளிலிருந்த கண்ணாடி
கிண்ணத்தைப் பார்த்ததும் அவள் மனம் சட்டென்று நின்றது.
அழகான புன்னகையோடு பாசு அவள் கை பிடித்து இழுத்தான். என்ன மழையைப் பார்த்ததும் அம்மாவுக்கு என்ன யோசனை வருது, என்ற கேலிக்குரலோடு அவளை வளைக்க முனைந்தான்.

''கட்டாயம் இந்த யோசனை இல்ல:)
வெளில போய் இந்த கோவை காற்றை ,சிலுசிலுப்பை அனுபவிக்க ரொம்ப ஆசையா இருக்கு. வாங்களேன்.
ராஜம்மாவிடம் குழந்தைகளை விட்டுவிட்டு ஒரு குட்டி ட்ரைவ் போய் விட்டு வரலாம்.
இல்லாவிட்டால் அதுகளயும் அழைத்துக் கொண்டு மேட்டுப்பாளையம் ரோடில் ஒரு நீள மழை ஊர்வலம் போலாமே என்றாள்.

'கொஞ்சம் வயசு ஆன பிறகு உன்னைக் கல்யாணம் செய்திருக்கணும்.'
யாருக்கு?
'ஏன் உனக்குத்தான் 'என்றவனைப் பார்த்து சிரித்தபடி ,அவன் கையிலிருந்த பானத்தைத் தனிப்படுத்தினாள்.
'சரி இது உள்ள போனால் வண்டி ஓட்ட வேணாம்.
நானும் குழந்தைகளோடு குட்டித் தூக்கம் போட நீங்களும் கொஞ்சம் தூங்குங்கள்' என்றபடி
செல்பவளை யோசனையோடு பார்த்தான் பாசு.
ஏன் இவள் இப்படி இருக்கிறாள்? எல்லாத் திருமணங்களும் குழந்தைகள் பிறந்ததும் தேக்கமடைகின்றதா, இல்லை எனக்கு மட்டுமா இப்படி என்று ஏமாற்றத்தை மறக்க மீண்டும் பாட்டிலைத் தேடினான்.

சற்றே கிறங்கிய நிலையில் தோழனின் வருகையை அறிவித்தது அவனது பெரிய வண்டியின் ஹார்ன் சத்தம்.
ஹேய் பாஸ் ,வாடா வெளில போலாம் 'கெட் யுர் ஃபாமிலி'
என்ற சத்ததோடு உள்ளே நுழைந்தான் சுரேஷ்.
சுரேஷ் பாசுவின் அலுவலகத்துக்கு மென்பொருள் சப்ளையர்.
இரன்டு மூன்று வருடப் பழக்கம்.
அவனால் தான் பாசு குடிக்கக் கற்றுக் கொண்டான் என்று சுதாவுக்கு அந்தக் குடும்பத்தை அவ்வளவாகப் பிடிக்காது.
அதுவும் அவர்கள் பம்பாயிலிருந்து நவநாகரீகமாக வந்து இந்தியும் ஆங்கிலமும் கலந்து பேசுவது ,அதற்கு பாசுவும் தாளம் போடுவது, எல்லாரும் செர்ந்து இரவுக் காட்சிகளுக்குப் போய் குழந்தைகளின் தூக்கம் கெடுவது இப்படி நீண்டு கொண்டே போகும் அவள் லிஸ்ட்.
சுரேஷின் மனைவி வட இந்தியப் பெண்.அழகி. விதம் விதமாக சமைக்கத் தெரிந்தவள்.
அடிக்கடி இவர்களை அவர்கள் வீட்டுக்கு அழைத்து விருந்து கொடுப்பார்கள்.
தான் வரவில்லையென்றால் தனக்கு தாழ்வு மனப்பான்மை என்று நினைத்து விடுவார்களே!! சுதாவும் குழந்தைகளை அழைத்துச் செல்வாள்.

அவர்கள் மூவரும் பானங்களோடு இருந்து உரையாட,
பழைய இந்திப் பாடல்களைப் பாடி முடிக்கும்போது,குழந்தைகளைக் கவனித்து அவர்களை உண்ண உறங்க வைப்பாள்.
11 மணி அளவில் 'ஓ ஐ அம் ஃபைன் என்றபடி பாசு கிளம்ப
அரவமற்ற வீதிகளில் புகுந்து வீடு வந்து சேருவார்கள்.
(தொடரும்)




Saturday, February 14, 2009

அன்புள்ளவர் அனைவருக்கும் வாழ்த்துகள்











காதல்,பாசம்,அன்பு எல்லாம் கொண்டாடப்படும் தினமாக மலர்ந்திருக்கும் இந்த பெப்ரவரி 14 ஆம் தேதி
எல்லா அன்பு இதயங்களையும் மகிழ்விக்கட்டும்.
காதலுக்குக் கணவன் மனைவிக்கும் தனி தினம் வேண்டாம்தான். ஆனால்
ஒரு உற்சாகம்,
எளிய பூ,நாமே
உருவாக்கின அன்பைப் பதிந்த அட்டை
எல்லாமே ஆனந்தத்தைத்தான் கொடுக்கின்றன.
வேலைக்குச் செல்லும் இரு தம்பதியினரும் ஒருவருக்கொருவர் சில மணித்துளிகளாவது தங்கள் மணவாழ்க்கையைத் திரும்பிப் பார்க்கும்
தினமாக இந்த நாளைப் பயன்படுத்தினால் பயன்கள் அதிகம் கிடைக்கும் என்றும் நம்புகிறேன்.
குழந்தைகளுக்கும் அவர்களது நண்பர்களுக்கும் அவர்களுக்குக் கல்வி போதிக்கும் ஆசிரியைகளுக்கும் வாலண்டைன் கார்டுகள் பரிமாறிக் கொள்ளும்போது இந்தத் தினத்துக்கு இன்னும் சிறப்பு கூடுகிறது.
காதலிப்பவர்களுக்கும், காதலித்து மணந்தவர்களுக்கு, அன்புக் குழந்தைகளும்
இந்த அன்பு தின வாழ்த்துகள்.



Posted by Picasa

அஞ்சலி நம் ஜானகி அம்மாவுக்கு.

வல்லிசிம்ஹன் வாழ்வின் பொன்னான தருணங்களுக்குச் சொந்தமானவர்கள் இசைக்கலைஞர்கள். சுசீலா அம்மா, லீலா அம்மா, ஜானகி அம்மா,ஜிக்கி , ஜமுனா ராணி, குழந...