


எல்லாருக்கும் உகந்த நாளாகத் தேர்ந்தெடுக்கப் பட்டு,
நான்கு இளவரசர்களும்
ஜனகபுரி இளவரசிகளைக் கைப்பிடித்தனர்.
இந்தப் பங்குனி உத்திரத்தில் மட்டும்தான் நம்பெருமாள்
ஸ்ரீரங்கராஜன் தன் பத்தினி ஸ்ரீரங்க நாச்சியாரோடு
சிம்மாசனத்தில் அமர்ந்து காட்சி கொடுப்பான்.
மற்ற நாட்கள் தாயார் வேறு சன்னிதி. ராஜா வேறு சன்னிதி.
இங்கே இன்னோரு கதை ஸ்ரீரங்கராஜனைப் பற்றிக்
கொடுக்கிறார் உபன்யாசகர்.
ஸ்ரீரங்கத்தில்தான் ஒரு தெருவுக்கு பத்து ரங்காவைப் பர்க்க முடியுமே.
அதில் முன்ன காலத்தில் ஒரு அம்மாவும் பையனும் இருந்தார்களாம்.
ஏழைக் குடும்பம்.
பையன் வேதம் படித்து வருவதற்காக ஒரு பள்ளியில் சேர்க்கப் படுகிறான்.
15 நாளைக்கு ஒரு முறை வீட்டுக்கு வந்து அம்மா கையால் எண்ணை தேய்த்துக் கொண்டு காவேரிக்குப் போய் தோழர்களுடன் கும்மாளம் போட்டு விட்டு வருவானாம்.
அப்படி ஒரு தடவை (அமாவாசையா, பௌர்ணமியானு தெரிய வில்லை.)
அம்மாவிடம் ஆசை ஆசையாகக், கீரை சமைக்கச் சொல்லிவிட்டு ஓடி விட்டது அந்தப் பையன்.
அம்மாவும் சுடு சாதம் செய்து, சட்டியில் நல்ல அரைக் கீரையைச் சுத்தம் செய்து,
வாசனையாகப் பெருங்காயம், கடுகு தாளித்து மசித்து வைத்துக் காத்திருக்கிறாள்.
குளிக்கப் போன பையனைக் காணோமே என்று கதவுக்கும் உள்ளுக்குமாக நடக்கிறாள்.
நீச்சலில் சூரன் பையன்.
ஆட்டம் போடாமல் ட்ஹிரும்ப மாட்டான், எல்லலம் தெரியும்.
இருந்தாலும் நேரத்தோடு சாப்பிட்டால் தேவலையே என்று ரங்கா ரங்கா என்று கூப்பிடுகிறாள்.
'கீரை செய்து இருக்கேண்டா, சீக்கிரம் வா'ன்னு வேற
அழைக்கிறாள்.
அந்தப் பிள்ளை காதில் விழுந்ததோ இல்லையோ.
நம்ம பள்ளிகொண்ட பெருமாள் காதில் விழுந்துவிட்டது.
அவருக்குக் கீரை சாப்பிட ஆசையாம்.
உடனே எழுந்து இந்த ஏழைத்தாய் வீட்டு வாசலில்
அவள் மகன் போலவே வந்துவிட்டார்.
மகனைக் கண்டதும் அம்மாவுக்குக் கோபம் இருந்தாலும், 'பாவம் பிள்ளை பசியோடு இருப்பான்' என்று
வாடா உள்ளே என்று கையைப் பிடித்து அழைத்து
ஆசனம் போட்டு, சரகு இலையில் சுடச்சுட அமுது பரிமாறுகிறாள்.
வந்த பெருமாளும் கீரையும் சோறுமாக ,அத்தனை
சோற்றையும் சாப்பிட்டுவிட்டு,
அம்மா உனக்கு இல்லையே என்கிறான்.
அவளுக்கோ மகன் சாப்பிடுவதைப் பார்த்தே வயிறு
நிரம்பிவிட்டது.
'இன்னிக்கு விரதமெ'ன்று சொல்லி விடுகிறாள்.
பையனும் வெளியே ஓடிவிட, காவிரியில் ஆட்டம் போட்ட பிள்ளை வருகிறான் பசியோடு.
களைப்பாகப் பசியோடு படுத்திருக்கும் அம்மாவை எழுப்பி
'அம்மா எங்கே கீரை?' என்கிறான்.
அம்மா 'நீதானே இப்ப சாப்பிட்டுப் போனியேப்பானு'
குழம்புகிறாள்.
நேரத்தோடு வரலைமா. சினெகிதர்கள் எல்லாம்
சேர்ந்ததால் நேரம் ஆகிவிட்டது.பசிக்கிறதும்மா' என்று சொல்லும் பிள்ளையைப் புரியாமல் பார்க்கிறாள்.
அடுக்களையில் சட்டி அலம்பிக் கவிழ்த்தாச்சு,.
இது என்ன நான் சொப்பனம் கண்டேனா.
என்று மீண்டும் வீட்டுக்குப் பின்னால் இருக்கும் கீரைப் பாத்தியிலிருந்து இலைகள் கிள்ளி மறுபடியும் சமைக்கும்போது, வந்தப் பையனை நினைக்கிறாள்.
எப்போதுமே அம்மாவைப் பார்த்து ' நீ சாப்பிட்டியானு கேக்காத பிள்ளை, உனக்கு இல்லியேம்மா'னு
கேட்டுதே என்று நினைக்கும் போதே அவளுக்குப்
புரிந்தது வந்தது யார் என்று.
கண்ணில் நீர் பெருக ரங்கனின் கோபுரத்தைப் பார்த்துக்
கைகூப்புகிறாள்.
அழைத்த உடனே வந்தியா ரங்க ராஜா'' என்று மனம் குழைந்து
அழுகிறாள்.
இப்படியும் ஒரு காலம் இருந்ததா என்று எனக்குத் தோன்றுகிறது.
இப்போ நம்ம ராமரும் சீதையும், தசரத,ஜனக,வசிஷ்ட,
விஸ்வாமித்திரர்களின் ஆசியோடு,
'இயம் சீதா மமசுதா' என்று ஜனகன் தன் பெண்ணை அறிமுகம் செய்து, காப்பற்ற வேண்டியது உன் பொறுப்பு என்று ஒப்படைக்கிறான்.
அவர்களைக் கொஞ்சம் தனியே விட்டுவிட்டு மீண்டும் சந்திக்கலாம்.
ஜானகி காந்தனுக்கு சுப மங்களம்.